தொடர்பவைகளின் கூற்று

குழுவாக இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஏற்பாடு செய்தவர் மனநல மருத்துவரான சுனில் தான். இதில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அவரிடம் மருத்துவம் பார்ப்பவர்களே என்கிற தகவல் பயணத்திற்காகக் காத்திருந்த பேருந்தில் ஏறும்போது தான்  தெரிந்தது . யாருக்கும் யாரும் இதற்கு முன் அறிமுகம் இல்லாதவர்களே. சுனில் இது மாதிரியான பயணத்தை எப்போதும் மேற்கொள்வதாக ஆரம்பக்கட்டத்தில்  நிகழ்த்திய சிற்றுரையில் கூறினார், அதனுடன் சில விதிமுறைகளையும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

அதில் முதல் விதி மற்றும் ஒரேவிதி, தங்களின் வாழ்க்கையில் நீங்கள் மறக்க வேண்டும் என்று நினைத்த அல்லது உங்களைக் கஷ்டப்படுத்திய  எதையும்  எவருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது என்று அவருக்கே உரித்தான வெடிச் சிரிப்புடன்  வெளிப்படுத்தினார். நான் உட்பட பேருந்தில் இருந்த நாற்பதிற்கும் மேலானவர்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தோம். காலை வெயிலின் வேடிக்கையைத் தொடர்ந்து  நாங்கள் சென்றடைய வேண்டிய இலக்கை நோக்கி முன் நகரத் தொடங்கினோம். என் அருகில் இருபது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் வாலிபன் என்னுடைய சிரிப்பிற்குப் பதில் ஏதும் சொல்லாமல் மொபைலைப் பார்க்கத் தொடங்கினான். “இவனுக்கு அப்படி என்ன பிரச்சனை இருக்கக் கூடும்?” என்று ஆரம்பித்தது மூளையின் சுரபி. சுனில் வாகனத்தில் ஏறும்போதே அனைவரது மொபைல்போனையும் வாங்கிக் கொண்டார், அவசரம் என்றால் மட்டுமே பயன் படுத்திக்கொள்ள முடியும் அதுவும் அனுமதியுடன் என்றார். இவன் எப்படி தப்பித்தான்? இவனிடமிருந்து  மொபைல்போனை யாரும் வாங்க வில்லையா? இல்லை யாருக்கும் தெரியாமல் இன்னொரு மொபைல் வைத்திருக்கிறானா? என்று எண்ணம் சுரந்து வழிந்தோடிக் கொண்டிருக்க  இது தான் எனது பிரச்சனையே என்று சுனில் விளக்கியது புரிந்தது.  

“ஒன்றை ரெண்டாக்கி , ரெண்டை நாலாக்கி அதுக் குட்டிபோட்டு அதைச் சுகமென வளர்த்து உங்களின் அனுமதியுடன் உங்கள்  இடுப்பிலேயே  எட்டி உதைத்து, உடைந்த எலும்பிற்கு நீங்களே கட்டுபோட மருத்துவம் பார்த்து என்று நீண்டுக்கொண்டே போவதுதான்  பிரச்சனை. இதற்கு உண்டான மருத்துவப் பெயரைச் சொல்லி நோயாளியாக உங்களை மாற்ற விரும்பவில்லை . மருத்துவத்தில் சிறந்த மருந்தே தன்னை மருத்துவர் குணமாக்கிவிடுவார் என்று நீங்கள் நம்புவதுதான் .அதுதான் உங்களை அந்த நோயிடமிருந்து காப்பாற்ற முதல் வழி. உங்களைப் பொறுத்தவரை நீங்கள் ஒன்றோடு ஒன்றைத் தொடர்புப்படுத்தி தன்னியல்பிலிருந்து விலகி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள் .பிரித்தறிய முடியாத சிக்கல்கள் நம்மீ து வீசப்படும்  கற்கள். அதற்கு நாம் பலியாகக் கூடாது” என்று கூறிய சுனிலை ஏனோ பிடித்துவிட்டது .

எதையும் சுமந்து கொண்டே திரிவது எவ்வளவு பெரிய கஷ்டம் . என்னிடம் எப்போதும்   என் நண்பன் அவன் படித்ததாகச் சொல்லுவான், ‘கஷ்டத்துக்கு பெரிய பை,  சந்தோசத்துக்கு சின்ன பை வச்சுக்கணும். அப்போதான் மச்சி சின்ன விஷயத்துக்கூட அந்தச் சின்ன  பை நெறஞ்சு சந்தோசமா இருக்க முடியும்’ என்று. இப்போதும் அவன் சொல்வது நினைவில் இருக்கிறது. நான் இந்தச் சிக்கல்களுக்குள் மாட்டிக் கொண்டதற்கான ஆரம்பப்புள்ளி  அவனின் இழப்பு தந்த மனப்போக்குதான் காரணம். அனைத்தையும் இயல்பாக எடுத்துக் கொண்டு போகும் அவன் போன வருடம்  மாரடைப்பால் இறந்துவிட்டான் என்ற செய்தியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதைத் தொலைபேசியில் ஒரு சின்ன குழந்தையின் பேச்சைப் போல அவனின் மனைவி சொல்லும்போது வெளிப்பட்ட அழுகையை எதைக் கொண்டு சமாதானப்படுத்த முடியும். அவனைக் கிடத்தி வைத்திருந்த இல்லத்தில் என்னை மறந்து உட்கார்ந்திருந்த என்னுள் அவன் எப்போதும் சொல்லும் அந்தச் சின்ன பையை நாமாவது பத்திரப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. எந்தவித அசைவுமின்றி அமர்ந்திருந்த எனக்கு அவன் தொலைத்த அந்தச் சின்ன பை காற்றில் பறந்து கொண்டிருந்ததை என்னைத் தவிர அங்கு இருப்பவர்கள் யாரும் கவனித்திருக்க கூடுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதைப் பின் தொடர்ந்து நகரத் தொடங்கியிருந்தேன். என்னைவிட்டு அழுகுரல்கள் மறையத் தொடங்கியிருந்தன.  என்னை அழைத்துக் கொண்டு சென்றபோது என்னுடன் எண்ணற்ற உரையாடல்களை அது  நிகழ்த்தும் என்று எண்ணியிருந்த எனக்குப்  பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. அதை பின் தொடர்ந்த சில நொடிகளிலேயே அதன் உயரம் கூடி மறைந்தது. அதற்கு  ஒளிரும் சாட்சியாய் சூரியன் படர கண்கள் கூச நண்பனின் இல்லத்திலிருந்து எழுந்து பின்னால் பார்க்காமல் நடையைத் துரிதப்படுத்தினேன்.

அதன் பிறகு என்னுடைய கஷ்டதிற்கான பெரிய பை நிரம்பிக் கொண்டேயிருந்தது. பயம்தான் எல்லாத்திற்கும் காரணம். நம்முடனேயே இருந்தவன் இறந்து போகிறான் என்றால் நாம்தான் அடுத்தோ என்ற பயத்தில் மரணம்தான் என்னை முதலில் பிடித்து வாட்டியது. நாம் செத்துவிடுவோமோ என்ற கேள்வி என்னை நடுக்கம் கொள்ள வைத்து என்னை அதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. அதற்குத் துணையாக நடந்த சம்பவங்களும் என்னை அதற்கு ஒப்புக்கொடுக்க வழிமொழிந்ததாகவே இருந்தன. நான் பெரிதும் நம்பியிருந்த வேலையிலிருந்து நீக்கப்பட்டேன். தொடர்ந்து வேலை தேடும் படலம் நாற்பது வயதான என்  உடல் நலனை வாட்டியது. எங்கு போய் நின்றாலும் ‘ஓவர் குவாலிபிகேஷன்‘ என்று துரத்தி விடப்பட்டேன். ‘இன்னும் காலம் போகலடா ஒரு கல்யாணத்தை பண்ணிகோடா’ என்று சொன்ன அம்மாவிடம் கெட்ட வார்த்தையில் பதிலளித்தேன். கேலிக்கூத்தாக ஒருவருட காலம் என்னுடைய பத்து வருடச் சேமிப்புப் பணத்தைச் சுரண்டித் தின்று செரித்தது.  எல்லாவற்றையும் விட்டெறிந்து வீட்டில் சும்மாவே இருந்தேன். நான்கு செவுருக்குள் நாட்கள் போக போக என்னுடைய நான்கு பக்கச் சுவரின் அளவு சுருங்கி கொண்டே வந்து என்னை அழுத்தியது. வீடு என்னுடன் பேசத் தொடங்குவதை மறக்க நினைத்து யாருக்கும் தெரியாமல் வாங்கி வந்த போதையை மூச்சு முட்ட உள்ளிழுத்து இரண்டு நாட்கள் உணவருந்தாமல் ஒரே பக்கம் சாய்ந்தபடி அமர்ந்திருந்தேன். தினமும்  என்னுடைய பழைய காதலிக்குப்  போன் செய்து அன்புருக முத்தமிட்டேன்.  ஒருநாள் என்னைத் தேடி வந்த அவளின் கணவனைக் கொலை செய்யாமல் விட்டது தவறோ என்று பின்னர் யோசித்தேன் . நண்பனை எரித்த மயானத்திற்குச் சென்று அவனுடன் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பேன். அவனுக்குப் பிடித்த கவுனி உருண்டையை என்னிடமிருந்து அன்புடன் பிடுங்கி தின்பான் . ‘gay பசங்களா’ என்று திட்டிய எங்க டீம் லீடரை கொத்தாகத் தூக்கி வந்து மயானத்தின் முன் பக்கம்   மூச்சுவிட முடியாத படி சாக்கில் கட்டி வீசினேன் . அம்மா இறந்த செய்தியைக் கேட்டும், போதையில் மறந்து இரண்டு நாட்கள் கழித்து  நினைவுற்று அழுதேன். ‘முண்ட மூதி’ என்று எப்போதும் அம்மா சொல்லும் குரல் என்னிடம் சியர்ஸ்  சொல்லிக் கொண்டே இருந்தது..’கெட்டது நடந்த வீட்டுல ஒடனே நல்லது நடக்கணும்னு’  என்று சொல்லி, ஒரு பெண்ணின் வாழ்க்கையை என்னோடு சேர்த்து அவளுடைய வாழ்வையும் சீரழித்தார்கள். ஆனால் எல்லாவற்றில் இருந்தும் அவளுடைய காமம்தான் என்னை மீண்டும் முன்பு போல மாற்றுகிறதோவென்று தோன்றியது. அவளுடன் மண்டை வலி வரும்வரை உடலுறவு செய்தேன்.  அனுபவத்திற்கு வேலை கிடைக்கவில்லையென்றாலும் வேலை என்று சொல்லிக் கொள்ள ஒன்று கிடைத்தது. இரண்டு வருடம் எல்லாவற்றையும் மறந்திருந்தேன்.  

அதற்கு பிறகும் அந்த மரணத்திற்கு என்னைப் பிடித்துபோய் அதன் பிடியிலிருந்து விடாமல் என்னைத் துரத்தியது. இரண்டு மாதக் குழந்தையோடு காரில் போன எங்களை எந்த விதத் தயக்கமும் இல்லாமல் இடித்துவிட்டுப் போனவன் என்னை மட்டும் அந்த விபத்தில் உயிரோடு  விட்டுவிட்டான். விபத்தில் இறந்த மனைவி,  தலை  நசுங்கிய பின்னும் அவளின் அணைப்பில் கிடந்த எங்களின் மகன்  தூக்கத்திலிருந்து என்னை எழுப்பிக் கொண்டே இருக்கிறான்.  மனைவி மகனுடன் கழித்த நாட்கள் கண்சிமிட்டல்களுள் மறைந்திருந்து வேடிக்கை காட்டுகின்றது. அவர்களின் இழப்பு என் இயல்பைச் சீண்டிக்கொண்டே இருக்க, ‘சின்ன விசயம்னாலும் நிரம்பிரும் மச்சான்..’ என்று நண்பன் அவனை எரித்த மயானத்தின் கரும்புகையிலிருந்து வெளிப்படுகிறான் . இன்னும் இன்னும் என்று சிதைந்து தோன்றும் சித்திரங்கள் பல. அதில் ஒன்று என்னவளின் உருக்குலைந்த மேனியுடன் உடலுறவு கொண்டிருந்த என்னுடல் செலுத்தும் விந்தில் உருவம் கொள்கிற என் மகனுக்கு தலை இல்லை…. இப்படிப்பட்ட சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்ட என்னை விடுவிக்க எனக்கு முன் இப்படி மாட்டிக்கொண்டவர்கள் இதிலிருந்து தப்பிக்க பயன்படுத்திய அனுபவ ரேகைகளை முதலில் உதாசீனப்படுத்தினாலும் பின் அதில் உழன்று திரிய ஆரம்பித்தேன். அதில் எண்ணற்ற வரைமுறைகள் சொல்லப்பட்டிருந்தாலும் என் விடுதலைக்கான வழியைக் கண்டறிந்து எடுக்க நேரம் பிடித்தது. 

 ‘ஆளே மாறிட்டாப்புல’ என்று பின்தொடர்ந்த உலகம் அவர்களிடமிருந்து என்னைத் துண்டித்துவிட்டது.

கண்விழித்தேன், வந்திறங்க வேண்டிய இடமென்று  நினைக்கிறேன். அனைவரும் இறங்கியிருந்தனர் . பேருந்தில் நான் மட்டுமே இருந்தேன், அசதியாகத் தூங்கிவிட்டேன் போல . குளிர் எடுக்கத் தொடங்கியது. மேலிருந்த பையைத் திறந்து குளிருக்கு இதமாய் ஒரு சால்வையையும் சொட்டரையும் அணிந்துகொண்டு கீழிறங்கினேன். காலை உணவு தயாராகியிருந்தது. உணவருந்தி கொண்டிருந்தவர்களுடன் சாப்பாட்டுடன் இணைந்துக்கொண்டேன் .

சுனில் ஒரு வாரத்திற்கு முன்பே பயணம் குறித்தான தகவல்களை வாட்ஸ்ஆப் குழுவில் பகிர்ந்திருந்தார். அது மலையப்பா தெய்வத்தை வழிபடும் கொடிக்காடு  கிராமத்தில் இருந்து மலைப் பாதை வழியாகக் கோவிலுக்குச் செல்வது என்ற திட்டம் . கொடைக்கானல் வரை  எல்லோரும் கலந்து கொள்ளலாம், ட்ரக்கிங்கிற்கு விருப்பம் உள்ளவர்கள் கொடிக்காடு வரை பயணிக்கலாம். கொடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த வழிகாட்டி நம்மை மலைப் பாதை வழியாக மலையப்பா கோவிலுக்கு அழைத்துச் செல்வார், ட்ரக்கிங்கில் கலந்து கொள்ளாதவர்கள் கொடைக்கானலைச் சுற்றிப் பார்க்கலாம் என்பதே பயணத்திட்டம். பெரும்பாலும் ஐம்பது வயதிற்கு மேல் உள்ளவர்கள் இயல்பாகவே அதில்  கலந்து கொள்ள முடியாது . மீதியிருந்தவர்கள் சிலரே, அவர்களுடன்  நானும் இணைந்து கொண்டேன் .

 சாப்பிட்டு முடித்துவிட்டு அங்கும் இங்கும் எனச் சிதறிக் கிடந்தவர்களைச் சுனிலின் குரல் ஒன்றிணைத்தது. பேசத் தொடங்கிய சுனிலின் பேச்சை மீறி அவரின்  அருகில் நின்றிருந்த புது நபரே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.  சுனில் ‘ட்ரெக்கிங் வராதவங்க பஸ்ல ஏறிக்கலாம், மத்தவங்க வெயிட் பண்ணுங்க நமக்கு இன்னொரு ஓம்னி வரும்’ என்றார். கொடைக்கானலை சுற்றி பார்ப்பவர்கள் அனைவரும் நாங்கள் வந்த பேருந்தில் ஏறிக்கொண்டனர். மீதியிருந்தவர்கள் கீழே நிற்க எங்களைக் கடந்து பேருந்து கொடைக்கானலை சுற்றிப் பார்க்க கிளம்பியது .

நின்றுகொண்டிருந்தவர்களுள் நான் மட்டுமே நாற்பதைக் கடந்தவன். மீதி இருப்பவர்கள் கண்டிப்பாக என்னைவிட கம்மியான வயதை உடையவர்களாகத்தான் இருக்க வேண்டும். என்னுடன் அருகில் அமர்ந்திருந்த பையனைக் கீழே தேடிப்பார்த்தேன் இல்லை. இங்கு அவன் இல்லை என்பது  எனக்கு ஆச்சிரியமாக இருந்தது . அந்தப் பேருந்திலும் அவன் இருக்கக்கூடுமா என்பதும் சந்தேகம் தான்?

காலை குளிர்  இதமாக உடலை ஆட்கொண்டு புணர. வண்டி வருவதற்குத் தாமதம் ஆனதால் பார்க்கில் சிறிய நடையை மேற்கொண்டோம் .

சுனில் தன்னுடன் இருந்தவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். “இவர் கொடிக்காடு  கிராமத்தைச் சேர்ந்த வழிகாட்டி-பட்டதாரி. நம்மை அவர்களின் மலையப்பா தெய்வத்திடம் அழைத்துப் போக உள்ளார்” என்றதற்கு அருகிலிருந்தவர் எந்த வித முகப்பாவனையும் இன்றி ‘நன்றி’ என்று மட்டும் சொல்லி முடித்துக்கொண்டார். எனக்கு முதலில் கடவுள் மீது எந்த நம்பிக்கையும் இல்லாமல்தான் இருந்தது. ‘வெறும் கல்’  ‘வெட்டிச் சடங்கு’ என்று சுற்றிய எனக்கு, என்னுடைய உடல் என் பேச்சைக் கேட்பதை நிறுத்தத் தொடங்கியது முதல் எதையாவது உயிர் வாழ பற்றிக்கொள்ள வேண்டியதாய் உணர்ந்த தருணத்தில் எவர் தயவும் இன்றி கடவுளிடமே அது முடிந்தது. முதலில் இந்தப் பயணத்திட்டத்தில்  இடம் பெற வேண்டாம் என்று இருந்தேன் . வாழ்வின் பெரும் பாதியை  முதல் அனுபவங்களாக அனைத்தையும் இழந்து விட்டபிறகு இன்னும் எதை வேண்டி? என்று யோசித்த எனக்கு இங்குச் செல்ல உந்துதலாக இருந்தது மலையப்பா கோவில் தரிசனமே.

   இருபதிற்கும் குறைவான மணல் அடுக்குக் கொண்ட குடியிருப்புகளுக்குள் அனாதையாகக் கிடந்த பாதையினை அணைத்துக்கொண்டே ஆம்னி எங்களை இறக்கி விட்டது . கீழிறங்கிய நொடி தனது செய்கையால் எங்களுக்கு ‘கடுங்காப்பியை’ வரவழைத்தார் வழிகாட்டி. “கோவிலுக்கு இங்கிருந்து ஒரு மணிநேரம் மெதுவா நடந்தோம்னா. சீக்கிரமா போனா அர மணிக்குள்ள போயிறலாம்” என்று சொல்லிவிட்டுச் செங்குத்தாக இறங்கும் அந்த மலைப்பாதையில் தங்கள் தெய்வத்தின் பெயரை முனகியவராய்த் தனது   வெற்றுப் பாதத்தை காணிக்கையாகக் கொடுப்பது போல முதல் அடியை  எடுத்துவைத்தார்.

நடக்க தொடங்கியிருந்த பாதையில் கீழிருக்கும் எஸ்டேட்டிற்கென கொடிக்காடு  கிராமத்திலிருந்து தனியாகச் சாலை அமைக்கும் வேலையில் அக்கிராமத்தை சேர்ந்த ஆட்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். எஸ்டேட்காரர்கள் ட்ரக்கிங்கால் வரும் அக்கிராம மக்களின் வருமானத்தையும் கெடுத்து விடக்கூடாது என்று ஊர்கார்களிடம் பேசி சனி, ஞாயிறு மட்டும் கோவிலைப்  பார்க்க அழைத்துப் போகுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க வார இறுதி நாட்களில் மட்டுமே ஆட்கள் செல்ல முடியும்.

அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பெருசு நாங்கள் கீழிறங்குவதைப் பார்த்து நக்கல் தொனியில் வழிகாட்டியிடம்  “மேல கல்லு ஒடைக்குறப்போ கீழ வரும்னு தெரியாதா ..இப்போ கூட்டிட்டு போற.” என்று சத்தம் போட்டார்.

“தொலைவில இருந்து வந்துருக்காங்க ..இல்லேன்னு சொல்ல முடில.” என்று சொன்னதிற்குப்  பதிலாக அவர் “கல்லு விழுக போகுதுனு தெரிறப்போ. மலையப்பா கரச்சுடுனு சத்தமா சொல்லணும் எல்லாத்தையும் கரச்சுடும்.” என்று சொல்லி சிரித்துக் கொண்டார் . அந்தச் சிரிப்பில் எவ்வளவு காலத்தை விழுங்கிய முதுமை. சுனிலும் அப்படிப்பட்ட சிரிப்பைக் கொண்டவர்தான் . அவரைச் சந்தித்தப் பிறகு  என்னை ஆட்கொண்ட பிரச்சனைகளிருந்து  ஓரளவு  விடுபட முடிந்தது. ‘சைக்காற்றிஸ்ட் கிட்டெல்லாம் போகாத மச்சான் காசப் புடுங்கிருவாங்க ‘ என்று ஒரு பக்கம், ‘அவங்க நம்மல இன்னும் பைத்தியம் ஆக்கிருவாங்க’ என்று மறுபக்கம்  எனப் பல  முன் எச்சரிகைகளையும் மீறி தான் சென்றேன் .

யாரையும் குறை சொல்லிவிட முடியாது எல்லாருக்கும் தான் பிரச்சனை இருக்கிறது என்று ஆரம்பித்தவர் ஒரு சில நிமிடங்களிலேயே நீங்கள் என்னிடம் இனிப் பேசத் தொடங்கலாம் என்றார். என்னை ஆட்கொண்ட மௌனத்திடமிருந்து முதலில் வெளியேற்றினார். பின்னர் நிறைய உரையாடல்கள். அது என்னுள் நிறைய மாற்றங்களை  நிகழ்த்துவதை உணர முடிந்தது. இருந்தும் மீண்டும் மீண்டும் அதனிடம் மாட்டிக்கொள்வது எதனால் என்று புரியாமல் கேட்ட கேள்விக்குச் சுனில் ‘ எந்த நோயா இருந்தாலும் அதோட மொத சிம்ப்டம்ஸ் என்ன தெரியுமா?’ என்றார். எந்த  வித பதிலும் அளிக்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் அவரின் இடத்திலிருந்து எழுந்து கையில் வைத்திருந்த மார்கரால் வெள்ளை போர்டில்  ‘அந்த நோயைப் பற்றி நினைப்பதுதான் முதல் அறிகுறி’ என்று கேரளத்துச் சிரிப்பைக் கொட்டினார் . ஆம் நோயின் முதல் அறிகுறி அந்த நோயைப் பற்றி நினைப்பது தான் என்று முனகிக் கொண்டேன். வேகவேகமாக நிகழ்ந்தேறிய மரணங்களும், அதைச் சுற்றி எழும்  வாழ்க்கை மீதான  கேள்விகளும்  என்னைப் புயலென அழுத்த அதிலிருந்து மீளவே முடியாது என்று நினைத்த காலகட்டங்களிலிருந்து  நான் விலகி  வரத் தொடங்கியிருக்கிறேன் என்பதை என்னால் உணர முடிகிறது. முன்னே சென்ற வழிகாட்டி இடையிடையே நின்று இதுவரை கேள்விபட்டிருந்து பார்த்திடாத  தாவரங்கங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியும் யானை மற்றும் பிற விலங்குகள் நடந்து செல்லும் பாதையையும் காட்டில் அதன் பண்புநலன்களையும்  விளக்கிக் கொண்டே போனார். முன்பு அளவீடுகளுக்காகப் பயன்படுத்திய ‘சதுர வடிவம்’ பதிந்த கற்களையும் சுனை நீர் வழிந்தோடும் தடங்களையும் மலை பாதையின் ஒலி  குறித்தான பூர்வக்கதையையும் சொன்னார்.

“வானத்தின் நிழலென எங்கும் கொடிகள் படர்ந்து இருப்பதாலேயே இது கொடிக்காடு என்று அழைக்கப்படுகிறது. எங்கள் மலையப்பா தெய்வத்தின் தாய் இந்த மலை முழுவதும் சுற்றி வந்து இளைப்பாற இடம் தேடியவளின் கூந்தல் கொடியென நீண்டு எங்கள் வாழ்விடத்திற்கான  வழித்தடத்தை உருவாக்கியது. இது நாள் வரை கர்பப்பையில் சுமந்து வந்த சிசுவைத் தன்னிலிருந்து துண்டித்துக் கொண்டு வளர்க்கத் தொடங்கினாள். இருவரின் பேச்சு சத்தமெங்கும் மலை காட்டின் அடர்த்தியோடு உரசி மகிழ்ந்தன. யானையின் மீது சவாரி செய்யும் இருவரைக் காட்டினுள் கண்டதற்குச் சாட்சி உண்டு. எங்கும் இருவரின் அரவம் இருக்கும் என்பது அந்த மலைக் காட்டினுள் சென்று வந்தவர்களின் கூற்று. அப்படி அவர்கள் என்னதான் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்று அறிய நினைத்த மரம் இன்னும் அடர்த்தியென வேர் பிடித்துக் காடெங்கும் வளரத் தொடங்கி நம்மை வரவேற்கிறது” என்று நிறுத்தினார்.  அவரின் கதைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஏனோ வழிகாட்டி தாயைப் பற்றியும் மகனைப் பற்றியுமான  அவர்களின் பூர்வக் கதையைச் சொல்லும்போது என்னுடைய மனைவி, என் இரண்டு மாத மகனின் முகத்துடன் அவர்களின் கதைகளுக்குள் சுற்றி வந்தேன்.

கோவில் எவ்வளவு தூரம் என்றதற்கு இன்னும் கொஞ்சம் தூரம்தான் என்றார் வழிகாட்டி. சில இடங்களில் கூர்மையான கற்களுக்கு நடுவில் இருக்கும் மணல் சறுக்கியபோது மனம் பயம் கொண்டது. மேலிருந்து ஒற்றையடிப்பதையிலேயே மலையிலிருந்து வலது பக்கம் கீழிறங்கி பாதி  தூரம் வந்தடைதிருந்தோம். இடையிடையே சின்ன இளைப்பாருதலுடன் கீழிறங்கிக் கொண்டிருந்தோம். இரண்டு கெண்டைகால்களும் இப்போதே ரத்தம் கட்டிக் கொள்வது போல் இருந்தது. இதயத்துடிப்பும் அதிகரித்துக்கொண்டேயிருக்க, இறங்குவது ஒரு வித வலி என்றால்.   மேலே பெரியவர் சொன்னது போல சாலைக்காக உடைக்கப்பட்ட கல் மேலிருந்து நம் மீது விழுந்து விடுமோ என்ற பயம் அனைவருக்கும் இருந்ததை உணர்ந்தேன்  .

முதலில் வேகமாக நடந்த வழிகாட்டி எங்களைக் கணித்துக் கொண்டு எங்களுடனேயே நடக்கத் தொடங்கினார். “நமக்கு முன்னாடி வேகமா போறாங்கனு நம்மலும் வேகமா போகக் கூடாது. மூச்சு வாங்கிரும். வேகமா போய் புஷ் புஷ்னு மூச்சு வாங்குறதுக்கு, நம்மளால முடுஞ்சளவு மெதுவா நிக்காம நடக்கனும்….”  என்று கூறியவர் நிதானித்த குரலில் “அம்மாவும்..மகனும்..பேசுற சத்தம் கேக்குதா…!” என்று  திரும்பி பார்த்து எங்களிடம் சொல்லிவிட்டு கண்களை மூடி உதடுகள்  முனுமுனுக்க எதையோ வேண்டத் தொடங்கினார். அப்போதுதான் என்னால் கவனிக்க முடிந்தது எங்களுக்கு நிழலாக பெரிய மரம் தனது கிளைகளைப் பரப்பி நின்றிருந்தது. கண்களைத் திறந்தவர் அந்த மரத்தின் சதையைப் பிடித்து மீண்டும் கண்களை அதற்குக் கொடுத்துவிட்டு எதற்காக இதெல்லாம் செய்கிறேன் என்று எதையும் சொல்லாமல் முன் சென்றார். காற்றில் கலந்து வந்த சாரலை மட்டுமே  எங்களால் உணர முடிந்தது . 

 சட்டையைத்  தூக்கி இடுப்பில் அரைஞாண்கயிற்றின் பிடியில் இருந்த துணியை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டார். அந்தத் துணிப்பையால் வழியெங்கிலும் முன் இங்கு வந்தவர்கள்  வீசியெறிந்த சாக்லேட் கவர்கள், தண்ணிப் பாட்டில்கள், சாப்பாடு பொட்டலங்கள் என்று ஒவ்வொன்றாக பெறுக்கிக் கொண்டே வந்தார் வழிகாட்டி.‘இத நான் போட்டுட்டு வந்தறேன்’ என்று அவர் கையில் வைத்திருந்த துணிப்பையை அங்கு ஏற்கனவே இருந்த சாக்கிற்குள் அழுத்தினார்.

நாங்கள் பெரும் சத்தத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தோம். அது என்னவென்று கேட்ட எங்களுக்கு வழிகாட்டி எந்தப் பதிலும் சொல்லவில்லை. காற்றினில் சாரல் கூடத் தொடங்கியிருந்தது .

குப்பைகளைச் சாக்கினுள் நுழைத்துவிட்டு எங்கள் அருகில் வந்த வழிகாட்டி “நான் சொல்றவரைக்கும் கண்ணத் தெறக்கக் கூடாது” என்று சொல்லிவிட்டு மூடிய கண்களுடன் எங்களை அழைத்துப் போனார் .

 கால்கலிலேயே ஈரம் முதலில் படர்ந்தது, குளிருடன்  போராடும் உடல் தலை மேல் ஏறியிருந்த பாரத்தைக் கூட்ட  கண்களைத் திறக்கும் முன்பே என்னை முழுங்க தொடங்கியிருந்தது அதன் சத்தம்.   வழிகாட்டி எங்களிடம் “கண்களை திறங்கள்…இது தான் எங்கள் மலையப்பா தெய்வம்” என்றார். கண்களைத் திறக்க முடியாதபடி  அடர்ந்த மரங்களுக்கிடையே கண்களைக் கூச்செறியும் வெண்மையை உடலாக கொண்ட அவள் மகனை மடியில் வைத்துச் சிரிக்கிறாள் அருவியாய்.

அருவியின் பாதத்தில் கொடியென படர்ந்து எந்தவித  அடையாளமின்றி கற்களால் புனையப்பட்ட சிறு சிலையாய் தாயின் மடியில் தஞ்சம் புகுந்த மகனின் புகலிடத்திற்கு ஒரு மாதம் விரதம் இருந்து யானையின் வழித்தடத்தில் நடந்து வந்து கோவிலுக்குப் படையலிடும்போது களிற்றின் பிளிரல்கள்  தாயும் மகனும் சுற்றித் திரிந்த காட்டிற்குள் எதிரொலிக்கும்…

சுமந்தவைகளைக் கரைத்துவிட்டு மேலேறும்போது எந்த வித நினைப்புமின்றி சிறு புன்னகையுடன் எதையும் எதைக்கொண்டும் நிரப்பாது  சின்ன ப-யாகவே மாறிய உணர்வு வெளிப்பட வழிகாட்டியின் வேகத்திற்கு ஈடு கொடுத்து மலை ஏறினேன்.

“எல்லாத்தையும் கரச்சு புடும் “ என்ற பெருசின் வார்த்தைகள் என்னைப்  பின்தொடர்கின்றன.

***

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...