கனவுகள் குவியும் களம்

Pauline Fan

கடந்த ஆண்டு மலேசியாவில் நடக்கும் அனைத்துலக இலக்கிய சங்கமமான ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் (George Town Literary Festival) கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பினாங்கில் உள்ள யுனெஸ்கோ உலக மரபுடைமைப் பகுதியான ஜார்ஜ் டவுனில், ஆண்டுதோறும் நவம்பர் வார இறுதியில் நடத்தப்படும் இவ்விழா குறித்துத் தமிழ்ச் சூழலில் அறிமுகம் குறைவுதான். அதற்குத் தமிழ்ச் சார்ந்த உரையாடல் பகுதிகள் நிகழாததும் ஒரு காரணம். நான் இவ்விழாவில் கலந்துகொள்ள  பாலின் ஃபென் (Pauline Fan) அவர்களே முக்கியக் காரணம். ‘பேய்ச்சி’ தடையினால் நான் அவர் கவனத்திற்குச் சென்றிருந்தேன். விழாவின் இயக்குனரான அவர் என்னுடனான உரையாடல் பகுதி ஒன்றை நடத்தும் திட்டத்தைச் சொன்னபோது முதலில் நான் மறுத்தேன். அனைத்துலக விழாவில் மொழியைக் கையால்வது குறித்த தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால் பாலின் ஃபென் என் மீது நம்பிக்கையாக இருந்தார். அவரது கனிவும் எனக்களித்த நம்பிக்கையும் அவ்விழாவில் பங்கெடுக்க வைத்தது.

நாற்பது நிமிடங்கள் நடந்த உரையாடலில் என் படைப்புலகைத் தவிர்த்து இரண்டு விடயங்களை முதன்மையாகப் பதிவு செய்தேன். முதலில் மலேசிய இலக்கியம் என்பது மலாய் இலக்கியம் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. சீன, தமிழ் இலக்கியங்களுக்கு தேசிய அங்கீகாரம் கிடைக்கும்போதே இந்நாட்டின் இலக்கியத்தின் பன்முகம் வெளிபடும் என்றேன். மேலும், இந்நாட்டில் தேசிய பள்ளி எனும் ஒரு குடையில் கீழ் அனைத்து மொழிப்பள்ளிகள் இணைவது குறித்த பேச்சுகள் அடிபடுகின்றன. இலக்கியம்தான் சமூகத்தைப் பிரதிநிதிக்கிறது. மொழிப்பெயர்ப்புகளும் அதன் வழியாகச் சமூகங்களுக்கிடையிலான உரையாடல்களும் இனங்களுக்கிடையிலான புரிதலை ஏற்படுத்தும். பள்ளிகளில் அது நடக்காது என்றேன். அது ‘தமிழ் மலேசியா கினி’யில் செய்தியாக வெளிவந்தது.

கடந்த ஆண்டு கோவிட் பெருந்தொற்று காரணமாக இணையம் வழியாகவே நடந்து முடிந்த விழாவில் அதிகம் பார்க்கப்பட்ட காணொலிகளில் ஒன்றாக என்னுடையதும் இருந்தது. அவ்வுரையாடல் மலாய் மொழியில் நடந்தது. பாலின் ஃபென் அடுத்த வருடம் தமிழிலேயே உரையாடலாம் என்றார். இந்த ஆண்டு அதை நிறைவேற்றியுள்ளார்.

இவ்வருடம் பாலின் ஃபென் (Pauline Fan) அவர்களே தமிழ் அரங்குகளுக்கான பொறுப்பாளராக என்னை நியமித்தபோது மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டேன். தமிழ் நிகழ்ச்சியை வடிவமைக்க எனக்கு முழு சுதந்திரமும் கொடுத்தார். நான் அழைக்க விரும்பும் எழுத்தாளர்கள் பட்டியலை உடனடியாக அனுப்பிவைத்தேன். அதில் ஜெயமோகன் எந்தக் கேள்வியும் இன்றி உடனடியாகத் தேர்வு பெற்றார். “அவரை உங்களால் வரவைத்துவிட முடியுமா?” எனகக் குழுவில் ஆர்வமாகக் கேட்டபோது நான் ஜெயமோகன் பதிலுக்குக் காத்திருந்தேன். சம்மதம் கிடைத்தபோதுதான் அடுத்தடுத்தப் பணிகள் தொடங்கின.

ஜெயமோகன்

மொத்தம் இரண்டு அமர்வுகள் தமிழுக்குக் கொடுக்கப்பட்டன. ஓர் அமர்வில் மூவர் கலந்துரையாடலாம். ஜெயமோகனுடன் மேலும் இருவரை அமர வைப்பதால் அவர் பேசுவதற்கான நேரம் சுருங்கும் எனக் கருதி ஓர் அமர்வில் அவருடனான உரையாடலுக்கு மட்டுமே ஏற்பாடு செய்தேன். மற்றுமொரு அமர்வில் அ.பாண்டியன், லதா, கோ. புண்ணியவான் ஆகியோருடனான உரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜெயமோகன் அரங்குக்கான தலைப்பு ‘பெருங்களிரின் ராஜபாதை’. ஜெயமோகனின் புனைவுலகத்தை ஒட்டி, பண்பாட்டின் மறுவரையறை குறித்த உரையாடலாக இந்த அரங்கு அமையும். நான் அவருடனான அவ்வுரையாடலை வழிநடத்துகிறேன். மற்றுமொரு அரங்கின் தலைப்பு ‘மலேசிய – சிங்கப்பூர் தமிழ் இலக்கியங்களின் தனிப் பயணங்கள்.’ ஒரே காலக்கட்டத்தில் இரு நாட்டு இலக்கியங்கள் தோன்றி வளர்ந்தாலும் அவை உருவாக்கிக்கொண்ட தனிப்பயணங்களை இந்த அரங்கு விவாதிக்கிறது. எழுத்தாளர் அரவின் குமார் இந்த அரங்கை வழிநடத்துகிறார். இவற்றோடு பி.கிருஷ்ணன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் நூல் வெளியீடுகளுக்குமான  அரங்குகளும் இந்த விழாவில் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோ. புண்ணியவான், லதா, அ. பாண்டியன்

மலேசியாவில் ஓர் அனைத்துலக விழாவில் தமிழ் இலக்கியத்திற்கான பெரும் வெளி வழங்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். இந்த விழாவுக்கு மலேசியத் தமிழ் வாசகர்களிடமிருந்தும் எழுத்தாளர்களிடமிருந்தும் கிடைக்கும் ஆதரவே தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் வாய்ப்புகள் கிடைக்க பாதை வகுக்கும்.

விழா குறித்த அடிப்படை திட்டங்கள் முடிவானதும், விழா குழுவினரிடம் நான் முன் வைத்த வேண்டுகோள் ஒன்று இருந்தது. தமிழ் நிகழ்ச்சி சார்ந்த சில செலவுகளை வல்லினம் பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்றும் எனவே ‘வல்லினம்’ இலக்கியக் குழுவை இவ்விழாவின் இணை இயக்கமாகச் சேர்த்துக்கொள்ள பரிந்துரை வைத்தேன். உடனே சம்மதம் கூறினர். அவ்வகையில் இந்த விழாவில் வல்லினமும் ஓர் இணை இயக்கமாக இருந்து செயல்படுவது கூடுதல் மகிழ்ச்சி.

இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு சுங்கை கோப்பில் அமைந்துள்ள பிரம்மவித்யாரண்யத்தில் இருநாள் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றுக்குத் திட்டமிட்டோம்.

***

பி. கிருஷ்ணனை நான் சந்தித்தது 2017ல். அவர் வாழ்வை ஆவணப்படமாகப் பதிவு செய்ய சிங்கப்பூர் சென்றிருந்தேன். ஆவணப்படம் இயக்கி முடித்தபிறகு ஒரு மகத்தான கலைஞனைச் சந்தித்த நிறைவு இருந்தது. அந்த ஆவணப்படத்தில் தனது வாழ்க்கை லட்சியமாக ஷேக்ஸ்பியரின் எட்டு நாடகங்களைத் தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்றார். அதை சொன்னபோது அவர் வயது 85. ஐந்து ஆண்டுகள் கடும் உழைப்பில் தன் கனவை அவர் நிறைவு செய்துள்ளதை இவ்வாண்டு சிங்கப்பூர் சென்றபோது அறிந்தேன். அந்நிமிடமே அவரிடம் மலேசியாவில் அவருக்கான அரங்கு ஒன்றைச் செய்யப்போவதாகக் கூறினேன். அப்படிச் செய்தால் அவர் கலந்துகொள்ள வேண்டுமென வாக்குறுதியும் பெற்றேன். இரண்டுக்கும் அவர் வயதுக்கே உரிய சமநிலையுடன் மென் சிரிப்பை முன்வைத்தார்.

ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவை ஒட்டி பி. கிருஷ்ணன் அரங்கை வடிவமைத்தோம்.  பி. கிருஷ்ணனின் ஆளுமையை எழுத்தாளர் லதாவின் அறிமுகத்துடன் எழுத்தாளர்கள் அழகுநிலா, ஜி.எஸ்.எஸ்.வி நவின், அ. பாண்டியன், அரவின் குமார், அருண்மொழி நங்கை, கணேஷ் பாபு ஆகியோர் அவர் புனைவுலகின் வெவ்வேறு பகுதிகள் குறித்து உரையாற்றுவர். இந்நிகழ்ச்சியை முனைவர் இளம்பூரணன் ஒருங்கிணைக்கிறார். ஜெயமோகன் தலைமை தாங்குகிறார். மேலும் சாலினி மற்றும் சுப்புலட்சுமி ஆகியோரின் முயற்சியில் அரங்கில் பேசப்படும் தலைப்புகளை ஒட்டிய கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியீடு காண்கின்றன.

அ. பாண்டியன்தான் ஷேக்ஸ்பியரின் நாடகத்தைப் பி. கிருஷ்ணனின் வசனத்தில் அரங்கேற்றுவது குறித்த திட்டத்தை முன்வைத்தார். அது குறித்துப் பேச மை ஸ்கில்ஸ் அறவாரியத்தை அரவின் குமார் அணுகினார். அரவின் குமார் நாடகத்திற்கான பொறுப்பாளர். மை ஸ்கில்ஸ் அறவாரிய மாணவர்கள் ஏற்கனவே தேசிய அளவில் நடந்த நாடக போட்டிகளில் முதல் பரிசு வென்றவர்கள்; துடிப்பானவர்கள். அதன் தோற்றுனர் பசுபதி அவர்கள் உற்சாகமாகச் சம்மதிக்கவும் நாடக ஆசிரியர் ச. விஸ்வநாதன் பயிற்சியளிக்கத் தொடங்கியுள்ளார். ச. விஸ்வநாதன் மலேசியாவில் அதிகம் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாடகத்தை வசனமெழுதி இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நாடக அரங்கேற்ற விழாவில் தலைமையேற்க வழக்கறிஞர் பசுபதி சிதம்பரத்தின் சம்மதம் கிடைத்தது. ஏற்கனவே நாடக ஆசிரியர் பிரளயன் அவர்களை மலேசியா அழைத்துவந்து மை ஸ்கில்ஸ் மாணவர்களுக்கு வீதி நாடகத்திற்கான பயிற்சிகளை வழங்கியவர் பசுபதி. அவரின் அருகாமை நாடக முயற்சி தடையின்றி நிகழ உதவியது.

இவ்வாறு பி. கிருஷ்ணனின் வசனத்தில் மூன்று ஷேக்ஸ்பியர் நாடகக் காட்சிகள் அரங்கேறுவதுடன் பி. கிருஷ்ணன் புனைவுலகம் குறித்த அரங்கும் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா குழு இணைவுடன் நடப்பதும் ஓர் அனைத்துலக கௌரவத்தை இவ்விழாவுக்கு வழங்குகிறது.

***

இந்த நிகழ்ச்சி மேலும் பிரமாண்டமானது ஜெயமோகன் வருகையினால்தான். வெண்முரசுக்குப் பிறகு அவர் எடுத்துள்ள மாபெரும் முயற்சி ‘தமிழ் விக்கி’. ஆவணப்படங்கள் இயக்கத் தொடங்கிய காலத்தில் மலேசியாவில் பல ஆளுமைகளின் வரலாறு பதிவாகவில்லை என்ற கவலை இருந்தது. அதில் நிகழ்ந்த சிறிய முயற்சிதான் ‘சடக்கு’ புகைப்படத் தொகுப்புத் தளம். தமிழ் விக்கி மலேசியப் பகுதி உருவானப்பிறகு அந்தத் தளத்தில் சேகரித்திருந்த புகைப்படங்களுக்கு மெல்ல உயிர் வந்தது. தொகுப்புக்குள் முடங்கி கிடந்தவைப் பதிவுகளில் இணைக்கப்பட்டன. அறிய முயற்சிகள் ஒன்றுடன் ஒன்று எப்போதும் ‘கொண்டு கொடுத்து’ வருகின்றன.

ஜெயமோகன் வருகையை ஒட்டி ‘தமிழ் விக்கி’ மலேசியப் பகுதியை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டோம். மலேசியக் கல்விக்கூடங்களில் விக்கிப்பீடியா வழங்கும் தரவுகள் ஆய்வுகளில் ஏற்கப்படுவதில்லை. இந்நிலை தமிழ் விக்கிக்கு வந்துவிடும் ஆபத்தும் உண்டு. எனவே தமிழ் விக்கியின் தனித்துவத்தை விளக்குவது அவசியமாக இருந்தது. அது யாரும் நினைத்தால் எளிதில் சென்று தகவல்களை மாற்ற முடியாத களஞ்சியம் என உணர்த்த வேண்டி இருந்தது. அறிவார்ந்த ஆசிரியர் குழுவைக் கொண்ட தளம் என அதன் பதிவுகளை வாசித்தால் புரியும். எனவே ஏற்புடைய தரவுகள் இல்லாமல் எளிதில் மாற்றங்களை நிகழ்த்த முடியாது. அவ்வகையில் அது கல்விச்சூழலுக்குப் பெருங்கொடையாகத் திகழும் முயற்சி.

இந்தப் புரிதலை மலேசியக் கல்வி சூழலில் உருவாக்க கல்வியாளர்களின் கருத்துகளும் பார்வையும் அவசியமாக இருப்பதால் அவர்களை முன்னிலைப்படுத்தியே இந்த ‘தமிழ் விக்கி’ அறிமுக விழாவைத் தொடங்கினோம். இந்த அங்கத்திற்கு அ.பாண்டியன் முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டார். இதுபோன்ற தகவல் சேகரிப்பு குறித்த அக்கறை கொண்ட, அதனை சிங்கையில் பலவிதத்தில் முன்னெடுத்த அருண்மகிழ்னன் அவர்கள் தலைமை தாங்க ஒப்புக்கொண்டது நிகழ்ச்சிக்கு மேலும் செழிப்பைக் கூட்டியது.

***

பி.கிருஷ்ணன் கருத்தரங்கின் பங்கேற்பாளர்கள்: அரவின் குமார், கணேஷ் பாபு, அருண்மொழி நங்கை, அழகுநிலா, ஜி.எஸ்.எஸ்.வி நவின்

நிகழ்ச்சி திட்டமிடப்பட்டபோது அது குறித்து நான் முதலில் பகிர்ந்துகொண்டவர் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி. எல்லாவித ஒத்துழைப்பும் வழங்க அவர் தயாராக இருந்தார். இதுபோன்ற பெருமுயற்சிகளை முன்னெடுக்கும்போது மனதில் தோன்றும் பொருளாதார தேடல் குறித்த கவலைகளைச் சுவாமியின் சொற்கள் கரைத்தன. இந்த நிகழ்ச்சிக்காக உருவான செயற்குழுவின் பங்களிப்பு நிகழ்ச்சியின் வெற்றியை முன்னதாகவே அறிவித்து விட்டது.

ஒரு வகையில் இவ்விழா பெருங்கனவுகள் இணையும் கொண்டாட்டம் எனலாம். 2011இல் ஐந்து எழுத்தாளர்களுடன் தொடங்கப்பட்ட ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா தற்போது மலேசியாவின் மிகப்பெரிய இலக்கிய விழாவாகவும், உலகின் தலைசிறந்த இலக்கிய விழாக்களில் ஒன்றாகவும் வளர்ந்துள்ளது. பாலின் ஃபென்  இதனை முன்னெடுத்துச் செல்லும் தீவிரம் அசாதாரணமானது. அந்தக் களத்தில் பி.கிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற கனவுகளையும் லட்சியங்களையும் சுமந்த மனிதர்களின் முயற்சிகள் விரிவான முறையில் அறிமுகம் காண்பது வரலாற்றில் நிலைக்கும் நிகழ்வு.

3 comments for “கனவுகள் குவியும் களம்

  1. September 19, 2022 at 2:09 am

    மலேசியத் தமிழ் படைப்புலகின் இது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக பதிவுபெறும்.

  2. Vijay
    September 21, 2022 at 1:33 pm

    நவீன் அவர்களின் முயற்ச்சிக்கு அன்பும் வாழ்த்துக்களும்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...