நூற்றாண்டு வரலாறு கொண்ட நவீனத்தமிழிலக்கிய வரலாற்றில் எண்ணிக்கையாலும் தரத்தாலும் மேம்பட்ட பல படைப்புகளின் வாயிலாக மறுக்கமுடியாத இடத்தைப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன்.
எழுத்தாளர் ஜெயமோகனின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாக அவரின் புனைவுலகம், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், இந்திய ஞான மரபு கட்டுரைகள், சமூகக்கட்டுரைகள் ஆகியவற்றுடன் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் வாயிலாக முன்னெடுத்து வரும் இலக்கிய, அறிவுலகச் செயற்பாடுகளைக் குறிப்பிடலாம்.
1991 ஆம் ஆண்டு ஜெயமோகனின் முதலாவது நாவலான ‘ரப்பர்’ நாவல் வெளிவந்தது. ஜெயமோகனின் நாவல்கள் ஆழமான தத்துவ விசாரங்களையும் அறம் சார்ந்த விவாதங்களையும் முன்வைக்கக்கூடியவை. தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் முதன்மையான இடத்தைப் பெறுபவை. தமிழின் சிறந்த நாவல் வரிசைப்படுத்தலில் தவறாது இடம்பெறும் அவரது விஷ்ணுபுரம் (1997) நாவல் பெளத்த மற்றும் வைணவ மெய்யியல் உலகின் பின்னணியில் எழுதப்பட்டது. குறிப்பிட்ட காலப்பகுதியில் மனிதர்களுக்கு ஏற்படும் கொள்கை, தத்துவம் சார்ந்த பிடிப்பால் மெல்ல இறுகிப் போய் நடைமுறை வாழ்வுடன் கொள்ளும் பிணக்கைச் சித்திரிக்கும் நாவலாக ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவல் அமைகின்றது. பின் தொடரும் நிழலின் குரல் (1999) என்கிற அவரது மற்றுமொரு நாவலும் இலக்கியச் சூழலில் பெரும் விவாதப் பொருளானது. இந்தியாவில் தீவிரமாக இயங்கும் கம்யூனிஸ்டு இயக்கங்களின் பின்னணியில் எழுதப்பட்ட அந்நாவல் இடதுசாரிகளால் கடுமையாக நிராகரிக்கப்பட்டாலும் இலக்கியச்சூழலில் இன்றும் தனதிடத்தைத் தக்கவைத்துள்ளது. அதைப் போல, பிச்சையெடுப்பவர்களின் வாழ்வை உயிர்ப்புடன் அணுகி அதிலிருக்கும் உண்மைத்தன்மையை மனித மனத்தின் ஆழமான குரூரத்தைக் காட்டும் ஏழாம் உலகம் (2004) நாவலும் தமிழ்ச் சூழலுக்கு புதிய வாழ்வை அறிமுகம் செய்தது. உடற்பேறு குறைந்த மனிதர்களைக் கட்டாயப்படுத்திப் பிச்சையெடுக்கச் செய்து அவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் குரூரமான பின்னணியை ‘ஏழாம் உலகம்’ நாவலில் காட்டியிருப்பார். மனித அகத்தின் இருண்மைமிகுந்த அந்தத் தருணம் பொதுவாக அறியப்படும் அன்பு, பாசம் போன்ற விழுமியங்களை ஒட்டி வாசகர்களை விவாதம் செய்ய வைக்கின்றது. அத்தகையச் சூழலில், மனிதர்கள் மீது அன்பு செலுத்தவும் மனிதம் மீது நம்பிக்கை கொள்ளவும் ஆன்ம பலமொன்று அவசியமாவதைக் குறிப்பிட முடிகிறது.
வெள்ளையர்களின் காலனியாகச் சென்னை நகரம் இருந்தபோது அங்கிருந்த பனிக்கட்டித் தொழிற்சாலையில் பணியாற்றிய தலித் தொழிலாளர்களின் இன்னல்களை அங்குப் பணியாற்றும் பிரிட்டனின் ஆதிக்கத்துக்குட்பட்ட அயர்லாந்தைச் சேர்ந்த அதிகாரியின் பார்வையில் முன்வைக்கக்கூடியது அவரது ‘வெள்ளையானை’ நாவல். ஆகவே, மரபான நன்மை தீமை என்ற இருமை விவாதத்துக்கு அப்பால் வாசகனை ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்ய அவரின் படைப்புகள் தூண்டுகின்றன.
இதுபோல, கொற்றவை (2005) நாவலில் சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு புதுகாப்பியமாக எழுதியிருக்கிறார். இந்நாவல் தமிழ் புனைவு கூறு முறையில் மிக முக்கியமான தடத்தைப் பதிவு செய்திருக்கிறது எனலாம். சிலப்பதிகாரத்தில் தொன்மை எல்லைகளாகக் குறிக்கப்படுகின்ற தமிழ் நிலப்பரப்பிலிருந்து நாவல் தொடங்கி சேர, சோழ, பாண்டிய நிலமெங்கும் புனைவாடலாகச் சிலப்பதிகாரம் அமைவதைக் காட்டியிருப்பார்.
தொடர்ந்து அவரது இலக்கியம் சார்ந்த விமர்சனங்களிலும் புனைவெழுத்திலும் அறம் சார்ந்த கொள்கையே மீள நிலைகொள்வதைக் காணமுடிகிறது. எனினும் மாறாத பிரபஞ்ச நியதியாக முன்வைக்கப்படும் மரபான அறம் சார்ந்த பார்வைக்கு மாற்றாக ஒவ்வொருவருக்குமான தனியறத்தை (ஸ்வதர்மம்) முன்னிலைப்படுத்துகிறார். ஆகவே, அவருடைய படைப்புகளில் அறம் சார்ந்த விவாதம் இருப்பதைத் தொடர்ந்து காணலாம்.
அப்படி, அவர் எழுதிய ‘அறம்’ தொகுதியில் உள்ள சிறுகதைகள் தமிழில் தனி கவனம் பெற்றன. ஒவ்வொரு ஆண்டும் மறுபதிப்புக் கண்டு பல்லாயிரம் தொகுப்பு விற்பனையான நூல் அது. இலட்சியவாத நோக்கு கொண்ட எழுத்துக் காலாவதியான பாணி என்ற எண்ணம் எழுத்துலகில் தலைதூக்கிய காலக்கட்டத்தில், இலட்சியவாதத்தின் மீது கொண்ட நம்பிக்கையை விதைக்க, தான் சந்தித்த உண்மை மனிதர்களிலிருந்து உருவி எடுத்த வாழ்வின் தருணங்களைப் புனைவாக்கி அறம் தொகுப்பில் வழங்கியுள்ளார் ஜெயமோகன். சூழலியல், பண்பாடு, இலக்கியம், அரசியல், சமூகம் எனப் பல துறைகளிலும் பெரும் லட்சியவாத வேட்கையுடன் இயங்கிய உண்மை மனிதர்களை அத்தொகுப்பில் காண முடிகிறது. காட்டில் வாழும் யானைகளின் மீதான நலனுக்காகத் தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியை ஒதுக்கிய டாக்டர் கே என அறியப்படும் கிருஷ்ணமூர்த்தி, தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து பிறந்து நாராயண குருகுலத்தின் வாயிலாகக் கல்வியறிவு பெற்று அரசு பணியில் உயர்பதவிபெற்ற தன்னுடைய நண்பர் என அறம் சிறுகதைகளின் வாயிலாக மக்களுக்கு இலட்சியவாதத்தின் மீது நம்பிக்கையூட்டச் செய்தார்.
ஜெயமோகன் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ஜெயமோகனின் பெரும்பான்மையான சிறுகதைகள் அவரின் வாழ்விடமான பண்டைய தென் திருவிதாங்கூர் நாடு, தற்கால கேரள-தமிழ்நாடு எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் கன்னியாகுமரி நிலப்பரப்பின் சமூக, வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவை. அவருடைய சிறுகதைகளைத் தொகுத்துச் சொல்வதற்கு இம்மாதிரியான வகைமாதிரிகளாக அவற்றைப் பகுத்துக் கொண்டாலும் ஒட்டுமொத்தமாக மர்மம், அறிவியல் புனைவு, வரலாறு, பகடி, மெய்யியல் எனச் சிறுகதையின் வாயிலான அனைத்துச் சாத்தியங்களையும் ஜெயமோகன் நிகழ்த்தியிருக்கிறார் எனலாம். ஜெயமோகனின் அறிவியல் புனைகதைகளின் தொகுப்பான ‘விசும்பு’ கதையும் அறிவியலின் பல சாத்தியங்களைக் கொண்ட புனைவாக்கச் செயற்பாடாக அமைந்தது. கோவிட் 19 தொற்றின் காரணமாகக் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கக் காலக்கட்டத்தில் நாளொன்றுக்கு ஒரு சிறுகதை எனக் கதைத் திருவிழா என்ற பெயரில் மொத்தமாக 125 சிறுகதைகளை எழுதினார். அதன் வாயிலாக, நவீன மனித வரலாற்றின் மிக இக்கட்டான காலக்கட்டமொன்றில் தன்னுடைய இடைவிடாத படைப்பாக்கச் செயல்பாட்டால் வாசகர்களுக்கு ஊக்கமூட்டினார்.
ஜெயமோகனின் இலக்கிய விமர்சனம் எவ்விதத் திட்டவட்டமான கோட்பாடு சார்ந்து படைப்பை அணுகும் முறைக்கு நேர் எதிராகத் தேர்ந்த ரசனை விமர்சனத்தை முன்வைக்கக்கூடியது. தமிழில் புதுமைப்பித்தன், க.நா.சுப்பரமணியம், சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் என நீளும் ரசனை விமர்சகர்கள் வரிசையின் தொடர்ச்சியாகத் தன்னை ஜெயமோகன் முன்வைப்பதுண்டு. உலக இலக்கியங்களிலும் தமிழிலக்கியத்திலும் இதுவரையில் வெளிவந்த மிகச் சிறந்த இலக்கியங்களை வாசித்து அதன் வாயிலாகத் தான் பெற்ற அனுபவங்களைக் கொண்டு படைப்பை அணுகித் தான் பெற்ற அனுபவத்தை ஒட்டுமொத்த மதிப்பீடாக முன்வைக்கிறார். அவ்வடிப்படையில் தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளை மீளக் கண்டடையும் வகையில் விரிவான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களான அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி எனப் பலரின் ஒட்டுமொத்த படைப்புலகைப் பற்றிய குறுக்கு வெட்டுத் தோற்றத்தை ஜெயமோகன் அளித்திருக்கிறார். பல முன்னோடி எழுத்தாளர்கள், அவரது சமகால எழுத்தாளர்கள், இலங்கை எழுத்தாளர்கள், சிங்கப்பூர் எழுத்தாளர்கள் என உள்ளடக்கம் கொண்ட அவர் விமர்சன உலகம் மிக விரிவானது.
ஜெயமோகனின் கட்டுரைகளில் சீரான தருக்கப்பார்வை அமைந்திருப்பதைக் காணலாம். அத்துடன், தான் சொல்ல வரும் சூழலின் ஒட்டுமொத்தப் பார்வையைத் தொகுத்தளித்து அதை நிறுவும் வகையில் அதற்கான தருக்கப்பூர்வமான விளக்கங்களைக் கட்டுரைகளில் அளிப்பார். இந்த முழுமைத்தன்மையே அவரைத் தமிழின் மிக முக்கியமான சிந்தனையாளராகவும் முன்னிறுத்துகிறது. அவரது பல கட்டுரைகள் அதுவரையில் ஒன்றைக் குறித்து அறிந்து வந்தவற்றையே மறுவிளக்கம் செய்யக்கூடிய அளவு ஆற்றல் கொண்டவை. உதாரணத்துக்கு, ஜெயகாந்தனின் ‘அக்னிப்பிரவேசம்’ சிறுகதையில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் பெண் சுவிங்கம் மெல்லுவதாக வரும் சித்திரிப்பை உளவியல் நோக்கில் அணுகிய கட்டுரையைச் சொல்லலாம். அவள் மெல்லுகின்ற சுவிங்கம் ஒருவகையில் அவளின் ஏற்பு அல்லது உள்ளூர இருக்கும் விருப்பத்தின் அடையாளமாகக் கொள்ளக்கூடியதாக இருக்குமா என்ற கோணத்தை வைக்கின்றார். அந்தக் கதையை மறுவிளக்கப்படுத்தும் முக்கியமான பார்வையாக அதைக் கருதலாம்.
தமிழில் ஜெயமோகன் அளவுக்கு எழுதியவர் இயங்கியவர் யாரும் இல்லை எனப் பரவலான எண்ணம் இருந்த சூழலில் அவர் தனது 50வது வயதில் முன்னெடுத்த முயற்சிதான் ஆச்சரியமானது. இளமையிலே மகாபாரதத்தை மீளாக்கம் செய்ய வேண்டுமென்கிற உந்துதலைக் கொண்டிருந்தார் ஜெயமோகன். மகாபாரதத்தைப் பின்னணியாகக் கொண்டு பத்மவியூகம் உள்ளிட்ட முக்கியமான சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு தொடங்கி ஏழாண்டுகளுக்கு முழு மகாபாரதத்தையும் நவீனச் சிந்தனைக்கேற்ப மீளாக்கம் செய்து வெண்முரசு எனும் பெயரில் நாளொன்றுக்கு ஒரு அத்தியாயம் எனத் தன்னுடைய தளத்தில் வெளியிட்டார். அந்த மீளாக்க முயற்சி 25000க்கும் மேற்பட்ட பக்கங்களுடன் 26 நாவல்களாக வெளிவந்தன. இந்தியா முழுமைக்கும் மகாபாரதத்தைப் பின்னணியாகக் கொண்டு பல நூறு நாடகங்கள், கூத்துகள், நாவல்கள், சிறுகதைகள் தழுவல்களுடன் அங்காங்கே பல்லாயிரமாண்டுகளாக இருந்து வந்துள்ளன. ஜெயமோகன் உருவாக்கிய மகாபாரத மீளாக்கம் தன்னுடைய கிளைகளாக வெவ்வேறு மகாபாரதப் பிரதிகளைக் கொண்டதோடு ஒவ்வொரு கதைமாந்தரையும் தருணத்தையும் உளவியல் அடிப்படையில் தத்துவங்களுக்கேற்பவும் மறுவிளக்கம் செய்து சித்திரித்திருந்தது. தமிழில் மட்டுமின்றி உலக மொழிகளிலும் மிக முக்கியமான இலக்கியச் சாதனையாக அம்முயற்சி கருதப்படுகிறது.
கெளரவர்களுடனான சூதாட்டத்தின் போது திரெளபதியை வைத்து ஆடித் தோற்கின்றனர். துச்சாதனன் திரெளபதியின் சேலையைப் பிடித்து இழுக்க சுருள் சுருளாகச் சேலைகள் வந்து விழுந்தன என்ற மூலமகாபாரதத்தின் சாரத்தை வெண்முரசில் அரண்மனை முழுதும் இருந்த பெண்கள் திரெளபதிக்கு நேர்ந்த அவலத்தை எண்ணித் தம்தம் சேலையை அளித்ததாக எழுதியிருக்கிறார். அதைப் போல, அறமின்மையான செயல்களால் பாண்டவர்களை வதைக்கின்றவனாகத் துரியோதனன் இருந்தாலும் பாண்டவர்களின் பிள்ளைகளையும் அரவணைத்துச் செல்லும் பெருந்தந்தையாகவும் பல அருங்குணங்கள் கொண்டவனாகவே வெண்முரசில் படைக்கப்படுகிறான். அத்துடன் மகாபாரதப் போருக்குப் பின்னணியாக இருந்த இந்தியாவின் சமூக அரசியல் சூழலையும் வெண்முரசில் காண முடிகிறது. நிலவுடைமைச் சாதியினரான ஷ்த்ரியருக்கும் இடையர் சாதியினரான யாதவர்களுக்குமான அதிகாரப் பூசலாகவே மகாபாரதப் போர் அமைந்திருப்பதைக் காண முடிகின்றது. இவ்வாறாக, மகாபாரதம் முழுமையாகவே அரசியல், சமூகம், தத்துவம் என மறுவிளக்கப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது.
தன்னுடைய இலக்கிய ஆக்கங்களுக்கு மத்தியில் விஷ்ணுபுரம் எனும் இலக்கியச் செயற்பாட்டு இயக்கத்தை 2010ஆம் ஆண்டு தொடங்கினார். இந்த இலக்கியக் குழு உலகம் முழுவதும் இருக்கின்ற அவரது இலக்கிய நண்பர்களால் முழுமையாக நடத்தப்படுகின்றது. இந்த இயக்கத்தின் வாயிலாகத் தமிழிலக்கியத்திலும் அறிவுலகத்திலும் மிக முக்கியமான பணிகளைச் செய்து வரும் படைப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு விருதும் பணமுடிப்பும் வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்களின் படைப்பை விரிவாக அறிமுகப்படுத்தும் நோக்கில் இரண்டு நாள் நிகழ்ச்சி ஒருங்கு செய்யப்பட்டு எழுத்தாளர்களின் உரை, கலந்துரையாடல் எனத் தமிழிலக்கியத்தின் மிக முக்கியமான அறிவுக் கொண்டாட்டமாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இப்படி விருது பெறும் ஆளுமைகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வரையறைதான் முக்கியமானது. அனைத்துத் தகுதிகளும் இருந்து தமிழில் எந்த விருதோ கவனமோ கிடைக்காத ஆளுமைகளையே விஷ்ணுபுரம் அமைப்புத் தேர்ந்தெடுகிறது. அவர்களையே சமூகத்தின் முன் வைக்கிறது.
மூத்தப்படைப்பாளிகள் மட்டுமல்லாமல் 2015ஆம் ஆண்டு தொடங்கி இளம் கவிஞர்களை அடையாளப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கான குமரகுருபரன் நினைவு விருதும் அவர்களின் படைப்புகளை ஒட்டிய விரிவான அறிமுகத்தை அளிக்கும் அமர்வுகளும், கலந்துரையாடலும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இது இளம் கவிஞர்களுக்குப் பெரும் ஊக்கமாகத் திகழ்கிறது.
ஒவ்வோராண்டும் தமிழின் தேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள், இளம் வாசகர்கள் ஆகியோரைக் கொண்டு கவிதை வாசிப்புக் குறித்த பயிற்சியாகவும் விவாதமாகவும் ஊட்டி காவிய முகாம் நிகழ்த்தப்படுவது விஷ்ணுபுரம் இயக்கத்தின் பங்களிப்பில் முக்கியமானது. இலக்கிய விவாதங்கள், கலந்துரையாடல்கள், அறிமுகங்கள் வழி உலக இலக்கியம் தொடங்கி சமகால இலக்கியம் வரை நிகழும் மாற்றங்கள் அந்த முகாமில் விரிவாக அறிமுகம் காண்கின்றன. பல புதிய எழுத்தாளர்கள் தீவிரமான வாசிப்புக்கும் படைப்பிலக்கியத்திற்கும் ஆட்படுத்திக்கொள்ள இந்த முகாம் பெரிதும் பங்களிக்கிறது.
அத்துடன் தொடர்ந்து இளம் வாசகர்களுக்கான இலக்கியம் குறித்து மேலதிகமாகப் புரிதல் ஏற்படத் தொடர்ச்சியாக இளம் வாசகர் சந்திப்புகளை நடத்தி வருகிறார். தமிழ் இலக்கியம், வரலாறு, ஆகிய தளங்களில் முக்கிய பங்களிப்பையாற்றிய ஆளுமைகள் குறித்தக் கருத்தரங்குகளையும் முன்னெடுத்து வருகிறார்.
வெண்முரசு எழுதி முடித்தவுடன் ஜெயமோகன் அடுத்து என்ன செய்யப்போகிறார் எனத் தமிழ் உலகம் கவனித்துக்கொண்டிருந்தபோது அவர் முன்னெடுத்த முயற்சிதான் தமிழ் விக்கி. தமிழில் எழுதப்பட்ட கலைக்களஞ்சியங்கள் பல்லாண்டுகளாகியும் புதியத் தகவல்கள் சேர்க்கப்படாமல் முடங்கியுள்ளன. அத்துடன், விக்கிப்பீடியா போன்ற தளங்களில் எழுதப்படும் கட்டுரைகளும் எவராலும் நீக்கவும் மாற்றவும் முடியும் அபாயம் நிலவுகிறது. இந்நிலையில், தமிழ் அறிவுலகத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் தேர்ந்த துறைசார்ந்த அறிஞர்களால் சரிப்பார்த்து வெளியீடுவதற்கான தளமாகத் தமிழ்விக்கி எனும் இணையத்தளம் 2022 ஆம் ஆண்டு ஜெயமோகன் முன்னெடுப்பில் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தளத்தில், தமிழ் எழுத்தாளர்கள், ஆளுமைகள், இலக்கிய ஆக்கங்கள் ஆகியவற்றை ஒட்டி அனுப்பப்படும் கட்டுரைகளைச் சரிப்பார்க்கும் அறிஞர் குழுவொன்று இயங்குகின்றது. எழுத்தாளர்கள், வாசகர்கள் எனப் பலரும் பங்களித்து அனுப்பும் கட்டுரைகளை அறிஞர் குழு வாசித்துச் சரிப்பார்த்து இறுதி செய்த பின்னரே தளத்தில் வெளியிடப்படுகிறது. தமிழ் அறிவுலகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கான மிக முக்கியமான தளமாக இத்தளம் திகழ்கிறது. மேலும், இவ்வாண்டிலிருந்து விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் முன்னெடுப்பில் தமிழின் அறிவுப்புலத்தில் முக்கிய பங்காற்றும் ஆளுமைகளைச் சிறப்பிக்கும் பொருட்டு முதல் தமிழ்க்கலைகளஞ்சியம் தயாரித்த பெரியசாமி தூரனின் நினைவாகத் தூரன் விருது வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.
ஜெயமோகனின் புனைவில் வெளிப்படும் விரிவான நிலப்பின்னணிக்கும் வெவ்வேறு மனிதர்களின் ஊடாட்டத்துக்கும் மிக முக்கியமான காரணமாக அமைவது அவரது பயணங்கள் எனச் சொல்லலாம். வருடத்தின் பாதிக்கும் மேற்பட்ட நாட்களில் ஏதேனும் பயணத்திட்டத்துடனே ஜெயமோகன் கழிக்கின்றார். தொல் இந்தியாவின் மிக முக்கியமான மதமாகத் திகழ்ந்த சமணமதத்தின் துறவிகள் ஏற்படுத்திச் சென்ற அறநிலைகளை ஒட்டி ஆறு மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்து எழுதிய ‘அருகர்களின் பாதை’ எனும் பயணத்தொடர் மிகவும் சிறப்பானது. சமணம் இந்தியாவில் ஏற்படுத்திய வரலாற்றுச் சமூகப் பண்பாட்டுத் தாக்கத்தைக் குறுக்குவெட்டுச் சித்திரமாக அந்நூல் அளிக்கின்றது. ஆஸ்திரேலியாப் பயணத்தைப் புல்வெளித் தேசம் என்று எழுதியிருக்கிறார். மேலும், இந்திய நிலம் முழுமைக்குமான வெவ்வேறு பயணத்திட்டங்களை ஒருங்கிணைத்து நண்பர்களுடன் பயணம் செய்து இந்தியாவின் வெவ்வேறு பண்பாட்டுச் சமூகச் சூழலை முன்வைக்கும் பயண இலக்கியத்தொடரைத் தன் தளத்தில் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார்.
இவற்றுடன் தமிழ், மலையாளத் திரைப்படங்கள் சிலவற்றுக்குமான கதை, திரைக்கதை எழுதுவதன் வாயிலாகவும் தமது பங்களிப்பை ஜெயமோகன் செய்திருக்கிறார். மலையாளத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்ற ஒழிமுறி, தமிழில் விமர்சகர்களால் பெரிதும் வரவேற்பு பெற்ற கடல், அங்காடித் தெரு, காவியத்தலைவன் ஆகியப் படங்களுக்கான திரைக்கதை பங்களிப்பு செய்திருக்கிறார்.
ஜெயமோகனின் வருகை என்பது தமிழ் இலக்கியத்தில் மாபெரும் அறிவியக்கத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அவரைப் பின்பற்றி அல்லது ஈர்க்கப்பட்டுச் செயலூக்கத்துடன் எழுத வந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் நிரையும் நீண்டு கொண்டே இருக்கின்றது.