இவ்வாண்டு சிங்கைப் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் ஃபாலின் ஃபானிடமிருந்து ஒரு புலனச்செய்தி வந்தது. இவ்வருடம் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் இரு தமிழ் அமர்வுகள் இணைக்கப்பட போவதாகவும் அதற்கு நான் பொறுப்பேற்க முடியுமா என்றும் கேட்டிருந்தார். இரு அமர்வுகளையும் தமிழிலேயே நடத்தலாம் என்ற அவர் குறிப்பு உடனடியாக என்னைச் சம்மதிக்க வைத்தது.
பி. கிருஷ்ணனின் வருகை
அந்த மகிழ்ச்சியுடன்தான் சிங்கை எழுத்தாளர் பி. கிருஷ்ணன் அவர்களைச் சென்று சந்தித்தேன். அதற்கு முன்பு 2017இல் அவரது ஆவணப்படத் தயாரிப்பில் சந்தித்திருந்தேன். அப்போது ‘தன் வரலாறு’ நூல் ஒன்றை அவர் எழுத வேண்டும் என வேண்டுகோள் வைத்திருந்தேன். வல்லினம் வழி அதைப் பதிப்பிக்கும் ஆர்வம் எனக்கிருந்தது. அத்தனை சுவாரசியமான வாழ்க்கை அவரது. பி. கிருஷ்ணன், தான் அப்போது ஏற்றிருக்கும் ஷேக்ஸ்பியர் நாடக மொழிபெயர்ப்பு பணிகளை முடிக்க வேண்டும். அதுவரை பிற காரியங்களைச் செய்வது சிரமம் என்றார். பின்னர் எழுத்தாளர் லதாவின் மூலம் ஓரிருமுறை நினைவுறுத்தியும் அவர் இசையவில்லை. எனவே இம்முறை நேரடியாகக்கேட்டு, சம்மதிக்க வைக்கவேண்டும் என்பதே என் திட்டமாக இருந்தது.
என் வேண்டுகோளை பி. கிருஷ்ணன் நிதானமாக எதிர்கொண்டார். தனக்கு அப்பணியைச் செய்ய முடியாததன் காரணத்தைச் சொன்னார். நான் முன்னமே அவரிடம் வாசிக்க வழங்கியிருந்த எழுத்தாளர் அ. ரெங்கசாமியில் ‘சிவகங்கை தொடங்கி சிசங்காங்வரை’ எனும் அ.ரெங்கசாமியின் சுய வரலாற்று நூலை நினைவுகூர்ந்தவர், அதுபோல தன்னால் ஒருபோதும் எழுதமுடியாது என்றார். இளமையில் அவருக்கு ஏற்பட்டிருந்த விபத்துக்குப் பின்னர் பெரும்பாலான இளவயது நினைவுகளை அவர் இழந்துவிட்டதை நான் இயக்கிய ஆவணப்படம் வழி அறிவேன். அந்த நினைவுகள் இல்லாமல் வாழ்க்கை வரலாறு பூரணமாகாது என்றார். அவ்விபத்து அவரை எவ்வளவு பாதித்துள்ளது என அன்றைய உரையாடலில் புரிந்துகொள்ள முடிந்தது. மேலும் வேறெதையும் எழுதுவதைக் குறித்துச் சிந்திக்க முடியாததற்குக் காரணம் ஷேக்ஸ்பியர் நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் கடந்த ஆறு ஆண்டுகளாக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டதுதான் காரணம் என்றார். தற்போது எட்டாவது நாடக நூலை உருவாக்கும் பணியில் இருப்பதையும் கூறினார்.
ஆவணப்படத்தில் தனது வாழ்நாள் லட்சியமாக ஷேக்ஸ்பியரின் எட்டு முக்கிய நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதுதான் என அவர் கூறியதை நினைவுகூர்ந்தேன். அப்போதே ‘மெக்பத்’ நாடகத்தை மொழியாக்கம் செய்து நூலாகவும் கொடுத்திருந்தார். மற்ற நூல்கள் எப்போது வரும் எனக்கேட்டேன். தான் கையெழுத்தில் எழுதி வைத்திருந்த பிரதிகளை எடுத்து வந்து காட்டினார். அத்தனை நேர்த்தி. இந்த நேர்த்தியை நான் இளம் படைப்பாளிகளிடம் பார்த்தது குறைவு. அவசரமான செயல்முறையும் அந்த அவசரத்தின் மேல் அவர்களுக்கிருக்கும் அபாரமான நம்பிக்கையும் கசப்பை உருவாக்குபவை. இலக்கியத்தில் அவர்களது பயண எல்லைகளை முன்னமே அனுமானிக்க வைப்பவை.
நான் அந்தக் கையெழுத்துப் பிரதியை நிதானமாகப் புரட்டிக்கொண்டிருந்தேன். “அடுத்த மாதம் மொத்த நாடகங்களும் நூல்களாகக் கிடைக்கும்” என முணுமுணுப்பாகக் கூறினார். எனக்கு அவர் உழைப்பும் முனைப்பும் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. அதற்கு முன் எழுத்தில் உள்ள அவரது தீவிரம் நூலுருவாகிச் சான்றுகளாக இருந்தன. எடுத்த பணியில் கொண்டிருந்த அர்ப்பணிப்பு அவரை இயக்கும் என நான் அறிந்திருந்திருந்தேன். சிங்கப்பூர் பதிப்பகத்தின் வழி நூலாகும் ஒரு தொண்ணூறு வயது பெரியவரின் பெருமுயற்சி எவ்வகையில் தமிழ்ச் சூழலில் விரிவான கவனத்தை எட்டும் என்பதுதான் என் கவலையாக இருந்தது. அடுத்த நிமிடமே “நீங்கள் சுயவரலாறு எழுதவேண்டாம். உங்கள் படைப்புகளைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டால் மலேசியா வருவீர்களா?” என்றேன்.
“லதா வந்தால் அவருடன் வருவேன்,” என்றார். அவர் முகத்தில் எப்போதைக்குமான ஒரு புன்னகை இருந்தது. அது முதுமையின் முழுமை கொடுத்ததாக இருக்கலாம்.
அவர் வாக்குறுதி கொடுத்தால் மீறமாட்டார் எனக் கேள்விப்பட்டுள்ளேன். எனவே அந்த வாக்குறுதியுடன் மலேசியா திரும்பினேன். ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா நடக்கும் காலத்திலேயே பி. கிருஷ்ணனுக்கான அரங்கு ஒன்றை நடத்தவேண்டும் என்ற எண்ணம் தோன்றிய தருணம் அது.
தமிழ் விக்கியில் பி. கிருஷ்ணன்
ஜெயமோகனின் வருகை
ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள ஆறு எழுத்தாளர்களைப் பரிந்துரைக்க வேண்டும் என்பதால் மலேசியா திரும்பிய அடுத்த நாளே அவ்வாறு ஒரு பட்டியலை தயாரித்து அனுப்பினேன். அதில் முதலாவதாக ஜெயமோகனின் பெயர் இருந்தது. அதை ஒட்டி நடந்த சந்திப்புக் கூட்டத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்னிடம் கேட்டார், “ஜெயமோகனை உங்களால் உண்மையில் அழைத்துவர முடியுமா?”
நான் இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஜெயமோகன் யாருடைய பரிந்துரையிலும் அழைக்கப்படவேண்டிய காலத்தையெல்லாம் கடந்துவிட்டார் என எனக்கு அப்போதுதான் உரைத்தது. அவரது இருப்பு இன்றைய எந்த உலகலாவிய இலக்கிய நிகழ்விலும் அவசியமாக உள்ளது எனப் புரிந்தது. தயங்கியபடி “முயற்சிக்கிறேன்” என்றேன். ஜெயமோகனிடம் இருந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஒப்புதல் கிடைத்த பிறகு ஏற்பாட்டுக் குழுவுக்கு உற்சாகம். “உண்மையில் ஒப்புக்கொண்டாரா? உறுதிப்படுத்திக்கொள்ளலாமா?” எனக் குதூகலித்தனர்.
ஜெயமோகனின் வருகை உறுதியானபின் பி. கிருஷ்ணனின் அரங்கில் ஜெயமோகனைத் தலைமை ஏற்கச் சொல்லி நடத்துவதென வல்லினம் குழுவில் முடிவானது. ஜெயமோகன் வழியாக பி. கிருஷ்ணனின் முயற்சி அறிமுகமாவது தமிழ் இலக்கியச் சூழல் மொத்தத்துக்கும் அறிமுகமாவதுதான். ஆனால் அதனை ஜார்ஜ் டவுன் இலக்கிய அமைப்பு எந்த அளவில் ஒப்புக்கொள்ளும் எனும் சந்தேகம் வந்தது. அவர்களின் விருந்தினரை வல்லினம் பயன்படுத்துவது முறையாகாது. சிக்கல் எதுவும் இல்லாமல் இருக்க ஜார்ஜ் டவுனில் நடைபெறும் தமிழ் நிகழ்ச்சிக்கான கணிசமான செலவுகளை வல்லினம் ஏற்குமென கூறி வல்லினத்தை ஓர் இணை இயக்கமாக இணைக்கும்படி மின்னஞ்சல் செய்தேன். உடனடியாக சம்மதம் கிடைக்கவே அப்படியானால் சிறப்பு விருந்தினர்களை வல்லினத்தின் தனி நிகழ்வுகளில் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வேண்டுமெனக் கடிதம் அனுப்பினேன்.
பல்வேறு கலந்தாலோசனைகளுக்குப் பின்னர் சில விதிகளுக்குட்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டது. இனி தடையொன்றும் இல்லை என உணர்ந்தபின் பி. கிருஷ்ணனின் அரங்குக்கு ஜெயமோகனை தலைமை ஏற்க வைப்பதென உறுதியானது. ஆனால் கூடவே இன்னொரு திட்டமும் ஒட்டிக்கொண்டு வந்தது. அது ‘தமிழ் விக்கி’ அறிமுக விழா.
அருண் மகிழ்நன் வருகை
‘தமிழ் விக்கி’ அறிமுகவிழா நடத்த அதன் குழுவினர் சம்மதம் தெரிவித்தனர். முதலில் 200 கட்டுரைகளை நோக்கிச் செல்லும் பணி சவாலானதாக இருந்தாலும் சில வாரங்களிலேயே அனைவருக்கும் விழாவின் தேவை புரிந்திருந்தது. தாங்கள் இணைந்துள்ள வரலாற்றின் பணி குறித்த அக்கறை அனைவருக்குமே எழுந்திருந்தது. எனவே பணிகள் தன்னியல்பான வேகத்துடன் நிறைவுடன் நடந்தன.
ஆனால் இந்தத் ‘தமிழ் விக்கி’ வெளியீட்டுக்கு யாரைத் தலைமை தாங்கச் சொல்வது எனும் கேள்வி எழுந்தது. பலவிதமான விவாதங்களுக்குப் பின்னர் மனதில் அருண் மகிழ்நன் பெயரே நிலைத்தது. அருண் மகிழ்நன் அவர்களை இரண்டு முறை சிங்கையில் சந்தித்துள்ளேன். இரண்டு முறையும் அவர் பெரும் கனவுகளுடனான திட்டங்களை முன்னெடுப்பவராக அறிமுகமானார்.
முதல்முறை 2016ல் சந்தித்தபோது, சிங்கப்பூரின் 50-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, தமிழ் இலக்கிய வெளியீடுகளை மின்னிலக்கமயமாக்கிய அவர் முயற்சியை அறியமுடிந்தது. தொடர்ந்து சமூகம் மற்றும் சிங்கை அரசாங்க ஆதரவுடன் சிங்கைத் தமிழ் நாடகங்கள், சிங்கைத் தமிழ் இசை, சிங்கைத் தமிழ் நடனம் ஆகியவற்றையும் மின் தொகுப்பாக்கும் முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றியிருந்தார். இரண்டாவது முறை இவ்வாண்டில் அவரைச் சந்தித்தபோது சிங்கப்பூருக்கான இணையக் களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் திட்டம் அவருக்கு இருந்தது. மேலும் அவர் தொகுத்த ‘ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர்’ எனும் நூல் என்னைப் பெரிதும் கவர்ந்தது.
தமிழ் விக்கியின் தேவையை அவரால் நன்கு அறியமுடியும் என்பதால் அவருக்கு ஒரு மின்னஞ்சல் செய்தேன். ஆனால் அவர் தொடர் பயணங்களில் இருந்ததால் கலந்துகொள்வது குறித்த சந்தேகத்தையே முதலில் தெரிவித்தார். தலைமை தாங்க வேறு ஒருவரைத் தேடுவதே சிறப்பு என்றார். மூன்று நாட்கள் பலவாறாக யோசித்தபிறகு மீண்டும் அருண் மகிழ்நனே இதற்கு பொறுத்தமானவர் எனத் தோன்றியதால் மீண்டும் என் நிலைப்பாட்டை தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன். சில நாட்களில் சாதகமான பதில் வந்தது.
அவர் வருகையும் துவக்கமும் இந்த ஆக்ககரமான முயற்சிக்கு மேலும் கவனத்தை ஈட்டும் எனும் எண்ணம் உருவானது.
தமிழ் விக்கியில் அருண் மகிழ்நன்
வழக்கறிஞர் பசுபதி வருகை
பி. கிருஷ்ணனின் வசனத்தில் உருவான ஷேக்ஸ்பியர் நாடகத்தை உண்மையில் நிகழ்த்தினால் என்ன என்ற எண்ணத்தை அ. பாண்டியன் விதைத்த பிறகு அவர் எண்ணப்படியே மை ஸ்கில்ஸ் அறவாரியத்தை அணுகினேன்.
அதன் தோற்றுனர் சி. பசுபதி அவர்களை எனது கல்லூரிக் காலம் முதலே அறிவேன். வல்லினத்தின் பல முயற்சிகளுக்குத் துணை நின்றவர். நான் எந்த முயற்சியை எடுத்துச் சென்றாலும் அதில் முழுமையான நம்பிக்கை வைப்பவர். அவர் கொண்டுள்ள நம்பிக்கையினாலேயே நான் மிகுந்த கவனமாக ஒரு திட்டத்தை வடிவமைப்பேன். ஒருவரின் அன்பை நம் சுய தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது என்பதில் எப்போதுமே என் கவனம் இருக்கும்.
எனவே, ஆறு பக்கத்திற்கு முறையாக செயல் திட்ட அறிக்கையைத் தயாரித்து அவரைச் சென்று கண்டேன். உடன் நாடக இயக்குனர் விஸ்வநாதன் மற்றும் அரவின் குமார் இருந்தனர். பசுபதியிடம் என் எண்ணத்தைச் சொல்லி நாடகத்துக்கான மொத்தச் செலவில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ள முடியுமா எனக் கேட்டேன். கடிதத்தின் இறுதிப் பக்கத்தை மட்டும் திறந்து பார்த்தவர் மொத்த தொகையையும் கொடுக்கிறேன் என்றார். நாங்கள் முன்வைத்த அத்தனை வேண்டுகோளுக்கும் சம்மதித்தார்.
காரில் ஏறி புறப்பட்டபோதுதான் கடிதத்தில் அவரை நாடகத்துக்குத் தலைமை தாங்க அழைத்ததை அவர் கவனிக்கவே இல்லை என்பதை அறிந்தேன். மீண்டும் அழைத்தேன். தலைமை தாங்கி உரையாற்ற வேண்டும் என்றேன். சிரித்தபடி “சரி” என்றார்.
தமிழ் விக்கியில் பசுபதி சிதம்பரம்
மா. சண்முகசிவா வருகை
கோலாலம்பூரைத் தாண்டி நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு டாக்டர் சண்முகசிவாவை அழைத்து வருவது அத்தனை சாதாரணமல்ல. சண்முகசிவாவின் மனம் பெரும்பாலும் ஆன்மிகத்திலும் சேவையிலும் நிலைந்திருப்பது. இப்போதெல்லாம் இலக்கியம், கலை சார்ந்த முயற்சிகளில் சற்றுத் தள்ளியே நின்று வேடிக்கைப் பார்க்கிறார். ஆனால், சண்முகசிவா அருகாமை இல்லாமல் எனக்கு பொதுவாக தெம்பிருக்காது. அவர் இல்லாத வல்லினம் நிகழ்ச்சிகளில் அந்த வெறுமையை நான் உணர்ந்திருக்கிறேன். எல்லாம் முடிந்தபிறகு அந்த வெறுமை கௌவிக்கொள்ளும். எனக்கு நெருக்கமானவர்கள் என் உற்சாகமின்மையை அறிந்து என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நன்றாக யோசித்தால் தன் ஆசிரியர்கள் முன் ஒவ்வொரு மாணவனும் ‘நான் எவ்வளவு சமத்து பார்த்தியா?’ எனச் சொல்லத்தான் ஆசைப்படுகிறார்களோ எனத் தோன்றுகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எவ்வளவு தூரம் நகர்ந்தாலும் நான் சண்முகசிவாவிடம் ஒரு சின்னஞ்சிறிய மாணவனாகவே திரும்பிச் செல்கிறேன். என்னை உருவாக்கியவர் அவர். என் செயல்பாடுகள் ஒவ்வொருன்றிலும் அவர் இருக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.
ஜானகிராமன் விருதளிப்பு நடத்த திட்டமிட்டபோது ‘கோவிட்’ காரணமாக அவர் வீட்டைவிட்டு வெளியே வரமாட்டேன் எனச் சொல்ல அவருடன் நான் சண்டைபிடித்து பின் சமாதானம் செய்ய கிளினிக் வரை தேடிப்போக வேண்டியதாக இருந்தது. நல்லவேளையாக கோவிட் தீவிரம் அதிகரிக்க நிகழ்ச்சி தள்ளிப்போனது. தைப்பிங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு சண்முகசிவா வந்தார்.
இந்த நிகழ்ச்சி பற்றிக் கூறியபோதும் வழக்கம்போல “அவ்வளவு தூரமா?” என்றார். ஆனால் அவரிடம் ஒரு பலவீனம் உண்டு. அதை உபயோகித்தேன். “தமிழ் விக்கிக்கு புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பங்களித்துள்ளனர் அவர்களை நீங்கள் பார்க்கவேண்டாமா?” என்றேன்.
“புதிய தலைமுறையா? இளைஞர்களா?” என வியந்தார். அந்த வியப்பு குறையும் முன்பே கணிசமான தொகையை நன்கொடையாக வாங்கிவிட்டேன். புறப்பட்டபோது அவர் வருவார் என எனக்கு உள்ளூர உறுதியானது. இளைஞர்கள் செய்யும் ஆரோக்கியமான பணிகள் ஒருபோதும் நிறுத்தப்படக்கூடாது என்பது அவர் விருப்பம். அதன் பொருட்டே அவர் மை ஸ்கில்ஸ் அறவாரியத்தில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டுள்ளார்.
இவ்விழாவுக்கு அவர் வருவதும் அந்த இளைஞர்களைக் காணவே.
தமிழ் விக்கியில் மா. சண்முகசிவா
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியின் அருகாமை
இந்த மொத்தத் திட்டத்தையும் நான் முதலில் சொன்னது சுவாமி பிரம்மானந்தாவிடம். மூன்று நாள் நிகழ்ச்சியின் கட்டுமானம் எதுவும் அவர் மனதில் பதிந்திருக்கவில்லை. பொதுவாக தொழில்நுட்ப தகவல்கள் அவர் மனதில் பதியாது. “அன்னிக்கு சொன்னீங்களே… அது என்ன… ” என குழப்பமாகக் கேட்பார். அவர் மனதில் பதிவது நிகழ்ச்சிகளில் உள்ள உன்னத நோக்கம் மட்டுமே. அதன் வழியாகவே அவர் உடன்படுகிறார். நான் முன்வைத்தது தரமான நிகழ்ச்சி என்பதில் அவருக்குச் சந்தேகம் இருந்திருக்காது.
“நவீன் பணத்தை பற்றியெல்லாம் கவலை படாதீங்க… நான் உங்க முயற்சிக்கு எப்போதும் உடன் இருப்பேன்,” என்றார்.
சுவாமி அதைச் சொல்ல வேண்டாம். நான் அதை உள்ளூர அறிவேன். என் பலவீனமான காலங்களில் எல்லாம் அருகாமையில் இருக்கும் ஆளுமை அவர். இது வல்லினத்தின் நிகழ்ச்சி என அறிவிக்கப்பட்டாலும் அதன் பின்னணியில் பலமாக இருப்பது பிரம்மவித்யாரண்யம் எனும் சுவாமி பிரம்மனந்தா சரஸ்வதி அவர்கள் உருவாக்கியுள்ள ஆன்மிக அமைப்பு. அவர் உதவிகள் இல்லாமல் இம்முயற்சி பலமடங்கு சிறுத்திருக்கும்.
இந்நிகழ்ச்சியைப் பொறுத்தவரை சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி வருகையாளர் அல்ல; ஏற்பாட்டுக்குழுவின் முதன்மையானவர்.
முத்து நெடுமாறனின் வருகை
இந்நிகழ்ச்சிக்கு வருகை தரும் மேலுமொரு முக்கிய விருந்தினர் முத்து நெடுமாறன். முரசு குழுமத்தின் தலைவர்.
நான் ஒரு முறை இவரை நேரில் சந்தித்துப் பேசியதுண்டு. பின்னர் தமிழ் விக்கிக்காக பேசியபோது அவருடைய ஆளுமை என் மனதில் பலமடங்காக விரிந்தது. எப்படியானவர்கள் நம்மத்தியில் வாழ்கிறார்கள். நமது அன்றாடங்களில் அவர்களின் பங்களிப்பு எப்படியெல்லாம் உதவுகிறது. ஆனால் அவர்களை நாம் அவர்கள் அடைந்தவற்றின் வழியாகத்தான் உண்மையில் புரிந்து வைத்துள்ளோமா எனத் தோன்றியது.
சிந்தித்துப் பார்த்தால் எந்தத் துறையில் மாபெரும் சாதனைகளைச் செய்தவர்களையும் அந்தச் சாதனையின் உச்சம் வழியாக நாம் அறிந்து வைத்திருப்பதில்லை என்றே தோன்றுகிறது. ஜெயமோகன் மற்றவர்கள்போல ஓர் எழுத்தாளர். அருண் மகிழ்நன் மற்றவர்கள்போல ஒரு செயல்பாட்டாளர். சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி இன்றிருக்கும் ஆன்மிகவாதிகளில் ஒருவர். அப்படித்தான் முத்து நெடுமாறன் எண்ணற்ற கணினியாளர்களில் ஒருவர். தமிழில் இயங்குவதால் தமிழுக்குச் சேவை செய்பவர்.
அதிகபட்சம் ஓர் ஆளுமையைப் பற்றி நாம் அவ்வளவு குறைவாகவே அறிந்து வைத்துள்ளோம். அந்தத் துறையில் அவர்கள் சாதனை என்ன, அந்தச் சாதனை வழியாக அவர் சமூகத்துக்கு ஆற்றியுள்ள தனித்த பங்களிப்பு என்ன என்பதிலெல்லாம் நமக்கு ஆர்வம் இல்லை. எனவே நாம் ஏற்கெனவே உன்னதமாக நினைக்கும் விழுமியங்களில் ஒருவரை இணைத்து, அந்த விழுமியங்களையே மறுபடி மறுபடி வழிபட்டு பூதாகரமாக்குகிறோம். அதுவே நமக்கு உவப்பாக உள்ளது.
அப்படிச் சுருக்கமாக தமிழ்ச் சூழலில் அறியப்பட்டவர் முத்து நெடுமாறன். ஆனால் ஒட்டு மொத்தத் தமிழ்ச் சூழலும் கொண்டாடப்பட வேண்டியவர். அவரது வருகை இந்நிகழ்ச்சியை மேலும் அர்த்தப்படுத்தியுள்ளது.
சிங்கை எழுத்தாளர்களின் வருகை
ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் கலந்துகொள்ளும் எழுத்தாளர்கள் பட்டியலில் லதாவின் பெயர் தேர்வாகியிருந்தது. லதா சிங்கப்பூரில் முதன்மையான எழுத்தாளர் என்பது என் அபிப்பிராயம். அண்மையில் வெளிவந்துள்ள அவரது ‘சீனலட்சுமி’ சிறுகதை தொகுப்பு அதற்குச் சான்று. சிங்கப்பூரில் மட்டுமல்ல தமிழ் இலக்கிய வெளியிலும் அத்தொகுப்புக்குத் தனியிடம் உண்டு. தன் புனைவுலகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர் இலக்கியத்தின் ஆழ அகலங்களை அறிந்தவர் லதா. சிங்கப்பூர் இலக்கிய வரலாறு குறித்து விரிவான கட்டுரைகள் எழுதியுள்ளார். சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் குறித்து பேச பொருத்தமானவர்.
பி. கிருஷ்ணன் அரங்கில் உரையாற்ற இருவரை அணுகினேன். முதலாமவர் அழகுநிலா. அடுத்து கணேஷ் பாபு. இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட பணிக்கு எவ்வளவு உண்மையானவர்கள் என்பதைக் கடந்த காலங்களில் அறிந்துள்ளேன். பி. கிருஷ்ணன் அரங்கில் உரையாற்றுவது மட்டுமல்ல; அதற்கு முன்பே அவரது படைப்புலகம் குறித்த விரிவான கட்டுரையும் வழங்க வேண்டும். அதற்கு அவர் நூல்களை விரிவாக வாசித்திருக்க வேண்டும். அதிக நேரத்தையும் உழைப்பையும் கோரும் இப்பணிகளை அவர்கள் மனவுவந்து ஏற்றுக்கொண்டனர்.
தமிழக எழுத்தாளர்களின் வருகை
பி. கிருஷ்ணன் படைப்புலகம் குறித்து வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆளுமைகள் உரையாற்றும்போதே அது தொடர் உரையாடலுக்கான சாத்தியங்களை ஏற்படுத்துகிறது. அவ்வகையில் இவ்வரங்கில் தமிழக எழுத்தாளர் அருண்மொழி நங்கை மற்றும் ஜி.எஸ்.எஸ்.வி நவின் கலந்துகொள்கின்றனர்.
அருண்மொழி நங்கை பிரம்மவித்யாரண்யத்தில் உரையாற்றுவது இது இரண்டாவது முறை. முதன்முறை ‘பேய்ச்சி’ நாவல் குறித்து அவர் உரையாற்றிபோது ஒரு வாசகராகவே மலேசியாவில் அறிமுகமாகியிருந்தார். இன்று அவர் தமிழ் இலக்கியச் சூழலில் நன்கு அறிமுகமான எழுத்தாளர். அவரது ‘பனி உருகுவதில்லை’ எனும் அனுபவக் கட்டுரைகளின் நூல் விரிவான வாசகர் பரப்பை அடைந்து அவருக்கான தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. அருண்மொழி நங்கையின் தொடர் உரைகள், காணொளிகள் அனைத்தும் அவரது வாசிப்பின் விசாலத்தையும் அதன் வழி தனித்துவமாக அடைந்துள்ள இலக்கியப் பார்வையையும் உணர்த்தக்கூடியவை.
ஜி.எஸ்.எஸ்.வி நவின் இன்று தமிழில் எழுதக்கூடிய இளம் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். தொன்மத்திலிருந்தும் நாட்டார் பண்பாட்டிலிருந்தும் தனக்கான தனித்த கதைக்களத்தைத் தேர்வு செய்துகொண்டவர். வல்லினத்தில் இடம்பெற்ற இவரது சிறுகதைகள் பலரது பாராட்டையும் வரவேற்பையும் பெற்றவை.
இவர்கள் இருவர் வழியாக பி. கிருஷ்ணனின் படை ப்புலகின் வெவ்வே று அம்சங்கள் பகிரப்பட உள்ளன.
மொத்தத்தில் தமிழ் அறிவுச்சூழலிலும் இலக்கிய சூழலிலும் பண்பட்ட அனுபவசாலிகளின் ஒத்துழைப்பில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஆகவே வல்லினம் & GTLF இலக்கிய விழா இவ்வாண்டின் மிக முக்கியமான தமிழ் இலக்கிய நிகழ்ச்சியாக அமையும். மிகக்கவனமாக திட்டமிடப்பட்டுள்ள இவ்வரங்குகள் பார்வையாளர்களுக்கு எல்லாவகையிலும் பயனானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை .
இத்தனை பேரையும் ஒன்றுதிரட்டும் இந்த விழா, மலேசிய -சிங்கை தமிழ் இலக்கியத்தின் அறிமுகத்தையும் வாசகப் பரப்பையும் இந்நாடுகளுக்கு அப்பாலும் தமிழ் உலகுக்கு அப்பாலும் இன்னும் விசாலாமாக்கும்.