தமிழ் விக்கி: எழுத்தாளனுக்குக் கொடுப்பதென்ன?

இவ்வாண்டு ஜனவரி 13, ஜெயமோகனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் தமிழ் விக்கி குறித்த தனது எண்ணங்களைச் சொல்லி அதில் ஈடுபட அழைப்பு விடுத்திருந்தார். அது சுருக்கமான கடிதம்தான். எப்போதுமே ஆசிரியர்கள் தம் மாணவர்களை நோக்கி குறைவாகவே பேசக்கூடியவர்களாக உள்ளனர். குறைந்த சொற்களின் ஊடே தன் மாணவன் தமது உள்ளக்கிடக்கை புரிந்துகொள்வான் என ஆசிரியர்கள் நம்புகிறார்கள். அல்லது அவ்வளவு குறைவான சொல்லைக் கொண்டு பின் தொடர்பவன்தான் தன் மாணவனாக இருக்க முடியுமென்ற முடிவாக இருக்கலாம்.

தமிழ் விக்கியின் தேவையை நான் நன்கு அறிவேன். குறிப்பாக மலேசியச் சூழலுக்கு அது அதி முக்கியமானது என்ற எண்ணமே எழுந்தது. அதற்கு காரணங்கள் இருந்தன.

முதலாவது, மலேசியத் தமிழ்ச் சூழலில் இலக்கிய ஆளுமைகள் குறித்த முறையான பதிவுகள் என எங்கும் தொகுக்கப்படவில்லை. மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சுருக்கமான விவரங்கள் அடங்கிய நூலை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1967லும் பின்னர் 1995லும் வெளியிட்டது. ஒருவகையில் இவ்விரு நூல்களும் முக்கியமான முயற்சி. ஆனால், எழுத்தாளர்களின் விவரங்கள் அவர்களின் முன்னெடுப்புகள் காலம் தோறும் புதுப்பிக்கப்படக்கூடியவை. எனவே நூல்கள் சிறிது காலத்திலேயே பின்னடைந்தன.

இரண்டாவது, பெரும் நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்கள் ஆளுமைகளைப் போற்றிப்புகழ்வனவாகவே இருந்தன. குறைந்தபட்சம் ஒருவரின் பிறந்த திகதிகூட இடம்பெறாத தடிமனான வண்ணக்காகிதங்களில் அச்சடிக்கப்பட்ட நூல்கள் புகழ்பாடல்களின் தொகுப்பாகவே எஞ்சின.

மூன்றாவது, ஏற்கெனவே நடப்பில் உள்ள விக்கிப்பீடியாவுக்கு நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர் குழு என ஒன்று இல்லாததால் மலேசிய ஆளுமைகள் குறித்தும் எழுத்தாளர்கள் குறித்தும் தவறான தகவல்கள் மலிந்து கிடந்தன.

நான்காவது, கல்லூரிகளில் இலக்கியத்துறையில் பயிலும் ஆய்வு மாணவர்களுக்கு செறிவான தகவல்களை வழங்கும் நம்பகமான மூலம் என எதுவும் இல்லை. நானே என் ஆய்வுப்பணியின்போது முன்னுக்குப் பின்னாக முரண்பட்ட தகவல்களால் குழம்பியிருக்கின்றேன்.

எனவே முறையாக, நம்பகமாக, தொகுக்கப்பட்ட ஒரு தகவல் கலைக்களஞ்சியத்தின் தேவை அவசியமாக இருந்தது. ஆனால், அது உலகலாவிய கவனத்தை எட்ட வலுமிக்க ஒரு பின்புலத்தில் இருந்து வரவேண்டியிருந்தது. ஜெயமோகன் அதை தொடக்கினார். அதுவே தொடங்குவதற்கான முதல் உற்சாகம்.

***

தமிழ் விக்கி அறிமுகவிழா எண்ணம் ஜெயமோகனின் மலேசிய வருகையை ஒட்டியே உருவானது. GTLF இலக்கியவிழாவுக்கு அவர் வர சம்மதம் தெரிவித்த பிறகே மளமளவென பிற நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டன. குறைந்தபட்சம் 200 கட்டுரைகள் இருந்தால் மட்டுமே அறிமுகவிழாவுக்கு அர்த்தம் உள்ளது என குழுவில் பேசி முடிவெடுத்துக்கொண்டோம். இந்தக் குழுவில் என்னுடன் சேர்த்து பதினோரு பேர் இடம்பெற்றனர். மூத்த எழுத்தாளர்களில் கோ. புண்ணியவான் இந்தக் குழுவில் இணைந்துகொண்டார். கோ. புண்ணியவானின் பலம் என்பதே அதுதான். அவர் ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ப இயங்கக்கூடியவர். தற்கால முயற்சிகளோடு எவ்வித தயக்கமும் இல்லாமல் தன்னை இணைத்துக்கொள்ளக்கூடியவர். முந்தைய தவறுகளைக் களைந்து, தான் தொடர்ந்து கற்றுக்கொண்டிருப்பதை பெருமையாக நினைப்பதால் கற்பதற்கான சாத்தியங்களை மனத்தடையில்லாமல் பயன்படுத்திக்கொள்பவர். ஓர் எழுத்தாளரான அவருக்கு இந்தப் பணியின் தேவை புரிந்திருந்ததால் இணைந்து செயல்பட்டார்.

கோ. புண்ணியவானைப் போலவே தலைமை ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர் ஆசிரியர் சுப்புலெட்சுமி. தமிழ் விக்கி பணியில் அவரும் தன்னை இணைத்துக்கொண்டார். அதுவரை எழுத்துத்துறையில் ஈடுபடாத அவர் பதிவுகளைக்கண்டு உண்மையில் ஆச்சரியப்பட்டுப்போனேன். இவர் என்ன தமிழ் விக்கிக்கு எழுதவே இத்தனை காலம் எழுதாமல் இருந்தாரா எனத் தோன்றியது. பணி ஓய்வுக்குப் பின்னர் தங்கள் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்ள சிலர் மட்டுமே முனைகின்றனர். அதற்கு ஓர் உதாரணம் ஆசிரியர் சுப்புலெட்சுமி. அவர் தான் எழுதும் பதிவுகளுக்காக முரசு நெடுமாறன் போன்ற ஆளுமைகளை நேரடியாகவே பயணம் செய்து சந்தித்தார். அவர்களிடமே தகவல்களைப் பெற்றார். குறையின்றி அவற்றைத் தொகுத்தளித்தார். அவை கட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டபோது தமிழ் விக்கி இன்னும் என்னவெல்லாம் அதிசயம் செய்யப்போகிறது எனக் காத்திருக்கத் தொடங்கினேன்.

புதிதாக எழுத வந்த நால்வரின் பங்களிப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அரவின் குமார், பரிமித்தா, சாலினி, திலிப் ஆகிய நால்வரும் தமிழ் விக்கிக்கு பலம் சேர்த்தனர். என் வாசிப்பில், அரவின் குமார் மலேசியாவில் புதிதாக எழுந்து வந்துள்ள தலைமுறையில் முதன்மையானவர். அவர் தீவிரமாகச் செயல்பட தமிழ் விக்கி களம் அமைத்துக்கொடுத்தது. அரவின் குமாரின் தன்மை எதையும் சுருக்கமாகச் சொல்ல முயல்வது. இந்தத் தன்மை அவரது புனைவுகளிலும் வெளிப்பட்டது. தமிழ் விக்கியில் அவரது பயணம் இந்த மனநிலையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. தனக்கே இருக்கும் தனித்துவமான எழுத்து நடையுடன் எதையும் விரிவாக முன்வைக்கும் அனுபவத்தை தமிழ் விக்கி அவருக்கு வழங்கியுள்ளது.

அதுபோல வாசகியாக அறிமுகமான பரிமித்தா தன்னை விக்கியுடன் கொஞ்சம் குழப்பத்துடன்தான் பிணைத்துக்கொண்டார். இவர்களிடம் நான் பார்த்த ஒற்றுமை, இருவருமே புனைவு எழுத்தாளருக்கான மனநிலையைக் கொண்டவர்கள் என்பதுதான். எனவே இந்தப் பணியில் ஈடுபடுத்துவது அவர்கள் புனைவு முயற்சியின் காலத்தை அபகரிப்பதாகக் கருதக்கூடுமோ என எண்ணினேன். அரவினிடம் அந்தக் குழப்பம் இல்லை. தன் புனைவுக்கான விதைகளை தான் சேகரிப்பதாக அவருக்குத் தெளிவு இருந்தது. பரிமித்தாவுக்கு நிறைய குழப்பங்களும் கொந்தளிப்புகளும் இருந்தன. நிறைய கேள்விகள் இருந்தன. அந்தக் குழப்பமும் கேள்விகளும் சஞ்சலங்களுமே அவரை புனைவு எழுத்தாளர் என எனக்கு அறிமுகம் செய்தன. அவர் மிகச்சிறந்த படைப்புகளை மலேசிய உலகுக்கு வழங்கப்போகிறவர் என உள்ளுணர்வு சொன்னது. ஆனால் அந்தக் கொந்தளிப்பை ஓர் எதிர்மறை பண்பாக எண்ணி கவனத்தை திசை மாற்றும்போது போலியான அறிவுச்சூழலில் சிக்கிக்கொள்ளும் ஆபத்தும் உண்டு.

இருவருக்கும் இரு முதன்மையான பகுதிகளை வகுத்துக்கொடுத்தேன். அதன்படி அரவின் குமார் சரவாக் மாநில பழங்குடிகள் குறித்தும் பரிமித்தா தீபகற்ப மலேசியாவில் உள்ள பழங்குடிகள் குறித்து பதிவுகளை எழுதினர். பழங்குடிகளின் பண்பாட்டையும் அவர்களின் வாழ்வியல் முறைகளையும் அறிவது நம்மை நமது வேரை அறிவதுபோலத்தான். பூர்வகுடிகளை அறிவது, இன்று நமக்குள் உருவாகி வந்துள்ள நவீன மனதை கேள்வி எழுப்பக்கூடியதாக அமையும். அது படைப்பாளிக்கான விசாலமான அறிவைக் கொடுக்கும் என நம்பியதால் அப்பகுதிகளை அவர்களுக்கு வழங்கினேன். இருவரும் புனைவில் தீவிரம் கொள்ளும்போது இந்த அனுபவம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்தும். அவர்கள் புனைவுலகத்துடன் தங்களை பலம்கொண்டு உரசிக்கொள்ளாதவரை தங்கள் தலைகளுக்குள் சேகரித்துக்கொண்டவை பாஸ்பரஸ் என அறியப்போவதில்லை. அதை அறியாதவரை அது தீப்பற்றும் திறனற்ற மெல்லிய குச்சிகளாகவே நம்பப்படும்.

திலீப் ஆய்வு மாணவர். நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டார் தெய்வங்களில் ஆர்வம் கொண்டவர். எனவே அவருக்கு அப்பகுதிகளை எழுதும் பணி ஏற்பாகவே இருந்தது. சாலினி அடிப்படையில் கட்டுரையாளர் என்பதால் அது சார்ந்த விரிவான பதிவுகளை எழுதினார். ஒருவகையில் நான் தமிழ் விக்கியில் வரவேண்டும் என விரும்பிய கட்டுரைகள் அனைத்தையும் சாலினி மூலமாக நிவர்த்தி செய்துகொண்டேன். மலேசியாவில் கல்வி, அரசியல், பண்பாட்டு சூழல் குறித்த விரிவான அறிமுகத்தை தமிழ் விக்கியைத் தவிர வேறெந்த கல்லூரியும் அவருக்குக் கற்பித்திருக்காது.

தன் மேற்கல்விப் பணிகளால் தாமதமாக இணைந்துகொண்டாலும் சல்மா தினேசுவரி எடுத்துக்கொண்ட பகுதி தனித்துவமானது. மலேசிய நாட்டார் கதைகள் எனும் பகுதியை சிறப்பாகவே தொகுத்தளித்தார். அதுபோல விரிவுரையாளர் குமாரசாமி, மீரா ஆகியோரின் பங்களிப்புகளும் பாராட்டத்தக்கவை. யாருமே எடுக்கத்துணியாத உயரத்தில் அல்லது கவனத்திற்கே வராத மறைவில் இருக்கும் தேனைத் தேடிச் செல்லும் தேனியைப் போல அ.பாண்டியனின் கட்டுரைகள். அவை சவாலானவை; அசாதாரணமானவை. இவர்களோடு நானும் இணைந்து இந்த 200 கட்டுரைகளை நிறைவு செய்துள்ளது மகிழ்ச்சியையும் நிறைவையும் கொடுக்கிறது.

***

தமிழ் விக்கி அறிமுகவிழா என்பது பார்வையாளர்களுக்கானது. ஆனால் பங்களிப்பாளர்களான பலன் அதை உருவாக்கும்போதே கிடைத்துவிட்டது. ஒவ்வொரு கட்டுரையையும் படைப்பாளர்கள் ஒரு சிறிய அளவிலான கள ஆய்வாகவே நிகழ்த்தியுள்ளனர். அக்கட்டுரைகளின் வழி அவர்கள் தங்களை சில அடிதூரம் முன்னகர்த்திக் கொண்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இதற்காக இடைவிடாது பணியாற்றிவர்களின் நிறைவின் புன்னகையை இதை எழுதும்போது நான் கற்பனை செய்துகொள்கிறேன். அது முழுமையின் புன்னகையல்ல; செயலூக்கம் எனும் சக்தி தனக்குள் என்ன கொடுக்கும் என ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பார்கள்.

இனி, தமிழ் விக்கி தொடர வேண்டும். அதற்கு இன்னும் பலரது ஒத்துழைப்பு வேண்டும். தமிழ் விக்கிக்கு பங்களிப்பதன் வழி ஒருவர் கொடுப்பது மட்டுமல்ல பெறவும் செய்கிறார். இந்தப் பணியில் நான் பெற்றுக்கொண்டது என்பதும் அதுதான். மலேசிய இலக்கியம் குறித்து புதிய கண்ணோட்டங்கள் ஏற்பட்டுள்ளது. இன்னும் அதனை ஆழமாக அறியும் பாதைகள் எனக்காகத் திறந்துள்ளன.

தமிழ் விக்கி அறிமுகவிழா

நாள்: 25.11.2022 (வெள்ளி)

நேரம்: மாலை மணி 5.00

இடம்: பிரம்ம வித்யாரண்யம், சுங்கை கோப்

2 comments for “தமிழ் விக்கி: எழுத்தாளனுக்குக் கொடுப்பதென்ன?

  1. Anburani
    November 24, 2022 at 8:16 pm

    நான் உங்கள் ஊடகங்களின்
    ஆளுமைகளை வியந்து பார்க்கும்
    வாசகி அன்பு ராணி.
    தமிழ் விக்கி ஆசான்,அறிவாளர்கள் அனைத்து
    நல் உள்ளங்களுக்கு வாழ்த்துகள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...