(தமிழ் மாறன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை )
மெய்யான கற்றல் என்பது அது வரையில் கற்று வந்த தடத்தைக் கேள்வியெழுப்பச் செய்து, அதை மறுத்தும் விவாதித்தும் வந்தடையும் ஒரு புள்ளி. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முதலாண்டில் விரிவுரைஞர் தமிழ்மாறனின் வகுப்புகளில் அத்தகைய கற்றல் அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன். மொழிப்பற்று, சமய நம்பிக்கை, வாழ்க்கைப்பார்வை எனப் பதின்மத்தின் இறுதியில் பழக்கங்களாகிப் போயிருந்தவற்றின் மீதான நேரடித்தாக்குதல்களாகவே அவருடைய வகுப்புகள் அமைந்திருந்தன. பாரதியின் கவிதைகளிலிருந்து வரிகளைக் காட்டிச் சங்கக்காலப் பாடல்கள், நாவல்கள், சிறுகதைகளின் வாசிப்பனுபவங்கள் தன்னுடைய வாழ்க்கையனுபவங்கள் என ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நுட்பமாகக் கோடிழுத்து ‘தேடுங்க… என் பின்னால வராதீங்க’ எனச் சொல்லி அரூபவெளியின் முன் நிறுத்துவார். அவர் குறிப்பிடும் மேற்கோள்களையும் வரிகளையும் குறிப்பெழுதித் தேடிக் கண்டடைந்து வாசித்ததுண்டு. நவீனத் தமிழிலக்கிய அறிமுகமே தமிழ்மாறனின் வகுப்புகளில்தான் நிகழ்ந்தது.
தமிழ்மாறன், கெடா மாநிலத்தின் பாடாங் செராய் பகுதியிலிருக்கும் விக்டோரியா தோட்டத்தில் 1961 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 18 ஆம் தேதி திரு பல்ராம் திருமதி கமலா இணையரின் மூத்த மகனாகப் பிறந்தார். விக்டோரியா தமிழ்ப்பள்ளியில் 1968 தொடங்கி 1973 வரை தொடக்கக்கல்வியைப் பயின்றார். அதன் பின்னர், பாடாங் செராய் இடைநிலைப்பள்ளியில் படிவம் மூன்று வரையிலும் கூலிம் இடைநிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரையிலும் பயின்றார். தன்னுடைய ஆறாம் படிவக் கல்வியைச் சுங்கைப்பட்டாணியிலிருக்கும் கிர் ஜொகாரி இடைநிலைப்பள்ளியில் 1979 ஆம் ஆண்டு நிறைவு செய்தார். ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் வரலாற்றுப்பாடத்தை முதன்மைப்பாடமாக 1981 ஆம் ஆண்டு பயின்றார். பேராக் மாநிலத்தின் லெங்கோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார். 1990 முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் கூலிம் கான்வெண்ட் இடைநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டு தொடங்கி 2019 ஆம் ஆண்டு வரையில் சுங்கைப்பட்டாணி ஆசிரியர் கல்விக்கழகத்தின் தமிழ்த்துறை விரிவுரைஞராகப் பணியாற்றினார். 2020 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரையில் பினாங்கு ஆசிரியர் கல்விக்கழகத்தில் விரிவுரைஞராகப் பணியாற்றி 2021 ஆம் ஆண்டு பணி நிறைவு பெற்றார்.
தமிழ்மாறன் – சரஸ்வதி இணையருக்கு சக்திபாரதி, பூர்ணபாரதி, சூர்யபாரதி ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.
தமிழ்மாறனின் கற்பித்தல் அணுகுமுறையைக் கலகக்காரர்க்குரியதாகவே தொகுத்துக் கொள்ள முடிகிறது. மாணவர்களின் சிந்தனை முறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பழக்கங்களாகிப் போனவற்றுடன் முரண்படும் கேள்விகள், மாற்றுக்கருத்துகள் இவற்றை முன்வைப்பார். இந்தக் கேள்விகள் வாயிலாக, இன்னொரு தளத்துக்கு வந்து சேரும்போது, அதையும் கேள்விக்குரியதாக மாற்றித் தேடலை மட்டுமே முன்வைப்பார். கல்லூரிக்குச் செல்லும் வயதில் உணரும் சுதந்திரம் இயல்பாகவே கொண்டு வந்து சேர்க்கும் சமூகம், அரசியல், மொழி சார்ந்த விமர்சனக் கருத்துகளில் மூழ்கிவிடாமல் இருக்க அந்தத் தேடல் துணைபுரிந்தது.
தமிழ்மாறன் பாரதியை முதன்மைச் சிந்தனையாளராக முன்னிறுத்துபவர். பாரதியைத் தமிழின் முதன்மைக் கவியாகவும் சிந்தனையாளராகவும் முன்வைக்கும் நீண்ட மரபின் நீட்சியாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். பாரதியாரின் கவிதை வரிகளையும் அதனைத் தான் கண்டடைந்த இடங்களையும் சொல்லுமிடத்தில் அவரிடம் இயல்பாக உருவாகும் உணர்வெழுச்சி நிச்சயமாக இலக்கிய வாசிப்பு மனிதர்களுக்கு அளிக்கும் பெருநிலையே. பாரதியைச் சார்ந்து அவருகிருக்கும் மனநிலை என்பது மெய்ஞானியை அணுகும் தொண்டரைப் போன்றதாகவே அமைந்திருப்பதைப் பல முறை அருகிலிருந்து கண்டிருக்கிறேன். ஆண்டு தோறும் பாரதியார் பிறந்தநாள் விழாவைப் பாரதி இலக்கியத் திருவிழாவாகக் கடந்த எட்டாண்டுகளாக நடத்தி வருகிறார். பட்டிமன்றம், சொற்போர், உரைகள், கவிதை படைப்புகள் என வெகுமக்கள் பங்கேற்பு இருப்பதை உறுதி செய்யும் விதமாகவே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறார். பாரதியை அறிவார்ந்த நோக்கில் வெகுமக்களிடம் கொண்டு சேர்க்கும் தொடர் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் தமிழுக்குத் தொண்டாற்றிய சான்றோர்களைத் தேர்ந்தெடுத்துப் ‘பாரதி நெஞ்சர்’ விருது வழங்கி சிறப்பித்திருக்கிறார். ‘பாரதி நெஞ்சர்’ விருது பெற்ற பலரும் அதிகமும் அறியப்படாத உள்ளூரில் மிகத்தீவிரத்துடன் தமிழ்ப்பணியாற்றியவர்களாகவே இருந்திருக்கின்றனர். பாரதி போன்ற தமிழிலக்கிய முன்னோடியை இடைவிடாமல் முன்னிறுத்தி வரும் தமிழ்மாறனின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதை இலக்கியச் சூழல் அறிந்தவர்கள் உணரலாம்.
தமிழ்மாறன், அறிவுத்தளத்தில் இலக்கிய வாசிப்பனுபவத்தை முன்வைப்பவராகவும் அறிந்துள்ளேன். விரிவான தமிழிலக்கிய வாசிப்பும் அதை வாழ்க்கைச் சூழலுடன் பொருத்திப் பார்க்கும் பார்வையும் அவருடைய பத்தியெழுத்துகளில் மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. முகநூலிலும் வலைப்பூவிலும் தான் கண்டும் கேட்டும் வந்த வாழ்க்கை நிகழ்வுகளையும் அனுபவங்களையும் தான் வாசித்த புனைவுகள், இலக்கியக் கட்டுரைகள் ஆகியவற்றிலிருக்கும் வரிகளுடன் ஒப்பீட்டும் தொடர்புறுத்தியும் செறிவாக எழுதிய பத்தியெழுத்துகள் வாசகப்பார்வையாக மட்டுமே குறுகாமல் இலக்கியத்தரமும் கொண்டவையாக அமைந்திருந்தன.
மலேசியத் தமிழ் அறிவுச்சூழலில் பல முக்கியமான கருத்தரங்குகளில் கட்டுரைகளைப் படைத்திருக்கிறார் தமிழ்மாறன். உலகத் தமிழிலக்கிய மாநாடு, பன்னாட்டுத் தமிழ் இணைய மாநாடு என மலேசியத் தமிழ் அறிவுச்சூழலில் முக்கியமான பல கருத்தரங்குகளில் மிக விரிவான ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்திருக்கிறார். அத்துடன் தான் வாசிக்கும் நூல்கள் குறித்த மதிப்புரைகளையும் வழங்கியுள்ளார். மேலும், தலைமையாசிரியராகவும் பாரதி நெஞ்சராகவும் பல பணிகள் ஆற்றிய குழ.ஜெயசீலன் எனும் தமிழ்த்தொண்டரின் வாழ்வையும் செயற்பாடுகளையும் நூலாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்மாறனின் இலக்கிய வாசிப்பனுபவங்களைக் கூர்ந்து வாசிக்கின்றவன் என்கிற முறையில் இலக்கிய வாசகர்களுக்கே உரிய உணர்வெழுச்சி வெளிப்படும் பதிவுகளாகவே அவைப் பெரும்பாலும் அமைந்திருப்பதைக் காண முடியும். அதிலும் தன்னில் பாதிப்பை ஏற்படுத்தும் இலக்கியங்களை நெகிழ்ச்சியும் உணர்ச்சிக்கலந்த நடையும் சேர்ந்து தனக்கும் இலக்கியப்பிரதிக்குமான நெருக்கத்தை நேர்பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்துவார்.
தமிழ்மாறனை ஆசிரியராகவும் அணுகி நின்று பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில் தமிழ்க்கல்வியாளராக அவருடைய பங்களிப்பு முக்கியமானதென்பதை அறிவேன். அவர் பணியாற்றிய சுல்தான் அப்துல் ஹலிம் ஆசிரியர் பயிற்சிக்கழகத்தில் 2002 ஆம் ஆண்டு தொடங்கி 2017 ஆம் ஆண்டு வரையில் தமிழிலக்கியத்தின் முக்கியமான பல எழுத்தாளர்கள்,கவிஞர்கள், மெய்ஞானிகள் ஆகியோரின் பணியை நினைவுக்கூரும் விதமாய் ‘இளவேனில்’ எனும் பருவ இதழை பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டு வெளியீடும் பொறுப்பாண்மைக் குழுவின் ஆலோசகராகப் பங்களித்திருக்கிறார். அந்த இதழ் வெளியீட்டு விழாவை முழுமையாக மாணவர்களைக் கொண்டே ஒருங்கிணைக்கச் செய்து அதன் விழா திட்டமிடலிலும் மேற்பார்வைக் குழுவிலும் இருந்து செறிவான ஆலோசனைகளை அளிப்பார். தற்கால மலேசியத் தமிழிலக்கியத்தின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான கே. பாலமுருகனும் இளவேனில் இதழில்தான் முதலில் எழுதத் தொடங்கினார். எழுத்தாளர் கே. பாலமுருகன் தன் இலக்கிய வாசிப்பார்வத்தையும் எழுத்தாற்றலையும் மேம்படுத்திக் கொள்ள தமிழ்மாறனின் ஊக்குவிப்பு முக்கியமானதாக இருந்ததைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மாறன் தான் பெறும் அறிவைத் தன் மாணவர்களுக்குக் கடத்த நினைப்பவர். அவ்வகையில் ஆசிரியர் கல்விக்கழகத்தில் எழுத்தாளர் ஜெயமோகன், மலேசிய எழுத்தாளர் ஜெயபாரதி, சீனி நைனா முகம்மது ஆகியோரை வரவழைத்து உரை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறார். அத்தகைய நிகழ்ச்சியொன்றின் வாயிலாகத்தான் எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துகளை நானும் அடையாளம் கண்டேன். அத்துடன், குறும்படப்போட்டி, இலக்கிய நிகழ்ச்சிகள் என ஆசிரிய மாணவர்களுக்குப் படைப்பாற்றலை மேம்படுத்தும் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். உங்கள் குரல் இதழ், தமிழ் நூல்கள் என நூல்களை அறிமுகம் செய்து எழுத்தாளர்களுக்கு விற்றும் கொடுத்திருக்கிறார்.
அத்துடன், தமிழ்மாறனின் இலக்கியப்பார்வை மரபையும் நவீனத்தையும் உள்ளடக்கிய விரிந்த பார்வையாக அமைந்திருப்பதை அவரின் இலக்கிய வகுப்புகளிலிருந்தே அறிந்து கொண்டிருக்கிறேன். வகுப்பில் ஒருநாள் அவரின் கணினித்திரையில் அங்கோர் வாட் கோயில் மண்டபத்தைப் பற்றி எழுதிருக்கும் பேராலமரத்தைக் காட்டி அதற்கான பொருளைச் சொல்லச் சொல்லி வகுப்பிலிருப்பவர்களைக் கேட்டார். அதற்குப் பலரும் பல தருக்கங்களைக் கூற சிரித்துக் கொண்டே நவீனமும் மரபும் பிணைந்திருப்பதன் படிமமாக இந்தக் காட்சி எனக் குறிப்பிடப்படுகிறதெனக் கூறி இலக்கியத்துடன்தான் அதனைத் தொடர்புறுத்திக் காட்டினார்.
மரபிலக்கியத்துக்கே உரிய வாசிப்பு முறையான நயம் பாராட்டி வாசிக்கும் முறையுடன் பல சங்ககாலக் கவிதைகளை உணர்ச்சிப்பாவத்துடன் வாசித்துக் காட்டியே பாடம் நடத்துவார். நா.பார்த்தசாரதி, மு. வரதராசன் எனத் தான் வாசித்தறிந்த லட்சியவாத படைப்புகள் தொடங்கி நவீனத்தமிழிலக்கியத்தின் முக்கிய படைப்புகளை அளித்த ஜெயகாந்தன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியப் படைப்பாளர்கள் முதலாக அனைவரையும் தன் இலக்கிய ரசனை மதிப்பீட்டில் முக்கியமானவர்களாகக் கருதி அதற்கான தருக்கங்களைக் குறிப்பிடுவார்.
தமிழ்மொழிப் பாட நூல் தயாரிப்புக் குழுவிலும் தலைவராகவும் உறுப்பினராகவும் பங்களித்திருப்பவர் தமிழ்மாறன். ஆசிரியர் பயிற்சிக்கழகத்தின் தமிழிலக்கியப் பாடத்திட்டப் பரிந்துரைக் குழுவிலும் தமிழ்மாறனின் பங்களிப்பு முக்கியமானது. தமிழை முதன்மைப் பாடமாகத் தெரிவு செய்து இளங்கலைப் பட்டயக் கல்வி மேற்கொள்ளும் ஆசிரியர் பயிற்சிக்கழக மாணவர்கள் பயில வேண்டிய நாவல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றைத் தேர்வு செய்தளிக்கும் குழுவில் தமிழ்மாறன் பணியாற்றியிருக்கிறார். இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி நவீனத் தமிழிலக்கியத்தின் பல முக்கியமான சிறுகதைகளை உள்ளடக்கிப் பாடத்திட்டத்தை வடிவமைத்திருக்கிறார். குறிப்பாக, மலேசியத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்களான எம்.ஏ.இளஞ்செல்வனின் தெருப்புழுதி, சை. பீர்முகம்மதுவின் பாதுகை ஆகிய கதைகளையும் அப்பாடத்திட்டத்தில் இணைக்கப் பரிந்துரைத்திருக்கிறார். அத்துடன், மலேசிய முழுமையிலும் பல ஆசிரியர்களுக்கு ஆசிரியத் திற மேம்பாட்டுப் பணிமனைகளை நடத்தியிருக்கிறார்.
2021ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பின்னர் முன்னிலும் தீவிரமாக வாசிப்பிலும் இலக்கியச் செயல்பாடுகளிலும் ஈடுபடுகின்றார். தன் மனதுக்கு நெருக்கமான அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றார். நீண்ட காலமாகவே, கூலிம் நவீன இலக்கிய களத்தில் இணைந்து இலக்கிய கலந்துரையாடல்களில் பங்கேற்கிறார். சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் கீதை வகுப்புகளிலும் கலந்து கொண்டு தன் அனுபவத்தைப் பெருக்கிக் கொள்கிறார்.
மலேசியத் தமிழ்க் கல்விச் சூழலில் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்துக்கு அப்பால் மாணவர்களை அணுகி அவர்களுக்குள் ஏதேனும் விரிவான தேடல்களையும் அகப் பயணத்தையும் ஏற்படுத்தும் ஆசிரியர்கள் மிகச் சொற்பமானவர்களே. அந்த வகையில் தமிழ்மாறன் தமிழ்க்கல்வியாளராக மட்டுமின்றி தான் வாசித்த கண்ட சிறந்த அனுபவத்தைத் தொடர்ந்து முன்வைக்கும் மிக முக்கியமான மனிதராக மலேசியத் தமிழிலக்கியப் பரப்பில் அறியப்படுவார்.