(கோ. சாமிநாதன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை)
கற்றலென்பது கற்றலால் மட்டுமே நிரம்பும் தருணம் அல்ல. கற்றலுக்கு அப்பால் அகம் சார்ந்த, உணர்வு சார்ந்த சூழலைக் கட்டியெழுப்பி அதனுடன் இயைந்து நீள்வது கற்றலின் ஆயுள் நீளம் என சாமிநாதன் அவர்களின் வகுப்புகளின் வழி உணர்ந்திருக்கிறேன். அவருடனாக நான் கடந்து வந்த ஒவ்வொரு கற்றல் சூழல்களையும் என்னால் இன்றும் மீட்டுப் பார்க்க முடிகிறது. அப்படி மீட்டுப் பார்க்கும்போதெல்லாம் அவருக்கான இடம் ஒரு ஆசானுக்கும் மேலானது என்ற எண்ணமே மேலோங்கும். அந்த எண்ணம் கல்லூரியைவிட்டு வந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இன்றளவும் நீடிக்கிறது.
சாமிநாதன் அவர்களின் போதனை என்பதே தனித்துவம் நிறைந்தது. பல சமயங்களில் வகுப்புக்கு வெற்றுக் கைகளுடன்தான் வருவார். பாடத்திட்டமும் பேசு பொருளும் அவருக்கு விரல் நுனியில் இருக்கும். அவர் வகுப்பறை சூழல் இலகுவானது; இறுக்கமற்றது. ஒரு போதும் பாடத்திட்ட வரையறைக்குள் மட்டுமே குறுகிப் போகாதது.
ஒரு மாணவியாக அவர் பேசுவதைக் கேட்க வேண்டி பேராவல் எப்போதும் எனக்குள் வற்றாமல் இருக்கும். மற்ற மாணவர்களுக்கும் அப்படி இருந்ததை நான் அறிந்திருந்தேன். உலக நடப்பு, இலக்கியம், வாழ்வியல், மனித உறவுகள் என எல்லாவற்றையும் பற்றியும் அவரால் தனித்துவமாக ஆழமாகப் பேச முடியும். நம்மை அதற்குள் இழுத்துக்கொள்ளவும் முடியும். அவரது பேச்சில் தனித்துவமான கருத்தும் ஒன்று எப்போதுமே இருக்கும். வயிறு வலிக்க சிரித்த அனுபவங்களை அவரது வகுப்புகள் அதிகம் தந்துள்ளன. அந்த அங்கத உணர்வுதான் அவரது பாடத்துணைப்பொருள். அறிவுப்பகிர்வு என்பது இறுக்கமான சூழலில் மட்டுமே நடக்கும் என நான் நம்பியிருந்ததற்கு மாற்றானது சாமிநாதன் அவர்களின் வகுப்புகள்.
இந்த வாழ்வு மிக ரசனைக்குட்பட்டது என அடிக்கடி அவர் கூறுவதுண்டு. அவர் வாழ்வை அவ்வாறே ரசிக்கிறார் என்பது அவர் கடந்து வந்த பாதையின் வழி அறிய முடிகிறது.
சாமிநாதன் அவர்கள் ஜனவரி 21, 1965-இல் கெடா, கூலிம் பெலாம் தோட்டத்தில் கோவிந்தசாமி மற்றும் கிருஷ்ணம்மா தம்பதியருக்கு பிறந்தவர். தன் தொடக்கக் கல்வியை மூன்றாம் ஆண்டு வரை தமிழகத்தில் சேலம் தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள மோட்டுப்பட்டி பழைய கிராமத்தில் பயின்று அதன் பின்னரே மலேசியா வந்து கூலிமில் உள்ள பெலம் தோட்டத்தமிழ்ப் பள்ளியில் 4-ஆம் ஆண்டிலிருந்து தனது தொடக்கக் கல்வியைத் தொடங்கினார். தொடர்ந்து கூலிம் லாபு பெசார் பள்ளியில் படிவம் ஒன்று முதல் படிவம் மூன்று வரை படித்துள்ளார். பின்னர் பட்டவோர்த் பாகான் ஆஜாம் டத்தோ ஒன் இடைநிலைப்பள்ளியில் படிவம் நான்கு மற்றும் ஐந்தைத் தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் புக்கிட் மெர்தாஜாமில் உள்ள அடாபி தனியார் இடைநிலைப் பள்ளியில் தனது ஆறாம் படிவக் கல்வியை முடித்தார். அதன் பிறகு, ஒன்றரை ஆண்டு காலம் தற்காலிக ஆசிரியராகப் பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ் பள்ளியில் பணியாற்றினார்.
1987 முதல் 1989 வரை ஶ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயின்றார் சாமிநாதன். அதனைத் தொடர்ந்து அவர் 1990 முதல் 1993 வரை செபெராங் பிரை கெப்பாலா பத்தாஸ் தமிழ் பள்ளியில் பணியாற்றினார். அங்கேயே ஒரு சராசரி ஆசிரியராக நின்று விடாமல் தொடர்ந்து மலாயா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் 1997-இல் முடித்தார், பின்னர் இடைநிலைப் பள்ளி ஆசிரியராகத் தன் பணி பயணத்தைத் தொடர்ந்தார்.
2002 சாமிநாதன் அவர்கள் தன்னை ஒரு விரிவுரையாளராக உயர்த்திக்கொண்டு துவான்கு பைனூன் ஆரியர் பயிற்சி கல்லூரியில் காலெடுத்து வைத்தார். 2002 முதல் இப்போது வரை சரியாக 20 ஆண்டுகள் அவர் அங்கே நின்று நிலைக்கிறார். ஆனால் விரிவுரையாளராக மட்டுமே அவர் நின்று விடாமல் 2011 முதல் 2019 வரை தமிழ்ப்பிரிவு தலைவராகவும் பின்னர் 2020 முதல் 2022 வரை தமிழ் துறை தலைவராகவும் தன்னை மேம்படுத்திக்கொண்டார்.
பகிர்வுகளாக, விவாதங்களாக ஏன் பாடல்களாகக் கூட வகுப்புகளைப் பெருமகிழ்வுடன் நடத்துவார். எல்லா மாணவர்களையும் வகுப்பில் பேச வைப்பதே அவரது முதல் நோக்கமாக இருந்தது. சாமிநாதான் ஐயா அவர்களின் மொழியாற்றல் என்னைக் கவரக்கூடியது. மேடையில் எந்த முன் ஏற்பாடுகளுமற்ற நிலையில் அவரால் மலாய் மொழியிலும், ஆங்கில மொழியிலும், தமிழ் மொழியிலும் மிகச் சரளமாகவும் மிக இயல்பாகவும் பேச முடிந்ததை நாங்கள் ஆச்சரியமாகப் பார்த்துள்ளோம். அவரின் மொழியாற்றால் அசாதாரணமானது என அவர் வகுப்பில் பேசும்போதெல்லாம் நான் நினைத்துக் கொள்வதுண்டு. மலாய்க்காரரின் தொணியில் அமையும் அவரது பேச்சுகள் ஈர்ப்பானவை.
இன்று ஓர் இலக்கிய வாசகியாக உருவாகச் சாமிநாதன் அவர்களே காரணம் என்பேன். இலக்கியத்தை நெருங்கி ரசிக்க அதை உற்று உய்த்து உணர எனக்குக் கற்றுக் கொடுத்தது அவர்தான். மேலும் புனைக்கதைகள் எழுதும் தூண்டலையும் அவர் வழியாகவே பெற்றேன். எத்தனை எழுத்துப் பிழைகள் இருந்தாலும் படைப்பிலக்கியத்தையும் படைபாற்றலையும் அது மலினப்படுத்தாது என்பார். அதுபோல மாணவர்களின் கலையுணர்வை அவர் புறக்கணித்தது கிடையாது. அவரால் அதைக் கடந்தும் பார்க்க முடியும். ஆனால் அவர் இவற்றை எல்லாம் வகுக்கப்பட்ட பாடத்திட்டம் வழி நிகழ்த்தவில்லை என அப்போதே நான் அறிந்து வைத்திருந்தேன். அவரது போதனையெல்லாம் அந்த அந்த தருணங்களில் அவருக்குள்ளிருந்து எழுந்துவருவது. அந்தத் தருணங்களே அன்றைய கற்றல் சுழலை நிர்ணயித்தன.
மனதிலிருந்து அகலாத ஒரு வகுப்பறை அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்து அதுபோல ஒரு வகுப்பை நடத்த வேண்டி ஒரு கனவை மனதில் ஏற்றி வைத்துள்ள ஐயா அவர்களின் வழிகாட்டல் ஆசிரியத்துறையில் எத்தனை ஆளுமைகளை வளர்த்தெடுத்திருக்கும் என இப்போது எண்ணிப்பார்க்க முடிகிறது. ஆசிரியர் பணி எப்படி அறப்பணியோ அதேபோல முறையாகக் கடமையைச் செய்யாதபோது அது நம்மை அழிக்கும் எதிர்விசையாகவும் செயல்படும் என அவர் உணர்த்திச் சென்றதே எப்போதும் என்னைப் போன்ற அவர் மாணவர்களுக்கு எச்சரிக்கை மணியாகவும் உள்ளது.
ஒரு விரிவுரையாளராக, ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் பயிற்றுனராக, தமிழ்த்துறை தலைவராக, இருக்கும் அவர் இந்தப் பணிகளுக்கு இடையில் ஆசிரியக் கல்லூரி மாணவர்களுக்கான பாடத்திட்ட உருவாக்கத்திற்குத் தலைமைப் பொருப்பாற்றி வருகிறார். அதே போல ஆரம்ப பள்ளி பாட புத்தகத்தை மதிப்பிடும் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
கல்வித்துறையில் அவர் அடைந்துள்ள உயரங்கள் அதிகம். ஆனால், மாணவர்கள் நெருங்கிப் பழக இடைவெளி கொடுக்கும் எளிய மனிதராகவே என்றும் தன்னை வடிவமைத்து வைத்துள்ளார்.
ஐயா அவர்கள் வகுப்பறையில் விவாத சூழல் உருவாக்க விரும்பக்கூடியவர். அதுவே ஆளுமையை உருவாக்கும் என்பார். “arguments are always win” என அவர் அடிக்கடிச் சொல்வார். அப்படி அவர் வழியாக ஒரு கருத்தை ஆக்கப்பூர்வமாக முன் வைக்க நான் கற்றுக்கொண்டேன். அப்படி ஒரு சுய நம்பிக்கையை அவரே எங்களில் பலருக்கும் விதைத்துள்ளார்.
முகில்வர்ணன், புகழினி, தமிழினி, இன்னினி என நான்கு குழந்தைகள் தந்தையான ஐயா அவர்கள் ஒரு நல்ல குடும்பத் தலைவர் என அவர் குடும்பத்தோடு கலந்துக்கொண்ட கல்லூரி நிகழ்ச்சிகளில் அவரை ஒரு நல்ல குடும்பத் தலைவன் எனவும், நல்ல தந்தை எனவும் அறிய முடிந்துள்ளது. அவரது மனைவி தமிழரசி அப்போதும் அவர் எளிமையாவனவர்தான்.
நான் சாமிநாதன் அவர்களை அவர் சொற்கள் வழியாகவே திரட்டிக்கொள்ள முயல்கிறேன். அவர் அதிகம் சொல்லக் கேட்ட வார்த்தைகளில் ஊழ்வினை உறுத்த வந்து ஊட்டும் என்பதும் அடங்கும். அவர் இயற்கையின்மீது பெரு நம்பிக்கைக் கொண்டவர். அதன் சுழற்சியை அறிந்தவர். எனவே அறத்தை மீறாத பண்பினராக இருந்தார்.
தமிழ் விக்கிகாக உரையாற்றபோகும் சாமிநாதன் அவர்களை நினைவுக்கூறும்போது முழுமையாக மனதில் தோன்றி அசைகிறார். அவரது குரல், நடை, உடல் மொழி, சிரிப்பு என எல்லாமே உயிர்ப்புடன் அசைகிறது. எந்தப் பகட்டும் ஆரவாரமும் இல்லாத அசைவு அது. அதன் அமைதியே அதன் முழுமைக்குச் சான்றாக உள்ளது.