முனைவர் முனீஸ்வரன் குமார்: மொழியியலை முன்னெடுக்கும் ஆளுமை

(முனைவர் முனீஸ்வரன் குமார் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை)

2011-ஆம் ஆண்டுத் தொடங்கி சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணிப்புரிந்து வரும் முனைவர் முனீஸ்வரன் குமார் 1984-ஆம் ஆண்டில் கிள்ளான் நகரத்தில் பிறந்து, பேராக் மாநிலத்தின் ஹிலிர் பேராக் மாவட்டத்தில் வளர்ந்தவராவார். தனது ஆரம்பக்கல்வியைச் சுங்கை சுமுன் வட்டாரத்திலுள்ள நீயூ கோகோனாட் தேசியவகைத் தமிழ்ப்பள்ளியில் முடித்த இவர், படிவம் 1 முதல் 6 வரையிலும் அதே வட்டாரத்திலுள்ள கீர் ஜோஹாரி தேசிய இடைநிலைப்பள்ளியில் படித்தார். அதனைத்தொடர்ந்து, மலாயா பல்கலைக்கழகத்தில் 2005 முதல் 2008 வரையிலும் இளங்கலைப் பட்டப்படிப்பையும், 2008 முதல் 2011 வரையிலும் முதுகலைப் பட்டப்படிப்பையும் முடித்தார்.

முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தவுடன், தன்னுடைய 27-ஆவது வயதில் சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிப்புரிய தொடங்கிய திரு முனீஸ்வரனுக்கு, அப்பல்கலைக்கழகம் வாயிலாக முனைவர் பட்டப்படிப்பைத் தொடருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. அவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்ட திரு முனீஸ்வரன், 2011 முதல் 2014 கோயம்பத்தூரிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின்னர், 2014-ஆம் ஆண்டில் மீண்டும் மலேசியாவிற்குத் திரும்பிய முனைவர் முனீஸ்வரன் சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இன்றளவில் தமிழ்த்துறையின் மூத்த விரிவுரையாளராக விளங்குகிறார்.

முனைவர் முனீஸ்வரன் தனது இளங்கலை, முதுகலை, முனைவர் ஆகிய மூன்று பட்டப்படிப்புகளையும் மொழியியல் துறையில் மேற்கொண்டுள்ளார். தனது உயர்கல்வியைத் தமிழிலக்கியத்தில் தொடர வேண்டுமெனும் ஓர் ஆசை இவருக்கிருந்தது. ஆயினும், உயர்கல்விக்கான பாடத் தேர்வின் போது தவறுதலாகத் தமிழ் மொழியியலைத் தனது முதல் தேர்வாகப் பதிவிட்டதால், அவருக்கு மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர்வதற்கான வாய்ப்பு கிட்டியது. அப்பருவத்தில் மொழியியலைப் பற்றி எதையும் அறியாத நிலையில்தான் அவர் அத்துறையைத் தேர்வு செய்தார். ஆனால், நாளடைவில் மொழியியலின் முக்கியத்துவத்தையும் பயன்பாடையும் நன்கு அறியலானார். ஒரு மொழியைப் பலதரப்பட்ட மாற்றங்களுக்கு உட்படுத்தும் முறைகள், மொழியைப் பயன்படுத்திப் பொருளாதார அடிப்படையில் உயர்த்திக்கொள்வதற்கான உத்திகள், பேச்சாற்றலில் உள்ள குறைகளை நிவர்த்திச் செய்வதற்கான முறைகள், நரம்பியல் மொழியியல் அடிப்படையிலான சிக்கல்களைத் களைவதற்கான முறைகள் போன்றவற்றை மொழியியலின் வழி கற்றறியலாம் என்பது அவருக்குத் தெரிய வந்தது. அதோடு, மொழியியலானது தமிழ்மொழியைப் பிற மொழிகளோடு ஒப்பிடவும் வரலாற்று ரீதியாக ஒப்பிடவும் முடியும் என்பதையும் அவர் உணர்ந்தார்.

இவற்றின் தாக்கம் மட்டுமின்றி, வெவ்வேறு மொழிகளில் மொழியியலின் பயன்பாடானது பன்மடங்கு வளர்ந்துள்ள நிலையில், தமிழ்மொழியிலோ மொழியியல் துறையின் முக்கியத்துவம் பரவலாக அறியப்படாமலிருக்கும் சூழலானது முனைவர் முனீஸ்வரனை முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பிலும் அத்துறையையே தேர்ந்தெடுக்கத் தூண்டியது. எடுத்துக்காட்டாக ஒரு சில மொழிகளின் மொழியியல் பயன்பாடானது, குறியாக்கத்தை உருவாக்குவதல், இரகசிய மொழியில் எழுதப்பட்டுள்ளதைக் கண்டறிதல் போன்ற உயர்நிலை அடைவுகளைப் பெற்றுள்ளது. இந்நிலையானது, மொழியியல் துறை தமிழ்மொழியில் வளர்ச்சி அடையவில்லை என முனைவர் முனீஸ்வரனின் கருதினார். எனவே, தமிழ்மொழியில் மொழியியலின் முக்கியத்துவத்தை பொதுவெளியின் கவனத்திற்குக் கொண்டுவர முனைவர் முனீஸ்வரன் 2016-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகத்தைத் தொடங்கினார். அக்கழகத்தைத் தொடங்கிய அடுத்த மூன்று ஆண்டுகளிலும் மொழியியலைச் சார்ந்த மாநாடுகளை முனைவர் முனீஸ்வரன் நிகழ்த்தினார். அதாவது, 2017-ஆம் ஆண்டில் சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்திலும், 2018-ஆம் ஆண்டில் தமிழகத்திலுள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், 2019-ஆம் ஆண்டில் கோலாலம்பூரிலும் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகத்தின் ஏற்பாட்டில் பன்னாட்டு அளவிலான மூன்று மாநாடுகளை ஏற்று நடத்தினார்.

மொழியியல் பற்றிய புரிதல் தமிழர்களிடையே மிகவும் குறைவாக இருப்பதை உணர்ந்த முனைவர் முனீஸ்வரன், அத்துறையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆக்கப்பூர்வமான ஆய்வுக்கட்டுரைகளை ஊக்குவிப்பதற்குமே பன்னாட்டு அளவில் அம்மூன்று மாநாடுகளையும் நிகழ்த்தினார். சாமானியர்கள் மட்டுமல்லாது, பெரும்பாலான கல்வியாளர்களின் மத்தியிலும் மொழியியலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆய்வுக்கட்டுரை எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் அம்மூன்று மாநாடுகளை ஏற்பாடு செய்திருந்தார்.

2017 முதல் 2019 வரையிலும் நிகழ்த்தப்பட்ட அம்மூன்று மாநாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் பத்து முதல் பதினைந்து நாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பதிப்பித்துள்ளார். குறிப்பாக, 2018-ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்தேறிய மாநாட்டில், இந்தியா முழுவதுமிருக்கும் பல மொழிகளிலிருந்தும் ஆய்வுக்கட்டுரைகள் கிடைக்கப்பட்டன. இவ்வாறாக, மாநாடுகளில் கிடைக்கப்பெற்ற ஆய்வுக்கட்டுரைகளைப் பிரசுரம் செய்வதற்கும் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகப் பதிப்பகம் உதவி வருகிறது. மேலும், ‘talias.org’ எனும் அகப்பக்கத்தின் வழியும் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம் மாநாடுகளில் கிடைக்கப்பெற்ற ஆய்வுக்கட்டுரைகளை மின்னூல்களாகப் பதிவேற்றம் செய்துள்ளது. அவ்வகப்பக்கத்திலுள்ள ஆய்வுக்கட்டுரைகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும், பகிர்ந்துக்கொள்ளவும் முடியும். மொழியியல், கல்வியியல், சமூகவியல் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை இம்மாதிரியாக எழுதுவிப்பதற்கும் வாசிப்பதற்குமான பெரும் வாய்ப்பினைப் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம் ஏற்படுத்தியுள்ளதால், மொழியியல் தொடர்பான விழிப்புணர்வு நிலவுவதோடு, தொடர்ந்து ஆக்கப்பூர்வமான ஆய்வுக்கட்டுரைகளையும் அதிகமாக எழுதப்பட்டு வருகிறது.

முனைவர் முனீஸ்வரனுக்கு மொழியியல் துறையில் நாட்டம் அதிகமானாலும், இளம்வயதிலிருந்தே தனக்கு விருப்பமான இலக்கியத் துறையை அவர் கைவிடவில்லை. அவர் தொடர்ந்து பல கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், பத்திகள் ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதி வருகிறார். தன்னுடைய 16-ஆவது வயதில் பேராக் திருக்குறள் இயக்கம் நடத்திய சிறுகதைப் பயிலரங்கில் கலந்து தொடர்ந்து நடைபெற்ற சிறுகதை எழுதும் போட்டியில் பங்கு பெற்றார். அதில் பத்தாவது கதையாக வெற்றிபெற்ற அவரது சிறுகதை பின்னர் ‘வெள்ளிச் சிமிழ்கள்’ எனும் தொகுப்பாக வெளியீடு கண்டது. அத்தூண்டுதலின் காரணத்தால், முனைவர் முனீஸ்வரன் தொடர்ந்து பல தமிழ் நாளிதழ்களுக்குச் சிறுகதைகளை எழுதி அனுப்பி வைத்தார். பள்ளி பருவத்திலே ஏறத்தாழ அவர் எழுதிய 12 சிறுகதைகள் தமிழ் நாளிதழ்களில் பிரசுரம் ஆகின. பல்கலைக்கழகத்திற்குச் சென்ற பின்னர் முனைவர் முனீஸ்வரன் நிறையச் சிறுகதை மற்றும் கவிதை எழுதும் போட்டிகளில் கலந்துகொண்டார். மலாயா பல்கலைக்கழகம், மலேசிய தேசிய பல்கலைக்கழகம், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம், தமிழக இணையத்தளங்கள் முதலானோர் ஏற்று நடத்திய பல சிறுகதை மற்றும் கவிதை எழுதும் போட்டிகளில் அவர் கலந்து வெற்றியடைந்துள்ளார்.

முனைவர் முனீஸ்வரன் தனது இளம் வயதில் முதன்முதலில் கவிதைகளையே எழுதத் தொடங்கியிருந்தாலும் காலப்போக்கில் அவரது கவனம் சிறுகதை பக்கம் திரும்பியது. அவ்வகையில், முனைவர் முனீஸ்வரன் படைத்த படைப்புகளில் அதிகம் பிரசுரமான படைப்பு வகை என்றாலும் சிறுகதையே ஆகும். இதுவரை அறுபதுக்கும் மேலான சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார். அவற்றுள் தமிழீழம் 2030, சிவப்புப் புள்ளிகள், புதிய முடியும் இன்னொரு அடியும், அங்கையற்கன்னியின் திருமணமும் ஐந்தாண்டு திட்டங்களும், கடவுள்களும் இவர்களும் ஆகிய பல சிறுகதைகள் பரிசுகள் பெற்ற சிறுகதைகளாக விளங்குகின்றன. இதேபோல, முனைவர் முனீஸ்வரன் எழுதிய கருப்பு எறும்புகள், அடிமைச் சங்கிலி, திமிரு பிடித்த மழை, மரங்கள் அங்கேயே இருக்கின்றன ஆகிய பல கவிதைகளும் பிரசுரம் ஆகியிருக்கின்றன. அதைத் தவிர்த்து, அவரது கைவண்ணத்தில் உருவாகிய அல்லியின் திருமணம், சொத்து, காவ்யா ப்ரோஜெக்ட் ஆகிய நாடகங்கள் மின்னல் எப்.எம் வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள் மட்டுமல்லாது குறுங்கதைகள், நாவல், சிறுவர் நாவல் ஆகிய இலக்கியப் புனைவுகளைப் படைக்கும் முயற்சியிலும் முனைவர் முனீஸ்வரன் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, பழங்காலத் தமிழர்களைப் பற்றிய ஆய்வு நூல் ஒன்றையும் முனைவர் முனீஸ்வரன் உருவாக்கி வருகிறார். அதனைத்தொடர்ந்து, அவரது சிறுகதைத் தொகுப்பினையும் அவ்வாய்வு நூலையும் ஒரே வேளையில் வெளியீடு செய்வதற்கான திட்டங்களை அவர் தீட்டி வருகிறார்.

மலேசியாவிலிருக்கும் பெரும்பாலான இலக்கியப் படைப்பாளர்கள் ஆசிரியத் துறையைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். அவ்வகையில், மலேசிய இலக்கியத் துறையின் வளர்ச்சியில் ஆசிரியம் துறையைச் சார்ந்தவர்களின் பங்களிப்பு அளப்பரியது என்றால் அது மிகையாகாது. முனைவர் முனீஸ்வரன் மொழியியல் துறையைச் சேர்ந்த விரிவுரையாளர் என்றாலும், தனது இலக்கிய அறிவை எழுதுவதன் வழி மட்டுமல்லாது, தொடர் வாசிப்புப் பழக்கம் மூலமாகவும் பெருக்கிக்கொள்பவராவார். இலக்கியப் புனைவுகளைப் படைக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் சிறந்த எழுத்தாளர்கள் நடத்தும் பட்டறைகளுக்குச் சென்று, பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனும் கருத்தை முன்வைக்கும் பல கல்வியாளர்களின் மத்தியில், முனைவர் முனீஸ்வரனின் பரிந்துரை சற்று வேறுபடுகிறது. சிறந்த வாசகரால் மட்டுமே நல்ல எழுத்தாளராக அமைய முடியுமென்பதே அவரது கருத்தாகும். பட்டறைகள் எழுத்தாளர்களுக்கு ஓர் ஊன்றுகோலைப் போலானது. அவ்வூன்றுகோல் இல்லாமல் இலக்கியத் துறையில் எழுத்தாளர்கள் தனித்தன்மையுடன் சிறப்புற வேண்டுமெனில் வாசிப்புப் பழக்கம் மிக அவசியம் என்பதே முனைவர் முனீஸ்வரனின் எண்ணப்பாடாகும்.

ஒரு மொழி மென்மேலும் செம்மையடைவதற்கு, இலக்கிய வளத்தோடு மொழியியல் வளமும் முக்கியமானது எனும் கருத்தை முன்வைக்கிறார். தமிழ்மொழி அதன் பழம்மரபைத் தளரவிடாது, காலத்திற்கேற்ற மாற்றங்களையும் ஏற்று மென்மேலும் செம்மையடைவதற்கு, நவீன இலக்கியத்தின் மேல் ஆர்வம் கொண்ட முனைவர் முனீஸ்வரனைப் போன்ற கல்வியாளர்களின் பங்கு முக்கியமானது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...