(முனைவர் கிங்ஸ்டன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை)
வாழ்க்கையில் சிலரை நாம் சந்திக்கும் தருணங்கள் நொடிப்பொழுதில் நடந்துவிடக்கூடியவை. எதிர்பாராமல் நடக்கும் சந்திப்புகள் நமது வாழ்க்கைக்குச் செறிவான பாதை அமைக்குமென்றால் அவற்றைத் தரிசனங்கள் என்றே குறிப்பிடுதல் தகும். மலேசியத் தமிழ் நாட்டுப்புறவியல் ஆராயும் நோக்கத்தோடு முதுகலை பட்டப்படிப்பிற்குப் பதிந்த என்னை முனைவர் கிங்ஸ்டன் அணைத்துக் கொண்ட தருணம் நொடிப்பொழுதில் நடந்துதான். அதற்கு முன்பு, என்னுடைய இளங்கலைக் கல்வியின்போது, எங்களுடைய சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் கல்விக்கழகத்திற்கு தன்னுடைய தொல்காப்பிய மலாய் மொழி ஆய்வு நூலை வெளியிட வந்த அவரை ஓர் ஓரத்தில் நின்று மட்டுமே காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. முனைவர் கிங்ஸ்டனோடு நான் செலவிட்ட நேரங்கள் மிக சொற்பமானவை. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்போது தொடங்கிய எனது ஆய்வு, அவரோடு நேரடியாகச் சந்தித்துப் பேசும் வாய்ப்பினை எனக்கு நிறைய ஏற்படுத்தித் தரவில்லை. ஆனாலும், மெய்நிகர் வாயிலாக எங்கள் இருவருக்குள்ளும் நல்ல உறவு வளர வாய்ப்பமைந்தது. ஒரு விரிவுரைஞர், ஆய்வு மேற்பார்வையாளர் என்ற பெரும்பிம்பங்களைக் கடந்து, இயல்பாய் பழகும் அவரின் வாஞ்சைதான் அவரின் பலம்.
முனைவர் கிங்ஸ்டன் தமிழகத்திலுள்ள நீலகிரியில் அமைந்துள்ள உதகமண்டலத்தில், 23-ஆம் திகதி, ஜூன் மாதம் 1979- ஆம் ஆண்டு திரு.பால் தம்புராஜ் மற்றும் மார்கரேட் சுசிலா ஆகிய இணையினருக்குக் கடைக்குட்டியாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு அக்காக்கள் உள்ளனர். முனைவருடைய அப்பா திருநெல்வேலிக்காரர். அம்மா கொங்கு நாட்டைச் சேர்ந்தவர். அரசாங்க ஊழியரான அவருடைய அப்பா உதகமண்டலத்திற்கு பணி மாற்றலாகிச் சென்ற போது முனைவர் அவர்கள் அங்கே பிறந்துள்ளார். திருமதி.லோகேஸ்வரி ஆறுமுகத்தை மணந்து கொண்ட முனைவர் அவர்களுக்குக் கபிலன் என்ற மகனும் உள்ளான்.
தன்னுடைய ஆரம்பக்கல்வியை உதகமண்டலத்திலேயே தொடங்கிய முனைவர், குன்னூர் உபத்தலை அரசு மேல்நிலைப்பள்ளியில் தன்னுடைய தொடக்கக்கல்வியைத் தொடர்ந்துள்ளார். 2000-ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை நிறைவுச் செய்த இவர், 2002-ஆம் ஆண்டு அதே பல்கலைக்கழகத்தில் தமிழியலில் முதுகலைப் பட்டப்படிப்பையும் 2004-ஆம் ஆண்டு தமிழில் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பையும் நிறைவுச் செய்துள்ளார். 2006-ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முனைவர் பட்டப்படிப்பை மொழியியல் துறையில் நிறைவுச் செய்துள்ள இவர், 2007-ஆம் ஆண்டு நாட்டுப்புறவியலில் டிப்ளோமா கல்வியையும் முடித்துள்ளார். மீண்டும் 2012-ஆம் ஆண்டு மொழியியலில் முதுகலையை முடித்த முனைவர் அவர்கள் கல்வியின்பால் தீராதக் காதல் கொண்டவராவார். தனக்குப் புத்தகங்கள் படிப்பது என்றால் மிகவும் பிடிக்கும் என்பதைப் பலமுறை பகிர்ந்து கொண்டுள்ள முனைவர் அவர்கள், தன்னுடைய வாசிப்பின் நீட்சியை இன்றளவும் தொடர்ந்து கொண்டு வருகிறார்.
கோயம்புத்துரில் அமைந்துள்ள ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் 2007- ஆம் ஆண்டு தொடங்கி 2011- ஆம் ஆண்டு வரை தமிழ்த் துறை துணைப் பேராசிரியராக பணியாற்றிய இவர், 2011- ஆம் ஆண்டுத் தொடங்கி 2013-ஆம் ஆண்டு வரை மைசூரில் அமைந்துள்ள இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்திய மொழிகளின் முனையகத்தில் பணியாற்றியுள்ளார். தற்போது, சுல்தான் இத்ரீசு கல்வியியல் பல்கலைக்கழத்தின் மொழி மற்றும் தொடர்பாடல் புலத்தில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
முனைவர் கிங்ஸ்டன் அவர்களை பல்கலை வித்தகர் என்றே போற்ற வேண்டும். தன்னுடைய இயல்பான மற்றும் வீரியமிக்க பேச்சினால் அறிவுக்கணைகளைத் தொடுத்து விடும் வல்லமை உடையவர் இவர். எந்தவொரு சிக்கல் நேரிட்டாலும் அதை இயல்பாக கடந்து விடும் அவரின் லாவகத்தைக் கண்டு நான் பலமுறை சிலாகித்ததுண்டு. மொழி ஆராய்ச்சியிலும் நாட்டுப்புறவியலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட முனைவர் அவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள படைப்புகள் ஏராளம். அதுவும் தமிழ்மொழியைப் பின்னணியாகக் கொண்ட அவர், மலாய்மொழியின்பால் ஈர்க்கப்பட்டு அம்மொழியில் நமது நூல்களை வெளியிட்டதும், அம்மொழி நூல்களைத் தமிழில் வெளியிட்டதும் மலேசிய இலக்கிய வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நிகழ்வுகளாகும்.
நாளிதழ்கள், மாத இதழ்கள், புத்தகங்கள், ஆய்வரங்கங்கள் மற்றும் மாநாடுகளில் பல்வேறு கட்டுரைகள், கதைகள், ஆய்வுக்கட்டுரைகள் போன்றவற்றைப் படைத்துள்ள முனைவர் அவர்கள், தொல்காப்பியம் சார்ந்து தான் தொகுத்த “TOLKAPPIYAM ASAL USUL DAN INTIPATI KARYA AGUNG BAHASA TAMIL”, மலாயிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்த “நான் கிழக்கத்தியப் பெண்” (Aku Anak Timur), தமிழிலிருந்து மலாயிற்கு மொழிப்பெயர்த்த “Misteri di Dargling”, மலேசியத் தமிழர்களின் சொல்லும் மரபும் என்ற சொல்லாராய்ச்சி நூல் மற்றும் தொன்மம் போன்ற நூல்கள் தம் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது, மலேசியாவில் அமைந்துள்ள 100 ஆலயங்களை நேரில் சென்று கண்டு, ஆராய்ந்து அவற்றைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துள்ளது முனைவர் அவர்கள் நாட்டுப்புறவியலின் மீது கொண்டுள்ள அளவுக்கடந்த ஆர்வத்தினைப் பறைச்சாற்றுகிறது. நா.வானமாமலை போன்ற நாட்டுப்புறவியலாளர்களிடத்தில் கல்விப் பயின்றுள்ள முனைவரிடத்தில் நாட்டுப்புறவியல் சார்ந்த ஆர்வம் மேலிட்டிருப்பது அவரின் கல்வி ஆழத்தினை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. அதோடு, 50-க்கும் மேற்பட்ட சங்கப்பாடல்களை வலையொளியில் தொகுத்துள்ளார். தற்போது, மலேசியத் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
முனைவர் கிங்ஸ்டன் மாணவர்களின் அறிவுப்பெருக்கத்தில் எப்பொழுதுமே தனிக்கவனம் உடையவர். உலகளாவிய நிலையில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளிலும் ஆய்வரங்கங்களிலும் மாணவர்களின் பங்கேற்பை உறுதிச்செய்யும் மாண்புடையவர். ஒரு மாணவரிடத்தில் இலங்கப்பெறும் அறிவின் ஆக்கத்தினைச் சரியாக எடைப்போட்டு அதைச் சரியான தளத்தில் பயன்படுத்தும் ஆசிரியர்கள் வெகு சிலரே. அதில் முனைவர் கிங்ஸ்டனுக்குத் தனியிடம் எப்போதுமே உண்டு. அதே நேரத்தில், மாணவர்கள் தவறு செய்யும் பொழுது அதை நயமாக எடுத்துக்காட்டி அறிவுரை கூறுபவர். அவர் எனக்கு ஆய்வு மேற்பார்வையாளராக இருக்கின்ற இந்த நொடி வரை நான் ஆய்வில் செய்த தவறுகளை இடித்துரைத்துக் கூறியதாக நினைவில்லை. இதை இப்படி செய்தால் அது சரியாக வரும் என்று மாற்று வழிமுறைகளை முன்னிறுத்தி என்னை ஆற்றுப்படுத்திய அவரின் குணத்தினை எல்லாரும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும். மேலும், தன் வாழ்க்கை அனுபவங்களை ஒப்புக்காட்டி நமது வாழ்க்கைக்கு அவர் காட்டும் பாதையினை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது. “உங்களை நான் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், என் சொற்களை மனதில் கொள்ளுங்கள்”, என்று ஒரு நண்பனின் வாஞ்சையோடு அவர் கூறியச் சொற்களை இப்போதும் கூட நினைத்துச் சிலாகித்துக் கொள்கிறேன்.
இதுவரை முப்பதிற்கும் மேற்பட்ட முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு மேற்பார்வையாளராகவும் துணை மேற்பார்வையாளராகவும் பணியாற்றியுள்ள முனைவர் அவர்கள் இன்று வரை அப்பணியைச் செறிவாக செய்து வருகிறார். ஆய்வுக்கட்டுரை தணிக்கைக் குழுவில் ஒருவராகவும், ஆய்வு முன்மொழிவு செறிவாளராகவும் பணியாற்றியுள்ள முனைவரின் ஆய்வு அறிவை நாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாடு விட்டு நாடு வந்தாலும், இந்த மண் என் சொந்த மண், இங்கே உள்ளவர்கள் எல்லாரும் என் உறவுகள் என்று பெருமையாகவும் உளமார்ந்தும் கூறிக்கொண்ட முனைவர் கிங்ஸ்டன் அவர்களை மலேசியத் தமிழுலகம் மேலும் கொண்டாடினால் அதுவே தமிழுக்கு நாம் செய்யும் தொண்டாகும்.