லஜ்ஜா

I

மாமாவிடம் இருந்து போன் கால் வந்தது.“சேகரு, ஆபிஸிற்கு வா.” என்று சொல்லிவிட்டு என் பதிலைக் கேட்குமுன் அழைப்பைத் துண்டித்துவிட்டார். அவர் எப்போதும் அப்படித்தான். பைக்கை எடுத்துக்கொண்டு உடனே கிளம்பினேன்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் மாமாவிடம் வேலைக்குச் சேர்ந்தேன். என்ன வேலை என்று கேட்டால் என்னால் சரியாகப் பதில் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. நான் எட்டாவது படிக்கும்போது அப்பா குடியில் புதைந்து செத்துப்போனார். அவர் விட்டுவிட்டுப் போயிருந்த மூன்று ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதில் வரும் பணத்தில்தான் அம்மா என்னை வளர்த்தார். அரசுக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் படித்து முடித்தபிறகு, நான் வேலைக்குப் போனால்தான் குடும்பம் ஓடும் என்ற உண்மை எனக்கு உறைத்தது.நான் யாரிடமும் பேசுவதில்லை என்பதால் சொந்தபந்தம் யாருமே என்னிடம் முகங்கொடுக்கமாட்டார்கள். தேவையான விஷயங்கள் எல்லாம் அம்மா மூலம் எனக்குத் தெரியவரும் என்பதால் நானும் இதுபற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் வேலை ஒன்றை வாங்கவேண்டும் என்றால் வாயைத் திறந்து பேசவேண்டும். இல்லையா?

இருபது கிலோமீட்டர் தள்ளி இருந்த சர்க்கரை ஆலையில் கரும்புச் சக்கையை அள்ளிப்போடும் வேலை இருப்பதாக ஒருவர் சொன்னார். முதல் நாளன்று அந்தக் குப்பையில் இருந்து வரும் நாற்றத்தை என்னால் தாங்கவே முடியவில்லை. குமட்டிக்கொண்டே இருந்தது. கரும்புச் சக்கையை குவித்து வைத்திருக்கும் இடத்தை ஒட்டிகுட்டைபோல் தேங்கிநிற்கும் கழிவுநீரில்விரல் தடிமன் உள்ள வெண்ணிறப்புழுக்கள் நெளியும். அந்தச் சக்கையை அள்ளி டிப்பரில் போடுகிற மெஷினில் இருந்து குப்பை சிதறிக்கொண்டே இருக்கும். அதைத்தான் நாங்கள் அள்ளி வண்டிகளில் போட வேண்டும்.இரண்டாம் நாள்,கையோடு எலுமிச்சம்பழம் எடுத்துச் சென்றுவிட்டேன். குமட்டுவதுபோல் இருந்தால் அதை மூக்கில் வைத்து வாசம் பிடிப்பேன். அப்படிச்செய்தால் சற்று நேரம் வாந்தி வரும் உணர்வில் இருந்து விடுதலையடைந்து நிம்மதியாக இருக்கலாம்.

மட்கி, நாறும் அந்த குப்பை மேலேயே அமர்ந்து மேஸ்திரி பெரியணன் சாப்பிட்டுக்கொண்டுப்பதை ஒருநாள் பார்த்தேன். இந்தக் குப்பையுடன் இருபது ஆண்டு உறவு அவருக்கு உண்டு. நான் எலுமிச்சையை முகர்ந்துகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அருகில் வந்து, “இதெல்லாம் கதைக்கு ஆவாதப்பா. இப்படி எலுமிச்சை வாசம் புடிச்சுக்கிட்டு இருந்தா இந்த நாத்தத்துக்குப் பழக நாளெடுக்கும். சும்மா இழுத்து மூச்சு விடு. சரியாகிவிடும்.” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். நானும் இழுத்து மூச்சுவிட முயற்சிசெய்தேன். ஒருமுறை இழுத்ததுதான் தெரியும். அந்த நாற்றம் வயிற்றுக்குள் செல்வதை நான் உணரும்போது குடலுக்குள் இருந்த அத்தனையும் வெளியே வந்துவிட்டது. வாந்தி எடுத்துக்கொண்டே இருந்தேன். அங்கே நின்றுகொண்டிருந்தவர்கள் எல்லோரும் கூட்டம்கூடி சிரித்தார்கள். சற்றுநேரத்தில் வாந்தி நின்றுவிட, புளித்த வாயைக் கொப்புளித்துக்கொண்டிருந்தேன்.

திரும்பி வந்த பெரியணன், ஒரு டப்பாவைத் திறந்து களிம்பு போன்று இருந்த ஒரு பொருளை விரலில் தொட்டு எடுத்துவிட்டு என் வாயைத் திறக்கச் சொன்னார். அந்தக் களிம்பை என் நாக்கில் தடவினார். இனிப்பையும், கசப்பையும் என் நாக்கு மாறிமாறி உணர்ந்தது. சட்டெனகுமட்டல் நின்றுவிட்டது.

“அது மொலாசிசு தம்பி. வாரிப் போடுறோம்ல அந்தக் குப்பை. அதுல எடுக்கிற சாராயம் மாதிரிசாமான்தான் இது. இனிமேல் உனக்கு வாந்தி வராது.” என்று சொல்லிவிட்டு, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பக்கம் திரும்பி, “சின்னப்பய ஒருத்தன் வாந்தி எடுக்கிறத பார்த்தா உங்களுக்கு பொளந்துக்கிட்டு சிரிப்பு வருதா? பீ அள்ளிப்போட்டாலும் நக்கப்பவுசுக்கு குறையில்லை. பொத்திக்கிட்டு வேலையைப் பாருங்க.” என்று கத்தினார்.

ஒரு மாதம் அங்கே வேலை செய்தேன். கரும்புச் சக்கை, நாற்றம்,நொதித்துக் கிடக்கும் குப்பைக் குழி, அதில் நெளியும் புழுக்கள் எல்லாம் பழகிவிட்டன. வாந்தியே வருவதில்லை. முதல் மாதம் தொள்ளாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள்.ஆனால் பாதத்தில் புண் வந்து கால் வீங்கிவிட்டது.அம்மாவிற்கு இவற்றை எல்லாம் காணச்சகிக்கவில்லை.

அம்மாவின் தூரத்து அண்ணன் மாணிக்கம் பக்கத்து நகரமான திருக்குடியில் வழக்குரைஞராக இருந்தார். அவரைப்போய் பார்த்தால் நல்ல வேலை வாங்கித்தருவார் என்று அம்மா திரும்பத் திரும்பச் சொல்லும்போதெல்லாம் எனக்கு எரிச்சலாக இருக்கும். ஒருநாள் காலையில் டிவிஎஸ் விக்டர் வண்டியில் மாணிக்கம் மாமா வந்து இறங்கினார். வீட்டிற்குள் நுழைந்ததும் வண்டிச்சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு, “மாப்பிள்ளை, இந்த வண்டிய ஓட்டிப்பழகு. லைசன்ஸ் வச்சிருக்கியா?” என்று கேட்டார்.நான் தலையை மட்டும் ‘ஆம்’ என்பதுபோல் அசைத்தேன்.

“நல்லது. இனிமே நீ சக்கரை ஆலைக்குப் போகவேண்டாம். பத்துநாள் கழிச்சு என்னை வந்து ஆபிஸில் பார். கோர்ட்டுக்கு வராதே. என் ஆபிஸ் எங்கே இருக்குனு தெரியும்ல?” என்று கேட்டபடி, ஐநூறு ரூபாயை எடுத்து என்னிடம் கொடுத்து, “பெட்ரோல் போட்டுக்க” என்றார். அம்மா தந்த காபியைக் குடித்துவிட்டுக் கிளம்பிய அவரை நான்தான் கொண்டுபோய் வீட்டில் விட்டேன். பத்து நிமிடப் பயணத்தில் அவர் என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

அந்த வண்டி புதியதும் இல்லை, ரொம்பப் பழையதும் இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வாங்கியிருக்கலாம். புது வண்டிகளைவிட பழைய வண்டிகளை ஓட்டுவது பல விதங்களில் எளிது. கீழே விழுந்து உடைந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. பத்து நாள் கழித்து, மாமா சொல்லும் வேலை பிடித்திருந்தால் செய்வோம், இல்லையென்றால் வண்டியை அவரிடமே கொடுத்துவிட்டு மறுபடி ஆலைக்கே போய்விடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரு வாரம் கழித்து, “டேய், மாமாவைப்போய் பார்க்கலையா.” என்று அம்மா நச்சரித்தார். நான் கண்டுகொள்ளவில்லை. பத்தாவது நாள் என்றால் பத்தாம் நாள்தானே பார்க்கவேண்டும். அன்று – வெள்ளிக்கிழமை. காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வண்டியைத் துடைத்து, குளித்துக் கிளம்பி ஆறு மணிக்கெல்லாம் மாமாவின் ஆபிஸிற்குப் போய்விட்டேன். அவரது கார் வெளியே நின்றுகொண்டிருந்தது. அதிலிருந்து சற்று தூரத்தில்இருந்த மரத்தடியில் கொண்டுபோய் வண்டியை நிறுத்தினேன். உள்ளே இருந்து தலையை மட்டும் உயர்த்தி என்னைப் பார்த்துவிட்டு,பளபளவென்றிருக்கும் வண்டியையும் பார்த்தார். மஞ்சள் நிற அட்டைகொண்டு சுற்றப்பட்ட வழக்குக்கட்டுகள் அவரைச்சுற்றிக் குவிந்துகிடந்தன. அந்த அறையில் நான்கைந்து டேபிள்கள் போடப்பட்டிருந்தாலும், அங்கு வேறு யாரும் இல்லை. அவருடைய ஜூனியர்கள் இனிமேதான் வருவார்கள்போல.

நான் உள்ளே சென்றதும், “நல்லா ஓட்டப்பழகிட்டயா சேகரு?” என்று கேட்டார். தலையை அசைத்து ‘ஆம்’ என்றேன். மேசையைத் திறந்து ஆர்.சி. புத்தகம் ஒன்றை எடுத்து என்னிடம் தந்தார். அந்த வண்டி என் பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது. என்னுடைய கையெழுத்துகூட அதில் அச்சுஅசலாகப் போடப்பட்டிருந்தது. நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

“திங்கள்கிழமை காலைல அஞ்சரை மணிக்கு சுங்கம்பட்டி பஸ்ல மணிராஜ்னு ஒருத்தர் நம்ம ஊருக்கு வருவார். சிங்கப்பூர் கைலி கட்டி, கையில ஒரு சாக்கு பை வச்சிருப்பார். பஸ் ஸ்டாண்டில் இருந்து அவரைக் கூட்டிட்டுப்போய், அவர் சொல்ற இடத்தில் விட்டுடு. அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு இதே நேரம் என்னைய வந்து பார்.” என்றார்.

“சரி சார்.” என்றேன்.

நான் ‘சார்’ என்று சொன்னதும் என்னை அவர் உற்றுப்பார்த்தார். பிறகு, குனிந்து கேஸ் கட்டைப் புரட்டத் தொடங்கினார். நான் மெதுவாக அங்கிருந்து வெளியேறினேன்.

வீட்டிற்கு வந்ததும், “மாமா, வண்டியை என் பெயருக்கு மாற்றிவிட்டார். ஒரு வேலை சொல்லிருக்கார்.” என்று மட்டும் அம்மாவிடம் சொன்னேன். நான் இனி உருப்பட்டுவிடுவேன் என்று அம்மாவிற்குத் தோன்றியிருக்க வேண்டும். அவர் முகத்தில் நிம்மதியின் சுவடுகள் தோன்றின.

திங்கள் காலை ஐந்து மணிக்கெல்லாம் பஸ் ஸ்டாண்ட் போய்விட்டேன். மொத்தமே நான்கு பேருந்துகள் நிற்கக்கூடியஇந்த இடத்திற்கு யாரோ பஸ் ஸ்டாண்ட் என்று பெயர் வைத்திருந்தார்கள். அதை நாங்களும் நம்பிக்கொண்டிருந்தோம். இடிந்து தகர்ந்து கூரை உடைந்து கிடக்கும் அந்த இடத்தில் பெஞ்சிற்கு ஒன்றாக ரெண்டு பேர் சுருண்டு படுத்திருந்தார்கள். பிச்சைக்காரர்களா பைத்தியங்களா என்று தெரியவில்லை. ‘இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?’ என்று எனக்குத் தோன்றியது. அங்கிருந்த பெட்டிக்கடையில் நான்கைந்து கண்டக்டர், டிரைவர்கள் டீ குடித்துக்கொண்டிருந்தார்கள்.

“புளியங்கொட்டைல டீ போட்டாலும், ஏலக்காய கலந்துவிட்டு ஊரை ஏமாத்துற” என்று ஊதா சட்டை அணிந்த ஒருவர் சொல்ல, “குடிக்கிறது ஓசி டீ, இதுக்கு இந்தப்பேச்சு. ஒருநாளைக்கு உன் கொட்டையைஅறுத்து டீ போட்டாதான் திமிருப் பேச்சுக் கொறையும்.” என்று பதில் சொன்னார் கடைக்காரர்.

“அறுக்கக் கொட்டை இருந்தாதானே, வாரத்துக்கு நாலு நாள் சந்துக்காரிககிட்ட கிடையா கிடந்து பூறாம் கரைஞ்சுபோச்சே சித்தப்பு.” என்றுஊதா சட்டை சொல்ல அங்கிருந்தவர்கள் சிரித்தார்கள்.

“சை! காலைல வந்து கடைல என்ன கருமத்தையாவது பேசுங்கடா. என் யாவாரம் உருப்படும். வண்டிய எடுத்துக்கிட்டு கிளம்புங்கடா.” என்றார் கடைக்காரர். “பஸ் ஸ்டாண்ட் ஓனர் சொல்லிட்டாருப்பா, கெளம்புங்க.” என்று கக்கத்தில் பணப்பை வைத்திருந்த கண்டக்டர் ஒருத்தர் சொன்னார்.

இது எதையும் கண்டுக்கொள்ளாமல், பேப்பர்காரர்கள் நான்குபேர் தரையில் வட்டமாக அமர்ந்துகொண்டு அன்றைய செய்தித்தாள்களை அடுக்கிக்கொண்டிருந்தனர். ஐஸ்வர்யா ராய் – அபிஷேக்பச்சன்  திருமணம் தலைப்புச்செய்தியாக வெளிவந்திருந்தது. வெளுத்த தோலோடும், பூனைக்கண்களோடும் இருக்கும் இவளை ஏன் அழகி என்கிறார்கள்? இந்தியப்பெண்களில் நந்திதா தாஸ்தான் அழகி என்று நான் மனதிற்குள் சொல்லிக்கொண்டிருக்கும்போது ‘டொறடொற’ சத்தத்துடன் சுங்கம்பட்டி வண்டி பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்தது. 

அதிலிருந்து கீழே இறங்கிய கண்டக்டர், விட்டுவிட்டு விசில் அடிக்க,வண்டியைபின்னால் கொண்டுவந்து எடுத்து நிறுத்தினார் டிரைவர். வண்டிக்குள் இருந்துநாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் நிதானமாக இறங்கி டீக்கடையை நோக்கி வந்தார். அவரது கையில் உரச்சாக்கு மூட்டை ஒன்றும், மஞ்சள் பையும்இருந்தன. பாலித்தீன் பைக்குள் எதையோ வைத்து அதன்மேல் இரண்டு மூன்று உரச்சாக்குகளை ஒன்றின் உள்ளே ஒன்றாக வைத்து இறுக்கிக் கட்டியிருந்தார். உரித்த தேங்காய் மட்டையைப்போல் இருந்த அந்தச் சாக்கின் மேற்பகுதியில் பாலித்தீன் பையின் பளபளப்பு வித்தியாசமாகத் தெரிந்தது.

நான் அவரிடம் சென்று, “அண்ணே, உங்க பேர் மணிராசா? வக்கீல் சார் உங்களைக் கூட்டிக்கொண்டுபோய் நீங்க சொல்ற இடத்துல விடச்சொன்னார். எங்கண்ணே போகணும்?” என்று கேட்டேன்.

மூட்டையைக் கைமாற்றிக்கொண்டே, “ரெண்டு டீ.” என்று கடைக்காரரிடம் சொன்னார் அவர்.

டீ குடிக்கும்போது அவரது கண்கள் அங்கே தொங்கிக்கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய் படத்தையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தன. பிறகு ஓரமாகப் போய் இரண்டு மூன்று முறை காறித்துப்பினார். அவர் வண்டியில் ஏறும்போது, “அண்ணே, சாக்கை என்கிட்ட குடுங்க. நான் முன்னாடி வச்சுக்கிறேன்.” என்றேன்.

“வேணாந்தம்பி, வண்டி ஓட்ட சிரமம். நானே வச்சுகிறேன். நேரே தெப்பக்குளத்திற்கு வண்டியை விடு.” என்றார்.

அங்கே போனதும் படித்துறையில் சாக்குமூட்டையை வைத்துவிட்டு, சட்டையையும் கைலியையும் கழட்டினார். பிறகு டவுசருடன் தண்ணீருக்குள் இறங்கிமுதலில் வாயைக் கொப்புளித்தார். அடுத்து அவர் காறித்துப்புவார் என்று நினைத்தேன். இல்லை.  அவர் கையை வீச வீச தெப்பக்குள நீரில் படர்ந்திருந்த பாசி அந்த இடத்தைவிட்டு விலகத் தொடங்கியது. பிறகு நிதானமாகக் குளிக்கத் தொடங்கினார். சூரியன் மெதுவாக மேலெழவும், தண்ணீருக்குள்கருத்துப்பெருத்த தேளிகள்நீந்துவது தெரிந்தது.முனை வளைந்த மீசைமுள்கொண்ட இந்த மீன்கள் இருக்கும் இடத்தில் வேறெந்த மீன்களும் வாழவே முடியாது. தன்னினத்தையே தின்று வாழும்  அவை, விழுங்க இரை ஏதும் இல்லாதபோதிலும் தண்ணீருக்கு மேல் வந்து வாயைத் திறந்து திறந்து மூடிக்கொண்டிருந்தன.

குளித்துவிட்டு வந்தஅவர்,தான் வைத்திருந்த மஞ்சள் பையில் இருந்து வேட்டி, சட்டைகளை எடுத்து அணிந்துகொண்டு, “தம்பி, தண்டிக்கருப்பனை கும்பிட்டுட்டு வர்றேன். நீ இங்கேயே இரு.” என்றார். குளக்கரையில் இருக்கும் தண்டிக்கருப்பு துடியான சாமி. தப்புத்தண்டா பண்ணிட்டு அந்தக் கோயிலுக்குப் போனால் உயிர்ப்பலி வாங்கும் என்று பலரும் சொல்வார்கள். நான் இன்னும் குளிக்கவில்லை. எனவே, “சரிண்ணே” என்று சொல்லிவிட்டு அவருக்காககுளக்கரையிலேயே காத்திருந்தேன்.

சற்றுநேரத்தில் நெற்றி நிறைய விபூதி பூசிகொண்டு அவர் திரும்பிவந்தார். “அதுக்குள்ள எறும்பு வந்துருச்சு” என்றபடி சாக்குமூட்டையைத் தட்டினார். பிறகு அவர் வண்டியில் ஏறி அமர்ந்ததும், எதையோ மறந்துவிட்டோம் என்று தோன்றியது. படித்துறையைப் பார்த்தேன். அங்கே ஒன்றுமில்லை,  பாசி பழையபடி தண்ணீரைப் போர்த்தி மூடியிருந்தது. பாசிக்கு அடியில் இரைக்காக தேளிகள் முண்டிக்கொண்டிருக்கக் கூடும். ஆனால் மேலே ஒரு அசைவும் இல்லை.

“நேரே போலிஸ் ஸ்டேஷன் வீதிக்கு வண்டியை விடப்பா.” என்றவர், வண்டி ஸ்டேஷன் வீதியில் நுழைந்ததும், “நிறுத்துப்பா” என்றார். இறங்கியதும், “தம்பி, ரொம்ப நன்றிப்பா. இனி நான் போய்க்கிறேன்.” என்றுசொல்லி இரண்டடி சென்றவர் திரும்பி வந்து, “வீட்டுக்குப் போனதும் குளிச்சுடு” என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தார்.

வீட்டிற்கு வந்து, குளித்து, சாப்பிட்டுவிட்டுத் தூங்கிவிட்டேன். என்னவென்று தெரியவில்லை மதியமும் தூக்கம் அழுத்தியது. சாயங்காலம் மாரியண்ணன் டீக்கடையில் வடை ஒன்றை எடுத்துக் கடித்தபடி மாலைமலரைப் புரட்டினேன்.

‘தலையுடன் வந்து போலிஸில் சரண் அடைந்த வாலிபர்’ என்ற செய்திக்கு அருகே நெற்றி நிறைய பட்டைபோட்ட மணிராஜ் படம் வந்திருந்தது. அவருக்கு அருகில் சாக்குமூட்டை பாதி திறந்திருந்தது.

‘சுங்கம்பட்டியைச் சேர்ந்த  மணிராஜ் (வயது: 43) என்பவருக்கு பூங்கோதை (வயது: 35) என்ற பெண்ணுடன் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. நீண்ட ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் பூங்கோதை கர்ப்பமானார். அது தனது குழந்தை இல்லை என்று கருதிய மணிராஜ் மனைவியுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட சண்டையின்போது கோபம் தலைக்கேறிய மணிராஜ் தனது மனைவியின் தலையைத் துண்டித்துக் கொலைசெய்தார். பிறகு அதை ஒரு சாக்குபையில் வைத்து எடுத்துக்கொண்டு, திருக்குடி வந்த அவர் போலிஸில் சரணடைந்துள்ளார். உணர்ச்சி வேகத்தில் நடந்துள்ள இந்தக் கொலைபற்றியும், துண்டிக்கப்பட்ட தலையுடன் நகருக்குள் ஒருவர் நடமாடியதையும் கேள்விப்பட்ட மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.’

அந்தச் செய்தியைப் படித்ததும், போலிஸ் என்னைத் தேடுமோ என்ற பதட்டம் ஏற்பட்டது.  மாமாவைப்போய் பார்க்கலாமா என்று நினைத்தேன். பிறகு அது சரியில்லை என்று தோன்றியது. உடனே வீட்டிற்கு வந்து பதுங்கிக்கொண்டேன் அல்லது அப்படி நினைத்துக்கொண்டேன். இரவு முழுக்க தூக்கம் வரவில்லை. கொஞ்சம் கண் அசந்தாலும் போலிஸ் பஸ் ஸ்டாண்ட் டீக்கடையில் விசாரித்து, என்னைப் பிடிப்பதுபோல் கனவு வந்தது. மறுநாள் சரியாகச் சாப்பிடவில்லை. அம்மாவே என்னைச் சந்தேகமாகப் பார்ப்பதுபோல் தோன்றியது. சாயங்காலம் குளித்துவிட்டு சிவன் கோயிலில் போய் அமர்ந்துகொண்டேன். பட்டை அணிந்த எல்லோரும் மணிராஜ்போலவோ, தண்டிக்கருப்பைப்போலவோ தெரிந்தார்கள்.

அடுத்த நாள், நான் வீட்டைவிட்டே வெளியே வரவில்லை. இரவு பத்து மணிக்கு கே-டிவியில் அழகி படம் போட்டார்கள். அதில் வரும் நந்திதாதாஸைப் பார்க்கையில் ஐஸ்வர்யா ராய்தான் உண்மையான அழகி என்று தோன்றியது. சேனல் மாற்றினேன். அனிமல் பிளானெட்டில் ஒரு பெண் சிங்கம் மான்குட்டி ஒன்றை உயிருடன் கவ்விச்சென்று தனது குட்டிகளிடம் விட்டது. சிங்கக்குட்டிகள் மான்குட்டிமேல் புரண்டு விளையாடின. எல்லா குழந்தைகளையும்போல் நக்கிப்பார்த்து அதை என்னவென்று அறிந்துகொள்ள முயன்றன. ஏதோவொரு புள்ளியில் அந்தக் குட்டியின் குரல்வளையைக் கவ்வியது ஒரு சிங்கக்குட்டி. சற்று நேரத்தில் மான்குட்டியின் உடல் துண்டுதுண்டாகக் கிழிக்கப்பட்டது. அதன் குரல்வளையை முதலில் கவ்விய சிங்கக்குட்டியின் வாயில் ரத்தம் உறைந்திருந்தது. தாய் சிங்கம் அந்த ரத்தத்தை நக்கிச் சுவைக்க, சிங்கக்குட்டி கண்மூடி அமர்ந்திருந்தது. இக்காட்சியைக் கண்ட சற்று நேரத்தில் அசந்து தூங்கிவிட்டேன்.இரவு முழுக்க தொண்டைக்குள் கசப்பும், இனிப்பும் கலந்த பொருளொன்று உருகிக்கசிந்துகொண்டிருந்தது.காலையில் எழுந்தபோது மணி ஆறு. குளித்துவிட்டு, மாமாவின் ஆபிஸிற்கு போனேன். மரநிழலில் வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய மூன்று இருசக்கர வண்டிகள் நின்றுகொண்டிருந்தன. அவற்றில் இருந்து சற்று இடைவெளிவிட்டு என் வண்டியை நிறுத்தினேன். ஆபிஸிற்குள் வெள்ளைச் சட்டையும் கருப்பு பேண்ட்டும் அணிந்த ஜூனியர்கள் மூன்று பேர் நாற்காலிகளை ஆக்கிரமித்திருந்தனர்.

அறையின் நடுவில் அமர்ந்திருந்த மாமா என்னையே உற்றுப்பார்த்தார். பிறகு, மேசையைத் திறந்து இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்து என்னிடம் தந்தார். அவருடைய ஜூனியர்கள் நான் அங்கிருப்பதையே உணராதவர்கள்போல் இருந்தனர். எனக்கே நான் அங்கேதான் இருக்கிறேனா என்று தோன்றியது. மணிராஜ் என்ற மனிதனும், அவன் சுமந்துவந்த முண்டமற்ற தலையும் என் நினைவுகளில் இருந்து மறைந்துபோக அந்த இரண்டு ரூபாய் நோட்டுகள் மட்டும் போதுமானதாக இருந்தது. இப்படித்தான் எனக்கான தொழிலை நான் உருவாக்கிக்கொண்டேன்.

II

மாவட்டக் கோர்ட்டில் இருந்து ஆட்களை அழைத்துவந்து குடும்பநல கோர்ட்டில் விடுவது, மாமாவின் ஆபிஸில் இருந்து ஆட்களை கோர்ட்டிற்கு அழைத்துச்செல்வது, அரிதாக பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆட்களை அழைத்துச்சென்று லாட்ஜ்களில் தங்கவைப்பது போன்ற வேலைகளில் மூன்றாண்டுகள் ஓடின. யார் என்னுடன் வந்தாலும் அவர்களுடைய பெயர் தவிர வேறெதுவும் நான் கேட்பதில்லை. அவர்களிடம் இருந்து ஒரு ரூபாய்கூட வாங்கமாட்டேன். வெளியிடங்களில் அந்த நபர்களையோ, மாமாவையோ பார்த்தால்கூட தெரிந்ததுபோல் காட்டிக்கொள்வதில்லை. போலிஸ் ஸ்டேஷன் வாசலை மிதிப்பதையும், போலிஸ்காரர்களுடன் பழக்கம் வைத்துக்கொள்வதையும் தவிர்த்துவிடுவேன்.

கோர்ட்டிற்குள் நுழைய வேண்டியதிருந்தால் ஐந்து நிமிடங்களுக்குமேல் நிற்கமாட்டேன். அங்கேயுள்ள எழுதப்பட்ட படிநிலைகள், எழுதப்படாத விதிகள் எல்லாவற்றையும் அறிந்துகொண்டேன். சொல்லப்படும் நீதி என்பது எழுதப்படாத விதியால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. மற்றபடி சட்டம், கண்கட்டிய வெண்ணிற தேவதை, கீழே அமர்ந்திருக்கும் கருப்பு கவுன்கள், மேடைமேல் அமர்ந்து, நீதி வழங்கும் கவுன் எல்லாம் வெறும் செட் ப்ராப்பர்ட்டிகள்தான்.  எழுதப்பட்ட சட்டங்களை ஒருவன் எத்தனை முறை வேண்டுமானாலும் மீறலாம். ஆனால் எழுதப்படாத விதிகளை ஒருபோதும் மீறக்கூடாது என்பதைப் புரிந்துகொண்ட பிறகு என் கையில் காசு நிறையவே புழங்கத் தொடங்கியது.

ஒருநாள், முப்பத்தியைந்து ஆயிரம் ரூபாய்க்கு அம்பாசிடர் கார் ஒன்றை வாங்கித்தந்தார் மாமா. ஒரிஜினல் கலர் அடித்து, சீட்களை வெண்ணிறப் பூத்துண்டால் போர்த்தித் தைத்த பிறகு அந்த வண்டிக்கென ஒரு ‘லுக்’ வந்துவிட்டது. அந்த வண்டியை சரிசெய்வதற்கு மட்டும் எழுபத்தைந்தாயிரம் செலவானது. இந்தப் பணம் முழுவதும் என்னுடையது. ஏற்கனவே நான் கார் ஓட்டிப்பழகியிருந்தாலும் அம்பாஸிடர் காரை ஓட்டுவது எளிதாக இல்லை. ஸ்டேரிங்கிற்கு கீழே இருக்கும் கியரை மாற்றிப் பழக சில நாட்கள் ஆயின. சுமோ மாதிரி வேறு ஏதாவது வண்டியை வாங்கியிருக்கலாம் என்றுகூடத் தோன்றியது. ஆனால் மாமா அம்பாஸிடர் வாங்கியதற்கும் ஏதாவது காரணம் இருக்கும் என்று நம்பினேன்.

காலை ஐந்து மணிக்கு போன் வரவும், கிளம்பி அவரது ஆபிஸிற்குப் போனேன். என்னை அருகே வந்து உட்காரச்சொல்லிவிட்டு,“சேகரு, அறுப்பு கேஸ்ல மாட்டின மூனுபேரை வரையூர் கோர்ட்டில் இன்னைக்குக் காலைல ஒன்பதரைக்கு கூண்டடைக்கணும். இப்போ அவனுக பனைக்குளம் தனுஷ்கோடி தோப்பில் இருக்கானுக.” என்றார்.இத்தனை வருஷத்தில் வழக்கின் விபரம் என்ன என்று அவர்என்னிடம் கூறுவது இதுதான் முதல்முறை.“செய்துடலாம் சார்.” என்று சொன்னேன்.

“போலிஸ் கெடுபிடி இருக்கும்னு நினைக்கிறேன். கவனமா இரு.” என்றார்.

“நான் பார்த்துக்கிறேன்.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

வீட்டிற்கு வந்து குளித்து முடித்து அப்பாவின் படத்தைக் கும்பிட்டேன். ஏழு மணிக்கு நான் தோப்பிற்குப் போனபோது கைலியணிந்த மூன்றுபேர் எனக்காகக் காத்திருந்தனர். ஒருத்தனுக்கு முப்பத்தியைந்து வயது இருக்கலாம். மீசை அரும்பிக்கொண்டிருந்த மற்ற இருவருக்கும் வயது இருபதுகூட இருக்காது. விறைப்பாக இருந்தஅவர்கள் மூவரிடமிருந்தும் நேற்றுக் குடித்த சாராய நெடி போகவில்லை.

திருக்குடியை விட்டுவிட்டு வரையூரில் போய் சரண்டர் ஆகிறார்கள் என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆட்களை இவர்கள் தீர்த்திருக்க வேண்டும். இல்லையென்றால் முக்கியமான ஆள் யாரையாவது போட்டிருப்பார்கள். போலிஸ்காரர்கள் வளைப்பு போட ஏற்கனவே தயாராக இருப்பார்கள். மாட்டினால் அலேக்காகத் தூக்கிக்கொண்டுபோய் நாள் கணக்கில் அடித்து சித்திரவதை செய்துவிட்டுதான் கோர்ட்டில் ஆஜர் செய்வார்கள். செத்தவன் குடும்பம் பணத்தை இறக்கினால் எவனாவது இவர்களை வெட்டி வீசுவான்.இவற்றிலிருந்து கொஞ்சமாவது தப்பிக்க நினைத்தால் போலிஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு கோர்ட்டில் சரணடைய வேண்டும். இதைக் கூண்டடைப்பது என்று நாங்கள் சொல்வோம். உண்மையில் கூண்டடைப்பது என்பது, ஜெயிலில் அடைப்பதற்கான முதல் புள்ளி. இவர்கள் அதற்காகதான் காத்திருக்கிறார்கள்.

“கைலி வேணாம். வேட்டி, சட்டை போட்டுக்கங்க.” என்றேன். அவர்கள் உடைமாற்றிக்கொண்டு வந்ததும் வண்டியில் ஏற்றிக்கொண்டு வெட்டுக்காளி கோயிலுக்கு வண்டியைத் திருப்பினேன். வரையூர் போவதற்கு இது சுற்றுப்பாதை என்றபோதிலும் அதை நான் தேர்ந்தெடுக்க ஒரு காரணம் இருந்தது.

கோயிலை அடைந்ததும் அவர்களுக்கு மொட்டை போட ஏற்பாடு செய்தேன். செவ்வாய், வெள்ளி என்றால் கூட்டம் அதிகமாக இருக்கும். வியாழக்கிழமை என்பதால் கோயிலில் பத்து பேர்கூட இல்லை. அவர்கள் குளித்துவிட்டு வந்ததும், சந்தனத்தைத் தலையில் பூசச்சொன்னேன். பின்னர், அர்ச்சனைத்தட்டு, மாலை ஆகியவற்றை வாங்கி அவர்களிடம் கொடுத்து, “கோர்ட்டுக்குள்ள போற வரை ஆத்தாதான் துணை. போலிஸ்கிட்ட மாட்டாம கூண்டடையணும்னு அவகிட்ட வேண்டிக்கிட்டு வாங்க. அவதான் எல்லாம்.” என்றேன். திரும்பி வரும்போது அவர்களில் இளையவன் கழுத்தில் பூமாலை இருந்தது. சாமிக்கு ஊற்றும் ஒரு பன்னீர் பாட்டிலை வாங்கி அவர்களிடம் கொடுத்து வாயைக் கொப்புளிக்கச் சொன்னேன். அவர்கள் மேலேயும் பன்னீரைத் தெளித்துவிட்டு, வண்டியில் ஏற்றிக்கொண்டேன். தலை வலிக்கும் அளவிற்கு வண்டிக்குள் பன்னீர் வாடையடித்தது.

“இடைலயார் கேட்டாலும், தம்பிக்கு உடம்பு சரியில்ல. அதனால் வெட்டுக்காளி கோயிலுக்குப்போய் வேண்டிக்கிட்டு திரும்புறோம்.” என்று சொல்லுங்கள் என்றேன். தலையை ஆட்டினார்கள். பத்து கிலோமீட்டர் கடப்பதற்குள் மூன்றுமுறை வண்டியை நிறுத்தி சிறுநீர் கழித்தார்கள். இன்னும் பதினைந்து நாட்களுக்கு இவர்கள் இப்படியே சிறுநீர் கழிக்க வேண்டியதுதான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

மாலை போட்டுக்கொண்டிருந்த அந்தச் சிறுவன் பக்கத்தில் இருந்தவனிடம், “அண்ணே, ஜெயில்ல ரொம்ப அடிப்பாங்களா?” என்று கேட்டான்.அதற்கு அந்த மூத்தவன் பதில் ஏதும் சொல்லவில்லை. மேலே இருந்த கண்ணாடியில்நான் அவனைப் பார்க்க,இறுகிய முகத்துடன் அவன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

எதிர்பார்த்ததுபோல் இல்லாமல் நாங்கள் ஒன்பது மணிக்கெல்லாம் ஊரை நெருங்கிவிட்டோம். இன்னும் அரைமணிநேரம் கடத்தவேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தபடி வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன். கோர்ட்டிற்கு ஒரு கிலோமீட்டர் முன்னால் இருக்கும் மாட்டாஸ்பத்திரிக்குள் வண்டியை விட்டேன். டாக்டர் இன்னும் வரவில்லை என்பதால் மாடுகளுடன் நிறையப்பேர் காத்திருந்தனர். அவர்களுடன் நாங்களும் சேர்ந்துகொண்டோம். மணி சரியாக ஒன்பதரை ஆனதும் அங்கிருந்து கிளம்பினோம். கோர்ட்டிற்கு கொஞ்சதூரம் முன்னரே காரை நிறுத்திவிட்டு, அவர்களைக் கீழே இறங்கச்சொன்னேன். அதுவரை அவர்களிடம் இருந்த விறைப்பு குறைந்து, நடுக்கம் வருவதை முகங்கள் காட்டிக்கொடுத்தன. ‘கோர்ட்டிற்கு நீங்களே போய்க்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிடுவேன் என்று நினைக்கிறார்கள்போல.

“கோர்ட்டிற்கு முன்புறத்தில் போலிஸ் இருக்கும். அதனால் கோர்ட் சுவருக்குப் பின்னால் இருக்கும் வீட்டின் வழியே உள்ளே நுழைய வேண்டும். அந்த வீட்டில் நுழைவதோ, வெளியேறுவதோ அடுத்தவருக்குத் தெரியக்கூடாது. நீங்கள் ஏறிக்குதித்துஉள்ள இருக்க கக்கூஸ்கிட்ட வந்துவிடுங்கள்.” என்றேன். வீட்டைக் காட்டிவிட்டு சுற்றிக்கொண்டு கோர்ட்டிற்குள் நுழையும்போது வாயிலில் போலிஸ் நிற்பதைப் பார்த்தேன்.

அங்கிருந்த ஆலமரத்தின் அடியில் என்ன சாமியென்றே தெரியாத சாமி ஒன்று இருந்தது. நேரே அங்கேபோய், சாமி கும்பிட்டுவிட்டு போலிஸ் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்று கவனித்தேன். போலிஸ் அங்கிருந்த டீக்கடைக்குள் நுழைய, நான் கோர்ட்டின் பின்னே இருக்கும் இடிந்த கழிவறைக்குப் போனேன். அங்கே நின்றுகொண்டிருந்த அவர்கள் மூன்றுபேரையும் அழைத்துக்கொண்டு கிளார்க் ரூமிற்குள் நுழைந்தேன். அந்த அறையைக் கூட்டிக்கொண்டிருந்த பெண் நிமிர்ந்து பார்த்துவிட்டு, “இங்கே எல்லாம் யாரும் வரக்கூடாது” என்று சொல்லும்போதே, நீதிபதி அமரும் இடத்திற்குப் பின்னால் சென்றுவிட்டேன். எதிரே இருந்த நீளமான கூண்டைக்காட்டி, “அதில்போய் உட்கார்ந்துக்கங்க. யாரு கூப்பிட்டாலும் அங்கிருந்து நகராதீங்க. இன்னம் கொஞ்ச நேரத்தில் நம்ம வக்கீல் வந்து உங்களைப் பார்ப்பார்.” என்று சொல்லிவிட்டுத் திருப்பினேன்.பன்னீர் வாசம் என்னைவிட்டு விலகி நீதிமன்றத்தை நிறைக்கத்தொடங்கியது. பைக்குள் கைவிட்டு கத்தையாக வந்த பணத்தை எடுத்து என்னைப் பார்த்தபடி நின்றுகொண்டு இருந்த அந்தப்பெண்ணின் கைகளில் திணித்துவிட்டுத் திரும்பிப்பார்க்காமல் வெளியேறினேன். அவளின் சில நிமிட அமைதிக்குத் தந்த விலைதான் அந்தப் பணம். இன்னும் சற்று நேரத்தில், இருக்கைக்கு வரும் கிளார்க் கூண்டிற்குள் ஆள் இருப்பதைப் பார்ப்பார். அதன் பிறகு உள்ளே நுழையும் போலிஸ்கூண்டில் இருப்பவர்களைச் சுற்றிச்சுற்றி வருவார்கள். மிரட்டுவார்கள். ஆனால் அவர்களால் கூண்டில் இருப்பவர்களை எதுவுமே செய்ய முடியாது.

அடுத்த நாள் மாமாவைப்போய்ப் பார்த்தபோது இருபதாயிரம் கொடுத்தார். அதை அப்படியே அம்மாவிடம் கொடுத்துவிட்டேன். அம்பாஸிடர் ஓட்டியதில் கிடைத்த பணம் என்று அம்மா நினைத்திருக்கக்கூடும். அதுவும் உண்மைதானே. வண்டியைக் கழுவி சீட்டுகளின் வெள்ளை நிறப்போர்வையைத் துவைத்துப் போர்த்தி, அடுத்த வேலைக்காகக் காத்திருந்தேன். அதன்பிறகு, எவ்வளவு சிக்கலான வேலை என்றாலும் மாமா என்னிடம் தந்துவிடுவார். நான் சத்தமே இல்லாமல் முடித்துக்கொடுத்துவிடுவேன்.அவர் வேலை சொல்லாத நாட்களில் ஊரில் யாராவது வாடகைக்கு அழைத்தால் சென்றுவிடுவேன்.

III

“பன்னியடிச்ச டவேரா வண்டி  ஒன்னு வந்திருக்கு. விலை கொறைச்சு வாங்கலாம். உனக்கு ஓகேயா.” என்று தரகர் போன்செய்ததும் கிளம்பிப்போய்விட்டேன். அங்கிருந்தபடி மாமாவிடம் வண்டி விஷயத்தைச் சொன்னேன். “யோசிக்காம வாங்கிரு. ஆனா ஓட்டுறதுக்கு இன்னொரு ஆள் வச்சுக்க சேகரு.” என்றார். எந்தக் காரணத்திற்காகவும் அம்பாசிடரை விற்றுவிடாதே என்பது அதன் அர்த்தம். டவேராவை வீட்டிற்குக் கொண்டுவந்த இரண்டு நாட்களில், மாமாவே ஒருத்தனை அனுப்பிவைத்தார். சோற்றைத் தேடும் ஒருவனின் கண்களில் இருக்கும் ஒளியை அவன் கண்களில் கண்டேன். 

“அண்ணே, என் பேர் லிங்கம். நல்லா வண்டி ஓட்டுவேன். அதைவிட நல்லா சமைப்பேன்.” என்று அவன் சொன்னதும் அவனை வேலைக்கு வைத்துக்கொள்ள முடிவுச்செய்துவிட்டேன். அம்பாஸிடரை மாமாவின் வேலைகளுக்குப் பயன்படுத்திவிட்டு, டவேராவை கல்யாணம், காதுகுத்திற்கு வாடகைக்கு விடலாம் என்று நினைத்திருந்தேன். விசேஷங்களுக்கு வண்டி எடுப்பவர்கள் சிரிப்பும், கும்மாளமுமாய் இருப்பார்கள். அப்போதும் நான் பேசமாட்டேன் என்பதால் பெரும்பாலும் என்னைக் கூப்பிட விரும்பமாட்டார்கள். இப்படி ஒரு ஆளை வேலைக்கு வைத்துக்கொண்டால் நிறையப்பேர் விரும்பி வருவார்கள். ஓட்டுகிற தூரத்தைப் பொருத்து இவ்வளவு என்று சம்பளம் தருவேன் என்று நான் சொல்ல, அதற்கு அவனும் ஒப்புக்கொண்டான்.

அவனுடைய அப்பாவும், அம்மாவும் சமையல்காரர்கள். தங்கச்சி ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். இவன் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வண்டி ஓட்டப்பழகியிருக்கிறான். மாமாவின் வீட்டு விசேஷத்தில் சமையல் செய்யவந்த அவனது அப்பா இவனுக்கு வேலை எதாவது வாங்கித்தரச் சொல்ல, அவர் என்னிடம் அனுப்பி இருக்கிறார். சிரித்துப் பூத்த முகத்தைத் தவிர வேறெதுவும் அவனிடம் காணமுடியாது. ஒருநாள் எங்கள் வீட்டில் திரிந்த நாட்டுக்கோழி ஒன்றை அடித்து வறுத்துத் தந்தான். என் வாழ்நாளில் அப்படி ஒரு சுவையைக் கண்டதில்லை. “நல்லா இருக்குடா.” என்று சொல்லி நூறு ரூபாய் கொடுத்தேன். மறுக்காமல் வாங்கிக்கொண்டான்.

“அண்ணே, உங்களுக்கு எப்ப கறி திங்கணும்னாலும் என்கிட்ட சொல்லுங்கண்ணே. செஞ்சுதாறேன்.” என்றான்.

வேலை இருக்கிறதோ, இல்லையோ காலையில் வீட்டிற்கு வந்து வண்டியைக் கழுவித் துடைத்துவிட்டு அம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பான். எங்கள் வீட்டிலும் பேச்சு சத்தம் கேட்கத் தொடங்கியது. சில சமயம் அம்மாவை சும்மா இருக்கச்சொல்லிவிட்டு அவனே சமைத்துக்கொடுப்பான். சாப்பாட்டில் கைவைக்கும்போதே அது அவன் சமைத்த உணவென்று தெரிந்துவிடும். அவன் எங்கே சவாரி போனாலும் என்னிடம் சொல்லிவிடுவான். ஆனால் நான் எங்கே போகிறேன், வருகிறேன் என்று கேட்கமாட்டான். வருமானம் கூடக்கூட நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

மாதம் ஒருமுறை அம்மாவிற்குத் தெரியாமல் எங்கள் தோட்டத்தில் வைத்து கொஞ்சமாக சரக்கு அருந்திக்கொண்டு கறி தின்பது என் வழக்கம். மதுரைக்குப் போகும்போது ‘ப்ளாக் டாக்’ விஸ்கியை வாங்கிவந்து வைத்துக்கொள்வேன். ஆனால் எங்க ஊர் ஹோட்டலில் தொடுகறி என்றால் குழம்பில் கிடக்கும் கோழி, ஆட்டுக்கறிதான்.  லிங்கம் என்னிடம் வேலைக்குச் சேர்ந்தபிறகுதான்முயல், காடை என்று விதவிதமாக சாப்பிட வாய்த்தது.

வேலையில்லாத ஞாயிற்றுக்கிழமை ஒன்றில் அப்படி ஒரு தீர்த்தவாரிக்குத் தயாரானபோதுதான், இந்தக் கதையின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட செல்பேசி அழைப்பு வந்தது. அன்று எங்கிருந்தோ ஒரு வாத்தைக் கொண்டுவந்திருந்தான் லிங்கம். அவனைச் சமைக்கச் சொல்லிவிட்டு நான் மாமாவைப் பார்க்கப் போனேன்.

IV

“சேகரு, டைவர்ஸ் கேஸ் ஒன்னு நாளைக்கு வருது. பையன்தான் நம்ம கட்சிக்காரன். மெட்ராஸ்ல இருந்து அவன் நாளைக்குக் காலைல வருவான். ரயில்வே ஸ்டேஷன் போய் அவனைக் கூட்டிட்டு வா. ஹோட்டல்ல ரூம் போட்டு அவனை ரெடி பண்ணி பத்து மணிக்கு குடும்பநல கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்துரு. முதல் கேஸா தாக்கல் பண்ணனும். அவன் செல் நம்பரை உனக்கு அனுப்புறேன்.” என்றார்.

“சரி” என்று சொல்லிவிட்டு நான் திரும்பிய பிறகு, “சேகரு, பையன்கூட வேற யாரும் பேசாதமாதிரி பார்த்துக்க.” என்றார். நான் தலையை ஆட்டினேன்.

குடும்பநல கோர்ட் என்றால் இது ஒரு தொந்தரவு. யார் வழக்கு பதிவுசெய்கிறார்களோ அவர்கள்தான் பெட்டிஷன் கொடுக்கணும். நம்பராகி வக்காலத்து போடுகிறவரை வக்கீல் எல்லாம் ஒதுங்கி நிற்க வேண்டியதுதான். ஆனால் ஒருவன் விவாகரத்து வழக்குப் போடப்போகிறான் என்று தெரிந்தால் பெண் வீட்டார் தொந்தரவு அதிகமாக இருக்கும். ஆள் தூக்குவதுவரை போன சிலரை நான் பார்த்திருக்கிறேன். நான் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும்.

மறுநாள் காலையில் எட்டு மணிக்கு ஸ்டேஷன் போய், மாமா தந்த எண்ணிற்கு அழைத்தேன். பிஸி என்று வந்தது. சற்று நேரத்தில் அந்த எண்ணிலிருந்து வந்த அழைப்பை ஏற்றதும், “சேகர் அண்ணனா?” என்று கேட்டது மறுமுனை. மாமா என் நம்பரைக் கொடுத்திருப்பார்போல.

“அர்ஜுனா? இப்போ வண்டி எங்கே வருது தம்பி?”

“காரப்பள்ளம் தாண்டிருக்குண்ணே. பத்து நிமிஷத்தில் அங்க வந்துரும்.”

“ஸ்டேஷன் வெளில ஒரு அம்பாஸிடர் நிற்கும். அங்கே வந்துருங்க தம்பி.”

“சரிண்ணே.”

முதுகில் தொங்கிய கறுப்புநிறப் பையைக் கழட்டாமலே வண்டியில் ஏறிக்கொண்டான். ஒல்லியாய், சிகப்பாய் இருந்த அவனுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். வண்டியின் பின்புற இருக்கையில் அமர்ந்த அடுத்த நொடி போனை நோண்டத்தொடங்கிவிட்டான். நான் அவனை எஸ்.எல்.எஸ் லாட்ஜில் தங்கவைத்தேன். அவன் குளித்துவிட்டு வருவதற்குள் கீழே இருந்த ஹோட்டலில் இருந்து இட்லியும், பூரியும் கொண்டுவரச்சொன்னேன்.

ஒன்பதரைக்குக் கோர்ட்டிற்குள் இருந்தோம். மாமாவே வந்திருந்தார். பொதுவாக இதுபோன்ற கேஸ்களுக்கு ஜூனியரைத்தான் அனுப்புவார். அவர் அவனிடம் நிறைய பேப்பர்களில் கையெழுத்துகளை வாங்கிக்கொண்டார். பிறகு அவற்றை கெட்டியான மஞ்சள் தாளுக்குள் வைத்து, சிவப்பு நூலால் கட்டினார். அதை என் கையில் கொடுத்து, “தம்பி உள்ள போகும்போது கையில் கொடுத்துவிடு. செஷன்ஸ்ல ஒரு கேஸ் இன்னைக்கு வாய்தா வருது. அதுக்கு நான் போறேன். மத்தியானம் நம்பர் ஆனதும் தம்பிய மதுரைல கொண்டுபோய் பஸ்ல ஏத்திவிட்டுடு.” என்று சொன்ன அவர், அர்ஜுன் பக்கம் திரும்பி, “ஒன்னும் யோசிக்கவேண்டாம்பா. கேஸை முடிச்சுடலாம். வாய்தாவுக்கு மட்டும் தவறாம ஆஜராகிரு. நீ இங்க வரும்போது சேகர் உங்க கூடவே இருப்பான்.” என்றார்.

நாங்கள் காரிலேயே காத்திருக்கத் தொடங்கினோம். பூஜை எல்லாம் முடித்து ஜட்ஜம்மா அவர்கள் வரும்போதுதான் கோர்ட் ஆரம்பிக்கும். அன்றைக்கு ஜட்ஜம்மா வந்து அமர்ந்தபோது மணி பதினொன்று. எல்லோரும் எழுந்து வணக்கம் வைத்தார்கள். செல்பேசியை சைலன்ட்டில் போட்டுவிட்டு அர்ஜுன் வரிசையில் நின்றுகொண்டிருந்தான். உள்ளே அமர்ந்திருந்த மாமாவின் ஜூனியர் அவனைப் பார்த்து கைகாட்டினார்.

“புது மனு கொடுக்கிறவங்க வாங்க.”

மனுவை அவன் கையில் திணித்து உள்ளே அனுப்பினேன். சாட்சிக்கூண்டிற்கு அருகில் நின்றுகொண்டு மனுவை எழுத்தரிடம் கொடுத்தான். அதை அவர் நீதிபதியிடம் கொடுத்தபோது அவரது அவயங்கள் அனைத்தும் குனிந்து நிமிர்ந்தன. இடதுகையில் அதை வாங்கிய நீதிபதி கட்டிற்குள் இருந்த மனுவை உருவி எடுத்தார். அட்டையும், நூலும் அப்படியே இருந்தன. கட்டின்மேல் எழுதியிருந்ததைப் படித்தார்.

‘நல்லன்ட் வாய்டா’ என்று முணுமுணுத்தார்.

“யார் உங்க லாயர்?” என்றதும், முன்னால் இருந்த பெஞ்சில் இருந்து மாமாவின் ஜூனியர் எழுந்துவந்தார்.

கும்பிட்டார். “வணக்கம்மா. மாணிக்கம் லா ஹௌஸ். சீனியர், செஷன்ஸ்ல ஆர்க்யூமெண்ட்டுக்குப் போயிருக்கார்.”

ஜட்ஜம்மா தலையை லேசாக அசைத்துக்கொண்டு, ‘ம்’ என்றபடி, அட்டையின்மீது ஏதோ கிறுக்கினார். “ரெண்டு மணிக்கு சேம்பர்ல வந்து பாருங்க.” என்று சொல்லிவிட்டு கட்டை ஓரமாக வைத்தார்.

ஜூனியர் முதுகைக் காட்டாமல் ரெண்டடி பின்நகர்ந்து, அர்ஜுனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

“தம்பி, அம்மா மதியம் வந்து பார்க்கச்சொல்றாங்க. காத்திருங்க. நம்பராயிரும். பயப்பட வேண்டாம்.”

இருவரும் காருக்குத் திரும்பினோம். அவன் அமர்ந்தபடியே உறங்கிவிட்டான். சரியாக இரண்டு மணிக்கு நீதிபதிஅறைக்குப் போனோம். எங்கள் இருவரையும் வெளியே நிறுத்திவிட்டு ஜூனியர் மட்டும் உள்ளே போனார்.

“கேஸை படிச்சேன். போட்டோ, பத்திரிக்கை எல்லாம் இருக்கு. ஆனால் மெடிகல் சர்ட்டிபிகேட் இல்லையே?”

“ஆப்போசிட் பார்ட்டி நாட் கோவாப்பரேடட்ம்மா.”

“ஹை கோர்ட்ல இருந்து, நல்லன்ட் வாய்ட் போடுறதுக்கு நிறைய கண்டிஷன் வச்சுக்கச்சொல்றாங்க. உங்க சீனியர்கிட்ட பேசிட்டு சொல்றேன். அப்புறம் நம்பர் பண்றதா இல்லையானு முடிவுபண்ணலாம்.”

“சரிம்மா.” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.

மூன்றுபேரும் வரண்டாவின் மறுமுனையில் நின்றுகொண்டிருந்தோம். சற்றுநேரத்தில் எங்களை அழைத்தார்கள். அவனுடன் ஜூனியரும் உள்ளே நுழைய, அர்ஜுனை மட்டும் இருக்கச்சொல்லிவிட்டு வக்கீலை வெளியே அனுப்பிவிட்டார்கள். கதவு சாத்தப்பட்டுவிட்டது. ஐந்து நிமிடத்தில் அவன் வெளியே வர ஜூனியர் வக்கீல் உள்ளே போனார். இம்முறை கதவு திறந்தே இருந்தது.

“சின்னப்பையனா இருக்கான்.” என்றபோது வார்த்தையில் இரக்கம் கசிவதைக் கண்டேன்.

“ஆமாம்மா. வாழவேயில்லை.”

“நம்பர் பண்ணிக்கோங்க.”

ஜட்ஜம்மாவின் சொற்களும், ஜூனியர் லாயர் கிளார்க்கிற்கு வழங்கிய ரூபாய் ஐநூறு அன்பளிப்பும் வழக்கு எண்: 13/2019 – அர்ஜுன் எதிர் மானஸா என்ற ஆவணத்தை உருவாக்கின. நான் அர்ஜுனை மதுரையில் பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டிற்கு வந்தேன்.

பதினைந்து நாட்கள் கழித்து அடுத்த வாய்தாவிற்கு அர்ஜுன் வருவதுவரை அவன் ஞாபகமே எனக்கு வரவில்லை. முதல் நாள் அவன் போன் செய்ததும், “சரி தம்பி. அதே அம்பாஸிடர்ல ஸ்டேஷன் வந்துவிடுகிறேன்.” என்றேன்.அதே ரயில், அதே ஹோட்டல், அதே சாப்பாடு, பதினோரு மணிக்கு ஜட்ஜம்மா வந்து அமர்ந்த பத்தாவது நிமிடம் வழக்கு எண்: 13/2019 – அர்ஜுன் எதிர் மானஸா என்று அழைத்தார்கள். அர்ஜுன் உள்ளே சென்று கூண்டின் அருகே நின்றான்.ஜூனியர் ஒரு காகிதத்தை டைப்பிஸ்டிடம் கொடுத்தார்.

“வக்காலத்தும்மா”

அதை வாங்கிப் பார்த்த ஜட்ஜ், “ஜூலை பத்தாம் தேதி வாய்தா” என்றதும் அர்ஜுன் வெளியே வந்தான்.

இன்னும் ஒரு வாரம் இருந்தது. அடுத்த வாரமும் அதே கதைதான்.மூன்றாம் வாரம் அவன் வரவில்லை. ஆனாலும் நான் கோர்ட்டிற்குப் போனேன். அர்ஜுனுடைய பெயர் அழைக்கப்பட்டதும், ஜூனியர் லாயர் எழுந்து முன்னே சென்று, ஓருவகையான வளைந்த வணக்கம் வைத்தார். பிறகு, “எங்க கட்சிக்காரருக்கு உடம்பு சரியில்லை. அதனால் வேறொரு நாள் வாய்தா வேண்டும் யுவர் ஹானர்.” என்றார்.

“வழக்கை தாக்கல் பண்ணிட்டு எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வராம இருக்கிறது சரியில்லை. அடுத்த வாரம் வியாழன் அன்னைக்கு வாய்தா தர்றேன். அன்னைக்குக் கண்டிப்பா ஆஜராகணும்.” என்று கோபமாகச் சொன்னார் ஜட்ஜம்மா.

அதைத் தலையாட்டி ஏற்றுக்கொண்ட ஜூனியர் வெளியே வந்து அர்ஜுனுக்கு போன் செய்தார்.

“தம்பி, இன்னைக்கு தாறுமாறா ஜட்ஜம்மா திட்டிட்டாங்கப்பா. அடுத்த வாரம் வியாழக்கிழமை வாய்தா. வந்துரு. வரும்போது என்னையும் கொஞ்சம் கவனிப்பா.” என்று ஒரு அசட்டு சிரிப்புடன் முடித்துக்கொண்டார். நான் அவரைக் காணாததுபோல் விலகிச்சென்றுவிட்டேன்.

அடுத்தமுறை அவன் வந்தபோது, கோர்ட்டில் கூட்டம் அதிகமாக இருந்தது. “மகிளா கோர்ட்டையும் அம்மாதான் பார்க்கிறாங்க. அதுதான் கூட்டம். இன்னைக்கு விசாரணைக்கு அப்புறந்தான், வாய்தா வழக்கு எல்லாம். ஆனால், இங்கேயே நில்லுங்க” என்று சொன்னார் ஜூனியர் வக்கீல்.

நீதிமன்றத்தை ஒட்டிய ஜட்ஜ் ரூமிற்கு முன்னால் திரை தொங்கியது. இன்னும் ஜட்ஜம்மா வந்திருக்கவில்லை. அர்ஜுன் ஒரு தூணிற்கு அருகில் நின்றுகொண்டு மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான்.

“ஏம்பா! அறிவில்ல. காலை கீழே வைப்பா. இங்க நிக்காத. அங்கிட்டுப் போ” என்று கட்டளைக்காரர்கத்துவது கேட்டது. அர்ஜுனைத்தான் அவர் திட்டிக்கொண்டிருந்தார். அவன் தூணில் ஒரு காலை மடக்கி வைத்துக்கொண்டு சாய்ந்து நின்றிருக்கிறான். நீதிபதி அறைக்கு முன் அப்படி ஒரு அதிகப்பிரசங்கித்தனத்தைச் செய்வதை அவர் எப்படிப் பொறுத்துக்கொள்வார்? ஆள் இல்லாவிட்டாலும் தோள் தாளவேண்டும் என்பது இங்கு எழுதப்படாத விதிகளில் முக்கியமான விதி.வீட்டுக்காரன் அமைதியாக இருந்தாலும், நாய் குரைக்க வேண்டும். அது நாயின் தலைவிதி. எஜமான் இல்லாதபோது நாம்தான் எஜமான் என்று நினைக்கும் நாய், முதலாளி வந்ததும், தான் ஒரு நாய்தான், நாய் மட்டும்தான் என்ற நிலைக்கு இறங்கி வாலாட்டும். நாயுலக விதிகள் விசித்திரமானவை.

பலர் முன்னால் யார் என்று அறியாத ஒருவரிடம் திட்டுவாங்கிய அதிர்ச்சி அர்ஜுன் முகத்தில் இருந்தது. மெதுவாக நகர்ந்து கூட்டத்தில் ஒருவனாக நின்றுகொண்டான்.

அன்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. நடுத்தர வயது தம்பதிகள்.

“மாத மெயிண்டனன்ஸ் பணம் குடுக்கலையாமே? குடுக்கிறீங்களா இல்ல நடவடிக்கை எடுக்கச்சொல்லவா?” என்று அந்த ஆளைப்பார்த்துக் கேட்டார் ஜட்ஜம்மா.

“அம்மா. இவ நடவடிக்கை சரியில்லைன்னுதான் கல்யாணமாகி இருபது வருஷம் கழிச்சு டைவர்ஸ் கேஸ் போட்டுருக்கேன். என் பொண்ணுக்குப் பதினாறு வயசு ஆகுது. இவகூட இருந்தா அது வாழ்க்கை கேட்டுப்போயிரும். தயவுசெய்து என் பொண்ணை என்கூட அனுப்பச்சொல்லுங்கம்மா. நான் மாசம் தவறாம இவளுக்குக் காசு தந்திடுறேன்.” என்றார் அந்த நபர்.

அவரது மனைவியின் முகத்தில் அலட்சியமும், வெறுப்பும் சேர்ந்திருந்தன.

“என்னம்மா, பொண்ண அவர்கூட அனுப்ப உனக்குச் சம்மதமா?”

“இல்லம்மா. இவர்கூட அனுப்ப முடியாது.”

“ஏன்?”

“அந்தப்பொண்ணு இவருக்குப் பிறக்கல. அதுனாலதாம்மா.”

இதைக்கேட்டுவெடித்து அழத்தொடங்கிய அந்த ஆள் அருகில் இருந்த கூண்டில் தலையை முட்டிக்கொண்டார்.

“அடுத்த பதினைந்தாம் தேதி வாய்தா. அன்னைக்கு வந்து கடைசி முடிவு என்னனு சொல்லுங்க. அதுக்கு முன்னாடி கவுன்சிலிங் போட்டிருக்கேன். பேசுங்க முதல்ல.” என்று சொன்ன ஜட்ஜம்மா அந்த ஆளின் பக்கம் திரும்பி, “கவுன்சிலிங் அன்னைக்கு மெயிண்டனன்ஸ் பணம் கொடுத்துடணும். என்ன?” என்றார். அவர் மௌனமாகத் தலையை அசைத்தார். அவர்கள்இருவரும் கூட்டத்தின் நடுவே நடந்து வெளியேறியபோது அங்கிருந்தவர்கள், அந்தப் பெண்ணைப் பார்த்து “பிள்ளைய அப்பங்கிட்ட அனுப்பமாட்டாளாம். அவன் காசு மட்டும் வேணுமாம். தேவுடியா முண்ட.” என்று முணுமுணுப்பது எனக்குக் கேட்டது.

அர்ஜுன் தன் பெயர் அழைக்கப்பட்டதும், உள்ளே சென்றான்.

“எதிர் மனுதாரர்கிட்ட இருந்து ஏதாவது ரெஸ்பான்ஸ் இருக்கா?” என்று வக்கீலிடம் கேட்டார் ஜட்ஜ்.

“இல்லை. யுவர் ஹானர். கோர்ட்டில இருந்து காண்டாக்ட் செய்தும்கூட ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல.” என்று ஜூனியர் சொன்னார்.

“சரி. நல்லன்ட் வாய்ட்ல எதிர்மனுதாரருக்கு அதிகபட்ச வாய்ப்பு கொடுக்கணும். இன்னும் கொஞ்ச நாள் பார்ப்போம்.” என்று சொல்லிவிட்டு வாய்தா தேதியை ரெண்டுவாரம் தள்ளி ஒதுக்கினார்.

நல்லன்ட் வாய்ட் என்ற வார்த்தை இப்போது பழகிவிட்டது. திருமணம் செல்லாது என்று அறிவிக்கக்கோருவதையே அப்படிச் சொல்கிறார்கள் என்று விசாரித்துத் தெரிந்துகொண்டேன். பார்ப்பதற்கு டைவர்ஸ் போல் தெரிந்தாலும், இது வேறொன்று. நடந்தது திருமணமே இல்லை என்று சொல்வது.

மறுமுறை அவன் வந்தபோது எட்டரைக்கெல்லாம் கோர்ட்டிற்குப் போய்விட வேண்டும் என்று சொன்னான். நானும் அவனும் கோர்ட்டிற்குப் போனபோது, அங்கே ஒருவரும் இல்லை.

“அர்ஜுன், எதுக்குப்பா இவ்வளவு சீக்கிரம் வந்த?” என்று நான் கேட்க, “அண்ணே, தெரிஞ்ச பொண்ணு ஒன்னை இங்க வரச்சொல்லிருக்கேன். இதை யாருகிட்டயும் சொல்லிறாதீங்கண்ணே.”

“உன்னைய யாரும் தட்டிறக்கூடாதுனுதான் கூடவே இருக்கேன். சாருக்குத் தெரிஞ்சா சிக்கலாயிரும்.” என்றேன்.

“இல்லண்ணே இது என்கூடப் படிச்சஃப்ரெண்ட்தான்.” என்று அவன் சொல்லிக்கொண்டிருந்தபோது, சிகப்பு நிற ஸ்கூட்டியில் ஒரு பெண் வந்தாள். பெண் அல்ல தேவதை என்றுதான் சொல்ல வேண்டும். இவன் அவளிடம் போய் ஏதோ பேசினான். பிறகு கோர்ட்டின் பின்பக்கம் இருக்கும் இடிந்துபோன மாடிப்படியில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். இன்னும் வழக்கு முடியவில்லை அதற்குள் இன்னொருத்தியை, அதுவும் பேரழகியை எப்படி உஷார் செய்தான் என்று தெரியவில்லை.

ஆட்கள் வரத்தொடங்கியதும், அந்தப்பெண் கிளம்பிப் போய்விட்டாள். அவளுடைய சுருண்ட முடியும், நடையில் இருந்த நளினமும் என்னை ஏதோ செய்தன. அன்று மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு இருப்பதால் ஜட்ஜம்மா வரவில்லை. வாய்தாவிற்கு வந்திருந்த ஆட்களின் பெயரை ஒவ்வொன்றாக அழைத்த நீதிமன்ற எழுத்தர் அடுத்தவாரத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியைச்சொல்லி அன்று வருமாறு கூறினார்.

அர்ஜுனை மதுரையில் பஸ் ஏற்றிவிட்டு, சரக்கு வாங்குவதற்கு நேரே பர்மா பஜார் போனேன். சேட் என்ற ஒருவர் அங்கே எனக்குப் பழக்கம். நான் போனதும், “சேகர், போடோ ஒயின் வந்திருக்கு. எடுத்துக்கிறியா?” என்றார்.

“அய்யய்ய. ஒயின்லாம் வேணாம் சேட்டு. அதெல்லாம் நமக்குச் சரிப்படாது.”

“கொஞ்சமா குடிக்கிற ஆள் நீனு தெரியும். இதை ஒருமுறை சாப்பிட்டு பாரு. பிடிக்கலைனா எடுத்துட்டு வா. நான் திரும்ப வாங்கிக்கிறேன்.” என்று சொல்லி கையில் ஒரு பெரிய பாலிதீன் பையைத் திணித்தார். அவர் கேட்ட மூன்றாயிரத்து ஐநூறு ரூபாயைபேரம்பேசாமல் நான் கொடுத்துவிட்டேன்.

மதுரைக்கு வெளியில் வந்ததும் ரிங் ரோடில் வைத்து பையைத்  திறந்து பார்த்தேன். ஆறுபக்கமும் மூடப்பட்டிருந்த அந்த அட்டைப்பெட்டியின்மேல் Bordeaux என்று அச்சிடப்பட்டிருந்தது. அதில் இருந்த எழுத்துகள் இங்கிலிஷ் போல இருந்தாலும்அவற்றை வாசிக்க முடியவில்லை. இறுதியாக அதில் Made in France என்று இருப்பதைக் கண்டேன். அதன் கீழ் பகுதியில் வட்டமாக கிழிப்பதற்காக கத்திரி படம் போட்டிருந்தது. அதைக் கிழித்ததும் உள்ளே இருந்து குழாய் ஒன்று வெளியே எட்டிப்பார்த்தது.அதன் முனையை அழுத்தினால் உள்ளே இருந்து ஒயின் வரும். இப்படி ஒரு செட்டப்பை இதுவரை நான் கண்டதில்லை.

வீட்டிற்கு வந்து இரவு சாப்பிட்டதும், என்னுடைய அறைக்குள்போய் கால் டம்ளர் ஒயினை மட்டும் குடித்துப்பார்த்தேன். தொண்டையின் உள்ளே எரிச்சலுடன் இறங்கி வயிறைத் தொட்டது. சற்றுநேரத்தில் எரிச்சல் அடங்கி உடலில் ஒருவகை மதர்ப்பு ஏற்பட்டது. பத்து நிமிடம் கடந்தபோது காற்றில் மிதக்கத் தொடங்கினேன். என்னை யாரோ தாலாட்டுவதுபோல் உணர்ந்தேன். படுகையில் சாய்ந்திருக்கிறேனா, இல்லை யாரோ ஒருவரின் மடியில் படுத்திருக்கிறேனா என்று சந்தேகம் வந்தது. அப்படியே தூங்கிப்போனேன்.

பெண் ஒருத்திநிர்வாணமாய் குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கிறாள். அவளது யோனியை என்னால் பார்க்கமுடிகிறது. ஆனால் நான் அவளது முகத்தைக் காண விரும்பி நிமிர்ந்து பார்க்கிறேன். திரண்ட முலைகள் இரண்டிலும் இதோ தளும்பிவிடும் என்ற அளவில் அமுது நிறைந்துள்ளது. பசியாறியகுழந்தை வாயை எடுத்தபிறகு ஊறித்துளிர்க்கும் ஒரு துளி பாலை அக்காம்புகளில் கண்டேன். அதற்கும்மேல் என் பார்வையை உயர்த்தியபோது, அங்கே தலைக்குப் பதிலாக பல நிறங்களில் பூக்கள் மலர்ந்திருக்கின்றன. நான் மறுபடி அவளது யோனியைக் காணவிரும்பி தலைதாழ்த்துகிறேன். யோனியின் மேல்பகுதியில் பச்சைநிறக் காம்பு வளர்ந்து அதன் முனையில் ஒரு பூ மொட்டு விட்டிருக்கிறது. சற்றே பெரிய மல்லிகை மொட்டு.பாம்பின் வாலைப்போல் காட்சிதரும் அந்தப் பெண்ணின் கால்கள் இரண்டும் ஒன்றோடொன்று பிணைந்து அந்த மலரை அவ்வப்போது தழுவிச்செல்கின்றன. உடனே வெற்றிலைப்பூவின் மணம் என் மூச்சை நிறைக்கிறது. நான் மீண்டும் அந்தப் பெண்ணின் முகத்தைக் காண நிமிர்கிறேன். ஆனால் என் கண்களால் முலைகளைக் கடந்து மேலேபார்க்கவே முடியவில்லை. மல்லிகை மொட்டுவிட்ட யோனியே பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கிறது. நான் என்னை ஒரு சிற்றெறும்பைப்போல் உணர்கிறேன். பளபளப்பான பாம்பின் வால்கள் என்னைத் தழுவிக்கொள்ள வருகின்றன. கனவிலிருந்து விடுபட்டு எழுந்தபோது தலை பாரமாய் இருந்தது. மறுபடி தூங்கிவிட்டேன்.

அடுத்த வாய்தாவிற்கு அர்ஜுன் வந்தபோது, “அண்ணே, இன்னைக்கும் அந்தப் பொண்ணு வருவாள். அதனால…” என்று ஆரம்பித்தான்.

“தம்பி, இந்த விஷயம் லாயர் சாருக்கு தெரிஞ்சா உனக்கு மட்டும் இல்ல, எனக்கும் பிரச்சினை.”

“இல்லண்ணே. அந்தப்பொண்ணால எந்தப் பிரச்சினையும் வராது.”

“டைவர்ஸ் வாங்குற வரை கொஞ்சம் கவனமா இரு. அப்புறம் நீ என்னவேணா பண்ணு.”

“எனக்காக ரொம்ப தூரத்தில் இருந்து வருது. அதனால வேற எங்கையாவது வச்சு பார்க்கலாமாண்ணே?”

அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. “சரி. காலேஜ் கிரௌண்ட் பக்கம் இப்போ ஆள் இருக்காது. அந்தப் பொண்ண அங்கே வரச்சொல்.”

அன்று அவர்கள் காலேஜ் கிரௌண்ட் அருகில் இருக்கும் இடிந்த கட்டிடத்தில் சந்தித்தபோது, நான் வண்டியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் ஏதோ சொன்னதும், அவள் அழத்தொடங்கினாள். அன்றும் வாய்தாதான் கொடுத்தார்கள்.

அன்றிரவு நான் ஒயின் குடித்தபிறகு, அதே கனவு மீண்டும் வந்தது. ஆனால் இம்முறை அவளது மலர்கொண்ட தலையை ஒருமுறைகூட என்னால் காண இயலவில்லை. மலராத மல்லிகைமொட்டு கொண்ட பிரம்மாண்ட யோனியும், பாம்பு வால் கால்களும் தவிர இம்முறை அந்த உருவத்தில் ஒரு நளினம் தென்படுவதைக் கண்டேன். அர்ஜுனைக் காணவரும் பெண்ணின் உடலில் இருக்கும் அதே நளினம். நான் அந்த நளினத்தை முழுமையாக உணர முயலும்போது ‘லஜ்ஜாவதியே’ என்று என் மொபைல் போன் ஒலிக்க நான் விழித்துக்கொண்டேன். என் உடல் உள்ளே வெப்பத்தால் தகிப்பதுபோலவும், வெளியே குளிர்ந்து விறைப்பதுபோலவும் எனக்குத் தோன்றியது.

அடிக்கடி வெட்டுக்காளி கோயிலுக்குப் போக ஆரம்பித்தேன்.அங்கே வெட்டப்படும் கோழிகளின் ரத்தம் என்னை இந்தக் கனவிலிருந்து விடுவித்துக்கொள்ள உதவும் என்று நினைத்தேன். மறுமுறை அவன் வரும்போது அவள் பெயர் என்னவென்று அவனிடம் கேட்கலாமா என்றுகூட யோசித்தேன். ஆனால், எழுதப்படாத விதிகளை மீறவே கூடாது என்ற உள்ளுணர்வால் என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டேன். செப்டம்பர் முதல் வாரம் அவன் வந்தபோது, அவர்கள் இருவரையும் மாறநூத்து கண்மாய்க்கு அழைத்துப்போனேன். காருக்குள் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க நான் அங்கிருந்த மடைமீது ஏறி காய்ந்துபாளம்பாளமாய் வெடித்துக்கிடந்த கண்மாயை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நான் திரும்பி வந்தபோது, அவர்கள் முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். அவள் அவனை இறுக்கி அணைத்திருக்க அவனது கைகள் அவளைத் தொடவேயில்லை. அன்றிரவு மீண்டும் எனக்கு அந்தக் கனவு வந்தது.

நான் முகத்தைத் தேடும்போது பேருருவம் எடுத்த யோனியில் இருந்து உதிரம் கசிந்தது. ஊற்றெடுத்த உதிரத்தில் நான் மூழ்க ஆரம்பித்தபோது வெகு உயரத்தில் மல்லிகைமொட்டு தெரிந்தது. அதன்மேல் உதிரத்தின் சுவடுகள் ஏதுமில்லை. சூடான ரத்தம் என் நாசியைத் தொட்ட நொடியில் விழித்துக்கொண்டேன். அன்றோடு நான் ஒயின் குடிப்பதை நிறுத்திவிட்டேன். அதன்பிறகு கனவுகள் வருவதில்லை.

அதன்பிறகு, வாய்தாக்கள், காத்திருப்புகள், அவர்களின் ரகசிய சந்திப்புகள் என்று வாரங்கள் ஓடின. அக்டோபர் மாதம்நான்காவது வாரம் வாய்தா வந்தபோது, அவள் அவனைச் சந்திக்க வரவில்லை. அன்று கோர்ட் நடந்துகொண்டிருக்கும்போதே ஜட்ஜம்மா எழுந்து அவரது அறைக்கு போனார். சற்று நேரத்தில் மாமா, அர்ஜுன், எழுத்தர், தட்டச்சர் ஆகியோர் நீதிபதி அறைக்குள் நுழைய கதவு சாத்தப்பட்டது. அரைமணிநேரம் கழித்து அவர்கள் வெளியேறியதும், நீதிமன்றம் மதியத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி அறையின் திரைகள் சற்றே விலகி அசைந்தபோது, ஜட்ஜம்மா தன் அங்கியைக் கழற்றி வைப்பது தெரிந்தது.

“அடுத்த வாரம் தீர்ப்பு. நமக்கு சாதகமாகத்தான் வரும். தீர்ப்பு கொடுக்கும்போது நீ இருக்கவேண்டியதில்ல. அதனால வரவேண்டாம். கூடிய சீக்கிரம் வேறொரு பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்க. நான் அப்பாகிட்ட பேசுறேன். இதை ஒரு கனவா நெனைச்சு மறந்துறணும். என்ன?” என்று மாமா அர்ஜுனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

“சரி சார்.” என்று தலையாட்டினான்.

அந்த வாரம் வெள்ளிக்கிழமை மாமா என்னை அழைத்து முப்பதாயிரம் ரூபாய் கொடுத்தார். எந்தச் சவாலும் சிக்கலும் இல்லாத ஒரு வேலைக்கு இவ்வளவு பணம் கிடைக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை. எனக்குப் பணம் கொடுக்கப்பட்டால் எனக்கான வேலை முடிந்துவிட்டது என்று அர்த்தம். இனி இந்த வழக்கை நான் மறந்துவிடவேண்டும். ஆனால் இதுவரை இல்லாத வழக்கமாக தீர்ப்பு வெளியான புதன்கிழமை காலையில் நான் கோர்ட்டில் இருந்தேன். என்னை இங்குமாமா பார்த்துவிட்டால் ஏதாவது தவறாக நினைத்துக்கொள்வார். இருந்தாலும் இந்த கேஸ் எப்படி முடியப்போகிறது என்று பார்க்கும் ஆவல் என்னை அங்கே கொண்டுவந்து நிறுத்தியிருந்தது. நல்லவேளை மாமாவிற்குப் பதிலாக கோர்ட்டிற்குள் அவரது ஜூனியர்தான் இருந்தார்.  தீர்ப்பைத் தெளிவாகக் கேட்பதற்காகக் கதவின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன்.

வழக்கு எண் உள்ளிட்ட விபரங்கள், இதர தகவல்கள் சொல்லப்பட்ட பிறகுஇந்த வழக்கில் போதுமான நேரம் வழங்கியும், எதிர்மனுதாரர் ஆஜராகவில்லை என்பதால் ஒருதலையாக இந்தத் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்று அறிவித்தார்கள்.

“மனுதாரர் அர்ஜுன் – எதிர்மனுதாரர் மானஸா ஆகிய இருவருக்கும் கடந்த மே மாதம் பதினேழாம் தேதி பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு, உறவினர் முன்னிலையில் திருக்குடி சிவன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து கணவன் மனைவி இருவரும் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். மனுதாரர் இந்த நீதிமன்றத்திற்கு அளித்த வேண்டுகோளின்படி, தொடக்கம் முதலே எதிர்மனுதாரர் உடலுறவு உள்ளிட்ட விஷயங்களில் ஆர்வமின்றி இருந்துள்ளார். மற்றபடி, உணவு சமைப்பது, உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றுவருவது போன்ற ஏனைய விஷயங்களில் அவர் மகிழ்ச்சியாகவே இருந்துவந்துள்ளார். மனுதாரர் தனக்கிருக்கும்உணர்வுகளைத்தொடர்ச்சியாக எதிர்மனுதாரரிடம் வெளிப்படுத்தி வந்துள்ளார். தொடர் புறக்கணிப்புகளின் முடிவில் ஜூன் ஏழாம் தேதி வீட்டில் தனித்திருந்த சமயத்தில் மனுதாரர், எதிர்மனுதாரரை உடலுறவிற்கு வற்புறுத்தியதாகத் தெரிகிறது. அந்தச் சூழலில் எதிர்மனுதாரரின் உடை கிழிந்துவிட அவரது அந்தரங்க உறுப்புகளை மனுதாரர் பார்க்க நேர்ந்துள்ளது. அப்போது பெண்ணாகக் கருதப்பட்ட எதிர்மனுதாரரின் உடலில் சற்றே வளர்ந்த ஆண் உறுப்பும் இருப்பதை மனுதாரர் கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது பெற்றோரிடமும், எதிர்மனுதாரரின் பெற்றோரிடமும் இந்த விஷயத்தைப்பற்றித் தெரிவித்துள்ளார்.” என்று வாசித்துக்கொண்டிருக்க நான் வெளியே வந்துவிட்டேன்.

‘இந்த விஷயத்தால்தான் பெண் வீட்டார் கோர்ட்டில் ஆஜராகவே இல்லைபோல. எப்படியெல்லாம் ஒருத்தனை ஏமாற்றியிருக்கிறார்கள்.’ என்று எனக்குத் தோன்றியது.

அந்த ஞாயிற்றுக்கிழமைஎங்கள் தோட்டத்தில் அமர்ந்து நானும் லிங்கமும் பேசிக்கொண்டிருந்தோம். அவன் குருவிக்காரர்களைப் பிடித்து பழந்திண்ணி வவ்வால் ஒன்றைக் கொண்டுவந்திருந்தான். உயிரோடு அது சாக்கிற்குள் கிடந்தது. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“டேய், வவ்வால எல்லாம் சாப்பிடலாமாடா?”

“அண்ணே, வவ்வாக்கறி உடம்பிற்கு நல்லதுண்ணே. ஆடுங்கோழியுந்தான் ருசியா? சமயத்துக்கு வெவ்வேற கறிய ருசிபார்க்கணும். வவ்வால் கறி அப்படியே முயல்கறி மாதிரி இருக்கும். ஒருமுறை சாப்பிட்டுப் பாருங்க. ருசி கண்டுட்டா அப்புறம் வாராவாராம் கேட்பீங்க. ஆனால், ஒரு விஷயம். இதை உரிக்கும்போது மேல்தோல் கறில பட்டுடக்கூடாது. பட்டுச்சு நாறித்தொலையும்.”

என்னிடம் மிச்சம் இருந்த ஒயினை அன்று நான் கொண்டுவந்திருந்தேன். கிளாஸ் எடுத்து ஒயினை ஊற்றியபோது அர்ஜுன் போன் செய்தான்.

“அண்ணே,நல்லா இருக்கீங்களா?”

“நல்லாருக்கேன் தம்பி.”

“கேஸ் நடக்கும்போது என்கூடவே இருந்து பார்த்துக்கிட்டதுக்கு நன்றிண்ணே. அம்மா, அப்பாவெல்லாம் ரொம்ப பயந்தாங்க. நாங்க மெட்ராஸ்ல இருக்கோம். நீ தனியா போய் என்ன செய்வியோனு எல்லாம் புலம்பினாங்க. நீங்க இல்லைனா என்ன நடந்திருக்கும்னு தெரியலண்ணே.” என்றான்.

“நான் என்ன தம்பி செஞ்சேன். மாமா சொன்னார். சின்னப்பையனா வேற இருந்த, சரி இதுல நாம இவன்கூட நிக்கணும்னு தோனுச்சு. அவ்வளவுதான். ஆனா, உன் கேஸ் ரொம்பக் கொடுமைப்பா. இதையெல்லாம் எப்படித்தான் தாங்குனியோ தெரியல.”

“ஆமாண்ணே. எல்லாம் தலை எழுத்து.”

ஒயினை கொஞ்சம் கொஞ்சமாக அருந்திக்கொண்டே நான் அவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, லிங்கம் சற்றுத் தள்ளியிருந்த புதருக்குள் போய் வவ்வாலை உரிக்கத் தொடங்கிவிட்டான்.

“அர்ஜுன், வாழ்க்கைல சில சமயம் அப்படித்தான். புடிக்காத விஷயம் நடந்தா முழுங்கிச்செமிச்சுத் தூக்கிப்போட்டுட்டுப் போகணும்.வாந்தி எடுத்து அதை மோந்துபார்த்துக்கிட்டு இருக்கக்கூடாது. உனக்கு என்ன குறை? சட்டுப்புட்டுனுஒரு கல்யாணத்த பண்ணிக்க.” என்றேன்.

“ஏன்ணே, எல்லா விஷயம் தெரிஞ்ச நீங்களே இப்படிப் பேசலாமா. இருபது நாள் நான் ஒரு அலியோட குடும்பம் நடத்திட்டேன்னு சொல்லி இனி எவனும் பொண்ணு குடுக்கமாட்டானுகண்ணே.”

அப்போது லிங்கம் வவ்வாலை உரித்து எடுத்துக்கொண்டு என்னை நோக்கி வந்துகொண்டிருந்தான். ஒயின் என் பேச்சில் லேசான தடுமாற்றத்தை உருவாக்குவதை உணர்ந்தேன்.

“நீதான் தேவதை மாதிரி ஒரு பிள்ளைய ஏற்கனவே ரெடி பண்ணிட்டியே. அவளையே கல்யாணம் பண்ணிக்க” என்றபோது, முழுநிதானத்தையும் இழந்து,எனக்கு விதிக்கப்பட்டமாயக்கோட்டைக் கடந்திருந்தேன். அதை உணர்ந்து, சமாளிப்பான சொற்களை என் மந்த மூளைக்குள் நான் தேடிக்கொண்டிருந்தபோதுஅவன், “அவளைத்தான்புதன்கிழமைஅன்னைக்கு எல்லாருமா சேர்ந்து என்கிட்ட இருந்து பிரிச்சு விட்டுட்டீங்களே” என்று சொல்லிவிட்டு,அழைப்பைத்துண்டித்துவிட்டான்.

போதை முழுமையாகஇறங்கிவிட்டது. அப்போது லிங்கம் தன் கையிலிருந்த உறித்த வவ்வாலின் கழுத்தைப் பிடித்துத் தூக்கிக் காட்டினான். சற்று நேரத்திற்கு முன்னர் கருப்பாய் இருந்த அந்த வவ்வால் சிவந்த உடலுடன் தலையில்லாமல்நேராகத் தொங்கியது. காற்றில் ஆடிக்கொண்டிருந்த அதன் கால்கள் பாம்பின் வாலாய் மாறி என்னை நோக்கி நீள்வதுபோல் தோன்றவும், இரண்டடி பின்னால் நகர்ந்தேன்.பிறகு தலைசுற்ற,மடங்கியமர்ந்து ஓங்கறித்தபடி, இனிப்பும் கசப்புமாய்வாந்தி எடுக்கத் தொடங்கினேன்.

3 comments for “லஜ்ஜா

  1. Selvaprabu
    November 23, 2022 at 2:15 pm

    கதையின் தலைப்பு,கதை மாந்தர்,கதையின் தொடக்கம், உச்சம், இறுதி விடுவிப்பு என சிறப்பாக உள்ளது.
    வாழ்த்துகள் சரவணன் பார்த்தசாரதி.

  2. K.arumugam
    November 24, 2022 at 12:14 am

    எழுத்தின் போக்கில் சீரான வேகம்.
    சுற்றியுள்ள மானிடர்களின் விவரணைகள் அபாரம்

    • பரதன்
      December 14, 2022 at 8:01 am

      அருமையான கதை ஓட்டம்.. சிலிர்க்க வைக்கும் வர்ணனை.. மொத்தத்தில் அருமை.. வாழ்த்துக்கள்..

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...