தூக்கம் ஏமாற்றிக் கொண்டிருந்த நள்ளிரவில் அறைக்குள் ரகசியமாக நுழைந்து உள்ளே சுற்ற ஆரம்பித்தது ஏதோ ஒரு பாட்டிசை. கைப்பேசி எடுத்து மணி பார்த்தேன், மூன்று. எழுந்து வெளியே வந்தேன். அப்பாவும் அம்மாவும் உறங்காமல் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள். “ஏதாவது வேணுமா” என்றாள் அம்மா. தலையசைத்துத் தண்ணீர் குடிக்கச் செல்வது போல சமையலறைக்குள் சென்று பின்வாசல் வழியாகச் சாலைக்கு வந்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு நடந்தேன். காலிப்பெட்டியைக் கசக்கி தெருவோரக் குப்பைத்தொட்டியில் எறிந்தேன். அங்கே சாலையோரம் குப்பைத்தொட்டியின் அருகே சுருட்டி வீசப்பட்டிருந்த எங்கள் மெத்தையின் மேல் ஒரு நாய் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது.
மூன்றாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையில் ஒருநாள். அன்று போத்தனூரில் நாங்கள் வாடகைக்குக் குடியிருந்த வீட்டுக்காரர் மகளின் சீமந்தம். விழா மண்டபத்தின் வாசலருகே நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இரண்டு மாமாக்களில் ஒருவர் தன் அருகே நின்றிருந்த வெள்ளை புசுபுசு நாயின் கழுத்துப்பட்டைக் கயிறைப் பிடித்திருந்தார். பேச்சில் கலந்து கொள்ளாத நாய் நாற்காலியின் பின்னே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அருகே நகர்ந்தது. நாயைப் பார்த்ததும் ஆடிக் கொண்டிருந்த விளையாட்டை மாற்றினார்கள் அந்த சிறுவர்கள். வேடிக்கை பார்க்கும் நாயின் பின்னால் சென்று அதன் வாலை ஒருவன் தொட நாய் சடாரென வளைந்து திரும்பி யார் அது என்று தேடும். அந்த இடைவெளியில் இன்னொருவன் அதன் வாலைத் தொடுவான். நாய் மறுபடி திரும்பும். நான் இதைப் பார்த்தபடி நாயின் அருகேயே நின்றிருந்தேன். ஒரு நான்கு முறை வாலைத் தொட்டிருப்பார்கள். ஐந்தாவது முறை எவனோ வாலை வலிக்கும்படி இழுக்க சடாரென்று பாய்ந்த நாய் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் கெண்டைக்காலைப் பிடித்தது. நான் அழுவதற்கு முன் நாய் அழ நாற்காலி மாமா எழுந்து கூட்ட சிறுவர்களில் குத்துமதிப்பாக ஒரு முதுகில் அடித்தார், என் முதுகுதான் அந்த அடியைத் தாங்கியது. ஒரே ஓட்டம், வீட்டுக்கு வந்துதான் நின்றேன்.
அம்மாவிடம் சொல்லவில்லை, அவளும் முதுகில்தான் அடிப்பாள். சற்று நேரம் வீட்டிலேயே இருந்துவிட்டு மீண்டும் மண்டபத்திற்குச் சென்று இந்த முறை புசுபுசு நாய்க்குத் தெரியாமல் அதன் எதிர்திசையில் விளையாடினேன். இரவு உணவருந்தி விட்டு அம்மாவும் அப்பாவும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க நான் அம்மாவின் மடியில் படுத்து உறங்கினேன். நடுஇரவில் அம்மா என்னைத் தரையில் இருந்து தூக்கி மெத்தையில் படுக்க வைத்தாள். அவளிடம் காலில் நாய் கடித்த இடம் வலிப்பதாகக் கூறினேன். என்னை அமரவைத்து உலுக்கினாள். நடந்ததைச் சொன்னேன். பொறுமையாக அனைத்தையும் கேட்டுவிட்டு நான் பேசி முடித்ததும் பளார் என்று கன்னத்தில் ஒரு அறை வைத்தாள். வீசப்போவது போல என்னை வாரிப்பிடித்துத் தூக்கினாள். பயத்தில் நான் மெத்தையைப் பிடித்துக் கொள்ள மெத்தயுறை கிழிந்து கையோடு வந்தது. வெளிர்பச்சை நிறத்தில் வரிவரியாக யானைகள் வரையப்பட்ட எனக்கு மிகவும் பிடித்த உறை. அந்த உறையை அடுத்தநாள் அம்மா கைத்தையல் போட்டு மறுபடி மெத்தையில் மாட்டினாள். நாய்க்கடி, முதுகில் அடி, அம்மாவின் அறை, கிழிந்த மெத்தயுறை. இத்தோடு கூட அந்த துயர நாள் முடியவில்லை. என்னை வாரித் தூக்கிய அம்மாவும் அப்பாவும் டாக்டரிடம் ஓடினார்கள். டேபிளில் படுக்க வைத்து கைகால்களை அம்மாவும் அப்பாவும் பிடித்துக்கொள்ள டாக்டர் தன் கையில் வைத்திருந்த ஆளுயர ஊசியை நான் பார்க்கப்பார்க்க என் வயிற்றிலேயே குத்தினார்.
நான்காம் வகுப்பு படிக்கையில் டைபாயிட் காய்ச்சல் வந்து தொடர்ச்சியாக பள்ளிக்குச் செல்லாமல் மெத்தையிலேயே படுத்திருந்த நாட்கள். பகலிலும் உறங்குவதால் தூக்கம் சரியாகப் பிடிக்காத நடுஇரவில் “புனிதமான ரமலான் மாதத்தில்…” என்று ஆரம்பிக்கும் ஒரு முதிய குரல் கேட்கும், பின்பு ஒரு பாடல். சற்று நேரத்தில் அப்பாடல் நகர்ந்து அடுத்த தெருமுனையில் ஒலிக்கும். நகர்ந்து நகர்ந்து ஒலி சன்னமாகி பின் இரவு மறுபடி நிசப்தமாகும். அம்மாவும் அப்பாவும் இருபுறமும் படுத்திருப்பார்கள். இருட்டில் அந்த ஒலி ஊர்வலம் முடிந்தபின் நான் திரும்பிப் படுத்து யானைகளை விட்ட இடத்தில் இருந்து எண்ண ஆரம்பிப்பேன்.
ஆறாவது படிக்கையில் கிழிந்து நைந்து போன அந்த யானை உறையை கழட்டிவிட்டு அம்மா அவளது பழைய புடவை ஒன்றை உறையாகத் தைத்து மெத்தையில் மாட்டியது ஞாபகம் உள்ளது. கிழிந்த யானைகளை மெத்தைக்குள் பிதுக்கித் திணித்தாள்.
உள்ளே பஞ்சும், துணியும் சுருங்கி மெத்தையின் அடர்த்தி குறைந்தால் அதைப் பிரித்து அதற்குள் பழைய துணிகளை மொத்தமாய்த் திணித்து அம்மா கைத்தையல் போட்டு தைத்து விடுவாள். அப்பா மெத்தையைச் சுருட்டி சப்பாத்தி பரத்தும் மரக்கட்டையால் அடித்து ஓரளவு சமமாக்குவார். பின் மெத்தையை விரித்துப் பார்ப்பார், எங்கேனும் மேடேறியிருந்தால் என்னை அந்த இடத்தில் ஏறி குதிக்கச் சொல்வார். அப்படி குதித்தது ஞாபகம் உள்ளது. நான் கல்லூரியில் படிக்கும்போது கூட அப்படி குதித்து, இல்லை குதித்தது சிறு வயதில், கோவத்துடன் மிதித்தும் மெத்தையைச் சரி செய்திருக்கிறேன்.
இன்னும் ஒரு ஞாபகம், மிகவும் பழையதாக இருக்க வேண்டும். அம்மா இளமையாக இருக்கிறாள். நான் மட்டும் குதித்து மெத்தை சமன் படாததால் அப்பாவும் முட்டுக்காலிட்டு மெத்தையில் ஏறி வந்து ஒரு இடத்தைக் கையால் குத்திக்குத்தி சரியாக்கினார். நான் அவர் தோளைப் பிடித்துக் கொண்டு அம்மாவைப் பார்த்து நீயும் வாம்மா என்று கூற அம்மா அப்பாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே என்னுடன் மெத்தையில் ஏறி குதிக்க ஆரம்பித்தாள். அப்பா திரும்பி அமர்ந்து எங்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். அவர் கை நீட்ட அம்மா அவர் கையைப் பிடித்துக் கொண்டாள். அம்மா நிலை தவறி அப்பா மேலேயே விழுந்தாள். நான் பயத்துடன் அம்மாவைப் பார்க்க அப்பாவோ சிரிக்க நானும் குதித்து அப்பாவின் மேல் விழுந்தேன்.
இல்லை, இது நிஜமாக இருக்காது, மிகைக்காதலுடன் நான் ரசித்த ஏதாவது கதையாக இருக்க வேண்டும். எப்போதோ எங்கேயோ படித்த இந்த நிகழ்ச்சி ஆழ்மனதில் இருந்துகொண்டு, வரிகளைப் பிரதிபலிக்கும் காட்சியமைத்து அதில் என் குடும்பத்தையே ஏற்றி நடிப்பித்து அப்பிம்பத்தை என் பழைய நினைவு என்று போதிப்பிப்பதாக இருக்க வேண்டும்.
போத்தனூரில் இருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு துடியலூரில் வாடகைக்கு குடியேறும் சில நாட்கள் முன்புதான் எங்கள் வீடு மூட்டைப்பூச்சிகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. அம்மாவும் அப்பாவும் நடுஇரவில் விளக்கைப் போட்டு மெத்தையிலும் தரையிலும் ஊரும் மூட்டைப்பூச்சிகளைத் தேடி எடுத்து நசுக்கிக் கொல்வார்கள். மனிதனுக்கு வரும் பிரச்சினை மூட்டைப்பூச்சிக்கு முன்னாலேயே தெரிந்து விடும் என்று அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். புது வீட்டுக்கு வந்து பல மாதங்கள் கழித்துத்தான் மூட்டைப்பூச்சிகளின் அரசாங்கம் முடிவுக்கு வந்தது. கட்டிலை விற்று விட்டதால் புதுவீட்டில் மெத்தையைத் தரையில் விரித்திருந்தோம். பகலில் மெத்தையைச் சுருட்டி வைத்துவிட்டு வீட்டுக்குள் ஆள் புழங்குவோம். அப்பா தினமும் வேலைக்குச் செல்லும் முன் மெத்தையை பக்கத்து வீட்டு மாடி வெயிலில் காய வைப்பார்.
எனக்கு வயது முதிர்ந்ததும் அப்பாவும் அம்மாவும் என்னை மெத்தையில் படுக்க விட்டு அவர்கள் தரையில் படுத்துக்கொள்ள ஆரம்பித்தனர். பத்தாம் வகுப்புத் தேர்வில் என் மதிப்பெண்களைக் கேட்டதும் அம்மா வருத்தப்பட்டதைப் பார்த்து அன்றிரவு தனியே வீட்டு வாசலில் அமர்ந்து அழுதேன். அம்மாவும் அப்பாவும் என்னைத் தேற்றி ஆறுதல் கூறி சிரிக்க வைத்து படுக்க வைத்தனர். ஏதோ தோன்ற அவர்களும் என் இருபுறமும் படுத்துக் கொண்டனர், அப்பா என்னோடு மெத்தையில், எனக்குத் தட்டிக்கொடுத்தபடி அம்மா தரையில். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிந்த நாட்களில் நான் தூங்கப் பெரிதாக கஷ்டப்படவில்லை.
கல்லூரி சேர்ந்து ஆறேழு மாதங்கள் கழித்த ஒரு சனிக்கிழமை அரைநாள் வகுப்பு முடிந்ததும் கூடப் படித்த மனோகர் என்னோடு வீட்டிற்கு வந்திருந்தான். அன்று அப்பாவும் வீட்டில் இருந்தார். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த பின் அப்பா மனோகரைக் கட்டாயப்படுத்தி மதிய உணவு எங்கள் வீட்டில் சாப்பிட வைத்தார். மட்ட அரிசியில் சமைக்கும் சோறு அவனுக்குப் பிடிக்குமா, இருக்கும் சோறு போதுமா என்றெல்லாம் நான் யோசிக்க மனோகர் தரையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். அப்பா அவன் அருகே அமர அம்மா பரிமாறினாள். முன்னறிவிப்பின்றி வந்ததால் எதுவும் விசேஷமாகச் சமைக்க முடியவில்லை, ரசம் மட்டும்தான் உள்ளது என்று அம்மா வருத்தப்பட்டாள். வாய் முழுக்கச் சோறுடன் இதுவே மிக அருமையாக இருப்பதாக மனோகர் கூற முயற்சிக்க அனைவரும் சிரித்தோம். மனோகர் சாப்பிட்டு எழுந்தபின் என்னையும் சாப்பிடச் சொல்லிவிட்டு அப்பாவும் அம்மாவும் கோவிலுக்குச் செல்வதாய் சொல்லிச் சென்றனர்.
நான் சாப்பிட்டு முடிக்கும்வரை என்று மெத்தையில் படுத்து ஏதோ புத்தகத்தை புரட்டிய மனோகர் இரண்டே நிமிடத்தில் தூங்கினான். ஒரு மணி நேரத்திற்குப் பின் கண்விழித்து சுற்றும்முற்றும் பார்த்தான். கடிகாரத்தில் மணி பார்த்து இத்தனை நேரம் தன்னைத் தூங்க விட்டதற்காக என்னை கடிந்துகொண்டு அவசரமாக கல்லூரி விடுதிக்குக் கிளம்பிச் சென்றான்.
அடுத்த நாள் மதிய இடைவெளியில் புகை பிடித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் வீட்டு மெத்தையை எங்கு வாங்கினோம் என்று கேட்டான். எனக்கு பதில் தெரிந்திருக்கவில்லை. என் நினைவு தெரிந்த நாள் முதலே அந்த மெத்தை எங்கள் வீட்டில் இருந்தது என்று சொன்னேன். அவன் நம்பாமல் சிரித்தான். மாலையில் மற்ற நண்பர்களோடு இருக்கும்போது படுத்தவுடன் மயக்கும் ஒரு மந்திர மெத்தையை நான் என் வீட்டில் ஒளித்து வைத்திருப்பதாகச் சொன்னான் மனோகர்.
படிக்கும்போதே எனக்கு வேலை கிடைத்து விட்டது. கல்லூரி முடிந்து வேலையில் சேர சென்னை கிளம்பும்போது மெத்தையையும் எடுத்துச் செல்ல சொல்லி அப்பா கட்டாயப்படுத்தினார். அம்மா சமையலறையில் இருந்து வெளியே வந்து “அவன் சம்பாதிச்சு புதுசா வாங்கிப்பான். இது இங்கயே இருக்கட்டும். விடுங்க” என்று சொல்லி என்னைப் பார்த்து சிரித்தாள்.
வேலைக்குச் செல்ல ஆரம்பித்து ஒன்றிரண்டு வருடங்கள் கழிந்த ஒரு வாரயிறுதி. விடுமுறை முடிந்து ஞாயிறு இரவு சென்னைக்குத் திரும்பிச் செல்ல சேரனில் முன்பதிவு செய்திருந்தேன். ரயில்நிலையத்துக்கு தயாராகி வீட்டிலிருந்து கிளம்பும் முன் காபிக்காக காத்திருந்தேன். அப்பா காபி கிளாஸை என்னிடம் கொடுத்துவிட்டு மெத்தையில் அம்மாவின் அருகே அமர்ந்தார். காபி குடித்துவிட்டு எழுந்தேன். செருப்பை அணியும் நேரம் மனம் பொறுக்காமல் கேட்டு விட்டேன் “இங்க தனியா தானே இருக்கீங்க. சென்னை வந்திடலாம்ல”
அப்பா என் பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்து என்னருகே நின்று “பொழைப்புக்கே பொறந்த ஊர் மாறல. ஓஞ்சதுக்கு அப்பறம் எதுக்கு” என்றார்.
“அவன் கூடப்போய் இருக்கலாமேன்னு தான கேக்கறான்” என்றாள் அம்மா உள்ளிருந்துகொண்டே.
“நீ போடியம்மா ராசாத்தி. நான் சேத்தி அழிச்சு முடிச்சுட்டேன். இனி அவன் கூடத்தான் வாழ்வு”
மறுபடியும் வேண்டாம் நான் கிளம்பறேன் என்று நிற்காமல் பையை வாங்கி தோளில் போட்டுக்கொண்டு வெளியே இறங்கி நடந்தேன். பஸ்ஸ்டாப் வரை வந்த அப்பாவுடன் எதுவும் பேசவில்லை. பஸ்சுக்குள் ஏறி இருக்கையில் அமர்ந்து திரும்பி அப்பாவைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். பஸ் நகரும்வரை இருவரும் அடுத்தவரின் கண்ணசைப்புக்காகக் காத்திருந்தோம்.
மற்றொரு சமயம் அவர்கள் இருவரும் தங்க கோவையிலேயே வாடகைக்குச் சற்று பெரிய வீடாய்ப் பார்க்கலாம் என்று நான் சொன்னதற்கு அப்பா “நீ சொந்த வீடு வாங்கி வந்தா சொல்லு, கூட வரோம். மறுபடியும் பொட்டி தூக்க இந்த வயசுல முடியாது” என்று மறுத்து விட்டார்.
முதல் நான்கு வருடங்கள் ஒரே இடத்தில் வேலை செய்தபின் அடுத்த மூன்று வருடங்களில் அவசரமாக இரண்டு வேலைகள் மாறி கடைசியாகக் கோவையிலேயே ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சொந்த வீடு வாங்க வீடுதேடற்படலம் ஆரம்பமாகி சில மாதங்களிலேயே வடவள்ளியில் இரு படுக்கை அறைகள் கொண்ட ஒரு அழகான தனிவீட்டைக் கண்டுபிடித்தோம். சேமித்த பணத்தை முன்பணமாக்கி வங்கிக்கடனில் அந்த வீட்டை வாங்கி புது வீட்டுக்கு இன்று காலை பால் காய்ச்சினோம். பூஜை முடிந்ததும் பழைய வீட்டில் இருந்து பொருட்களை புது வீட்டுக்கு மாற்றினோம். அப்பாவும் அம்மாவும் பழைய வீட்டில் பொருட்களைக் கட்டி ஆட்களை வைத்து குட்டி லாரியில் ஏற்றி அனுப்ப நான் புது வீட்டில் சாமான்களை இறக்கி அடுக்கும் வேலையைக் கவனித்தேன். லாரி முதல் சுற்று முடிந்து மறுபடி பொருட்களை ஏற்றச் சென்ற இடைவெளியில் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் வந்து பேச்சு கொடுத்தனர்.
லாரி மறுபடியும் வந்து நின்றது. பழைய உடைந்த பெட்டிகள், பழைய பாத்திரங்கள், பிய்ந்து போன செருப்பு முதற்கொண்டு புராதன பொருட்கள் அனைத்தும் பழைய போர்வைகளில் சுற்றிக் கட்டப்பட்டு புதுவீட்டுக்கு வந்து இறங்கியது. நான் வரவேற்பறையிலேயே ஒரு சாக்கை விரித்து அத்தனை பழையதுகளையும் மூட்டை கட்டி தெருமுக்கு குப்பைத்தொட்டியில் வீசச் சொன்னேன். பழைய மெத்தையை வேலையாள் ஒருவன் வீட்டினுள் கொண்டு வந்து கொண்டிருந்தான். தோய்ந்து, வெளுத்து, கிழிந்து கவலைக்கிடமாய் இருந்தது மெத்தை. ஏதோ தோன்றியது, வேலையாட்களிடம் மெத்தையையும் குப்பையில் வீசிவிடுமாறு கூறிவிட்டேன்.
பின்பகலில் வடவள்ளி பேருந்து நிலையம் அருகே இருந்த ஒரு கடையில் இரு மெத்தைகள் வாங்கி வீட்டில் சேர்ப்பிக்கச் சொல்லிவிட்டு மற்ற வேலைகளை முடித்து மாலை வீட்டிற்கு வந்தேன். இரவு சில நண்பர்களும் உறவினர்களும் வந்திருந்த போது அப்பாவும் அம்மாவும் ஏதோ சீக்காளி போல பேசிக் கொண்டிருந்தனர். உணவு உண்டு அனைவரும் சென்ற பின் அம்மாவும் அப்பாவும் என்னிடம் சற்று நேரம் ஏதோ பேருக்குப் பேசிவிட்டு படுக்கச் சென்றனர்.
“இப்போ ஏன் எழவு வீட்டுல இருக்கற மாதிரி இருக்கீங்க?”
அம்மாவும் அப்பாவும் திரும்பிப் பார்த்தனர்.
சோபாவில் அமர்ந்திருந்த நான் கத்தினேன் “நீங்க சந்தோஷமா இருக்க இன்னும் நான் என்ன பண்ணனும்?”
மெதுவாக என்னருகே வந்து சோபாவில் அமர்ந்து என் கால் முட்டியில் கை வைத்தார் அப்பா. அம்மாவும் வந்து என்னருகே அமர்ந்தாள்.
“நான் வாழ்க்கை முழுசும் சம்பாதிச்சது இப்போ உன் ஒரு வருஷ சம்பளம். இப்ப வரைக்கும் என்னால வாங்க முடியாதது இது, ஒரு சொந்த வீடு. என் மகன் இருபத்தெட்டு வயசுல வாங்கிட்டான். எனக்கு வேற என்ன வேணும் சொல்லு?” என்றார் அப்பா.
மூவரும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் வேலையை நினைவுபடுத்தி என்னைப் படுக்க சொன்னார்கள் அம்மாவும் அப்பாவும். அறைக்குச் சென்று விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தேன். புது மெத்தையில் படுத்து வெகு நேரமாகியும் தூக்கம் வருவதாய்த் தெரியவில்லை.