”அண்ணே பீமநகரி பஸ் எப்ப வரும்னு சொல்ல முடியுமா” என டீக்கடைக்காரரிடம் வெளியூர்க்காரர்களுக்கேயுரிய ஒரு அந்நியத்தன்மையையும் ஐயத்தையும் ஒருங்கே திரட்டி மெல்லக் கேட்டேன். அதைக் காதில் வாங்காத பாவனையில் டீயை ஆற்றிக் கொண்டே “அதெல்லாம் நேரக்கணக்கு கிடயாது. நில்லும். அதுவா வரும்போது வரும்” என்றார்.
அங்கிருந்த பொன்மஞ்சள் நிறத்திலான பஜ்ஜியைப் பார்த்தபோது பசி அடிவயிற்றைக் கிள்ளியது. முன்தினம் மதியம் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கையில் கிடைத்த சஸ்பென்ஷன் ஆர்டர் தந்த கலக்கம் பற்றிய எண்ணம் பசியை ஓரளவு மழுங்கடித்தது. பணி ஓய்வு பெற ஒரு வருடமே இருந்த நிலையில் கிடைத்த இந்த சஸ்பென்ஷன் இன்னும் சில நாட்களோ, மாதங்களோ கழித்துத் திரும்பப்பெறப்படலாம். இல்லாமலும் ஆகலாம். அடிவயிறு கலங்கி சூடானா ரத்தம் தலைக்கேறியது. சுப்ரமணியம் ஐயாவின் முகத்தை நினைத்துக் கொண்டேன். ரெக்கார்ட் ரூமின் தூசியைச் சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாது என்ற எண்ணம் என்னைச் சூழ்ந்து கொண்ட போது என்னையறியாமல் கண்கள் கலங்கியது.
அது முப்பது வருட தூசிக்காற்று. நாடகம், கூத்து எனக் குடும்பத்தைக் கவனிக்காமல் எங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு மாண்டு போன அப்பாவிற்கும், அவர் கையளித்துச் சென்ற ஏழ்மைக்கும் தீர்வாகக் கிடைத்த வேலை. வேலைக்கான தபாலைக் கையில் வாங்கியபோது என்னைவிட மிகவும் மகிழ்ந்த போஸ்ட்மாஸ்டரின் கண்ணீர் என்னை நெகிழச் செய்த கணம் ஞாபகம் வந்தது. “தம்பி மோகா ஒன் கஸ்டம் இன்னையோட தீந்து போச்சுலே” என அவர் அந்தக் கவரைக் கையில் கொடுத்தார். இப்போது சட்டைப்பையில் துருத்திக் கொண்டிருந்த சஸ்பென்ஷன் ஆர்டரை எடுத்துப் பார்த்தேன். எல்லாம் முடிந்து விட்டது. வாழ்க்கை என்னை வெகுதூரம் அழைத்து வந்துவிட்டது. வேலையும், பணமும், உறவுகளும் என யாவுமே இப்போது பொருளற்றதாய்த் தோன்றுகின்றன.
கடைசியாக ரெக்கார்ட் ரூமை விட்டு புறப்பட்டு வரும்போது தூசி படிந்திருக்கும் வலது மூலை அலமாரியின் மேல் எழுதி வைத்திருந்த அப்பாவின் பெயரின் தடத்தை மீண்டும் அழுத்தமாக எழுதிவிட்டு வந்தேன். நான் மீண்டும் செல்லாவிட்டால் மறுபடியும் தூசிகள் படிந்து பெயரை மூடிக்கொள்ளும் என்ற பயம் தொற்றிக் கொண்டது. தூசிகள் பனிச்சரிவுகளைப் போல. ஒவ்வொரு நாளும் படிந்து புதிய புதிய தோற்றங்களை அவைகளே உருவாக்கிக்கொள்ளும். கை நழுவி உடைந்துவிட்ட பொருள் தந்த முன்கண இன்பத்திற்காக ஏங்கும் குழந்தையைப் போல மனம் வலித்தது. அந்த வலியை மறைக்க உதட்டைப் பிதுக்கி மேலும் திடமான குரலில் “அண்ணே ஒரு டீயும், அந்த பஜ்ஜியும்” என்றேன்.
“இது பஜ்ஜியில்லடே. பழம்பொறி” என்றார் அவர்.
திருநெல்வேலி நாகர்கோயில் சாலையில் பேருந்து இறக்கிவிட்டப்பின் மிக நீண்ட நேரமாக நடந்து கொண்டிருப்பதாகப்பட்டது எனக்கு. ஆனால் ஈரப்பதமான காற்றும், வயல்வெளிகளும், தோப்புகளும், சூழ்ந்திருந்த பச்சையும் என்னை உள்வாங்கிக் கொண்டிருந்தன. அதீத துக்கங்களின்போது உடல் வலி ஒரு பொருட்டாக இருப்பதில்லை. எங்காவது முடிவில்லாமல் நடந்து கொண்டே இருக்க வேண்டுமென நினைத்தேன். பரபரப்பில்லாத சாலைகளும், மெல்ல அசைந்து சோம்பல் முறித்துக் கொண்டிருந்த நாயும், சலனமற்றிருந்த பாசி படிந்த குளமும் என யாவும் எங்கோ புராதாணமான காலத்தில் இருப்பதாகப் பட்டது. ஊர் என்று வரையறுத்துவிட முடியாது அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலைந்திருந்த வீடுகள் இருந்த பீமநகரியை அடைந்த போது அதன் உலகத்தோடு ஒட்டாத எளிமை சுப்ரமணியம் ஐயாவின் முகத்தை மீண்டும் எனக்கு ஞாபகப்படுத்தியது.
***
முதல் முறையாக அவரைக் கல்லூரி வளாகத்தில்தான் சந்தித்தேன். என் ரெக்கார்ட் ரூம் வாசலில் மிகப்பெரிய புத்தக மூட்டையைத் தலையில் வைத்திருந்த ஒருவருடன் வந்திருந்தார். வெளுப்பாக இல்லையானாலும் ஒரு பழமையான கதர் வேஷ்டியும் சட்டையும், ஒரு தட்டையான மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். இயல்பாகவே அவர் மேல் மரியாதை வரச் செய்யும் தோற்றம். அவரின் கால்களும் கைகளும் மிகவும் கெட்டித் தன்மையதாய் எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. ஆனால் உடன் வந்தவர் ஏதோ கோயான் மாதிரி இருந்தார். மூட்டையைப் பக்குவமாகக் கீழே வைத்துவிட்டு தலையில் வைத்திருந்த சும்மாடை தன் அக்குளில் இடுக்கிக் கொண்டு என்னைப் பார்த்து முகம் நிறைய புன்னகைத்தார். பட்டனத்தில் யாரும் இப்படி யாரையும் பார்த்து முகம் விரிய புன்னகைப்பதில்லை. நான் எவ்வளவு முயன்றும் அவரைப் பார்த்து என்னால் புன்னகைக்க முடியவில்லை. அரசாங்க அலுவலர்களுக்கே உரிய கறார் தன்மையும் சிடுசிடுப்பும் நாளும் காண்பித்து மாறிப்போன என் முக அமைப்பும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. கண்டிப்பாக நாங்கள் பாதுகாக்கிறோம், பிரதியெடுக்கிறோம் எனக் கர்ணப்பிரபு போல என் கல்லூரி மீண்டும் ஏதாவது அறிக்கை விட்டிருக்கும் என்று நினைத்து எரிச்சல் வந்தது. “ஒருத்தனுக்கு ஒக்காரவே வக்கில்லயாம். அவனுக்கு அம்பத்திரெண்டு பன்னறுவா கேக்குதாம்” என எங்கள் அப்பாயி என் அப்பாவை நிதம் வசைபாடும் பழமொழி என் கல்லூரிக்குக் கச்சிதமாகப் பொருந்தக் கூடியது.
பழைய ஆவணங்களைப் பாதுகாப்பதில் எங்கள் கல்லூரிக்கு நல்ல பெயர் இருந்தது. ப்ரிடிஷ் காலத்தில் கச்சிதமாகக் கட்டப்பட்ட ரெக்காட் ரூம் இது. ஆனால் எதுவானாலும் ஒரு எல்லை வரை தான் தாக்குப் பிடிக்கும். இத்தனை பெரிய மூட்டையிலுள்ள புத்தகங்களை நான் எங்கு வைப்பது என்ற கவலைக்குள் ஆழ்ந்தேன். உண்மையில் இவைகளின் தேவை மேல் கூட எனக்கு ஐயம் வருமளவு புத்தகங்கள் குவிந்து கொண்டிருந்தன. இதை எழுதுவதற்கு எப்படி இவர்களுக்கு நேரம் கிடைக்கிறது என்பதும் ஆச்சரியமாக இருந்தது.
“ஐயா… சொல்லுங்க. என்ன செய்யனும்” என்று அசிரத்தையாகக் கேட்டேன்.
சுருக்கம் விழுந்த அந்த முகத்தில் பிரகாசித்திருந்த கண்களில் புன்னகை பொங்கி நிறைய, “தம்பி, இது நாடகத்துக்கான கலைக்களஞ்சியம். இத பாதுகாக்கற பொறுப்ப கல்லூரி எடுத்துக்கறதா சொல்லிருக்காங்க. நான் சாகறதுக்குள்ள இத அச்சில் பாத்துட்டேனா சந்தோசம்.” என்று சுருக்கமாகச் சொன்னார்.
நாடகம் என்ற வார்த்தையே எனக்கு ஒரு வித ஒவ்வாமையை உருவாக்கியது. அதைப்பற்றிய கலைக்களஞ்சியம் என்பது எவ்வளவு வெட்டியான செயல். “இந்த மூட்டையில இருக்க அத்தனையுமே கலைக்களஞ்சியமா” என்று எரிச்சலோடு கேட்டேன்.
“ஆமா..”
“நாடகம்லாம் யாரு இப்ப போடறாங்க. எல்லாம் சினிமாதான இப்ப.” என்றேன் அவரை புண்படுத்தும் நோக்கில். அவர் அதில் சலனமடைந்ததாய் தோன்றவில்லை.
“உண்மதான். ஆனா என்னைக்காவது நாடகத்த மீட்டு எடுத்து கலையா அது தனிச்சு செய்யனும்னு நினைக்கறவனுக்கு நான் செஞ்சு வச்சிருக்க வேலைங்க உதவும்” என்றார்.
”நீங்க நாடகம் போடுவீங்களோ”
பக்கத்திலிருந்தவர் முன் துருத்திக் கொண்டு “ஐயா தான் எங்க ஆசான். நாகர்கோயில் சரஸ்வதி கலைமன்றத்துல பல நாடகம் போட்ருகோம்” என்றார் பெருமிதமாக.
“வேற வேலை ஏதும் பாத்தீங்களா”
“நாடகம் தானே எங்க தொழிலு” என்றார் பெரியவர்.
”சினிமா வந்த பிறகு அதுக்கான வேலை இல்லாம போச்சுல்ல”
“ஆமா. அதுக்காக கலைய கைவிட்டுட முடியுமா”
“இப்டி சொல்லித்தான் எங்க அப்பா அழிஞ்சுபோனாரு”
“உங்க அப்பா மட்டுமில்ல. பலரும் இந்த மாற்றத்த எதிர்பாராம, நொடிஞ்சு மாண்டு போனாங்க”
“அத்தன பேத்த சாவடிச்ச கலைய ஏன் தூக்கி நிப்பாட்டனும்னு நெனைக்கீங்க” என ஆத்திரத்தோடு கேட்டேன்.
“கலை சாகறதில்ல தம்பி. என்னைக்காவது அது தனக்கானவனுக்காகக் காத்துக் கெடந்து மீள எழுந்து வரும். அவனுக்காக. அப்படியே இல்லனாலும் இப்டி ஒன்னு என் பாட்டேன் ஆடிருக்காம்னு பின்னாடி வாரவனுக்கு தெரியனும்லா” என்றார்.
“இத்தன எழுதிருக்கீங்களே இதுக்கு நம்பகத்தன்மை என்ன? எல்லாம் வாய்மொழிதான”
“ரத்தமுஞ் சதயுமா ஒன் முன்ன ஒக்கந்திருக்கன்ல. அது தான் அத்தாட்சி” என்று சற்றே கோபமாகப் பேசினார்.
எனக்கு மண்டை கொதிக்க ஆரம்பித்தது. அதற்கு மேலும் என்னால் பொறுமையாக அவற்றைக் கேட்க முடியவில்லை. பொதுவாகவே இப்படி ஆவணங்களைக் கொண்டு வருபவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்துகிறேன் பேர்வழியில் சொல்லப்படும் உணர்ச்சிகரமான விஷயங்களைக் கேட்டு சலிப்படைந்திருந்தேன். சென்ற சில ஆண்டுகளாக இந்த ரெக்கார்ட் ரூம் என் கட்டுப்பாட்டில் மட்டும் இல்லாமல் பொதுமையாகிக் கொண்டே போவதையும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. இன்னும் ஓய்வு பெற ஐந்து வருடங்கள்தான் இருந்தன. அதற்குள் எந்த மெமோவும் இல்லாமல் ஓய்வு பெற்றுவிட்டால் சரியாக பென்ஷன் வாங்கி விடலாம் என்ற மன்றாட்டைத்தவிற இங்கிருந்து பெற்றுக் கொள்ள எனக்கு ஒன்றுமில்லை என்ற சிந்தனையே ஓடிக்கொண்டிருந்தது. அந்த மூட்டையை ஒரு பொருட்டாகக் கருதாதவன் போன்ற பாவனையில்,
”ஐயா சிபாரிசுக்கடிதம் ஏதும் வச்சிருகீங்களா?” என இருக்காது என்ற நம்பிக்கையில் அவசர அவசரமாக அவரைக் கிளப்பும் தொனியில் கேட்டேன்.
“எதுக்கு” என்றார் புரியாதவராக.
“அது இருந்ததுனா ஒடனேயே அச்சடிக்க அனுப்பிடலாம். பின்ன இந்தக் கைப்பிரதிய நீங்களே வச்சிக்கலாம்” என்றேன்.
“அதெப்படி அச்சடிக்க இம்புட்டு புஸ்தகங்க இருக்கப்ப என்னோடத முன்னாடி அடிப்பீங்க. எதுக்கு முன்னுரிமை கொடுக்கனுமோ அதுக்கு முன்னுரிமை கொடுங்க போதும்” என்று கறாரான வாத்தியார் குரலில் சொன்னார்.
நான் சொல்வதைப் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கையே விட்டுபோனதால் மேற்கொண்டு
பேசுவதைத் தவிர்த்துவிட்டேன். ரெக்கார்ட் புத்தகத்திலுள்ள படிவத்தில் அவரைப்பற்றிய விவரங்களையும், புத்தகம் பற்றிய விவரங்களையும் பதிவு செய்து கொண்டு அவரிடம் கையெழுத்து வாங்கினேன். அந்த மூட்டையிலுள்ள புத்தகங்களை எடுத்து இரும்பு ரேக்குகளில் அடுக்கும்போது பெரியவருக்குப் பக்கத்திலிருந்தவர் எனக்கு உதவி செய்தார். அரைக்கை வெள்ளையையொத்த நிறத்தில் பனியன் மட்டும் அணிந்திருந்தார். முறுக்கு மீசையும், முடியடர்ந்த மார்பும், இறுகிய வெள்ளைத் தோள்களுமாக இருந்தவரின் பெயர் சுடலை என்று தெரிந்து கொண்டேன். அடுக்கி வைக்கும் போதே அவர் அதன் மேல் வைத்திருந்த மரியாதை என்னை மேலும் கவனமாக அவற்றைக் கையாள்வது போல நடிக்கச் செய்தது. அவர் மேல் ஒரு இனம் புரியாத பாசம் அந்த அருகமைவில் வந்தது.
“நீங்க நாடகம் ஏதும் நடிப்பீங்களா”
“ஆமா. எப்டி கண்டுபிடிச்சீங்க” என ஆச்சரியமாகக் கேட்டார்.
“எங்க அப்பாவோட சாயல் உங்ககிட்ட தெரிஞ்சாப்ல இருந்தது. அவரும் கூத்து கட்றவர் தான்.” என்றேன். உள்ளூற அன்பிருந்தாலும் அப்பாவைப் பற்றி சொல்லும்போது நா கசந்தது. அவர் ரெக்கார்ட் ரூமின் தூசித் துகள்கள் அதிரும்படியாகச் சிரித்தார். யாரும் இங்கு அப்படிச் சிரித்ததில்லை. டைபிஸ்ட் முத்துலட்சுமியின் சட் சட் சத்தம் சற்றே திகைத்து நின்று ஒரு கிளுக் சிரிப்பை உதிர்த்து விட்டு மீண்டும் ஆரம்பித்ததை உணர்ந்தேன். வாழ்க்கையில் தோற்றுவிட்டதாக நம்பவைக்கப்பட்ட கூத்துக்கலைஞரான என் அப்பாவின் முகம் எங்கோ அவரில் ஒளிந்திருந்தது. அந்தச் சிரிப்பும் கூட அவருடையதுதான் என்று நினைத்தேன். என்னை வெறித்துப்பார்த்தவர் ”உங்க அப்பாரு கூத்துல யமன் வேசங்கட்டுவாரோ” என்று கேட்டார்.
“ஆமா. ஆமா” என்றேன் பரபரப்பாக. இத்துனை துள்ளியத்தை நான் எதிர்பார்க்கவில்லை. என் கனவில் அப்பா வரும் வேஷமும் கூட அதே வடிவத்தில்தான். அழிவின் சக்தி. என் சிறுவயதின் ஞாபகங்களிலெல்லாம் அவர் அழிவின் சக்தியாக மட்டுமே இருந்தார். மேலும் அவர் என்ன சொல்லப்போகிறார் என்ற ஆர்வத்தில் அவரின் உதடுகள் மேல் கவனத்தைக் குவித்தேன்.
“சரித்தேன். அப்ப அப்பாரு தெரிஞ்சிருப்பாரு ஒங்களுக்கு. நானும் யமன் வேசம்தான் கட்டுவேன்.” என்றார். நான் விரைந்து அவர் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டேன்.
“நாடகம் பாத்திருக்கீயளா” என்று கேட்டார்.
“ஆமா… சின்ன வயசுல… மதுரைல… அப்பா இருந்தவரை…” எனக் கலைந்து கலைந்து பேசினேன்.
”தோ.. இதுதான் எங்கப்பா எனக்கு மிச்சம் விட்டுப்போன சொத்து. வீடு தூசியாகுதேன்னு இங்க வச்சிருக்கேன்” என நான் மரஅலமாரியில் வைத்திருந்த மூன்று நாடகப் பனுவல்களையும் அவரிடம் காட்டினேன். அவர் அதைப் பார்த்துவிட்டு சுப்ரமணியம் ஐயாவிடம் ஓடிப்போய் நீட்டினார். ஐயா அதை திருப்பியும் புரட்டியும் பார்த்துவிட்டு “தம்பி இத வாய்ப்பு கிடைக்கும்போது இன்னொரு பிரதி எடுத்து வச்சிடு.” என்றார். நான் அலட்சியமான பார்வையை அவர் மேல் வீசினேன். ஆனால் அவருக்கு என் மேல் ஏதோ நம்பிக்கை இருப்பதாகப் பட்டது. விடைபெற்றுச் செல்லும் போது ஏதோ சொல்ல வந்து வாயெடுத்துப் பின் தோள்களை இறுகப் பிடித்து உலுக்கிவிட்டு ஒரு தயக்கத்துடனேயே விடைபெற்றார். நல்ல பிடி என்று நினைத்துக் கொண்டேன்.
அவர் அன்றே அந்தக் கலைக்களஞ்சியங்களை எடுத்துச் சென்றிருக்கலாம் அல்லது நானாவது அதோடு நின்றிருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் அந்தக் களஞ்சியங்களைத் தூசிகள் ஒரு சாம்பல் போர்வையைப் போல போர்த்தி பாதுகாத்து வைத்திருக்கும். என்றாவது ஓர் இளைஞன் துடிப்புடன் அதை மீட்டு நூலாகக் கூட மாற்றியிருப்பான். பொதுவாகவே இந்த இளைஞர்களுக்கு அப்படி எதையாவது மீட்கிறேன் கிழிக்கிறேன் சாதிக்கிறேன் எனச் சொல்வதில் ஒரு கிளுகிளுப்பு இருக்கும். நானும் வேலைக்கு வந்த புதிதில் அப்படித்தான் இருந்தேன். இன்று யாவற்றிலும் வந்திருக்கும் அலட்சியம் இந்த அரசு அமைப்பு என்னைப் பழக்கப்படுத்தியதால் வந்தது. இங்கு அப்படி எதையும் மாற்றிவிட முடியாது என்பதை உணர்ந்தபிறகு இந்த வேலை மேலும் ஒரு பிடிப்பில்லாமல் ஆனது.
தூசி படிந்த புத்தகக் குவியல்களுக்கு மத்தியில் இந்த ஒன்று என்னை ஏன் அழைக்க வேண்டும். சிலவை அப்படித்தான். ஏன் அழைக்கிறது, எதற்காகப் பிடிக்கிறது என்பதல்லாமல் அதன் தேவைக்காக நம்மை பிடித்து வைத்துக் கொள்கிறது. அப்படித்தான் எதேச்சையாக அந்தக் களஞ்சியத்தைப் புரட்டப்போக அது என்னை விடாமல் பிடித்துக் கொண்டது. நாடகக் கலைக்களஞ்சியம், நான் நித்தமும் படிக்கும் புத்தகமாகிப் போனது. ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பு படித்தால் கூட என் வாழ்நாளுக்குள் முடித்துவிட முடியாது என்று தோன்றியதே என்னை மேலதிகமாக வாசிக்க வைத்தது.
ஆறுமாதம் கழித்து மீண்டும் ஒருமுறை சுடலையை மட்டும் சந்தித்தேன். விட்டுபோன ஒரு வால்யூமை எடுத்து வந்திருந்தார். கலைக்களஞ்சியம் எனக்கு அணுக்கமாகிப்போன நூலாக அப்போது ஆகியிருந்தது. அதைப்பற்றி நிறைய கேட்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. அன்று அரை நாள் உரையாடிக் கொண்டிருந்தது என் மனதிற்கு மேலும் நெருக்கமானவராக அவரை மாற்றியது.
”இவ்ளோ பெரிய கலைக்களஞ்சியத்த சுப்ரமணியம் ஐயா எப்டி ஒத்த ஆளா செஞ்சாரு. வாய்ப்பே இல்ல. ஏதும்… யாரும் உதவி செஞ்சாங்களா?” என்று கேட்டேன்.
“சினிமா வந்ததுக்கப்பறம் நாடக அரங்கேற்றம்லாம் ஊர்பக்கம் கொறஞ்சு போச்சு. இருக்கறத நாங்க பாத்துக்குவோம்னு ஒரு தெம்பு வந்ததுக்கப்பறம் அவர் முழு நேரமும் நாடகத்த பத்தி எழுதறதுக்காக மெட்ராஸுக்கு வந்துட்டாரு. இருவது வருஷம் முன்னாடி ஒரு நாள் நானும் முப்பிடாதின்ற இன்னொருத்தனும் அவர் கடுதாசி கெடச்சு இங்க வந்தோம்.” என்றார்.
“மெட்ராஸ்ல எங்க”
“ட்ரிப்லிகேணில.”
“முப்பிடாதிக்கு ஆசான்கிட்ட ஒரு இது. பக்தின்னு வச்சிக்கிடுங்க. அவர் ஒத்துழைப்பு வேணும்னு சொல்லி எழுதின கடுதாசி கைல கெடச்சப்பவே நாடக்கக் கம்பெனிய அடுத்தாளு கைல குடுத்துட்டு என்னையும் கூட்டிக்கிட்டு பஸ் ஏறிட்டான். இங்க வந்து நின்னா நாடகத்துக்குக் கலைக்களஞ்சியம் செய்யனும்னு ஆசான் சொன்னாரு. எங்களுக்கு ஒன்னும் புரியல. அவர் பாட்டுக்கு எழுதிக்கிடே இருந்தாரு. தகவல் சேகரிக்க வெளில ஆளுகள பாக்கப்போகும்போது கூடப் போய்கிட்டு இருந்தோம். முப்பிடாதியும் கொஞ்சம் கொஞ்சமா பிடிகெடச்சு எழுத ஆரம்பிச்சாம்.”
”நீங்க” என்றேன் குறுக்கே புகுந்து.
”நான் சும்மா வேடிக்கை பாக்கல்லா வந்தேன். அப்டியே மெட்ராஸ சுத்தி பாக்கலாம்னும். பின்ன… சம்முகம் அண்ணாச்சிய பாக்கலாம்னும்.”
“டி.கே.எஸ் ஷண்முகம் அண்ணாச்சி தானே”
“ஆமா. எங்க ஊர்ல கூட அவர் நாடகம் போட்ருக்காரு. ரொம்ப பிடிக்கும் அவர. ஆசானுக்கும் நல்ல பழக்கம்”
“அத விடுங்க. நீங்க என்ன உதவிதான் செஞ்சிங்க” என்று நக்கலாகக் கேட்டேன்.
”அவர சகிச்சுக்கிட்டு அவர் கூட இருக்கதே அவருக்கு நாங்க செய்யற உதவிதான” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். சில நொடிகள் மெளனத்திற்குப் பின் கண்களைத் துண்டால் ஒற்றிக் கொண்டார். முகத்தை மிகவும் கறாராக்கிக் கொண்டு எனக்கு அருகிலுள்ள சாளரத்தின் ஒளியை உள்வாங்கியவாறு “இந்தக் கிறுக்கு ஆசான் என்னத்தையாவது பண்ணனும்னு முடிவெடுத்துட்டார்னா பேய் கணக்கா வேலை செய்ய ஆரம்பிச்சுடுவார். கூத்து நடிக்கும்போதும் சரி, கூத்து அரங்கேற்றம் செய்யும்போதும் சரி அவர அப்டித்தான் பாத்திருக்கேன். மொதல்ல கலைக்களஞ்சியம்னு சொன்னப்ப எங்களுக்கு ஒன்னும் புரியல. முப்பிடாதி ஒரு வாரத்துல பிடி கெடச்சு அவர்கூட எழுத ஆரம்பிச்சுட்டான். நான் சும்மா அவங்க ரெண்டு பேரும் எழுதி வைக்கறத அடுக்க ஆரம்பிச்சேன். ஒன்னு இல்ல ரெண்டு இல்ல ஆயிரம் தலைப்புங்க. ஆயிரத்த அடுக்கி வைக்க முடியாதுன்னு நினச்சா ரெண்டாயிரமாச்சு, ஐயாயிரமாச்சு, அது பத்தாயிரமாச்சு. மூச்சு முட்டிபோச்சு. எந்தத் தலைப்புக்கு அடுத்து எது வரனும், எதுக்குள்ள ஒரு தகவல சொருகனும்னு கொஞ்சங்கொஞ்சாமாட்டு புடிபட ஆரம்பிச்சது. ஒன்னு இன்னொன்னு கூட எப்டி தொடர்பு ஆகுதுன்னு புரிஞ்சது. கூத்துல வேஷங்கட்டி ஆடும்போது ஜனங்க கைதட்றத கேக்கும்போது தான் அப்டி ஒன்ன அனுபவிச்சிருக்கேன். என் மண்டைக்குள்ள சிலந்தி ஒன்னு கூடு கட்டுத மாதிரி ஜிவ்வுன்னு இருந்துச்சு. ஒரு நாளு அது எனக்கு வசமாட்டு புடிபட்டுப் போச்சு. தெய்வந்தேன்ன்னு தோணுச்சு. நடுராத்திரில யார்கிட்டயும் சொல்லிக்காம மெரீனா பீச்சுக்கு அழுதுக்கிட்டே ஓடிப்போனேன். அந்தக் கடலுக்கு மொனைல நின்னு அத பாக்கும்போது அது என்ன இழுத்துக்கிட்டுப் போற மாதிரி இருந்துச்சு. எவ்ளோ பெருசு. அத விட பல மடங்கு பெருசா தெரிஞ்சது ஆசான் இருந்த வீடும், அந்தக் காயிதங்களும். அதுல எழுதுன எழுங்களுக்கு முன்ன நானெல்லாம் எவ்ளோ சின்னவன்னு புரிஞ்சது.” என்றார். மீண்டும் அமைதியானார். எங்கோ வானம் மிக அருகில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பவர் போல சாளரத்தை மேலும் வெறிக்க ஆரம்பித்தார்.
”உள்ள சுத்தமா எந்தக் கள்ளமும் எதிர்பார்ப்பும் இல்லாம வேலைல இருக்குதவனுக்குக் கடவுள் காட்றதுண்ணே” என்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்டேன். இயல்பாகவே ”அண்ணே” என்று கூப்பிட்டது அவரை நெகிழச் செய்திருக்கவேண்டும். அவர் மேலும் இறுக்கமாக என் கைகளைப் பிடித்துக் கொண்டார். காலையில் நண்பர்களுடன் நாட்டில் அமலிலிருந்த எமர்ஜன்ஸி, இந்திராகாந்தி, விலையுயர்வு எனப் பேசிக் கொண்டிருந்த யாவும் இந்த அனுபவத்திற்கு முன் உருகிக் கொண்டிருப்பதாகப்பட்டது.
***
“சார். செக்ரட்ரி சார் அந்த நாடகக் கலைக்களஞ்சியம் தொகுப்புகளோட இண்டெக்ஸ் பேஜ் உள்ள புக்க கேக்கறார்.” என லட்சுமணன் வாத்தியார் சொன்ன அன்றுதான் நான் ஒருமாத கால விடுப்பில் இருந்து வந்திருந்தேன். நுரையீரலில் நீர் கோர்த்துள்ளது என டாக்டர் சொன்னார். தூசுகள் குவிந்த நுரையீரலில் நீருக்கு எங்கிருந்து இடம் வந்தது என நான் கேட்டதை அவர் நகைச்சுவையாகக் கருதாமல் வீட்டில் இருக்கும்படி கட்டளையிட்டார்.
”சார். அத போன மாசமே டைப் அடிக்கச் சொல்லி முத்துலட்சுமி கிட்ட குடுத்துட்டேனே” என்றேன்.
“இல்ல சார். மொதல்ல அவங்க கிட்ட தான் கேட்டேன். இல்லன்னுட்டாங்களே” என்றார்.
”எங்கையும் போக வாய்ப்பில்ல சார். கடைசியா நான் வாசிச்ச ராவணேச நாடகத்தைப்பத்தின தகவல தான் இந்த ஒரு மாசமா அசை போட்டிருந்தேன். இருங்க பாக்கறேன்” என்று மெதுவாக எழுந்து ஒவ்வொரு ரேக்காக பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு தூரத்திலிருந்தாலும் கண்டுபிடித்துவிடக்கூடிய அணுக்கமான பொருளொன்று என்னை விட்டு அகன்றிருந்ததை உள்ளூர உணர முடிந்தது. சிறு பதட்டமும் வலியுமாக உள்ளம் சூடாக ஆரம்பித்தது. அருகிலிருந்த முத்துலட்சுமியிடம் பேச மனமில்லாமல் அவள் காலுக்கடியில் குவித்துவைக்கப்பட்டிருந்த புத்தகங்களையும் துழாவிக் கொண்டிருந்தேன். அவளுக்கும் என்னைப் பார்க்க விருப்பமில்லாமல் இருந்திருக்கலாம். அல்லது வழக்கம் போல வீட்டுப் பிரச்சனையாக இருக்கலாம். மிடுக்காக உட்கார்ந்து முகத்தை இறுக்கமாக வைத்து தட்டச்சிட்டுக் கொண்டிருந்தாள். கேட்கலாம் என்று மனம் ஒருபுறம் சொன்னாலும் விடுப்புக்குச் செல்லும் முன் அவளைத் திட்டி சண்டை செய்த சம்பவம் நினைவுக்கு வந்தது. பொதுவாகவே தட்டச்சிடுவதற்கு அவளுக்கு வரும் சிபாரிசுகளைத்தான் முதலில் கவனிப்பாள். இந்தக் கலைக்களஞ்சியத்தைக் கொடுத்து அதன் முக்கியத்துவத்தைச் சொன்னபோது அவள் அசிரத்தையாக இருந்தபோது கோபம் வந்து திட்டிவிட்டேன். என்ன இருந்தாலும் அத்தனை மூர்க்கமாக நான் திட்டியிருக்கக்கூடாது தான். எத்தனை கட்டுப்படுத்தினாலும் அதிகார மட்டத்தில் கீழிருப்பவர்கள் மேல் வாய்ப்பு கிடைக்கும் போது கோபத்தைக் காட்டும் சாதாரண அதிகாரி தான் நானும். அதில் அன்று நிறைவு இருந்தது. ஆனால் கீழிருப்பவர்களால் மட்டுமே செய்ய முடியும் சில உபாயங்களுக்கான நேரம் வரும் போது அவர்கள் மிகச் சரியாகப் பழிவாங்கி விடுவார்கள். அவளிடம் கேட்கலாம் என்று தோன்றியது. ஒரு வேளை தெரிந்தாலும் அவள் சொல்லப்போவதில்லை என்று நம்பினேன்.
“சார். எங்க போய்டப் போகுது. இங்கதான் இருக்கும்” என்று லட்சுமணன் வாத்தியார் என்னை ஆறுதல் படுத்தும் தோரணையில் கூறினார். நான் பதட்டமடைவதோ பயத்தைக் கண்ணில் காட்டுவதோ இங்கு வீழ்ச்சியாகக் கருதப்படும் என்பதால் முகத்தைச் சலிக்கும் கோபமான தொணிக்கு மாற்றிக் கொண்டேன்.
“ரெக்கார்ட் ரூமுக்குன்னு ஒரு மரியாத இருக்கு சார். எல்லாம் வெள்ளக்காரன் நிர்வாகம் பாத்துக்கிட்டு இருந்த வரை சரியா இருந்தது. என்னிக்கு நம்ம கைல விட்டுப் போனானுவலோ அன்னைக்கிருந்தே எல்லாம் பாழா போச்சு.” என என் கையாலாகாததனம் வெளிப்படும்போதெல்லாம் சொல்லும் தேய்ந்து போன வரிகளைச் சொன்னேன்.
“சார். தப்பா எடுத்துக்காதீங்க. யாரும் எடுத்து ஒளிச்சு வச்சிருப்பாங்களோ” என்று மெல்லமாக என் காதருகில் வந்து முதல் சந்தேகத்தை எழுப்பினார். இருக்கலாம் என்று மூளை சொல்லியது. நான் சண்டை போடாத ஆள் இந்தக் கல்லூரியில் இல்லை. இந்த ரெக்கார்ட் ரூமுக்கான மரியாதை கொடுக்காத அனைவரிடமும் சண்டை பிடித்துள்ளேன். இங்கு ஒழுங்காக வேலைக்கு வராத வாட்சுமேன், தவறி புத்தகங்களிலும், ரெக்கார்ட் ரூமிலும் டீயைச் சிந்தும் டீக்கடைக்காரப்பையன், டைப்பிஸ்ட் முத்துலட்சுமி, விவஸ்தையில்லாமல் ரெக்கார்ட் ரூம் சாவியை டீக்கடைக்காரரிடம் கொடுத்துச் செல்லும் ஓ.ஏ; அவ்வபோது நான் முகத்தைச் சுழிக்கும் இந்த லட்சுமணன் வாத்தியார் என எத்தனை பேர். அடிமட்டத்திலிருந்து மேலிருப்பவர்கள் வரை என்னை என் நலனை விரும்புபவர்கள் என ஒருவரையும் என்னால் நினைவு படுத்தக் கூட முடியவில்லை.
“சார். போனமாசம் நீங்க ஓ.ஏ. அப்பாதுரைய திட்டும்போதே நினச்சேன் சார். இப்டி ஏதும் ஆகும்னு. அவன் சிபாரிசுல வந்தவன். ஆள்பலம் ஜாஸ்தி” என்றார் அக்கறையான தொணியில்.
”பின்ன என்ன சார். அவனவன் பி.ஏ. படிச்சிட்டு வேலையில்லாம வீட்ல சும்மா ஒக்காந்துட்டு இருக்கான். இவனுக என்னடான்னா அரசியல்வாதிங்க, பெரியாளுக சிபாரிசுல வேலைக்கு வர்றது. ஒன்னும் வேலை பாக்கலனாலும் பரவால்ல சார். இந்த ரெக்கார்ட் ரூம்ல ஒக்காந்து குடிக்கறதும்… வாய்ல சொல்ல முடியல சார். பேலாதது ஒன்னுதேன் கொற” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதெ கை நடுங்க ஆரம்பித்தது.
”புரியுது சார். இருந்தாலும் ரிட்டயர் ஆகப்போற சமயத்துலயாவது யார்கிட்டயும் வச்சுக்காம இருக்கலாம்லயா. அரசாங்க உத்தியோகத்துல அமைதியா வேல செஞ்சிட்டு இருக்கவங்களையே மொறையா ரிட்டயர் ஆகிப்போக விடமாட்டானுக. இதுல எல்லார்கிட்டயும் சண்ட வழிச்சிட்டு இருந்தீங்கன்னா இப்டித்தான்” என்றார் மெல்லிய கடுப்புடன்.
“போனா போது சார். மனசு விட்டுப்போச்சு. ரெக்கார்டு ரூமுக்குன்னு ஒரு ப்ரொசீஜர் இருக்கு. எனக்கு முன்னாடி இருந்த நாராயணசாமி முதலியார் இங்கயிருந்து போறதுக்கு முன்ன எனக்குச் சொல்லிக் குடுத்தது. அவருக்கு அனந்தைய்யர் சொல்லிக்குடுத்தது. அவருக்கு டேவிட் சார் சொன்னதுன்னு ஒரு தொடர் சங்கிலி சார் இது. ரெக்கார்ட் ரூம் கீப்பர் வந்த பிறகு தான் ரெக்கார்ட் ரூம தொறக்கனும். அவர் வீட்டுக்குப் போன பிறகு ஓ.ஏ. பூட்டி சாவிய பாதுகாக்கறதுக்குன்னு இருக்க ஒரு வாட்ச்மேன்கிட்ட சீல் போட்ட கவர்ல குடுத்துட்டுப் போவனும். இப்ப நம்ம யாருகிட்ட குடுத்துட்டுப் போறோம் சொல்லுங்க?”
“அதான் ஊருக்கே தெரியுமே. எதுத்தாப்ல இருக்க டீக்கடைல” என்று சொல்லி வாயைப் பொத்திக் கொண்டே சிரித்தார்.
”அதுமட்டுமில்ல சார் ஒரு ரெக்கார்ட எடுக்க என்ன மொற, வைக்க என்ன மொற, அதோட போக்கையும் வரத்தையும் கண்காணிக்க மெயிண்டெயின் பண்ற புத்தகத்துக்கான வழிமொற, புத்தகத்துல படிஞ்ச தூசிகள தட்ட என்ன மொறய கடைபிடிக்கனும், எந்த லிக்விடை ஊற்றி இந்த ரூம கழுவனும், எந்தப் பூச்சி தெளிப்பான தெளிக்கனும், எத்தன வருசத்துக்கு ஒருவாட்டி பிரதி எடுக்கனும், எந்த அட்டை போடனும், அதுக்கு என்ன பசை பயன்படுத்தனும், ஒரு ரெக்கார்ட்ல கரெக்ஷன் பண்ணனும்னா என்னென்ன புரொசீஜர் ஃபாலோ பண்ணனும், இப்டி எல்லாத்துக்கும் வெள்ளக்காரன் மேனுவல்னு ஒன்னு குடுத்துட்டு போனான். டிபார்ட்மெண்ட் எக்ஸாமுக்கு மத்தரம் பிட் அடிக்கத்தேன் அந்த புத்தகத்த நம்ம பயலுவ தேடி வருவானுக. அதையும் எடுத்துட்டுப் போனா திருப்பி குடுக்கமாட்டானுக. எந்த முறையையும் யாரும் ஃபாலோ பண்றதில்ல சார். யாரையும் ஏதும் சொன்னோம்னா இப்டி ரெக்கார்டுகள எடுத்து ஒளிச்சி வச்சு உயிர வாங்குவானுக” என்று புலம்பிக்கொண்டே தேடுதலில் தீவிரமானேன். பெரும்பாலும் பலமுறை இதே தேய்ந்துபோன வார்த்தைகளைக் கேட்ட லட்சுமணன் வாத்தியார் ஏதும் சொல்ல மனமில்லாமல் மெதுவாக நகர்ந்து சென்றதை உணர முடிந்தது.
***
பீமனகரி தேவி கோயிலைக் கடந்த போது அங்கு கோயில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த பெரியவர் என்னைச் சந்தேகப் பார்வையோடு பார்ப்பது போன்ற பாவனையில் “தம்பிக்கு ஆரு வேணும்” என்று கேட்டார்.
“சுப்ரமணியம்னு ஒரு ஐயா. நாடகக்காரர்…” என இழுத்துக் கொண்டிருந்தேன்.
அவர் யோசிக்காமல் “ஓ ஆண்டியா. மேக்காமத் திரும்பிப் போங்க. கடைசிக்கு முந்தின வீடு” என்று சொல்லிவிட்டு நான் சரியாகப் போகிறேனா என்பது போல முறைத்துப் பார்த்தார்.
மேற்கே வந்த சாலையில் திரும்பி நடந்தபோது வீடுகள் இருக்கிறதா என்ற ஐயம் தோன்றுமளவு நிசப்தமாக இருந்தது. இடது பக்கம் முழுவதும் தென்னை மரங்கள் நிறைந்திருந்தன. வீட்டு முகவரி எழுதி வைத்திருந்த அட்டையை எடுத்துத் கதவு எண்ணைத் திரும்பவும் பார்த்துக் கொண்டேன். பச்சைகளுக்கு நடுவே தென்பட்ட ஓடு வேய்ந்த பெரிய வீடுகளின் ஒவ்வொரு கதவு எண்ணையும் துழாவிக் கொண்டே நடந்தேன். வீட்டை நெருங்கும்போது பதட்டம் அதிகமாகிக் கொண்டே வந்தது. எப்படிச் சொல்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது எனப் பலவாறான ஒத்திகைகளை இந்த விசயம் தெரிய வந்த அன்றே ஆரம்பித்திருந்தேன். பின்னும் பேருந்தில் ஏறியதிலிருந்தே “ஐயா…” என ஆரம்பித்து வார்த்தைகளைப் பலவாறாகக் கோர்த்து எந்த இடத்தில் கண் கலங்குவேன் என்பது முதற்கொண்டு பலமுறை சொல்லிப் பார்த்திருந்தேன். கதவைத் திறந்தது சுடலை என உணர முடிந்தது. இந்த ஐந்து வருடங்களில் ஏதேதோ மாறிவிட்டது அவரின் சுடர்மிகுந்த கண்களைத் தவிர. அரைமயக்க நிலையிலிருந்து விழித்தவன் போல மந்தமாக இருந்தவர் என்னைப் பார்த்ததும் ஒரு கணம் நின்று ஊகித்து “வாங்க” என்று மலர்ச்சியாக வரவேற்றார்.
“சுப்ரமணியம் ஐயா”
“உள்ளவாங்க ஆசான் உள்ளதேன் இருக்கார்” என்று சொல்லிக் கொண்டே புத்தகங்களும், காகிதங்களும் சிதறிக்கிடக்கும் அறையில் எனக்கு ஒரு இடத்தைத் தேடிப்பிடித்து அங்கு நாற்காலியைப் போட்டார். துருப்பிடித்த இரும்பின் வாசமும், நாற்காலியை விரிக்கும்போது வந்த ஒலியும் நீண்ட நாட்களாக அது விரிக்காதிருந்ததென்பதை உணர்த்தியது.
”ஐயா.. ஐயா” என அதட்டல் தொனியில் சுடலை கூப்பிட்டார். “காது கொஞ்சம் கோளாராகிப்போச்சு அதான்” என்று சொல்லி என்னைப் பார்த்து அசடு வழிந்தார். மெதுவாகத் தள்ளாடியபடி வந்தவரை சுடலை அலுங்காமல் பிடித்துக் கொண்டே வந்து என் முன்னே இருந்த மர நாற்காளியில் உட்கார வைத்தார். அவரின் உருவத்தைக் கண்டவுடன் கால்கள் உதற ஆரம்பித்தது. அவர் என் கண்களைச் சில மணித்துளிகள் உற்று நோக்கிக் கொண்டிருந்தார். பின் எங்கிருந்தோ பேசுபவர் போல, ”சொல்லுங்க மோகன் புத்தகம் அச்சிட்டாச்சா. சொன்னா நானே பாக்க வந்திருப்பேனே. இத்தன நாள் ட்ரிப்ளிகேன்ல தான் இருந்தேன். பையன் பீஹாருக்குக் கூப்பிட்டுட்டே இருக்கான். கடைசியா எல்லார் கூடவும் கொஞ்ச நாள் இருக்கலாம்னு இங்க வந்துட்டேன்” என்றார்.
”ஆமாங்கய்யா கேள்விப்பட்டேன். ட்ரிப்லிகேன் வீட்டுக்குப் போனப்ப தான் அங்க வீட்டுக்காரங்க சொன்னாங்க”
“என்ன இவ்ளோ தொலவட்டு..”
“ஐயா…” என்று விழுங்கிக் கொண்டிருக்கும்போது, அதன் தீவிரத்தை உணராதவராய் அருகிலிருந்த தான் எழுதிக்கொண்டிருந்த புத்தகத்தை எடுத்து, “பாத்தீங்களா ராம நாடகப் பிரதி. ரொம்ப பழசு. நாங்க நாடகம் போடறப்ப எங்க கூத்தாசான் இத வச்சுதேன் சொல்லிக் குடுப்பாரு.” என்றார் ஆர்வமாக. எனக்கு உடல் உஷ்ணம் ஏறியிருந்தது. நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே நடுக்கத்துடன் அந்தப் பிரதியைத் தொட்டேன். தொட அருகதையல்லாத ஒன்றைத் தொட்டதன் கூச்சம் வந்து ஒட்டிக் கொண்டது.
“நீங்க உங்க அப்பா விட்டுப்போன நாடகப்பனுவல்கள பிரதி எடுத்தீங்களா” என்று கேட்டார். நடுங்கியபடி அவரின் மெல்லிய கைகளைப் பிடித்துக் கொண்டேன். சுருக்கங்கள் விழுந்து எழும்பு கெட்டி தட்டிய அந்தக் கைகளைக் கண்களில் ஒற்றிக் கொண்டு அழுதேன். அவர் என் தலையில் கைவைத்துத் தடவினார். அவர் கண்களைச் சந்திக்க மனமில்லாமல் “ஐயா நீங்க கைப்பிரதியா கொடுத்த நாடகக் கலைக்களஞ்சியம் தொலைஞ்சு போச்சு. எப்படின்னு தெரில. அது பெரிய பிரச்சனையாகி என்னய சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க” எனப் படபடப்புடன் சொல்லி முடித்தேன். எங்காவது நிதானமாக, சற்றே குற்றவுணர்ச்சியை வெளிக்காட்டி சொல்லியிருக்கலாம் எனச் சொல்லி முடித்தபோது தோன்றியது.
சுப்பிரமணியம் ஐயா என் கைகளை விடுவித்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார். முதுமையினால் வந்த நடுக்கமா அல்லது நான் சொன்ன விஷயத்தால் வந்த நடுக்கமா என்று அறியாத ஒரு நடுக்கத்தை அவர் கால்களிலும் கைகளிலும் பார்த்தேன். அறையே மெளனமானது. காகிதங்களின் சலசலப்பு மட்டும் உள்ளறையிலிருந்து தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. நீண்ட பெருமூச்சு ஒன்றை நடுக்கத்துடன் விட்டுக் கொண்டு வேறொரு காலத்திலிருந்து திரும்புபவர் போல, “ஓ அதுவா. அறுவதுனாயிரத்துக்கும்மேல தலைப்பிருக்கும்.” என்று சொல்லிக் கொண்டே வெறித்துப் போய் உட்கார்ந்திருந்தார். பின்னர் மீண்டும் நிமிர்ந்து உட்கார்ந்தார். அச்சூழலைச் சட்டை செய்யாதவர்போல, அதைக் கடந்துவிட்டவர் போல, அந்தக் கலைக்களஞ்சியத்தை யாரோ செய்தது போல ஒரு தோரணை அவரில் வந்திருந்தது.
திடீரென எழுந்து உள்ளறைக்கு விரைந்து நடுங்கிக் கொண்டே சென்றார். விழுபவரைப் பிடிக்க பின்தொடர்பவனைப்போல நான் அவரைத் தொடர்ந்தேன். அந்த அறை முழுவதும் களைந்து கிடந்த புத்தகக் குவியல்களுக்கு மத்தியில் வேகவேகமாகச் சில புத்தகங்களைப் பிரித்துப்பார்த்துப் பின் ஒரு கத்தையான தூசு படிந்த காகிதத் தாள்களை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு “வாங்க போவோம். கிடச்சிடுச்சு” என்று சொல்லிக் கொண்டே துள்ளி வந்தார். அதைப் பிரித்தெடுத்து எனக்குக் காண்பித்தார். ”பொருளடக்கம். முப்பிடாதி எடுத்தது. எல்லாத்தையும் காலேஜ்ல ஒப்படைக்கறதுக்கு முன்னாடி தலைப்புங்கள மட்டும் ஒருவாரம் ஒக்காந்து கைப்பிரதி ஒன்னு எடுத்து வச்சான்.” என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. நான் நிராதரவான பாவனையை முகங்களில் படரவிட்டுக் கொண்டேன்.
“பரவால்ல விடுங்க”
”ஐயா. மன்னிக்கனும். என் கவனக்குறைவுதான்” என்றேன் மெதுவாக.
அவர் என் தோள்களைத் தட்டி, “பரவால்ல தம்பி. இன்னும் இருபது வருஷம் இருந்தா மறுபடியும் பண்ணிடலாம். இந்தா இப்ப முப்பிடாதியும், சொடலையும் இருக்கானுவ. பத்து வருசத்துல செஞ்சிடலாம்” என்று சொல்லிவிட்டு அந்தப் பொருளடக்கம் இருந்த புத்தகத்தைத் தன் மடியில் முழுவதும் படியும்படி வைத்துக் கொண்டு கைகள் நடுங்கியபடி ஒவ்வொரு பக்கமாகப் புரட்ட ஆரம்பித்தார்.
“ஐயா. இனி நானும் இருக்கேன் உங்கக்கூட.” என்றேன். ஏன் அப்படிச் சொன்னேன் என்று தெரியவில்லை. அது தான் இனி நான் இருக்கப்போகும் இடம் என அந்தக் கணம் தான் முடிவெடுத்தேன். அந்த எண்ணத்தை ஒரு கணம் கூட பரிசீலித்துப் பார்க்க மனம் திரும்பவில்லை.
அவர் என்னை நிமிர்ந்து பார்த்து “அப்டீன்னா ஐஞ்சு வருஷம் போதுமே” என்று புன்னகைத்தார்.
மிக உன்னதமான கதை, பல்வேறு அடுக்குகள், அற்புதமான வாசிப்பனுபவம், நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள் !!
manithan thaan yar ,than iyangu thalam ethu ena unarnthu, athil oori ulaithal, athil varum nimirvum aananthamum endrum namai margandeyan ena thigazha seyum…
thank you ramya mam and vallinam for this master class work.
மிக அற்புதமான கதை. உண்மைக் கதை என்பது கூடுதல் சிறப்பு.??
தூசி என்பது எவ்வளவு கனம் மிக்கது…
மனதை கனக்க வைத்த கதை!
Beautifully written story. Great detailing with respect to preserving books and journals in record rooms. The phrases such as – “Dhoosu panicharivu pola..” – are similar to the ones used by JeyMo. The bitterness associated with stage actors, dramas, and the phrase that defines the same – Azhivin Sakthi — gradually disappears, and culminating with the biggest “Aakka Sakthi” – and this act probably would redeem Mohan. The ending has a typical JeyMo touch – like what you see in the short story “Aram” (part of Aram). I have read Ramya’s prose and comments in JeyMo’s site, read stories, and liked them. Ramya has amazing skills and looking forward to reading more of her stories.
தூசி என்பது எவ்வளவு கனம் மிக்கத்து என்று தெரிந்து கொண்டேன்
very nice sister.