ஆசான்

“வீட்டுக்கு வந்து ரெண்டு மணிக்கூட ஆகல, அதுக்குள்ள எங்கல போற? ஒனக்கு பிடிக்குமேன்னு ரசவட செஞ்சு வச்சா, ஒரு வாயி திங்கல. போக்கு சரியில்ல கேட்டியாடே…” நான் சட்டையை மாற்றும் போது, கூடவே அம்மையின் அர்ச்சனையும் ஆரம்பித்தது. “வெளிய போறதுலாம் சரி, வேற ஏதாவது பண்ணிட்டு வந்த, வீட்டு நடைல ஏறக் கூடாது. அப்பனுக்க எல்லா கொணமும் தப்பாம வந்திருக்கு,” அம்மை சொல்லிக் கொண்டே நான் கொண்டு வந்திருந்த பையைத் திறந்து அழுக்குத் துணிகளை வெளியே போட்டாள். பூஜையறையில் அப்பாவின் புகைப்படம் கையால் தொடுத்த மல்லிகைப்பூ ஆரம் சூடியும், அதன் முன்னே வைக்கப்பட்டிருந்த பால் ஆறியும் இருந்தது. அப்பா எடுத்த ஒரே பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அவரின் கண்கள் குடித்துக் குடித்துப் பழுத்து இருந்தன. அவரை அன்றைக்கு ஸ்டூடியோவிற்கு அழைத்து வர பாட்டாதான் உதவினார், “லேய், போட்டோ எடுத்துரு. தேவைப்படும்,” பாட்டா சொல்லிவிட்டு அப்பாவைப் பார்த்து மூச்சை இழுத்தார்.

“சரி, காலைல பாட்டா கடைல சாப்புட்டுக்கேன். ஆமா, பாட்டா எப்புடி இருக்காரு?” சந்தேகத்துடன் கேட்டேன். பாட்டா இரண்டு மாதம் முன்பு போதம் இல்லாமல் விழுந்துவிட்டார் என்று அம்மைதான் அலைப்பேசியில் அழைத்தப் போது சொல்லியிருந்தாள். “அவருக்கென்ன மண்ணு மாறி இருக்காரு. வந்த அன்னைக்கும் வீட்டுல சாப்பிடாதே. மத்தியானம் எப்புடி ஐயா வருவீங்களா?” அம்மையின் கோபம் மரியாதையில் தெரிந்தது. நேராக அவளருகே சென்று, இறுக்க அணைத்து கன்னத்தில் முத்தமிட்டேன். “மக்கா… வெசர்ப்பு… விடு மக்கா. எம்மேல நாத்தம் அடிக்கு. விடு, நீ குளிச்சாச்சு மக்ளே,” நான் விடவும், “பாத்து போயிட்டு வா சரியா. மத்தியானக்கு சாள வாங்கவா? இல்ல பாறத் துண்டம், நெய் மீனு வாங்கவா?”

“சாள வாங்கும்மா. புளிய ரொம்ப சேத்துராத, அப்புறம் பச்ச மொளவ கொதிக்க முன்னாடி கீறிப் போடு. தக்காளி நல்ல பழுத்து இருந்தா கூட சேக்காத. வேற தக்காளி இல்லைனா புளிய கொறச்சு ஊத்து. மாங்கா போடதா இருந்த, ரொம்ப புளிக்காத காயா வாங்கு. மைய அவியக்கூடிய கெழங்கா பாத்து வாங்கு. தேங்கா அரைக்கும் போது…” நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “நிப்பாட்டுல, செய். எனக்கு தெரிஞ்சத சமப்பேன். விருப்பம் இருந்தா தின்னு. கிளாஸ்லா எடுத்துட்டு இருக்கான்,” அம்மை திட்ட ஆரம்பிக்கவும் பூனை போல வீட்டை விட்டு கிளம்பி தெருமுக்கு வந்ததும் திரும்பிப் பார்த்தேன். அம்மை வீட்டுநடையில் நின்றுகொண்டிருந்தாள். ஒரே அச்சில் ஒரு புன்னகை நான் திரும்பி பார்க்கும் வரை காத்துக் கொண்டிருக்கும்.

ஓலைக் கடை அப்படியே இருந்தது. கடைக்குள் செல்லும் போதே, “லேய், மணிகண்டா. எப்போ மெட்ராஸ்ல இருந்து வந்த மக்கா? சோமா இருக்கியாடே,” பாட்டா இட்லிக் குட்டுவத்தை விறகு அடுப்பில் வைத்துக் கொண்டே கேட்டார். நெற்றி நிறைத்து திருநீறும், புருவ மத்தியில் மஞ்சணையும் எப்போதும் போலவே இருந்தது. அவரைக் கண்டதும் வரும் அதிர்வு உடலை வெம்மையாக்கியது. சட்டையணியாத உடலில் இறுகியிருக்கும் தொப்பை தொளதொளவென்று ஆகியிருந்தது. அவரின் முதுகுக் கூனால் எப்போதும் போல சற்று குனிந்து நின்றார்.  அவரின் கைகளின் நடுக்கம் சமைக்கும் நேரம் தவிர்த்து, எந்நேரமும் அவரோடு இருந்தது. அவரின் கண்கள் என்னைக் கூர்ந்து கவனித்தன. பாட்டாவை முதன்முதலில் பார்வதி திருமண மண்டபத்தின் அடுப்பறையில் அப்பா என்னைக் கூட்டிக் கொண்டு போய் காட்டியபோது, கூன் விழுந்த முதுகானாலும் அவரின் உயரமும், உடல் முழுக்க அப்பிய சந்தனமும், நெற்றி நிறைத்த திருநீறும், மஞ்சணையும் சுடுகாட்டு படித்துறையில் குளிக்க போகையில் பார்க்கும், ஆலமூட்டின் அடியில் உயர்ந்து நிற்கும் மாசாண சுடலையைப் போலவிருந்தது. “ஆசானே, இதாக்கும் நம்ம சீமப் புத்திரன்,” என்னைப் பார்த்ததும், “மொகத்தில தெளிச்சல் இருக்கேடே. உன் கஷ்டம்லாம் இவன் கையாலதான் தீரும்.” சொன்னவர்  அப்பாவின் முகத்தை உன்னிப்பாய் பார்த்தார், “லேய், காலைலயே மண்ணெண்ண  ஊத்தியாச்சுப் போல.”

அப்பா தலையைச் சொரிந்து கொண்டே சொன்னார், “பய இருக்கான் ஆசானே.” பாட்டா என்னைத் தூக்கினார், “உங்கப்பன் சீரு தெரியும். நல்லா படிக்கணும் கேட்டியாடே. எங்க கைய காட்டு.” கையையே சிலநொடி பார்த்தவர், “எங்க போனாலும் கடைசில பிடிச்ச வேலதான் பாப்பான் கேட்டியாடே. கெட்டிக் காரனாயிட்டு பேரப் பிள்ள வரனும்.” அவர் என் நெற்றியில் முத்தமிடும் போது பன்னீரின் வாசனை வந்தது.

பாட்டாவிற்கு வீடு என்றொன்று தனியே கிடையாது, கடையிலே தங்கிக்கொள்வார். ஒழுகினசேரி முழுக்க விசேஷ வீடுகளுக்குச் சமையல் பாட்டாதான். அவரின் சிஷ்யப் பிள்ளைகள் ஆறுமுகமும் நம்பியும் தனியே தொழில் பார்த்தாலும், வேலையில்லாத நாட்களில் பாட்டாவின் ஓலைக் கடையில் அவர்களைக் காணலாம். அப்பா ஒழுங்காக வேலைக்குச் செல்வதில்லை. “உங்க அப்பனும் ஆளாய் இருக்கலாம். ஆனா அவனுக்குலாம் ஒரே இருப்பிடம் நிலைக்காது,” பாட்டா என்னை அந்நேரம் கண்டால் மறக்காமல் சொல்வார். ஆனாலும் அசைவ உணவுகள் ஆர்டரில் இருந்தால் அப்பாவைக் கண்டிப்பாய் பாட்டா அழைத்துச் செல்வார். அப்பா ஆர்டர் முடிந்து வீட்டிற்கு வரும் போது ராஜபோதையில் இருந்தாலும் கையில் எனக்கான பொட்டலம் இருக்கும். பாட்டாவிற்கும் அப்பாவிற்கும் இரவு உறக்கம் சுடுகாட்டில் தான். அப்பா இறந்த அன்று மட்டும் பாட்டா சுடுகாட்டிற்கு உறங்கச் செல்லவில்லை. சித்திரை மாதக் கொடையில் பாட்டாவின் சமையல் தான் எல்லா வருடமும், அதற்காகக் காசு வாங்கமாட்டார். மாடன் சாமிக் கொண்டாடி ஒவ்வொரு முறையும் முதல் ஊட்டுப் படைப்பைப் பாட்டவிற்குத் தான் கொடுப்பார். சில நேரங்களில் மாடன் இறங்காத சமயங்களில் பூசாரி பாட்டாவை அழைத்துச் சாமிக் கொண்டாடிக்கு திருநீறு பூசச் சொல்வார். பாட்டா மாடனை வேண்டி திருநீற்றைச் சாமிக் கொண்டாடியின் நெற்றியில் பூசியவுடன், நையாண்டி மேளக் குழுவினர் மாடன் அழைப்பை வாசித்தால் உடனே மாடன் இறங்கிவிடுவான்.

 நான் பாட்டாவின் அருகில் செல்லவும், “அப்பன பாத்த மாறியே இருக்க மக்கா. அவனுக்கு அவசரம் சீக்கிரம் போய்ட்டான். என்ன சாப்புடுக?” கேட்டார்.

“ரசவட கொண்டா பாட்டா.”

“லேய் பேரனுக்கு ரெண்டு ரசவட கொடுல,” பாட்டா சொல்லிவிட்டு ஏற்கனவே வெந்த இட்லிகளைப் பெரிய சருவத்தில் எடுத்து வைத்தார். வாழையிலையை விரித்துத் தண்ணீர் தெளித்து, அடுப்பில் இளம்சூட்டில் இருக்கும் சட்டியில் இருந்து இரண்டு ரசவடையை சப்ளையர் அதிரசம் மாமா எடுத்து வைத்தார். வாழையிலையில் வடை விழுந்ததும் பெருஞ்சீரகத்தின், ரசத்தின் மணமும் சுகந்தமாய் எழும்பி மூக்கில் நுழைந்தது. நான் வடையை உள்ளங்கையால் அழுத்தி இலையில் பரப்பினேன், அதிரசம் மாமா அதன் மேலே தேங்காய் சட்னியை ஊற்றவும் நாக்கு துடிக்க ஆரம்பித்தது, ஒரு துண்டை எடுத்து வாயில் போடவும் நெஞ்சு நிறைந்தது. கடையில் வழக்கம் போல பண்டாரங்களும், ஜோசியக்காரர்களும், ஆட்டோக்காரர்களும் இருந்தார்கள். பாட்டா கடையில் எல்லாமுமே இன்றைய தேதிக்குக் குறைவான விலைதான்.

***

“அப்பா. அம்மையும் ரசவட வீட்டுல போடுகு. வேற கடைலயும் சாப்புட்டு பாத்தேன். ஆனா, பாட்டா கடைல கெடக்கிற ருசி வர மாட்டுக்கே!”

“மக்ளே. வட என்ன, சும்மா வடப் பருப்ப ஊறவச்சு அரைச்சு, பல்லாரி, கருவேப்பில,  கொஞ்சம் இஞ்சி, பெருஞ்சீரகம், பச்ச மொளவு, உப்பு சேத்து போட்டா வந்திருமா. இல்ல புளி கொறச்சு ஊத்தி, நல்லமொளவும், சீரகமும் கூட்டி, கொதிக்காம இளஞ்சூட்டுல ரசம் வச்சு, வடையப் போட்டா, அது ரசவட ஆயிருமா? பாதி பேரு நேத்து வச்ச மிச்ச ரசத்துல வடைய போட்டுருவானுங்க. அப்படிலாம் பண்ணலாமா? அதுக்கு அதுக்குன்னு ஒரு நேக்கு இருக்கு. இன்னொன்னு கைன்னு ஒன்னு இருக்குல்லா. யாருக்க கைல வடை போடதுன்னு வித்த இருக்குல்லா. எத்தற வருஷமா வட போடுகாரு. அந்த ருசி அந்த கைல இருக்கு.”

“அப்பனுக்கும் மகனுக்கும் வேற பேச்சே கெடயாது. மத்த நேரம் ஏதாச்சும் பேசுகீங்களா. வீட்டுல என்ன நடக்கு. கரண்ட் பில் மாச மாசம் யாரு கட்டுகா. சோறு நேரத்துக்கு எப்புடி வருகு. சமயல்னா மட்டும் பேச்சு நடக்கும். மத்த நேரம் விரோதிய பாத்த மாறிலா ரெண்டும் நடக்கும்”

“இப்போ எதுக்குட்டி சலம்புக. அப்படியாவது ரெண்டு பேரும் பேசுகோம்”   

***

ரசவடையைச் சாப்பிட்டதும், இரண்டு ஆப்பமும் ஒரு முட்டை ரோஸ்ட்டும் விழுங்கினேன். சாப்பிட்டு முடித்து கை கழுவி கல்லாப் பெட்டியருகே வந்து, “எவ்ளோ பாட்டா?” என்று கேட்கவும், “கொன்னு போடுவேன் பேசாம போ,” நுனிநாக்கைக் கடித்துத் தலையில் கொட்டினார். நான் சிரித்துக் கொண்டே வெளியே வரவும், “உங்க அப்பனுக்கு அவசரம்,” மெல்லிய புன்னகையோடு மீண்டும் சொன்னார். நேராக வீட்டிற்கு செல்லாமல் ஒரு சிகரெட் அடிக்கலாம் என்றெண்ணி ஆற்றங்கரையோரம் நீண்டு போகும் தண்டவாளத்தில் நடந்து, வழக்கமாய் அமரும் வேப்பமரத்திற்கு அருகில் சென்றேன். சிகரெட்டைப் பற்ற வைக்கும் போது கையில் சூடுப்பட்டது, விரல் எரிய ஆரம்பித்தது. வாயால் ஊதி, வாய்க்குள் வைத்துச் சப்ப ஆரம்பித்தேன். கழிந்த வருடம் நடந்த சித்திரை மாதக் கொடைக்கு மாசாண சுடலை கோயிலுக்கு வந்த போது பாட்டா குடித்திருந்தார். “லேய், எனக்கு தொழில் சொல்லி கொடுத்தது கோச்சபிளாரம் அம்மையப்பன் ஆசானுக்கும். வண்ணாப் பயலுக்கு பாடம் எடுக்கேரே! மண்டைக்கு வழியில்லையா? கூட நிக்கவன் கேப்பான். அவரு அவனுகள அப்படியே முறைச்சுப் பாப்பாரு. ஒரு பய எதித்து பேச முடியுமா? அவரு போன பொறவு என்கூட எத்தனையோ பேரு இருந்தான் போனான். ஆனா நீ மட்டும் தான் எனக்க சிஷ்யப் பிள்ளன்னு திமிரா சொல்லுவேன். நீ இருக்க வர நான் கண்ண மூட பயந்ததே கெடயாது கேட்டியா. எனக்க முன்ன போயிருவான்னு தெரியும். எனக்கு பொறவு அம்மையப்பன் ஆசானுக்க பேர சொல்லவும், எம்பேர சொல்லவும் ஆளு இல்லாம போகும்டே. அது வரைக்கும் எனக்கு சாக்காலமும் கெடையாது,” அப்பாவும் பாட்டாவும் வழக்கமாய் அமரும் எரிமேடையில் பேசிக்கொண்டிருந்தார். நான் அருகே நிற்பதை அறிந்தவர், “பேரப் பிள்ள வந்துருக்கான் டே. பாத்தியா?” எனச் சொல்லவும், கால்கள் நடுங்க, இதயத் துடிப்பு ஒரே நிமிடத்தில் எகிற அங்கிருந்து ஓடிவிட்டேன்.

அப்பா இருக்கும் போது நேரம் கிடைக்கும் போது சமையல் வேலைக்குச் சென்றேன். பன்னிரண்டு படித்து முடிக்கவும், “அப்பா நான் கேட்டரிங் படிக்க போறேன்,” என்று சொன்னதும், அப்பா அமைதியாகப் பேச ஆரம்பித்தார். “லேய், நா வெக்கைல கெடந்து படிக்க வைக்கது, நீயும் நாளைக்கு வெக்கைல நிக்கவா? பேசாம ஏதாச்சும் காலேஜ்ல போய் பார்ம் வாங்கிட்டு வா.” நான் அங்கேயே முகத்தைத் தொங்கவிட்டு நிற்கவும், அம்மை என்னை இழுத்துச் சென்றாள், “அடிக்காம இருக்கதே பெருசு. இதுல நீ என்ன சினிமா ஹீரோவா? மூஞ்ச தூக்கி வச்சுட்டு நின்னா. உங்க அப்பன் உடனே சரி மக்கா நீ பிடிச்சத படின்னு சொல்ல. அங்கேயே நிக்க. வெளிய எங்கயாவது போய்ட்டு வா”.

இரண்டு நாட்கள் எதுவுமே இயல்பாக இல்லை. அப்பாவை நேருக்கு நேர் சந்திக்க விருப்பமில்லை. வீட்டில் அவர் இருந்தால் எழுந்து வெளியே செல்வது வாடிக்கையானது. அன்றைக்கு வசமாகப் பாட்டாவையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். “பேரப் பிள்ள, அவனும் சொல்லது நியாயம் தானே. உனக்காண்டி தான சொல்லுகான். அடுப்படில கிடந்து வயிறு காந்ததுக்கா. எங்களுக்கு இதுதா எல்லாம். அப்பன விடு, உங்க அம்மை எதுக்காண்டி வேலைக்கி போய் கஷ்டப்படனும். உனக்காண்டி தான். அவளுக்காகக் கேளு. பாட்டா சொல்லது உனக்க நல்லதுக்கு தான்,” அந்தப் பேச்சுவார்த்தை நடக்கும் போதே நானும் வேறொரு படிப்பைப் படிக்க சம்மதித்தேன்.              

ஆனாலும் விடுமுறை நாட்களில் அம்மையை நச்சரித்துப் பாட்டாவுடன் சமையல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். “உங்க அப்பன் நல்ல சமையல்காரன் தான். என்னையும் மிஞ்ச வித்தை தெரியும். ஆனா அவனால முடியாது. அவனுக்கு போக்கு அப்படி, குடிக்காம இருக்க முடியாது அவனால. அவன் வைக்கிற பால் பாயசத்த மாறி ஒருத்தன் வைக்க முடியுமா? வாழக்கா தொவட்டலும், நாரங்காப் பச்சடியும் அவன் வைக்கிற பக்குவத்துல எனக்கே வராது கேட்டியா? எனக்கே சிலநேரம் சந்தேகம் வந்தா அவன்ட்ட தான் கேப்பேன்.” பாட்டா எப்போதும் அப்பாவின் திறமையைப் பற்றியே பேசுவார். எனக்கும் தேங்காய் திருவுவது, தடியங்காய், கத்தரிக்காய், மாங்காய், நார்த்தங்காய் போன்ற காய்களையே நறுக்கக் கொடுப்பார். அவர் தூங்கினால் ஒழிய இரவு நானும் உறங்கப் போவேன். இல்லையேல் அவருடனே இருப்பேன்.

“பாட்டா. கல்யாண வீட்டு அவியல, அதே பக்குவத்துல வீட்டுல வச்சாலும் டேஸ்ட் இங்க மாறி வர மாட்டுக்கே. சாம்பாருக்கும் அதே கூத்துதான். சொல்லிக் கொடு பாட்டா. வீட்டுல வச்சிப் பாக்கேன்,” பெரிய உருளியில் அவியல் காய்கள் வெந்த பிறகு அரைத்த தேங்காய் துருவலைச் சேர்த்து கிண்டிக் கொண்டிருந்த பாட்டாவிடம் கேட்டேன்.

என்னைக் கிண்ட சொல்லிவிட்டுப் பாட்டா ஆரம்பித்தார், “எண்ணிக்கன்னு ஒன்னு இருக்குலா மக்ளே. ஒரு வாழக்கா, தடியங்கா, கொஞ்சமா மலக்கறி சேத்து, ஒரு முறி அரைச்ச தேங்கா, கூட சேத்த ரெண்டு விரலு சீரகத்துக்கும், நல்லமொளவுக்கும் என்ன ருசியுண்டு. அதே நாலு செம்பு, அஞ்சு செம்பு சமைக்கும் போது, எவ்வளவு கூட சேக்கோம். அப்போ என்னாகும். ஒரு நல்லமொளவுக்குள்ள இருக்க காட்டம், நூறு மொளவும் ஒன்னா சேந்தா எவ்வளவு இருக்கும். ஆயிரம் மொளவுக்குள்ள எவ்வளவு இருக்கும். இதே தான் எல்லாத்துக்கும். அடுப்புச் சூட்டுக்கும் அளவுக்கும் ருசி மாறும்.” கீழே குனிந்து விறகை அடுப்புக்குள் தள்ளி நெருப்பு நின்று எரியுமாறு மாற்றி வைத்துவிட்டுத் தொடர்ந்தார், “நெருப்பு தான நமக்குலாம் சாமி. விஷேச வீட்டுக்கு வரக் கூடிய அத்தனை பேரும் மனசுல சஞ்சலம் இருந்தாலும் சந்தோசமா வாரான், இருக்க மொய்ய கொடுக்கான். சொந்த பந்தத்த பாக்கான், சிரிக்கான். பாரு அதான் நெருப்பு தன்னால ருசிய ஏத்தி விட்டுடும். இதே துஷ்டி வீட்டுக்கு என்ன சமைச்சாலும் ருசி வராது. சமைக்கவன் சூடம் ஏத்தி, அடுப்ப பத்த வைக்கும் போதே என்ன? எப்புடி? வரும்னு தெரியும் மக்ளே.” பாட்டா என் முதுகில் தட்டிக் கொடுத்தார், “உங்க அப்பனும் இப்படித்தான் கேள்வி கேட்டுட்டே இருப்பான்.” எனக்கு சமையலில் எல்லாமுமே பாட்டாவும் அப்பாவும் தான், சென்னையில் இருக்கும் போதும் அப்பாவை அழைத்தால்,  சமையலைப் பற்றிய பேச்சு கொஞ்சம் நீண்டு போகும், பாட்டாவிடமும் கொடுப்பார், சமையலே தொடரும்.

ஒரு கண்ணாடிக் கட்டிடத்தில் அங்குமிங்கும் ஓடும் நாற்காலியில் அமர்ந்தபடி எங்கோ பணப்பரிவர்த்தனைகள் செய்யும் நுகர்வோருக்கு அதில் இருக்கும் சிக்கல்களைப் புரியவைத்து, அவர்களை எங்களின் ஏதோ ஒரு ப்ரோடக்ட் வாங்க வைக்க வேண்டும். எப்போதுமே அன்பாய் ஆரம்பித்துச் சிக்கல்களை விளக்கி, குழப்பத்தை உண்டுபண்ணி, அதனை மெல்ல மெல்ல பயம் நோக்கி நகர்த்த வேண்டும். அதற்கான காரணத்தையும் புரிய வைத்து, பயத்தை விலக்க என்ன செய்ய வேண்டும், என உருவாக்கியவனே அதனை அழிக்கும் மாயவித்தை எங்களுக்குப் பயிற்சிவிக்கப் பட்டிருந்தது. என்னுடைய புரிதல்கள் இறுதியில் இங்கே நான் தேவையல்ல, என் சிந்தனைகள் தேவையல்ல, இங்கே அவர்கள் என்னுள் இருந்து என்னை இயக்கவே செய்கிறார்கள். எட்டு வருடம், ஒரு கீ கொடுத்த பொம்மையைப் போன்றொரு வாழ்க்கை. வேலையை விட்டு வந்ததை அம்மையிடம் இன்னும் சொல்லவில்லை. கையிருப்புக் கொஞ்சம் இருந்ததில் பயமின்றி தெளிவாக இருந்தேன்.

நெடுநேரம் வேப்பமூட்டின் அருகே அமர்ந்திருந்தேன். பழையாறு எவ்வித சுணக்கமும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. உச்சிவெயில் என்னைத் தொடாமல் போக்குக் காட்ட மேகக் கூட்டம் உதவியது. என்ன செய்யப் போகிறேன் என்பதில் தீர்க்கமாக இருந்தேன். இதைப் பற்றி நண்பர்களிடம் உரையாடுவதிலோ, அபிப்ராயம் கேட்பதிலோ துளியும் விருப்பமில்லை. அவர்களுக்கு டாஸ்மாக் மட்டுமே எந்நேரமும் திறந்திருக்க வேண்டும். தூரத்தில் ரயில்வே பாலத்தின் வழியே பாட்டா சுடுகாட்டுக்கு நடந்து போவது தெரிந்தது. ஏனோ கால்கள் தன்னிச்சையாய் அவரை நோக்கி நடக்க, அதைத் தடுக்க விழையவில்லை.

 சுடுகாடுக்கு நடக்க ஆரம்பிக்கவும் அப்பாவே என்னுள் முழுதாக ஆக்கிரமித்திருந்தார்.  அப்பா அதிகம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தால் பாட்டாவின் புராணமே பேச்சில் இருக்கும், “இவனுங்களுக்கு நாக்காக்கும் ஆசானுக்கு மரியாதய கொடுக்கு, அவரு கையால சாப்புட்டுலாம் குறுக்குக்கு பின்னாடி வண்ணாப் பயன்னு கூப்பிடுவான். எழவு என்ன மயிறு சந்தோஷமோ அதுல. ஆனாலும் நம்ம சமுதாய மயான சொடல இறங்கி வரணும்ன்னா ஆசானுக்க கைப்பட்ட திருனாரு சாமி கொண்டாடிக்க நெத்தில பூசணும். சாமிக்கு அறியும் மனுஷன எப்புடி பாக்கணும்ன்னு. வெள்ளாளக் குடியோ, ஆசாரிமாரோ கல்யாணச் சாப்பாடுக்கு ஆசான் கைப்படாம ஒழுனேசேரில ஒரு கல்யாணம் நடக்குமா? முட்டாப் பயக்க. அவருக்கும் சொந்த கிந்தம் கெடயாது.  நான் தாம்ல அவருக்கு கொள்ளி வைப்பேன்.”

சுடுகாட்டு கோயில் அருகே வந்ததும் படித்துறைக்குச் சென்றேன், பாட்டா குளித்துக் கொண்டிருந்தார். நான் மாசாண சுடலை கோயில் திண்டில், ஆலமூட்டின் அடியில் அமர்ந்து கொண்டேன். குளித்து முடித்து வந்தவர், நேராகச் சுடலை முன் நின்றார். திருநீற்றை நெற்றியில் பட்டையிட்டு, புருவ மத்தியில் மஞ்சணை பூசி வெளியே வந்தவர், என்னைக் கவனித்ததும், “பிள்ள ஏதோ குழப்பத்துல இருக்க போலயே. மூஞ்சு வாடிலா கெடக்கு,” நான் எழுந்து பாட்டாவின் அருகில் சென்றேன்.

சவக்குழியில் பிணம் எரிந்து கொண்டிருக்க அவ்விடம் முழுக்க புகை மூண்டிருந்தது. பாட்டா எதுவும் சொல்லாமல் கனலில் கனன்று கொண்டிருக்கும் பிணத்தையே வெறித்தார். “அப்போ, பேரப் பிள்ள வேலைய விட்டுட்டு வந்துட்ட, அடுத்து என்னதான் பண்ண உத்தேசம்?”

பாட்டாவின் கண்கள் எதையுமே வெளிக்கொணராமல் இருந்தன. “அன்னைக்கு உங்க அம்மை எனக்க முன்னு வந்து அழுதா. உங்க அப்பனுக்கும் சமையல் படிப்பு படிக்க வைக்க விருப்பம் தான். ஆனா உங்க அம்மை ஆடிப் பூவெடுத்துட்டா. அவளும் பாவம் தானடே. உங்க அப்பன் சீருக்கு நீ இவளோ வந்ததே பெருசு. உங்க அம்மைக்காக உன்கிட்ட பேசினேன். அப்போவே தெரியும். நீ திரும்பி வருவன்னு. எல்லாம் எழுதியிருக்கு, அதுப்படி தான நடக்கணும்,” கூறிக் கொண்டே என்னை அருகில் அழைத்தார்.

“அந்த இடம் எனக்கானது இல்ல. தினம் தினம் ஒரே வேல. பிடிக்காம போகுது. சில நேரம் பைத்தியம் பிடிச்சது மாறி ராத்திரி முழுக்க உறக்கம் இல்ல. இருந்த கடன எல்லாம் அடைச்சுட்டேன். இப்போதைக்கு கைலயும் கொஞ்சம் சேத்து வச்சுருக்கேன்”

“நீ யாரு தெரியுமா?” பாட்டாவின் கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்தது, ஆனால் உதடுகள் புன்னகையில் விரிந்தன. நான் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

“உங்க அப்பன் தாம்ல நீ. அவனுக்க போக்குலயே நீயும் போயிறக் கூடாது கேட்டியா.”

எனக்கும் கண்கள் நிறைய ஆரம்பித்தன. சுடுகாட்டில் மாடனுக்கு நேந்து விட்ட சேவல்கள் கொக்கரிக்க ஆரம்பித்தன. பாட்டா என்னை அருகில் அழைத்து என் கைகளைப் பிடித்துக் கொண்டார். “உங்க அம்மை சம்மதிப்பாளா மக்ளே?”

“கொஞ்சம் பிளான் வச்சுருக்கேன் பாட்டா. கேட்டரிங் மாதிரி பெருசா பண்ற மாதிரி ஐடியா. அம்மை யேசுவா. ஆனா, ஒத்துப்பா. அப்பாவும் இல்ல, நானும் அவள விட்டுட்டு தூரமா இருக்கேன். கூட இருந்தா சந்தோசப்படுவா,” நான் பேசிக் கொண்டே இருந்தேன். பாட்டா என் கைகளைத் தடவிக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.

“அப்போ பெருசா யோசிச்சு தான் மெட்ராஸ்ல இருந்து வந்துருக்க. கள்ள ராஸ்கல்.”

நான் தலையைக் கவிழ்த்து மெல்ல சிரித்தேன்.

“நீ எப்போவும் ஒன்னு கேட்டுட்டே இருப்ப. உனக்கு ஓர்ம இருக்கா? எப்புடி நீங்க வைக்கிற எல்லாமுமே ருசியா இருக்குன்னு.” நான் ஆமாம் என்பதைப் போல தலையசைத்தேன்.

“சமைக்கும் போது அத தொழிலுனு நெனச்சு சமச்சேன்னு வை. அது தப்பு மக்கா.  அது ஒரு தெய்வகாரியம். அடுத்தவன் பசிய தீக்கவாக்கும் சமைக்கோம். எப்பேர்ப்பட்ட புண்ணியம் அது.” பாட்டா முடிப்பதற்குள், நான் இடைமறித்தேன், “பாட்டா நான் சமையலு படிச்சது உன்கிட்டயும் அப்பாகிட்டயும் தான். உங்க கூடயே இருந்திருக்கேன். இன்னய நாளுக்கு ஏத்த மாதிரி அத மாத்துவேனே தவிர்த்து. உங்க பேரு நிக்கும்.”

பாட்டாவின் கண்கள் என்னை ஆழமாக நோக்கின, “பாவப்பட்டவன் ஒரு பைசா இல்லாம கடைக்கு வருவான். அவனுக்க மூஞ்சே காட்டிக் கொடுக்கும். அவனுக்கும் வயிறு நெறைஞ்சு தான் நம்ம கடைல இருந்து வெளிய போனும். அதான் சமையல் வேலைக்குப் போனாலும், நம்ம கட என்னைக்கும் தொறந்திருக்கும். எப்போவும் மனசுல அது இருக்கனும். நான் நாள எண்ண ஆரம்பிச்சுட்டேன். இன்னைக்கோ நாளைக்கோ. எனக்குத் தெரிஞ்சாச்சு. நீ பேசுனது கொஞ்சம் தைரியம் வருது மக்ளே.”

என் கைகள் அவரது கைகளினுள் இருந்தன. “சரி பேரப் பிள்ள. மதியத்துக்கு அடுப்ப பத்த வைக்க போணும். நீயும் சீக்கிரம் வீட்டுக்குப் போ. உனக்கும் வேல இருக்கும்,” பாட்டா சொல்லிவிட்டு எழுந்து முன்னே போனார். போனவர் திரும்பி, “அம்மைட்ட பக்குவமா பேசனும் சரியா. கொஞ்சம் சலம்புவா. ஆனா பாவம்.” மீண்டும் முன்னே நடக்க ஆரம்பித்தார்.

நான் அங்கேயே கொஞ்ச நேரம் இருந்தேன். நெருப்பில் எரிந்து கொண்டிருந்த பிணம் முறுக ஆரம்பித்து, கதம்பமும் கங்குமாய் வெடிக்க ஆரம்பித்தன. வெட்டியான் பெரிய தடியால் அதை உடைக்க ஆரம்பித்தான். அப்பா இறந்த அன்று பாட்டா வீட்டிற்கு வந்தவர், வெளிநடையிலே வெகுநேரம் அமர்ந்திருந்தார். எங்களிடம் எதுவுமே பேசாமல் வழக்கத்திற்கு மாறாக அமைதியாகக் கொஞ்ச நேரம் இருந்தவர், அம்மையை அழைத்துக் கையில் கொஞ்சம் ரூபாய் தாள்களைக் கொடுத்தார். தாத்தா, அப்பாவின்  இளம்பிராயத்திலேயே இறந்து விட்டார். அப்பா வளர்ந்தது எல்லாமுமே ஓலைக் கடையில் தான். அப்பா இறக்கும் முன் கடைசியாக என்னை அலைப்பேசியில் அழைத்தப் பொழுது, “மக்ளே, உனக்கு அப்பன் எப்படியோ அப்படித்தான் ஆசானும். நல்ல குடிச்சேனா, பிள்ளைட்டு பேசணும்னு தோணிச்சு. வேற ஒன்னுமில்ல.“ அடுத்த நாள் அப்பா இறந்த செய்தி தான் கிடைத்தது. அப்பாவும் பாட்டாவும் உட்கார்ந்து பேசும் எரிமேடையில் காலையில் காடாத்து முடிந்து நட்டுவைத்த தென்னம்பூவையே வெறித்துக் கொண்டிருந்தேன். மாடன் கோயில் மணி அடிக்கவும் புத்தி தெளிந்தவனாய் ஒழுகினசேரியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

பாட்டாவின் ஓலைக்கடையையும் நானே கவனித்துக் கொள்ள முடிவு செய்தேன். வெறுமையான மனதிற்குள் குழப்பங்களே இல்லை. ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ஓலைக் கடை முன் கூட்டமாக இருந்ததைக் கண்டதும் வேகமாக நடந்தேன். வெளியே ஆட்டோ ஒன்று நின்றதில் யாரையோ ஏற்றுவது தெரிந்ததும் ஓட ஆரம்பித்தேன். நான் செல்வதற்குள் ஆட்டோ கிளம்பி விட்டது. வெளியே அதிரசம் மாமா அழுத முகத்தோடு நின்றுகொண்டிருந்தார். என்னைக் கண்டதும், “மக்கா, சரிஞ்சு விழுந்துட்டாருடே. குளிச்சுட்டு வந்ததுல இருந்து எதையோ சொல்லி பொலம்பிட்டு இருந்தாரு. சட்டுனு நெஞ்ச பிடிச்சுட்டு உக்காந்துட்டாரு.” சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தார். எனக்கும் உடல் நடுங்க ஆரம்பித்து, தலை வின்னென்று வலிக்க ஆரம்பித்தது. கடையில் இருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் விலகியதும் கடையை நோக்கி வந்த பண்டாரம் எங்களையே வெறித்தார். எங்களை எதுவுமே கேட்காமல் கடையில் யாரையோ தேடுவது போல பார்த்தார். என்னைப் பார்த்ததும்  சிரித்துக் கொண்டே உள்ளே கடையில் போய் அமர்ந்து கொண்டார். அதிரசம் மாமாவை அவரைக் கவனிக்க சொல்லிவிட்டு, முகம் வியர்த்ததில் கைகளால் அதைத் துடைக்க முயன்றேன். என் கைகளில் ரசவடையின், அவியலின், சாம்பாரின், நார்த்தங்காய் பச்சடியின், பால் பாயாசத்தின் வாசனை வந்தன.

2 comments for “ஆசான்

  1. கார்த்திக் புகழேந்தி
    November 22, 2022 at 9:36 pm

    கதை நேர்த்தியாய் விரிகிறது. சொல்லும் பேச்சும் ஒன்றோடொன்று சேர்ந்து எக்கிக் குதிக்கிறது. பெரிய நடை நடக்கப் போகிற கால்களைக் கண்டுவிட்டேன். வாழ்த்துகள் வைரவன்.

  2. Ramasubramanian
    November 26, 2022 at 1:48 pm

    அருமை.தொடருங்கள் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...