தாவாய்: இயற்கையுடனான ஒத்திசைவு

இயற்கையைச் சார்ந்து மட்டுமே வாழ்வை அமைத்துக் கொள்வதென்பது மாதிரியான கருத்துருவாக்கங்களைச் சமூக ஊடகத் தளத்தில் அதிகமாகக் காண முடிகிறது. விலங்கு ஊன்களைத் தவிர்ப்பது, தாவரங்களிலிருந்து பெறப்பட்ட உணவுகள், உடைகளை மட்டுமே பயன்படுத்துதல், தனிப்பயணம் மேற்கொள்ளுதல் என இயற்கையுடன் ஒன்றித்து வாழ முற்படும் வகையிலான முயற்சிகளை வாழ்க்கை முறையாகவே முன்வைக்கும் பதிவுகளுக்குப் பெருமளவிலான ஈர்ப்பு உருவாகியிருக்கிறது. அந்த வாழ்க்கை முறையின் மீதான தற்காலிகமான ஈர்ப்பை உருவாக்குவதுடன் அவை நின்றும் போகின்றன. இருப்பினும், நுகர்வு வெறியால் இயற்கை பெருமளவில் சீரழிக்கப்படும் சூழலில் இந்த மாதிரியான முயற்சிகள் உருவாக்கும் இயற்கையைப் பேணும் நேர்நிலையான பார்வையை ஆதரிக்க வேண்டியதாகிறது. இயற்கையுடன் ஒத்திசைந்து வாழ்தல் என்கிற வாழ்க்கை முறை என்பது எப்போதும் விவாதத்துக்குரியதாகவே இருக்கிறது.

தமிழ்விக்கித் தளத்துக்காகச் சரவாக் பழங்குடிகளைப் பற்றிய கட்டுரையை எழுதுங்கள் என எழுத்தாளர் ம. நவீன் கேட்டார். அந்தப் பணியை ஒப்புக் கொண்டு 13 சரவாக் பழங்குடிகளைப் பற்றிய கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன். அந்தப் பணிக்காகச் சரவாக் பழங்குடிகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டத் தொடங்கினேன். பெனான் பழங்குடிகளைப் பற்றியத் தகவல் திரட்டலுக்காக அவர்களைப் பற்றி 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தாவாய் (Tawai a voice from the forest) எனும் ஆவணப்படத்தைப் பார்த்தேன். Tawai என்பது போர்னியோ பழங்குடிகள்,  தாங்கள் வாழும் வனத்துடனான தங்கள் தொடர்புகளை உணரும் விதத்தை,  விவரிக்க பயன்படுத்தும் சொல். இயற்கையுடனான ஒத்திசைந்த வாழ்வுக்கான கருத்துருவைத் தாவாய் ஆவணப்படத்தில் காணமுடிகிறது.

சரவாக் மாநிலத்தில் பழங்குடி மக்கள் பொதுவாக டயாக், ஒராங் உலு என இருப்பெரும் பிரிவுகளில் அழைக்கப்படுகின்றனர். இவர்களுள் இபான், பிடாயு, கென்யா, கயான், கெடாயன், லுன் பவாங், புனான், பிசாயா, கெலாபிட், பெராவான், கெஜாமான், உக்கிட், செகப்பன், மெலனாவ், பெனான் ஆகிய இனக்குழுவினரே ஒட்டுமொத்தமாக மாநில மக்கள் தொகையில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்களாக விளங்குகின்றனர். சரவாக் மாநிலப் பழங்குடி மக்கள் காடுகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்கள், கிருஸ்துவ மிஷினரிகளின் சமயத்தொண்டு ஆகியவற்றால் மெல்ல தங்கள் பழங்குடி வாழ்க்கைமுறைகள், பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைக் கைவிட்டு இயல்பு வாழ்க்கைக்குப் பழகி வருகின்றனர்.

சரவாக் மாநிலத்தின் பராம் ஆற்றங்கரையை ஒட்டியப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களில் பெனான் இனத்தவரும் அடங்குவர். பெனான் பழங்குடியினர் உலகில் வாழும் கடைசி நாடோடி இனக்குழுக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றனர். சரவாக் மாநிலத்தின் உலு பாராம் மற்றும் லிம்பாங் பகுதியில் வாழும் பெனான் மக்களில் ஏறக்குறைய 250க்கும் குறைவானவர்களே இன்னுமும் நாடோடி வாழ்க்கை முறையைப் பின்பற்றுகின்றனர்.

‘’பழங்கள் கனியும் காலத்தைப் பற்றிய அறிதல் எங்களுக்கு இல்லை. காட்டில் பழங்கள் கனிந்திருப்பதைப் பறவைகள் எங்களுக்கு அறிவித்துச் செல்கின்றன. அதைப் போல இரவு கவிவதைச் சிள்வண்டுகளின் கீச்சொலிச் சத்தம் அறிவிக்கின்றது. எங்களிடம் மணி பார்க்கும் எந்தக் கருவியும் இல்லை. ஆண்டுகள், மாதங்கள், நாட்கள் எனக் கால நகர்ச்சியைப் பற்றி எதுவும் எங்களுக்குத் தெரிவதில்லை, இயற்கையைக் கவனிப்பதன் மூலமே அனைத்தையும் அறிந்து கொள்கிறோம். இயற்கை நிகழ்வுகளை மட்டுமே விழிப்புடன் உற்றுக் கவனித்து வாழ்வதே எங்களுக்குப் போதுமானதாக இருக்கிறது.” எனப் பெனான் பழங்குடியைச் சேர்ந்த ஆடவர் தாவாய் ஆவணப்படத்தில் குறிப்பிடுகிறார்.

பெனான் மக்கள் வாழும் காட்டுப்பகுதியில் அரசாங்கமும் தனியார்துறையினரும் அணைக்கட்டு கட்டுமானம், நிலத்தடிக் குழாய் பணிகள், வெட்டுமரங்களுக்காகக் காடழித்தல் எனப் பலவகையிலான திட்டங்களை மேற்கொண்டு  வருகின்றன. இந்த அதீத மேம்பாட்டுத் திட்டங்களால் பெனான் மக்கள் மெல்ல நாடோடி வாழ்க்கை முறையைக் கைவிட்டு இயல்பு வாழ்க்கைக்குள் பொருந்த முடியாமல் பாதி தங்கி வாழ்ந்தும் பாதி நாடோடிகளாகவும் வாழ்ந்து வருகின்றனர். அப்படியாக இந்தோனேசியாவைச் சேர்ந்த கலிமாந்தான் எல்லை நகரை ஒட்டி அமைந்திருக்கின்ற சரவாக் காட்டுப்பகுதியில் வாழும் பெனான் பழங்குடியினர் மக்களைப் பற்றிய பதிவாகவே தாவாய் ஆவணப்படம் அமைந்திருக்கிறது. காடுகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் பெனான் மக்களுக்காக அரசாங்கமும் தனியார் துறையினரும் இணைந்து நீண்ட வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கின்றனர். ஆனால், காடுகளிலிருந்தே உணவும் வாழ்வாதாரத்துக்கான தேவையையும் நிறைவு செய்து கொள்ளும் பெனான் மக்கள் ஆண்டில் மிகப் பெரும்பான்மையான நாட்களைக் காடுகளிலே கழிக்கின்றனர்.

நிலையான தங்குமிடமும் வாழ்வாதாரத்துக்கும் பழகிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் பெனான் மக்கள் எஞ்சியிருக்கும் காடுகள் மீது கொண்டிருக்கும் உணர்வு ரீதியிலான நெருக்கம் படம் முழுதும் காட்டப்படுகிறது. காடுகள் அளிக்கும் ஞானமும் வாழ்க்கைக்கான தேவைகளையும் பெற்றுக் கொண்டு அவற்றைக் காத்து நிற்கும் உணர்வையே தாவாய் என்ற சொல்லின் மூலம் அடையாளப்படுத்துகின்றனர். காடுகள் அழிக்கப்படும் போது தாவாய் உணர்வு சமநிலைக்குலைவை அடைகிறது. காடுகளைச் சூழும் ஆபத்துகளான வெட்டுமர நிறுவனங்கள், நிலத்தடிக் குழாய் பதிப்பு நிறுவனங்கள் அவர்களுக்கு மிகப் புதியனவாக இருக்கின்றன. அவற்றைத் தடுத்து நிறுத்தவும் முடியாமல் நிலையான வாழ்வுக்குப் பழகவும் முடியாமல் எஞ்சியிருக்கும் காடுகளினூடே தாவாய் உணர்வுடன் சுற்றித் திரிகின்றனர்.

பெனான் இன மக்களின் வாழ்க்கையைக் காட்டும் சிறப்பான காட்சிகளைப் படத்தில் காண முடிந்தது. பெனான் இனச் சிறுவர்கள் இயற்கையிலே உணவுகளைப் பகிர்ந்துண்ணுதல், பெறுகின்றார்கள் என்றால் இல்லை. அவர்கள் தங்கள் பெரியவர்கள் எதைச் செய்கின்றார்களோ அதையே மீளச்செய்கின்றனர். அதனால் சிறுவர்களுக்குத் திரும்ப பகிர்ந்துண்ணும் வழக்கத்தைக் கற்றுக் கொடுக்கின்றோம் எனக் கத்தியால் மாம்பழத்தைத் துண்டுகளாக நறுக்கிக் குழந்தைக்குக் கொடுக்கும் பெனான் இன முதியப்பெண் கூறுகிறார். அவரின் குரல் பின்னணியில் ஒலிக்க மிகச்சிறிய மாம்பழத்துண்டைச் சப்பி சுவைத்துத் தின்கிறாள் பெனான் இனச் சிறுமி. தங்கி வாழும் வாழ்க்கையில் இன்னும் தொடக்கநிலையிலே இருக்கும் அவர்களின் தடுமாற்றத்தைக் காட்டும் காட்சிகளும் காட்டப்படுகின்றன. அரசு கட்டிக் கொடுத்திருக்கும் வீடுகளுக்குள் விருந்தினர்கள் வரும் நாட்கள் மட்டுமே வந்து சென்று விடும் வழக்கத்தைக் காட்டும் விதமாய் நீண்ட வீடுகளின் உள்ளறைகள் இன்னுமும் புதுமை மாறாமல் இருப்பதைக் காட்டுகின்றனர். சவ்வரிசி மாவிலிருந்து தயாரிக்கப்படும் கெட்டியான கஞ்சியைச் சாப்பிட்டு எஞ்சியதை வீட்டுக்குள்ளே சிறுமியொருத்தி வீசுகிறாள். அவள் வீசுகின்ற இடத்தைச் சுற்றிலும் இருக்கும் பூச்சிகளைக் கொல்வதற்காகப் பூச்சிக் கொல்லி மருந்தைத் தெளிக்கின்றார்கள். தங்கி வாழும் வாழ்க்கை நிரந்தரமானதாக மாறும் கொடுங்காலக்கட்டத்துக்குப் பயந்து வீட்டுக்கருகில் இருக்கும் பகுதியில் ரம்புத்தான், டுரியான், வாழைமரம் ஆகியவற்றை நட்டு வைத்திருக்கின்றனர். நட்டுப் பராமரிக்கும் வேளாண்மை முறை பழகாததால் பழமரங்களைச் சுற்றிலும் வளர்ந்திருக்கும் கொடிகளைக் கத்தியால் வெட்டியவாறே, “இவையனைத்தும் எங்களுக்கானவை, எதுவும் தனி மனிதர்கள் உடைமை இல்லை. இவற்றிலிருந்து எதைப் பெறப்போகிறோம் என்றறியமாலே இதைப் பராமரிக்கக் கற்று வருகிறோம்” எனப் பெனான் இனத்தவர் ஒருவர் கூறுகிறார்.

காடுகளுடனான பெனான் மக்களின் உறவென்பது வாழ்வாதாரம் என்பதையும் தாண்டி சக மனிதர்களுடன் கொண்டிருக்கும் உணர்வுப்பூர்வமானதாகப் பரிணமித்திருக்கிறது. “பழங்கள் கனிந்திருக்கும் காடுகளுக்குச் செல்லும்போது நிச்சயமாகப் பசியுடன் திரும்பி வரமாட்டோம். பாலூட்டும் அன்னையினருகில் இருப்பதைப் போலவே உணர்வு இருக்கும். அதனால், காடுகளிடம் தாவாய் உணர்வு ஏற்படுகிறது. ஆனால், அழிக்கப்பட்ட காடுகளிடம் அல்லது பனைமரத் தோட்டக்காட்டிலோ குழாய்கள் பதிக்கப்பட்ட காடுகளிலோ தாவாய் உணர்வு இருப்பதில்லை. அதனால்தான் அவற்றைக் கடுமையாக வெறுக்கிறோம்” எனப் பெனான் இனத்தவர் குறிப்பிடுகிறார்.

பெனான் இனத்தவர்களின் தொன்மத்தின் படி சூரியனிலிருந்து விழுந்த பெண்மரமும் நிலவிலிருந்து விழுந்த ஆண் மரமும் இணைந்து வேர்கள் கொண்ட மனிதர்களைப் பெற்றனர். பூமிக்கு வந்ததும் காட்டில் இருந்த மரங்கள் சூறைக்காற்றுக்கு ஒன்றை மற்றொன்று தழுவிக் கொண்டதைப் பார்த்து ஆண் மனிதமரமும் பெண் மனிதமரமும் புணர்ந்து பிள்ளைகள் பெற்றனர். விலங்குகளை வேட்டையாடோம் என்ற ஒப்பந்தம் செய்து கொண்டு அதற்கு ஈடாக விலங்குகளிடமிருந்து கால்களைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் வந்த தலைமுறையினர் விலங்குகளுடனான ஒப்பந்தத்தை மீறி விலங்குகளை வேட்டையாடத் தொடங்கினர். அதனால் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சண்டை மூண்டது. அந்தச் சண்டையின் இறுதியில் உணவுக்காக மட்டுமே மனிதர்கள் வேட்டையாட வேண்டுமென்றும் இரைவிலங்குகளின் ஆன்மாவை மனிதர்கள் வாழ்த்த வேண்டுமென்றும் முடிவு எட்டப்பட்டது. இன்றும் கூட, எதோ ஒருவகையில் பசியுடன் இருக்கும் போது மட்டுமே விலங்குகளையே வேட்டையாடி உண்கின்றனர்.

பெனான் இனத்தவர்களின் பாரம்பரிய இசைக்கருவியான சாப்பே எனப்படும் தந்திக்கருவியை மீட்டிக் கொண்டிருக்கும் சிறுவனிடம் நடுத்தர வயது ஆடவர் ‘‘ எனக்குப் பசியாக இருக்கிறது. உன் இசை எனக்குச் செழிப்பாக இருந்த முற்காலக் காடுகளையும் மயில், இருவாய்ச்சி பறவைகளின் குரல்களையும் நினைவுப்படுத்துகிறது என வேட்டைக்கருவிகள், சமையல்கருவிகள், குடிலுக்கான பொருட்கள் ஆகியவற்றைக் கட்டிக் கொண்டு காடுகளுக்குள் நுழைகின்றனர். காடுகளில் கீச்சிடும், கூவும் பறவைகளை மட்டுமே வேட்டையாடுகின்றனர். வயிறு நிறைந்திருக்கும் பறவைகள் மட்டுமே கூவுகின்றன. பசியுடன் இருக்கும் பறவைகள் அமைதியாகக் காடுகளைச் சுற்றியலைகின்றன” எனப் பெனான் இனத்தவர் குறிப்பிடுகிறார்.

“காட்டில் உள்ள பெருமரம் வீழும் போது நாமும் இறக்கிறோம். மரங்கள் எங்களுக்கு நாமெல்லாம் ஒரே குடும்பம் எனச் சொல்கின்றன” என ஆவணப்படத்தின் பின்னணியில் பெனான் இனத்து ஆடவர் குறிப்பிடுகிறார். ஆழ் குழாய் பதிப்புத் திட்டத்தால் மரங்கள் வெட்டப்பட்டுப் பொட்டல்வெளியாகக் காட்சியளிக்கும் பள்ளத்தைச் சுட்டிக்காட்டி ‘முன்பு இங்குக் காடு இருந்தது. இருவாய்ச்சி பறவை, குரங்குகள் என அனைத்துமே இருந்தன. ஆனால், இப்போது காடுகள் இல்லை. விலங்குகளும் இல்லாமற் போய்விட்டது. நாங்களும் மகிழ்ச்சியாக இல்லை; மலையும் மகிழ்ச்சியாக இல்லை‘ எனப் பொட்டல் வெளிக் காட்சியுடன் ஆவணப்படம் நிறைவடைகிறது.

இந்த ஆவணப்படத்தில் பெனான் மக்களைத் தவிர அமேசான் காடுகளில் இன்னும் நாடோடி வாழ்க்கையை வாழும் பிராஹா மக்களும் காட்டப்படுகின்றனர். பெனான் மக்களைப் போன்றே அவர்களும் இயற்கையின் நிகழ்வுகளை உற்றுக் கவனித்து வாழ்கின்றனர். இதற்கு மறுபுறம் காசி நகரில் நடக்கும் கும்பமேளா கங்கை நீராடலில் ஆயிரக்கணக்கான துறவிக்கள் ஆடைகளின்றி குளிக்கும் காட்சியையும் காட்டுகின்றனர். இயற்கையிலிருந்து பெறப்பட்ட ஞானத்தைக் கொண்டு உயிர்த்திருக்கும் இனக்குழுவினரும் அத்தனையையும் உதறி இயற்கைக்குத் தன்னை முழுதுற ஒப்புக்கொடுக்கும் மனநிலை கொண்டவர்களுமென ஞானத்தின் வெவ்வேறு பாதைகளைக் காட்டி நிற்கிறது. இதற்கான அறிவியல்பூர்வமான விளக்கத்தை மூளையையும் அதன் செயற்பாட்டையும் ஆராயும் அறிவியலாளர் ian mcgilchrist குறிப்பிடுகிறார். இவ்விரண்டு இயல்புகளைக் கொண்ட பழங்குடியினரையும் இயற்கை நிகழ்வுகளைக் கவனித்து அதன் பின்னான விளக்கங்களை ஆராயமல் முழுவதுமாக அதனுடன் ஒத்திசைந்து போகும் மனநிலை உடையவர்களாக வரையறை செய்கிறார்.

இந்த இருவேறுபட்ட மனநிலையைக்கு இடையில் இயற்கையை வெல்லும் மனநிலையின் வெளிபாடாகவே இயற்கையின் மீதான சூறையாடல்கள் நடந்து வருகின்றன. பூமி வெப்பமயமாதல், இயற்கைச் சீற்றங்கள், பருவ நிலை மாற்றங்கள் என இயற்கை சூறையாடலுக்குப் பெரும் விலை கொடுத்து வரும் சூழலில் இயற்கையுடனான  ஒத்திசைவென்பது அவசியமாகி வருகின்றது. இயற்கை நிகழ்வுகளைப் புரிந்து கொண்டு ஒத்திசையும் வாழ்வென்பது நடைமுறைக்கு ஏற்பானதே என்பதைப் பெனான் மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் எஞ்சியிருக்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கையின் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது.

இயற்கையின் ஆற்றலை மர்மப்படுத்தி அதனை வழிபாட்டுக்குரிய மனநிலையாக மாற்றியளிப்பதென்பது மனிதர்கள் அடைந்திருக்கும் அறிவுவளர்ச்சியால் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. ஆனால், இயற்கையை மட்டுமின்றி அதன் அங்கமாகவே ஆகியிருக்கும் பழங்குடி மக்களையும் புறவயமாக அறிந்து கொள்வதன் மூலமே பெனான் மக்கள் முன்வைக்கும் தாவாய் உணர்வைப் பெற முடியும். தாவாய் என்பது இயற்கையுடனான ஒத்திசைவின் வழியே.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...