நம் வீதியில்
ஆயிற்று இன்னொரு காலம்
என்ற போதும்
நாம் உணரவில்லை இன்னோர் காலம் இதுவென்று
குருதியில்லை, குண்டுச் சத்தங்கள் இல்லை
அகதி இடப்பெயர்வுகளும் இல்லை
என்றாலும் யுத்தம் ஒயவில்லை இன்னும்
குண்டும் குருதியும் தீயும் புகையும்
காயமும் இன்றிய யுத்தம்
போரின் பிறிதொரு ரூபமே.
நான் தோற்கடிக்கப்படும் கணந்தோறும்
நிகழ்வது யுத்தமன்றி வேறென்ன?
என்னுடைய தெருவை
உன்னுடைய தெருவாக மாற்றும் போது
என்னுடைய வயலில்
உன்னுடைய பயிர் வளரும்போது
கலவரமடைகின்றன நாய்களும் பறவைகளும்
என்னால் அவற்றை சமாதானப்படுத்த முடியவில்லை
நாய்களின் குரைப்பொலி
நமது அமைதியைச் சிதைக்கிறது.
எனில், நாய்களை அகற்றச் சட்டமொன்றை
இயற்றலாம் என்று நீ எண்ணக் கூடும்
ஆயின் அதுவுமொரு போரே
அதிகாரப் பிரயோகமே
மேலுமொரு விதிமீறலே
விதிமீறல்கள் அத்தனையும் போரின் நரம்புகளன்றி வேறென்ன?
என்று வரும் ஓர் உதயம்?
போரின்றியதொரு காலத்தில்
நானும் நீயும் நம் நாய்களும் கூடியிருந்தோம்
நம் வீதியினில் என.
ஆமாம், எனதுமல்லாத உனதுமல்லாத
நம் வீதிகளில்.
நம் வீதிகள் இது வெனவும்.
————
குளிர்ப்பாறையினுள் கொதிக்கும் பேரலை
இன்று அறிந்தேன்
வெப்பத்திலிருந்தும் நீ நீங்கிச் சென்று
குளிர்ப்பாறையுள் புதைந்ததை.
யாரோ ஒருவர் சொன்னார்
உன் நிழலைத் தம் மடியிருத்த முயன்றவேளை
பெயர்ந்து நீ சென்றாய் என
இவ்விதம்
நீ பெயர்ந்த காலங்கள் பலவோ
நீ பெயர்ந்த புலங்களும் பலவோ
என்றபோதும்
நீ சேரவில்லை இன்னுமொரு நிழலடியில்.
இன்னும் உன் யுத்தக் காயத்தின்
வலியும் நீட்சியும் கொழும்பு, சென்னை என்று வளர்ந்து
தேம்ஸ் நதிக்கரையோர மருத்துவமனை வரையிலுமா?
இரத்தப் பெருக்கடங்கவில்லையடி உன்னுடலில்
அடங்கவில்லை உன் நினைவுப் பெருக்கும்
அதில் பெருகுதடி உன தன்பின் இரத்தம்
ஆனாலும் வந்ததடி இரத்தப் பெருக்கடங்கும் பருவம் உனக்கு
என் சகியே,
இன்னும் சேரவில்லையே உன்னிடம்
ஒருதுளி விதைப் பொருள்
நீயும் ஒரு தாய்மடியாய் மலர.
எரிதழலில் விளைந்த நீர்ச்சுனையே!
உன் கனவு மட்டுமல்ல
உன் பருவங்களும் பொய்த்தனவோ!
உன் காயங்களையும் வலியையும் விட்டு
யுத்தமும் யுத்தப் பிரபுக்களும் பெயர்ந்தனராயினும்
வலி நீங்கிச சுமை நீங்கி
வேரும் விதையும் கொள்ளவில்லை இன்னும் நீ.
குளிர்ப்பாறையினுள்ளும் கொதிக்கின்றன பேரலைகள்.