ஓரிலையும் அசையாத மரத்தினடியில் – ஒரு திறனாய்வு

ஓரிலையும் அசையாத மரத்தினடியில் அமர்ந்தபடி, கவிஞர் ராஜா எழுதிய அல்லது எழுதியவற்றுள் 102 கவிதைகள், ஓர் தொகுப்பாக, உயிர்மை பதிப்பகத்தின் மூலம் வெளியாகியுள்ளது. எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்; தலைப்பிலிருந்தே துவங்கலாம். ஓரிலையும் அசையாத மரம் – காற்றே இல்லையென்றால் சாத்தியம். எங்கிருக்கிறது அது? ஒருவேளை மரச்சிலையோ? என்ன சொல்ல வருகிறார்? கவிராயருக்கே வெளிச்சம். இன்னும் ஆழ அகலத்தில், தலைப்பை ஆராயப் புகுந்தால், மண்டைக்கு மேற்பரப்பில் மண்டிக்கிடக்கும் விளைச்சலில் ஒருபயிரும் மிஞ்சாது என்ற அக்கறையின்பாற்பட்டு , கவிதைக்குள் செல்லலாம் இனி.

கவிதைகளை முன்பின்னாக, பின்முன்னாக இருமுறையேனும் வாசியுங்கள்.பொருள் புரிகிறதோ இல்லையோ, வடக்குப் பக்கமாய் நாக்கு நிச்சயம் மடங்கிக் கொள்ளும். இருட்பெருங்கடலில் இட்ட சுடர், சூன்யப் பெருஞ்சூட்சமங்கள், ஜனவாகனத்திரள், இலகுகனரகங்கள் இறகுரகமென- வாசித்தால் வாய்கோணும் வார்த்தைப் பிரயோகங்கள். அபிதான சிந்தாமணி முதலான பதினெட்டு தமிழ் நிகண்டுகளின் தொகுப்பைத் தலைகீழாய்த் தவமிருந்து மனனம் செய்தவர் போலும்.காற்றிசைச்சரத்தைப் பற்றி ஒன்றிரெண்டு கவிதைகள் எழுதியுள்ளார். Wind Chimes என்ற ஆங்கிலப் பொருளைத்தான் காற்றிசைச்சரம் என்று தமிழ்ப் பதமாக்கியிருக்கிறார் என்று ஒருவாறாக யூகிக்க முடிகிறது. மொழிக்குத் தமது சொற்கொடையிது என்று எதிர்காலத்தில் இவர் மார்தட்டக் கூடும்; தமிழ்த் தாயே உஷார்!

ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிறைய கேட்டதன் பாதிப்பு முதலிரு கவிதைகளில் வெளிப்படுகிறது.’ உறைந்த விழிப்பாய்’ முறைத்து முழிக்கும் அரைவேக்காட்டு ஞானத் தேடல், போகிறபோக்கில் ‘எது’ வென்ற கேள்வியையும் எழுப்பிச் செல்கிறது.

‘வா’ என்றொரு கவிதை. கி.பி.2010ல் எழுதியிருக்கிறார். இதைக்கொஞ்சம் வரிவரியாக விலாவாரியாக வாசிக்கலாம்.

இரயில் கதவின்
இருபுறக் கம்பிகளை
இறுகப் பற்றியபடி
படியோரம் நின்று பயணித்திருந்தேன்.

படியில்நின்று பயணித்தல்
குற்றமில்லையா கவிஞரே?

முகத்தில் அறைகிறது ஈரக்காற்று.

மாட்டியிருந்தால்
முதுகில் அறைந்திருப்பார்
ரயில்வே போலீசார்.

நழுவியோடும் இருட்டுப்பள்ளத்தில்
பெரும்புதிருக்கான தீர்வொன்று புதைந்திருக்கிறது
வா!

ஐயன்மீர்!
உன்மத்தம் உமக்கு
உச்சத்தில் இயங்குகிறது.

குரல்கேட்டதும்
குதித்துவிடலாம்
என்றுதான் நினைத்தேன்.

நினைக்காமல் செய்திருக்கலாம்.
போதும்; ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம்.

இவரது காலம், வாழ்ந்த ஊர், புகுந்த ஊர், செய்யும் தொழில் குறித்த செய்திகளைக் கவிதைகளில் தேடவேண்டிய அவசியத்திற்கும் அவஸ்த்தைக்கும் ஆட்படுத்தாமல் சுயவிவரக் குறிப்புகளாகவே கொடுத்திருப்பது இவரது பெருந்தன்மை.திறனாய்வாளர்களின் வாழ்நாளில் சிலமணிநேரங்கள் வேறுவேலைக்கு உபயோகமாகும். பிரதான பிழைப்பைத் தவிர, பகுதிநேரப் பணியாக தூதஞ்சல் நிலையங்களில் , மழைக்கால சிறப்பு ஊழியராக ஊர்சுற்றியிருப்பாரோ என்ற சந்தேகத்தை ‘ தூதொடு வந்த மழை ‘ வரிசைக் கவிதைகள் கிளப்புகின்றன. எது எப்படியோ? படிக்கும் பருவத்தில் மக்குமாணாக்கனாக இருந்திருக்கிறார் என்பது ‘ புத்தகப் புழு’ வில் புலனாகிறது.

தம்மடிக்கும் பழக்கம் இருந்திருக்கலாம். ஊழித்தீ, முதல்போணி கவிதைகளில் துர்நாற்றம் அடிக்கிறது.தம்கட்டும் பயிற்சியும் உள்ளவர்போலும்.ஒரு நிகழ்ச்சியை, நீட்டி நெளித்து மூச்சுவிடாமல் ஒரே வாக்கியமாக முக்க முயன்றிருக்கிறார்.அப்பாகிழமை,முகத்தில் அறைந்த மழை வாசிக்கையில் மூச்சுமுட்டுகிறது. நடந்ததைச் செய்தியாக நேர்பட எழுதிவிட்டு, இறுதியில் மேலேபார்த்தபடி மோனநிலையில் கருத்துதிர்க்கும் உத்தியை கைவினை என்ற கவிதையில் கையாண்டிருக்கிறார்.

பாட்டி சுட்ட வடையை
திருடிப் பறந்த காகத்திடமிருந்து
கவர்ந்து போனது நரி.
எவரிடம் இனி
ஏமாறும் நரி ?

மேற்காணும் கவிதையை, இவரது இரண்டாவது தொகுப்பில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

பெண்ணையும் பெண்சார்ந்த மென்னுணர்வுகளையும் பாடுபொருளாகக் கொண்டு ஹிம்சை, எப்போது வருகிறாய், எங்கே போகிறாள் என்று, மூன்று கவிதைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அந்தோ பரிதாபம்! வறட்சியாகவே கழிந்திருக்கிறது இவருடைய வாலிபம்.

வரலாற்றில் இடம்பெறும் கிளர்ச்சியை சகித்துக்கொள்ளலாம் ( ஒரு சூரியனும் சில மேகத் துண்டுகளும் ) ; தன்னை ஒரு வரலாற்று நாயகனாக வடித்துக் கொள்வதைக் கூடப் புரிந்துகொள்ள முடிகிறது (சாம்ராட் ); விசேஷப் பிறவியாக தம்மை பாவித்துக்கொள்ளுதல் கவிஞர்களின் பொதுப் பண்புதானே? ஆனால், அனைத்துக்கும் உச்சமாய், தன்னைக் கடவுளாக கற்பிதம் செய்துகொள்தல் (இறைதேடி) அளவுக்கதிகமான அதீதம் என்றால் அது மிகையல்ல.

யாருமற்ற அறையில் நானுமில்லை, மரணபயம் கவிதைகளில் கவிஞரின் அஞ்சாநெஞ்சம் புடைத்து நிமிர்கிறது. பாரதிவழிவந்த வீரகவிப் பரம்பரையில் இப்படியும் ஒரு பயந்தபேடி.

உள உளைச்சல்களில் உழன்று ஒருமுறையேனும் மனநல மருத்துவரை ஆலோசித்திருக்ககூடும்.இல்லையேல், தாமதிக்காமல் இன்றே செல்லுதல் உத்தமம், தமிழுக்கு. நாதப்பிரம்மம் வாசித்துப் பாருங்கள்; காதுக்குள் கொய்ங்ங் என்று ரீங்காரம்.

இளநெஞ்சஞ்சங்களுக்கானதல்ல, ஒரு கனவும் சிறு நிகழ்வும் பெருங்கொலைகளும் – இவற்றை மென்மனசுக்காரர்கள் தவிர்த்தல் அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. காவல்துறையின் கண்களில்படாமல் அவற்றைப் பாதுகாத்தல் கவிஞரின் எதிர்காலத்திற்கு ரொம்பவும் நல்லது.

எதைப் பழித்துப் பேசினாலும், கவிஞரின் நன்றியுணர்வை மட்டும் குறைத்து மதிப்பிடவே முடியாது. உருவி உருமாற்றினாலும்,திருடிய இடத்தைப் பற்றி தயக்கமின்றி வெட்கமின்றி துப்புக் கொடுத்துவிடுகிறார். அடைப்புக் குறிகளுக்குள் ஊக்கம் வாசிக்கும் போதெல்லாம் துக்கம் தொண்டையை அடைக்கிறது நமக்கு. இரத்தலினும் இறத்தல், நானறியேன் பாராபரமே கவிதைகளில், சக உயிரினத்தை நாயகமாக்கியிருப்பதன்மூலம் முன்சொன்ன இவரது பண்பு குன்றின்மேல் இட்ட விளக்கு.

வலிப்பு வந்த நோயாளி முற்றிலுமாய் நினைவொழிந்து வந்தால்தான் மருத்துவர் சிகிச்சை அளிப்பாரோ? என்ன ஏதென்று எழுந்துபோய் பார்க்காது,இருந்த இடத்தை விட்டு நகராமல், கையில் ‘ துலாக் கடிகை’ யை ஏந்தியபடி கனநேரம் பார்க்கிறவர், மருத்துவத்தை விட்டுவிட்டு,பழையதை எடைக்கு வாங்கும் வேலையை அல்லது கடிகாரங்களைப் பழுது பார்க்கும் தொழிலைச் செய்தலே உசிதம்.

சமூக விழிப்புணர்வோ, சகமனித அக்கறையோ இல்லாமல், மழையைச் சிலாகித்தபடி, சொந்த சோகங்களையும் நொந்த நிகழ்வுகளையும் அசைபோட்டவாறே வாழ்க்கையைக் கழித்திருக்கிறார். சமூக ஏற்றத் தாழ்வுகள், மனித உரிமை குறித்து எழுதாமல் விட்டது, தமிழ்கூறும் நல்லுலகிற்கு இவர் செய்த அருந்தொண்டு.விழிப்பில் உறைந்து கிடக்காமல்,ஊருக்கு உபயோகமாய் யோசித்திருக்கலாம்.குறைந்தபட்சமாய், குடும்பத்தையேனும் கவனித்திருந்தால் முகத்தில் அறைந்திருக்குமோ மாலையில் பெய்த மழை?

ஆற்றில் ஒரு காலும்
சேற்றில் மற்றொரு காலும் வைத்தபடி
காற்றுவாக்கில் நடை போனால்
எங்கே விழும் நிழல்
ஆற்றிலா சேற்றிலா?

ஆன்மீகத்தில் ஒரு கண்ணும்
லௌகீகத்தில் இன்னொரு கண்ணுமாய்
அகட்டி நடந்தால்
அறுந்துவிடாதோ அடிவாரத்துணி?

கவிஞர்போல், அவர்தம் கவிதைபோல் சுற்றிவளைத்துச் சொல்வானேன்? ஓரிலையும் அசையாத மரத்தினடியில் – போதி மரத்தடியில் போலி புத்தர்!

2 comments for “ஓரிலையும் அசையாத மரத்தினடியில் – ஒரு திறனாய்வு

  1. Md pasupathi
    July 13, 2020 at 3:46 pm

    பாரதியார் வீரர் என்று நம்பும் தங்களுக்கு இத்தொகுப்பில் உள்ள அத்தனை கவிதைகளும் அப்படித்தான் புரிபடும். விமர்சனமோ திறனாய்வோ செய்வதற்கு முதலில் தேவை கண்ணியம் நண்பரே !. ஒரு எழுத்தாளனை காயப்படுத்தி காலி செய்வதல்ல விமர்சன அறம். பக்குவப்படுத்தி நுட்பமாக்குவது தான் நோக்கமாக இருக்க வேண்டும். செய்வீர்களா ?!

  2. Vasagi
    April 11, 2023 at 6:03 pm

    தனக்கு தானே விமர்சித்து கொண்டதாலேயோ என்னவோ, கொஞ்சம் அதீதமாகவே, பாரபட்சம் பார்க்காமல் விமர்சித்து தள்ளிவிட்டார். பாவம், கவிஞர் தன்மீது கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்கலாம்.
    பரவாயில்லை. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...