2014-ன் முதல் வல்லினம் சந்திப்பு ஜனவரியில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வல்லினம் குடும்பத்தைச் சேர்ந்த 30 நண்பர்கள் கலந்துகொண்டனர். முதல் அங்கமாக மலாய் இலக்கியம் குறித்துத் தினேசுவரி விவரித்தார். அ.பாண்டியனும் மலாய் இலக்கியம் குறித்த தனது பார்வையைப் பகிர்ந்தார். தமிழ் இலக்கியத்தில் உள்ள சுதந்திரங்களையும் மலாய் படைப்பாளிக்கு உள்ள கட்டுப்பாடுகளும் இவ்வமர்வில் விரிவாகப்பேசப்பட்டன.
தொடர்ந்து கங்காதுரை சீன இலக்கியத்தை குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்தார். சீன இலக்கியத்தின் தேக்கம், மற்றும் பல்வேறு விடயங்களில் சீன இலக்கியம் மலேசிய தமிழ் இலக்கியச் சூழலோடு ஒத்துப்போவதையும் விவரித்தார்..
வல்லினத்தின் முதல் இதழ் மாதிரி இந்த நிகழ்வில் விவாதிக்கப்பட்டது. மா.சண்முகசிவா, சுவாமி பிரமானந்தா, ஜெகதீசன் போன்றோர் இதழை மிக விரிவாக விமர்சனம் செய்தனர். இதழில் உள்ள போதாமைகளைச் சண்முகசிவா சுட்டிக்காட்டினார். குறிப்பாக ஆய்வு கட்டுரைகளின் இறுதியில் எழுத்தாளனின் சுய கருத்தும் இணைக்கப்படுதல் வேண்டும் என்றார்.
நிகழ்வின் இறுதி அங்கமாகத் தயாஜியின் ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற சிறுகதை விவாதிக்கப்பட்டது. அனைவருமே சிறுகதையின் மொழி ரீதியான தவறைச் சுட்டிக்காட்டினரே தவிர அது பேசிய பொருள் ஏற்புடையதே என்று கூறினர். அதன் அடிப்படையில் வல்லினம் குடும்பத்தினர் அனைவ ரும் ஒற்றைச் சிந்தனையில் சிந்திப்பது புரிந்தது.