உமா பதிப்பகம் 2018-ஆம் ஆண்டு வெளியிட்ட உலகத் தமிழ்க் களஞ்சியம் தொகுப்பின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதியைக் கடந்த வாரம் கவனிக்க நேர்ந்தது. கெட்டி அட்டையில் அழகிய முகப்புடனான களஞ்சியம் அது. இரண்டாவது தொகுதியின் இறுதி சில பக்கங்களில் மலேசிய தகவல்கள் தொடங்கினாலும் மூன்றாவது தொகுதியில்தான் பெரும்பாலான மலேசிய தகவல்கள் உள்ளன என்று அறிந்துகொள்ள முடிந்தது. எனவே, மிகுந்த ஆர்வத்தோடு அக்களஞ்சியங்களை ஆராய்ந்தேன்.
பொதுவாகக் கலைக்களஞ்சியம் உருவாக்குவது மிகப் பெரிய பணி. பல படிநிலைகளைக் கொண்டது. கடும் உழைப்பைக் கோருவது. எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் விரிவான தகவல் சேகரிப்பதில் உள்ள சிக்கல்களைத் தமிழ் விக்கி கட்டுரைகள் எழுதும் போது நேரடியாகவே அறிந்துள்ளேன். மேலும் தமிழ் விக்கி தன்னுடைய முன்னோடியாகக் கருதும் ம.ப. பெரியசாமித்தூரன், பத்து தொகுதிகள் கொண்ட கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட தனது வாழ்நாளில் இருபதாண்டுகளை ஒதுக்கிய அர்ப்பணிப்பையும் அறிந்துகொண்டபோது இது சாதாரண பணியல்ல என உணர்ந்துகொள்ள முடிகிறது.
மலேசியாவைப் பொறுத்தவரை, பல்கலைக்கழகங்களும் அங்கு அமைந்துள்ள வசதிகளுமே சிறந்த கலைக்களஞ்சியங்களைத் தொகுக்க பொறுத்தமானவை என்பது என் எண்ணம். ஆனால் அதுபோன்ற ஆக்ககர பணிகளில் மலேசிய பல்கலைக்கழகங்கள் ஈடுபடாத சூழலில் அந்த இடைவெளியைப் போக்க பலரின் ஒத்துழைப்புடன் உமா பதிப்பகம் இப்பணியைச் செய்துள்ளது பாராட்டத்தக்கது.
இந்தக் களஞ்சியத்தின் தொகுப்பாசிரியராகத் தமிழக பேராசிரியர் இ.ஜே. சுந்தரும், நலங்கிள்ளி போன்றவர்களும் பணியாற்றியிருப்பதோடு பேராசிரியர், முனைவர் க. ப. அறவாணன் இத்தொகுப்புக்கு அறிவுரைஞராகச் செயல்பட்டுள்ளார் என்பதை உமா பதிப்பக அகப்பக்கத்தின் வழி அறிய முடிகின்றது. இந்தத் தொகுப்புகளின் பல்வேறு சிறப்பு கூறுகளையும் அகப்பக்கத்தில் சுருக்கமாகப் பட்டியலிட்டுள்ளனர். மலேசிய பகுதிகளைத் திரட்டும் பணிக்கு முரசு நெடுமாறன் பொறுப்பேற்றுள்ளார். அவருக்குத் துணையாக வ. முனியனும் ரெ.கார்த்திகேசுவும் உதவியிருக்கிறார்கள். இன்னும் பலர் இப்பணிக்குப் பின்புலமாக இருக்கலாம்.
பொதுவாகவே கடும் உழைப்பில் வரக்கூடிய பலன்களைக் கேள்விகளற்றும் விமர்சனங்களற்றும் ஏற்பது தமிழ்ச் சூழலில் சாதாரணமாக நடப்பதுதான். அதுவும் மலேசியா போன்ற தமிழ் மொழியைத் தக்க வைப்பதில் சவால் கொண்ட ஒரு தேசத்தின் கூட்டு மனம், மொழி சார்ந்து நடக்கும் எந்த முயற்சிகளையும் கேள்விகளற்று பாராட்டக்கூடியதாக வடிவமைந்துவிடுகிறது. ஆனால் அறிவுலகம் அப்படியானதல்ல. அது உழைப்பைப் போற்றும் அதே வேலை விளைவுகளின் தரத்தையும் கணக்கிலெடுத்தே வரலாற்றின் முன் ஒன்றைச் சாதனையாக முன்வைக்கிறது.
உலகத் தமிழ்க் களஞ்சியத்தையும் அவ்வகையில்தான் அணுகி ஆராய்து அதில் பங்காற்றியவர்களின் உழைப்பை மதிப்புடன் அங்கீகரித்த பின்னரே அதனை விமர்சிக்கவும் வேண்டியுள்ளது.
பொதுவாக இரண்டு வகை கலைக்களஞ்சியங்கள் நடைமுறையில் உள்ளன. முதலாவது துறை சார்ந்தவை. அறிவியல் கலைக்களைஞ்சியம், வரலாற்று கலைக்களஞ்சியம், மருத்துவ கலைக்களஞ்சியம் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். அவற்றின் உள்ளடக்கமும் தன்மையும் தலைப்பிலிருந்தே புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். மற்றது பிரிட்டானிக்கா, அமெரிக்கானா போன்ற பொது கலைக்களஞ்சியங்கள். அவை தொடர்பற்ற பல்வேறு தகவல்களைக் கொண்டிருக்கும். உலகத் தமிழ்க் களஞ்சியம் இதில் எவ்வகையானது என்பதைப் புரிந்து கொள்ளவதிலேயே அடிப்படை சிக்கல் உள்ளது. இக்களஞ்சியத்தின் தகவல் திரட்டு, எதை நோக்கியது என்பது குழப்பமானது.
நான் வாசித்த வரையில் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்ப் பண்பாடு எனத் தொகுப்பாளர்கள் தமிழ்ச்சூழலை மொத்தமாகத் தொகுக்க முயன்றுள்ளனர். ஆனால் அதன் பரப்பு மிக விரிவானது. அவ்வளவு விரிவான தளத்தில் தகவல் திரட்டிச் சேர்ப்பதற்கு மிகப் பெரிய உழைப்பும் காலமும் தேவைப்படும். அன்றி, களஞ்சியம் நிறைவாக அமையாது.
இவ்வகையான அடிப்படை கட்டமைப்பில் உள்ள சிக்கலைக் கவனத்தில் கொண்டுதான் களஞ்சியத்தின் மலேசியப் பகுதியை ஆராய்ந்தேன்.
மலேசியப் பகுதி
மலேசிய தகவல்கள் இரண்டாம் தொகுதியின் இறுதி பத்துப் பக்கங்களில் இருந்து தொடங்குகிறது. மூன்றாம் தொகுதிதான் 174 பக்கங்களில் மலேசிய தகவல்களைக் கொண்டுள்ளது. மலேசியப் பகுதிகளை அதிகமாகக் கொண்ட களஞ்சியத்தின் மூன்றாம் தொகுதியை ஆராய்ந்த போது எனக்கு சில ஏமாற்றங்கள் ஏற்பட்டன. பல அரிய தகவல்களைக் கொண்ட களைஞ்சியமாக இந்நூல் அமைந்தாலும் அதற்கு நிகரான குறைபாடுகளையும் கொண்டுள்ளன என வெளிப்படையாகவே தெரிந்தது.
தவிர்க்கப்பட்ட ஆளுமைகள்
இக்களஞ்சியம் மலேசியத் தகவல்கள் எனும் வரையறையில் தமிழ்மொழியோடு தொடர்புடைய ஆளுமைகளையும் பிரபலங்களையும் மட்டுமே அதிகமும் கவனப்படுத்தியுள்ளதைக் கவனிக்க முடிந்தது. மலேசியாவில் இயக்கங்கள் வழி பிரபலமாக அறியப்படும் தகுதி ஒன்றையே பெரிதும் சார்ந்த பலர் இக்களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ளனர். இதை ஒரு குறைபாடாக முன்வைக்கும் நோக்கமில்லை. களஞ்சியம் என்பதில் கவனம் பெற்ற அம்சங்களுக்கு இடமுள்ளது. ஆனால் அறிவுச் சூழலில் முதன்மையான ஆளுமைகள் தவிர்க்கப்படும்போதே இந்தப் பிரபலங்களின் பதிவுகள் கேள்விக்குள்ளாகின்றன.
மலேசிய நவீன இலக்கிய முகங்களில் ஒருவரான எழுத்தாளர் சீ. முத்துசாமி, உளவியல் ஆய்வுகளையும் தமிழ் தொல்லியல் ஆய்வுகளையும் முன்னெடுத்த முனைவர் கி. லோகநாதன், மலேசியத் தமிழ் அறிவுச் சூழலில் பெரும் பங்காற்றிய முனைவர் இராம. சுப்பையா, நவீன இலக்கிய முன்னோடி சுப. நாராயணன் போன்ற ஆளுமைகள் விடுபட்டுள்ளது பெரும் ஏமாற்றமாக இருந்தது. இவர்களின் தரவுகளைப் பெறுவதில் சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை. மலேசியத் தமிழ் உலகம் எனப் பேசும்தோறும் இடம்பெறக்கூடிய இப்பெயர்கள் இன்றி ஓர் களஞ்சியம் எப்படி முழுமை பெற்றது என்ற கேள்விதான் எஞ்சி நின்றது. மேலும் உண்ணிப்பாகக் கவனித்தால் விடுபட்டவர்கள் பட்டியல் நீளக்கூடும். எந்தத் தொகுப்பிலும் சில விடுபடல்கள் இருப்பது இயல்பு எனும் விளக்கம் ஏற்கக் கூடியவைதான். ஆனால் மேலே சொன்ன ஆளுமைகளை நிராகரித்து ஒரு மலேசிய களஞ்சியம் உருவாகுதல் என்பது அறிவுத்துறையின் இழப்பு அல்லவா?
மேலும் நன்கு ஆராய்ந்தால் அறிவுலகத்திற்குப் பங்களித்தவர்களைவிட ஊடக வெளிச்சத்தில் கவனம் பெற்றவர்களுக்கான மதிப்பையே மலேசியப் பகுதி வழங்கியுள்ளது எனும் முடிவுக்கே வர முடிகின்றது. உதாரணமாக, மலேசிய தமிழ் இலக்கியத்திற்கும் மொழி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய இரா. தண்டாயுதம் பெயர் தமிழகம் பகுதியில் இடம் பெற்றுள்ளது. அதே நேரம் மலேசிய அஸ்ட்ரோ ஒளிபரப்பு தமிழ்ப்பிரிவு நிலைய பொறுப்பு வகிக்க தமிழக குடிமகனான ராஜாமணியின் (ப.1446) பெயர் மலேசிய பட்டியலில் உள்ளது. இரா. தண்டாயுதம் தமிழகத்தில் பிறந்திருந்தாலும் மலாயா பல்கலைக்கழகத்திலும் அக்காலக்கட்ட மலேசிய இலக்கியச் சூழலுக்கு அவர் வழங்கிய பங்களிப்பு இன்றும் நினைத்துப் பார்க்கக் கூடியது. அவரை அந்நியராகவும் தமிழக சீரியல்களை மலேசியாவுக்கு விநியோகித்த ராஜாமணியை மலேசியராகவும் கட்டமைக்கும் காரணம் என்னவென்றுதான் புரியவில்லை.
ஒப்பனை பக்கங்கள்
முன்பே சொன்னது போல இந்தக் களஞ்சியம் மலேசிய தமிழ்ச் சூழலை காட்ட முனைந்துள்ளது. ஆனால் அம்முயற்சி அரைகுறையாகவே நின்று விட்டதைக் காண முடிகின்றது. இயக்கங்கள், தமிழ்ப்பள்ளிகள், கோயில்கள் போன்ற பண்பாடு சார்ந்த பல விடையங்கள் முழுமையாக இடம் பெறாதது இக்களஞ்சியத்தின் மீது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் இடம் பெற்ற இயக்கங்கள் குறித்தும் முழுமையான தகவல்கள் இல்லை. உதாரணமாக 90களில் உருவான பாரதிதாசன் இயக்கம் குறித்த தகவல்கள் ஒப்பனைக்காகவே இடம் பெற்றுள்ளன. யாரும் எளிதாக வாய்மொழி வரலாறாகச் சொல்லிச் செல்லும் ஒன்றை எழுத்தில் பதிய வைப்பது எப்படி களஞ்சியமாகும் எனும் வினாவை இன்று வரை மலேசியக் கல்விச் சூழலில் யாரும் கேட்காதது ஆச்சரியம்.
மலேசிய எனும் அடைமொழியின் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருங்கிணைவு இல்லாத கோர்வை இக்களஞ்சியத்தின் நோக்கம் குறித்த கேள்விகளையே உண்டு பண்ணின. இவை ஒருபுறம் இருக்க அச்சு இதழ்கள், நாளிதழ்கள் போன்றவை இடம் பெற்றிருந்தாலும் அவையும் முழுமையடையவில்லை. உதாரணமாக, தமிழ் நேசன் நாளிதழ் (ப. 1505) குறித்துச் சொல்லலாம். களஞ்சியத்தில் 1923ஆம் ஆண்டில் தமிழ் நேசன் தொடங்கியதாகப் பதிவுள்ளது. ஆனால், தமிழ் நேசனின் 70 ஆம் ஆண்டு நிறைவு மலரில் 1924 தொடங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சில சமயம் வரலாற்றை முறையாக எழுதி வைக்காததால் ஆண்டு குழப்பங்கள் ஏற்படுவது இயல்புதான் ஆனால் ஆண்டைக் குறிப்பிடாமல் வாய்மொழி வரலாறு போலவே இப்பகுதி எழுதப்பட்டுள்ளது.
எ.கா வாக்கியம்: கிழமை இதழாய் தொடங்கப்பெற்ற தமிழ் நேசன், பின்னர் நாளிதழாயிற்று.
இதில் எந்த ஆண்டு வார இதழில் இருந்து நாளிதழாக உருமாறியது எனச் சொல்வதே களஞ்சியத்தின் பணி. அதை செய்யாமல் தமிழ் நேசனின் சேவைகளைப் போற்றிப் புகழும் வாய்மொழி சேவைக்குத் தாவுகிறது.
இப்படி வரலாற்றில் இடம் பெற்ற பல்வேறு பகுதிகளையும் ஆராய்ந்தால் ஏற்படும் ஏமாற்றம் இக்களஞ்சியத்தில் செலுத்தப்பட்ட உழைப்பின் மீதே கேள்வி எழுப்பும்படியாக உள்ளது.
குழப்பமான அமைப்பு
ஏறக்குறைய 2200 பக்கங்கள் கொண்ட மொத்த தொகுப்பில் தகவல்கள் அகர வரிசையும் அகராதி அமைப்பும் இணைந்தே தொகுக்கப்பட்டுள்ளன. ஆகவே இரண்டாம் தொகுதி இறுதி 10 பக்கங்களில் தொடங்கி மூன்றாம் தொகுதி ( ம முதல் ஶ்ரீ வரை) மகர வரிசையின் பட்டியலில் ‘மலே’ என தொடங்கும் இடத்தில் (ப. 1413) மலேசிய தகவல்கள் மீண்டுமொரு அகர வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதன் பொருட்டு எல்லா மூல சொற்களின் அல்லது, பெயர்களின் முன்னொட்டாக ‘மலேசியா’ என்ற சொல் இணைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ‘மலேசியா ஆறுமுகம். கா’, ‘மலேசியா ஆனந்த ராணி’, ‘மலேசியா இதயம்’, ‘மலேசியா மலேசிய எழுத்தாளர் சங்கம்’ என்ற முறையிலேயே எல்லா தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இப்படி மலேசிய தகவல்களின் கடைசி சொல்லாக ‘மலேசியா ஶ்ரீதரன்’ (ப.1587) முடிந்தபிறகு 2135ஆம் பக்கம் தொடங்கி ஆறேழு பக்கங்கள் மீண்டும் மலேசியா பகுதி தொடர்கிறது. இரண்டு மலேசிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அகராதி முறைப்படி சொற்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை கலவையான தகவல்களாக அமைந்துள்ளன. தொகுப்பாசிரியர்கள் இவ்வாறான அமைப்பை முடிவு செய்ததற்கு அவர்களுக்குத் தனிக் காரணம் இருக்கலாம். ஆனால் ‘மலேசிய தகவல்கள்’ என்ற பொதுவான தலைப்பின் கீழ் அகராதி முறையிலேயே எல்லா சொற்களையும் தொகுத்திருக்கலாம். எல்லா சொற்களுக்கும் ‘மலேசியா’ என்ற முன்னொட்டுத் தகவல் தேடலுக்கு இடையூராக இருக்கின்றது. மேலும் சிங்கப்பூர், இலங்கை போன்ற பிறநாட்டு தகவல்கள் அவ்வாறு நாட்டின் பெயரை முன்னொட்டாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவில்லை.
ஆசிரியர் குழு தலையீடு
ஒரு கலைக்களஞ்சியம் தான் எடுத்துக் கொண்ட தலைப்புக்குள் வரும் எல்லா கலைச் சொல்லுக்கும் அல்லது ஆளுமைகள் பற்றியும் செறிவான தகவல்களை வழங்க வேண்டும். தகவல் கொடுப்பது மட்டுமே அதன் பணி. ஆனால் உலகத் தமிழ்க் களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் வேடிக்கையாக உள்ளன. உதாரணமாக, ‘மலேசியா சாதி சங்கங்கள்’ (ப. 1480) என்ற தொடருக்கான விளக்கமாக, நாட்டில் சாதி சங்கங்கள் இருப்பதால் ஏற்படும் தீமைகளை விளக்கும் அறிவுரை பத்தி ஒன்று இடம் பெற்றுள்ளது. ஆசிரியர் குழு சாதிக்கு எதிரான மனநிலையுடன் இருப்பது வரவேற்கத் தக்கது. ஆனால் களஞ்சியம் என்பது தகவல்களின் தொகுப்பு மட்டுமே. அங்கு சுய உணர்ச்சிகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடமில்லை. ஒருவேளை ஒரு தகவல் களஞ்சியத்தை நாத்திகர் ஒருவர் வடிவமைக்கும்போது கோயில்கள் இந்நாட்டில் இருக்கக்கூடாது எனும் ஆலோசனைகளை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ள இயலுமா?
அதே நேரத்தில், மலேசியாவில் சாதி சங்க மாநாடு நடத்துவதில் முன்னிற்கும் ஓம்ஸ் தியாகராஜனைப் பற்றிய தகவல்கள் (ப. 1510) வெளியிடப்பட்டுள்ளது. அத்தகவலில் அவரின் சாதி சங்க ஈடுபாடுகள் பற்றிய தகவல்களோ சாதி மாநாடு நடத்திய தகவலோ இல்லை. இந்த முரண் ஆசிரியர் குழுவின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. அதேப் போல மலேசியாவில் இயங்கும் குண்டர் கும்பல்கள் பற்றிய தகவல்களையும் இக்களஞ்சியம் தவிர்த்திருக்கிறது. இவை களஞ்சியத்தின் தரத்தை வெகுவாகப் பாதிக்கின்றது.
மொழிநடை
கலைக்களஞ்சியம் என்பது செறிவான தகவல்களை நேரடி மொழியில் நம்பகமான ஆதாரங்களுடன் வழங்க வேண்டும். உணர்வுப்பூர்வமான மொழி நடையும் கற்பனையான வர்ணனைகளும் அதற்கு உதவாது. அதேப்போல செவி வழி செய்தி போலவும் சார்பு மனநிலையுடனும் திரிக்கப்பட்ட தகவல்களைக் களஞ்சியங்களில் எழுத முடியாது. ஆனால் உலகத் தமிழ்க் களஞ்சியத்தின் தகவல்கள் மிகையான மொழியில் சார்பு மனநிலையில் எழுதப்பட்டுள்ளன. அவை அறிவுக்குகந்ததாக அமையவில்லை. எடுத்துக் காட்டுக்கு மூன்று உதாரணங்களைச் சுட்டலாம்.
1. மலேசியா நடராஜா, ஆர் (ப.1519) //…. தமிழர்(திருவள்ளுவர்) ஆண்டு பிறப்பு தை முதல் நாளே என்று தமிழக அரசு (கலைஞர் காலத்தில்) அறிவித்தது. பின்னர் அமைந்த (ஜெயலலிதா காலத்தில்) அரசு, பழையபடியே சித்திரைக்கு மாற்றியது. அதனால் இங்குப் பெருங்குழப்பம் ஏற்பட்டது. தாய்கோயிலின் தலைவர் என்னும் முறையில், தமிழர் புத்தாண்டு தொடக்கம் தை முதல் நாளே என்று துணிச்சலோடு அறிவித்தார்(2013). தமிழகத்தில் கூட ஏற்படாத பண்பாட்டுத் தெளிவை மலேசியாவில் ஏற்படச் செய்தார். அறிவித்ததற்கொப்பப் பத்துமலைத் திருத்தல வளாகத்தில் மிகப்பெரிய அளவில் புத்தாண்டு, பொங்கல் விழாக்கள் எடுத்துத் தமிழ் நெஞ்சங்களைப் பூரிக்கச் செய்து வருகிறார்//.
மலேசியாவில் வாழும் தெளிந்த சமூகப் பார்வைக் கொண்ட யாருக்கும் இத்தகவலில் உள்ள அபத்தமும் சார்பும் திணிப்பும் வெளிப்படையாகப் புரியும். களஞ்சியத்தில், பல தலைவர்களைப் பற்றிய தகவல்கள் இவ்வாரான தனிமனித ஆராதனை மொழிநடையில் உள்ளது. அப்பதிவுகளை வாசிக்கையில் இக்களஞ்சியம் அறிவு நூலுக்கான தகுதியற்றது என்ற சலிப்பே மிஞ்சியது.
2. மலேசியா சயாம் மரண ரயில் பாதை (ப. 1478) // இரண்டாம் உலகப்போரின் போது மலாயாவிலிருந்து பல்லாயிரக் கணக்கில் தமிழர் சயாமுக்கு இருப்புப் பாதை அமைக்கக் கட்டாயமாக இழுத்துச் செல்லப் பட்டனர். அப் பணியில் ஈடுபட்டபோது ஓய்வு ஒழிவற்ற கடும் உழைப்பாலும் நோயாலும் நச்சுத் தண்ணீராலும் ஜப்பானியரின் விலங்கினும் கொடிய கெடுபிடியாலும் மிகப் பெரும்பான்மையினர் உயிரிழந்தனர். ஜப்பானியர் ஆட்சி முடிவுற்றபின் 60 ஆயிரம் தமிழர் கதி எண்ணவாயிற்று என்றே தெரியவில்லை என்று (டாக்டர்) கர்னியால் சிங் சாந்து குறிப்பிடுகிறார். அவ்வெண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கு மேல் என்றும் சொல்லப்பெறுகிறது. அளந்துரைக்க இயலாத உயிரிழப்பு, கற்பனை செய்துபார்க்க இயலாக் கொடுமைகளுக்கெல்லாம் காரணமாய் இருந்த அந்த இருப்புப் பாதையை டெத் ரயில்வே (Death Railway மரண ரயில்பாதை) என்று வரலாறு வருணிக்கிறது. இந்தக் கொடிய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு, தஞ்சோங் மாலிம் ஆர்.சண்முகம் கற்பனை கலந்து சயாம் மரண ரயில் என்னும் நெடுங்கதையாக (Novel) எழுதியுள்ளார். அதனை உமா பதிப்பகம் வெளியிட்டுள்ளது (1992) இதே கருப்பொருளில் அ.ரெங்கசாமி எழுதிய நினைவுச் சின்னம் என்னும் நெடுங்கதையை மயில் தொடர்கதையாக வெளியிட்டது, அக்கதை உண்மை வரலாற்றைக் கற்பனைச் சிறகுகளால் அடைக்காமல் உள்ளதை உள்ளவாறு கூறுகிறது.//
சயாம் மரண ரயில் பற்றி இத்தகவல் புனைவு மொழியில் மிக மேலோட்டமாகவும் வரலாற்று உண்மைகளை மறைத்தும் எழுதப்பட்டுள்ளது. இப்பதிவை வாசிக்கும் போது, சயாம் மரண ரயிலில் பாதிப்புற்ற மக்களின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மாறாக மலேசிய தமிழர்கள் மட்டுமே அங்கு துன்புறுத்தப்பட்டதாக ஒரு கற்பனையே தோன்றுகின்றது.
3. மலேசியா மலேசியாவில் பாரம்பரிய மருத்துவம் (ப. 2137) //தமிழ் மக்கள் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் புலம் பெயர்ந்து வந்த அந்தக் கொடுமையான காலத்திலிருந்து நீண்டகாலம் வரை சிறைக்கூடம் போன்ற தோட்டப்புறங்களில் உழைத்து ஓடாய்க் கிடந்தனர். ஓயாமல் உழைத்தும் அரைவயிற்றுக் கஞ்சிக்கும் வழியில்லாமல் துன்புற்றனர். அதே நேரத்தில் மருத்துவ வசதியின்றியும் வாடினர். அக்காலத்தில் பாட்டிமார் தங்கள் மூளையில் பதித்து வைத்திருந்த மருத்துவ அறிவுதான் அவர்களைக் காத்தது….//
இத்தகவலில் காணப்படும் சுயபட்சாதாப உணர்வு மொழிகள் நாளிதழ் துணுக்குச் செய்திகுரியவை. கலைக்களஞ்சியத்தில் அதற்கு மதிப்பில்லை. மேலும் மலேசியாவில் பாரம்பரிய மருத்துவம் என்ற பொது தலைப்பில் முதன்மையில் இருக்க வேண்டியது மலாய் நாட்டார் மருத்துவம்தான். ஆனால் இப்பதிவில் அந்தத் தகவலே இல்லை.
தகவல் பிழைகள்
களஞ்சியங்களின் ஆதாரம் அவற்றின் தகவல் செறிவுதான். ஆனால் தகவல் சேகரிப்பில் உள்ள சிக்கல்களால் பிழைகள் ஏற்படுவதுண்டு. ஆயினும் இயன்ற அளவு தகவல் பிழைகள் இல்லாத களஞ்சியத்தை வெளிக்கொணர பொருப்பாசிரியர்கள் மெனக்கெட வேண்டியுள்ளது. எல்லா தகவல்களையும் தீர ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பிறகே நூலாக்கம் செய்வது சிறப்பு. ஆயினும், உலகத் தமிழ்க் களஞ்சியத்தில் காணப்படும் தகவல்களில் பல பிழைகள் உள்ளன. பிற மூலங்களுடன் ஒப்பிட்டும் தொடர்புடையோரிடம் நேரடியாகத் தகவல் பெற்றும் அதை அரியலாம். எடுத்துக்காட்டாக, சிலவற்றை மட்டும் குறிப்பிடுவது பொருந்தும் என்று நினைக்கிறேன்.
1. பீர்முகமது ( ப. 1537) பிறந்த தேதி பிழையாக அச்சாகியுள்ளது. சரியான தகவல் : அவரின் பிறப்பு 11.1.1942)
2. வடிவேலு சி (ப. 1577) பெயர் பிழையாக அச்சாகியுள்ளது. சரியான தகவல்: பெயர் சி. வடிவேல் (சி. வடிவேலு என்பவர் வேறு ஒரு எழுத்தாளர்)
3. சுந்தரம்பாள். ச ( ப. 1488) அம்மாவின் பெயர் நீலாவதி எனப் பிழையாக அச்சாகியுள்ளது. சரியான தகவல் : தாயாரின் பெயர் கண்ணம்மா
4. சண்முக சிவா. மா ( ப. 1475) //…சுப. நாராயணன் (காண்க) இவரை ஊக்கப்படுத்தி வழிகாட்டினார். மலேசியாவில் இராமதாசரை (காண்க அணுகித் தமிழறிவை வளர்த்துக் கொண்டார்//
இத்தகவல்கள் முற்றிலும் பிழையானவை. மருத்துவர் சண்முக சிவாவின் படைப்புகளை வாசித்துப் பாராட்டியவர் பைரோஜி. நாராயணனாவார். சுப. நாராயணன் அல்ல. மேலும் இரு நாராயண்களில் யாரும் அவருக்கு வழிகாட்டியதாகப் பதிவில்லை. அதே போல சண்முக சிவாவின் தந்தை சுவாமி ராமதாசரின் நண்பராக இருந்தார் என்பதே உண்மை. சண்முக சிவா சுவாமி ராமதாசரிடம் தமிழ் கற்றார் என்பது பிழை.
இவை உதாரணத்திற்கு வழக்கங்கப்பட்டவை. என் வாசிப்பில் இப்படி ஏராளமான தகவல் பிழைகள் உள்ளன.
நிபுணத்துவத்தில் குறைபாடு
இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள எந்தத் தகவல்களுக்கும் மேற்கோள்கள் அல்லது சான்றாதாரம் வழங்கப்படவில்லை. சில தகவல்களில் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ‘காண்க’ என்ற மேல் தகவல் களஞ்சியத்தில் தேடினால் கிடைக்கவில்லை. எடுத்துக்காட்டாக, ‘மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்’ (ப. 1550) எனும் பதிவில் குறிப்பிடப்படும் கோ. சாரங்கபாணி, இராம சுப்பையா ஆகியோரின் தகவல் இடம்பெறாததைச் சுட்டலாம்.
மேலும், களஞ்சியம் என்பது நம்பகமான தகவல்களைக் கொண்டது. ஆசிரியர் குழு ஆராய்ந்து முடிந்த தகவல்களே அதில் இடம் பெற முடியும். ஒருவர் தரும் பட்டியலை அப்படியே ஏற்று அதையே தகவலாக்குதல் தவறான நடைமுறையாகும்.
எ.காட்டு : மலேசியா நாச்சி குளத்தார் (ப. 1521). //….. இவர் தந்த பட்டியல் படி 35 நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்//
நூலை அவசரமாக வெளிக்கொணரும் வேகத்தில் நிகழ்ந்த கவனக்குறைவுகளாக இவை இருக்கக்கூடும். ஒரு களஞ்சியத்தின் முக்கிய அங்கமாக இருப்பவை அவற்றின் மேற்கோள்கள். தகவல்களின் நம்பகத்தன்மைக்கு மட்டும் அல்லாது ஆர்வமுள்ள வாசகர்களுக்கு அவை தேடல் வசதிகளை உருவாக்கிக் கொடுக்கும். அறிவார்ந்த படைப்புகளில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணை இருப்பது அவசியம். அவை இல்லாமல் அந்தப் படைப்புகளுக்கு மதிப்பிருக்காது. ஆகவே உலகத் தமிழ்க் களஞ்சியம் மேற்கோள்கள் இல்லாத தகவல் சேகரிப்பு நூலாக மட்டுமே இருப்பது அதன் தரத்தைப் பாதிக்கின்றது.
விரயம்
மூன்றாவது தொகுதி மொத்தமாக 706 பக்கங்கள் கொண்டுள்ளது. அதில் முதல் 174 பக்கங்களில் 419 மலேசியத் தகவல்கள் உள்ளன. ஆனால் ப. 1861 முதல் ப. 2134 வரை (273 பக்கங்கள்) ‘திரைப்படங்கள் பிப்ரவரி 2016 வரை’ என்ற துணைத் தலைப்பில் 4531 திரைப்படங்களின் அடிப்படை தகவல்கள் அகர வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு பொதுவான கலைக்களஞ்சியத்தில் திரைபடங்கள் பற்றிய இவ்வளவு தகவல்களை ஏன் இணைக்க வேண்டும்? இது திரைப்படத் துறை களஞ்சியமாக இருந்தால் சிக்கல் இல்லை. அதிலும் இந்தப் பட்டியலில் மலேசியாவில் தயாரிக்கப்பட்ட படங்களின் பெயர்கள் எதுவும் இல்லை. ஆகவே இணையத்தில் மிகச் சுலபமாகத் தேடி சேகரித்துவிடக் கூடிய திரைப்பட தகவல்களை இக்களஞ்சியத்தில் இணைத்திருப்பது காகித விரயமாகவே தோன்றுகின்றது. மிக எளிதாக இணையத்தில் கிடைக்கக்கூடிய இத்தகவல்களுக்கு மாற்றாக மலேசிய நூல்கள் பற்றிய அரிய பட்டியலை இணைத்திருந்தால் இத்தொகுதி மலேசியாவின் மிக முக்கிய நூலாக அமைந்திருக்கும். 1969 ஆம் ஆண்டில் ராம. சுப்பையா தொகுத்த ‘மலேசியான’ பட்டியலுக்கு நிகராக அது அமைந்திருக்கும்.
உலகத் தமிழ்க் களஞ்சியம் மலேசியப் பதிப்பகம் ஒன்று முன்னெடுக்கும் உன்னத திட்டமாக அமைகின்றது. பிற பதிப்பகங்களுக்கும் இது போன்ற அரிய முயற்சிகளில் ஈடுபட இது ஒரு முன்னோடி திட்டம். ஆயினும் அதன் அறிவு மதிப்பு மிகவும் பலகீனமாக உள்ளது. இந்நூலில் இடம் பெற்றுள்ள தகவல்கள் சந்தேகத்துக்குரியவை. நம்பகம் அற்றவை. இக்களஞ்சியம் ஆய்வுகளுக்கோ பிற அறிவார்ந்த தேவைகளுக்கோ மேற்கோளாகக் கொள்ளும் தகுதியற்றது. ஆகவே, மேலும் கூடுதல் கவனம் செலுத்தி அதன் குறைபாடுகளை மறுபதிப்பில் சரி செய்தால் மாத்திரமே அறிவுலக வரலாற்றில் இடம்பெறும், அரிய பணியாக நிலைபெறும். அதுவரை இம்முயற்சி காகித விரயம் என்றே அறிவுலகால் வர்ணிக்கப்படும்
மலேசிய இலக்கிய உலகில் துணிவான, வெளிப்படையான விமர்சனங்களை மிக அரிதாகவே பார்க்க முடிகிறது. பெரும் பாலும் நமக்கு ஏன் வம்பு, நாம் ஏன் எதிர்ப்பை தேடிக் கொள்ள வேண்டும் என்று கள்ளமௌனம் காக்கும் சூழல் தான் இங்கு அதிகம். அந்த நிலையை உடைத்து வெளிப்படையாக விமர்சனங்களை நம் நாட்டில் படைப்போர் மிகச் சிலரே. வகையில் திரு அ.பாண்டியன் அவர்களின் மேலும் ஒரு சிறந்த விமர்சனமாக ‘உலகத் தமிழ் களஞ்சிய விமர்சனம்’ அமைந்துள்ளது. விமர்சகருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.