கோட்ட வூட்டுக்கு முன்னால நின்னுட்டு இருந்தேன்.
பதின்பருவ பெண்ணின் பிடரி மசிரைப் போல பொசபொசன்னு விரவியிருந்த இருட்டு, ராப்பூரா நிழலை விழுங்கியிருக்க, அப்போ தான் தெளியத் தொடங்கியிருக்கும் நெனப்புத் தப்பினவன் மனசைப் போல சூரிய வெளிச்சம் பரவத் தொடங்கிய விடியகால நேரம்.
வெத்தலையைப் பாக்கோட மென்னு சவச்சி எச்சிலோட முழுங்கிட்டு, திண்ணையில கால் நீட்டிட்டு உக்காந்திருக்குற கிழவியைப் போல, பல ஆளுங்களையும், காலங்களையும் முழுங்கிட்டு உக்காந்திருக்கு வானத்தைத் தொடுற மாதிரி உசந்திருந்த அந்தக் கோட்ட வூடு, இதோ இப்போக் கூட, விருத்தாம்பாவை முழுங்கப் போவுதாம். விருத்தாம்பா என் பெரியப்பன் பொண்டாட்டி, இந்த வூட்டை, இடுப்புச் சாவிக் கொத்துல வெச்சிட்டுருக்குற ஆளு. என்னைப் பாக்கணுமாம். ஒருக்கா ஒரு எட்டு வந்து என்னைய பாத்துட்டுப் போச்சொல்லுன்னு ஆள் மேல ஆள் விட்டுட்டு இருக்கு. என்னோட அப்பனை அம்மாவை, பாக்கியம் பெரியம்மாவை, எளயவன் பெரியப்பாவைன்னு எல்லாரையும் பாத்துட்டுது . என்னைப் பாக்க இன்னும் என்ன இருக்கு?
‘ஹ..ஹா’ ன்னு அகங்காரமா சிரிக்கிற மாதிரி ஏதோ பறவைங்க, சிரிக்கிதுங்க. வேப்பமரத்துக் கிளையில சத்தம் கேக்குது. ஆளை காங்கலை. கூடவே எசப்பாட்டா கீக் கீய்ன்னு வேற ஏதோ பறவைங்க கத்துது. வூட்டுக்கு முன்னாடி இருந்த காஞ்சனாங்குளத்துப் படித்துறையில உக்காந்துக்கிட்டு நானும் என் அம்மாவும் இப்படித் தான் மாத்தி மாத்தி எதாச்சும் பேசிட்டு இருப்போம். சமயத்துல, இடுப்புக் குடத்தோட தண்ணி எடுக்க வரும் பாக்கியம்மாவும், புள்ளைக் குட்டின்னு விரித்தியில்லாதவளுக்குப் பேரைப் பாரு விருத்தாம்பான்னு ரெண்டான்னு வார்த்தைப் பேசும். “அக்கா போக்கா, யாராச்சும் பாத்துற போறாங்கன்னு” அம்மா பயப்படும். இதோ இப்பயும் அம்மாவும் பாக்கியம்மாவும் படிக்கட்டுல நின்னுட்டு, பாத்துப் பத்திரமா போயிட்டு வந்துடு தம்பின்னு சொல்றாங்க.
வூட்டு படியேறினேன். கீழ் தாழ்வாரத்தை ஒட்டி ஆளுயர மூங்கில் பிளாச்சு தட்டிக்குப் பதிலா, மூணடி இரும்பு அழி போட்டிருந்தது. நீளநடை தாண்டி, முன் கட்டு மூத்தவருக்கும் அவரு பொஞ்சாதி விருத்தம்பாவுக்குமான பகுதி. யாரும் அங்க நிக்க கூட மாட்டோம். “ஆனாக்கா…! என் கண் சுத்துமுத்தும் தேடிச்சி. ஆ..அதோ. இங்க தான் இப்பமும் டிவி பொட்டியிருக்கு. நாங்களெல்லாம் உள்வூட்டுல நின்னு எட்டிப் பாக்கணும். எப்பமாச்சும் நைசா கிட்டக்க வந்து பாப்பேன். இங்கே வான்னு கூப்பிடுவாரு மூத்தவரு.” ஏன் பெத்த பாசம் பொங்குகுதான்னு முறைக்கும் விருத்தாம்பா. “ச்சைன்னு” முணுமுணுப்பாரு அவரு.
அண்ணன் தம்பிங்களோட ஆளுயர படம் மாட்டியிருந்தது. இப்பவும் மூத்தவரு இங்க வான்னு கூப்பிடுறாரு. படத்துல இருந்த அப்பா என்னை வந்துட்டியான்னு கேட்டாரு. உம். இப்பவும் இங்க நிக்கப் பயம் தான். விறுவிறுன்னு வேக நடையோட நகர்ந்து ரெண்டாம் கட்டுல… ஆங்… இதோ இங்கே தான் எளயவன் கயித்துக் கட்டிலோட கிழிஞ்ச நாரா படுத்திருக்கும். எந்நேரமும் அதுக்கு எளப்பு நோவு தான். நெஞ்சாங்கூடு விட்டத்தைத் தொட்டுட்டுக் கீழே இறங்கறதுக்குள்ள, பாக்கறவுங்களுக்குப் பதறிடும். இப்பமும் கண்ணு முன்னாடி எளயவனின் இழுப்பைப் பாக்க முடியாம பதட்டத்தோடு மூணாங்கட்டுக்குப் போனா.. ஹா அப்பாடா.! நெஞ்சு நிம்மதியில ஏறி இறங்கியது.”
“ஏன்னா. இதோ இது தான்.. நானும் அம்மாவும் படுக்குற இடம்.”
ராவானா பாக்கியம்மா அழுவுற குரலும் விருத்தாம்பாவோட மிரட்டற சத்தமும் கேட்கும். அப்புறம் எழுந்து ரெண்டு பேரும் சமையக்கட்டு தாண்டி பத்தாய ரூம்புக்குப் போறதும் கொஞ்ச நேரத்துல இருட்டுக்குள்ள வெள்ளை வேட்டியில மூத்தவரு போறதும் தெரியும். ராத்திரியான்னா எலி உருட்டுற மாதிரி போவறதும் வர்றதும்னு இந்தப் பெரியவங்களுக்குத் தூக்கம் வராதோ!
யாரோ பிடிச்சி இழுத்துடற மாதிரி பயந்து, என்னால மூச்சுக் கூட முழுசா விட முடியாம இறுக்கக் கட்டிப் பிடிச்சிட்டு தான் அம்மா படுத்திருக்கும். என்கிட்டருந்து யாரும் அம்மாவைப் பிரிச்சிருவாங்களோன்னு நானும் அம்மாவை இறுக்கிக்குவேன். இன்னிக்கும் கட்டிப் பிடிச்சிட்டு படுத்திருக்கும் அம்மா வாசம் மூச்சுக் காத்துல இருக்குது. இதோ இப்போவும் தான். “ம்ம்ம்..ஹா..” கொஞ்ச நேரம் நின்னு நெஞ்சை நிரப்பி மூச்சை இழுத்து விட்டேன். அம்மா வாசம். இந்த வூட்டுக்கு வரும் போது எனக்கு அஞ்சாறு வயசிருக்கும். அதுவரைக்கும் எங்கோ தூரத்தில எப்பவும் குளிரடிக்கும் மலையூரில இருந்தோம். மூணு நாள் ரயில வரணும். ஜாலியா இருக்கும்.
மனசுல பதிஞ்சி போன வூடு, தன்னாலே சமையக்கட்டுக்கு நடந்தேன். இங்கன தான், லீவுக்கு வந்திருந்த போது ஒருநா ராத்திரி நானு, எங்க அப்பா பட்டாளத்தானும், மூத்தவரும் சாப்பிட்டுக்கிட்டிருந்தோம். இத்தனை வருஷம் வாஹா பார்டர்ல குடும்பத்தைக் கூட வெச்சிக்க முடிஞ்சுது. இப்போ பதான்கோட்டுக்கு மாத்தலாயிருக்குன்னு அப்பா சொல்ல, அவுங்களை உன் பெண்சாதி வீட்ல விட்டுட்டுப் போயேன்னு மூத்தவர் சொல்ல, அம்மா சந்தோஷத்துல பூரிச்சிப் போச்சு. அதைப் பாத்துட்டு அப்படியா சொல்றேன்னு அம்மாட்ட கேட்ட அப்பா, அம்மா பதில் சொல்றதுக்குள்ள “உன்னை வேணா உன் வீட்ல விட்டுட்டுப் போயிடறேன். என் புள்ள எங்க வீட்ல இருக்கட்டும்னு” சொல்ல, நான் சாப்பிட்டிருந்த கையை உதறிட்டு எழுந்து ஓடிப் போய் அம்மாவை இடுப்போட கட்டிக்கிட்டு “அம்மா என்னை விட்டுட்டுப் போய்டாதேனு” கதறினேன். ராத்திரி கூட கன்னத்தில் வழிஞ்சோடும் கண்ணீரோட என்னை வுட்டுட்டு போய்டாதேன்னு புலம்பிட்டிருந்தேன்.
வென்னியடுப்பை ஊதிக்கிட்டு இருந்தது அம்மா. படிக்கட்டுல உக்காந்திருந்த பாக்கியம்மா “ச்சை. வூடா இது! பாம்பும் பருந்தும் இருக்குற வூடு இது. இங்கே உம்மவனை விட்டுட்டுப் போயிடாதேன்னு” எங்கம்மாட்ட அழுதுச்சு. “இல்லக்கா என்னவானாலும் நான் என் மவனுக்காக இங்க தான் இருப்பேன்னு” அம்மா கறாரா சொன்னது இன்னும் என் காதுல கேக்குது. ஆனா என்னை விட்டுட்டு எரிஞ்சி தானே போச்சுன்னு கோபமும் இருக்கு.
இதோ இந்தப் பத்தாய ரூம்புல பாக்கியம்மா அழுதுகிட்டே படுத்திருக்க, இனி ஒருக்கா இதைப் போல ஆச்சுன்னா கஷ்டம். பாத்துக்கங்கன்னு மருத்துவச்சி சொல்லிட்டு இருந்தது.
“பத்து நாள் தள்ளி போச்சுன்னா பப்பாளிக்கா பொரியலோ, அன்னாசி பழமோ சாப்பிட்றுக்கலாம். சொன்னா தானே! சொல்லியிருந்தா அந்தச் சின்னதை விட்டுச் செஞ்சி தர சொல்லியிருப்பேனே. தானா இழுத்து விட்டுக்கிட்டா நாம என்ன பண்றதுன்னு” விருத்தாம்பா சொல்ல,
என் புருஷன்னுதுன்னு சொல்லிட்டுப் போறேன். இந்தத் தடவை விட்டுடுங்கன்னு கெஞ்சிட்டு இருந்தது பாக்கியம்மா. ஆமோதிக்கற மாதிரி எளையவன் உக்கும்..உக்கும்னு இருமிக் காட்டியது.
“எதுக்கு? எதுக்குன்னு கேக்கறேன்?” என்று ஆக்ரோஷமா உறுமியது விருத்தாம்பா. செப்புக்குடத்து
மேல சின்ன சொம்பு வெச்சா மாதிரி பெருத்த உடம்பும் சிறுத்த தலையும், இல்லாத கழுத்துல அம்புட்டு நகையும் சீறி துடிக்க “ஒன்னைப் பெத்து வெச்சிட்டு என் தலை மேல ஏறி உக்காரவான்னு” அதட்டியது.
மருத்துவச்சி எழுந்து பின்னால போய் கிணத்தை ஒட்டி மண்டிக் கிடந்த எருக்கஞ்செடியிலருந்து, பச்சையா கெட்டியா கொஞ்சம் நீளமா வெள்ளை வெளேருன்னு பிசுபிசுப்பான பாலோடு ரெண்டு குச்சியை ஓடிச்சிட்டு வந்து பத்தாய ரூம்புக்குள்ள போக பாக்கியத்தின் அழுகுரல் ஆளை உலுப்பியது.
“யக்கோ, எழுந்து ஒரு வாய் சுடுகஞ்சி குடிச்சிட்டுப் படு”ன்னு அம்மா கெஞ்சிட்டு இருந்தது. தண்ணி வேணும்னு ஜாடை காட்டிச்சி பாக்கியம்மா. ஓடிப் போய் சொம்புல தண்ணி மோந்துட்டு வந்து குடுத்தேன். என்னன்னு இப்பவும் புரியலைன்னாலும் பாவம் பாக்கியம்மான்னு நெனச்சி அழுகையா வருது.
ஒவ்வொரு வாட்டியும் பச்சைப் பாலோட குச்சியைச் சொருவிட்டு போய்டுது. உள்ளேருக்க எல்லாம் புடுங்கிட்டு வந்துடு. சின்னதா கையையும் காலையும் பாத்துட்டுக் கண்ணு மூட முடியலை. ஒன்னுக்குப் போனா கூட எரிச்சல் ஆளைக் கொல்லுது. அங்க முச்சூடும் ரணமாயிடுது. தீட்டாப் போவுது. வயித்து வலி தாங்க முடியலை. நாண்டுட்டு செத்துடலாமான்னு இருக்கு. ஆசையாசையா என்னைக் கட்டிக்கிட்ட இந்தப் பாவப்பட்ட மனுஷனுக்காகப் பாக்கறேன்னு சொல்லி அழுததைப் பாத்துக்கிட்டிருந்த எளயவனுக்கு எளப்பெடுத்து வழக்கம் போல விட்டத்தைத் தொட்ட நெஞ்சாங்கூடு கீழே இறங்கும் போது உள்ளேயிருந்த ஆவியை வெளியே தள்ளிருச்சு.
சாவுக்கு வந்திருந்த பாக்கியம்மா வூட்டு சொந்தகாரவுங்க காரியம் முடிஞ்சி கசப்புத்தலை அன்னைக்கு மூக்கு முட்ட செம்மறியாட்டுக் கறிக்குழம்பை ஒரு பிடி பிடிச்சிட்டு உக்காந்திருந்தாங்க. மூத்தவர்ட்ட, அவுங்க வூட்டு பொண்ணு பாக்கியத்தைக் கூட்டிட்டுப் போறோம்னு அவுங்க சின்ன அண்ணன் சொல்ல, “ஆஹா அதுக்கென்ன கூட்டிட்டுப் போங்க. இங்கேயே கட்டிப் போட்டு வைக்க அதும் வயித்துல வெச்ச ஒரு புழு பூச்சியா இருக்கு. சின்ன வயசு. வேற மாப்பிள்ளை பாத்துக் கட்டி வைங்கன்னு” சொல்லிட்டுத் தலையைக் குனிஞ்சிக்கிட்டாரு.
“ஆ என்ன மச்சான் இப்படி சொல்லிப்புட்டியே. நம்மதுல அறுத்துக் கட்டற பழக்கமில்ல. ஊருக்கு வந்தா அந்த நெனப்பு வந்துடுமோ! வேண்டாம். இங்க தான் இருக்கட்டும்னு” எழுந்து போய்ட்டாங்க. “நாசமா போறவன்னு” பெரியம்மா அழுதுச்சு. என்ன அழுது என்ன பிரயோசனம்! இதோ மறுபடியும் மருத்துவச்சி வந்தா. அதே எருங்கக்குச்சி தான். பின்னாடி தோட்டம் பூரா பப்பாளிக்கன்னும் எருக்கஞ்செடியுமாத் தான் மண்டிக்கிடக்கு. இந்தத் தடவை ரொம்ப ஆபத்தா போச்சாம். அன்னைக்கு வந்த சின்ன ஆஸ்பத்திரி நர்சம்மா கிளிசரின்ல சல்லாத்துணியை முக்கி உள்ளே வைன்னு அம்மாட்ட குடுத்துச்சு. ரத்தம் முழுசும் சீழ் பிடிச்சிருச்சு. “நாளைக்கு காலையில் வரேன். வண்டி கட்டிக்கிட்டுப் பெரியாஸ்பத்திருக்குப் போயிரலாம்னு” சொல்லிட்டுப் போச்சு.
ராத்திரி விருத்தாம்பாவும் மூத்தவரும் பத்தாய ரூம்புக்குள்ள போனாங்க. பாக்கியம்மா முனகற சத்தம் கேட்டச்சு. அப்புறம் சத்தமேயில்ல. ரெண்டு பேரும் வெளியே வந்தாங்க. என்ன கருமம்ன்னு மூத்தவர் அலுத்துக்கிட்டாரு. “அதுக்குப் பாத்தா ஆச்சா? நாளைக்கு வெளியே தெரிஞ்சா என்ன ஆகும்னு யோசிக்கணும்னு” விருத்தாம்பா குரல் எழும்பாம சீறினா. அம்மா என்னை இறுக்கக் கட்டிக்கிடுச்சு. கையெல்லாம் ரொம்ப ஜில்லுன்னு இருந்தது.
பாக்கியம் சாவுக்கு வந்த அப்பாட்ட, அக்காவுக்கு என்ன ஆச்சு தெரியுமான்னு எல்லாத்தையும் ராத்திரி சொல்லி அழுதுச்சு அம்மா. “ச்சே..தள்ளிப்படு. உன்னைப் பத்திக் கேள்விப்படறது ஒன்னும் சரியில்லன்னு” கோபப்பட்டாரு அப்பா. “நானா? நான் என்ன பண்ணினேன்?” என்று சீறியது அம்மா. “நீ அந்த மணியைப் போய் பாக்கறது எதுக்குன்னு தெரியாதா?”ன்னு கேட்டாரு அவரு.
“மணி நம்ம கூட படிச்சவன். நம்ம மவனை அடுத்த வருஷம் டவுன் கான்வென்ட்ல ஆறாவது சேக்கணும். அது விஷயமா ஒரே ஒரு நாள் தான் போய் பாத்தேன்னு” சொன்னது அம்மா. “ஏன் அண்ணன் பாத்துக்க மாட்டாரா?”ன்னு கேட்டாரு. “நான் இங்க நடந்தததைச் சொன்னா நீங்க ஒன்னு சொல்றீங்கன்னு” கெஞ்ச,
“என் அண்ணனை ஏதாவது சொன்னா அவ்வளவு தான்னு” அந்த ராத்திரியே அம்மாவைத் தரதரன்னு இழுத்துக் கொண்டு போய் வெளியே விட்டுட்டாரு,. மழை அடிச்சி ஊத்துது. நான் அழுவறேன். “விடு. அம்மாட்ட போறேன்னு” ஜிம்பினேன். என் கூப்பாடு கேட்டு மூத்தவரும் விருத்தம்பாவும் வெளியே வந்தாங்க. என்ன ஆச்சுன்னு கேக்க, “உங்களை தப்பா பேசுற நாய்க்கு வீட்ல இடமில்லன்னாரு” அப்பா.
சின்னப்புள்ள எதையாவது பாத்துப் பயந்திருக்கும்னு நல்லவளா சொல்லிட்டு அம்மாவை உள்ளேக் கூட்டிட்டு வந்திச்சு விருத்தாம்பா. “உங்களைப் பேசின நாக்குக்குச் சோறு கிடையாதுன்னு” பட்டினி போட்டுப் பத்தாய ரூம்புக்குள்ள போட்டுட்டாரு அப்பா. என்னையும் அம்மாட்ட விடலை. ஒருவழியா அம்மா இனி யாரையும் தப்பா பேச மாட்டேன்னு சொல்லி வெளியே வந்தது. ஆனா அடுத்த தடவை அப்பா லீவுக்கு வூட்டுக்கு வரலை. எங்கேயோ சண்டையில உடம்புக் கூட கிடைக்கலைன்னு சொல்லிக்கிட்டாங்க.
அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. வாந்தி தலைசுத்தல்னு படுத்தே கிடந்தது. மருத்துவச்சி எருக்கங்குச்சியை ஒடிச்சிட்டு வந்தா. முடியாதுன்னு அம்மா ஆர்ப்பாட்டம் செஞ்சது. இருந்துட்டுப் போகட்டும். “இந்த ஒன்னைப் நல்லப்படியா முழுசா பெத்துட்டு ஆப்பரேசன் பண்ணிக்கிறேன். அப்புறம் எருக்கங்குச்சிக்கு வேலை இருக்காது. ஊர்ல உலகத்துல தம்பி பெண்டாட்டி தன் பொண்டாட்டின்னு இருக்கே. நானும் அப்படியே இருந்துட்டுப் போறேன்னு” சொல்லி கெஞ்சியது.
“ஏண்டி என்னாலே முடியலை. இந்தாளை வெளியே விட்டா இருக்குற சொத்துக்கு பத்து பதினஞ்சு பேரு வந்து நிப்பாங்கன்னு தானே உள்ளுக்குள்ளேயே இருந்துட்டுப் போகட்டும்னு இந்த ஏற்பாடு ஆயிருக்கு. அதுக்குன்னு கண்ணாலம் கட்டிக்கிடற அளவுக்கு யோசிப்பியா? தொலைச்சிடுவேன் தொலைச்சின்னு” விருத்தாம்பா எகிறியது.
“இப்போ மட்டும் வாரிசு இல்லாமலா இருக்குன்னு” என்னைப் பாத்தது அம்மா.
“அந்தப் கொழுப்புல தானே எதுத்து பேசறேன்னு” உறுமிட்டு, “இந்த மாதிரி என் தலைமேல உக்காந்துப்பான்னு தானே பாக்கியத்தை அடக்கி வெச்சிருந்தேன். நீ ஆரம்பத்துலேயே வெளியூருக்குத் தப்பி போயிட்டேன்னுது” விருத்தாம்பா. “அதனால தானே எம்புள்ள தப்பிச்சதுன்னு என்னை இடுப்போட இறுக்கிக்கிட்டு, முட்டாப்பய எம்புருஷன்ட்ட சொன்னா நம்பியிருப்பானான்னு” கேலி பேசியது அம்மா.
விடிஞ்சா தீபாவளி. “காலங்காலையில என்னைக் குளிக்க வைப்பியாம்மா. புது உடுப்பு போட்டுக்கணும்னு” சொல்லிட்டுப் படுத்தேன். இருட்டுப் பிரியறத்துக்கு முன்னமே என்னை எழுப்பி தலையில எண்ணை வெச்சி, பல்லுத் தேய்க்க கையில புருஷ்சை குடுத்துப் படிக்கட்டுல உக்கார வெச்சிட்டு வென்னியடுப்பைப் பத்த வைக்கப் போச்சு அம்மா.
தீக்குச்சியை உரசி அடுப்புலருந்த விறகு மேலே போட்டது தான் தெரியும். படால்ன்னு நெருப்பு அப்படியே அம்மா மேலே பாய்ஞ்சது. அம்மா மண்ணுல விழுந்து உருளுது. ஊஹூம். தீ வானமுட்டும் வரை திருவண்ணாமலை தீபமா எரியுது. அதுக்குள்ள அம்மா அம்மான்னு கதறிட்டுக் கிட்டப் போனேன். “கிட்ட வராதே. இங்கே நிக்காம எங்கேயாவது ஓடு..ஓடு..ஓடு”ன்னு கூவிட்டே அம்மா எரிஞ்சிட்டு இருந்தது.
அதுக்கு மேல நான் ஏன் அங்கே நிக்கப் போறேன்? ஒரே ஓட்டமா ஓடினேன். குளத்தைத் தாண்டி, கோயிலைத் தாண்டி, பள்ளிக்கூடத்தைத் தாண்டி சின்ன ஆஸ்பத்திரியைத் தாண்டி காட்டாத்தைத் தாண்டி ஓடினேன். இருள் பிரியாத அந்த விடியகாலையில ஏர்கலப்பையும் மாட்டையும் பிடிச்சிட்டு வயலுக்குப் போயிட்டிருந்த மருதையன் மேலே போய் விழுந்தேன். திடுக்கிட்டுப் போய் என்னை எங்க வூட்டுக்குக் கூட்டிட்டுப் போகப் போச்சு மருதையன். அதும் இடுப்பைக் கட்டிப் பிடிச்சிட்டு விட மாட்டாம அழவே என்னை அவுங்க வூட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டு. இதோ இன்னையத் தேதி வரை அங்கே தான் இருக்கேன்.
அன்னைக்கு ஓடினவன் தான், இதோ இன்னைக்குத் தான் இந்தக் கோட்ட வூட்டுக்குள்ள வரேன். இருவது வருஷமிருக்குமா? இருக்கும். நடுவுல மூத்தவரு ஜெயிலுக்குப் போனாரு. அம்மாவைக் கொன்னதுல ருசு எதுமில்லன்னு வெளியே வந்துட்டாரு. “மனுஷனை ஏமாத்தலாம். கடவுளை ஒருநாளும் ஏமாத்த முடியாதுன்னு” மருதையன் அவரு பொண்டாட்டிட்ட சொல்லிட்டு இருந்தாரு. யாரு ஏமாத்தினா என்ன ஏமாத்தினான்னு எனக்கு ஒன்னும் புரியலை. அது மட்டுமா? எதுவுமே புரியறதில்ல. கோட்ட வூட்டுக்குக் கூப்பிட்டுப் பார்த்துட்டு நான் வர மாட்டேன்னு அழவும் விட்டுட்டுப் போன மூத்தவரு கொஞ்ச நாளையில இறந்து போனாருன்னு மருதையன் சொன்னது. இறந்து போறதுன்ன என்னன்னு எனக்குப் புரியலையே. இப்போ விருத்தாம்பா இறந்து போகப் போவுதாமே.
இம்மாம் பெரிய வூட்ல அது எங்கேருக்குன்னு தெரியலை. சமையக்கட்டைத் தாண்டி பத்தாய ரூம்பு பக்கம் வந்தேன். முனகல் சத்தம் கேட்டது. பாக்கியம்மாவா? அது தானே இந்த ரூம்புக்குள்ள முனகிட்டு கிடக்கும். எதிர்பார்ப்புல உள்ளே எட்டிப் பாத்தேன். கயித்துக் கட்டிலோட கிழிச்சிப் போட்ட நாரா கிடக்கிறது யாரு? விருத்தாம்பாவா? பெரிய செப்புக் குடத்து மேல சின்ன சொம்பு வெச்ச மாதிரி அம்மாம் பெரிய உடம்பு கந்தையா கிடக்கே.
அதை விட கந்தையா, கந்தை மூட்டையா இருக்கேன் நானு. குளிச்சா தானே.ஊஹூம். சொல்ற வேலையைச் செய்வேன். குடுக்குற சோத்தைத் திம்பேன். ஆனா குளிக்க மட்டும் மாட்டேன். நாத்தம் தாங்காம புது உடுப்பு குடுத்தா, குளிக்காம அதை போட்டுக்கிட்டுவேன். பழசைக் கலட்டி பெட்ரோல் ஊத்தினா கூட எரியாதுன்னு மருதையன் மருமவ சொல்லும். குளிக்க மாட்டேன்னு அப்படியென்ன ஒரு அடம்னு கேக்கும்.
“குளிக்க வென்னி போட்டுத் தான்னு அம்மாட்ட கேக்கப் போய், அது வென்னியடுப்பைப் பத்த வைக்கப் போயி, நெருப்பு வெடிச்சி அதைப் பிடிச்சி எரிஞ்சி போச்சு. நான் இனி குளிக்க தண்ணி கேக்க மாட்டேனே. அம்மாவும் வென்னிப் போடப் போய் எரிஞ்சி போகாதே. எங்கூடவே இருக்குமில்ல. இவுங்களுக்கு அது புரியாது. உங்க அம்மா செத்துப் போச்சுன்னு சொல்றாங்க. செத்துப் போறதுன்னா என்ன? எங்க அம்மா எரிஞ்சி தானே போச்சு.”
“லே வந்துட்டியான்னு” ஈனஸ்வரத்துலக் கேக்குது விருத்தாம்பா. “இம்மாம் சொத்தைக் காப்பாத்திக்கனும்னு வேண்டாத வேலை செஞ்சேன். கடவுளுக்கே அடுக்கலை. என் மனுஷங்கன்னு நம்பினவனுங்க என்னை இங்க கொண்டாந்து தள்ளிட்டானுங்க. ஊஹூம். கூடாது. அவுனுங்க கையில இந்த வூடு போகக் கூடாது. இந்தா உன் சொத்து. நீ காப்பாத்திக்கோ” என்று இடுப்புலருந்து சாவியைப் பிடுங்கி எங்கையில திணிச்சது. சாவியைக் கையில வாங்கினேன். அப்பாடான்னு என்னவோ பாரத்தை இறக்கி வச்சாப்பல ஒரு பெருமூச்செடுத்து விட்டுது. “நான் செத்ததும் ஒரு கொள்ளிய மட்டும் வச்சிடு”ன்னு சொல்லிட்டு நிம்மதியா கட்டில படுத்தது விருத்தாம்பா. ஒரு நிமிஷம் நின்னு அதையும் சாவியையும் பாத்துட்டு அதும் தலைமாட்டுல சாவிக்கொத்தை வெச்சிட்டு வாசலை நோக்கி நடந்தேன்.
இதோ சுடுகாட்டுல நான் வெச்ச கொள்ளியில விருத்தாம்பா எரிஞ்சிக்கிட்டு இருக்கு. எங்க அம்மா மாதிரி திருவண்ணாமலை தீபமா வானத்தைத் தொடற மாதிரி இல்லாட்டாலும் எங்க அம்மா மாதிரி எரிஞ்சது தானே. இத்தனை வருஷம் என் மனசுல கிடந்த என்னென்னவோ நினைப்பு விலக ஆரம்பிச்சது. இது தான் செத்துப் போறதா? அப்போ எங்க அம்மா செத்துப் போச்சா? ஓன்னு அழனும் போல இருக்கு.
குளிச்சிட்டு உம்பட வூட்டுக்குள்ள போன்னு மருதையன் மருமவ சொல்லிச்சி. இதோ காஞ்சானாங்குளத்துப் படித்துறையில நின்னுட்டு இருக்கேன். ஹ..ஹா ன்னு அகங்காரமா சிரிக்கிற மாதிரி ஏதோ பறவைங்க, சிரிக்கிதுங்க. வேப்பமரத்து கிளையில சத்தம் கேக்குது. ஆளை காங்கலை. கூடவே எசப்பாட்டா கீக் கீய்ன்னு வேற ஏதோ பறவைங்க கத்துது. நானும் அம்மாவும் இப்படித் தான் மாத்தி மாத்தி பேசிட்டு இருப்போம். இதோ இப்பயும் அம்மாவும் பாக்கியம்மாவும் குளத்துக்குள்ள நின்னுட்டு இருக்காங்க.
“எனக்கு அவ நெருப்பு வெச்ச மாதிரி நீ அவளுக்கு நெருப்பு வெச்சிட்டியான்னு” அம்மா கேட்டது. அந்த வூட்டுக்குள்ள போகாதே. “அது பாம்பும் பருந்தும் வாழற வூடுன்னு” சொன்னது பாக்கியம்மா. “வந்துடு. இங்கே வந்துடுன்னு” கூப்பிட்டாங்க ரெண்டு பேரும். நானும் அவுங்களை நோக்கி தண்ணிக்குள்ள இறங்கினேன். தண்ணி சில்லுன்னு இருக்கு. அவுங்க குளத்துக்குள்ள போகப் போக நானும் அவுங்களோட குளத்துக்குள்ள மூழ்கிட்டேன்.
பதின்பருவ பெண்ணின் பிடரி மசிரைப் போல பொசபொசன்னு விரவியிருந்த இருட்டு, ராப்பூரா நிழலை விழுங்கியிருக்க, அப்போத்தான் தெளியத் தொடங்கியிருக்கும் நெனப்புத் தப்பினவன் மனசைப் போல சூரிய வெளிச்சம் பரவத் தொடங்கிய விடியகால நேரம்.
நான் குளத்துல மூழ்கிறதைப் பாத்துட்டு இருந்த அந்தக் கோட்ட வூடு. “இனி நான் எதுக்காக? யாருக்காகன்னு” கேட்டது. எல்லா வூட்டுலயும் இதைப் போலக் கதை இருக்குமோ? அது பாவக் கதையா அல்லது புண்ணியக் கதையான்னு யாருக்குத் தெரியும்? சில ஆளுங்களையும் பல காலங்களையும் முழுங்கிட்டு வானத்தைத் தொட்டு விடும் உசரத்துக்கு ஓங்கி உயர்ந்து நின்னுட்டு இருந்தது அந்தக் கோட்ட வூடு.
[1/5, 9:56 PM] G.Shyamala Gopu: அம்மா
இப்பதான் படிச்சேன்
உண்மையாவே எனக்கு வார்த்தை வரல… நா படிச்ச உங்க கதைகளில் இது வித்தியாசமான எழுத்து நடை, எழுத்து வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்து நடை இது. அதாவது பேச்சு வழக்கு வட்டார வழக்கு கிராமத்து வழக்கு போல அத்தனை அருமையா இருக்கு. இந்த வகை எழுத்து நடையில் தான் உயிர்ப்பு இருக்கும். கதையோடு பயணிக்கும் உணர்வு தரும். கதைக்கருவையும் காட்சிகளையும் மனது உள்வாங்கும். எனவே இந்த எழுத்து நடை எனக்கு ரொம்பவே பிடிக்குது.
மேலும் சம்பவங்களின் கனத்தை அப்படியே அத்தனை எளிதாக இயல்பாக மனதுக்குள் கடத்தியிருக்கீங்க மா. படிக்க படிக்க பாரம் உணர முடிஞ்சுது. அதுபோல விடியல் வர்ணனை எல்லாம் உங்க வார்த்தை ஜாலங்களில் ரசிக்க வச்சுது.
கதையில் நிகழ்ந்தவை எல்லாம் மனதை உலுக்கியது. கோட்ட வூடு என்பது கூடவே ஜமீன் வீடு என்ற வார்த்தையும் ஞாபகம் வந்தது. ஏன்னா அந்த காலகட்டங்களில் தான் இதுபோன்ற கொடுமைகள் நிறைய அரங்கேறி ஆடியது. இந்தக் காலம் பரவால்லயோ எனும் எண்ணத்தைக்கூட தோற்றுவித்தது.
ரொம்பவே அற்புதமான எழுத்து இது மா. எனக்குப் பிடித்த எழுத்து வகையில் உங்க யதார்த்தமான அருமையான எழுத்து மனதை ரொம்பவே கவர்ந்தது. இதுபோல படித்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது. மேலும் எழுதுங்க மா. என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் மா
????????????????????????
[1/5, 9:56 PM] G.Shyamala Gopu: ஏற்கனவே கொஞ்ச நஞ்சம் விட்டு வச்சிருந்த கனத்தையும் இந்த இரண்டாவது பாதி அதிகமாக்கிருச்சு அம்மா. காலங்காலமா பெண்களுக்கு நடக்குற கொடுமைகள் அதையும் பெண்களே நடத்துவது என்பது எப்பவும் மாறாதோ அப்டிங்குற எண்ணம் மேலும் ஊர்ஜிதமாகிறது. ஆணையும் பெண்ணையும் இருவேறு விதமா ஏன் கடவுள் படைச்சார்? பெண்களுக்கு மட்டும் ஏன் உடல் ரீதியான வித்தியாசங்கள்? எல்லாம் இதுபோன்று கொடுமைகள் அனுபவிக்கவா? இந்த கேள்விகளுக்கு விடை என்றும் தெரியப்போவதில்லை. சொன்னாலும் என்ன சொல்வார்கள், பெண்கள்தான் பொறுமையின் சிகரங்கள் தியாக சின்னங்கள் என்று மூடத்தனமாக சொல்லி அவர்களின் உணர்வுகளையும் மரத்துப் போகச் செய்வார்கள்.
இந்த எழுத்து நடையும் கதையின் கருவை நீங்க விளங்க வைத்திருக்கிற விதமும் மிகவும் அற்புதம்மா. அவன் ஒருவனின் மூலமாக கதையை நடத்திச் சென்று இறுதியில் மனதை பதைக்க வச்சிட்டீங்க. விருத்தாம்பா எரியும்போதும் அவன் குளிக்காதிருக்கும்போதும் அவனது உணர்வுகளை நீங்க வெளிப்படுத்திய விதம் மனதைக் கனக்க வைத்தது. கதையின் ஆரம்ப வர்ணனைகளையே முடிவாகவும் நீங்க வச்சிருந்தது செமயா இருந்துச்சு மா. பாவக் கதையா? புண்ணிய கதையா? என்ற வார்த்தைகள் மனதை சுற்றி வந்தது.
மிக மிக மிக அருமையான படைப்பு மா. என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு.
வாழ்க வளமுடன்
??????
??????????????
எழுத்து நடையும், கதையின் போக்கும் மிகவும் சிறப்பாக இருந்தது. முடிவு மிகவும் சோகமானது. உங்கள் எழுத்துப் பணி சிறக்கட்டும் ஷியாமளா மேடம், நன்றி! – ராம் குமார்.
கருவைக் கலைத்த கதை என்றாலும் மையக்கருவும் கதை சொல்லும் அந்தப் பேதையின் குரலும் மனதைத் தைக்கிறது.
மிகவும் நன்றி சார்
சிறப்பான நடை. கதை சொல்லியின் தற்போதைய வயது என்ன என்பது தெளிவாக இல்லை. நான்லீனியர் முறையில் கதை சிறப்பாகச் சொல்லி இருக்கின்றீர்கள். கோட்டை வீடு அவனையும் சாகடித்ததை ஏற்க முடியவில்லை.
அபாரம்! வட்டார மொழிவழக்கில் மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் சகோதரி. கதையின் கருவும், அதனைச் சுவைபட சொல்லும் பாணியும் மிக அருமை. கதையின் நாயகன், இளமையில் உண்டான கசப்பான அனுபவம், (தீயில் மாண்ட தாயின் அதிர்ச்சி) மூலம் புத்தி சுவாதீனம் இழந்தவர் என்பதை கதையினூடாக அழகாக நகர்த்துவது பாராட்டப் பட வேண்டியது. நாமே வீட்டின் உள்ளே செல்வது போன்றும் அங்கே வாழ்வது போன்ற அனுபவமும் உணர்வும் நம்மை அறியாமல் கதை பூராகவும் ஓங்கி நிற்கிறது. புத்தக அலமாரியில் புத்தகங்களை நிறுத்தி வைக்க இரு பக்கமும் உதவும் புத்தகத் தாங்கிகள் போல், ஆரம்பமும் முடிவும் இடையில் நடந்த எதனையுமே அறியாமல் நிற்பது போன்ற எழுத்துநடை அழகான முயற்சி. உங்கள் கலைப் பயணம் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்! ?❤
எழுத்து நடை, வட்டார வழக்கு மொழியில் மிக அருமைபா. இன்றும் இத்தகைய கொடூர சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. கதை இடையில் நிறுத்த இயலாத வகையில் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது. முடிவில் அவனாகவே இறக்கவில்லை என்றாலும் சொத்துக்காக உறவுகள் கொன்று விடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அருமை மிக அருமை