பிரவாகம்

அருகருகே இரண்டு நட்சத்திரங்களைக் கண்டபோது எம். எஸ். சுப்புலட்சுமியின் இரண்டு வைர மூக்குத்திகள் ஞாபகத்துக்கு வந்தன. சமீபத்தில் யாரோ பாடலின் லிங்க்கை வாட்ஸாப் குரூப்பில் அனுப்பியிருந்தார்கள். 

‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா….’

அவர் பாடப்பாட  இரண்டு புறங்களிலும் மூக்குத்திகள் ஒளியைக் கொட்டின. ஒளி கொட்டுமா என்ன…

என்னவோ அப்படித்தான் அவளுக்கு நினைக்க தோன்றிற்று. பாட்டிலிருந்து சிந்தனை மூக்குத்திகளுக்குத் தாவியது. மனம் இடமும் வலமும் மாறி மாறி மூக்குத்திகளின் மேல் அமர்ந்தது. சட்டென அதிலிருந்து மீண்டு வந்தபோது ஒரு நட்சத்திரம் காணாமல் போயிருந்தது.

“தூங்க வரலியா…?”

பிரசன்னா எட்டிப் பார்த்துக் கேட்டான். பால்கனியின் கைப்பிடி சுவரில் இரண்டு கைகளையும் அகல விரித்துப் பதித்திருந்தவள் முகம் திருப்பாமல் தலையசைத்தாள். 

“மணி பத்தாவப் போவுது. வரலாம்ல…”

அவனுடைய எதிர்பார்ப்புச் சலிப்பைத் தர “ப்ச்…”என்றாள். 

பார்த்து பார்த்து வாங்கி மாட்டிய ஓவியம் பிடிக்காமல் போனது. பத்திலிருந்து  ஐந்தைச் சலித்தெடுத்து  அதிலிருந்து மூன்று தேர்வு செய்து மூன்றையும் அலசி ஆராய்ந்து ஒன்றை வாங்கியபோது கடைக்காரர் அசந்து போனார். அந்த ஓவியம் முகத்திலறைந்துவிட்டது. 

“வந்து படு…” 

பிரசன்னா எரிச்சலோடு சற்று தள்ளிப் படுத்துக்கொண்டான். 

“உப்பு ஜாடி உடைஞ்சு போச்சு . நாளைக்கு வாங்கிட்டு வர்றீங்களா….?”

அவனுக்கு முதுகு காட்டிப் படுத்தபடி கேட்டாள்.  முதுகின் மச்சங்கள் அவன் நினைவுக்கு வந்தன. 

“ஏயப்பா… நாலஞ்சு மச்சம்…”

முதன்முறை பார்த்தபோது பரவசத்தில் வருடி, வருடி முத்தம் கொடுத்தான்.

“நீயே வந்து வாங்கிக்க. அப்புறம் இது சரியில்ல, அது சரியில்லன்னு குறை சொல்லுவ.”

அவள் கண்களை இறுக  மூடிக்கொண்டாள். எங்கே கைப்போட்டு விடுவானோ என்று பயமாயிருந்தது. திகில் படம் பார்ப்பது போன்ற பயம். இருட்டில் சட்டென கைப்  போட்டால் ஏற்கனவே இருக்கும் படபடப்பில் மனம் விதிர்விதிர்த்துவிடும். 

“தலையே வலிக்குது. “

மெதுவாக முனகினாள். பிறகு அந்த வேலிக்குள்  நிம்மதியாக உறங்கிப்போனாள். 

தொலைந்து போய்விட வேண்டும். 

“நீ தீபாதானே ?”என்று யாரும் கேட்டுவிடக்கூடாது.

“உன்னை எங்கயோ பாத்த மாதிரி இருக்கே…”என்கிற புருவச் சுருங்கல் கூட ஒவ்வாது.

“தொலைதல் என்பது பெருங்கூட்டத்தில் தொலைந்து போவதல்ல. அடையாளங்களைத் தொலைத்தல். அடுத்தவர் மனதில் பதிந்துள்ள அடையாளங்கள் மட்டுமா… எனக்கே எனக்கான என் அந்தரங்க அடையாளங்களையும் தொலைத்து விட்டால் நன்றாக இருக்கும்.”

என்னென்னவோ தோன்றியது அவளுக்கு.

கொஞ்ச நாட்களாக இப்படித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதோ எண்ணங்கள். எதுவுமே பிடிக்கவில்லை. இளஞ்சூரியனின் கதிர்கள் ஜன்னல் வழியே உள்நுழைந்து கேஸ் ஸ்டவ்வின் மீது படர்ந்து கிடக்கும். இரவு துடைத்த சமையல் மேடை பளிச்சென்று இருக்கும். கிரானைட் கல் பதித்த மேடை. முன்பெல்லாம் தீபா அந்தச் சுத்தத்தை ரசித்தபடி பத்து வினாடிகள் நின்றிருப்பாள். இப்போது இதிலென்ன இருக்கு என்பது போலுள்ளது. ஒருநாள் பால்கவரைக் கத்தரித்துச் சின்ன, சின்ன துளிகளை மேடையில் சிந்தினாள். அயர்ச்சியாக இருந்தது. சிந்திய துளிகளை விரலால் நீள் கோடுகளாக நீட்டி இணைத்துவிட்டாள். 

“அம்மா பால்…” 

நவீன் பின்னாலிருந்து குரல் கொடுத்தபோது  திடுக்கிட்டுப் போனாள். 

“எனக்கும்…”

ஹாலிலிருந்து ஸ்ருதி கத்தினாள்.

பால் காய்ச்சி, ஆகாரம் தயாரித்து, சமையலறை சுத்தம் செய்து, வீட்டைத் திருத்தி மீண்டும் அடுத்தநாள் ஒன்றிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொன்றாக முடித்து… வெறுப்பாயிருந்தது. பதினேழு வருடங்கள் செய்ததையே திரும்பத் திரும்ப செய்திருக்கிறோம் என்றெண்ணி அவள் தலையில் தட்டிக் கொண்டாள். துடைக்க, துடைக்கப் படிகின்ற அழுக்கை, தின்று செரித்துக் கழிக்கின்ற மலத்தை எண்ணி சத்தம்போட்டுச் சிரிக்க தோன்றியது. வீட்டில் சமையலறையும்கழிவறையும்  வைத்த மனிதனின் புத்திசாலித்தனத்தை மெச்சிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. 

“வயிறு பசிக்குதா?”

மனம் கேட்க,

“அதான் ரெண்டு அறைக்குமான பாலம்….’’

வாய்ப்பொத்தி சிரித்தாள். 

“எதுக்கு சிரிக்கிற….?” 

பிரசன்னா  விழிகளைக் கூர்மையாக்கிக் கேட்டான். 

“நான் எங்க சிரிச்சேன். ஏப்பம் வந்துச்சு.” 

வாயில் வந்ததைச் சொன்னாள்.  அவன் நம்பாமல் பார்த்துவிட்டுச் சென்றான்.

நான்கு பேர்களுக்கான வீட்டில் தீபா மட்டும் தனித்திருந்தாள். வெயில் ஏறத் தொடங்கியிருந்தது. ஜன்னல் வழியே வந்த வெயில் ஒரு சாய்வுத்தம்பம் போல சோபாவில் விழுந்து கிடந்தது. அதில் தூசுகளும் மாசுகளும் மிதந்தன. சோபாவை ஓங்கித் தட்டினாள். தூசுகள் தெறித்துப் பறந்தன. 

“கொத்தமல்லித்தழை இருக்கா….?” 

பக்கத்துவீட்டு கமலி கிரில் கேட்டில் தொங்கியபடி கேட்டாள்.

“உள்ள வாங்க…”

தீபா கையசைத்துக் கூப்பிட்டாள். 

“போட்டது போட்டபடி கெடக்கு. இன்னும் குளிக்க கூட இல்ல. கொத்தமல்லி இருந்தா நாலு கொத்துக் குடு.”

நீட்டியபோது படாமல் வாங்கிக் கொண்டாள். புடவைக்கொசுவத்தை ஏனோ தானோவென்று செருகியிருந்தாள்.

தீபா, பிரசன்னாவை நினைத்துக் கொண்டாள். எதிர்பார்த்துக் கிடந்தவனை ஏமாற்றி விட்ட மகிழ்ச்சி ஒரு சிறு ஒளி போல் உள்ளே சுடர் விட்டது. ஒரு நொடிதான். இன்றைய இரவை எண்ணிய மாத்திரத்தில் சுடர் அவிந்துபோனது. அவன் எப்படியாவது இணங்க வைத்து விடுவான். சும்மாதான் எதுவும் பண்ண மாட்டேன் என்பான். தீபா கண்களை இறுக மூடிக் கொள்வாள். முன்பு எங்கெல்லாம் மர்மங்கள் ஒளிந்து கிடந்தனவோ இப்போது அங்கெல்லாம் எதுவும் இல்லை. அல்லது பழகின ஸ்பரிசம் அதை மரத்துப் போக செய்திருந்தது. சும்மாவே போர்த்திக் கொண்டு தூங்குவது கூட சற்று ஆறுதலாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். 

தீபா கொடியில் துணிகளை உலர்த்தினாள். மறக்காமல் ஒவ்வொன்றுக்கும் கிளிப் சொருகினாள். இல்லாவிட்டால் பறந்து கீழ்த்தளத்தில் விழுந்துவிடும். போய் பொறுக்க வேண்டும். கார் பார்க்கிங் வெறிச்சோடியிருக்கும். சிறுபிள்ளைகளின் சைக்கிள்கள் ஒன்றன் மேல் ஒன்றாகச் சாய்ந்து  கிடக்கும். வாட்ச்மேன் கொட்டாவி விட்டுதூங்கி வழிந்தபடி அமர்ந்திருப்பார். ஒருமுறை கீழே விழுந்துவிட்ட துணியை எடுக்கப் போனபோது வாட்ச்மேன் இல்லை. அரவமற்ற தனிமையில் ஒரு நிமிடம் நின்றிருப்பது கூட மனசுக்குச் சொரேரென்றிருந்தது. எப்போதும் கேட் அருகில் படுத்திருக்கும் நாய் கூட இல்லை. அவசரமாய் லிஃப்டை இயக்கி மேலே வந்துவிட்டாள். 

குளித்து, தலைவாரி நாலு இட்லிகளைச் சட்னியில் நனைத்து விழுங்கி காலை நேர வேலைகளை முடித்தாகிவிட்டது. இனி மதியஉணவு வரை வேலைகள் இல்லை. வீடு துப்புரவாயிருந்தது. தீபா சோபாவில் சரிந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

முப்பதின் பிற்பாதியில்  மெல்ல, மெல்ல ஏற்பட்ட சலிப்பு சமீபகாலமாக எதிலும் ஒட்டாத விலகல்தன்மையைப் புகுத்தி விட்டிருந்தது. முன்பு பிடித்தது இப்போது பிடிக்கவில்லை. பொருள் என்றில்லை. செயலும் கூட. நிறைவு வந்து விலகி நின்றால் பரவாயில்லை. கசந்து விலகுதல் பெரும் அவஸ்தையாய் இருந்தது. 

“பாட்டெல்லாம் பாடுவ…. இப்ப வாயைத் தொறக்க மாட்டேங்கற…” 

பிரசன்னா சீண்டினான். வேலை செய்யப் பாட்டு வேண்டும் அவளுக்கு. சமையலறையின்  மூலைத்திட்டில் ஒரு டிரான்சிஸ்டர் வைத்திருப்பாள். அது சதா பாடிக்கொண்டே இருக்கும். தீபா அதற்கு இணையாகப் பாடுவாள். 

“உனக்குத் தெரியாத பாட்டே இல்லையாம்மா…?”

ஸ்ருதி ஆச்சர்யமாக கேட்பாள். ஒன்றிரண்டு வார்த்தைகள் தெரியாதுதான். அவளே ராகம் இழுத்துப் பாடிவிடுவாள். சமீப காலமாக ரேடியோ ஊமையாய் கிடந்தது. 

அடுத்தாற்போலிருந்த சைட்டில் ஏராளமான செடிகள். ஒரேயொரு மரம் முதல்மாடி வரை உயர்ந்திருந்தது. அதில் எப்போதும் குருவிகளின் சலசலப்பு கேட்டுக் கொண்டேயிருக்கும். ஒரு குருவி புடிச்சேன், புடிச்சேன் என்று கத்தும். இப்போதும் அது புடிச்சேன் புடிச்சேன், என்று மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருந்தது. அது தவிர புறாக்கள் காய்ச்சல் கண்ட குழந்தை கணக்காய் அனத்தியபடி இருக்கும். எல்லாமே சலிப்புதான். புதிதாய் மனம் எதை எதிர்பார்க்கிறது. அவளுக்குப் புரியவில்லை. 

“உறவுகளா… சூழ்நிலையா… அல்லது இரண்டுமா? முதலில் புதிது என்பது என்ன… உலகத்தில் எல்லாமே பழசுதானே. புதிதாய் உள்ள எதுவும் அடுத்த நொடி பழசாகிவிடுகிறதே.”

குழப்பமாய் இருந்தது.

தீபாவுக்கு ஆரம்பத்திலிருந்தே டிவி பார்க்கும் பழக்கமில்லை.

“அந்த சீரியல் நல்லாருக்கு. பாரேன்,”அம்மா ஏதேதோ பெயர் சொன்னாள். அவள் பிடிவாதமாய் மறுத்துவிட்டாள்.

புத்தகம் படிக்கப் பிடிக்கும். வாரப் பத்திரிகைகள் வந்து கிடக்கும். எடுத்து சிறிதுநேரம் புரட்டுவாள். சில சமயம் மூழ்கிப் போவதும் உண்டு. இப்போது அதுவும் பிடிக்கவில்லை. 

அன்றிரவு பிரசன்னா காரியம் சாதித்துக் கொண்டான்.

“சரி வந்து தொலை”என்றது மனசு. கண்கள் மூடிக்கொண்டாலும் இமைகள் படபடத்தபடியிருந்தன.

“வர, வர உனக்கு ஈடுபாடேயில்ல.”என்றான் பிரசன்னா. 

“அது தெரிஞ்சதுதானே…”  முனகினாள். 

ஸ்ருதியும் நவீனும் மூன்று வருட இடைவெளியில் பிறந்தவர்கள். அப்போதெல்லாம் தீபாவுக்கு முதுகில் இரண்டு சிறகுகள் முளைத்திருந்தன. காலை ஐந்து மணிக்கு எழுந்து கொள்பவளுக்குச் சிறகுகள் அசைந்தபடியிருக்கும். பிள்ளை துணிகளை ஊறவைத்துக் கசக்கி டெட்டால் ஊற்றிய கொதிநீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து காய வைத்துப் படியப் படிய  மடித்து  அலமாரியில் அடுக்குவாள். நேரத்திற்கு உணவும் நீரும் ஜூசும் கொடுப்பாள். புரிகிறதாய் நினைத்துக் கொண்டு கதைகள் சொல்வாள்.

அம்மா ஒரு கொத்து அச்சுப்பொட்டு வாங்கித் தந்திருந்தாள். ஸ்டார், திலகம், மாங்காய், பட்டர்ஃபிளை, மயில் என்று விதவிதமான அச்சுகள். குளிக்கப்படுத்திய பிறகு வெள்ளை மஸ்லின் துணியில் போர்த்தி நெஞ்சோடு அணைத்துத் தூக்கி வந்து கொஞ்சி, குலாவி பொட்டு வைக்கும் படலம் ஆரம்பிக்கும். குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு விளையாட்டு காட்டியபடியே  அச்சை மையில் அழுத்தி நெற்றியில் வைக்க வேண்டும். அது பெரிய ப்ராசஸ். 

“செல்லத்துக்கு இன்னிக்கு மயில் பொட்டு வைப்போமா, மாங்கா வைப்போமா ?”

தலையை ஆட்டி ராகமாய் கேட்டால் குழந்தை கால்களை மடியில் உந்தி சிரிக்கும். நவீனுக்கும் ஒரு வயது வரை அலங்காரம் நடந்தது. குழந்தைகள் வளர, வளர அவளும் அம்மாவாக வளர்ந்து கொண்டிருந்தாள். குழந்தை வளர்ப்பதென்பது சவாலாக இருந்தது. நேரத்தை முழு மொத்தமாக அவர்களுக்கே கொடுத்ததில் வருடங்கள் போனது தெரியவில்லை.

பிள்ளைகள் பின்னால் ஓட்டமாய் ஓடிக்கொண்டிருந்தவள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அப்படியே நின்று போனாள். பிள்ளைகள் தனித்தியங்கத் தொடங்கிய அந்தப் புள்ளியில் அவள் தேங்கி விட்டதை உணர்ந்தபோது மெல்லிய இழைபோல சலிப்பு படரத் துவங்கியது. இழை பல பிரிகளாகி ஒன்றோடொன்று பிணைந்து வலை போல் அவளைச்சூழ்ந்துகொண்டன. 

“இங்க வந்து நாலுநாள் தங்கிட்டுப் போகலாம்ல.”

அம்மா குறைபட்டுக் கொண்டாள்.

கையில் கனக்கும் பையா… இறக்கி வைத்துவிட்டு வர. அரூபத்திற்கு ஆயிரம் எண்ணங்கள். கைக்குழந்தை போல அத்தனையையும்  விட்டு விட்டு வர முடியாது. எல்லாம் கோவென்று கதறி அழும். கூடவே ஓடிவரும். இல்லாத ஒன்றில்  அடித்துப் பிடித்து ஏறிக்கொள்ளும். அங்கு வந்து துன்புறுத்தும். ஒன்றோடொன்று  கலந்து கூடி கும்மாளம் அடிப்பதில் எதனாலென்று பகுத்துணர முடியாத வேதனை வந்து அழுத்தும். காலிங்பெல் அடித்தது. எழுந்து போய் திறந்தாள்.

“லெட்டர் வந்திருக்கும்மா….”

வாட்ச்மேன் நான்கைந்து தபால்களைக் கொடுத்துவிட்டுப் போனார். இன்சூரன்ஸ் தபால்கள். எப்போதும் வருவதுதான். பிள்ளைகள் படிப்புக்கும் எதிர்காலத்துக்கும் பிரசன்னா சில ஏற்பாடுகளைச் செய்திருந்தான். அதில் ஒரு குறையும் இல்லை. எதில்தான் குறைச்சல்…. உண்ண, உடுத்திக் கொள்ள பஞ்சமில்லை. குடும்பமாக வெளியில் செல்ல காரும், தனித்து செல்ல இரண்டு வண்டிகளும் ஏகபோகம். சொந்த ஃப்ளாட் ஒரு பெருமை.

தீபா தபால்களை டீப்பாயில் போட்டாள். நடுவிலிருந்த அந்த உத்திரகிரியைப் பத்திரிக்கை கருப்பு முனையுடன் எட்டிப் பார்த்தது. அதை மட்டும் கையிலெடுத்தாள்.  யாரென்றே தெரியாத ராமசாமி ஃபோட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் தூரத்து உறவில் கூட அப்படி ஒருவர் இறந்ததாக ஞாபகம் இல்லை. திருப்பிப் பார்த்தாள். தவறுதலாக இவள் வீட்டு நம்பரை போட்டிருந்தார்கள். பெயர் தனபால் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

பக்கத்து வீட்டுக்காரருக்கு கொடுக்க வேண்டியதை வீட்டு நம்பரை வைத்து வாட்ச்மேன் இங்கே தந்து விட்டுப் போயிருந்தார். தீபா பத்திரிகையை ஒருமுறை நிதானமாகப் படித்தாள். ஐம்பதுகளில் பிறந்திருக்கிறார். எழுபது வயதில் இறந்துவிட்டார்.

“அகால மரணமோ,  அமைதியான மரணமோ… தன் இருப்பைக் காலி செய்து கொண்டுபோய்விட்டார். உறவுகள் அழுதார்களோ, பேர் பண்ணினார்களோ… பாவம் ராமசாமி…”

தனபாலின் ஜாடை தெரிகிறதா என்று உற்றுப் பார்த்தாள். பின் தன் பைத்தியக்காரத்தனத்தை எண்ணி தலையிலடித்துக் கொண்டாள். கருப்பு, வெள்ளைப் படத்தில் முகம் என்று ஒன்று தெரிந்தது. புள்ளிகளின் கோர்ப்பாக அது இருந்தது. இரண்டு நிமிடங்கள் வரை அதையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு  உள்ளுடைந்து பெருகியதில்  கண்கள் தளும்பி வழிந்தன. கதவு சாத்தப்பட்டிருப்பதை  உறுதி செய்துகொண்டவள் நன்றாக செருமி, செருமி அழ ஆரம்பித்தாள்.  

2 comments for “பிரவாகம்

  1. Jayasri
    May 7, 2023 at 2:43 pm

    Good writing. Felt like watching a life through live streaming. Realistic

  2. May 7, 2023 at 5:10 pm

    வாழ்க்கையின் வெறுமை, அபத்தம் அனைத்தையும் பூடகமாக சொல்லியிருக்கிறார் கிருத்திகா

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...