புரட்சிக்காதலன்

“எனக்கு என்ன ஆயிற்று?.. ஒன்றும் இல்லையே.. நன்றாகத்தானே இருக்கிறேன். பிறகு ஏன் சிந்தனை என்பது இவ்வளவு பாரமாக ஆகிப்போனது?” சிந்தித்துக்கொண்டே விழா அரங்கின் வாகன நிறுத்துமிடத்திற்கு வந்துவிட்டேன்.

வந்தவுடனேயே ரிஷானாவின் ஆடி காரைப் பார்த்துவிட்டிருந்தேன். மூன்று லிட்டர் V6 வெண்ணிற ஆடி Q7 மாடல். அந்தக் காரின் தனித்த அம்சமே அதை பார்த்தவுடன் புதியதா பழையதா என்று சொல்லிவிட முடியாது என்பதுதான். அனைத்துப் பணக்கார கார்களுக்கும் இருக்கும் அதே பளபளப்பு. அனைவரும் அதைத் திரும்பிப் பார்ப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. யாருக்குத்தான் அதை உரிமை கொண்டாட இஷ்டம் இருக்காது. கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் காருக்கு குத்தமில்லை. அதன் பணக்காரத் தன்மையே அதன் கவர்ச்சி. ரிஷானாவின் ஆடி கார் ரிஷானாவை நினைவு படுத்தியது எனக்கு. சொல்லப்போனால் எல்லா வெண்ணிற ஆடி கார்களும் அவளையே நினைவு படுத்தியது.

அதன் அருகிலேயே நின்றிருந்தது செல்வியின் டொயோட்டா கார். திரும்பி எடுத்துச் செல்ல தோதாக ரிவர்ஸ் எடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. கார் பிரியர்கள் பார்த்ததுமே சொல்லிவிடுவார்கள் அந்த வண்டியின் உரிமையாளரைப் பற்றி. அந்த வண்டியை டொயோட்டா நிறுவனம் கைவிட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டிருந்தன. பச்சை நிறம். அந்தப் பார்க்கிங்கிலேயே பச்சை நிறத்தில் உள்ள ஒரே வண்டி செல்வியுடையதுதான். விஸ்தாரமான பெரிய வண்டி. ஏழு பேர் வரை தாராளமாக அமரலாம். இறுக்கிக் குறுக்கி அமர்ந்தால் பத்து பேர். செல்வியைப் பார்த்தால் இந்தப் பச்சை நிற வண்டிதான் நியாபகம் வரும். அது இரண்டு லட்சம் கிலோமீட்டருக்கு மேல் ஓடிய வண்டி என்பதை நான்  ஏற்கனவே அறிந்திருந்தேன். பழம் பெருமை தாங்கி நிற்கும் வண்டி. FC ஆகியிருக்க வேண்டும். நான்கு டயர்களும் புதியது. மிச்செலின் பிராண்டு.

ரிஷானாவின் ஆடி கார் கழுவியெடுத்த பளபளப்பு என்றாலும் காலத் தீற்றல்கள் அதன் மேல் குழந்தைக் கிறுக்கல்கள் என ஆங்காங்கே தென்பட்டன. “குழந்தைகள்… அட… ஆமாம் குழந்தை…ரிஷானாவின் பாப்பா பெயர் என்ன? எதோ… பிடிபடவில்லையே… அந்தப் பாப்பா ரிஷானா போலவே இருக்குமாம். குட்டி ரிஷானா. அந்தக் குட்டி ரிஷானாவுக்கு எங்கோ ஓர் இடத்தில் ஒரு குட்டி செந்திலும் பிறந்திருப்பான். அது சரி இந்தப் பெரிய செந்திலுக்கு இப்போது என்ன கதி.”

“ரிஷானா! செந்தில்! ஆடி!” சொல்லிப் பார்த்தேன். “சரியாக வரவில்லையே. அதெல்லாம் வரும். சொல்லிச் சொல்லிப் பார்த்தால் அதெல்லாம் வரும். ”இதுதான் என் பிரச்சனை. இந்த மாதிரி சிந்தனைதான் என் பிரச்சனை.

சிந்திப்பவனெல்லாம் கம்யூனிஸ்ட் என்ற எண்ணம் முன்பெல்லாம் இருந்தது. அப்போதெல்லாம் அதிகம் சிந்திப்பேன். செயல் வீரர்களுக்குச் சிந்தனையை அள்ளி அள்ளித் தருவேன். சிந்திக்காமல் போகும் நாட்கள் வீணாகிவிட்டவை என்றிருந்தேன். நாற்பது வயது ஆனதிலிருந்து அப்படியெல்லாம் கருதுவதில்லை. சிந்தனையை ஆரம்பிப்பது எவ்வளவுக்கு எவ்வளவு சுலபமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதை நிறுத்துவது கடினமாகிப் போய்விட்டது. இதோ இப்போது கூட அது தான் நடந்து கொண்டிருக்கிறது எனக்குள். நிறுத்தவே முடியாத சிந்தனைத் தொடர்ச்சி. சிந்திக்கிறேன் அதனால் வாழ்கிறேன் என்று எந்த முட்டாள் சொன்னது. கொஞ்சமேனும் இந்தச் சிந்தனை நின்றால் சிறிது வாழ்ந்துவிட்டுப் போகிறேனே. நண்பர்கள் மதம், மருந்து, மாத்திரை என்று பரிந்துரைத்தார்கள். கோபி மட்டும் தான் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள சொன்னான். அதாவது சிந்தனைச் சோகத்தைக் கீழிறக்கி வைக்க நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று பூடகமாகச் சொன்னான்.

எப்போதாவது மிக அரிதாக என் சிந்தனை இயந்திரம் நின்றுபோகும். அதிகாலைப் பொழுதிலோ, இசை கேட்கும்போதோ, அந்த ஜன்னலோர தென்னை மரத்து அணில் குட்டிகள் ஈன்றபோதோ உடல் இருக்கமின்றி ஆகும், அப்போது மனம் அசையாது நின்றிருக்கும். அப்படிப்பட்ட ஒரு பொழுதில் தான் நான் செல்வியை அவள் டொயோட்டாவுடன் பார்த்தேன். மறுநாளே ஆடியுடன் ரிஷானாவையும் பார்த்தேன். அவர்களை நான் இதற்கு முன் அலுவலகத்தில் பார்த்திருக்கிறேன் என்றாலும் நான் முதன் முதலில் பார்த்தேன். பார்வை என்பது அப்படிப்பட்டதாக  இருக்க வேண்டும். சிந்தனையின் தடங்கல் இல்லாமல். அதுவே முழுப் பார்வை. இது என் வாழ்நாளில் நானே அனுபவித்துக் கண்டுணர்ந்த  உண்மை. பின் நாட்களில்  ஏதேனும் தத்துவமாக மாற்றிக்கொள்ளலாம். அல்லது இது பொருந்திப் போகும் தத்துவத்துடன் இணைந்து கொண்டு அதை மேலும் முன்னகர்த்தி செல்லலாம்.

நான் எண்ணிக்கொண்டே என் இரு சக்கர வாகனத்தை வேறு எங்கோ மறைவாக விட்டுவிட்டு மெல்லமாக வந்து அந்த இரண்டு கார்களுக்கும் நடுவில் வந்து நின்றேன்.

இதுவே  சென்ற வருடமாக இருந்திருந்தால் நான் இந்தக் காரில் எது அடிக்கட்டுமானம், எது மேற்கட்டுமானம் என்று ஆராய்ந்து அதில் உழைப்பின் மதிப்பைப் பிரித்துப் பார்த்து ஒரு பொருளியல் கணக்குப் போட்டிருப்பேன். இந்தக் காரை வரலாற்றில் நிறுத்தி அதை ஆராய்ந்திருப்பேன். ஒரு கார் என்பது முதலாளித்துவ குறியீடாகத்தான் இருக்க முடியும். அரசக்குடி காலத்தில் இதுவே தேராகவும், நிலப்பிரபுத்துவ காலத்தில் கட்டை வண்டியாகவும், இனக்குழு காலத்தில் வெறும் சக்கர வண்டியாகவும் அதற்கும் முற்பட்ட அதாவது தனியுடைமை தோன்றியிராத காலத்தில் வெறும் கருத்தாகவும் இருந்திருக்கும். ஒருவேளை தனியுடைமை என்ற கருத்தாக்கமே சக்கரம் கண்டுபிடித்ததிலிருந்து தான் ஆரம்பமாகியிருக்கலாம்…. இருக்கலாம்… அப்படியானால் வரலாற்று பரிணாமத்தில் மனிதன் என்பவன் எப்படி இயற்கையிலிருந்தும் தன்னிலிருந்தும் அந்நியப்பட்டுப் போனான் என்பது குறியீடாக ஒரு காரில் தெரிகிறது. மீண்டும் அவன் ஆதி பொதுவுடைமைக்குப் போக வேண்டுமென்றால் இப்படிப்பட்ட கார்கள் இல்லாமல் போக வேண்டும்.

வரலாறு என்பது கடவுள் போல. அதற்கென்று ஒரு இச்சை இருக்கிறது, வரலாறு எப்போதும் முன் நகரத்தான் வேண்டும். ஆதி பொதுவுடைமைக்குத் திரும்புவது என்பது பழையபடி எங்கும் கால்நடையாகச் செல்வது என்று அர்த்தம் அல்ல. கார் என்பது தனியுடைமையின் குறியீடு என்றால் பேருந்து என்பதுதான் பொதுவுடைமையின் குறியீடு. கார்கள் இல்லாமலாகி பேருந்துகள் வரவேண்டும். ஆனால் அரசு என்ற அதிகாரம் இருக்கும் வரை கார்கள் என்ற தனியுடைமை இருக்கத்தான் செய்யும். அரசு உதிர்தல் வேண்டும். வரலாற்று இயங்கியலில் அரசு உதிர்தல் என்பது தன்னியல்பாக நடக்க வேண்டும். அதாவது தனியுடைமை முதலாளித்துவ சமூகம் முதிர்ந்து அதன் இறுதியில் பொதுவுடமைச் சமூகம் மலரும். ஆனால் அதற்கேயுண்டான கால தாமதம் அதில் நிகழும். அதுவரை என்னால் பொறுக்க முடியுமா என்ன? வேறு வழியே இல்லையா? இருக்கிறது. வரலாற்றுப் போக்கில் எப்போதேனும் சில திருப்புமுனைகள் நிகழும். அதில் வரலாறு விரைந்து நிகழும். அரசு என்ற அதிகாரம் உதிரும் வரை காத்திருக்காமல், புரட்சியின் மூலம் அரசைக் கைப்பற்றி அனைத்துக் கார்களையும் நம் கரங்களில் எடுத்துக்கொண்டு, பொதுவுடைமை என்ற பேருந்தை மட்டும் கட்டாயப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யும்போது பேருந்து மட்டுமே சமூகத்திற்குக் கிடைக்கும் வசதியாக இருக்கும். பேருந்தின் வசதி மக்களுக்குப் பழக்கப்பட்டுப் போகும். பிரச்சாரத்தின் மூலம் மக்களுக்கு நாம் எடுத்துக் கூறலாம். அதுவரை அனைத்துக் கார்களும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வைக்க வேண்டும். அரசு உதிர்தலுக்கு முந்தைய தற்காலிக ராணுவ அரசை நிர்ணையராக இருக்கும் எனக்கு இந்த ஆடி கார் கிடைக்கும். அதில் நான் ரிஷானா அவளின் மகள். “ச்சீ… தவறு… எங்கள் மகள்…” அவளுக்கு என்ன பேர் வேண்டுமானாலும்  இருக்கலாம். நான் அவளைப் புரட்சி என்றுதான் அழைப்பேன்.

டொயோட்டா கூட நல்ல வண்டிதான். என்ன ஒரு பராமரிப்பு! பங்களாவில் நிற்கிற ஆடி ஒரு ரகம் என்றாலும் தோப்பில் நிற்கிற டொயோட்டாவுக்கு என்ன குறைச்சல். எத்தனை கம்பீரம். எத்தனை மரியாதை. எத்தனை பயன்பாடு. ஆடியைப் பார் எத்தனை ஒடுக்கு. சின்னச் சின்னது தான் என்றாலும் ஒடுக்குதானே.  இல்லை இல்லை என்ன இருந்தாலும் ஆடி போல் வருமா? அழகுபோல் வருமா? இன்றுள்ள அனைத்துச் சமூகப் பிரச்சனைகளின் வர்க வேறுபாடுகளின் ஊற்றுக்கண் கிராமங்கள்தான். டொயோட்டா தான்.

“இதுதான் என் பிரச்சனை. சிந்தனைதான் பிரச்சனை. என் மனம் சிந்தித்துவிட்டு அணி சேர்கிறதா? அல்லது அணி சேர்ந்து விட்டு சிந்திக்கிறதா என்று இப்போதெல்லாம் அறுதியிட்டுச் சொல்ல முடிவதில்லை.”

“ரிஷானா! செந்தில்! ரிஷானா!…புரட்சி! ஆடி!…” இதோ வந்துவிட்டதே.

நான் அவ்விடம் விட்டு நகர்ந்து விழா கூடாரம் நோக்கிச் சென்றேன். அது என்னுடைய அலுவலக விழா. அங்கே தான் ஆடியும் டொயோட்டாவும் அவரவர் குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

வாகன நிறுத்துமிடத்தை அடுத்து உள்ள பூந்தோட்டத்தில் வண்ண வண்ண வாத்துகளை அலைய விட்டிருக்கிறார்களே? அனேகமாக வாடகை வாத்தாகத் தான் இருக்கும். “இங்கு வரும் யாராவது இந்த வாத்தைக் கவனித்திருப்பார்களா? இதோ என் கண்ணில் தான் படுகிறது. இங்கே என்னை யாராவது கவனிப்பார்களா? பூர்ஷுவாக்கள் ஏன் கவனிக்கப் போகிறார்கள்? ரிஷானா கவனிப்பாள். நான் அந்த ஆடி காரில் அமர்ந்தால் எப்படி இருக்கும்? வேறு எப்படி இருக்கும், இந்த வாத்து அமர்ந்தது போல் இருக்கும். ச்சே.. ராஜா போல் இருக்கும். ”பதட்டப்படும் போது எல்லாம் என் மனம் அங்கும் இங்கும் இப்படிச் சம்பந்தம் இன்றி அலையும்.

மாளிகை போல் முகப்பு கொண்ட அவ்விடம் என் தகுதிக்கு அதிகம் என்று பார்த்தவுடனே தெரிந்தது. என்றாலும் சில மாதங்களாய் உருவாகி வந்திருந்த நிமிர்வு என்னை உள்ளே இட்டுச் சென்றது. பொருளாதார நிமிர்வு தான் என்றாலும் எல்லோரும் நினைப்பது போல அது அவ்வளவு எளிதில் நம் அகங்காரத்துடன் ஒட்டி நம் ஆளுமையாக உடனே மாறிவிடுவதில்லை என்பதை நான்  உணர்ந்து தான் இருந்தேன். பூர்ஷுவாக்கள் பாவம். இத்தனை எடை மிக்க அகங்காரத்தை எப்படிச் சுமக்கிறார்களோ? தவறு! பூர்ஷுவாக்களுக்கு அகங்காரம் என்பது எடையில்லா ஆபரணம். அவர்கள் மேல் படிந்திருப்பதை ஒரு புரட்சியாளன் தான் எடுத்துச் சொல்ல வேண்டும். ஒருவேளை புரட்சியாளனுக்கு அந்த ஆபரணம் பிடித்துவிட்டால்? இதோ எனக்கு அந்த ஆடி கார் பிடித்திருக்கிறதே. ஆடிக்காருடன் வரும் ரிஷானாவைப் பார்க்கும்போதெல்லாம் இந்த உலகை வெல்லும் புரட்சியாளன் மறைந்து அந்தக் காதலன் வந்துவிடுகிறானே. கால்கள் நடுங்கும் காதலன். என்ன மாயம்…

அவ்வரங்கம் முழுதும் அலுவலக ஆட்கள் தத்தம் குடும்பங்களுடன் அங்கு குழுமியிருந்தனர். பெரியவர்களுக்கு உண்டான விளையாட்டு, குழந்தைகளுக்கு உண்டான விளையாட்டு, விதவிதமான திரவிய மேடைகள், பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியான கூடுகை இடங்கள் என்று அவ்விடம் கலவையான விழாக்கோலம் கொண்டிருந்தது.

அந்தக் கூடாரத்தின் விளிம்பில் இருந்து பார்த்தால் அதன் மையம் தெரிந்தது. மையம் என்பது உள்வட்ட மக்களினால் ஆகியிருந்தது. அந்த உள்வட்ட மக்களுக்கு மத்தியில் ஒரு மேடை. அந்த மேடை மத்தியில் ஒரு பீடம். பீடத்தின் மையத்தில் ஒரு மேஜை. மேஜை மையத்தில் ஒரு கேக். அதன் உச்சாணிக்கொம்பில் ஒரு ஆண் பொம்மை, ஒரு பெண் பொம்மை, ஒரு பெண் குழந்தை பொம்மை. அந்த ஆண் என்னை நோக்கி நின்றிருந்தான். ஒருவேளை அவனும் என்னைப் போலத்தான். தனியன்… இல்லை அவன் குடும்பஸ்தன். நான் ஆக விரும்பும் பிம்பம். அந்தக் கேக்கை சுற்றி நின்ற குடும்பங்கள் குமட்டலை உருவாக்கியது. அவர்களுக்கென்று எங்கிருந்தோ இறக்குமதியான மோஸ்த்தர் நாகரிகம் அரிதாரம் போல் பளிச்சென்று தெரிந்தது. அவர்கள் மற்றவர்களோடு இல்லை. மற்றவர்கள் எல்லோரும் என்னோடு இல்லை. எனக்கு மையம் எல்லாம் வேண்டாம். உள்ளே சென்றால் போதும். ஆனால் அது எப்படி நடக்கும். அதுவும் தனியன். “தனியன் எப்படி குடும்பங்களை ஊடுருவி உள்ளே செல்ல முடியும்?. முடியாது.. ஒருவேளை முடியுமோ? ஆமாம் முடியும்… உள்ளிருந்து ஒரு கரம் என்னைப் பற்றி இழுத்தால். அது வளையலிட்ட மருதாணியிட்ட கையாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. கடிகாரம் அணிந்த நகவண்ணம் பூசிய ஆடி கார் ஓட்டுகிற கரமாகக் கூட இருக்கலாம்.”

உள்ளே சென்றவுடன் அதன் அந்நிய தன்மையை உணர்ந்தேன். தன்னியல்பாக அவ்வரங்கின் ஓரத்தில் நான் சென்று  நின்று வேடிக்கைப் பார்த்தேன். அங்கு நிற்பது ஏனோ மேடை மீது நிற்கும் உணர்வு வர வேறு ஒரு ஓரத்திற்குச் சென்றேன்.

எங்கேனும் சாய்ந்து நின்றால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. பொருந்தாத அந்த இடத்திலும் தன்னிச்சையாக மனம் யாரையோ தேடியது. முதலில் எனக்குத் தட்டுப்பட்டது செல்வி தான். புடவையில் தான் இருந்தாள் என்றாலும் வழக்கத்திற்கு மாறாக அழகாக இருந்தாள். 32 வயது இருக்குமா?  இருக்கும்.. ஒரு குழந்தை இருக்கிறது என்பது ஊர்ஜிதமாக தெரியும்.  அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள்.  அல்லது அவளே எங்கேயும் சொல்லியிருப்பாள். எப்படித் தெரியும் என்று அருதியாகச் சொல்ல முடியாது என்றாலும் எனக்குத் தெரிந்திருந்தது. “ஹ்ம்ம் எட்டு வருட வித்தியாசம் தான்..”

தன்னுணர்வு மீண்டும் தட்ட, அனைவரின் கவனமும் என்மீதே இருப்பது போலவும்; ஒருவரும் என்னைக் கண்டு கொள்ளாதது போலவும் மாறி மாறி தோன்றியது.  தன்னிச்சையாகக் கூட்டத்தைக் கண்கள் துலாவின. உடனே யாரோ என்னை ஒளிந்திருந்து பார்ப்பது போல ஒரு உணர்வு உடல் முழுவதும் பாவித்தது. அந்தப் பெரும் களியாட்டம் கூட்டத்தில் ஒரே இடத்தில் நிற்பது ஏனோ தவறாகப்பட்டது. அதனால் அங்கும் இங்கும் நடந்தேன். அதுவும் தவறாகப் பட்டது.  உள்ளங்கைகளில் விறுவிறுப்பு ஏறியது. ஆகையால் அந்த வெறும் கைகளைப் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்துக் கொண்டேன். “உள்ளங்கைகள் ஆழ்மனம் போல், ஆகையால் அதை மறைத்து வைத்துக் கொள்கிறான்..” என்று யாரோ என்னைக் கிண்டல் செய்தது ஞாபகம் தட்டியது. உடனே அவற்றை வெளியே விடுதலை செய்தேன்.  உள்ளங்கைகள் இவ்வளவு அந்நியமாக மாறுமோ? விருந்தினர்களுக்கு கொடுக்கும் ஒரு பானத்தைப் பிடிமானத்திற்காகக் கையில் எடுத்துக் கொண்டேன்.  நான் இயல்புக்குத் திரும்புவதாகப் பாவித்துக் கொண்டேன்.

கூட்டத்தின் விளிம்பிலேயே நடந்து கொண்டிருந்தேன். கூட்டத்தின் மையம் என்பது பல நூறு கிலோமீட்டர் தொலைவில் இருப்பது போலவும்; என்னால் சென்று சேர முடியாத தொலைவு போலவும் இருந்தது. மற்றும் கூட்டத்திற்குள் எனக்கு யாரைத் தெரியும்? தற்போதைக்கு விளிம்பு ஒன்றே தோதான இடம் அல்லது கிடைத்த இடம். வெகு நேரம் விளிம்பிலேயே சுற்றித் திரிவதால் மையம் என்பது மேலும் மேலும் அன்னியமாக ஆகிக்கொண்டிருந்தது. மையத்தின் கவர்ச்சி இப்போது வெறுப்பாக மாறிக்கொண்டிருந்தது. விளிம்பு என்பதே அவமானகரமானதாக மாறிப்போனது. அது அவமானமாக இருப்பதினாலேயே அதன் பெருமைகளைத் தொகுத்தும் புனைந்தும் மனதில் பேசிப் பேசிப் பார்த்தேன். மையத்தின் கவர்ச்சியும் அதனால் விளைந்த வெறுப்பும் மையத்தைத் தலைகீழாக மாற்றி போட புதிய அவா பிறந்து வந்தது. அந்தப் புதிய ஆசையின் நியாயங்களை வழக்கம் போல மனம் தன் போக்கில் தத்துவமாகப் புரட்சியாக உற்பத்தி செய்து கொண்டிருந்தது. புரட்சி என்பதே தலைகீழாக்கம் தானே. அப்படியானால், இப்படிக் குடும்பமாக இருப்பவர்கள் அனைவரும் தனித்தலைபவர்களை நாட வேண்டும். தனியர்களே பேசுபொருளாக, மையமாக, முக்கியமாக,மோஸ்தராக இருக்க வேண்டும்.

புரட்சியின் விளைவாக மையம் கைக்குக் கிட்டும் வாய்ப்பு இருக்கிறது. “ஆனால் அந்தக் கரம் கிடைக்குமா? கடிகாரம் கட்டிய நகவண்ணம் பூசிய மென்மையான அந்த ஸ்பரிசம் கிடைக்குமா? அந்த ஆடி கார்… எந்தப் புரட்சியில் பெண்கள் இருந்தார்கள்? பெண்மை இருந்தது? விளிம்பு மையத்தின் மயக்கத்திலிருந்து, வட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். தானே மையமாக மாற வேண்டும். தனக்கான வட்டம் தானே உருவாகும். இது எதிர் புரட்சியல்ல. இதுவே அசலான புரட்சி. இந்த அலுவலக விழாவுக்கு வந்ததே தவறு…”என் மனம் அனைத்துத் திக்குகளிலும் நின்று பேசிப் பேசி தன் வெறுமையை நிறைத்துக் கொண்டிருந்தது.

“இந்தச் சிந்தனை… இப்படித்தான்… முதலில் எல்லாம் சிந்தனையாக இருந்தது. அப்புறம் உணர்ச்சிப் பெருக்காக. இப்போதெல்லாம் வெறும் சக்தி விரயமாக. அப்போதெல்லாம் சிந்தனை என்பது உயிர்ப்புடன் இருந்தது. அப்புறம் இயந்திரமாக மாறிப் போனது. இப்போதெல்லாம் வெறும் தராசாக. அந்தத் தராசின் ஒரு தட்டில் என் இச்சை சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறது. மறு தட்டில் மொத்த உலகத்தையும் பிய்த்து பிய்த்து வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வேடிக்கை என்னவென்றால் நான் இதை தெரிந்தே செய்கிறேன். நான் செய்வதினாலேயே அதை நியாயப்படுத்துகிறேன். ”

இங்கிருந்து செல்வதற்கு முன்பு ஒருமுறை ரிஷானாவைப்  பார்த்துவிட்டு சென்றுவிடலாம் என்ற நினைப்பு எனக்கு மங்கிவிட்டிருந்தது. இனி யார் கண்ணிலும் படாமல் சென்றுவிடுவதே உசிதம். நான் இவ்விழாவுக்கு வராததாகவே இருக்கட்டும் என்று நினைத்து திரும்பிச் செல்ல எத்தனிக்கையில் கூட்டத்துக்கு உள்ளிருந்து  ஒரு குரல் “நண்பா… நண்பா…” என்று கத்திகொண்டே வந்தது. அவ்வளவு இரைச்சலிலும் அது கோபி தான் என்று தெரிந்தது.  எனக்குக் கலவையான எண்ணங்கள் முகத்தில் மின்னி மறைந்தன. கோபியின் கிண்டலான சிரித்த முகம் என்னை ஆசுவாசப்படுத்தியது. இனி நான் இங்கு இருப்பது தவறாகப் படாது. பொருந்திப் போனது போல் காட்சியளிக்கும். என்ன இருந்தாலும் என்னைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொன்ன ஒரே ஆத்மா..

கோபி, “என்னடா பிரம்மச்சாரி, காத்து இந்தாட்டம் அடிக்குது. நீ வரமாட்டேன்னு சொன்ன…” என்று வந்து என் தோள்களில் கையைப் போட்டான்.

“குடும்பஸ்த்தனுங்க எல்லாம் அப்படி என்னதான் புடுங்குறாங்கன்னு பாக்க வந்தேன்.. சும்மா சொல்லக் கூடாது டா. ச்சாரிடி ஈவண்ட் ன்னு சொல்லி இவ்ளோ செலவு பண்றது ரொம்ப பிரமாதம்.” சொல்லிக்கொண்டே சிறிது நகரவே, கோபியின் கையில் இருந்து என் தோள்களை விடுவித்துக் கொண்டேன். “இந்தக் கூத்தையெல்லாம் பாத்துட்டுப் போலாம்ன்னு தான் வந்தேன்.”

“இங்க பாருடா…அப்போ இங்க கைகுழந்தையோட வந்துருக்குற இளம் அம்மாவ எல்லாம் பாக்க வரல நீ? அதோ அங்க நிக்கிறா பாரு உன்னோட ஆளு. அவள நீ பாக்க வரல?”

“ரிஷானா வா? வந்திருக்காளா? எங்க? ஆ.. அங்க.. ரைட்டு.. அவ கைல இருக்குற பாப்பா அவளோட பொண்ணா?”

“ரிஷானா உனக்குச் செட் ஆகாது டா. நான் சொல்றது செல்விய.” கோபி அவசர அவசரமாக இடைமறித்து சொல்வது போல இருந்தது. நான் அதை கவனித்திருந்தாலும் அந்த நேரத்தில் அதை பெரிதும் ஆராயவில்லை. ரிஷானாவும் செல்வியும் அருகருகில் நின்றிருந்தாலும் வெவ்வேறு ஆட்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். “செல்வியும் நல்லாத்தான் இருக்கா… அவளுக்கு என்ன..” என்று சொன்ன நான் உண்மையிலேயே அவளருகில் உள்ள ரிஷானாவைத் தான் பார்த்துக்கொண்டிருந்தேன். “அவ கையிலையும்  ஒரு பாப்பா இருக்கு?” என்று கேட்டேன்.

“ஆர்வத்த பாரு.. ஏண்டா பசு மாட்ட பாருடான்னு சொன்ன கன்னுக்குட்டியைப் பத்திக் கேக்குற?”

அவன் சொன்னவுடன் தான் எனது அதீத ஆர்வம் புரிந்தது. புரிந்த கணமே யோசனை இல்லாமல் அவர்கள் இருக்கும் திசைக்கு நேர் எதிர் திசையில் என் பார்வையையும் உடலையும் திருப்பிக் கொண்டேன். கையில் இருக்கும் கோப்பையை மாறி மாறி பிடித்தேன். கணம் தாங்காதவன்  போல அருகில் உள்ள மேஜையில் வைத்தேன். என் செய்கையை என்னைப் போல கோபியும் கவனித்துக் கொண்டுதான் இருப்பான். எனக்கு மேலும் என்ன சொல்வதென்று புரியவில்லை. ஏதாவது சொல்ல வேண்டும். என்ன சொல்ல?

அவன் மீண்டும் ஆரம்பித்தான். “டைவர்ஸ் ஆகி சரியா ஒரு வருஷம் ஆச்சு. இப்ப போட்டியே இல்ல. அப்ரோச் பண்ணு. அவளுக்கும் உன் மேல ஒரு இது இருக்கு.”

“ரிஷானாவுக்கா?”

“ப்ச்.. ரிஷானாவ விடு. அவ வேற கதை. அவ நம்மல மாறி ஆளுங்களுக்கு எல்லாம் செட் ஆக மாட்டா. செல்விய பாருடா. நான் அவளைத்தான் சொன்னேன்.” கடுமையான தந்தை சொல்வது போல் அழுத்தமாகச் சொன்னான்.

“உனக்கு எப்படித் தெரியும்?”

“இப்போ ஏதோ கோமாளித்தனம் நடிச்சு காமிச்சியே. அந்தப் பக்கம் பாக்குறது இந்தப் பக்கம் பாக்குறதுன்னு; அதெல்லாம் அவளும் செய்யுறா.” என்று அவன் சொல்லும்போது நெஞ்சில் பதக்கம் குத்தியது போல் இருந்தது. தன்னம்பிக்கையான அந்தக் கம்யூனிஸ்டை விட இந்தக்கால்கள் நடுங்கும் காதலன்தான் எனக்குப் பிடித்திருக்கிறது. இவன்தான் என் எதிர்காலம். இவன்தான் என் மீட்பன். இவன்தான் நான்.

“நாப்பது வயசுக்கு மேல ஆச்சு டா இப்போ. இதுக்கு மேல கல்யாணம் பண்ணி குடும்பம் ஆரம்பிச்சு. எனக்குச் சரியா வரும்ன்னு தோணல. இவ்வளவு வருஷமா கட்சி கொள்கைன்னு இருந்தாச்சு. அப்படியே இருக்குறது தான் சரின்னு படுது.”

கோபி ஒரு தினுசாக என்னை உற்றுப் பார்த்தான். நான் மேலும் எதுவும் சொல்லாததைக் கண்டு, “ இந்தத் தன்னிரக்க சர்க்கஸ் எல்லாம் என்கிட்ட வேண்டாம். நானும் நீ போகிற பாதைல போனவன் தான். நான் உனக்கு முன்னால ஸ்டாப்புல இறங்கிக்கிட்டவன். ஆமா.. பாத்துக்கோ..”  கோபி முகத்தைக் கோவமாக வைத்திருந்தான்.

எனக்கு மெல்ல சிரிப்பு  வந்தது. இப்படி யாருடனாவது இலகுவாகப் பேசிக்கொண்டிருக்கும் போது சிந்தனை இயந்திரம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். முக்கியமாகக் கோபியுடன் பேசும்போது. ஏதோ அவனே முன்வந்து  மூளைக்குள் கைவிட்டு அந்த இயந்திரத்தின் பொத்தானை அழுத்தி நிறுத்தியது போல. ஆனால் அவனுக்கு அதை தூண்டி விடவும் தெரியும். “புரட்சி மட்டும் வந்துச்சுன்னா வக்காளி மொதல்ல உன்ன தான் போட்டுத்தள்ளனும்.” என்றேன்.

“அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் வராது. நைட்டு பலான படம் பாத்துட்டுக் காலைல ஜிம்முக்குப் போற   வரைக்கும் அப்படி எல்லாம் அசம்பாவிதம் நடந்திராது. நடக்கவும் விட மாட்டோம்” என்றான். சட்டென்று என் மூளை மடிப்புகளுக்குள் நான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த மறுமொழிகள் புற்றீசல் போல் என் முன் வரிசைகட்டி வந்துகொண்டிருப்பது என் முகத்தின் விதவிதமான சுளிப்புகளில் தெரிந்தது. அத்தனை மறுமொழிகளும்  பூர்ஷுவாவுக்கு எதிரான மறுமொழிகள்.  ஆகையால் இன்று கோபி ஒரு பூர்ஷுவா. இல்லை அவன் என்றுமே பூர்ஷுவா.

இப்படியான நேரங்களில் அந்தக் கம்யூனிஸ்ட் உயிர் பெற்றுவிடுவான். அவன் தலைவன். ஆவேனே வரலாற்று நாயகன். அவன் இன்னும் வேறு என்னென்னவோ.

“புரட்சிங்கிறது அவ்ளோ சலீசா போய்டுச்சு உனக்கு? நீ சொல்ற இந்த அடிப்படை இச்சைக்கு எதிர் திசையில் போறதுக்கு பேர் தான் பண்பாடுங்கிறது. அந்தப் பண்பாடு அதனோட உன்னத வடிவில் முழுமை பெற்ற வடிவில் இருக்கறதுக்குப்பேர் தான் புரட்சி. அப்படிப்பட்ட புரட்சிக்காகச் சில பேர்  நிக்கிறாங்க. அவங்களோட தனிப்பட்ட சறுக்கல் என்கிறது புரட்சியோட சறுக்கல் இல்ல.” இனி விட்டால் என் மனம் அதன் கட்டுப்பாட்டில் இருக்காது என்பது புரிந்தது. இங்கே வருவதற்காக இன்று நான் மாத்திரை வேறு உட்கொள்ளவில்லை என்பது நினைவுக்கு வந்தது.

என்னையே பார்த்துக் கொண்டிருந்தவன் இன்னும் உக்கிரமாக என்னை மேலும் ஊடுருவிப் பார்த்து, “இங்கே புரட்சி அன்னாடும் நடந்திட்டு தான் இருக்கு. அங்க நிக்குதுங்கலே அந்தச் செல்வியும் ரிஷானாவும் அம்பது வருஷத்துக்கு முன்னாடி புருஷனில்லாம இப்படி இங்க வந்து ஒரு விழாவுல கலந்துக்க முடியாது. நூறு வருஷத்துக்கு முன்னாடி வீட்ட விட்டு வெளியே வர முடியாது. ஐநூறு வருஷத்துக்கு முன்னாடி செத்துப்போன புருஷனோடு சேர்ந்து உடன்கட்டை ஏறணும். இந்தப் புரட்சி எல்லாம் உனக்குக் கண்ணுல படாது. பட்டாலும் பத்தாது. புரட்சி தெனம்தெனம் நடந்துக்கிட்டு தான் இருக்கு. அது உன் மூக்கு கீழ நடக்கணும்னு நீ எதிர்பார்த்தா ஆகுமா?” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னரே நான் ஆரம்பித்திருந்தேன்.

“வரலாற்றின் இச்சையை நான் ஒத்துக்கிறேன். அதுக்குன்னு ஒரு செயல் திட்டம் கூட இருக்கலாம். ஆனா வரலாற்றிலே இப்படி சில நாயகர்கள் உருவாகி அதன் போக்கை வேகப்படுத்தவோ திருப்பவோ செஞ்சிருக்காங்க. அதை நீ கொச்சைப் படுத்த நான் அனுமதிக்க மாட்டேன்.” என்று மூச்சை இழுக்கும் இடைவெளியில் கோபி உள்புகுந்து,”டேய்… டேய்… போதும்…”என்று இரைச்சலைக்கேட்பது போல் முகம் சுளித்து, “வரலாற்றோட இச்சை பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா தனிமனித இச்சைப் பத்தி நல்லா தெரியும். அதுக்குச் சாட்சியாத்தான் உன் முன்னாள்  நின்னுகிட்டு இருக்கேன்.”

“தனிமனித இச்சைன்னு ஏனடா சுத்தி வலைக்குற? என்னோட பிரச்சனைன்னு சொல்லு. அத சொல்லிக்காமிக்க தானே இவ்ளோ பேசுற? என்னோட கட்சி தப்பு… கொள்கை தப்புன்னு சொல்லு. ஏன் நிறுத்திக்கிட்ட?”

“அய்யா சாமி.. யார் எது சொன்னாலும் அத எப்பிடி உன்ன பத்தினதுதான்னு மாத்திக்கிரியோ. உன்ன முன்னிலைல வெச்சு எனக்கு நானே சொல்லிகிறேன்னு வெச்சுக்கோ. விசயத்துக்கு வர்றேன். இச்சையைக் கணக்கு போடுற அளவுக்கு யாருக்கும் இங்க ஆயிசு கொடுத்து வைக்கல.”

“வரலாற்றோட இயங்கியலை புரிஞ்சுக்க ஆயிரக்கணக்கான வருஷம் வாழ்ந்துதான் புரிஞ்சுக்கனுன்னு இல்ல. இந்த வாழ்க்கையே போதும். ஏன்னா..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கோபி நான் சொல்ல வந்ததை மறித்து, “ஏன்னா.. நாம வாழறதே வரலாற்றுல தான்… என்ன அதுதானே? நானும் உன் கட்சில இருந்தவன் தான்னு மறந்திடாதே. எல்லாம் தயாரிக்கப்பட்ட பதில். இதுனால தான் எந்த இயக்கத்தைப் பாத்தாலும் பயமா இருக்கு.” என்றான்.

“இந்த மாதிரியான தனிமனித வாதம் தான் இங்க புரட்சி வராததுக்கும் அதிகாரம் காலகாலமா உங்ககிட்டயே இருக்குறதுக்கும் காரணம்..” என்றேன். இப்படியெல்லாம் சொல்லும் போது வழக்கமாக இருக்கும் கொதிநிலை ஏனோ அன்று அவ்வளவாக இருக்கவில்லை எனக்கு.

கோபி ஒரு வினாடி என்னை உற்றுப் பார்த்தான். என்னைப் பார்க்கிறானா அல்லது என்னை ஊடுருவி என் பின்னால் பார்க்கிறானா என்று சொல்ல முடியாத துளைக்கும் பார்வை. அவனிடம் பதில் இல்லை என்பது போல் இருந்தது. அது உடனடியாக வெற்றி உணர்வாக என்னுள் பரவியது.

கோபி நிதானமாகத் தனக்குத்தானே சொல்வது போல் சொன்னான். “அதிகாரம்…ஹ்ம்ம்.. இங்க ஒரு அதிகார  நாற்காலிதான் இருக்கு, அது உனக்கு அப்படி இல்லை எனக்குன்னு வரும்போது, என்னோட தேர்வு என்னவா இருக்கும்ன்னு நீ நினைக்கிற?” என்றான்.

சிறு இடைவெளி விட்டு “அது தான் இச்சைன்னு சொல்றேன். அந்த இச்சை தான் என்னோட கடவுளும் சாத்தானும். அதுக்கு நான் நேர்மையா நடந்துக்கிறேன். நான் உன் எதிரி இல்ல. உன் லட்சிய எதிரியை அப்பறமா தேடிப்போம். மொதல்ல ஆன காரியத்தை கவனிப்போம்.”என்று சிரித்தவாறே முடித்தான். அவன் சுளிப்பில் ஆரம்பித்து சிரிப்பில் முடிக்கிறான். இந்த சூட்சமம் தான் என்னைப் போல நேர்நிலையாலனுக்கு புலப்படுவதில்லை.

“நம்ம ரெண்டு பேருமே பேசிகிட்டு இருந்தா செல்வி எப்படி உன்ன அப்ரோச் செய்வா? இல்ல நீதான் எப்படி அவ கிட்ட பேசுவ? நான் அந்தப் பக்கம் நகுந்துக்கிறேன். நீ இங்கயே அவ கண்ணு முன்னாடியே இரு.” என்று ஆலோசனை சொல்லிவிட்டு நகர்ந்தான்.

அவன் நகர்ந்து விட்டானே தவிர அவனுக்கு உண்டான எனது மறுமொழிகள் இன்னும் நின்றபாடில்லை. அவனது சொற்களையும் அவற்றின் இடைவெளிகளையும் செயல்களையும் பிரித்துப் பிரித்துப் பகுப்பாய்வு செய்தேன். அதன் மூலம் அவனுடைய நேர்ப்பார்வை, மாற்றுப் பார்வை, திருகல் பார்வை என்று பல கோணங்கள் வரையறைகளாகத் துலங்கி துலுங்கி வந்தன. இப்படி பல பல பகுப்பாய்வுகளும் வரையறைகளையும் ஆயிரக்கணக்கில் செய்துள்ளேன். இவையெல்லாம் எனக்குச் சலிப்பதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் இவனது சொற்களை எண்ணங்களைப் பிரித்து பிரித்து, நான் ஏற்கனவே பகுப்பாய்வு செய்து வைத்திருந்த சட்டகத்தில் பொருத்தினால் மட்டுமே போதும்.  இப்படி முன்கூட்டியே சிந்தித்து வைத்திருப்பது சரியா என்று கேட்டால் சரி என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் எங்களுக்குப் பூர்ஷுவாக்களுக்கே உண்டான மேலதிக வசதிகள் இல்லை. இன்றைய மையம் அவர்களே. அவர்களைச் சுற்றியே அதிகாரம் வட்டம் வருகிறது. அவர்களுடைய அதிகாரத்திற்கு எங்களுடைய பதில் என்பது சிந்தனை. ஆகையால் சிந்தனையை எப்போதும் அதன் கூர் வடிவில் தயார் நிலையில் வைத்தாக வேண்டும். கணம் பிசகினாலும் அதிகாரம் வென்றுவிடும்.

இப்போது கூட நான் உத்தேசிப்பது ரிஷானாவை. ஆனால் அவன் எனக்குப் பொருத்திப் பார்ப்பது செல்வியை. எனக்காகப் பூர்ஷுவாவின் தேர்ச்சி செல்வி என்றால் ரிஷானா யாருக்கானவள்? சந்தேகம் என்ன? அந்தக் கோபிக்கு தான். இங்கே தான் அவர்களுடைய சூழ்ச்சியைப் புரிந்துகொள்ள வேண்டும். எனக்கு என்ன தேவை என்பதை என்னை விட அவனுக்கே நன்றாகத் தெரியும் என்ற தோரணை. அவனுடைய முதல் மனைவியை முழுக்க சுரண்டியாகி விட்டது. இனி அவள் உபயோகமில்லாத பொருள். இப்போது ரிஷானாவைக் குறிவைக்கிறான். அதன்மூலம் இன்னும் இன்னும் மூலதனம் அவனிடம் குவிகிறது. இன்னும் இன்னும் அவனிடம் அதிகாரம் சேர்கிறது. இன்னும் இன்னும் எங்களைப் போன்றோர் சுரண்டப்படுவர். அதை முறியடிக்க வேண்டும் என்றால் புரட்சியின் மூலம் மூலதனத்தைக் கைப்பற்றுவது. ரிஷானாவைக் கரம்பிடிப்பது. “அப்படி…அப்படி நடந்தால், நான் ரிஷானா அவளுடைய மகள் என்று நாங்கள் எல்லோரும் அந்த ஆடி காரில் வலம் வருவோம். அப்போது என்னைத் தலைவனாக ஏற்ற எல்லோரும் கோஷமிடுவர். நான் காரை நிறுத்தி ஒரு உயர்ந்த பீடத்தின் மீது ஏறி நின்று அமைதி என்பேன். என் வேண்டுகோள் உத்தரவு போல் அலையலையாக கடந்து அந்த ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை அமைதி செய்யும். அப்போது நான் அந்த என் நீண்ட உரையை நிகழ்த்திக் காட்டுவேன். ஆகா… எத்தனை முறை நிகழ்ந்த அந்த உரை. அந்த உரை’’

“ஆ… ஐயோ.. மறுபடியும் என் எண்ண இயந்திரம்… அடிக்கடி நான் சென்று நிற்கும் அந்த வெளி பொன்னுலகமாகவே இருந்தாலும் அது கனவுலகம். ”

அதோ ரிஷானா என்னை நோக்கி வருகிறாள். இப்போது என்ன செய்ய? அவளை நோக்கி நிற்பதா? அல்லது  திரும்பிக்கொள்வதா? வேறுபக்கம் பார்க்க அவகாசம் இப்போது உள்ளதா? அந்த அவகாசம் இருந்தால் சாவகாசத்தை நடித்துக்காட்டலாம். இப்போதிருக்கும் பதட்டத்தில்  முடியுமா? இன்னும் அவளை நோக்கித்தான் நான் நின்றிருக்கிறேனா? ஆமாம். அவள் எப்போதோ கையசைத்து என்னை நோக்கி வர ஆரம்பித்தவள் இன்னும் வந்துகொண்டிருக்கிறாள். இந்த இடைவெளி இவ்வளவு தூரமா? அவள் சிரிக்கிறாளா? ஆமாம். அப்படியானால் நானும் சிரிக்க வேண்டும். அவளைப் போல் சிரிக்கவா அல்லது என்னைப் போலா? என் சிரிப்பு எப்படி இருக்கும்? எனக்கென்று ஒரு சிரிப்பு இருந்திருக்க வேண்டும். என்னுடைய சிரிப்பை எப்படி நான் கண்டுபிடிப்பது. சிரிப்பைப் பற்றி இதற்கு முன் நான் சந்தித்ததில்லை. அதற்குண்டான சிந்தனை தற்சமயம் என் கைவசம் இல்லை. நான் சிந்தனையாளன் அல்லவா. இதோ… இதோ.. ஹ்ம்ம்… இதோ.. அடத்தூ…. இன்னும் அவளைத் தான் பார்த்துக்கொண்டிருக்கிறேனா? ஆமாம். இனி வேறு வழியில்லை. அவளுடைய சிரிப்பு இப்போது நன்கு துலங்கித் தெரிகிறது. சந்தேகம் வேண்டாம் அந்தச் சிரிப்பு என்னை நோக்கித்தான். ஆஹ்.. நான் இப்போது எப்படி நிற்பது. சாய்ந்துகொள்ள சுவர் வெகு தூரத்தில் அல்லவா உள்ளது. என் உள்ளங்கைகள். ஐயோ என் உள்ளங்கைகள். அவற்றை பாண்ட் பாக்கெட்டுக்குள் மறைக்கவும் அவள் அருகில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

“என்ன அப்படியே பே..ன்னு பாக்குறா?”

….. சிந்தனையின் இடையூறின்றி நேர்க்கட்சியாக அவளை நான் பார்த்தேன். அப்படியான நேர்க்காட்சி எனது அனுபவ வட்டத்திற்குள் முதன் முதலில் அன்றுதான் வருகிறது……

வளையலில்லாத கைகளை என் முகத்திற்கு நேராக நீட்டி, இரண்டு முறை சொடக்கு போட்டு, “ஏய்! இங்கதான் இருக்கியா?” என்றாள்.

நான் சுதாரித்துக் கொண்டு, “ஏய்! என்ன அப்படி கேக்குறா? நான் ஏதோ சும்மா யோசனைல இருந்தேன்.” நான் இதுவரை யாரையும் ஏய் என்றதில்லை என்று என் மனம் சிந்திக்க ஆரம்பித்த கணமே அதை முறித்து மீண்டும் அவள் முன் நிறுத்தினேன்.

“ஆஃபீசில தான் யாருகிட்டயும் பேசாம சும்மா உம்ம்ன்னு இருப்ப…” எனும்போது உம்மென்ற முகத்தைப் பாவித்துக் காண்பித்தாள். நான் அதை பிரதி செய்து, “இப்பிடியா?” என்றேன்.

அவள் ஒரு விரலை முன் நீட்டி, விரலை மேலும் கீழுமாக ஆட்டி சிரித்துக்கொண்டே, “ஆமா ஆமா, இதேதான் இதேதான்..” என்றாள்.

அந்தக் கணத்தில் அந்தக் காட்சியில் என்னை எங்கோ யாரோ ஆமோதிப்பது போல் உணர்ந்தேன். என் மெல்லிய உடல் நடுக்கம் சமரசம் கொண்டது. இறுக்கம் தளர்ந்து வந்தது. “ஏங்க, அதெல்லாம் ஒரு நடிப்புங்க. நான் எல்லார்கிட்டயும் பேசிட்டுதான் இருக்கேன்.”

“ஆஹா.. நீங்க பேசுறதுதான் ஊருக்கே தெரியுமே?”

“ஏங்க.. மம்மி ப்ராமிஸ் டாடி ப்ராமிஸ்ங்க..” என்றவுடன் வாய்பொத்தி சிரித்தாள். எனக்கு வெற்றிக்களிப்பு. இது நானே அல்ல. எப்போதும் மேடிட்டிருக்கும் என் வயிறு அன்று என் அதீத பிரயத்தனம் இல்லாமலேயே உள்ளிழுத்து இருந்தது. காய்ந்த இரத்தத்தின் நிறத்தில் சீலை அணிந்திருந்தாள். சீலையைக்கூட இவ்வளவு இறுக்கமாக அணியமுடியுமா என்ன? அவளுடைய உயரமான காலணிகள் என்னை நோக்கி இருந்தன. அவள் சிரித்து முடித்து நிறுத்தினாள். நான் மெலிதாகச் சிரித்தேன்.

“என் காரை அவ்ளோ நேரமா நோட்டம் விட்டுகிட்டு  இருந்தீங்க? என்ன சமாச்சாரம்?”

“ஓ.. அதுவா? ரொம்ப நாளாவே எனக்கு ஒரு கார் வாங்கனுன்னு நினைப்பு. அதான் ஊருக்குள்ள யார் என்ன கார் ஓட்டறாங்கன்னு பாத்தேன்.”

“காரை மட்டும் தான் அப்படி பாத்தீங்களா?”

“எல்லாரையும்தான்.. இதோ இந்தக் கூட்டத்தில நீங்க மட்டும்தான் ரொம்ப ப்ரைட்டா இருக்கீங்க..” என்றேன்.

அவள் “சும்மா இல்ல… சீரியல் பல்ப்-அ முழுங்கீட்டு வந்துருக்கம்ல…” என்றவுடன் நான் குபீரென்று சிரித்தேன்.  என் சிரிப்பு இப்படித்தான் இருக்கும்.

“நீங்க உள்ள வரும்போதே பாத்துட்டேன். ரொம்ப நேரமா கோபிகிட்ட பேசிகிட்டு இருந்தீங்க.” என்றாள்.

“எனக்கும் அவனுக்கும் ஒரு சின்ன சண்டை.. அதான் போய்ட்டான். இப்போ நான் போய் சமாதானம் செய்யணும். இல்லைன்னாலும் அவனே வந்து பேசிடுவான்.”

“ஆண்கள் உலகம் ரொம்ப சிக்கல் இல்லாம இருக்கும்போல..”

“இங்க வேற மாதிரி சிக்கல் சண்டைகள் இருக்கும் ரிஷானா..” அவள் பெயரை உச்சரித்தவுடன் அது சிறிய அத்துமீறலாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவள், “ஓஹ்.. நீங்க சண்டையெல்லாம் போடுவீங்களா..?” என்று ஆச்சரியத்தை நடித்துக் காண்பித்தாள்.

“கிளோஸா இருக்கவுங்க கிட்ட மட்டும்..”

“அப்படின்னா உங்களோட ஒரு தடவைச்சண்டை போட்டுப்பாக்கணும்..”

இதற்கு என்ன பொருள். என் சிந்தனை இயந்திரம் இயங்க முற்பட்டது. வலுக்கட்டாயமாக அதை பிடித்து நிறுத்தினேன். இப்போது முழுவதுமாக அவளுடன் இருக்கும் வாய்ப்பைக் கெடுத்துவிடக் கூடாது.

“இந்த ஈவெண்டே ஒரு வேஸ்ட்டு தெரியுமா… ” என்று ஆரம்பித்த அவள் எங்கெங்கோ சொல்லிச் சென்றாள். என் சிந்தனை வேறெங்கோ என்னை இழுத்துச் சென்றது. அதை சிந்தனை என்று சொல்லக்கூடாது. வேண்டுமானால் கற்பனை என்று சொல்லலாம். நான் கவனிப்பது போல் சிரித்தும் ஆமோதித்தும் பாவனை செய்தேன். அந்தப் பாவனையின் பகுதியாக அந்த அரங்கத்தைக் கண நேரம் நோட்டம் விட்டேன். கண்ணில் படுபவர்கள் எல்லோரும் தம்பதிகள் போலவே இருந்தனர். ஒருவேளை அவர்களுக்கு நாங்கள் இருவரும் தம்பதிகள் போல தெரிவோம். கோபி பார்க்கிறானா? அந்தத் தோற்றமும் கற்பனையும் என்னைக் குதூகலிக்கச் செய்தது. அப்படியே பேசிக்கொண்டே இன்னும் கொஞ்சம் பக்கத்தில் சென்றேன். அவள் பின்வாங்கவில்லை என்பது ஆறுதலாகவும் ஊக்கமாகவும் இருந்தது. கோபி பார்க்கிறானா? நன்றாகவே பார்க்கிறான். இன்னும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். அவன் நினைப்பது என்ன என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. அவன் பார்வையில் நாங்கள் இருவரும் இருக்கிறோம்.

இது ஒரு வரலாற்றுத் தருணம். இதை நான் சரியாக உபயோகித்துக் கொள்ளவேண்டும். இங்கே தொழில்படுகின்ற அனைத்து விசைகளும் ஒன்று என் இச்சையின் பின்னாலோ அல்லது அவனது இச்சையின் பின்னாலோ அணிசேர வேண்டும். இந்த இரண்டும் மோதி வரலாற்றின் புதிய இச்சை தோன்றிவரும். பார்த்துவிட வேண்டியதுதான். ஆடி கார் எனக்கா அவனுக்கா என்று.

அவள், “சரி.. நான் வந்த விஷயத்தைச் சொல்றேன். ஐ நீட் எ பேவர். உங்களோட புதிய கட்சி பில்டிங்ஒரு போர்சன் வாடகைக்கு விடப்போறீங்கன்னு கேள்விப்பட்டேன். என் பிரதர் கேட்கச் சொன்னார்.” என்றாள்.

நான் எதையும் யோசிக்காமல், “வரும் சனிக்கிழமை காலை ஆபிசுக்கு உங்க பிரதரை கூட்டிகிட்டு வாங்க. பேசிக்குவோம்.” என்றேன்.

இதோ இந்த விசை கூட எனக்குச் சாதகமாக இருக்கிறது. எனது இச்சையுடன் அணிசேர்கிறது. அப்படியானால் வரலாறு முடிவு செய்துவிட்டது என்று தான் அர்த்தம். இன்னும் கோபி பார்க்கிறானா? இந்நேரம் ரிஷானாவின் பாப்பா மட்டும் உடன் இருந்தால் அவளைக் கையில் தூக்கி வைத்திருப்பேன். அதை கோபி பார்த்திருப்பான்.

“பாப்பா எங்க? ரொம்ப நேரமா காணோம். விளையாடுதா?”

“பாப்பா வா? எனக்கா?”

“அப்போ உங்களுக்குக்குழந்தை இல்லையா?”

“ஒரு நிமிஷம்” என்றவள் கூட்டத்தை நோக்கி “இன்பா… இன்பா…” என்று அழைத்தாள்? கூட்டத்திற்குள் இருந்து ஒரு சிறுவன் ஓடி வந்தான். சிறுவன்… ஒருவேளை?  அவன் அருகில் ஓடி வரும்போதே நான் அவனையும் அவன் என்னையும் பார்த்துக்கொண்டோம். இது என்ன புது விசை? இவன் எங்கு அணி சேரப்போகிறான்? வந்தவன் ரிஷானாவின் அருகில் நின்றான். “அங்கிள் இஸ் மை பிரண்ட். சே ஹாய்…” என்றாள். சிறுவன் ஒன்றும் சொல்லாமல் என்னைப் பார்த்துவிட்டு அவளைப் பார்த்து “லெட்ஸ் கோ அம்மா… எனக்கு இந்த இடம் பிடிக்கலை. ஐ டோன்ட் பீல் ஆல்ரைட்…” என்றான்

நான் பரிவுடன் “ஹாய்…” சொல்ல வாயசைத்தேன். அது உள்ளுக்குள் ஆரம்பித்து உள்ளுக்குள்ளே முடிந்துபோனது.

சிறுவன் அவன் அம்மாவைப் பார்த்து. “எனக்கு இங்க யாரையும் பிடிக்கல.” என்றான். நான் குனிந்து “உங்க பேர் என்ன?” என்று கேட்டேன். அவன் என் விழி நோக்கினான். அவன் விழியின்  விசையில் ஆயிரம் பதில்கள். “நாம ரெண்டு பேரும் விளையாடலாமா?” என்றேன்

ரிஷானா குனிந்து, “என்ன வேணும் சொல்லு? நீ சொல்றத செய்யலாம்?” என்று சற்று கெஞ்சல் தொனியில் கேட்டாள். நான் வழிமொழிபவன் போல “நீதான் எங்க லீடர் சொல்லு பாக்கலாம்…” என்றேன். என் குரலில் கெஞ்சல் தொனி இருந்திருக்கலாம். அவனோடு அணி சேர்வதுதான் என் கடைசி வாய்ப்பு.

“அம்மா… போலாம்…”

அவள் முகம் சோகமாகப் பதட்டமாக மாறியது. அவனருகில் முட்டி போட்டு அமர்ந்து ”என்ன ஆச்சு? வயிறு வலிக்குதா? தூக்கம் வருதா?” என்றவள் தன்னுடைய புறங்கையால் அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.

சிறுவன் என்னைப் பார்த்துக் கொண்டே அவளிடம் “ஐ டோன்ட் லைக் இட் ஹியர்..“என்றான்.

அப்போது ரிஷானாவிடம் வினாடிக்கும் குறைவான ஒரு மௌனம் நிகழ்ந்து மறைந்தது.  உடனே அவனை வாரி எடுத்துக்கொண்டு ஒன்றும் சொல்லாமல் வேக வேகமாக விழா அரங்கை விட்டு வெளியேறினாள். செல்பவள் தோள்களில் சாய்ந்திருந்தவனின் மணிக்கண்கள் அவ்விடம் விட்டு  மறையும் வரை என்னை நோக்கிக் கொண்டிருந்தன.

***

வருடங்கள் ஆகிவிட்டன. அணி சேர்வதைப் பற்றி என்னிடம் இப்போது புதிய சிந்தனை ஒன்று இருக்கிறது. அதை தத்துவமாக வளர்த்தெடுக்கப் போகிறேன்.

இப்போதும் பல கார்கள் என் கனவுகளில் வந்து செல்லும். எல்லா வகைகளிலும்  எல்லா நிறங்களிலும். அந்த ஆடி காரும் வரும். என் கற்பனையில் எவ்வளவு முயன்றும் அந்தக் காரில் நானோ கோபியோ ஒருநாளும் இருந்ததில்லை. எப்போதும் ரிஷானாவும் அவள் மகன் இன்பாவும் தான். அரும்பு மீசையுடன் இன்பா ஓட்டுநர் இருக்கையில் இருப்பான்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...