யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

இது இந்தியாவில் அவரது அதிகாரப்பூர்வமான கடைசி விடியல். கடைசி விழிப்பும் கூட. விடியல் வேண்டுமானால் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கலாம். விழிப்பு என்பது உறங்கினால் மட்டும்தானே சாத்தியம்? அவரால் படுத்த நிலையிலேயே உடலின் பாரத்தை உணர முடிந்தது. குளிரூட்டியையும் மின்விசிறியும் மீறி லேசாக வியர்ப்பது போலிருந்தது. அவர் படுத்தவாறே அறையை ஆராய்வது போல பார்வையைச் சுழற்றினார். இரவு விளக்கின் ஒளியில் அறை வெண்ணிற போர்வை கொண்டு மூடியது போலிருந்தது. அதை அறை என்பதைவிட வீடு எனலாம். அதன் விசாலத்துக்கு ஈடு கட்டுவது போல உயரமான கூரை. டில்லியின் அதீத வெப்பத்தையும் குளிரையும் தன்னுள் அதிகம் ஈர்த்துக் கொள்ளாவண்ணம் மரப்பேனல்களால் மூடப்பட்ட சுவர்கள், உயர்ந்து அகன்ற தனது தேகத்தில் திரைசீலைகளை அணிந்திருந்த சன்னல்கள், மர அலமாரிகள், ரேக்குகள், அலங்காரப்பொருட்கள், ஓவியங்கள், வெள்ளியாலான புழங்குப் பொருட்கள்… போதும்… போதும்… அவர் கண்களை மூடி காட்சிகளை மறைத்துக் கொண்டார். இதில் அவருடைய தனிப்பட்ட உடமைகள் பெரும்பான்மையாக இல்லை. அவையெல்லாம் தயாராக எடுத்து வைக்கப்பட்டு விட்டன. இனி பயணம் மட்டுமே மிச்சம்.

அவர் அங்ஙனமே கிடக்க விரும்பாமல் எழுந்து அமர்ந்து கொண்டார். முதலி்ல் அலைக்கழியும் எண்ணங்களிலிருந்து மீள வேண்டும். எதையோ இழந்தது போன்றிருக்கும் உணர்வை எதை கொண்டாவது இட்டு நிரப்ப வேண்டும். சமன் குலைந்திருந்த மனதை எடுத்து நிறுத்த வேண்டும். ஆம். நிறுத்திதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. எண்ணங்கள் மனதில் பாரமாக அமர்ந்து விடும். அவர் அங்கிருந்து எழுந்து கொண்டார். சன்னலின் திரைசீலையை விலக்கி வெளிக்காட்சியைத் தேடினார். இருளாக இருந்தது காலம்.

அவர் தன் வாழ்நாளில் பரபரப்பு என்பதன் முழுப்பொருளைக் கடந்த சில மாதங்களாகதான் முழுமையாக உணர்ந்திருந்தார். அது கூட முழுமையானதா என்றால் அவரால் உறுதியாகச் சொல்ல முடியாது. முழுமை என்று நம்பிக் கொண்டிருந்தவைகள் இரண்டாக உடையவும் வாய்ப்புண்டு. வீடு திடீரென்று  இரண்டாகும்போது அங்கிருப்போர் எந்த அறைக்குச் செல்ல வேண்டும்? எல்லோருக்கும் தேவையான உணவை வழங்கிக் கொண்டிருக்கும் சமையலறைக்கா, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் முன்னறைக்கா, நிம்மதியாக உறங்கி எழும் படுக்கையறைக்கா, தவிர்க்கவே முடியாத கழிவறைக்கா? எல்லாமே எல்லோருக்கும் தேவைப்படுவது. பிரித்தால் அர்த்தமற்று போய் விடும். ஆம்… பிரிந்தால் கூட அர்த்தமற்றுதான் போகும். அவர் கண்களை மூடிக் கொண்டார். பிரிய முடியாமல் போனால்…? எல்லாம் கை மீறுகிறது. எது எதை நிறுத்துவது? மணற்குடுவையில் சரிந்து விழுவது மணலா? காலமா?

அவருக்குக் குளிர்ந்த நீரில் நீராட வேண்டும் போலிருந்தது. சன்னலுக்கு வெளியே தெரிந்த இருளில் அவரால் நீச்சல்குளம் இருக்குமிடத்தை அனுமானிக்க முடிந்தது. அங்கு நீந்துவது அவருக்குப் பிடித்தமானது. ஆனால் பதவியும் நேரமும் அவரை நினைத்தபோதெல்லாம் அனுமதித்து விடாது. அவரின் கணவர் கூட முன்னாள் கடற்படை தளபதிதான். அவர்கள் தங்கள் திருமண வாழ்வின் முற்பகுதியைப் பெரு விருப்பத்துடன் கப்பற்படை சூழலில் கழிந்திருந்தனர். பயணங்கள்… பயணங்கள்… நாடுகள்… நாடுகள்… எங்கிருந்தாலும் அவருக்கு கடலோ ஆறோ ஏரியோ நீச்சல்குளமோ நீர்நிலை எதுவாகிலும் எல்லாமே பிடித்தமாகி விடும். எங்கோ உருவாகி எதிலோ கலந்து ஆவியாகி காற்றாகி மழையாகி எங்கோ பொழிந்து… எந்த நீர் யாருடையது? எந்த நாடு என்னுடையது?

குளித்து முடித்து வெளிர் ரோஸ் நிற கவுனை அணிந்து கொண்டார். அதில் வானத்து நீலத்தில் பூக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடந்தன. அன்று ஜவஹர் வீட்டில் நடந்த விருந்து உபசாரத்தின்போது கூட இதே கவுனைதான் அணிந்திருந்தார். கண்ணாடியின் முன்பாக நின்று முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டார். அந்த முழு நீள கண்ணாடி பிரதிபலித்துக் காட்டிய தனது உருவத்தின் மீது அவருக்கு அதிருப்தியிருந்தது. நாற்பத்தேழு வயதுக்கு முகம் காட்டும் முதிர்ச்சி கொஞ்சம் அதிகமோ? முதுகில் சற்றே கூனலிருந்தது. ஒருவேளை ஒல்லியும் உயரமுமான உடல்வாகு அதற்குக் காரணமாக இருக்கலாம். வெயிலின் கடுமை முகத்திலும் உடலிலும் ஆங்காங்கே செந்நிறத் திட்டுகளாகப் படிந்திருந்தது. சிரிக்கும்போது கண்ணோரங்களில் சுருங்கங்கள் விழ தொடங்கியிருந்தன. வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட கீரிடத்தைச் சூட்டிக் கொள்ளும் தருணங்களில் இன்னும் சற்று இளமையாக இருந்திருக்கலாமோ என்றெழும் எண்ணத்தை அவரால் தவிர்க்க முடிவதில்லை. ஆனால் ஜவஹரோ, கடவுளோ அல்லது தேவதையோ ஏதோ ஒன்றுதான் உங்களுக்கு இத்தனை அழகையும் அறிவையும் நளினத்தையும் வசீகரத்தையும் சுறுசுறுப்பையும் மனிதநேயப்பாங்கையும் கொடுத்திருக்கிறது என்று பகிரங்கமாகப் புகழ்கிறார்.

எண்ணங்கள்… எண்ணங்கள்… மீண்டும் மீண்டும் எண்ணங்கள். அதை வெட்டி வீசும் நோக்கோடு அழைப்பானை அமுக்கி தேநீரை வரவழைத்துக் கொண்டார். ஊஞ்சலாடும் மர நாற்காலியில் வாகாக அமர்ந்ததும் நாற்காலி அவரது மெல்லிய இருப்புக்கேற்ப முன்னும் பின்னுமாக லேசாக அசைந்தது. உடலைப் பின்னுக்குத் தள்ளி நாற்காலியின் குழைந்த முதுகில் தன் முதுகை சாய்த்துக் கொண்டு வலது கையை மடக்கி நெற்றியின் குறுக்கே வைத்துக் கொண்டார்.  பணியாளை அழைக்காமல் வர வேண்டாம் என்று சொல்லி விட்டது குறித்து ஆறுதல்பட்டுக் கொண்டார்.  தேநீர் ஆறியிருக்குமோ? மேசையில் வைக்கப்பட்ட வெள்ளி தாம்பாளத்தில் வெள்ளியாலான தேநீர் குடுவையும் கவிழ்த்து வைக்கப்பட்ட வெள்ளிக் கோப்பைகளும் இருந்தன. தேநீர் கோப்பையை வாயருகே வைத்து உறிஞ்சியபோது அவரால் விரல்களின் நடுக்கத்தைத் தெளிவாக உணர முடிந்தது.

இன்று அவரும் அவருடைய கணவரும் பதினேழு வயது மகள் பமீலாவும் இங்கிருந்து கிளம்பவிருக்கிறார்கள். அவர்களை விமானநிலையத்தில் வழியனுப்ப காத்திருக்கும் கூட்டத்தின் முன்பாக அவர் கால்கள் பின்னாமல் நடக்க வேண்டும். இன்று அவர் அணிய வேண்டிய காலணிகள் மற்றும் உடைகளைத் தவிர மற்றெல்லாம் பெட்டிகளில் அடுக்கப்பட்டு விட்டன. அவர் குதிகால்களை உயர்த்தும் கூரான காலணிகளை உடைக்குப் பொருத்தமாகத் தேர்வு செய்திருந்தார். ஆனால் நடையைக் காலணிகளா முடிவு செய்கின்றன? கைகளைக் குலுக்கி மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தும்போது அதன் நடுக்கத்தை யாரும் உணர்ந்து விட கூடாது. அவருக்குத் தனது பலவீனங்களை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில் என்றுமே விருப்பமிருந்ததில்லை. சிறுவயதிலிருந்தே தன்னை அவதிப்படுத்தும் தலைவலி குறித்தோ தனது  பலவீனமான உடல்நிலை குறித்தோ அவர் குடும்பத்தாரைத் தவிர்த்து வெளியாட்கள் யாரும் அறிய அனுமதித்ததில்லை. அயர்ச்சியாக இருந்தது. அது கண்களில் வழிந்து விட கூடாது. முக ஒப்பனைக்கான அழகு சாதனப் பொருட்கள் மேசையின் மீது எடுத்து வைக்கப்பட்டிருந்தன. அவர் வாசனை திரவியத்தை எடுத்துக் கைகளில் தேய்த்து விட்டுக் கொண்டார். இந்த ஒப்பனை பொருட்களால் அவரின் உள்மனதை மறைத்துக் காட்ட முடியுமா என்ன? விமானத்தில் ஏறும் வரை புன்னகை மறையாமல் இருக்க வேண்டும். காமிராவின் கண்கள் மனிதக்கண்களைப் போல கூர்மையானவை. அவற்றால் உணர்வுகளை ஒற்றி எடுத்து விட முடியும்.  எல்லாமே செயற்கையானது. வரவழைத்துக் கொள்ள வேண்டியது. அப்படியாயின் எது இயற்கை?

அவர் சன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தினர். குழந்தைகளின் கிராப் தலையைப் போன்று நேர்த்தியாக வெட்டப்பட்ட புல்வெளிகள், பூங்காக்கள், நீரூற்றுகள், நீச்சல்குளங்கள், விளையாட்டிடங்கள், தோட்டங்கள், கொத்துமலர்கள், கொடி மலர்கள், மரங்கள், மான்கள், மயில்கள், குயில்கள் என கண்ணுக்கெட்டிய தொலைவு வரை படர்ந்திருந்தவைகளிடம் இருள் மீள வருவதாகச் சொல்லி விடை பெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களால் மீள வருவதாகச் சொல்ல முடியாது. அதற்கான அவசியமும் இல்லை. இனி அவர்கள் விருந்தினர்கள் மட்டுமே. அவர்கள் வந்ததற்கான வேலை முடிந்திருந்தது. அது வித்தியாசமான பணி. அதிகாரத்தை விடுவிப்பதற்காக அதிகாரத்தைக் கையிலெடுப்பது.  அதற்கான அழைப்பு, நெ. 10, டவுனிங் தெரு இல்லத்திலிருந்து வந்தபோதே அவர்களுக்கு விஷயம் தெரிந்திருந்தது. பிரதமர் கிளமெண்ட் ரிச்சர்ட் அட்லி மேன்மை தங்கிய மன்னரின் அரசு 1948 ஜுன் மாதத்துக்கு முன்பான ஒரு தேதியில் இந்தியாவை ஆளும் அதிகாரத்தைப் பொறுப்பு மிக்க இந்தியர்களின் கைகளுக்கு மாற்றி விட வேண்டும் முடிவு செய்திருப்பதாக நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றியிருந்தார்.

“தி இண்டியன் இன்டிபெண்டன்ஸ் பில்”

இந்திய நாட்டிற்குச் சுதந்திரம் வழங்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

பேசுவதற்கு முன் மன்னரின் பிரதிநிதி தொண்டையைச் செருமிக் கொண்டார்.

“லே ராய் லே வெல்ட்” 

மன்னரின் விருப்பத்தைத் தெரிவிக்கும் ஃப்ரான்ஸ் நாட்டின் பழமையான அந்த நார்மன் வாக்கியம் உச்சரிக்கப்பட்டதையடுத்து அதற்கான பொறுப்பு அவருடைய கணவரின் தோள்களில் சுமத்தப்பட்டது.

கணவரைப் போலவே அவருக்கும் இந்தியா வருவதற்கு அத்தனை விருப்பமிருக்கவில்லை. மூன்றரை நுாற்றாண்டு கால அதிகாரத்தை முடித்து வைத்த அவதுாறு அவர்கள் மீது விழுந்து விடும். உலகில் ஐந்தில் ஒரு பங்கு மனிதர்களை தன் அதிகாரத்துக்குக் கீழ் வைத்திருக்கும் பிரிட்டிஷார், தாங்கள் ஆளவும் அடிமைப்படுத்தவும் கடவுளால் அருளப்பட்டவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதனை அவர்களால் முடிவுற வைக்க முடியாது. அதோடு அவர் கணவரிடம் ஒப்படைக்கப்பட்ட பணி நிறைவேறுவதற்கான இந்தியச்சூழலும் அத்தனை இணக்கமானதாக இல்லை. முப்பது கோடி மக்களைத் தன்னுள் கொண்டிருக்கும் ஒரு மதமும் பத்துக்கோடி மக்கள் பின்பற்றும் மற்றொரு மதமும் ஒரே தலைமையின் கீழ் வாழ முடியாதளவுக்கு ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. சிறுபான்மை மதம் தனி நாடு கோருகிறது. பெரும்பான்மையோ அது தேவையில்லை என்கிறது. அவர்களைப் பிரித்தாண்டு குளிர்காய்ந்துக் கொள்ள இனி பிரிட்டனால் முடியாது என்றளவுக்கு நிலைமை சென்று விட்டதாம். ஏற்கனவே அது உலகப் போரால் திவாலாகி விட்டிருந்தது.

“இந்நிலையில் நாம் எப்படி அங்கு…?”

“ஆனால் எட்வினா… நாம் அங்கு செல்லதான் வேண்டுமாம். நான் இதனை தவிர்ப்பதற்காகப் பிரதமரால் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளைக் கூட வைத்துப் பார்த்து விட்டேன். எதை வேண்டுமானாலும் நிறைவேற்றித் தருகிறேன். ஆனால் நீங்கள்தான் அதற்குப் பொருத்தமானவர் என்கிறார். மற்றவர்களுக்கும் அதே கருத்துதான்”

அவர் தென்கிழக்கு ஆசியப்பகுதி படைப்பிரிவின் தளபதி பதவியிலிருந்து வெற்றிகரமாகத் திரும்பியவர்.

“இது துயரம் மிக்க அதிகார மாற்றத்தை மூடி மறைப்பதற்காக விவேகம் மிக்க போர்ப்படை தளபதியைப் பயன்படுத்தும் அரசின் முயற்சி”

“இருக்கலாம்… ஒரு வகையில் அது பெருமைதானே?”

வைஸ்ராய்… ஐரோப்பிய மணிமுடியின் இந்திய வடிவம். அரச சபைகளின் பகட்டும் கிழக்கத்திய விருந்துபசாரங்களின் தன்மையையும் இணைக்கும் புள்ளி. மக்கள் தொகை மிகுந்த ஒரு நாட்டின் மீதான பேரரச அதிகாரம் முழுவதும் அந்நாட்டில் ஒரே ஆங்கிலேயரிடம் குவிந்திருப்பது. அவரது கணவர் லுாயிஸ் மவுண்ட்பேட்டன் வைஸ்ராய் என்றால் எட்வினாவான அவர் வைஸ்ரின். ‘தி ஆர்டர் ஆஃப் தி கார்டர்’, ‘தி ஆர்டர் ஆஃப் தி இந்தியன் எம்பையர்’, ‘தி கிரேண்ட் கிராஸ் ஆஃப் தி விக்டோரியன் ஆர்டர்’  இவற்றோடு ’ தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் இந்தியா’  என வைரத்தில் செதுக்கப்பட்ட வைஸ்ராய் பதவிக்கான இலச்சினை பதிக்கப்பட்ட பதக்கம் அவரை அலங்கரிக்கும். இது பெருமை வாய்ந்தது என்றாலும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்ற மிக உயர்ந்த பீடத்தில் ‘சாம்ராஜ்ஜியம்’ என்ற வார்த்தையை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் மிகப் பெரிய ஆட்சியதிகாரத்தை உதிர்த்து விடும் செயல். ஆராய்ந்தறிய முடியாத கடவுளின் கட்டளையாக இந்தியாவை ஆளும் பொறுப்பு பிரிட்டிஷாரின் தோள்களில் ஏறியிருக்கிறது.  அதன் அதிகார பெருமைகளை அழிக்கவிருக்கும் வைஸ்ராய் தம்பதிகள் என்று அவர்களைக் காலம் குறித்து வைத்துக் கொள்ளும்.

“கமான் எட்வினா… அதையும் பார்த்து விடுவோம். நம்மிடம் ஒப்படைக்கும் வேலையை முடித்து விட்டு எத்தனை சீக்கிரம் லண்டனுக்குத் திரும்ப முடியுமோ அத்தனை சீக்கிரம் திரும்பி விடலாம்” அவர் மென்மையாகப் புன்னகைத்தார். லுாயிஸ் மவுண்ட்பேட்டன் இங்கிலாந்து அரசி விக்டோரியாவின் கொள்ளுப்பேரன் என்ற உயர் தகுதி கொண்டவர் என்றாலும் தனக்கே உரித்தான தனிப்பட்ட பெருமைகளும் அவரிடமிருந்தன. ஆறடி உயரமும் அனாவசிய சதைகளுமற்று போர்ப்படை தளபதிக்கே உரிய கம்பீரமான தோற்றம் கொண்டவர். மிகுந்த புகழ் பெற்றவர். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறன் மிக்கவர். சுறுசுறுப்பானவர். அவர் மணந்துக் கொண்டதும் அழகும் செல்வச்செழிப்பும் நிறைந்த எட்வினா ஆஷ்லி என்ற பேரழகியை.

போலவே அவர் தன் மனைவியையும் அறிந்திருந்தார். எல்லாவற்றையும் விட கவர்ச்சியும் வீரமும் ஆண்மையும் தனித்துவமும் தன்னுள் நிறைந்திருப்பதைத் தானே அறிந்திருப்பவர் போலவே அவர் தன் மனைவியையும் அறிந்திருந்தார். விருந்துகள் விழாக்களை ஆர்வமாக நடத்துவதும் பங்கேற்பதும் நடன நிகழ்ச்சிகளை விரும்புவதும் எட்வினாவின் மென்மையான முகமாக இருக்கலாம். அவருக்குச் சாகச முகமொன்றும் உண்டு. அவர் பாய்மரப்படகு கொண்டு தெற்கு பசிபிக்கடலைக் கடந்தவர். சிட்னியிலிருந்து லண்டனுக்கு வந்த முதலாவது விமானத்தில் பயணித்தவர். பர்மாவின் சாலைகளில் பயணித்த முதல் ஐரோப்பிய பெண்மணி. சிறகுகள் முளைத்திருக்கும் அவருக்குக் கனிவான முகமும் இருந்தது. சமூக சேவை என்பது செல்வ சீமாட்டிகளின் பொழுதுபோக்கு என்ற நிலையைக் கடந்து மனமுவந்து சேவைகளில் ஈடுபடுபவர். தனித்துவம் மிக்கவர்.

ஆனால் லுாயிஸுக்கு தன் இனிப்பான பேச்சின்மீது நம்பிக்கை இருந்தது.

“நாம் இருவரும் அங்குதானே காதல் வயப்பட்டோம் எட்வினா…” கண்ணோடு கண் ஊடுருவினார். குறும்புத்தனத்தை முகத்தில் படர விட்டுக் கொண்டார்.

“டிக்கி…” உடன்பாடின்றி இழுத்தார். அது அவர் கணவரின் செல்லப்பெயர். 

ஆனால் லுாயிஸ் அளவுக்கடந்த தன்னம்பிக்கையும் ஆற்றலும் மிக்கவர். 1947-ஆம் வருடத்தின் அந்த மார்ச் மாத காலை வேளையில் டெல்லியிலிருக்கும் வைஸ்ராய் மாளிகையில் விக்டோரியன் ஆடம்பரமும் மொகலாய வள்ளன்மையும் கலந்த அந்த அரச நிகழ்வு குறைவின்றி தொடங்கியது. பதவியேற்பையொட்டி தங்க சிம்மாசனங்களைச் சுற்றி விரிக்கப்பட்ட ரத்தின கம்பளங்களின் மேல் விழாவுக்கேற்ற அசைவுடன் நடந்து வந்த மவுண்ட்பேட்டனும் எட்வினாவும்  முறையான பதவி பிரமாணத்துக்குப் பிறகு இந்தியாவின் கடைசி வைஸ்ராயும் வைஸ்ரினுமாயினர்.

திரைசீலையின் பின்னிருந்து எட்டிப்பார்த்துத் தனக்கு மட்டும் அனுமதி கேட்ட சூரியன், அனுமதி கிடைத்ததும் தன் ஒளியோடு ஒலியையும் அழைத்து வந்திருந்தது. அவர் சிலை போல நின்றிருந்தார். வெளியே பணியாட்கள் படபடப்பாக ஓடிக் கொண்டிருந்தனர். அது சுதந்திரத்திற்கு முன்பிருந்த பரபரப்பை விட மாறுபாடானது. அவர் கணவர் சுதந்திரத்திற்கான தேதியை அறிவித்ததிலிருந்து அந்த மாளிகை ரகசியம், ஆவணம், பிரிவினைக்கோடு என்று வேறு வடிவம் காட்டியது. லட்சக்கணக்கானேரி்ன் தலைவிதிகள் முடிவு செய்யப்பட்டுத் தட்டச்சு இயந்திரங்கள் படபடத்தன. நடப்பவை எதையும் யாராலும் தடுக்க முடியாது. பிடிவாதம், வெறுப்பு, கோபம், ஆற்றாமை, இயலாமை என கலவையான உணர்வுகளோடும் பின்னோக்கிய கணக்கிடலோடும் நகர்ந்த நாட்கள் அவை. எஞ்சியிருக்கும் நாட்கள் இன்னும் எத்தனை சுமைகளை மேலேற்ற போகிறதோ?

திரைசீலையை இழுத்து விட்டுக் கொண்டார்.  காவலர்கள் பணி மாற்றிக் கொள்வதும் ஜிப்புகள் உறுமலோடு நிறுத்தப்படுவதும் குதிரைகளின் கனைப்பொலியும், அந்த மிகப்பெரிய மாளிகையின் மிக உயர்ந்த விருந்தினர்களை உபசரிக்க கீழ்த்தளத்திலிருக்கும் பணியாளர்கள் மிதிவண்டிகளில் பறப்பதும் நேரம் நெருங்குவதை உணர்த்தின. இழந்தவர்கள் போக இருப்பவர்கள் ஓடும் பயணம். இது அவருக்குப் புதிதான ஒன்றல்ல. சமீபத்தில் முடிந்த உலகப்போரில் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையைத் தொலைத்திருந்த ஐரோப்பியரில் அவரும் ஒருவர். ஆனால் அதிருஷ்டவசமாக அவர் இந்தியாவில் அதனை மீட்டுக் கொண்டிருந்தார். ஆனால்… ஆனால்… அவர் பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

மாளிகை கூட தன்னை மீட்டுருவாக்கம் செய்துக் கொண்டிருந்தது. பேரரசி, அரசர், முன்னாள் வைஸ்ராய்கள் என முக்கியமானவர்களின் தேக்காலான சட்டத்துக்குள் அடைப்பட்டிருந்த புகைப்படங்கள், ஓவியங்கள் அனைத்தும் மூட்டை கட்டப்பட்டு அவ்விடங்கள் இந்தியாவின் முக்கிய ஆளுமைகளின் புகைப்படங்களால் நிரப்பப்பட்டன. அதுவும் ஜவஹரின் புகைப்படம் மற்றெல்லாவற்றையும் விட முக்கியமானது. அவர் இந்தியாவின் முதல் பிரதமரல்லவா?

எப்பேர்ப்பட்ட பணி முடிந்திருக்கிறது என்பதை இப்போது நினைத்தால் மலைப்பாக இருக்கிறது என்று டிக்கி அவரிடம் கூறிய போது எட்வினாவும் மலைத்துதான் போயிருந்தார். அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் ஆதரவுமின்றி இதனை நிறைவேற்றியிருக்க வாய்ப்பேயில்லை.  அதை தேடிக் கொள்வதில் டிக்கி முனைப்பாக இருந்தார். எட்வினாவும் சளைத்தவரில்லை. பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்து பெருஞ்சொத்துகளோடு பேட்டன் குடும்பத்தில் இணைந்திருந்தாலும் அவரால் வெறும் அலங்கார பதுமையாக மட்டும் வலம் வர முடியாது. இருவரும் தங்கள் நிலையிலிருந்து இறங்கி வர தயாராகயிருந்தனர். எட்வினா போர்களையும் இழப்புகளையும் அதன் கோரத்தையும் நேரிடையாகப் பார்த்திருக்கிறார். தன்னிடம் இருப்பவற்றாலோ தான் கொண்டு வந்தவற்றாலோ எதையும் வாங்கி விட முடியாது. சில சமயங்களில் தன் தந்தையாரின் நினைவாக அணிந்திக்கும் தங்கச்சங்கிலியின் பதக்கத்தில் செயிண்ட் கிறிஸ்டோஃபர் குழந்தையொன்றை நதியின் மேல் துாக்கி செல்வதைபோல யாராவது தன்னையும் துாக்கி எங்கேயாவது அமைதியான இடத்தில் வைத்து விட மாட்டார்களா என்று கூட தோன்றியிருக்கிறது.

“நீங்கள் உங்களை எப்படி கருதிக் கொண்டாலும் நீங்கள் வைஸ்ரின்தானே? ஏற்கனவே வைஸ்ராய் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக இருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். இப்போது காங்கிரஸ் தலைவருடன் நீங்கள் கொண்டிருக்கும் நெருக்கம் அதை உறுதிப்படுத்துவது போலாகி விடாதா?” நேரிடையாக எழாத கேள்வி என்றாலும் அவரால் பதில் சொல்ல முடியும்.

“ஒரு குழந்தையின் தலையை எப்படி ஒருவனால் வெட்ட முடிகிறது?”

“இது அரசியல். உங்களுக்குப் புரியாது. நீங்கள் எங்கிருந்தோ வந்திருக்கிறீர்கள்”

“ஆனால் முன்னுாறு வருடங்கள் உங்களோடு இருந்திருக்கிறோம்”

யாருக்காகவும் எதையும் மாற்றிக் கொள்ளும் அவசியம் எட்வினாவுக்கு இல்லை.  ஆனால்… அதற்காக முன்னாள் பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ரின் இந்தியாவிலா தங்க முடியும்? அவர் முன்பு பன்னிஃபில்ப்ஸுடன் ஒரு நெருக்கத்தை உணர்ந்தபோதிருந்ததை விட இது அதிகமானது. அதனால்தான் பிரிவு அதிக வலியை உண்டு பண்ணுகிறது. ஆனால் எப்படி தவிர்ப்பது? அல்லது எப்படி தவிர்க்க முடியும்?

ஜவஹரால் முடியுமா? ஒரு கணம் அவருக்குச் சிரிப்பு வந்தது. முதல் இந்திய பிரதமர் இந்தியாவை விட்டு வெளியேறி விட முடியுமா என்ன? அவரை எப்போது முதலில் சந்தித்தோம்… சிங்கப்பூரிலா… ஆம். அங்கிருக்கும் அரசாங்க விடுதியில் என்று நினைக்கிறேன். அப்போது நான் செயிண்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் உணவகக் கூடத்தில் கூட்ட நெரிசலில் தவித்துப் போய் விட்டேன்… கிட்டத்தட்ட டிக்கியும் அவரும்தான் கைகளைக் கோர்த்து அணைக்கட்டிக் கொண்டு என்னை மீட்டு வந்தார்கள்.

அந்த ஜவஹர் இப்போது இந்தியாவின் பிரதமர். பதவி அவரால் பெருமைப்பட்டுக் கொள்ளும். அவர் தொன்மையும் பெருமையும் கொண்ட செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் அறிவியல் கற்றவர். இறை நம்பிக்கை நிறைந்த நாட்டில் பகுத்தறிவாளராக இருப்பவர்.  அறிவானவர், அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கும் வயதிலும் அழகு குறையாதவர். தனது பேச்சாற்றலால் கூட்டத்தாரை எழுந்து கொள்ள விடாதவர். சிந்தனைகளை எழுத்தாக்குபவர். அவர் சார்ந்திருந்த மதம் அவரை  உயர்குடி என்று வகுத்திருந்தாலும் மதம் என்ற வார்த்தையை அவர் விரும்புவதில்லை. இன்று மதத்தால் பிளவுப்பட்டு விட்ட நாட்டில் அவரை விட தலைமையேற்கும் தகுதி வேறு எவருக்கிருக்கும்?

ஆனால் அவராலும் எதுவும் செய்ய முடியாத நிலை. அவரும் அன்று உணர்ச்சி வசப்பட்டிருந்தார். கண்கள் கலங்கியிருந்தன. கையாலாக உணர்வில் கோபம் கொண்டார். இந்தியாவில் மழையை விட சாதாரணமாக இரத்தம் பொழிகிறது. ஒரு பகுதியை அடக்கினால் மறுபக்கத்தில் பீறிடுகிறது. கழிவுநீர் கால்வாய்கள், பாசன வாய்க்கால்கள்  எனப் பள்ளம் கண்ட பக்கமெல்லாம் இரத்த வெள்ளம். தெருக்களில் குவிந்திருக்கும் பிணங்களுக்குக் கண்களில்லை, காதுகளில்லை, கைகளில்லை, கால்களில்லை, பெண்ணாக இருந்தவர்களின் பிணங்களுக்கு உடைகளில்லை, மார்பகங்களில்லை. அதிக சித்ரவதைக்குள்ளாகாமல் துப்பாக்கி குண்டுகளில் பலியாகும் அதிர்ஷடம் சில பிணங்களுக்கு மட்டுமே வாய்த்திருந்தது.

“இரண்டாம் உலகப் போரில் நாங்கள் கண்டதை விட இது மிகவும் மோசமானது ஜவஹர்”

“எட்வினா…”

அப்போது அவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்தனர். அவர் நீண்ட காக்கி நிற சட்டையும் வெள்ளை நிறத்தில் கால்சட்டையும் அணிந்திருந்தார். மேலங்கி இல்லை. சட்டையில் சொருகிக் கொள்ளும் ரோஜா இல்லை. கண்ணாடியை கூட கழற்றி அருகே வைத்திருந்தார். யாரோ ஒருவரைப் போல… எங்கோ பார்த்தவரைப் போல… சாதாரணரைப் போல… எட்வினா அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். பதவியும் அதிகாரமும் எத்தனை சுமையானவை? எட்வினாவும் மிக எளிமையாக இருந்தார். அவர் தலையில் கீரிடம் ஏதுமில்லை.  அமர்வதற்கு வாகாகத் தன் நீள கவுனை மடித்து விட்டிருந்தார். ஜவஹர் நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டார். அந்த நெருப்பின் நுனியிலிருந்து எட்வினா தனக்கானதைக் குனிந்து பற்ற வைத்துக் கொண்டபோது இருவரது தலைகளும் வினாடிக்கும் குறைவான நேரத்தில் தொட்டுக் கொண்டன.

“இப்போது நடப்பவைகள் கஹுட்டாவின் பயங்கரங்களையே சாதாரணமாக்கி விடுகிறது”

பஞ்சாபைச் சேர்ந்த கஹுட்டா கிராமத்தில் வன்முறையின் வெறியாட்ட கோரத்தை எட்வினா நேரிடையாகக் கண்டிருக்கிறார். இந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லிம்களும் கலந்து வாழ்ந்த அந்தக் கிராமத்தில் இரவோடிரவாக ஒரு தரப்பு மற்ற இரண்டு தரப்பினர் மீது எண்ணையை ஊற்றி தீ வைத்தது. வீடுகள் பற்றியெறிந்தன. கால்நடைகள் அலறின. வெப்பம் தாங்காமல் ஓடி வந்தவர்களை வன்முறை கும்பல் துாக்கி தீக்குள் எரிந்தது. பெண்கள் படுக்கையறைக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். ஓரிரவுக்குள் முடிந்த அந்த அவலத்தின் விடியலில் கிராமமே வாழ்ந்த சுவடின்றி அழிந்துப் போயிருந்தது.

“கஹுட்டாவுக்கு செல்லும் வரை இந்தியாவில் நடக்கும் பயங்கரங்களின் உச்சத்தை நான் அறிந்திருக்கவில்லை…” அவர் முணுமுணுத்துக் கொண்டார். அந்த ஓசையை ஜவஹரால் கேட்க முடிந்தது. அவர் வைசிரின் அல்ல. எட்வினா… எட்வினா என்ற பெண். துயரைக் கண்டு துன்பமடையும் பெண். எல்லா விஷயங்களிலும் சமநிலை குலைந்து விடாமல் அவர்களால் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ள முடியும்.

நேரம் கழிந்துக் கொண்டிருப்பதை இருவருமே விரும்பவில்லை.

இப்போதும் அவரின் அனுமதியின்றி நேரம் ஓடிக் கொண்டேயிருக்கிறது. எட்வினாவுக்கு, தான் உட்பட எதுவுமே தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பது போல தோன்றியது. அவர் கேட்க விரும்பாத வார்த்தைகள் கடந்த சில நாட்களாக அவர் காதுகளில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. “பிரிவு… பிரிவினை… பிரிவுபசாரம்…” மனதின் பாரத்தைக் கூட்டி விடும் வார்த்தைகள் இவை. விருந்துகளோ அவற்றையே சொல்லிக் கொண்டிருந்தன. உள்சுற்று பணியாளர்களுடன் பிரிவுபசார மதிய விருந்து, வெளியாட்களுடன் இரவு விருந்து, முகலாய தோட்டத்தில் பிரம்மாண்ட விருந்து, பிரதமமந்திரி உட்பட முக்கிய மந்திரிகளுடனான விருந்து… ஆனால் எல்லா விருந்துகளும் இப்படிச் சோகத்தை வரவழைத்து விடுவதில்லை. இந்தியாவுக்கு வந்த புதிதில் நடந்தவொரு விருந்து வைபவத்தில் அவளும் ஜவஹரும் கலந்து கொண்டனர். அவர் அறுபதை நெருங்குபவர் என்றெல்லாம் கூற முடியாதளவுக்குத் துறுதுறுப்பானவர். அவருடைய கூர் மூக்கில் சிரிப்பு தொற்றிக் கொண்டிருந்தது. காது வரை ஓடிய கண்களில் பளபளப்பிருந்தது. நேர்த்தியான உடுப்பு. கம்பீரமான அழகு. அவர்கள் ஒருவருக்கொருவர் அருகருகே அமர்ந்தபோது தங்கள் சூழலை மறந்தவர்கள் போல நாட்டியத்திலோ எதிலோ லயித்திருந்தனர். அவர் மெத்திருக்கையிலும் ஜவஹர் அதில் சாய்ந்து கொண்டு கீழேயுமாக அமர்ந்திருந்தது கூட அவர்களுக்கு உரைக்கவில்லை. மின்விசிறி காற்று அவருடைய உடையால் ஜவஹரின் கையை லேசாக வருடி படபடத்தது. அவர் உற்சாகமாக ஏதோ சொல்ல ஜவஹர் வாய் விட்டு சிரித்தார்.

இனிமேல் அவர் வாழ்க்கையில் சிரிப்பதற்கு இடமிருக்க போவதில்லை. ஏன்… எங்களை அனுப்பி விட்ட பிறகு ஜவஹருக்கு ஓய்வே இருக்க போவதில்லை. இந்தியாவின் பிரதமருக்குக் கடமைகள் வரிசைக்கட்டி நிற்கும். புதிதாகப் பிறந்த தேசத்தை நிர்மாணிப்பது எத்தனை சிரமமானது? பாதையற்ற பாதையில் பயணிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு. பிரிந்து கிடக்கும் பிரதேசங்களை ஒன்று கூட்டி ஒருமித்தவையாக்க வேண்டும். வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். அரசியல் செய்ய வேண்டும். அதிகாரம் மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதத்தால் பிரிந்தது போக எஞ்சியுள்ளவர்களை மனதால் ஒருங்கிணைக்க வேண்டும்.

இது டிக்கிக்கு கொடுக்கப்பட்டதை விட கூடுதலான பணி. டிக்கி வைஸ்ராயாக பதவியேற்ற அன்று அவரை மரியாதை நிமித்தம் சந்திப்பதற்காக வேவல் வந்திருந்தார். மவுண்ட்பேட்டனிடம் அளிக்கப்பட்ட பதவி அவரிடமிருந்த பறிக்கப்பட்டதுதான்.

“உங்களிடம் சாத்தியமற்ற ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண நான் அறிந்த வழிகளிலெல்லாம் முயன்றேன். ஒயிட்ஹாலிலிருந்து எந்த உதவியும் நமக்குக் கிடைப்பதில்லை என்பதோடு எந்த வகையிலும் தப்பிக்க முடியாத முட்டுச் சந்தில் நாம் நிற்கிறோம்” இந்தியாவின் நிலை குறித்துப் புது வைஸ்ராயிடம் முன்னாள் வைஸ்ராய் பகிர்ந்து கொண்டபோது வேவலின் பருத்த சரீரமும் மூடியிருந்த அவரது ஒற்றைக் கண்ணும் அவரைப் பரிதாபமாகக் காட்டியது.

“ஓ… ஒளிவுமறைவின்றி பேசுகிறீர்கள். இந்தப் பதவிக்கு நான் தகுதியானவன் இல்லை என்று நினைக்கிறீர்களா?”  டிக்கி சிரித்துக் கொண்டே கேட்டார். அவருக்குத் தெரியும், இதற்குத் தன்னை விட தகுதியானவர் வேறு எவருமில்லையென்பது.

“இல்லை… இல்லை… மிஸ்டர். பேட்டன். உங்களை நான் மிகவும். நேசிக்கிறேன்… என்றார் அவர், தொற்றிக் கொண்ட  பதற்றத்தோடு.”

“நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்…” எட்வினா தனக்குள்ளாகச் சொல்லிக் கொண்டபோது வெளிப்புற அழைப்பான் ஒலித்தது.

“யெஸ்…”

பணிப்பெண் ஸான்விச்சுகளுடன் உள்ளே நுழைந்தாள். கெட்டிலில் சுடுநீர் இருந்தது. அறையில் அவளுக்கு இன்னும் வேலைகளிருந்தன. வீட்டை காலி செய்வது போல நாட்டைக் காலி செய்வது சுலபமில்லை. இன்றிலிருந்து எல்லாம் முடியப் போகிறது. அவளது எஜமானி நேற்றிரவு கூட்டத்திற்கு அணிந்து கொண்டிருந்த வெண்பட்டு உடையைச்  சலவைச் செய்து அனுப்ப வேண்டும். உள்ளாடைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்களை அதற்கான பெட்டிகளுக்கு மாற்ற வேண்டும். நல்லவேளையாக வைரங்களும் மரகதங்களும் பதிக்கப்பட்ட நெக்லஸ் மற்றும் விலையுயர்ந்த அணிகள் அடங்கிய பெட்டிகளைப் பத்திரப்படுத்துவது அவரது அந்தரங்க உதவியாளரின் பணியாக இருந்தது.

அன்று பிரிட்டனின் நார்த்தோல்ட் விமானநிலையத்திலிருந்து அவர்கள் இந்தியாவுக்குப் புறப்பட்டபோது அறுபத்தாறு பெட்டிகள் உடன் வந்தன. அவற்றுள் சிலவற்றில் வரவிருக்கும் மாதங்களில் வைஸ்ராயும் அவரது ஊழியர்களும் செய்ய வேண்டியதற்கான வழிகாட்டுதல்களைக் கொண்ட ஆவணங்கள் இருந்தன. அந்த ஆவணங்களுள் காமன்வெல்த் அமைப்புக்கு உட்பட்டு உரிமை மாற்றம் செய்து ஒற்றை சுதந்திர நாடாக இந்தியாவை உருவாக்க வைஸ்ராய் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் இவையனைத்தும் 1948 ஜுன் மாதத்துக்குள் நடந்தாக வேண்டுமென்றும் பிரதமர் கிளமெண்ட் அட்லி கையெழுத்திட்ட இரண்டு பக்கங்கள் மிக முக்கியமானவை.

அவர் குறிப்பிட்ட அதே 1948ன் ஜுன் மாதம்தான் இது. ஆனால் எதுவும் அதில் குறிப்பிட்டவைப் போல நடந்திருக்கவில்லை. ஆட்சி மாற்றத்தின் இறுதிக்காட்சிகள் இரத்தத்தால் எழுதப்பட்டு விட்டன. எட்வினா நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டார். இங்கு வந்த ஒன்றரை வருட காலத்திற்குள் தான் கண்டு விட்ட காட்சிகளைக் காலம் தான் அழித்து எழுத வேண்டும் என்றெண்ணிக் கொண்டார். அதிகாரமாற்றம் என்ற பெருநிகழ்வின் மகிழ்ச்சியைச் சிவப்பு ரோஜாக்களை அரைத்து விட்டாற் போல  வீதிகளில் ஓடிய செந்நிற வெள்ளம் மூழ்கடித்து விட்டது. மதங்களின் சமர்க்களத்தில் தாடிகள் வீழ்த்தப்பட்டன. முண்டாசுகள் வெட்டப்பட்டன. உடல்கள்… உடல்கள்… எங்கெங்கும் உடல்கள். சில்லறையாகச் சிதறிக் கிடந்த கைக்கால்கள், மூளைகள், குடல்கள், எரிந்தது போக புகைந்து கிடந்த உருவங்கள்.  போக்கிடம் தெரியவில்லை. போகவும் வழியில்லை. எழுந்து நின்ற உடல்கள் கதறின. சிரிப்பற்ற குழந்தைகள், அழுதுக் கொண்டிருக்கும் குழந்தைகள், பசியோடிருக்கும் குழந்தைகள், புதிதாக அனாதையாகி விட்ட குழந்தைகள், தொலைந்து போன குழந்தைகள், பயந்துப் போன குழந்தைகள்… அவருக்குப் பித்துப் பிடிப்பது போலிருந்தது. எல்லாம் முடிந்து விட்டது. இறுதியாக மூன்று குண்டுகள் எல்லாவற்றையும் முடித்து வைத்து விட்டது. அவர் கோழிக்குஞ்சாகச் சுருண்டு விட்டார். ஆனால் அது உடலால் மட்டுமே. எங்களை வெளியேற்றி விடுமளவுக்கு அவர் வலிமையானவர். ஆனால் ஏன் எங்களுக்கு அவர் மீது கோபமில்லை?

ஜவஹர் அவரைத் தன் தந்தையைப் போன்றவர் என்பார். ஆனால் கடைசியில் கொள்கையளவில் அவர்கள் வேறுப்பட்டு நின்று விட்டனர். அன்று வைஸ்ராயாக இருந்த டிக்கியைச் சந்திக்க வந்த அந்த முதியவர் தன் தோளைப் பற்றிக் கொண்டு நடந்ததை எட்வினா பெருமையாக எண்ணிக் கொண்டார். இந்தியா தனக்குப் பிடித்துப் போனதற்கு இவையெல்லாமும் காரணமா? அல்லது பிரத்யேக காரணம் மட்டும்தானா?

அவர் ஜவஹர்லால் நேரு, எண் 17, யார்க் சாலை, டில்லி, இந்தியா என்ற முகவரியை வாய் விட்டுச் சொல்லிக் கொண்டார். அவருடைய முகவரி ஜவஹருக்கும் மனனம் ஆகியிருக்கும். இனி அவைதான் அவர்களுக்கு உதவப் போகிறது. அவர்கள் அனுப்பிக் கொள்ளும் கடிதங்கள்தான் அவர்களை இயக்கப் போகிறது. அது உள்ளங்கள் என்பதை ஜவஹரும் உணர்ந்திருப்பார். அதையேதான் அன்று விருந்து நிகழ்விலும் பேசினார். எட்வினாவுக்கு அவர் உதடுகள் உச்சரித்த ஒவ்வொரு வார்த்தைகளும் நினைவிலிருந்தது. ஒருவேளை அதிலிருந்துதான் அவர் எஞ்சியிருக்கும் தன் வாழ்க்கையை எழுப்பிக் கொள்வாராக இருக்கும்.

“எட்வினா… நீங்கள் எங்கெல்லாம் சென்றீர்களோ அங்கெல்லாம் அமைதியைக் கொண்டு சென்றீர்கள். நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அழைத்துச் சென்றீர்கள். ஆயிரங்கணக்கானோர் உங்களை அகதிகள் முகாம்களிலும் மருத்துவமனைகளிலும் நேரடியாகச் சந்தித்திருக்கின்றனர்.  இந்தியர்கள் உங்களை நேசிக்கிறார்கள். அவர்களில் ஒருவராக உங்களை நினைக்கிறார்கள். நீங்கள் கிளம்பும் செய்தி அவர்களை வருத்தத்தில் ஆழ்த்தி விடும்”

”ஆம் ஜவஹர்… நீங்களும் இந்தியரில் ஒருவர்தானே…” அவர் கண்களை இறுக மூடி திறந்தபோது விழிகளுக்குள்ளிருந்த நீர் வெளியே சிதறியது. ஜவஹர் தந்தையைப் போன்ற பரிவுடன் பமீலாவின் தோளை அணைத்துக் கொண்டு நடக்கிறார். அவர்களின் விமானம் இப்போது கிளம்பி விட போகிறது. இனி எல்லாமும் முடிந்து விடும்.

இல்லை… எதுவும் முடிந்து விடாது. முடியவும் கூடாது. செயிண்ட் கிறிஸ்டோபர் நதியின் மீது துாக்கி செல்லப்படும் குழந்தை அவர்தான். ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை. தங்கச்சங்கிலியுடன் அந்தக் குழந்தை ஜவஹரின் கைக்கு மாறியபோது அவரால் அதில் எட்வினாவின் வெதுவெதுப்பான உடல் சூட்டை உணர முடிந்தது. உடலெங்கும் ஏந்திக் கொண்ட எட்வினாவின் கண்களை ஜவஹர் இமைகளால் பத்திரப்படுத்திக் கொண்டபோது விமானம் மேலெழும்பியிருந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...