(வல்லினம் நடத்திய அக்கினி அறிவியல் சிறுகதை போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற சிறுகதை)
பத்து நிமிடங்களைத் தாண்டியும் ஜானுடனான உரையாடல் நீண்டு கொண்டிருந்தது. கிஷன் பேசுவான் என்று ஜான் சொன்னப் பின்பும் மெளனமே நீடித்தது. ஜான் என்பது அவரின் உண்மையான பெயர்தானா என்பது கூட தெரியாது. பவுல் ,மோரீசன், என்று ஒவ்வொரு முறையும் ஒரு பெயரில் தொடர்புக் கொண்டு பேசுவார். அதில் ஜான் என்ற பெயர் அவர் குரலுக்குப் பொருத்தமாகவே இருப்பதாகத் தோன்றியது. அந்தக் குரலுக்கேற்ற பெயராக ஜானே இருந்தது. இந்தச் செயலியின் உருவாக்கத்தின் போது ஜான் என அறியப்படும் (இயற்பெயர் மறைக்கப்பட்டது) அமெரிக்கரின் உடல்மொழியும் ஒலியும் தான் பயன்படுத்தப்பட்டது என்பதால் அந்தப் பெயர் பொருத்தமாகவே இருப்பதாகத் தோன்றியது.
இந்த மாதிரியான வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பவர்களில் பலர் பணிவு அல்லது கோபமும் பதற்றமும் நிறைந்த குரலில் பேசத் தொடங்குவார்கள். தங்கள் நிறுவியுள்ள செயலியில் ஏற்பட்டிருக்கும் சிக்கலுடன் சரிசெய்யும் வழிமுறைகளையும் தாங்களாகவே குறிப்பிடுவார்கள். அது மறுக்கப்படும் போது உருவாகும் எரிச்சலுடனே பேசுவார்கள். ஜானின் குரலில் பழகிய ஒருவரின் குரலில் வெளிப்படும்பரிட்சயம்இருந்தது.
மடிக்கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கலைப் பதற்றமான குரலில் சொல்லத்தொடங்கும் போதே அவரின் குரலுக்கும் ஜான் என்ற பெயருக்கும் பொருத்தமாக இருந்தது. தன்னுடைய செயலி தானியங்கியாக இயங்குகிறது என்று சொன்னார். மடிக்கணினியில் பதிவாகியிருக்கும் தகவல்களைச் சொந்தமாக அழித்து விடுகிறதென்றார். இது மாதிரியான புகார்கள் புதியவை இல்லை. முன்னரே, தவறான கையசைவுகள், உடல் மொழி வெளிப்பாடுகள் ஆகியவற்றைத் தகவல்களை அழிப்பதற்கான சைகைகளாகச் செயலி அடையாளம் கண்டு அழித்திருக்கிறது. ஆனால், அதை மீட்டெடுத்துத் தருவதொன்றும் சிக்கலானதில்லை. அதற்கு முன்பதாகப் பின்பற்றப்படும் பாதுகாப்பு வழிமுறைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் செய்வதுதான் மிகுந்த சிரமமான செயல்களாக இருக்கின்றன.
அறிவுத்திறன் பாதிப்பு உள்ளவர்களின் வெவ்வேறு படிநிலையான அறிவு வளர்ச்சிக்கேற்ப அவர்கள் வெளிப்படுத்தும் ஒலிகளையும் உடல்மொழிகளையும் புரிந்துகொண்டு இயங்கும் ‘எவெரிதிங் மேட்டர்ஸ் மீ’ செயலியின் கண்டுபிடிப்பு என்பது செயற்கை நுண்ணறிவின் இடத்தை மறுக்க முடியாத இடத்துக்குக் கொண்டு வந்திருந்தது. அதுவும் அத்திறன் குறைந்தவர்களின் பொதுவான உடல்மொழிகளிலும் ஒலி வெளிப்பாட்டிலும் இருக்கும் பொதுத் தன்மையால் இதைச் சாத்தியப்படுத்த முடிந்தது. அவ்வாறான சிக்கல் கொண்டவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள முடிந்திருக்கிறது. இந்தச் செயலியின் உருவாக்கப் பின்னணியாக ஜான் எனும் அறிவுத்திறன் குறைந்த அமெரிக்கரின் கதையே சொல்லப்பட்டது. ஜானின் பதின்ம வயதிலே அவரின் தாய் தந்தையர் இருவரும் விபத்தொன்றில் இறந்துவிட்டனர். முற்றிலும் நொறுங்கிப் போயிருந்த காரில் ஹாரன் சத்தத்தை விடாமல் எழுப்பி ஜான் உயிர்பிழைத்தார். அதன் பிறகு, காப்பகம் ஒன்றில் வளர்ந்த ஜான், அங்கிருக்கும் மற்ற திறன் குறைந்தவர்களுடன் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். அவரைப் போன்றே அங்கிருந்த மற்றவர்களுடன் விழியசைவுகள், குழறும் ஒலிகள் ஆகியவற்றால் தொடர்ந்து உரையாட முயன்றிருக்கிறார். அவரின் ஒலிகள், விழியசைவுகள், உடல் அசைவுகள் ஆகியவற்றைக் கொண்டுத்தான் இச்செயலி அமைக்கப்பட்டது. அதற்குப் பிறகு உலகம் முழுவதும் இதே சிக்கலுடன் இருக்கும் பல நூறு குழந்தைகள், வளர்ந்தவர்கள், முதியவர்கள் என அனைவரின் உடல்மொழி, ஒலிகள் ஆகியவற்றைச் சேகரித்து அவற்றை முற்றிலுமாக நிரல்மொழியாக்கம் செய்து இச்செயலி வடிவமைக்கப்பட்டது.மனிதர்களையே செயற்கை நுண்ணறிவு கட்டுப்படுத்தக் கூடும் என்ற அச்சத்தினால் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளோடுதான் செயலி இயங்கியது. பாதுகாப்புக் கருதி பயனர்களின் விவரங்கள் அனைத்தும் முன்னரே மறைக்கப்பட்டிருந்தன. அவர்களின் தகவல்கள் அனைத்தும் எண்ணிமையாக்கம் செய்யப்பட்டிருந்தன.
ஜான் ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் செயலியை நிறுவியிருக்கிறார். சரியாக இரண்டாவது வாரத்திலிருந்து புகார்கள் அளிக்கத் தொடங்கியிருக்கிறார். அவர் அளித்த எல்லா புகார்களும் ஆராய்ந்து பார்த்துச் செயலியில் எந்தக் கோளாரும் இல்லை என உறுதி செய்யப்பட்ட அறிக்கைகளும் முறையாக அவருக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்தச் செயலி அறிவுத்திறன் சிக்கல்கொண்டவர்கள் வெளிப்படுத்தும் பொருளில்லா ஒலிகளைக்கூட உள்வாங்கிகொண்டு சரியான உணர்வு தேர்வுகளுக்குக் கொண்டுசெல்லும். ஜானின் மகன் கிஷனுக்கான பயன்பாட்டுக்குத்தான் செயலி நிறுவப்பட்டிருக்கிறது.
செயலியின் கோளாறை ஒன்றன் பின் ஒன்றாகக் கேட்டறிந்துதான் அதற்கேற்ற சரி செய்யும் வழி முறைகளைச்சொல்ல வேண்டும் என்பது நிறுவனத்தின் முதல் பாடம். பாதுகாப்புக் கையேட்டின் படி ஒவ்வொரு கேள்வியாகக் கேட்கத்தொடங்கினேன். ஐந்து கேள்விகளுக்கு ஆம் என்ற பதில் கிடைத்தவுடன் தான் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது அல்லது தானியங்கியாக இயங்குகிறது என்பதை உறுதி செய்ய முடியும். மூன்றாவது கேள்விக்குப் பின் எந்தப் பதிலுமின்றி நீண்ட மெளனத்துடன் இருந்தார். அதன்பின், “இந்தச் செயலியில் நிறுவப்பட்டிருந்த தகவல்கள் தானாகவே அழிந்திருக்கின்றன… உங்கள் நிறுவனத்தின் மீது என்னால் வழக்குத்தொடரமுடியும்…” என்றார். அதற்கு, நான் ’மன்னிக்கவும்’ என்று சொல்லத்தொடங்கியப்பின் வாடிக்கையாளர் நிறுவனங்கள் செயற்படவேண்டிய முறையை ஒட்டி இணையத்திலிருந்த குறிப்புகளை வரிசையாக வாசித்தார். நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “உனக்கு நான் சொல்வது புரிகிறதா… மேலதிகாரியைக்கூப்பிடு” என்றார்.
நான் “உங்களுக்கு ஏதேனும் புகார்….” எனச் சொன்னதையும் பொருட்படுத்தாமல் இணைப்பைத் துண்டித்து விட்டார். இணையத்தின் வாயிலான அழைப்பு என்பதால் ஐந்து நொடிகள் காத்திருக்க வேண்டும். ஐந்து நொடிகளுக்குப் பின்தான் அழைப்பு முழுமையாகத் துண்டிக்கப்படும். 5 நொடிகளுக்குப் பின் வாயைக் குவித்துச் சொல்லவரும் போது எச்சிலுடன் வெப்பக்காற்றுத்தான் வந்தது.
முன்பொருமுறை இரண்டு நொடிகளிலே f*** என நான்கு முறை உரக்கக் கத்திவிட்டேன். அதை டீம் லீடர் கீதா அழைப்பில் அமைதியாக உள்நுழைந்து கேட்டுவிட்டாள். அதற்காக இரண்டு முறை கவுன்சிலிங் செல்ல வேண்டியதாகிவிட்டது. அதிலிருந்தே அவளை நேருக்கு நேராகப் பார்ப்பதில்லை. இத்தனைக்கும், வேலைக்கு வந்த முதல் இரண்டு மாதங்கள் கீதாவுடன்தான் மதிய உணவுக்குச் சென்று வந்தேன். அளந்தெடுத்த சொற்களில் சொன்னாலும், சுற்றிலும் நடப்பதைக் குறித்துத் தனியான கருத்துகள் கொண்டிருந்தாள். மின் சிகரெட் புகையை இழுத்து விட்டுக் கொண்டே பேசும் அழகு நன்றாகவே இருக்கும். இன்னொரு குழுவில் இரண்டு வாரங்கள் உதவிக்குச் சென்று திரும்பியதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பேச்சு குறைந்து போனது. அலுவலகத்தின் பாதுகாவலர் பத்மா அண்டிதான் ‘ “கல்யாணத்துக்கு ரெண்டு மாசம் இருக்குறப்ப பையன் பத்தி என்னமோ சொல்லி வேணானுருச்சு… கல்யாணம் வேணான்னு சொல்லியும் கூட ஒன்னும் நடக்காத மாரிதா அலையுது….சிடு முஞ்சு…”எனச் சொன்னார்.
இந்த நிறுவனத்தின், நிரலாக்கப் பொறியிலாளர் குழுவில் ஈராண்டுகள் பணியாற்றிய அனுபவம் கீதாவுக்கு இருந்தது. தொடர்ந்து மூளையின் நியுரோன்கள் செயற்படும் விதத்தையொட்டிய ஆராய்ச்சிகளும் நரம்புகளின் இயக்கத்தையொட்டியும் வெளிவரும் ஆய்வுகளை ஒட்டிச் செயலியின் வடிவமைப்பு மாற்றம் கண்டு கொண்டே இருக்கும். அதற்கேற்ப பயனர்களின் நடத்தைகளும் கண்காணிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் புதிய தகவல்களை உள்ளீடு செய்யும் கட்டுமானராக கீதா பணியாற்றினாள். உலகின் பல அறிவியலாளர்களும் மூளை நரம்பியல் நிபுணர்களும் கீதா போன்ற பலகட்டுமானர்களும் இணைந்து எழுப்பிய செயற்கையான கொண்ட பலநூறு செயற்பாடுகள், நினைவுகள் சேர்ந்த மூளைத்தொகுதியை நிறுவனம் நிர்வகித்து வருகிறது. ‘’முகம்கூட தெரியாத எத்தனையோ பேரோட மூளை நரம்புகளிலிருந்து வெளிப்படுற அதிர்வுகளை டிரான்ஸ்மீட்டர் வாயிலாக வனிச்சுப்பாத்து அதுக்கான பொருள முடிவெடுப்போம்… மனுசங்களோட எல்லா நடவடிக்கையும் இப்டி பொருள்படுத்திப் பாக்கமுடியும்… அத இந்த ஏப் இன்னும் சீக்கிரமாக்குது… ஆனா, அப்படி ஒரு முடிவெடுக்குற எடத்துக்கு வர்ரப்ப எல்லா தெரிஞ்சுக் கமுடியும்ன்ற எண்ணம் இருக்கே… அது நம்ம வேல செய்யாம நிறுத்திடும்.” என்றிருக்கிறாள். “ஒருவரின் செயற்பாட்டைத் தீர்மானிக்கும் துறை என்பதால் கடுமையான பணியழுத்தம் இருந்திருக்கிறது. “நம்ப செய்யுறதுதான் எத்தனையோ பேர் வாழ்க்கையில ஒரு பகுதியா இருக்கப் போகுதுன்னு நெனக்கிறப்பவே ரொம்பவும் பயமா இருக்கும்…அவுங்க அசைவுகளுக்கு நம்ப அர்த்தம் கொடுக்குற மாரியான வேல… ஆனா, அதுவே நம்ம எப்பவும் எச்சரிக்கையா இருக்குற மாரி செஞ்சிரும்… ஒவ்வொன்னுக்கும் பொறுப்பெடுத்துக்கணும்… என்னோட இயல்புக்கு ஏத்த மாதிரியான வேலத்தான்.. மத்தவங்கள கவனிச்சுட்டே இருக்குறதுக்கும் பிரேக்கிங் போயின் இருக்குல… அதான், இங்க வந்துட்டேன்” எனச் சொல்லியிருந்தாள்.
ஐம்பது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சேவைப் பிரிவு என இயங்கிகொண்டிருக்கும் பிரிவுக்குக் கீதா கண்காணிப்பாளராக இருந்தாள். வாடிக்கையாளரின் சிக்கல்களையும் தீர்வுகளையும் அறிக்கைகளாகத் தயார்செய்து அனுப்புதல், தனக்குக் கீழ் பணியாற்றும் பணியாளர்களின் மீதான கண்காணிப்பு எனப் பொறுப்பேற்றுக் கொள்ளுதல் இந்தப் பணியில் குறைவாகவே இருப்பதாகச் சொல்லியிருந்தாள். எங்கள் குழுவின் பயனர்களின் தகவல்களைக் கீதாவால் நிர்வகிக்க பணிஒப்புநோக்க முன்னர் அவள் செய்துகொண்டிருந்த பணியைவிட எளிமையானது. தொடர்ந்து பலமுறை சொல்லப்பட்டிருப்பதால், ஜானின் சிக்கல் குறித்து அறிக்கையைத் தயார் செய்ய கீதா பணித்திருந்தாள். அதில்தான், ஜானின் செயலியில் எவ்விதமான தானியங்கி செயற்பாடுகளும் இல்லையென்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. உணவு, உடை மற்ற வேண்டிய அவசியமான சேவைகள், பொருட்கள் இவற்றைத் தவிர வேறு எவற்றிலும் எதையும் வலுக்கட்டாயமாகப் பயனர்களின் அனுமதியின்றி உள்ளீடு செய்ய நிறுவனம் அனுமதிப்பதில்லை. கிஷனின் செயலியில் ஜானுக்கிருந்த கட்டுப்பாடுகளைக் கொண்டு அவரும் அடிப்படைத் தேவைகள் தாண்டி எதையும் உள்ளீட்டுப் பொருளாகத் தெரிவு செய்திருக்கவில்லை.ஆனால், அதன் பின்பும் அதே சிக்கலுடன் பல முறை ஜானுடன் பேசியிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பெயர்களில் அழைத்து ஒரே சிக்கலைப் பல வகையில் மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். ஜானின் குரலின் பின்னணியிலே பல முறை கிஷனின் விசும்பல் ஒலியைக் கேட்டிருக்கிறேன். எல்லாமே பொருளில்லாத ஒலிகள்தான். ஜானின் குரலைக் கேட்டவுடன் சொல்ல வேண்டிய பதிலைக் கூட தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால், ஜானுடனான உரையாடலைத் துண்டிக்க தோன்றியதேயில்லை. சொல்லப்போனால் ஜானின் குரலில் அல்லது சொல்லும் சிக்கலில் ஏதேனும் விசித்திரமான அனுபவம் வெளிப்படும் எனக் காத்திருந்தேன். மெல்லிய பதற்றத்துடன் தொடங்கி சீராகக் செயலியின் சிக்கலை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பது அலுப்பூட்டுவதாக இருக்கும். கீதா வாரத்தில் ஒருமுறையாவது இடைவெட்டாக அழைப்பில் நுழைந்து வாடிக்கையாளருடனான உரையாடலுக்கும் பதிலுக்கும் மதிப்பிடுவாள் என்ற பயத்திலே நிதானமாகக் கேட்பேன். ஜான் தன் மகன் குறித்துச்சில முறை புகாரில் சொல்லியிருக்கிறார். தன் மகன் செயலியின் முகப்பில் இருக்கும் டால்பின்களைப் பார்த்துக் கொண்டே பல மணி நேரம் இருப்பானாம். வீட்டைச் சுற்றிலும் அசையும் பொருட்கள், தாவரங்களின் மாற்றங்களைச் செயலியின் வாயிலாக அறிந்து கொள்வானாம். தன்னுடைய உடல் அங்க மாற்றத்தையும் தெரிந்து கொள்ள முடியும் என்றிருக்கிறார்.
கீதாவுடன் கொஞ்ச நாள் பழக்கத்திலே சுற்றிலும் இருப்பவர்கள் மீதான சரியான மதிப்பீடு அவளிடம் இருந்ததை வியப்பாகக் கவனித்திருக்கிறேன். அவளது மதிப்பீடு பெரும்பாலும் சரியாக இருக்கும்“மத்தவங்கள பத்தின பார்வை இல்லாம…சும்மா பாத்துக்கிட்டு இருக்குறது எல்லாம் முடியுமான்னு தெரில…ஆனா, அதப் பின்னால் போயி ஒன்னொன்னா முடிச்சுப் போட்டு இழுத்துட்டு வந்து ஒரே இடத்துல வைக்கிறதனாலதா…நான் வேலய விட்டு இங்க வந்தேன்…”என்றிருக்கிறாள். “இதுல இருக்குற சவாலே இதாலே தனியாக முடிவு எடுக்க முடியாதுன்றதுதான்… கணினியின் கன்சியஸ் ஏற்படுத்துறது மூலமா இத இன்னும் விரைவா அடைய முடியும். அத அடையுறதுக்கு இன்னும் தனித்த திறனுடன் இருக்கும் பலரின் மூளை செயற்படும் விதத்தையும் பாக்கணும்…”
நீண்ட நாட்களுக்குப் பின் வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்கிய நாளொன்றில் வழக்கமான பதற்றத்துடன் வேறொன்றைச் சொல்லத் தொடங்கினார். ஒவ்வொன்றையும் துணுக்குகளாகக் கோவையின்றி யோசித்து யோசித்துச் சொல்லத் தொடங்கினார். உங்களுடனான உரையாடல் முழுமையாகப் பதிவு செய்யப்படுகிறது என்பதையும் உங்கள் சிக்கலை மட்டும் தெரியப்படுத்துங்கள் என இடைவெட்டாகச் சொன்னதையும் ஜான் பொருட்படுத்தவேயில்லை. ஜானுக்குக் கிஷன் என்ற ஒரே மகன். கிஷனுக்கு அறிவுத் திறன் குறைப்பாடு இருக்கிறது. ஜானின் மனைவி விவாகரத்துப் பெற்று வேறொரு திருமணம் செய்து கொண்டார். ஜான் தன் அக்காவை அக்காம்மா என்றே சொல்லிக் கொண்டிருந்தார். பதினைந்து வயதிலிருந்து ஜானையும் அக்காம்மாத்தான் வளர்த்திருக்கிறார். ஜானுக்கு இரண்டு வயதிருக்கும் போதே அவரின் அம்மா இறந்துவிட்டார். அவரின் அப்பா பெருங்குடிகாரராக இருந்திருக்கிறார். அவரின் பால்யம் அடியும் உதையும் வாங்கித்தான் கடந்திருக்கிறது. பல சமயங்களில் ஜான் மீது விழும் அடிகளை அக்கா வாங்கி கொள்வாராம். அக்காவின் திருமணத்துக்குப் பின் அவர் வீட்டிலே தங்கி படித்திருக்கிறார். மாமாவின் கட்டுப்பாடு மிகுந்த ஒழுங்கு முறைக்குள் வளர்ந்திருக்கிறார். அவர்கள் இருவரும் சேர்ந்துதான் படிக்க வைத்துத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். திருமணத்துக்குப் பின், அக்காவைப் பார்ப்பதைக் கூட வெகுவாகக் குறைத்துக் கொண்டாராம். ‘’எப்பொழுதும் இல்லாத அச்சத்துடன் வாழப் பழகிக் கொண்டேன். கிஷன் பிறந்தவுடன் அக்காவே அவனைப் பார்த்துக் கொள்ள முன்வந்தார்.” கிஷன் பிறந்ததிலிருந்தே ஜானின் அக்காத்தான் வளர்த்திருக்கிறார். இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழலில், கிஷனை வேறு எங்கும் விடமுடியாத சூழலில் அக்காவிடமே கவனித்துக் கொள்ள விட்டுவிட வேண்டியதாகியிருக்கிறது. மனைவி விவாகரத்துப் பெற்றப்பின், மகனை அக்காவின் பொறுப்பிலே முழுமையாக விட்டிருக்கிறார் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தொடர்பு துண்டிக்கப்பட்டது. இரண்டு நாளில், என் மீது வாடிக்கையாளர் புகார் பெறப்பட்டிருக்கிறது என கீதா பதிவு அனுப்பியிருந்தாள்.
மறுபடியும் ஜான் வேறொரு பெயரில் அழைத்துத் தன்னுடைய சிக்கலைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “உங்கள் செயலியின் சிக்கல் தீர்ந்து விட்டதா” என மிக இயல்பாகப் பேசத் தொடங்கினேன். என்னிடம் முன்னமே பேசியது நினைவில்லாமல் கணினியின் சிக்கலைச் சீரான மொழியின் பதற்றத்துடன் சொல்லத் தொடங்கினார். அந்தப் பதிலின் இடையிலே, ‘’உங்கள் பையனுக்கு என்னத்தான் சிக்கல்’’ எனத் தமிழிலே கேட்டேன். இந்த அழைப்பையும் கீதா கேட்கக்கூடும் என்ற எச்சரிக்கையுணர்வு அறவே அகன்று போயிருந்தது.பயனர்கள் பேசும் மொழியில் பேசுவதற்கான சுதந்திரம் நிறுவனத்தில் வழங்கப்பட்டிருந்தது. அவர் பையனுக்குத்தான் சிக்கல் என எப்படி ஊகித்தேன் என்பது எனக்கே வியப்பாக இருந்தது. ஜானும் நிறுத்திய இடத்திலிருந்து கதையைத் தொடங்கினார். ஜானின் மாமா இறந்தப்பின் அக்கா தனியேதான் இருந்திருக்கிறார். அவரின் இரண்டு பிள்ளைகளும் ஆஸ்திரேலியாவிலே தங்கி வேலை செய்யத் தொடங்கிவிட்டிருந்தனர். அப்படித்தான், கிஷனை முழுநேரமாக வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்.
ஜானின் மனைவியும் விடுமுறை நாட்களில் மகனைப் பார்த்துக் கொள்வார். அவர்களிருவருக்கும் இன்னும் நல்லுறவு நீடித்து வருகிறது. சொல்லப்போனால், கிஷனை முழுமையாகக் கவனிக்கவும் அவரின் மனைவி தயாராக இருந்திருக்கிறார். ஆனால், ஜானின் அக்காவுக்குக் கிஷனின் இருப்பு மிக அவசியமானதாக மாறியிருக்கிறது. தனிமைச் சூழலைப் போக்கிக் கொள்ளவும் அவனுக்குப் புரியும் வகையில் பேசவும் அக்கா மிக முக்கியமானவராக அமைந்திருக்கிறார். அவன் அம்மாவின் பராமரிப்பில் விடவும் அறிவுத்திறன் சிக்கல் கொண்ட குழந்தைகள் பராமரிப்பகத்துக்கு அனுப்பவும் முயன்ற போது எல்லாம் கிஷன் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு அழுது சோர்ந்துவிடுவானாம். ஜானின் அக்கா ஒருவரால்தான் முழுமையாகக் கிஷனைப் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. கிஷனுக்குப் பசி, தூக்கம் போன்றவைத் தாண்டி வேறு எதையும் ஜானால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. ஆனால், அவனுடன் அவர் அக்காவால் பேசக் கூட முடியும் என்றார்.
அக்காவுக்கு மார்பகத்தில் வளர்ந்திருந்த சிறிய கட்டியைக் கூட கிஷனின் கைகள் தான் காட்டிக் கொடுத்திருக்கிறது. வீட்டு முற்றத்தில் மண்ணையள்ளி மூக்குக்கு அருகே எடுத்து நுகர சென்றவனது கைகளைத் தட்டிவிட்டப் பின் மார்பகத்தில் அவனது கைகள் அனிச்சையாகப் பட்டிருக்கின்றன. அவனது கைகளில் அடியின் பின்தான் மார்பில் சிறிய அளவில் வளர்ந்த கட்டியைக் கவனித்திருக்கிறார். அந்தக் கட்டியை மருத்துவமனையில் சோதித்த போது மூன்றாம் நிலை மார்பகப்புற்று நோய் கட்டி என உறுதிபடுத்தியிருக்கின்றனர். அதன் பின் அவரால் தொடர்ந்து கிஷனைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. புற்றுக்கட்டியுடன் சேர்த்து மார்பகத்தையும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியிருக்கிறார். அவர் இறந்த ஒரு வாரத்துக்குள்ளே, கிஷனை அறிவுத் திறன் சிக்கல் கொண்ட குழந்தைகள் பராமரிப்பகத்திக்கு அனுப்பத் தொடங்கியிருக்கிறார். அக்கா இறந்த நிகழ்வைக் கூட வெகு இயல்பான குரலிலே சொன்னார். அவரின் குரலில் ஏற்படும் மெல்லிய உடைவொன்றுக்கான தருணத்தையே எதிர்நோக்கியிருந்தேன்.
“அப்பத்தான் அவன் நடவடிக்கையிலே கொஞ்சம் மாற்றம் ஆரம்பிச்சது..வ்எதையாவது செஞ்சிட்டு யாரையோ பாக்குற மாதிரியே காத்துக்கிட்டு இருப்பான்.அதுகப்புறம் ஒரே அழுகைத்தான்…எவ்வளவு சமாதானம் செஞ்சும் எதுவும் மாறல…அவுங்களோட எறப்பு…அவனே ரொம்ப பாதிச்சுருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன்…அப்பத்தான் இந்த app வாங்குனேன்…சொல்லப்போனா எனக்கு ரீலிவா தா இருந்துச்சு…அவனா நகர்ந்துக்க முடிஞ்சது….பிரிட்ஜ் கதவு தெறந்து சாப்பாடு எடுத்துகுறது… ஏசி ஒன் பன்றது…எல்லாமே ஏப் மூலமா தானாகவே செஞ்சான்….என் போன்ல இருந்த ஏப் மூலமா ஏதாவது கூடுதலா செய்றது மட்டும்தா என் வேலயா இருந்துச்சு…
ஆனா, மெல்ல இந்தச் செயலில இருக்குற மாற்றத்த பாத்தேன். அவன் அழுவுறப்ப ஸ்கிரினில இருக்குற டால்பின் வேகமாக கடலுக்குள்ள உள்நுழையுது…இவன் அதப் பாத்துக்கிட்டு அழுகையே நிறுத்துறான்…ஒரு விளையாட்டு மாறி தொடருது…ஒரு நாள் படங்கள வரைஞ்க்கிட்டு இருக்குறத ஏப் (App), அப்புறமா, விளையாட்டுகள் என எதோ ஒன்னுல இருந்தான்…செயலியில இருக்குற டிராண்ஸ்மீட்டர் மூலமா யாரோ இதற்கான செய்திகளை அவனுக்கு அனுப்புறாங்கன்னு சந்தேகம் வந்தது…. ஒரே மாசத்துல அவனுக்கு அந்த எழப்பு என்னன்னு தெரியாம போயிருச்சு…” அதன் பிறகு, செயலியில் இருந்த தன் அக்காவின் படங்கள் ஒன்றுவிடாமல் அழிந்து போயிருக்கிறது. அதைத்தான் கணினி தானே அழித்திருக்கக் கூடுமென நம்புகிறார். “மனுசனுக்கு இருக்குற தேவையில்லாத சோகத்த ஏற்படுத்துறநினைவுகள்ன்னு அதுவே அழிச்சிருக்கலாம்ன்னு நெனக்கிறேன்…அவன் என்கிட்ட இருந்து விலக ஆரம்பிச்சது போல இருந்தது…” கிஷன் தன்னையும் அவ்வாறே எளிதில் மறந்துவிடக்கூடும் என்கிற அச்சம்தான் ஜானின் மனத்தில் இருப்பதை ஊகித்துக்கொள்ள முடிந்தது.
நிறுவனத்தின் கடும் கட்டுப்பாடுகளைத் தாண்டி அப்படியான நிகழ்வு நிகழ்ந்திருக்க சாத்தியமில்லை என உறுதியாகச் சொல்ல முடியும்.நீண்ட மெளனத்துக்குப் பின், கிஷன் பேசத் தொடங்கினான். எல்லாமே பொருளில்லா குழறல் மொழியாகவே இருந்தது. கணினியின் முன்னால்தான் அமர்ந்திருக்கிறான் எனத் தெரிந்தது. செயலியின் முகப்பில் இருக்கும் பெரியநீர்த்தொட்டியில்நீந்தும் டோல்பின்மீன்களின் வால் நீரை அறையும் ஒலி கேட்டது. அந்த நீரின் ஒலியைப் பிரதியெடுப்பதைப் போல வாய் குழறல் சத்தம் கேட்டது. மீன்கள் ஓய்ந்திருக்கும் போது நீரில் வால் அறையும் ஒலியை உண்டாக்கிக் கொண்டிருந்தான். இவனுடைய ஒலிக்கேற்ப மீன்களும் நீந்தின. நீரின் சலனமும் மீன்களின் வாலசைப்பும் ஒருசேர ஓய்ந்து நிசப்தமாக இருந்தது. இப்போது மீன்களின் நீரறைதல் சத்தமும் டால்பினின் சத்தமும் கேட்கத் தொடங்கியது. அது கிஷனின் குரலை ஒத்திருப்பதாகத் தோன்றியது. அதையும் தாண்டி கீதாவின் மூச்சு சீறல் மட்டும் நீரில் அறையும் டால்பின் மீன் வாலைப் போன்று கேட்டுக் கொண்டிருந்தது.