கர்ப்ப விதானம்

(வல்லினம் நடத்திய அக்கினி அறிவியல் சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை)

“பொட்டக் கமுனாட்டிக்கு வந்த வாழ்வ பாரு? நீயெல்லாம் மனுச ஜாதியில சேர்த்தியா? புடுக்க அறுத்துகிட்டு, மார வளர்த்து, பூவும் பொட்டும் வைச்சிருந்தா, நீ பொம்பளையா ஆயிடுவியா? உன்னால பொம்பளைங்க மாதிரி புள்ளையைப் பெத்துக்க முடியுமா?”

எதன் பொருட்டோ பொதுவெளியில் தொடங்கிய விவாதம், தோல்வியுறும் வேளையில், எதிராளியைச் சாய்க்கும் இறுதி அஸ்திரமாய், பச்சைக்கிளியின் மீது ஏவப்பட்டது. பச்சைக்கிளி வாய்வார்த்தைகளுக்குச் சளைத்தவள் அல்ல. எதிராளி காளி வந்து ஆடினால், பச்சைக்கிளி நீலியாய் ஆடுபவள். இவளின் நாவு எனும் சாட்டை சொடுக்கும் விதிர்ப்புக்கு, நாவின்மகளே நாலடி தூரம் ஒதுங்கிவிடுவாள். திருவிழா சமயத்தில் ஏற்றப்படும் மாரியம்மன் கோயில் வெளிக்கொடி போல், சர சரவென மேலெழுந்த ஆங்காரம், “உன்னால புள்ளையைப் பெத்துக் கொடுக்க முடியுமா” எனும் வார்த்தைப் பிரயோகத்தால் ஸ்தம்பித்துப் போனது. தழலின் சூடுகண்டு பொங்கிவரும் பாலில், நீரைத் தெளித்தது போல், உள்ளே சீறியெழுந்த வெம்மை, மளுக்கென்று கண்களின் வழி திசை மாறியது.

ஒரு மிகப் பெரிய பகடிவிளையாட்டுக்குக் காத்திருந்த கூட்டம், பச்சைக்கிளியின் ஒட்டுமொத்த பின்வாங்கலால், சுவாரஸ்யமற்று கலைந்து போனது. கூட்டுக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்ளும் நத்தையாய், அவளது நாவும் திராணியும் உள்ளிழுத்துக் கொண்டன. எதுவும் பேச சக்தியின்றி, தோளின் மீது தொங்கிய துப்பட்டாவை வாயில் அடைத்துக்கொண்டு விடு விடுவென நகரதான் முடிந்தது.

கால்கள் அன்னிச்சையாய் வீட்டை நோக்கி பயணிக்க, அவிழ்த்துவிட்ட மனம் என்னவோ சடுதியிலேயே நின்றிருந்தது. ஆற்றுச்சுழலில் மாட்டிக்கொண்டு, அதன் விசைக்குச் சிறுக சிறுக வட்டமடித்து மடியும் மரதுண்டமாய், அந்த வார்த்தைகள் பச்சைக்கிளியை நகரவொட்டாது ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. வார்த்தைகளின் வீர்யங்களையும் ஆழ அகலங்களையும் தாண்டி வந்தவள்தான் பச்சைக்கிளி. இதுவரையில் எந்த வார்த்தைகளும் இதுபோல அவளைச் சிறைப்பிடித்து, தூண்டில்முள்ளில் சிக்கிய மீனாய், தரையில் அடித்துச் சாய்த்ததில்லை.

“உன்னால பொம்பளைங்க மாதிரி புள்ளையைப் பெத்துக்க முடியுமா?” அறுப்பட்ட ஒலிநாடாவில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருக்கும் நாரசமொழி, மலக்குடக் மடிப்புகளில் சிக்கி வெளியேற்றம் காணாத நரகலாய், அடிவயிற்றில் வாதையை உண்டு பண்ணியது.

“மசுராண்டி! பெத்துக் காட்டுரேண்டா, பொம்பளைங்க மாதிரி நானும் வயுறு வளர்த்துப் புள்ளைய பெத்துப்பேன்டா.” உள்ளம் குமுறிக்கொண்டிருந்தாலும், முகவாய் மூடிய எரிமலையப் போல், சொல்லெடுக்க முடியாமல், சிதறலாய் சிந்தியிருந்த எண்ணங்கள், குவியலாய் கூர்காணும் நேரத்தில், வீட்டின் நிலைப்படி தலையில் இடித்தது. கதவைத் திறந்து வழிவிட்ட வதனாவை, உருட்டும் கருவிழியால் நோக்கி,

“நான் புள்ளையைக் பெக்கனும், இல்லை புள்ளையைப் பெத்துப்பேன்” சொல்லிக்கொண்டே நடுமுற்றத்துப் பஞ்சு இருக்கையில் விழுந்தாள். வெளியே, அரக்க பறக்க, வசுந்திரா ஓடி வந்துக் கொண்டிருந்தாள்.

“இவளே வதனா, எங்கடி பச்சைக்கிளி? கடையிலேர்ந்து ஓட்டமா ஓடி வரேன், இந்தப் பச்சைக்கிளி அருள் வந்த மாதிரி கிளம்பி வந்துட்டாளே? கிழட்டு நாய் கடைக்கண்ணியினு கூட பார்க்காம, பச்சைக்கிளியைப் பார்த்து அப்படி ஒரு வார்த்தைச் சொல்லிட்டான். பாவம்டி அவ, அப்படியே பித்துப் புடிச்சிச்போயி அலமலந்து போயிட்டா. எங்கடி அவ?” விழுந்தடித்து ஓடி வந்ததால், தேகம் முழுக்க ஊறும் வியர்வை நசநசப்பிலும், நுரையீரல் கவ்வ தவிக்கும் வெளிக்காற்றை நிறுத்தாத பேச்சுனூடே ரொப்பிகொண்டும் தடுமாறினாள்.

இருக்கையின் மீது, குவித்து வைத்த துணி அம்பாரமாய், பச்சைக்கிளி எந்த ஒரு பிரக்ஞையுமின்றி வெறித்த விழிகளில் சூனியத்தை அளைந்துக் கொண்டிருந்தாள். அவளது சலனமற்ற செயல்பாடுகள் வசுந்திராவிற்கும் வதனாவிற்கும் லேசாய் பீதியைக் கொடுத்தது. வசுந்திராவைப் பார்த்ததும், பச்சைக்கிளியின் வன்மம் மேலதிகமாக,

“நான் உடனே புள்ளையைப் பெத்தாகனும். நானே கருவுல சொமந்து, வலிப்பட்டுக் குழந்தையைப் பெத்துக்கனும். எவன் வேணுமானாலும் அப்பனா இருந்துட்டுப் போகட்டும், ஆனா, நான் புள்ளையைச் சொமந்து பெக்கனும்….. “

அவளது கட்டைக்குரலின் கரகரப்பு அதிரடியாய் மேல் ஸ்தாயிக்குத் தாவி, பிறகு க்ஷீணமடைந்து, காற்றின் வழியே கடைசி சொல் உதிர்க்கப்பட்டது.

பச்சைக்கிளியின் உக்கிரத்தைப் புரிந்துக்கொள்ள அவர்களுக்குச் சில நொடிகள் தேவைப்பட்டன. சுழல்விசிறியின் காற்றுவிசையால் மயிர்கற்றைகள் தாறுமாறாய் கலைந்து, முகத்தினூடே வழிந்த வியர்வைத்துளி தடங்களில், ஒற்றையடிப்பாதையாய் ஓட்டி நிற்க, சன்னதம் வந்தவளாய் பச்சைக்கிளி உறுமிக்கொண்டிருந்தாள். அவளை ஆசுவாசப்படுத்தி, தன்னிலைக்குக் கொண்டுவர பெரும்பாடாய் போயிற்று.

இரவு உணவின்போது, தோசையோடு தொட்டுக்கொள்ள சாடின் பிரட்டலைப் பச்சைக்கிளியின் அருகே நகர்த்தியபோது, அவளது முகம் கழுவிவிட்டதுபோல் இறுக்கங்கள் இறங்கி, பழைய நிலைக்குத் திரும்பியிருந்தது.

“அடிப் பொசக்கெட்டவளே, எவனோ உதவாக்கரை ஏதோ உளறிட்டுப் போனா, இப்படியா அசமஞ்சம் பண்ணுவ? நாமெல்லாம் கேட்காத வசவா? இந்த நாறப்பொறப்பு எடுத்தபிறகு, நமக்கு எதுக்கடி மானமும் மரியாதையும்? நீதான் எட்டு மொழத்துக்கு நாக்க வளர்த்து வச்சுருக்கியே, தப்பா சொன்னவனை நறுக்குன்னு நாலு வார்த்த சொல்ல முடியாது?” வசுந்திராவிற்கு இன்னும் மனது ஆறவில்லை. தன்னைத் தாயாய் வரித்துக் கொண்ட மகள் பச்சைக்கிளிக்கு அநியாயம் நடக்கும் போது, வசுந்திராவால் வாளாவிருக்க முடியவில்லை.

திருநங்கைகளின் சம்பிரதாயத்தில், மூப்பான திருநங்கை ஓர் இளம் திருநங்கையை மகளாகத் தத்துதெடுத்துக் கொள்வது வழக்கம். தனித்து விடப்படும் மாறுபட்ட பாலினருக்கு ஈன்றெடுத்த குடும்பமும் சமூகமும் கொடுக்காத அன்பையும் அரவணைப்பையும், அரவாணிகளின் உலகம், தாய்-சேய் எனும் ஸ்தாபித்த உறவுகளின் வழி அடைக்கலம் தருகிறது.

முதன் முதலில் கிள்ளான் ஜகன்மாதா கோயில் திருவிழாவில், கள்ளம் கரவமற்ற பளீர் சிரிப்போடு தனக்கு “பாம்படத்தி” வணக்கம் சொல்லி, மென்மையாக மேற்பாதங்களை வருடி தலையில் வைத்துக் கொண்டவளை, வசுந்திராவிற்கு மிகவும் பிடித்துப் போனது. அப்போது பச்சைக்கிளிக்குப் பாலுறுப்பு நீக்கப்பட்டு, நிர்வாணம் கூட ஆகியிருக்கவில்லை. தனது இருவது வயதுவரை பாலசேகரனாக இருந்தவன், பச்சைக்கிளியாக உருக்கொள்ள பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை. அத்தனையும் கடந்து, தன்னை ஆணென அடையாளப்படுத்தும் பிறப்புறுப்பைத் அயல்நாட்டில் சென்றகற்றி, ஒரு பெண்ணாகப் பரிமளித்த குதூகலம், இப்போது கொஞ்ச கொஞ்சமாகப் பச்சைக்கிளியை விட்டு விலகுகிறது.

சிறுபிள்ளைகளைக் காணும்போதும், கர்ப்பிணி அல்லது தாய்மார்களோடு பேசும்போதும் பச்சைகிளிக்கு ஏதோ ஒன்று குறைவது போல தோன்றும். முலை சுரக்கும் தாய்மார்களை நோக்கும் சமயங்களில், அன்னிச்சையாய் அவளது கைகள் ஊக்க ஊசியால் பெருத்த ஸ்தனங்களைத் தடவிக்கொள்ளும்.

“ஆப்பரேஷன் பண்ணி அறுத்துகிட்டா மட்டும் பொம்பளையா ஆயிடமுடியுமா? பொம்பள பொறப்போட முழு அர்த்தமே தாயா நிறையறதுலதானே இருக்கு?” இப்படியாய் தனது ஆதங்கத்தை அவ்வபோது வெளிப்படுத்திக் கொள்வாள். சிறுகச் சிறுக உள்ளுக்குள் நச்சரவக்குட்டியாய் வளர்ந்த அபிலாஷை, இப்படிச் சீறிப் படமெடுக்கும் நாகத்தைப் போல் நஞ்சைக் கக்கும் என வசுந்திரா துளியும் அறிந்திருக்கவில்லை.

“கூறுகெட்டவளே, உன்னைய பொம்பளையா மாத்தி கொண்டுவரவே நாய்ப்பாடாத பாடு பட்டேன். இதுல எங்கடி உனக்குப் புள்ளைப் பொறக்கும்? நீயென்ன அரசிலை கட்டி, கருப்பையோட பொறந்த பொட்டச்சியவா இல்லை, மாசாமாசம் குத்த வைச்சிதான் ஒக்கார்றியா? கவட்டைக்கு நடுவுல தொங்குறதைக் கத்தி வைச்சு அறுத்துகிட்டாலும், பொம்பளை மாதிரி குனிஞ்சி ஓண்ணுக்கடிச்சாலும், நாமமெல்லாம் நிஜமான பொம்பளையா ஆகமுடியுமா? கோயில்லதான்டி கர்ப்பகெரகம் இருக்கும், நம்மள மாதிரி மயானத்துல இல்லை.”

“ஏன் முடியாது? கிட்னி வீணாப் போச்சுனா, காசு கொடுத்து இன்னொரு கிட்னியை யாரும் வாங்கி மாட்டிக்கிறது இல்ல? அவங்களாம் நல்லாதானே வாழ்ந்துகிட்டு இருக்காங்க? நாம மட்டும் ஏன் கர்ப்பப்பையை இன்னொரு பொம்பளைக்கிட்ட இருந்து வாங்கிக்க முடியாது?”

வசுந்திரா அயர்ந்து போய்விட்டாள். எங்கிருந்து இந்தப் பச்சைக்கிளிக்கு இப்படி ஒரு யோசனை வந்தது?

“இந்த ஜென்மத்துல கொழந்தைகுட்டிகளைப் பெத்துக்க முடியாதுன்னுதானே, நம்ம அரவாணி கொலத்துல இருக்குற சின்னஞ்சிறுசுகளைத் தத்தெடுத்துப் புள்ளைகளா வளர்க்குறோம்? இன்னும் கொஞ்ச நாள்ல, நீயும் என்னையை மாதிரி ஒரு குட்டியைத் தத்தெடுத்து, பவுசா வளர்த்துக்கோடி. உன்னையும் வதனாவையும் மகளா எடுத்து நான் வளர்க்கல?”

“ஊரான் வூட்டு புள்ளையெல்லாம் எனக்கு வேணாம். என் ரத்தத்துல பொறந்து, நச்சுக்கொடி அறுத்து எடுத்த குழந்தைதான் எனக்கு வேணும்.”

பச்சைக்கிளியின் புலம்பலும், பிடிவாதமும் கடைசியில் அவளை மருத்துவ ஆய்வுகளைப் பரீட்சித்துப் பார்க்கும் அரசாங்க மருத்துவமனையில் கொண்டு போய் நிறுத்தியதுதான். அது ஒரு குழந்தைபேறு நிலையம், சுவர் எங்கிலுமே கன்னங்கொழுத்த குழந்தைகளின் வண்ண சித்திரங்கள், பச்சைக்கிளியின் மனதிற்குள் தாய்மை உணர்வைக் கூடுதலாய் ஊற வைத்துக்கொண்டிருந்தன.

“அக்காக் மாவு லாஹிர்கான் அனாக்?” திருநங்கையென பச்சைக்கிளியை இனம் கண்டபின், அவளது கோரிக்கையைச் செவிமடுத்த மருத்துவமனை செலிலிகளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பச்சைக்கிளியின் முக்கிய தேவை மருத்துவ கவுன்சிலிங் என்பதாய் புரிந்துக்கொண்டு, இந்திய மருத்துவ வல்லுனரிடம் அனுப்பினார்கள்.

“பாலசேகரன். சோரிம்மா, உங்க ஐசியில உள்ள பேர வைச்சு கூப்புடுறேன்.”

“பச்சைக்கிளி, டாக்டர்” பக்கத்தில் பச்சைகிளியுடன் அமர்ந்திருந்த வதனா, எடுத்துக் கொடுத்தாள்,

“ஓகே பச்சைக்கிளி, நீங்க சில விஷயங்களைத் தெளிவா புரிஞ்சிக்கனும்மா. ஒரு குழந்தையைப் பெத்துகறத்துக்கு, முக்கியமா கருமுட்டையும், அதை தாங்கி குழந்தையா கொண்டு வர கர்ப்பப்பையும் வேணும்மா. ஆனா, உங்களால கருமுட்டையை உருவாக்க முடியாது, அதோட கருவை வளர்க்குற கர்ப்பப்பையும் இல்லை. நல்ல புரிஞ்சிக்குங்க, நீங்க உடலால ஒரு ஆண், ஆனா அதத் திருத்தி பொண்ணா ஆகியிருக்கலாம். அடிப்படையில பெண்களுக்கான உறுப்புக்கள் எதும் உங்ககிட்ட இல்லைம்மா. ஆப்பரேஷன்ல, உங்க விரைப்பையையும் வெட்டி எடுத்துட்டீங்க, அதனால ஒரு ஆணா இருந்தும் உங்களால குழந்தையை உருவாக்க முடியாது. வெளிப்படையா சொல்லனும்னா, எங்களால ஒன்னும் பண்ண முடியாதும்மா….” கையை விரித்தார் டாக்டர்.

முதல் பரிசு பெறும் ராஜேஷ்

“கர்ப்பப்பை இல்லாமா கொழந்த பெத்துக்க முடியாதுன்னு தெரியும் டாக்டர். நீங்க ஏன் எனக்கு ஒரு கர்ப்பபையைப் பொருத்த முடியாது? குழந்தை என்னோட ரத்தமா இருக்கனும்னு கூட அவசியமில்ல, ஆனா நானே சொமந்து பெத்துக்கனும். இப்படி நீங்களே கையை விரிசிட்டா, நான் எங்கே போவேன்? குழந்தை பெத்துக்கிறது மத்தவங்களுக்கு வெறும் ஆசையா இருக்கலாம், அனா, எனக்கு உசுரை விடவும் பெருசு டாக்டர்….” பச்சைக்கிளியின் விசும்பல் ஓசை, நான்கு வெள்ளைச்சுவர்களுக்குள் எதிரொலித்தது.

ஏரணத்திற்கு உட்படாத பச்சைக்கிளியின் ஆசை, குழந்தைபேறியியல் மருத்துவருக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், அவருக்குள்ளும் தாய்மை வேண்டி தவம் செய்யும் பச்சைக்கிளியின் அப்பழுக்கற்ற கோரிக்கையின் ஞாயம் புரிந்தது. சற்று குரலைத் தண்மையாக்கி, அக்கம்பக்கம் எந்தச் செவிலிகளுமில்லை என்பதை விழிச்சுற்றலால் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு,

“நீங்க ஒரு காரியம் பண்ணலாம், டாக்டர் ஹென்றியைப் போய் பாருங்களேன். டெஸ்ட ட்யூப் பேபி, கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையில மிகப் பெரிய திறமைசாலி, நிறைய ஆராய்ச்சிகளைச் செஞ்சவரும் கூட. அவர் உங்களுக்கு ஒரு வேளை உதவ கூடும். ஆனா அவரோட ஆராய்ச்சி நிலையம் கோலாலம்பூர்ல இருக்கு, அவ்வளவு தூரம், அர்த்தமே இல்லாத ஒண்ணுக்கு நீங்க போய்தான் ஆகணுமா?”

ஒன்றை நடத்தியே தீரவேண்டும் என வெறிக்கொண்டவளுக்கு, வார்த்தைகள் முட்டுக்கட்டை போட்டதே இல்லை. டாக்டர் ஹென்றியின் புதிய தகவல் அவளுக்குள் ஓர் ஊற்றுக்கண்ணைத் திறந்தது. விமோட்சனமேயில்லை என்றாகிவிட்ட ஒரு விஷயத்தில், தூரத்தில் தெரியும் வெளிச்சப்புள்ளியாய் ஒரு சின்ன நம்பிக்கை துளிர்த்தது. பச்சைகிளிக்குப் படிப்பு எஸ்பிஎம் வரையில் என்றாலும், ஓரளவிற்கு ஆங்கிலம் பேசும் திறமை இருந்தது. கூடவே, பல்கலைகழக கல்வி முடித்து, புதிதாய் நிர்வாணம் ஆகி, தாய் வசுந்திராவிடம் இளைய மகளாகச் சேர்ந்திருக்கும் வதனாவின் அனுசரணையான பக்கபலம் வேறு. வதனாவின் உதவியோடு, புடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து, க்ரேப் கார் பயணத்தின் வழியாக, டாக்டர் ஹென்றியின் ஆய்வு நிலையத்தை அடைந்தபோது, பகல் மங்கி, மாலைக்கான முன்னேற்பாடுகள் நடந்துக்கொண்டிருந்தன. ஒரு சின்ன இரண்டு மாடி கட்டிட வரிசையின் கடைசி பகுதியில், சின்னதாய் விளம்பர பலகை துலங்க, சோதனைக்குழாய் கருவளர் நிலையத்தில் கால் பதித்தாள் பச்சைக்கிளி. முதன் முதலாய், ஆலய கர்ப்பகிரகத்தினுள்ளே அடியெடுத்து வைக்கும் உணர்வோடுதான் நுழைந்தாள். ஒரு நவீனமான வெள்ளைக்கார மருத்துவரை எதிர்ப்பார்த்து வந்த பச்சைக்கிளிக்கு, அறுவது வயது சாயலில், முகமெல்லாம் நுரைபஞ்சு தாடி கவிழ்திருக்க, நெற்றியில் திருநீறுமாய் இருக்கையிலிருந்து தலை நிமிர்ந்து பார்த்தவரை, காணுகையில் சிறிதே குழப்பமும் அவநம்பிக்கையும் வரத்தான் செய்தது.

செவிலியர் வாயிலாக விஷயத்தை ஓரளவிற்கு ஊகித்திருந்த டாக்டர் ஹென்றி, பச்சைக்கிளியின் மன ஆதங்கத்தை மீண்டும் செவி கூர்ந்து கேட்க ஆரம்பித்தார். தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் தட்டுத் தடுமாறி பேசிய பச்சைக்கிளியைத் தடுத்து,

“தமிழ்ல பேசுங்கம்மா. ஆச்சரியம் பட வேணாம். லண்டன்ல பொறந்தாலும், நான் படிச்சதெல்லாம் மெட்ராஸ் மெடிகல் யூனிவர்சிட்டியிலதான், அதோட பழனிமலையில சித்த வைத்தியம்மும் கத்துகிட்டேன்.” அப்போதுதான், அவர் தலைக்கு மேல் கோவனாண்டியாய் தொங்கும் பழனிமலை முருகன் திருப்படத்தையும், அதற்குப் பக்கத்தில் ஏதோ ஒரு சாமியாரின் படத்தையும் நோட்டமிட்டாள். மனதிற்குள் இருந்த தடைகள் அனைத்தும் கரைந்தது போல் இருந்தது.

“டாக்டர், நாங்கெல்லாம் அரவாணிங்க, ஆம்பள ஒடம்புல ஆவியா அடைப்பட்டு அவஸ்தை படற பொம்பள ஜென்மங்க. ஆம்பிளைங்கற அடையாளத்தை அறுத்துக் கடாசிட்டாலும், இன்னமும் நாங்க முழுபொம்பளையா ஆகாம, தண்ணியிலும் தரையிலும் வாழும் தவளையா தவிச்சி நிக்கறோம். நான் குத்தங்குறையில்லாத பொண்ணா மாறணும், சுயமா ஒரு குழந்தையைப் பெத்துக்கனும். இத்தனை நாளு கஷ்டப்பட்டு, லோடுப்பட்டு, கண்டவன் வாயில விழுந்து ரோதனை பட்டு என்ன பிரயோஜனம்? ஒரு கருவைச் சொமந்து பெத்து, மொலைப்பாலு கொடுக்க துப்பிருக்கான்னு ரோட்டுல போறவன் எல்லாம் கேட்குறான்? அம்மாங்குற அந்தஸ்தை அடையாம, என்னோட ஜென்மம் ஈடேறாது டாக்டர், எப்படியாவது என்னை ஒரே ஒரு தடவைக் கருவைச் சொமக்க வையுங்க. இந்த ஆப்பிரேஷன்ல, என்னோட உசுரே போனாலும் பரவாயில்லை, அடுத்த ஜென்மத்திலாவது, பொண்ணா பொறந்து ஒம்போது புள்ளைகள பெத்துகிறேன்…..”

டாக்டர் ஹென்றி, அவளது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தார். இதுவரைக்கும் நூற்றுக்கணக்கான பெண்களுக்குத், தனது கருவளர்ச்சி மையத்தின் மூலம் தாய்மை பேற்றினை அளித்தவரும் கூட. பச்சைக்கிளியின் கோரிக்கை அவரைத் திகைக்கச் செய்தாலும், அதற்கான சாத்தியக் கூறுகளை முடக்கிவிடவில்லை. அதுவரை அமைதி காத்த வதனா, வாயைத் திறந்தாள்

“டாக்டர், நான் ஒரு பயோடெக் பட்டதாரி, முக்கியமா ஜெனெட்டிக் இன்ஜினியரிங்ல பைனல் இயர் ரீசர்ச் பன்ணியிருக்கேன். அக்கா சொல்றது எந்த வகையிலும் சாத்தியமில்லைன்னு எனக்கே தெளிவா தெரியுது. இது என்ன, ஒரு மரத்துக் கிளையை ஒடிச்சி, இன்னொரு மரத்துல ஒட்டுக்கட்டற வேலையா? என்னதான் நாங்க பொண்ணா மாறிட்டாலும், எங்க ஜீன்ல இன்னும் ஆணுக்கான எக்ஸ்-வை (X-Y) க்ரோமோசம் இருக்கதானே செய்யும்? இந்த உடல் அழிஞ்சி, மறுபடியும் பொண்ணா பொறந்தாலொழிய எங்களுக்கு மத்த பொண்ணுங்க மாதிரி எக்ஸ்-எக்ஸ் (X-X) க்ரோமோசம் வராது. அப்புறம் எப்படி பொம்பளைங்க மாதிரி பிள்ளையைப் பெத்துக்க முடியும்? அக்காவிற்கு மருத்துவ ரீதியா, புரிய வைக்கதான், இத்தனை காசு செலவு பண்ணி, முன்னூறு கிலோமீட்டர் தூரம் தாண்டி, இங்க கூட்டிகிட்டு வந்தேன். நாங்க சொல்றதவிட, இந்தத் துறையில இருக்குற ஜீனியர்ஸ் நீங்க சொன்னா, அக்கா கேட்பாங்கன்னு நம்பிக்கை இருக்கு. இந்த உண்மை இப்ப கசந்தாலும், அப்புறம் பழகிபோயிடும் டாக்டர். இனிப்பக் காட்டி ஏமாந்து போவதை விட, கசப்பான உண்மையை ஜீரணம் பண்ணிக்கலாம்.”

“ப்ரிலியண்ட, ரொம்ப சரியா பேசறம்மா. நீ படிச்ச படிப்பு, உன்னை அந்தக் கோணத்துல சிந்திக்க வைக்குது. ஆனா இன்னைக்கு யாருமே நினைக்க முடியாத லெவலுக்கு சயின்ஸ் மாறியிருக்கே? பச்சைக்கிளி சம்மதிச்சா, என்னால அவங்களுக்கான கருமுட்டையும், கர்ப்பப்பையையும் உருவாக்க முயற்சி பண்ண முடியும். இது ரொம்ப ரிஸ்க்கான சமாச்சாரம். இது வரைக்கும் யாரும் பண்ணாதது, ஆனா, பச்சைக்கிளிக்காக முயற்சி பண்ணவ தயரா இருக்கேன்.”

அந்த நேரத்தில், பச்சைக்கிளிக்குப் பூசாரி காட்டும் கற்பூர ஓளியில், காரூண்யம் நிறைந்த விழிகளால் அருள் பொங்க மிளிரும் அம்மனாய் தெரிந்தார் டாக்டர்.

பூர்வாங்க சோதனைக்கு ஆட்படுத்தியபோது, பச்சைக்கிளியின் உடல் ஆரோக்கியம் வாகாக வளைந்துக் கொடுத்தது. எல்லாவற்றுக்குத் தன்னை முழுக்க ஓப்புகொடுத்தவளாய் ஆகிப்போனாள் பச்சைக்கிளி. வதனாவிற்குள் ஆயிரமாயிரம் கேள்விதுளிர்கள் கிள்ள கிள்ள முளைத்துக் கொண்டேயிருந்தன.

“டாக்டர், கர்ப்பப்பையைக்கூட இன்னொரு பெண்ணுடல்ல இருந்து எடுத்து பொருத்திக்க வாய்ப்பு உண்டு, இந்தக் கருமுட்டையை எப்படி உருவாக்குவீங்க? பச்சைக்கிளிதான் உடம்பால ஆணா இருக்காளே? இது சுட்டுப் போட்டாலும் நடக்குற காரியம் இல்லையே?”

“இவ்வளவு படிச்சிருக்குற உனக்கு, மனுஷன் உடம்புல ‘ஸ்டெம் செல்’னு சொல்லக்கூடிய மூல உயிரணு இருக்குதுன்னு தெரியுமா? உங்கப்பாவோட விந்தணுவும் அம்மாவோட கருமுட்டையும் ஒண்ணா சேர்ந்து, ஒரு செல் அளவே ஆன சினைமுட்டையா மாறிதானே நீ பொறந்த? அப்போ அந்த ஒரே ஒரு உயிரணுவக் கொண்டுதானே, உன்னோட அத்தனை உடலுறுப்பும் கர்ப்பப்பையில உண்டாகி, ஒரு முழு மனுஷியா உருவாக்கப்பட்ட? அது சாத்தியமா இருக்குறப்ப, ஏன் பச்சைக்கிளி ஒடம்புலேர்ந்து, அந்த மூல உயிரணுவ மீண்டும் உருவாக்க கூடாது? அப்படி உருவான ஆதிமூல உயிரணுவக் கொண்டு, கர்ப்பப்பையும், கருமுட்டையையும் உருவாக்கலாமே? பத்து வருஷத்துக்கு முந்தி, ஜப்பான் நாட்டு விஞ்ஞானிக்கு மருத்துவத்துல நோபல் பரிசு கிடைச்சுதே, எதுக்கு தெரியுமா? அவரு இயற்கையா இருக்குற உயிரணுவ, ஆதிமூல உயிரணுவா மாத்தி காட்டியிருக்காரு. இது மருத்துவ உலகத்தையே பொரட்டி போட்டிருக்கு.”

“இன்னும் கொஞ்சம் நாள்ல, கடைக்குக் போயி கத்தரிக்கா வாங்குற மாதிரி, நமக்கு ஏதாவது ஒரு உறுப்பு பழுதுபட்டா, நல்லா இருக்குற ஒரு செல்லைக் கொடுத்து, முழு உறுப்பையும் செஞ்சிக்கமுடியும்.”

“எப்படி? சேதாரம் ஆன பழைய நகையை உருக்கி புது நகையைச் செய்யுற மாதிரியா?”

“கிட்டதட்ட அது மாதிரிதான்.”

இது எதுவும் புரியாமல், தனக்குக் குழந்தையை ஈன்றெடுக்கும் பாக்கியம் மட்டும் கிடைத்தால் போதும் என வாய் பிளந்துக் கேட்டுக் கொண்டிருந்தாள் பச்சைக்கிளி.

பச்சைக்கிளியின் வாயின் உட்பகுதியிலிருந்து சிறிது திசுக்கள் சுரண்டப்பட்டன. அதனைச் சோதனைக்கு அனுப்பி, நன்கு பரிசோதனை செய்யப்பட்டு, ஒவ்வொரு உயிரணுவாகப் பிரிக்கப்பட்டது. அப்படி உதிரியாகப் பிரிக்கபட்ட ஒற்றைச் செல்களுக்கு மின்சார முறையில், குறிப்பிட்ட மரபுநிரல்கள், செல்லின் உள்ளே வலுக்கட்டாயமாய் புகுத்தப்பட்டன. ஆய்வறையில், கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில், மரபுநிரல் சேர்க்கப்பட்ட ஒற்றைச் செல்களின் செயல்பாடுகள் மிகக் கூர்மையாக உருப்பெருக்கி மூலம் அவதானிப்பட்டன.

மகரந்த துகள்கள் தீண்டப்பட்ட மலரைப் போன்று, புதிய மரபுநிரல்களைப் பெற்றுக்கொண்ட செல்கள், ஆதிமூல அணுக்களாய் பரிணாமம் கண்டு, துரிதமாய் பகுக்கக் தொடங்கின. சிறு சிறு சதைத்திரட்சியாய் வளர்ந்த திசுக்களிருந்து மனித உறுப்புகளுக்குரிய உயிரணுக்கள் விரியத் தொடங்கின. வெங்கனலாய் கொதிக்கும் தங்கத் தீக்குழம்பு, அச்சுகளில் ஊற்றப்பட்டு ஆபரணமாய் உருவெடுப்பதுபோல், அந்த ஆதிமூல உயிரணுக்குகுழம்பில் இருந்து, அணுக்களை வகை பிரித்து, தகுந்த ஊக்கிகளின் மூலம் கர்ப்பப்பையைத் தயாரிக்கும் பொருட்டு, மும்பரிமாண நகலாக்கிக்கு அனுப்பட்டன. இன்னும் சில செல்களைத் தனியே பிரித்து, கருமுட்டைகளை உருவாக்க நவீன ஆய்வக பட்டறைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

வதனாவிற்கு இன்னும் குழப்பம் தீரவில்லை.

“டாக்டர், கர்ப்பப்பையை உருவாக்கிடலாம், ஆனா கருமுட்டை எப்படி சாத்தியப்படும்? ரெண்டு எக்ஸ்-க்ரோமோசம் உள்ள பெண்ணால மட்டுதானே கருமுட்டையை உருவாக்கமுடியும்? பச்சைக்கிளிக்கு ஆணுக்கான ஒரு-எக்ஸ் ஒரு-வை க்ரோமோசத்துல எப்படி கரு முட்டை உருவாகும்?”

“ரெண்டு வழி இருக்கு. ஆரோக்கியமான பெண்ணோட கருமுட்டையில பச்சைகிளியோட மூல அணுக்களிருந்து உருவாக்கபட்ட விந்தணுக்களைப் புகவிட்டு, கருவை உருவாக்கலாம். இப்படி நடந்துச்சுனா, பச்சைக்கிளி அப்பாவா அறியப்பட்டு, அந்தக் கருவை தன் கர்ப்பபையிலிருந்தும் பெத்தெடுக்கலாம் இல்ல சோதனைக்குழாய் மூலமா, இன்னொரு பெண்ணோட கர்ப்பதிலும் வளர்க்கலாம். இது சாத்தியப்படுற இலகுவான முறையும் கூட…”

“இன்னொண்ணு?”

“பச்சைக்கிளிக்குத் தேவைப்படறது வெறும் குழந்தை மட்டுமல்ல, அவள் ஏங்கறது தாய் என்கிற ஸ்தானத்திற்கு, ஒரு பெண்ணா, தன்னோட கருமுட்டையில இருந்து குழந்தை உருவாகனும்னு நினைக்கிறா. மறந்து போயும், தான் ஒரு ஆண் அப்படியிங்கற எண்ணமே கூடாதுன்னு நினைக்கிறா. அப்படிபட்டவளுக்கு மேல சொன்ன மெத்தட் திருப்தியைத் தராது…”

“அதனால?”

“யாரும் செஞ்சி பார்க்காத ஒரு காரியத்தை நடத்த போறேன். பச்சைக்கிளியோட மூல உயிரணுவ பிரிச்சி, அதுல உள்ள வை-க்ரோமோசத்தை இன்ஆக்டிவேட் பண்ண போறேன். அப்படி பண்ணறதுனாலே, பச்சைக்கிளியோட மிச்சமிருக்குற மொத்த ஆண்மையும் அழிஞ்சி, அதன் மூலமா கருமுட்டையை உருவாக்கலாம். பச்சைக்கிளி முழு தாயா இப்படிதான் உருகாண முடியும்.”

அதிநவீன ஆங்கில திரைப்படத்தின் கதையைக் கேட்கிறோமா? அம்மாதிரி படங்களில் தானே, இப்படி விந்தையான விஷயங்கள் யாவும் உருப்பெற்று வரும்? வதனா தலையைக் வேகமாக உலுக்கிக் கொண்டாள்.

“இந்த அம்புலி மாமா கதையெல்லாம் வேணாம் டாக்டர். நீங்க இயற்கையோட விளையாடறீங்க. நீங்க சொல்ற ஸ்டெம் செல், கர்ப்பப்பையை உருவாக்கம் எல்லாம் எனக்கும் லோஜிக்கலா படுது, ஆனா, புராதனமா சீரமைக்கபட்ட மரபணுவ கலைச்சி விளையாடறது ரொம்ப ரிஸ்க் டாக்டர். இதனால, ம்யூடேஷன் ஏதாவது உற்பத்தியானா, பொறக்குறது குழந்தையா இருக்காது, இன்னொரு விலங்கா இல்லை சதைப் பிண்டமா இருக்கும்? நீங்க சொன்ன முதல் சொலுஷனே பெட்டர்ன்ன்னு எனக்குப் படுது டாக்டர்.” நெஞ்சகம் தடதடவென அடிக்க, வதனாவின் முகம் பயத்தில் வெளிரத் தொடங்கியது. பிள்ளையார் பிடிக்க குரங்காய் போய்விடுமோ எனும் பீதி அப்பட்டமாய் தெரிந்தது.

“உனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்காம்மா? இந்து மத புராணங்களைப் படிச்சிருக்கியா?”

“என்ன சொல்ல வர்றீங்க டாக்டர்?”

“சிவன்-விஷ்ணுங்குற ரெண்டு ஆம்பிளை தெய்வங்கள் ஓண்ணு சேர்ந்து, சாஸ்தாங்கிற ஒரு குட்டி தெய்வத்தை உருவாக்கின கதை உனக்கு தெரியும்தானே? அப்படி அவதாரம் பண்ண தெய்வத்த வணங்க, சபரிமலைக்கு விரதம் எடுத்துப் போகலையா?”

“அதெல்லம் புராணம் டாக்டர், நாமே பேசறது சயின்ஸ். ஏன் ரெண்டுக்கும் முடிச்சி போடறீங்க?”

“எதும்மா புராணம்? ஒரு ஆணிலிருந்து பெண்ணை உருவாக்கும் தெய்வத்திற்கு, சந்ததியை உண்டுபண்ண முடியாதா? அப்புறம் எதுக்கு அர்த்தநாரின்னு சிவபெருமானை வணங்குறீங்க? ஆதாமோட விலா எலும்புலேர்ந்துதானே ஏவால் எனும் பெண் வந்தாங்க?”

“டாக்டர் நீங்க மறுபடியும் மிஸ்ட்டிக்கல் விஷயத்தையே பேசறீங்க.”

“சரி, உன்னோட வழிக்கே வரேன். நவீன மரபாய்வுபடி எக்ஸ்-எக்ஸ் (X-X) க்ரோமோசம் பெண்மைக்கானது, ஆணுக்கு எக்ஸ்-வை (X-Y) க்ரோமோசம். ஏன் ஆணுக்கு வை-வை (Y-Y) க்ரோமோசத்தை படைக்கல? எதுக்கு ஆண் தன்மைக்கான க்ரோமோசத்துல, ஒரு எக்ஸையும் வைச்சாரு கடவுளு?

“அறிவியலோட அரிச்சுவடி ஆரம்பிக்கிற முன்னமே, பால் மாற்றமெல்லாம் நடந்திருக்கும் போது, அத ஏன் அறிவியல் மூலமா ஊர்ஜிதப்படுத்த முடியாது? நான் வெறும் நவீன மருத்துவம் மட்டும் படிச்சி இந்த ஆராய்ச்சிக்கு வரல. எனக்குச் சித்த மருத்துவமும் கை வந்த கலைதான். இரசவாதங்குற பேர்ல செம்பைத் தங்கமா சித்தர்கள் ஆக்கி காட்டலே? சித்தர்மார்கள் அணுக்களின் எண்ணிக்கையை மாத்தி, செப்புக் காசைத் தங்கநாணயமா மாத்தியிருகாங்க. அதைதானே, நானும் செய்ய போறேன்? பச்சைகிளியோட வை-க்ரோமோசத்த அழிச்சி, இன்னொரு எக்ஸ்-க்ரோமோசமா மாத்தப்போறேன்? இதுவும் ஒரு விதமான இரசவாதம்தான்” ஓர் ஆணை முழுப்பெண்ணா புனர்ஜென்மம் எடுக்கவைக்கறது நடக்கக் கூடியதுதான்.”

ஆறுமாத பூர்வாங்க வேலைகளுக்குப் பிறகு, பச்சைகிளியின் உடலுக்கு வெளியே தயாரான செயற்கை கர்ப்பப்பைப் பொருத்தப்பட்டு வெள்ளோட்டம் கண்டது. சினையகம் இல்லாத மொட்டை கர்ப்பபையை ஸ்தாபிக்க ஊசிகள் மூலம் ஹார்மோன்கள் செலுத்தப்பட்டன, மிக முக்கியமாக, விந்தணு வங்கியிலிருந்து கொண்டுவரப்பட விந்தணுவோடு பச்சைக்கிளியின் வை-க்ரோமோசம் செயலிழக்கபட்ட கருமுட்டை சினையாக்கபட்டு, கருப்பையில் நடப்பட்டது.

நாட்கள் தோறும் வீங்கிக்கொண்டிருந்தது பச்சைக்கிளின் அடிவையிற்று சுமை, மூன்று கண்களோடும் யோனியின் முனையில் முளைத்த லிங்கத்தோடும்.

7 comments for “கர்ப்ப விதானம்

  1. May 1, 2023 at 1:45 am

    புத்தம்புதிய கதைக் களத்தை கையில் எடுத்திருக்கிறார் படைப்பாளர். இந்தக் கதையை நம்பகத் தன்மையோடு முடிக்க வாழ்வனுபவமும் வாசிப்பனுபவமும் கைகொடுக்கவேண்டும், அவை அவருக்கு உதவியிருக்கிறது.ஒரு சராசரி வாசகனுக்கு இந்த அறிவியல் புனைவு தர்க்க நிறைவைத் தரவேண்டும்.அதற்கான மொழியும் கைகூடி வந்திருக்கிறது படைப்பாளருக்கு. தனக்குள் உருவான ஒரு சிக்கலான கதைக்கருவை அதன் சுவைமாறாமல் வாசகப்பரப்புக்கு தன் எளிமையான கருத்தாழம் கொண்டும் படைக்க முடிந்திருக்கிறது அவரால். ஒரு அரவாணியால் தாய்மைப் பேறு அடைய முடியுமா, அதற்கு நவீன மருத்துவத்தில் இடம் இருக்கிறதா என்ற மிக சிக்கலான வினாவை முன்வைத்து வாசகனையும் அந்த அலைக்குள் இழுத்துச் சென்றுவிடுகிறது கதை. இது நடக்குமா நடக்காதா?. முடியாமா முடியாதா? என்று வாசகனும் தத்தளிப்போடு கதையைப் பற்றிக்கொண்டு முன்னேறுகிறான். தொடக்கத்தில் சராசரி வாசகனும் பச்சைக்கிளியின் நப்பாசைககள் நடக்கவே வாய்ப்பில்லை என்று எண்ணத்தோடு கதைக்குள் நுழையும் போது. ஆசிரியர் வாய்ப்புண்டு என்று தன் அறிவியல் தர்க்கத்தை உள்ளே கொண்டு வருகிறார். கதை இங்கேதான் மேலும் உயிர்ப்போடு இயங்க ஆரம்பிக்கிறது. சராசரி வாசகன் தொடக்கத்திலேயே பச்சைக்கிளியின் அபிலாசையை நிராகரித்துவிட்டு மேற்கொண்டு வாசிப்பைத் தொடரும் போது ,இல்லை அவள் பிள்ளைப்பேறு அடைய மருத்துவ அறிவியலில் வழியுண்டு என்று நம்பவைக்க , வாசகனும் அந்த விவாதத்தின் விசைக்கேற்ப தன்னை கதையோடு இணைத்துக்கொள்கிறான். அவள் தாய்மைப் பேறு அடைய வாய்ப்புண்டு என்று தன் பூர்வாங்க அபிப்பிராயத்தையும் மாற்றிக்கொள்கிறான் அப்போது..அதற்கான ஆதாரங்கள் நம்பும்படியாகத்தான் முன்வைக்கப்பட்டிருக்கிறது. கதை திரட்சியோடு நகரும் கட்டங்கள் இவை என்று சந்தேகமில்லாமல் சொல்லலாம். கடைசியில் கதையை வாசக முடிவுக்கே விட்டுவிடுகிறார். இங்கேதான் அரவாணி உள்ளபடியே பிள்ளைப்பேறு அடைய வாய்ப்புண்டா என்று வாசகன் மீண்டும் வினா எழுப்பிக்கொள்ள வழிவகுக்கிறார். வாசகனைத் தத்தளிப்புக்குள்ளாக்கிவிட்டு கதாசிரியர் விலகிநிற்பது இக்கதையை வலிமையான கதையாக ஆக்கிவிடுகிறது. வாய்ப்பே இல்லை என்று கைவிட்ட பல விடயங்களை மருத்துவ அறிவியல் சாதித்துக் காட்டியபடியே இருக்கிறது.அரவாணிகள் பிள்ளைப்பேறு வாய்க்கவும் அது வகை செய்யலாம் என்ற நம்பிக்கையை கதை நிறுவுவதாகவே படுகிறது. இக்கதை நமக்கு இராஜேஸ் ராமசாமி என்ற நம்பிக்கை மிகுந்த புனைவாளரை அடையாளம் காட்டியிருக்கிறது. மலேசியா மேலும் ஒரு தரமான கதாசிரியரைப் புனைவு உலகுக்குக் காட்டியிருக்கிறது வல்லினம். இராஜேஸ் அவர்களுக்கு கனிந்த வாழ்த்துகள். (இதனை ஒரு குறுநாவலாகக்கூட உருவாக்கியிருக்கலாம். அதற்கான விரிவையும் கொண்டிருக்கிறது)

    • May 1, 2023 at 5:48 pm

      மற்றுமொரு சிறப்பான கதை
      ஒரு திருநங்கைக்கு, செயற்கை கருத்தரித்தல் மூலம்
      குழந்தை உருவாக்குதல் குறித்த அற்புதமான படைப்பு.
      ————-
      உயிரியல், அறிவியல் ரீதியாக சில தவறுகள் , லாஜிக் குறைபாடுகள் இருக்கலாம் கதையில்.
      அது குறித்து நான் அறியேன்.
      ———
      நான் பிரேமச்சந்த் நம்பிராஜன் போல சித்தர்கள் வழியையும் நம்புபவன், அதனால் எனக்குக் கதை பிடித்து இருக்கிறது ,
      ஒரு வருத்தம் சோகமான கிளைமாக்ஸ் (3 கண்கள்) வைக்காமல் நார்மலான மகிழ்வான க்ளைமாக்ஸ் வைத்து இருக்கலாம் கதையில்
      —-
      பூஜா விதானம் என்பது போல கர்ப்ப விதானம் – அழகான தலைப்பு ————- இந்தக் கதையில் வருவது போல
      திருநங்கைகளுக்கும் , திருமணமே வேண்டாம் என்று ஒதுங்கி சுதந்திரமாக இருக்க விரும்பும் பெண்களுக்கும் , ஆண் உதவி இன்றி – செயற்கை கருத்தரித்தல் மூலம்
      குழந்தை உருவாக்குதல் , நடத்த முடியும் என்றால்
      a good change

      • May 2, 2023 at 8:57 am

        உங்கள் செறிவான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே. அறிவியல் சிறுகதைகள் அறிவியலால் நிகழ்காலத்தில் நிகழ்த்தமுடியாத கருக்களைத் தொட்டே துலங்குகிறது. இது புனைவுதான், இது நடக்குமா என அவதானிக்கும் போது, அதற்கான வழிகளை விஞ்ஞானத்தின்பால் கற்பனையாக கண்டறிவதே கதையின் நோக்கு. எனக்கும் கதையைச் “சுபமாக: முடிக்க ஆசைதான். இருந்தாலும், நான் படித்த நவீன மருத்துவமும், உயிரியலும், ஏரணமும் ஒப்புக் கொடுக்கவில்லை. புராதனமாய் பூதம் காப்பதுபோல பாதுகாத்து வரும் மரபு நிரல்களில், பரிசார்த்தமாக ஒரு சில மாற்றங்களை அறிவியல் கொண்டு வந்திருக்கலாம், அது வெறும் ஆராய்ச்சி நோக்கத்திற்காகதான். காலங்காலமாய் மேம்படுத்தப்பட்டு, ஒரு சீரிய கட்டுக்குள் இயங்கும் மரபணுகளின் மிகச் சிறிய அற்பமான மாற்றங்களை, இது போன்ற மரபணு ஆராய்ச்சிகள் கொண்டு வருமே தவிர, மிக ப் பெரிய அளவில் மாற்றியது கிடையாது. தொன்மையான மரபுபணு ஆராய்ச்சி விலங்குகளிலும், நுண்ணுயிரிகளும் செய்ய, உலகம் அனுமதித்திருக்கிறதே தவிர, மனிதனின் அல்ல. மரபணுவைக் கலைபது “பெண்டோரா” பெட்டகத்தைத் திறப்பது போல், அதன் விளைவை அனுமானிக்க முடியாது. இது இரசவாதம் போன்றது, மெத்த மெய்யறிவை கொண்ட சித்தர் புருஷர்களால் முடிந்த ஒன்றை, பலர் முயன்று அபத்தமாக தோற்று போவதை போலதான், மரபணு ஆராய்ச்சிகளும். இதற்கான புருஷன் இன்னும் சில நூறு ஆண்டுகளில் வரலாம்.

  2. May 1, 2023 at 5:55 pm

    தற்கால தமிழ் பிராமண க் குடும்பங்களுக்கு இது ஒரு முக்கியமான சிறுகதை.
    மிகவும் பயனுள்ள கதையும் கூட .
    பெரும்பாலும் பிற சாதிகளைக் காட்டிலும், பிராமண சாதி குடும்பங்களில் மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தியா / ஓர்ப்பிடி , மச்சினன் தொந்தரவுகள் , கொடுமைகள் , மன அழுத்த முறைகள் அதிகம்.
    ————–
    இந்தக் கொடுமைகளுக்குப் பயந்தே பல பெற்றோர் தங்கள் பெண்களுக்குத் திரும்ணங்களைத் தள்ளிப் போடுகிறார்கள், அல்லது மாமனார், மாமியார், நாத்தனார் இல்லாத மணமகன் மட்டுமே தேவை என்கிறார்கள்.
    ———
    இந்தக் கதையில் வருவது போல ஆண் / மண மகன் / உடல் உறவு இன்றி ஒரு பெண்ணிற்கு வாரிசை உருவாக்க முடியும் என்று மருத்துவ ரீதியாக வசதிகள் வந்து விட்டால், சொத்துக்கள் பல கொண்டுள்ள பெற்றோரும் தங்கள் மகள்களுக்கு இந்த வழியாக மரபு தொடர்ச்சி நிகழட்டும் என்று மருத்துவமனைகளில் முகாம் இட்டு விடுவார்கள்

  3. May 2, 2023 at 6:14 am

    மிகவும் சாமர்த்தியமாக எழுதப்பட்டுள்ள கதை. கதையில் உரையாடல்கள் மிகவும் அழுத்தமாகவும், சிறப்பாகவும் இருக்கின்றன. கதாசிரியரின் துறைசார்ந்த அறிவும், அனுபவமும் கதைக்கு மிகவும் பயன்பட்டுள்ளது. தனது பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ என்ற அடையாளத்தை இட்டுக்கொள்ளாமல் தனது இயற்பெயரிலேயே எழுதியது (அவரைப் பற்றி தெரியாத வாசகர்களுக்கு) ஆச்சரியத்தைத் தரக்கூடும். தெரிந்தவர்கள், அவரின் ‘செய் நேர்த்தியை’ பாராட்டாமல் இருக்க முடியாது. இலக்கியம் படைக்க அந்த அடையாளம் தேவையில்லாத ஒன்று என்ற புரிதல் மெச்சத்தக்கது. ஆன்மீகத்தில் அவருக்கு இருக்கும் ஈடுபாடும் கதையை மெருகூட்ட உதவியிருக்கிறது. தூய தமிழிலேயே அறிவியல் வார்த்தைகளையெல்லாம் எழுதியது சிறப்பு.

    ‘இந்த அம்புலி மாமா கதையெல்லாம்..’ என்று ஒரு மருத்துவ வல்லுனரிடம் சாதாரணமாக சொன்னது எனக்கு நெருடலாய் தெரிகிறது. அதோடு, ‘அசமந்தம்’ போன்ற ஒரு சில வார்த்தைகள் உரையாடலில் வருவது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

    நாம் பெருமைக் கொள்ளத்தக்க படைப்பொன்றை எழுதிய கதாசிரியருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்.

  4. மணிராமு
    May 2, 2023 at 10:07 pm

    வணக்கம் அண்ணா. கர்ப்ப விதானம் வாசித்தேன்… அழகான நேர்த்தியான கதை. உங்களுக்கே உரிய மேம்பட்ட மொழியாடல் கதையின் பெரும் பலம். இப்படி நடக்குமா? என சந்தேகிக்கவும் வைத்து… மருத்துவ அறிவியலுக்குள் வாசகனை சிக்கவும் வைத்து… ஆன்மீகத்தையும் துணைக்கழைத்து… முடிவில் ஒரு வெடி வைத்திருக்கும் படைப்பு! அபாரம் அண்ணா! அன்பு வாழ்த்து!

    • தேவமுகுந்தன்
      May 10, 2023 at 4:05 pm

      அருமையான கதைக்கரு. மண்வாசனை தவளும் மொழி நடை. புதிய தளம். எல்லோராலும் சிந்திக்க முடியாத கதைக்கரு. வாழ்த்துகள் ராஜேஷ்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...