ஏறக்குறைய 150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தடத்தை இரு வழிகளில் பார்க்கலாம். ஒன்று இலக்கியங்களைப் படைத்தவர்கள். மற்றது இலக்கிய ஆக்கங்கள்.
சிங்கப்பூரின் முதல் தமிழ் நூலாகக் கருதப்படும் 1872ல் வெளிவந்த முகம்மது அப்துல்காதிறுப்புப் புலவர் எழுதிய முனாஜாத்து திரட்டு, 1887களில் யாழ்ப்பாணத்து சதாசிவ பண்டிதர் எழுதி வெளியிட்ட வண்ணையந்தாதி, வண்ணை நகரூஞ்சல், சிங்கை நகரந்தாதி ஆகிய நூல்கள், தொடக்ககாலத்தின் சிங்கப்பூர் சித்திரத்தை அழகியலோடு எடுத்துக்கூறும் 1893ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வெளியான நா. வ. இரங்கசாமிதாசனின் அதி வினோத குதிரைப் பந்தய லாவணி, சிங்கப்பூரின் முக்கியப் பத்திரிகையாளரான ‘சிங்கை நேசன்’ ஆசிரியர் மகுதூம் சாயுபுவின் எழுத்துகள், மலாயாவின் முதல் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பான 1930ல் வெளியிடப்பட்ட யாழ்ப்பாணம் வல்வை வே. சின்னையாவின் ‘நவரச கதாமஞ்சரி : இவை இனிய கற்பிதக் கதைகள்’, சிங்கப்பூரின் மூத்த படைப்பாளியாகப் போற்றப்படும் எண்ணற்ற நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகளை 1930களிலிருந்து கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் எழுதியிருக்கும் ந.பழநிவேலு என்று குறிப்பிடத்தக்க எழுத்தாக்கங்களின் பட்டியலைப் பார்த்தால், அதில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளிலிருந்து தங்கள் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் இங்கு வந்தவர்களாக இருப்பார்கள். தங்கள் நாடுகளில் தாங்கள் பெற்ற அனுபவம், அறிவை இந்நாடு அளித்த சிந்தனைகளோடு கலந்து படைப்புகளை உருவாக்கியிருப்பார்கள். அவர்கள் எத்தனை காலம் இங்கே வாழ்ந்தார்கள் என்பதைவிட அவர்கள் இந்நாட்டின் வாழ்வியலை எவ்வளவு கூர்ந்து நோக்கி, உள்வாங்கி எழுதியிருக்கிறார்கள் என்பதைக் கவனிப்பதே சிறந்தது.
வெளியான நா. வ. இரங்கசாமிதாசன் எத்தனை காலம் சிங்கப்பூரில் தங்கியிருந்தார் என்பது தெரியாது, ஆனால், அதி வினோத குதிரைப் பந்தய லாவணியில் அவர் காட்டியிருக்கும் சிங்கப்பூரை புகைப்படங்களில் கூட காண்பது அரிது. மிகச் சில ஆண்டுகள் இங்கு வசித்த கனிமொழி, பெருமாள் கோவிலில் கூடும் வெளிநாட்டுத் திறனாளரைப் போல தம் மகனும் வாழ்வில் உயர வேண்டும் என நினைக்கும் தந்தையைப் பற்றி எழுதிய கவிதையில் பல செய்திகளும் அதனூடான வாழ்வியல் வெளிப்பாடும் இருக்கும். 1990களின் இறுதியில் உருவாகத்தொடங்கிய ஒரு சமூகம் குறித்த பார்வையை முதலில் எழுதியவர் அவர் என்றே சொல்லலாம். இங்கு வசதித்தபோது அவர் எழுதிய கவிதைகள், தமிழ் முரசில் புனைபெயரில் அவர் எழுதிய சில கதைகளில் இதைக் காணலாம்.
இந்த வரிசை 1990களின் இறுதியிலிருந்து நீண்டிருக்கிறது. சிங்கப்பூர் இலக்கியத்துக்கு உரம் சேர்ப்பவர்களாக தமிழகத்திலிருந்த வந்தவர்கள் உள்ளனர். பெரும்பாலும் அவர்கள் இங்கு வந்து எழுதப் பழகி, எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்பவர்கள்.
இரண்டாவதாக, ஆக்கங்களைப் பார்த்தால் தொடக்ககாலத்தில் தமிழின் சிறந்த படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்படவில்லை. சமூகத்தை எழுத்தால் படம் பிடிப்பது, மொழியைப் பரப்பவது என்று தொடங்கி, சமூக சீர்திருத்த நோக்கமும் அற போதனையும் பிரசாரமும் மேலோங்கிய படைப்பாளிகளையே எழுதி வந்தனர். ஆரம்பகால சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தின் தேவையாகவும் அது இருந்தது. 1970களின் இறுதியில் தமிழக நவீன எழுத்துச் சிந்தனையின் தாக்கத்தை உள்வாங்கிய நா.கோவிந்தசாமி சுய விமர்சனத்தையும் சமூக விமர்சனத்தையும் முன்வைத்து கதைகள் எழுதத் தொடங்கினார். இளங்கோவன் கவிதைகள் வழி அப்போக்கை மேலெடுத்துச் சென்றார். உதுமான் கனி சில கதைகளை எழுதினார். 1990களின் தொடக்கத்தில் ராஜாராம், அம்ருதீன் என சில இளையர்கள் ஓரிரு கதைகளை எழுதிப்பார்த்தனர். 1990களுக்குப் பின்னர் இங்கு குடியேறிவர்கள் மீண்டும் ஆரம்பநிலையிலே எழுதத்தொடங்கினர். 2000க்குப் பின்னர் ஆக்கங்கள் பெருகித் தொடங்கின.
இந்த இரண்டு தடங்களிலும் இன்றைய சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தைப் பார்த்தால், பல மாறுபட்ட அனுபவங்கள், அறிவுத்தேடல்களுடன் இங்கு வந்து எழுதுபவர்களால் சித்துராஜ் பொன்ராஜ் போன்ற மிகச் சில சிங்கப்பூரையே பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்களாலும் புனைவெழுத்து வலுப்பெற்று வருவதைக் காணலாம்.
பல்வேறுபட்ட சமூகங்களால் ஆன மாறிக்கொண்டே இருக்கும் சிங்கப்பூர் சமுதாயத்தின் வாழ்க்கைப்பாடுகளின் தனித்த தன்மைகள், முரண்கள், இணக்கப்பாடுகளினூடாக இச்சமூகத்தின் பண்பாட்டு அடையாளக்கூறுகளையும் அரசியலையும் வெளிப்படுத்தும் எழுத்துகள் சிங்கப்பூர் இலக்கியத்துக்கு வலுச் சேர்க்கின்றன.
எல்லைகள் கடந்த மனித வாழ்வை எழுதிப் பார்க்கும் இந்த எழுத்துகள், ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்துக்கும் வலுச் சேர்ப்பவை.
கடந்த ஈராண்டுகளில் வெளிவந்த உமா கதிரின் ‘ரோவெல் தெரு மனிதர்கள்’, முகம்மது ரியாஸின் ‘அத்தர்’, கணேஷ்பாபுவின் ‘வெயிலின் கூட்டாளிகள்’ ஆகிய மூன்று நூல்களும் அந்த வகையில் குறிப்பிடத் தக்கவை. இவை எழுத்தாளர்களின் முதல் தொகுப்புகள்.
***
ரோவெல் தெரு மனிதர்கள்
ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் எழுத்து பிரசுர வெளியீடான ரோவெல் தெரு மனிதர்கள் 2021ல் வெளிவந்தது. பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. சிங்கப்பூர் வாழ்க்கையின் வேறொரு முகத்தை அறியத்தரும் கதைகள்.
தோட்டவேலை செய்பவர், சாப்பாட்டுக் கடையில் வேலை செய்பவர், தட்டுக்கழுபுவர், உடல் தொழில் செய்பவர், பாதுகாவலர், வேலையில்லாதர், தெருவில் உறங்குபவர், சைக்கிள் திருடுபவர் முதலிய சிங்கப்பூரின் விளிம்புநிலை மக்களான இக்கதை மாந்தர்கள், வெளி உலகத்திற்கு புதியவர்கள். இவர்களில் வெளிநாட்டினரும் உண்டு சிங்கப்பூரர்களும் உண்டு.
அறியாத ஒன்றின்மீதான அசையாத நம்பிக்கை வழியாக வாழ்வை நகர்த்தும் இந்த எளிய மனிதர்களுக்கு அந்த நம்பிக்கையே வாழ்வின் அறமாக இருக்கிறது. அன்பு செலுத்துவதும், அது அங்கீகரிக்கப்படுவதும் ஆதாரமாக இருக்கிறது. அதில் ஏற்படும் சலனங்கள் அவர்களின் நம்பிக்கைகளைச் சிதறடித்துவிடுகின்றன. தன்மதிப்பினூடாக வாழ்வின் அர்த்தத்தையும், அர்த்தமின்மையையும் காண்பவர்கள்.
வாத்தியார் கதையில் வரும் ‘வாத்தியார்’ வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் 12 பேருடன் ஓர் அறையில் வசிக்கும் தோட்டவேலை செய்யும் தொழிலாளி. எத்தனை சிரமங்களிலும் அறுபடாத அவரது கடவுள் நம்பிக்கை, தமது அன்புக்குரியவருக்குக்கு ஏற்பட்ட பேரிழப்பில் சிதைந்துவிடுகிறது. ‘இப்போதெல்லாம் அலாரம் வைத்துதான் எழுகிறார் வாத்தியார்’ என்ற வரி வாழ்வின் பிடியை இழ்ந்துவிட்ட அவரது மனநிலையைக் காட்டுகிறது.
எலியை நம்பச்செய்து ஏமாற்றியதன் மூலமாக தமது அறத்தைத் தொலைத்து, நிம்மதி இழந்த மேலாளர் ராஜன், மற்றவருக்கு உதவிசெய்வதை தன் வாழ்வின் பிடிப்பாகக்கொண்ட ப்ளூடூத் ஜோஹன், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும் அலியும் சீனுக்கிழவரும், ரொட்டி கோசமும் ஷாகுலும் என்று இக்கதை மாந்தர்கள் எல்லாரிடத்திலும் இந்த அறப்போக்கையும் ஆதாரப்பிடிப்பையும் காணலாம்.
சாப்பாட்டுக்கடை ஊழியனனான ஷாகுலுக்கும் ரொட்டி கோசோமுக்கும் இடையிலான சிறு அன்பு அல்லது கருணை அவர்களது வலியும் துயரும் மிகுந்த வாழ்வின் வடிகாலாக இருக்கிறது. தான் விசாரிக்க ஒருவள் இருக்கிறாள் என்பதில் ஷாகுலுக்கும் தன்னை விசாரிக்க ஒருவன் இருக்கிறான் என்பதில் ரொட்டி கோசோமுக்கும் ஏற்படும் உயர்வுணர்ச்சி அவர்களுக்கு வாழ்வின் பிடிப்பாகிறது. ஒரு நேரம் ஒன்றாக சமமாக உட்கார்ந்து சாப்பிடுவது வாழ்வில் அதுவரை அனுபவித்த சமனின்மைகளைச் சரிப்படுத்திவிடுகிறது. இதேபோல்தான் அலியும் சீனுக்கிழவரும். எதிர்பார்ப்பற்ற கருணை, திருட்டில் அவர்களுக்கு ஓர் அறவாழ்வைத் தருகிறது.
பரவலாகப் பேசப்பட்ட உமா கதிரின் ‘மார்க்கும் ரேச்சலும்’ இதேபோன்றவர்கள். நாட்சம்பளத்துக்கு வேலைசெய்யும் சீனக் கிழவரான மார்க், பிலிப்பீன்ஸ் நாட்டிலிருந்து வந்த தொழிலாளியான ரேச்சல், கதைசொல்லி எல்லாருமே எளிய அன்பிலும் கருணையிலும் வாழ்பவர்கள்.
இக்கதைகளில் உமா கதிர் கட்டம்போட்டுக்காட்டாத மனிதன், சிங்கப்பூர் சமூகக் கட்டமைப்புகளுக்குள் இணைய முடியாது போன உதிரி. நாடு, இனம், மொழி சார்ந்த எவ்வித பெருமிதங்களுக்கும் அவனுக்கில்லை. அடையாளம் இல்லாதவன். கேள்விகளற்று தான் நம்பும் அறத்தில் வாழும் மனிதன். எதுவும் இல்லாத நிலையில் பிடிப்போடும் நம்பிக்கையோடும் நிம்மதியோடும் வாழும் எளிமையான மனிதனின் கதைகளைச் சொல்லும் முதல் நூல் என்பதில் இந்த நூலுக்கு தனி இடம் உண்டு.
இதில் உள்ள பல கதைகள் வளர்ந்த நாடான சிங்கப்பூரின் பல்வேறு சமூக அடுக்குகளை விமர்சனங்களின்றிச் சித்திரிப்பவை. ‘பிணை’ கதை அண்டிப்பிழைக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கையைக் குறுக்குவெட்டாகக் காட்டுகிறது. முகவர் முதல், பல லட்சம் கொடுத்து கூலிவேலைக்கு வருபவன், ஹான்ஸ் விற்பன், உடல் தொழில் செய்பவள், அவர்களை வழிநடத்துபவன், வக்கீல், அலுவலநிர்வாகி, சீன முதலாளி வரை எல்லாரையும் அவரவர் நிலைகளில் காட்டுகிறார். “நினைத்தது உடனே நடந்துவிட நம்மிடம் அதிகாரம் குவிந்திருக்க வேண்டும்” என நினைக்கும் சரவணன் உடனே, “அந்த நிலை நமக்கு எப்போதும் வாய்க்கப்போவதில்லை” என்பதை யதார்த்தமாக ஏற்றுக்கொள்கிறான். “அவன் மொதலாளி தெருவில இறங்கி அவன் ஏன் வேல செய்யனும்” என்று நியாயம் பேசுகிறான். அண்டிப்பிழைப்பதில் முதல் தகுதி கேள்வியே கேட்காது காத்திருப்பது, இரண்டாவது தகுதி தன்னையே முதலாளியிடத்தில் ஒப்புக்கொடுப்பது என சமாதானம் செய்துகொள்கிறான்.
அதேபோல ‘ப்ளூடூத் ஜோஹன்’, ‘உதிரிகளின் பயணம்’, கதைகளில் வரும் ரோவல் ரோடு, பை சைக்கிள் தீவில் வரும் ரோச்சர் ரோடு வாழ்க்கைகளும் இச்சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகள். இந்த அடுக்குகள் எதுவும் நிலம்சார்ந்த வாழ்வால் உருவானயல்ல. இன, மொழி, குடியுரிமை பேதங்களற்றவை. பொருளியல் ரீதியிலான வர்க்க அடுக்குகள்.
சிறு பிள்ளைகளின் அம்மாக்களான ‘களப எயிறு’ கதையின் கரிணியும் ‘பிரார்த்தனை’யின் மெர்சிக்கும் இடையே இந்த அடுக்குகளின் நுண்ணிய வேறுபாட்டை அவதானிக்கலாம். பிரார்த்தனை மிக சாதாரணமான கதை.
இத்தொகுப்பில் மாறுபட்ட கதைசொல்லும் உத்தியில் எழுதபட்டிருக்கும் ‘களப எயிறு’ உமா கதிரின் நல்ல கதைகளில் ஒன்று. மொழி, கதைப் பின்னல், கதை சொல்லும் உத்தி, எல்லாவற்றுக்கும் மேலாக, கதைக்கு அப்பால் மனதில் விரியும் காட்சிகள் என எல்லாமே இக்கதை வாசிப்பை அனுபவமிக்கதாக்குகிறது. மொழி ஆங்காங்கே சற்று தடுக்குகிறது. உதாரணமாக, சைவ உணவுக்கு ‘சைவர்’ என்ற பதத்தை பயன்படுத்துகிறார். அது இங்கு பயன்பாட்டில் இல்லாத சொல்.
சிங்கப்பூருக்கு 2015 வாக்கில் வேலைக்கு வந்தவர் உமா கதிர். சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா என அழைக்கப்படும் இந்தியக் கடைகள் நிறைந்த பகுதியில் ரோவல் ரோட்டில் சில காலமே வசித்தவர். உமா கதிருக்கு இயல்பாகவே மனிதர்கள் மீதுள்ள அக்கறையும் அவதானிப்புமே இந்த சமூகத்துக்குள் அவரை இழுத்துச் சென்றிருக்கின்றன.
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்தான் அவர் பார்த்த வாழ்க்கைகள் இப்போது இல்லை. நெட் புரௌசிங் சென்டர்கள், மஞ்சள் வாடகை சைக்கிள்கள் எல்லாம் எப்போதோ காணாமல் போய்விட்டன.
கால அலை கலைத்துப் போட்டபடியே இருக்கும் இந்தச் சிறு நகரத்தின் வாழ்க்கைச் சுவடுகளை படைப்பிலக்கியங்கள்தான் உணர்வோடு பதித்து வைத்திருக்க வேண்டியிருக்கிறது. இதில் உணர்வு என்பது வாழ்வோடு ஒன்றிய மொழியாலும், பண்பாட்டு செதுக்கல்களாலும் கனிந்தே வரவேண்டியிருக்கிறது. அதனை பாவனை செய்யும்போதே எழுத்து அந்நியப்பட்டு போகிறது. உமா கதிர் பெரும்பாலும் பார்வையாளனாகவே கதை சொல்வதால் அவரிடம் பாவனை அதிகமில்லை. சிங்கப்பூர் சமூகத்தின் ஒரு பகுதியாக தன்னை உள்வாங்கி எழுதப்பட்டிருக்கும் உமா கதிரின் எழுத்துகளில் அத்தனை பலவீனங்களுடனும் கலைவெளிப்பட்டிருப்பது இதனாலேயே.
இந்த வாழ்க்கைகளை அப்படியே சித்திரங்களாக வடித்திருக்கும் உமா கதிர் அந்தச் சித்திரங்களின் வண்ணங்களையும் கோடுகளையும் தனது கற்பனையால் மேலும் அசைத்தால், தமிழ் இலக்கியத்தில் அழியாத் தடம் பதிக்கும் படைப்பைப் படைக்கலாம்.
அத்தர்
உமா கதிர் காட்டுவது சிங்கப்பூர் சமுதாயத்தின் ஓர் அடுக்கு என்றால், ரியாஸ் காட்டுவது மற்றோர் அடுக்கு.
சீர்மை பதிப்பக வெளியீடான அத்தர் 2022ல் வெளிவந்தது. ஒன்பது சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.
அத்தர் மணக்கும் சொற்சரத்தால் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலைப் பின்னும் கதைகள் முகம்மது ரியாஸுடையவை. உமா கதிர் பக்கத்தில் நின்று பார்க்கிறார், இவர் கொஞ்சம் எட்டிப் பார்த்து மூலங்களோடு பிணைக்கிறார். எல்லைகள் கடந்த புலம்பெயர் சமூகத்தின் வாழ்க்கையைச் சொல்கிறார்.
அந்த வகையில் ‘உம்மாவின் துப்பட்டி’, ‘ஷாகிபா சவுண்ட் சர்வீஸ்’, ‘அத்தர்’, ‘சேஞ்ச் ஆலி’, ‘புறப்பாடு’, ஆகியவை தனித்த நிற்பவை.
‘உம்மாவின் துப்பட்டி’யில் துப்பட்டி தேடும் இஸ்மாயில் சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவின் டன்லப் ஸ்திரீட்டை முழுதாகச் சுற்றிக்காட்டி, தமிழகத்தின் துவரங்குறிச்சிக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். ‘அத்தரி’ல் சவுத் பிரிட்ஜ் ரோடு, அராப் ஸ்திரீட், தஞ்சாவூர் என்று எங்கெங்கோ கூட்டிச் செல்கிறார். தமிழகம், மலேசியா, இந்தோனீசியா என்று ‘புறப்பாட்டி’ல் பயணிக்கிறார்.
“பூக்கள்தான் ஞானம்- அதனை எத்தனை முறை கசக்கினாலும் கசக்கிய கரங்களுக்கு வாசனையைத் தவிர வோறொன்றும் தராது,” என்று எழுதும் ரியாஸ் “எல்லோருக்குள்ளயும் பூ இருக்குதானே..” என்று மனம் கனியும் தருணங்களை இந்தப் பயணங்களில் கண்டடைகிறார்.
‘உம்மாவின் துப்பட்டி’ துவரங்குறிச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு சமையல் வேலைக்கு வந்த இஸ்மாயில் தன் முதல் வருமானத்தில் அம்மாவின் நைந்துபோன பழைய பூப்போட்ட துப்படிக்கு மாற்றாக அதேபோன்ற புதிய துப்பட்டி ஒன்றை வாங்கி அனுப்புகிறான். காலம் காலமாகச் சொல்லப்படும் கணவர்களையும் பிள்ளைகளையும் வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு நினைவுகளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து வாழும் அம்மாக்களின் கதை. ஆனால், அதை புதிதாகச் சொல்லியிருக்கிறார் ரியாஸ். தாய், மகன், தந்தை உறவு குறித்த விமர்சனங்கள், மதிப்பீடுகள், விருப்புவெறுப்புகளின்றி, கணவனால் ஏற்பட்ட கையறுநிலை, மகனைப் பிரியும் துயரம், எந்தத் தருணத்திலும் கணவரின் நினைவுகளைப் போற்றுவதில் காணும் தவிப்பு, வறிய நிலையிலும் ஈவதில் பெறும் கம்பீரம் என முரண்கள் நிறைந்த முழுமையான தாயுள்ளத்தை காட்ட முடிந்திருப்பது ரியாஸின் சிறப்பு.
ரோஜா இதழ்களை வேகவைத்து, நீராவித் துளிகளைச் சொட்டுச் சொட்டாகச் சேகரித்து அத்தர் செய்வதுபோல சொற்களையும் தகவல்களையும் தத்துவங்களையும் தேடிச் சேர்த்துக் கோத்து அத்தர் கதையை எழுதியிருக்கிறார். தஞ்சை மண்ணில், மன்னர்களுக்கு பிரத்யேகமாக அத்தர் தயாரித்துக் கொடுத்த ஓர் பாரம்பரியமிக்க தொழிலைத் தொலைத்த குடும்பம், சிங்கப்பூரின் அராப் ஸ்திரீட்டில் மீண்டும் கண்டடைகிறது. சிங்கப்பூர் சமுதாய அடையாளத்துக்கு உரம் சேர்க்கும் வேர்களில் ஒன்று இந்திய முஸ்லிம் சமூகம். அதன் தொன்மத்தை நிலங்களூடாகவும் பண்பாடுகள் வழியாகவும் பிணைத்துக் காட்டுகிறார் ரியாஸ்.
வாசகர்கள் அறியாமலேயே சொற்களூடாக சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, தமிழ்நாடு, இலங்கை என்று எல்லைகளைக் கடக்கவைத்து, அந்தந்த நிலங்களின் மொழி, நாட்டாரியல், பண்பாட்டுப் பின்னணி வழியாக தேடலையும் காதலையும் வலிகளையும் சொல்கிறார்.
உலகளாவிய சமூகத்தின் புலம்பெயர் வாழ்வின் இடைவிடாத ஓட்டத்தின் பித்தான மனநிலையையும் ‘மென்பொருள்’ கதையில் காட்டுகிறார். ஓயாத போட்டியாலும் அதன் வெற்றி தோல்விகளாலும் ஆன இன்றைய நிறுவன வாழ்வைச் சொல்லும் கதை. வெவ்வேறு வகையாகச் சொல்லப்பட்டுள்ள இக்கதையை தன் பாணியில் மென்பொருள் செயல்பாட்டு விவரங்கள் வழியாகச் சொல்கிறார் ரியாஸ். “தோல்வி வலியது. நீரில் நிற்கும் எண்ணெய்க் குமிழ் போல் சமூகத்தில் இருந்து அது விலகி நிற்க வைக்கிறது” எனும் வரிகளில் இன்றைய இயந்திர உலகின் விளைவைக் காட்டுகிறது.
களரியும் அலைகளும் சொல்முறையிலும் கதைப் பின்னலிலும் சிறந்திருந்த போ திலும் கதையெனத் திரண்டுவராதவை. தகவல்களுக்காக எழுதப்பட்ட கதைகளோ என்ற எண்ணத்தைத் தருபவை.
வரலாறு, தத்துவம், தொன்மையியலில் ஆர்வமுள்ள ரியாஸ் அதை அறிவினூடாக புதிய தேடல்களைத் தேடிப் போகும்போது இன்னும் பல புதையல்களைக் கண்டைய முடியும். வாசகனுக்கு வியப்பை அளித்து, அதன் வழியாக அவன் ஊகத்துக்கும் மேலாகச் சென்று அவன் அறியாத ஒன்றையும் சொல்லவது சிறந்த கதையாகிறது. இலக்கியம், சமுதாய வரலாறுகளைப் பிரதிபலிக்கின்ற, படிமங்களாகச் சித்திரிக்கின்றன கலைவடிவம். எழுத்து வெறும் கலை அல்ல ஞானம் என்பதை ரியாஸ் அறிந்திருப்பார்.
வெயிலின் கூட்டாளிகள்
நிலங்களையும் சமூக அடுக்குகளையும் விடுத்து எண்ண ஓட்டங்களிலேயே சஞ்சரிப்பவை கணேஷ்பாவுவின் எழுத்து.
யாவரும் பதிப்பகத்தின் வெளியீடான ‘வெயிலின் கூட்டாளிகள்’ 2021ல் வெளிவந்தது. 15 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.
நடுத்தரவர்க்கத்தினரின், குறிப்பாக நடுத்தரவயதுடையவர்களின் வாழ்க்கை சார்ந்த அகப்போராட்டங்களை தத்துவார்த்தமான சிந்தனைகள், கேள்விகள் வழியாக அலசுபவை இக்கதைகள். வெவ்வேறு வடிவ உத்தியும் கவித்துவமான மொழியும் இவர் எழுத்தின் சிறப்புகள்.
குழந்தைகளின் மனம், அதுகுறித்த பெற்றோரின் புரிதல்களை கூர்ந்த அவதானிப்பில் நுணுக்கமாக அறிந்துவைத்துள்ளார் கணேஷ் பாபு. இந்த உரசல்கள் அவர் எழுத்துகளில் இயல்பாகவும் யதார்த்தமாகவும் கனிந்து வருகின்றன. மெதுவாகக் கற்கும் திறனுள்ள பிள்ளைக்குச் சைக்கிள் ஓட்டக்கற்றுக் கொடுக்கும் தந்தை, தன் இயலமைகளை மகனைத் துன்புறுத்தி சைக்கிள் ஓட்டவைப்பதும், சிறுவன் தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும் விதத்தையும் சிறப்பாகச் சொல்லும் கதை தொலைவு. 10 பக்க கதையின் கடைசி ஐந்து பக்கங்கள்தான் கதை.
மனச்சிக்கல் உள்ள பெண்ணின் மன அவஸ்தையைப் பேசும் ‘கைத்தடம்’, குழந்தையை இழந்த பெண்ணின் மனநிலையைச் சித்திரிக்கும் ‘இருள் பூக்கள்’ ஆகிய கதைகளும் பெண்களின் மன சஞ்சலங்களை காட்சிப்படுத்த முனையும் கதைகள்.
‘கல்மோகினி’யில் கதைசொல்லி, ஈர்த்திழுக்கும் கல்கோட்டை ஒன்றுக்குள் சென்று பார்க்க பரவசத்தோடு கிளம்புபவனுக்கு சென்றுகொண்டே இருக்கும் பாதை ஒரு கட்டத்தில் அச்சத்தை ஏற்படுத்கிறது. “அறியாதை பாதைதான் அயர்ச்சியையும் அலுப்பையும் தரும்” என அதைப்பார்க்கவே முடியாதென முடிவுசெய்து, அறிந்த பாதையில் விரைந்து திரும்புகிறான். அறியாத ஒரு மனத்தின் ஆழம் வித்தைகாட்டிக்கொண்டே இருக்கும். அதுவிட்டுவிலகாது. ஆனால், அது உள்ளேயும் விடாது என்பதை கவித்துவமான நடையில் சொல்கிறது இக்கதை. சூழலும் காட்சிவிவரிப்பும் கல்மோகினியுடனான கண்ணாமூச்சி ஆட்டமும் வாசிப்பதைத் தூண்டுபவை.
காதலினூடாக தொலைத்த வாழ்வை மீட்டெடுக்கும் இளைஞன் ‘டிராகன் பொம்மை’, காதலியான நீண்டகாலத் தோழி அவனுடன் இணைந்துவாழ முடியாதெனக்கூறிச் செல்கிறாள். விமானநிலையத்தில் அவளைச் சந்திக்க முடியாமல் திரும்பும் அவனல்ல ஏமாற்றம் அடைந்தது, கண்ணீருடன் செல்லும் அவள்தான். பாத்திரங்களின் சீனப் பெயர்கள், சைனா டவுன், டிராகன் பொம்மை என்பதையெல்லாம் நீக்கிவிட்டும் இக்கதையை வாசிக்கலாம்.
தொன்மக் கதை மூலமாக, மனித மனதின் அலைவுகளைச் சொல்லும் கதை பிடிகடுகு. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இறந்த குழந்தையைச் சுமந்துகொண்டு இறப்பில்லா வீட்டிலிருந்து ஒருபிடி கடுகு வாங்க அலையும் கோதமி,சிங்கப்பூரின் பூன்லேவிலுல்ள புத்தர் ஆலயத்துக்கு வருகிறாள். அங்குள்ள புத்தபிக்குவிடம் வழிகேட்கிறாள். ஆசையும் மரணமும் ஒன்றுதான் என்பதால் ஆசையை விட்ட யாரிடமாவது ஒரு பிடி கடுகு பெற்றுவந்தால் குழந்தையை பிழைக்கவைக்கலாம் என்கிறார் அவர். கோதமி அங்கிருந்த புத்தர் சிலையின் கைகளில் ஒருபிடி கடுகை வைத்து எடுத்து, அதைப் பிள்ளையின் மேல் தூவுகிறாள். பிள்ளை பிழைக்கவில்லை.
‘அந்தரத்தில் நிற்கும் வீடு’ கதையில் வேதாளம், விக்கிரமாதித்யனுக்கு கதை சொல்லி விடைகேட்கிறது. கரப்பான்பூச்சி இல்லாத வீட்டை பிள்ளைகளுக்கு அளிக்க இயலுமா என்பதுதான் விக்கிரமாதித்யனின் மண்டையைச் சுக்குநூறாகப் பிளக்க வைக்கும் கேள்வி!.
கதையில்லாத கதைகளை எழுதலாம். ஆனால் கதையை வெளியே தூக்கிவைத்துவிட்டு ஆசிரியர் தன் சிந்தனைகளை அதிகம் அலசுவது வாசகருக்கு சலிப்பேற்படுத்தும். சொல்வளத்தைப் பெருக்க வழக்கொழிந்த சொற்களையெல்லாம் தேடி எடுக்கத் தேவையில்லை. எஸ்.ராமகிருஷ்ணனின் நடை, சித்திரிப்பின் பாதிப்பு அதிகமாகவே இருப்பதை கணேஷ் பாபுவே அறிந்திருப்பார். கருத்து விளக்க அம்சங்கள் மிகுதியாகவும் சொற்கட்டு குறைவாகவும் உள்ளன. மனித மன அலவங்களைச் சொல்லும் இக்கதைகள் அடங்கிய குரலில் சொல்லப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதனாலேயே பல கதைகள் கதையென திரளாமல் உள்ளன. இவர் கதைகளின் பலவீனம் பாத்திரங்கள் பெரும்பாலும் தட்டையாக இருப்பது. அவர்கள் தனித்த பார்வையை வெளிப்படுத்தவில்லை. கதைமாந்தர்கள் உயிருள்ளவர்களாக இருந்தாலும் அவர்களது அகச்சிக்கல்கள் உள்ளிருந்து வெளிப்படாமல் சொற்களிலேயே தேங்கிநிற்கின்றன. கதையின் முடிவில் எதிர்பாராத திருப்பம் இருக்கவேண்டும் என்பதில்லை. நல்ல சிறுகதை என்பது கதையம்சம், திடீர் திருப்பம், திடுக்கிடல்கள், இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. தீவிர வாசிப்பாளரான கணேஷ்பாபு, தன் வாசிப்பின் பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டு எழுதும்போது நல்ல கதைகளை எழுத முடியும்.
சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தின் அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்திருக்கும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர்களான உமா கதிர், முகம்மது ரியாஸ், கணேஷ் பாபு மூவரும் தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் வளர்ந்து, வேலை காரணமாக சிங்கப்பூரில் குடியேறியவர்கள். எனினும், சிங்கப்பூர், தமிழகம் என்ற அடையாளங்களுக்கு சிக்கிக்கொள்ளாமல் மனித வாழ்வை எழுதுபவர்கள்.
உமா கதிர், முகம்மது ரியாஸ் இருவரது சிறுகதைகளின் அழகியல் மையமாக எல்லா மனிதருக்குள்ளும் காணும் மனித நேயம் உள்ளது. அது அவர்கள் கதைகளில் மனித எழுச்சியாக உருப்பெற முனைகிறது. உமா கதிர் தான் அறிந்த மனிதர்களிடமிருந்து கதைகளை எடுத்து எழுதுகிறார்கள். ரியாஸ் அந்த மனிதர்களோடு, தான் அறிந்தகொண்ட அடுக்கடுக்கான தகவல்களையும் சேர்த்து கதைகளை வடிக்கிறார். கணேஷ் பாபு இடையறாத வாசிப்பின் வழி திரட்டிய கருத்துகளையும் சொற்களையும் கொட்டுவதற்காக கதை மாந்தர்களை உருவாக்குகிறார். அப்படி உருவாகும் எல்லா மாந்தர்களும் பெரும்பாலும் ஒற்றைச்சிந்தனை உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். அவர் கதைகளில் பிறரைக் காண முடிவதில்லை. இந்த மனிதர்கள் உள்ளுக்குள்ளிலிருந்து கனியும் கருணையையோ, அதன் வழியான மானுட எழுச்சியையோ வெளிப்படுத்த இயலாது இருக்கிறார்கள். கேள்விகளாலும் எண்ணங்களாலும் இந்த மனிதர்கள் உருவாக்கும் செயற்கையான கதைச்சூழலால், கட்டடங்களும் பரபரப்புமான நகர வாழ்வுக்குள் இவர் காட்டும் பசுமையையும் அதனூடான வாழ்வின் குளிர்ச்சியையும் மேலெடுத்துச் செல்ல முடியாது போகிறது.
இலக்கியம் என்பது ஞானப்பரிமாற்றம் என்பார் ஜெயமோகன்.
தத்துவ விவாதங்களையும் அதன்வழியான ஆன்மிகம், தகவல் செறிவினால் பெற்ற அறிவு விசாரம், மனித மனித்தின் அத்தனை சிறப்புகள், போதாமைகள் வழியாகப் பெறும் அறிதல், அற விசாரணை என எல்லாத் தளங்களையும் தொட்டு மலரும் இலக்கியம் நல்ல இலக்கியமாக இருக்கும்.
நவீன இலக்கியத்தின் அடிப்படையாக சமூக விமர்சனம் உள்ளது. தான் வாழும் சமூகத்தைக் கூர்ந்து பார்த்து, அரசியல், தத்துவம், பல்வேறு அறிவுத்தளங்கள் என அனைத்திலிருந்தும் சிந்தனைகளை பெற்று, அதன்வழியான ஞானத்தேடலாக இலக்கியம் அமையும்போது அது எழுதுபவரையும் வாசகரையும் வேறு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. அத்தகைய எழுத்துகள் கதை மாந்தர்கள் ஊடாக பல்வேறு உணர்வு நிலைகளை உருவாக்கும் அதேவேளையில், அந்த உணர்வு நிலைகளைத் தாண்டியும் மனித மனங்களை ஆராய்கின்றன.
உமா கதிர், முகம்மது ரியாஸ், கணேஷ் பாபு மூவரும் சிங்கப்பூரிலேயே தங்கிவிடுவார்களா அல்லது திரும்பிச் சென்றுவிடுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாத ஒன்று. ஆனால், அவர்கள் இங்கு வாழும் காலம் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்கு உரம் சேர்ப்பதாக இருக்கும்.
புலம்பெயர்ந்து சிங்கையில் வாழும் எழுத்தாளர்கள் சிங்கைத் தமிழ் இலக்கியத்தை உலகின் வாசகப்பரப்புக்கு கொண்டுசெல்கிறார்கள். அவர்களால் சிங்கை இலக்கியம் உயிர்பெறுகிறது. இந்த மூன்று நூல்களில் அத்தரை சிங்கையில் என் கையில் கொடுத்தார் ரியாஸ். முதல் தொகுப்பே அவரை அடையாளம் காட்டும் என்று வாசிக்கும்போதே உணர்ந்தேன். புதிய எழுத்து வகை. கதைப் பொருளும் தமிழுக்குப் புதியவைதான். உமா கதிர் நல்ல கதைசொல்லி. கதைகளை யதார்த்த பாணியில் சொல்வதில் மிகுந்த கவனம் செலுத்துவார். இணைய ஏடுகளில் இரண்டொரு கதைகளை வாசித்துள்ளேன்.கணேஷ்பாபு மெய்யியலை கதைக்குள் கொண்டுவந்து கதைக்கு மேன்மை செய்பவர்.அவரின் ஒரு கதை வல்லினத்தில் வாசித்துள்ளேன். இப்புலம்பெயர்ந்து வந்தவர்கள் தாங்கள் வாழும் இடத்தின் வாழ்க்கைச் சிக்கல்களை சிங்கை போன்ற நவீன உலகின் வாழ்வனுபவத்தை அழகாகவே சொல்லிச் செல்கின்றனர். லதா அவற்றின் நுணுக்க வேலைப்பாடுகளைச் சித்திரமாக்கிச் சொல்கிறார். நல்ல கட்டுரை.