சின்னச்சாமி அண்ணா வண்டியை நிறுத்திவிட்டு தூக்கம் தொலைத்த முகத்தோடு சோர்வாக வந்தார். “வாண்ணா” என்று ஸ்டூலை எடுத்துக் கொடுத்தேன். “வேண்டாம்” என்று சொல்லி விட்டு கடைப்பலகையின் வலது ஓரம் அமர்ந்தார். முதுகுப்பக்கம் சட்டை வேர்வையில் ஒட்டியிருந்தது. நான் கடையைவிட்டு இறங்கினேன். தலை குனிந்தபடி தரையில் ஓரிடத்தையே பார்த்தபடி இருந்தார். நேற்று சாயுங்காலம் வந்து நின்றவரை “உக்காருண்ணா” என்றபோது “இருக்கட்டும் வர்றேன்” என்று அப்படியே போய்விட்டார்.
“தாரணி வீட்டில ஒரு மாசமாவே பிரச்சனை. நாளைக்கு என் கூட வா. உதவியா இருக்கும். கொஞ்சம் வெள்ளனாவே கிளம்பி இரு, என் வண்டியில போயிடலாம்.
“சரிண்ணா.”
“கொஞ்ச நாளாவே எனக்கு தூக்கமில்ல. நிம்மதியும் போச்சு. சரி வர்றேன். மாடுகண்ணுக்கு தீவனம் போடணும் அம்மாவும் கனகமணியும் ஜோசியம் கேட்கப் போயிருக்காங்க. கழுதைகள போகவேண்டாமன்னாலும் கேக்கிறதில்ல. அங்க நாளைக்கி பஞ்சாயத்தே நடக்குது. இதுக கூறுகெட்ட தனமா குறிகேட்குறதுக்கும் ஜாதகம் பாக்கிறதுக்கும் ஓடுதுக. சரி பிரசாத் வர்றேன்.”
“இருண்ணா டீ சாப்பிட்டுப் போகலாம்.”
“இல்ல வர்றேன்” சொல்லிக்கொண்டே வண்டியை எடுத்துக் கிளம்பினார். குரலே கம்மி இருந்தது.
வேர்ப்புழு தாக்கிய பருத்தி வெளிறி வாடி நிற்குமே அப்படியொரு சம்பலோடு போகிறார். சின்னச்சாமி அண்ணா வருகிறார் என்றால் முகமெல்லாம் சிரிப்பை அள்ளிக்கொண்டு வருவதுபோல இருக்கும். இப்படிச் சோர்ந்து பேசியதே இல்லை. கணங்கணங்கென பேச்சே இளமையாகத் தெறிக்கும். சுரத்து இல்லாமல் போவதைப் பார்க்க வருத்தமாக இருந்தது.
அண்ணா உரம்தரம் தூக்கிவர அவசரமாக அழைக்கிற போதும் போய்வந்ததுண்டு. அப்பா பக்கவாதம் வந்து படுத்திருந்தபோது தினமும் வந்து கொஞ்சநேரம் பார்த்து பேசிவிட்டுப் போவார். மருத்துவமனையில் சேர்ந்து கூடவே இரண்டுநாள் இருந்தார். அப்பாவிற்கு நீண்டகால நண்பர். என்னையும் நண்பனாக ஆக்கிக்கொண்டார். வயது வித்தியாசம் பாராமல் நண்பராகி விடுவதற்கு ஒருவித அனுசரணைதான் காரணம். திருமணத்தின் போது என் கஷ்டம் உணர்ந்து 50 ஆயிரம் ரூபாயை இந்தா என்று கையில் வைத்துவிட்டு, “உன் கையில் இருக்குறப்போ கொடு,” என்றார். இவ்வளவு வருத்தத்தோடு அண்ணாபோவதைப் பார்த்ததில்லை.
ஜெயராஜ் மாமா மோட்டார் இறக்க அழைத்தபோது எனக்கு கடையில் நிறைய வேலை இருந்தது. ஐயா ஆளைவிடு என்று சொன்னாலும் “ஆளில்லப்பா சும்மா ஒரு கை ஆதரவுக்கு ஆள் இருந்தாபோதும்,” என்று வம்பாக அழைத்துப் போனார். மோட்டாரை படியில் வைத்து வைத்து பெட் வரை இறக்கிவிட்டோம். பிட்டர் நன்றாகத்தான் பிடித்திருந்தார். நான் பின்வாக்கில் எட்டை வைத்து இறக்கி மோட்டாரை தூக்கிக்கொடுத்து வந்தேன். பெட்டிற்கு இரண்டுபடி முன் லேசாக மோட்டார் சரிய இடது காலை வசமில்லாமல் படி நுனியில் வைத்துவிட்டேன். அப்படியே மல்லாந்து மோட்டார் வைக்கப்போட்டிருந்த பெட்கட்டையில் விழுந்தேன். போல்ட்டில் விழுந்திருந்தால் பின் மண்டையைத் துளைத்து தலைக்குள் புகுந்திருக்கும். அந்த நிமிடமே காலியாகி இருப்பேன். யார் செய்த புண்ணியமோ கட்டையில் கழுத்து பட்டு பின் குட்டிக்கரணம் அடித்து தப்பித்தேன். சாயந்திரத்திற்கு மேல் கழுத்து வலி எடுத்து நோவுபிடுங்கத் தொடங்கியது. ஜன்டுபாம், அயோடக்ஸ் என எதைத் தடவினாலும் கழுத்துவலி தீரவில்லை. சரியான கட்டை அடி. தாரணி அக்கா கேள்விப்பட்டு பாலித்தின் பையில் மெனக்கெட்டு ஈனாத பசு சாணத்தை தேவராய புரத்திலிருந்து சந்திரசேகர் அண்ணாவிடம் கொடுத்து அனுப்பினார். சாணம் நெளுகளாக இருந்தது. மூன்றுவேலை ஒத்தடம் கொடுக்க வலி குறைந்தது. கல்யாணத்தின்போது அம்மா சொன்னது. ‘தாரணிக்கன்னே பெறந்திருக்கிறான். ஜோடி பொருத்தமன்னா இப்படி இருக்கணும் என்றது. இருவரும் அழகாகவும் மனமொப்பி மலர்ந்த முகத்தோடு பேசி சிரிப்பதையும் பார்த்து “அருமைடா” என்றது. சந்திரசேகர் அண்ணா அளவோடு அமைதியாக பேசுவதற்குக்கூட எல்லோரிடமும் நல்ல அபிப்பிராயம் இருந்தது. பின்பு ஈனாத பசுமாட்டுச் சாணத்தை உள்ளூரிலேயே அம்மா கேட்டு வாங்கி வந்து ஒத்தடம் கொடுத்தார்.
அப்பா ஆலந்துறையில் தையலகம் வைத்திருந்த காலத்திலிருந்து பழக்கம். அப்பாவை அண்ணா என்று கூப்பிடுவார். அவர் ஏதாவது கேட்டால், கடைக்கு அனுப்பினால் நானும் அப்பா போல அண்ணா போட்டு பதில் சொல்வது பழக்கமாகிவிட்டது. அவருக்கும் அப்பாவைவிட இரண்டு வயதுதான் இளையவர். ஆனால் அப்பாவைவிட ரொம்ப இளையவர்போல் ஒரு தோற்றம் உண்டு. அப்பாவை மாமா என்று அழைத்திருந்தால் நானும் மாமா என்று தான் அழைத்திருப்பேன்.
தோட்டக்காட்டில் குடியிருப்பவர்கள் பெரும்பாலும் அப்போது அப்பாவிடம்தான் துணிகளைத் தைப்பதற்குக் கொண்டுவந்து போடுவார்கள். அப்பாவுக்கு கெட்ட பேரும் உண்டு. “சொன்ன நாளில் தரமாட்டான். ஜவ்வுபார்ட்டி, இழுத்தடிப்பதில் மன்னன், பல்லு தெரியாம சிரிச்சே மலுப்பி அனுப்புவானே. எப்ப போனாலும் இன்று போய் நாளை வாம்பானே,” என்பார்கள். ஆனாலும் பழகியவர்கள் அப்பாவிடம் மறுபடி கொண்டுவந்து தருவதை நிறுத்தியதில்லை. பழைய துணிகளின் கிழிசல்களை மனங்கோணாமல் தைத்து தருவார் என்பதால் வாடிக்கையாளருக்கு ஒருவிதத்தில் நல்லவராகவும் இருந்தார். தோட்டத்தில் குடியிருப்பவர்களுக்கு துணிகளைக் கொடுக்கப்போனால் முருங்கைகாயோ, அகத்திக்கீரையோ, மிளகாயோ எது விளைந்திருக்கிறதோ அதைப் பறித்துக் கட்டித் தருவார்கள்.
அப்பா சாண்டில்யன், ஜெகசிற்பியன், அகிலன், நா.பார்த்தசாரதி, அரு.ராமநாதன் எல்லாம் படிப்பார் என்றாலும் கல்கியை உயர்வாகச் சொல்வார். அப்பா நூலகத்திலிருந்து தூக்கிக்கொண்டு வருவதையெல்லாம் படிப்பேன். என்றாலும் எனக்குச் சாண்டியன்தான் ரொம்ப பிடிக்கும். சின்னச்சாமி அண்ணா “இந்த டெய்லரிங் சத்தத்தில எப்படி இவனுக்கு படிக்க முடியுது” என்பார். “அவனுக்கு சின்ன வயசிலிருந்தே அப்படியே பழக்கமாயிடுச்சு” என்பார் அப்பா. சில சமயம் அப்பாவும், சின்னச்சாமி அண்ணாவும் என்னைக் கடையில் உட்கார வைத்துவிட்டு நூலகத்திற்கு புத்தகங்கள் எடுக்க சைக்கிளில் போவார்கள். “சாண்டில்யன் எடுத்துவாப்பா” என்பேன். அந்த வயதில் பெண்களைப் பற்றிய நுணுக்கமான வர்ணிப்பின்மேல் எல்லாம் அவ்வளவாக மனம் கவிழ்ந்ததில்லை. சாண்டில்யன் நாவலில் வரும் போர்த்தந்திரங்கள், மாந்தர்களின் புத்திக்கூர்மையான பேச்சுக்கள் வியக்கவைக்கும் சாகசங்கள். நொடிப்பொழுதில் எடுக்கும் புதிய முடிவுகள், வியூகங்கள் எனக்குப் பிடிக்கும். சில சமயம் போர் வியூகங்களையும், மாந்தர்களின் சாகசத்தால் எய்தும் வெற்றிகளையும் திரும்பப் படிப்பேன். கன்னிமாடம், மன்னன்மகள், யவனராணி, ஜலதீபம், கடல்புறா நாவல்களை இரண்டு இரண்டு முறை படித்திருக்கிறேன். ராஜமுத்திரை நாவலை தாரணி அக்கா வீட்டில் காந்தி ஜெயந்திக்கு விட்ட விடுமுறைநாளில் வைத்துப் படித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.
தாரணி அக்காவிற்கு பி.வி.ஆரின் ‘கூந்தலிலே ஒரு மலர்’ ரொம்ப பிடிக்கும். எனக்கு அந்த தலைப்பு தரும் குளுமை ரொம்பப் பிடிக்கும். தாரணி அக்கா ஏற்கனவே அந்த நூலைப் படித்திருந்தாலும் தோட்டச்சாலைக்குச் செல்லும் போதெல்லாம் “கூந்தலிலே ஒரு மலர் எடுத்துட்டுவா” என்பார். என் கைக்கு அப்போது சிக்கவில்லை. அப்போதெல்லாம் ரிட்டென் வருவதற்கு முன்பே சொல்லி வைத்துவிடுவார்கள். பள்ளிவிட்டு கடைக்கு வரும்போதே ஐந்துமணி ஆகிவிடும். அதெல்லாம் காத்திருந்து கொத்திக்கொண்டுவர வேண்டிய வேலை.
சின்னச்சாமி அண்ணாவிற்குத் தோட்டத்தில் வேலையில்லையென்றால் கடைக்கு வந்துவிடுவார். எங்கள் ஊரின் பிரிவு பஜார்போல மாறிக்கொண்டிருந்தது. வெள்ளியங்கிரி செல்லும் பிரதானச் சாலையாக இருந்ததாலும் சாலையின் இடவலம் உள்பகுதியில் இருக்கும் சின்ன சின்ன ஊர்க்காரர்கள், தோட்டச்சாலையில் குடியிருப்பவர்கள் வந்து பொருட்கள் வாங்கிப்போக ஏதுவாக இருந்ததால் அப்பாவும் அங்கு தையலகம் போட்டார். எங்கள் கடைக்கு நேர் எதிராக மலையாளக்குடும்பம் ஒன்று வந்து குடியேறியது. பெரிய மாட்டுக் கொட்டகையாக இருந்ததை நான்கு ஓட்டு வீடுகளாக தடுத்து மாற்றி வாடகைக்குவிட்டார் செல்லமுத்துக்கவுண்டர். மேற்குப்பக்கம் வாழைகொல்லை. உள்பக்கம் பெரிய களம். களத்திற்கு வடக்கு விரிந்த மஞ்சள்காடு. ஒருவருடம் மஞ்சள் ஒரு வருடம் பருத்தி, ஒருவருடம் மிளகாய் என வெள்ளாமை மாறும். களத்தைச் சுற்றி தென்னையும் இடையிடையே பாக்கு மரமும் ஓங்கி உயர்ந்த அரண்போல நிற்கும். வடமேற்கு மூலையில் உள்ள பெரிய வேப்பமரத்தின் அடியில் நிறுத்தியிருக்கும் கட்டை வண்டியில் இரு பூனைகள் ஏறி தவ்வி விளையாடும். பால்வாங்கப் போகும்போது களத்தின் ஓரத்தில் நின்று விரிந்த தோட்டத்தைப் பார்ப்பேன்.
மாலையானால் சிறுமிகளும் குமரிகளும் பால் சொம்பைத் தூக்கிக்கொண்டு களத்துக்கு வருவார்கள். கைப்பிடிச்சுவரில் சிறுபாத்திரங்களை வைத்துவிட்டு பசுகொட்டத்தை ஒட்டி போட்டிருக்கும் நீளமான பாக்குமரத்தில் அமர்ந்து சாய்ந்தாடம்மா ஆடுவதுபோல இடம் வலம் உடல் சாய்ந்து பால் கறப்பதைப் பார்ப்பார்கள். பால் வாங்கி வைத்துவிட்டு கன்றுகுட்டியின் வருகைக்காக காத்திருப்பார்கள். வாய்நுரை பொங்க மீதிப்பாலைக் குடித்து வரும் சிவலைக் கன்று காதுவிடைத்து இவர்களைப் பார்க்கும். வாலெடுத்து களத்தில் பாய்ந்தோடி மலுச்சென துள்ளி சடன் ப்ரேக் போடும். களம் முடிந்து பள்ளம் என்பதை அது திடுக்கென கண்டதால் அந்த சடன் ப்ரேக். குழந்தைகள் பின்னால் ஓடி மறித்தால் சிக்காது களத்தை வட்ட மடித்து சிக்காமல் ஓடும். திரும்பி குழந்தைகளைப் பார்த்து வளைந்து வளைந்து ஓடும். பிள்ளைகள் ஓட முடியாமல் தவித்து நின்றால் மெல்ல அருகில் வந்து முகர்ந்து பார்க்கும். மறுபடி வாலெடுத்து மூக்குவிடைக்க பாய்ந்து திரும்பும். அதைப்பிடித்து முத்தம் கொஞ்ச ஓடுவார்கள். குட்டியான மாயக்கண்ணன் வந்து பிள்ளைகளோடு குதித்து குதூகலம் செய்வதுபோல இருக்கும்.
பெரிய கொட்டத்தின் முதல் வீட்டில்தான் ஜெயமாலா வந்து குடியேறினார். களத்துப்பாதைக்கு கிழக்கு நான்கைந்து ஓட்டுவீடுகள். பிரிவில் சின்ன பஜார் உருவாவதற்கு முந்தியே செல்லமுத்துகவுண்டர் தோட்டத்து வேலையாட்களுக்காக கட்டித்தந்தது. மளிகைக்கடை, பட்டறை வந்ததெல்லாம் என் கண்முன்னால் தான்.
ஜெயமாலா நல்ல நிறம். நெளுக்கு நெளுக்காக படிந்திறங்கும் பின்னாத கூந்தல். கண்மையை இமையோரத்தில் நீட்டி விட்டிருப்பார். கண்களை மீன் என்று கதாசிரியர்கள் எழுதியதெல்லாம் ஆமாம் என்று சொல்லத் தோன்றியது. லேசாக தொப்பை போட்ட வயிற்றில் தொப்புள் தெரியத்தான் கட்டுவார். இருபுற காதோரத்தில் அழகாக சுருண்டு தொங்கும் கூந்தல் இயற்கையிலேயே அமைந்ததுபோல இருக்கும். மூன்று வயது பையனை தூக்கி வைத்துக்கொண்டு மலையாளத்தில் தமிழைப்பேசவார். ஜெயமாலா அக்காவின் கணவர் பாலக்காடுக்கு காய்கறி வண்டி ஓட்டிக்கொண்டிருந்தார். பட்டறையை ஒட்டி சன்னாசிமாமாவின் மளிகைக்கடை, கடைக்கு மேற்குப்பக்கம் ரோட்டை ஒட்டி வேதநாராயணன் மரம். மே மாதம் கிளையில் தாம்பாளத்தட்டு அகலத்தில் கொத்துக்கொத்தாக சிவந்து பூத்திருப்பதை கிளைகள் ஏந்தியபடி வரவேற்கும். புத்திளமையோடு மின்னும் அகன்ற கொத்தை முறித்து கையிலேந்தி பார்க்கத் தோன்றுமே தவிர அப்படி முறிக்க மனசு வராது. மற்ற காலங்களில் இலைகளை உதிர்த்து வெறும் குச்சிகளாக இருக்கும். இந்த மரமா இப்படி பூத்து குலுங்குகிறது என்று ஆச்சர்யம் ஏற்படும். முற்றிய இலைகள் உதிரத்தொடங்கி கிளைகள் மட்டும் வெறிச்சென நின்ற காலத்தில் ஜெயமாலா அக்கா வந்தது எங்கள் தையலகத்தில் பெரும் செல்வாக்கு பெற்றது. வேதநாராயணன் மரம் பூத்ததுபோலத்தான்.
நான் அப்போது ஒன்பதாம் வகுப்புத்தான் படிக்கிறேன். நூலகத்திலிருந்து அப்பா கொண்டுவரும் நூல்களைப் படிப்பதில் தீவிரமாக இருந்தேன். என்றாலும் சின்னச்சாமி அண்ணா, தாமோதர் அண்ணா, ஜெயராஜ் மாமா மூவரும் கடையின் தாங்குகட்டையில் பொருத்தப்பட்டிருக்கும் பலகையில் அமர்ந்து ஜெயமாலா அக்காவை நோட்டம்விட்டபடி காதல் பண்ணினார்கள். ஜெயமாலா அக்கா குளித்து முடித்து கூந்தலை உலர்த்த வரும்போதெல்லாம் மூவரும் யார் கண்கள் பக்கம் ஜெயமாலா அக்காவைத் திருப்புவது என்பதில் போட்டி போடுவதைப் பார்த்திருக்கிறேன். ‘நான் அவளைத் தூக்கிறேனா இல்லையா பாரு’ என்று ஜெயராஜ் மாமாவிடம் தாமோதர் அண்ணா கமுக்கமாக சவால்விடுவது போல சொன்னது என் காதிலும் விழுந்தது. படிப்பதைவிட்டு தலைதூக்கியபோது டிக்டிக் டர்ர்ர்ர் டிக்டிக் ட்ர்ர்ர்ர்ரென தையல் அடித்துக் கொண்டிருந்த மிஷினின் சக்கரத்தையும், பெடலையும் அப்பா மெல்ல அழுத்திப்பிடித்து ‘பக்கத்தில் என் பையன் கவனிக்கிறான்’ என்பதுபோல கண்களை அசைத்து நுனிநாக்கை பல்லில் அழுத்தி ச்சௌ என ஜாக்கிரதை காட்டினார். ‘அதெல்லாம் அவனுக்குத் தெரியாது’ என்பதுபோல இடது கண்ணைக் குறுக்கி சமாளித்தார். நான் புத்தகத்தில் மூழ்கினாலும் இவர்கள் பண்ணும் அலப்பரைகள் எனக்குத் தெரியத்தான் செய்தது. அப்பா இருப்பதால் புத்தகத்தில் கவனம் கொள்ளவே செய்ய வேண்டியதாகிவிட்டது. ஜெயராஜ் மாமா ஜெயமாலா அக்காமீது அப்படியெல்லாம் ஆசையில்லை என்று சொன்னாலும் அவர்தான் முதலாளாக வந்து பலகையில் அமர்வார். என் அப்பாவிற்குக்கூட இதில் போட்டி இருந்ததோ என்னவோ, நான் பள்ளிக்கூடத்திற்குப் போய்விட்டபின் அப்பாவும் களத்தில் இறங்கினாரா என்று தெரியவில்லை. தோட்டத்துறவு இருக்கும் பையன்கள் பள்ளிவிட்டால் ஆடுகளையோ மாடுகளையோ இழுத்துக்கொண்டு மேய்ச்சலுக்கு போய் விடுவார்கள். சிலர் மாடுகளுக்காக குறைபோட்ட நிலத்தில் மேயவிட்டு விளையாடுவார்கள். எங்களுக்கு இருக்க சின்ன வீடு இருந்தது. கோமாளி கொண்டை மலையடிவாரத்தில் ஒரு ஏக்கர் மேட்டாங்காடு இருந்தது. அதைகூட பக்கத்துக் காட்டுக்காரர்தான் சேர்த்து உழுதுகொண்டுவந்தார். மார்கழி, தையில் கொஞ்சம் உழுந்து, துவரைகொண்டு வந்து தருவார். அப்பாவுக்குத் தையல் தொழில்தான் எங்கள் பசியை ஆற்றியது. மூன்று அக்காமார்களும் அம்மாவோடு கூலி வேலைக்குத்தான் போனார்கள். கொஞ்சம் படித்தார்கள். அவ்வளவுதான். எனக்குக் கதைகள் வாசிப்பதில் இருந்த ஆர்வம் கடையில் முடக்கியது.
காஜா கட்ட, பட்டிக்கு கைத் தையல் போட, ஓடு தையலை பிரித்துக் கொடுக்க, வெட்டிப்போட்ட துணிகளை ஓரத்தில் தள்ளி குவிக்க, அப்பாவுக்கு அண்ணன்களுக்கு டீ காப்பி வாங்கிவர, தைத்த துணிகளைத் தோட்டச்சாலை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வர, என சின்னச்சின்ன வேலைகளைச் செய்வேன். ஸ்டூலில் ஏறி நின்று இரண்டு துணிகளைத் தேய்ப்பதற்குள் கை கடுத்துவிடும். அப்பா போல நர்விசாக எனக்கு அப்போது தேய்க்கவும் வராது.
பல சமயம் சின்னச்சாமி அண்ணா நூலகத்திலிருந்து எடுத்து வரும் புத்தகங்களை தாரணி அக்காவிற்கும் கோமதி அக்காவிற்கும் கொடுத்து விட்டு வரும்படி அவருடைய அட்லஸ் சைக்கிள் கேரியர் கவ்வியில் கவ்வவைத்து அனுப்பிவிடுவார். குரங்கு பெடல் போடுவதிலிருந்து கம்பிமேல் கால்மாற்றிப்போட்டு ஓட்டக்கற்றுக்கொண்டது அந்த அட்லஸ் சைக்கிளில்தான். கோமதி, தாரணி அக்கா சைக்கிளில் ஊடுகுழாய் இருக்காது. இரட்டை குழாய் வில்லாக வளைந்து கிராங்வீல் குடத்தில் பொருந்தியிருக்கும். ஜெயமாலா அக்காவந்தபின் அக்காக்களுக்கு புத்தகங்களோடு இனிப்புவடை, பஞ்சந்தாங்கி போண்டா, மிச்சர், முறுக்கு, தட்டு முறுக்கு எல்லாம் தனித்தனியாகப் பேப்பரில் கட்டி மஞ்சள் வைத்து கேண்டில்பாரில் இடமிருந்து வலமாக சுழற்றிப்போட்டு விடுவார். அது கம்பியின் வலப்பக்கம் தொங்கும். திண்பண்டங்களைவிட தாரணி அக்காவிற்கு மூன்று புத்தகங்களை எடுத்துப்பார்ப்பதில்தான் ஆர்வம் இருக்கும். சனி, ஞாயிறு என்றால் பிரியமாக வாடா என்று கேரியல் என்னை வைத்து அழைத்துச் செல்வார். நல்லநேரம் எம்.ஜி.ஆர்.போல முன் நெற்றியில் முடியை சுருட்டி விட்டிருப்பார்.
மரங்களிலும் வீட்டுக் கூரைகளிலும் செடிகளிலும் மஞ்சள் வெயில் படர்ந்துகொண்டிருந்தது. பால் தூக்கை எடுத்துச் செல்ல முத்துக்கவுண்டர் களத்திற்குப் போனேன். ஜெயமாலா அக்கா என்னைப் பார்த்ததும் அருகில் வந்து கன்னத்தைத் தட்டி தலையைக் கோதிவிட்டார். தூக்கை திண்ணையில் வைத்ததும் என்னை வீட்டிற்கு அழைத்துப் போனார். பெரிய தட்டில் சூடாகப் பொறித்த ஆறு மீன் துண்டங்களை எடுத்து வைத்து “அப்பாவுக்கும் மாமாக்களுக்கும் கொடுத்திட்டு வா” என்றார். சாலையைக் கடந்து போய் “ஜெயமாலா அக்கா கொடுத்து விட்டாங்க” என்றதும் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். பின் எனக்கும் தந்தார். அப்புறம் என்மீது ரொம்ப பிரியம் காட்டினார். நானும்தான். சரஸ்வதி பூஜை தினத்தன்று நேந்திரம் பழத்தை வேகவைத்து குழாய்ப் புட்டுடன் கொடுத்து அனுப்பினார். நேந்திரம் பழத்தை தேனில் தொட்டுச் சாப்பிட சுவையாக இருந்தது. கடையில் வரவர ஜெயமாலா அக்காவைக் கவர்ச்சியான சொற்களால் சொல்வதுகூடக் குறைந்தது. ஆனால் போட்டி இருந்தது.
“சும்மாதானே இருக்கேன். தைக்கிற சட்டைக்கு நான் காஜா போட்டுத் தர்றேன் வாங்கிட்டு வா” என்று அனுப்பி வைத்து, அப்பா ஏழெட்டு சட்டைகளைக் கொடுத்து அனுப்பினார். லவுக்கைகளுக்கு கைத்தையல் ரொம்ப வேகத்தில் போட்டுத்தந்தார். அக்காவிற்குப் பழக்கம் இருந்திருக்கிறது. பூலுவப்பட்டி சனிக்கிழமை சந்தைக்கு ராலே சைக்கிளில் காய்கறி வாங்க என்னை அழைத்துப்போனது. பையனை நான் மடியில் வைத்துக்கொண்டு போனேன். எனக்குப் பாரகான் செருப்பு வாங்கித்தந்தது ஜெயமாலா அக்கா. அதைப் போட்டுக் கொண்டு பள்ளிக்குப் போனேன். ஜெயமாலா அக்கா ரொம்ப அழகுதான். அவரது நிறத்திற்கும் தேன்கூடு தோடுக்கும் ஒரு தனித்த அழகு இருந்தது. என்தோள் மீது கையைப் போட்டு அழைத்துப் போகும்போதெல்லாம் பெருமையாக இருந்தது. இரண்டு நாட்களாக வீட்டிற்குத் தண்ணீர் வராததால் தோட்டத்திற்குக் குளிக்கப் போனேன். இப்படி அவ்வப்போது நிகழ்வதுண்டு. செருப்பை களத்தோரம் கழற்றி வைத்துவிட்டுக் குளித்தேன். ஜெயமாலா அக்கா இடுப்பில் கைவைத்தபடி என்னைப் பார்த்து சிரித்தது. இங்கேவா என்றது. அங்கிருந்தபடியே நெளிந்தேன். “செருப்ப போட்டுக்கிட்டு குளிக்கமாட்டியா” என்றது. செருப்பு அழுக்கேறி இருந்தது. “குளிக்கிறப்போ தினம்தினம் செருப்ப போட்டுக்கிட்டுக் குளிக்கமாட்டியா” என்றது. செருப்பைப் போட்டுக்கொண்டு குளிக்கும் பழக்கத்தை ஜெயமாலா அக்காதான் சொல்லிக் கொடுத்தது.
சின்னச்சாமி அண்ணா கொடுத்துவிட்ட அளவான பலாபழத்தைக் கொண்டுவந்து தந்தபோது, “அந்த மாமாவுக்கு தேங்ஸ் சொன்னேன்னு சொல்லு,” என்று பெற்றுக் கொண்டது.
பாலக்காட்டுக்குப் போய்விட்டு வந்த அக்கா சின்னச் சின்ன பாலித்தின் பைகளில் மிளகை கட்டிக் கொண்டு வந்திருந்ததை என்னிடம் கொடுத்து அப்பாவின் நண்பர்களுக்குத் தரச்சொன்னது.
அரேபியக் குதிரைக்குப் பின்னால் ஓடும் கழுதைக்குட்டி போலத்தான் இருந்தேன். நல்ல உயரம். எங்கள் ஊரில் அப்படியொரு பளபளப்பு யாரும் இல்லை. அப்படியே மார்பில் முகம் புதைக்கவேண்டும்போல் இருக்கும். ஆனால் எட்டவே எட்டாது. அப்படித் தோன்றும். பயமும் இருந்ததால் விலகியே நடப்பேன்.
ஜெயமாலா அக்கா கணவர் தூங்கி எழுந்து பையனுடன் விளையாடினார். அவனது வெள்ளி அரைஞாண் கயிற்றுக் கொக்கி தேய்ந்து தெறித்துப்போனதால் கொக்கிப் போட்டுக் கொண்டுவர என்னை சந்தைக்கு அழைத்துப்போனது. தங்கம், கவரிங் நகைக்கடையில் புதுக்கொக்கிப் போட்டுக் கொடுத்தார்கள். வரும்போது “டேய் என்ன வச்சு ஓட்டுறா பாக்கலாம்” கேரியரில் நின்றபடி அப்படியே அலுங்காமல் அமர்ந்தது. நான் பெடலடித்துக் காலைத் தூக்கும் போதெல்லாம் பாரம் தாங்காமல் சாயத்தான் செய்தது. முதுகில் அன்பால் தொப்பென ஒரு போட போட்டு, “ஏறுடா” என்று ஏற்றிக் கொண்டு வந்தது.
போட்டி ஐந்து, ஆறு மாதம் நடந்தது. இவர்களால் காதல் சைகைக் காட்டத்தான் முடிந்தது. ஜெயமாலா அக்காவும் புன்னகைத்தவழ கைகளைத் தூக்கி முறுக்குவிட்டோ, பையனைத் தூக்கி முத்தம் கொஞ்சியோ, ரோட்டைப் பார்ப்பது போல பார்வையோடு புன்னகைகளைக் காட்டிப்போகும். கடைசியில் மளிகைக்கடை சன்னாசி மாமா வீழ்த்திவிட்டார் என்பது தெரிந்து கொதித்துத்தான் போனார்கள். “அவன் மளிகைசாமான் கொடுக்குறப்பவே கையில வச்சு நசுக்கிறது மாதிரிதான் தருவான். எத நெனச்சு அப்படி அமுக்கிறான்னு தோணும். கழுதைக்கு நல்லா அள்ளி அள்ளி கொடுத்திருக்கான் காவாளிபயல். சுளுவா வீழ்த்திட்டானே,” தாடை எலும்பு எழ பல்லைக் கடித்துக்கொண்டு கமுக்கமாகப் பேசத்தான் செய்தார்கள். உண்மையில் சன்னாசி மாமா இவர்கள் அளவு நர்விசு பேர்வழி அல்ல. சின்னச்சாமி அண்ணா போல அழகரும் அல்ல. இரண்டு மேல் பொத்தான்களைத் திறந்துவிட்டு மெலுக்கையான சிவந்த மார்பைக் காட்டியபடிதான் கடைவேலையில் இருப்பார்.
விவகாரம் மெல்ல வெளியே தெரியவந்து ஜெயமாலா குடும்பத்தில் அடிதடியெல்லாம் நடந்து கணவன் பாலக் காட்டிற்கே அழைத்துக்கொண்டு போய்விட்டார். காதல் புஷ்வானமாகிப் போனபின் ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்து சிரித்துப்பேசும் போது ஜெயராஜ் மாமா நடித்து வேறு காட்டுவார். துணிவெட்டும் மேசை மேலிருந்த பென்சிலை எடுத்து சின்னச்சாமி அண்ணா நெற்றியில் சுருட்டிவிட்டிருக்கும் குருவிக் கூட்டைப் பார்த்துசிரித்தார். பென்சிலின் கூர்பகுதியை நீட்டி இதுல எம்.ஜி.ஆர்., குருவிக்கூடு வேற வேண்டுமா என்று இழுத்து உழப்பிவிட்டார். சின்னச்சாமி அண்ணா கலைந்த முடியை கட்டைவிரல் சுண்டுவிரலைக் கொண்டு அழகாக நெற்றியில் திருகி மறுபடி குருவிக்கூடாக்கினார். “ஏண்டி உன் கிருதாவில திடுக்கன்னு நரை தெரியுது. அப்ப்பஇத்த்த்ன நாளும் மைய்ய்ய பூசி, மூஞ்சிக்கு எலை மந்தத்துக்கு பவுடர் ஏத்திட்டு வந்ததெல்லாம் பொய்ய்யா? சொல்லு ஜெயராஜ் சொல்லு” என்று தாமோதரன் அண்ணா ஜெயராஜ் மாமாவைப் பார்த்து சிவாஜிபாணியில் கேட்டார். இப்படி ஆளாளுக்கு கேலி செய்து கலாய்த்தார்கள்.
“அங்கப்பாரு எ.து.வு.மே. தெரியாதது மாதிரி உக்காந்திருக்கிறத,” என்று ‘எதுவுமே’க்கு நல்ல இடைவெளி கொடுத்து அழுத்தி ஜெயராஜ் மாமா அப்பாவைப் பார்த்து சொல்லிவிட்டு சிரித்தாரே பார்க்கணும்! ஐந்து நிமிடத்திற்கு மேல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு உடைப்பெடுக்காது அடைத்துக்கொண்ட சிரிப்பால் அங்கும் இங்கும் நடந்து கையைக் கையை அடிப்பதுபோல வீசினார். சிரிப்பு நின்றபோது இரண்டு கண்களிலும் கண்ணீர் கசிந்துவிட்டது. அப்பாவைப் பார்க்க பாவமாக இருந்தது. அசடு வழிய அப்பா அவர்களைப் பார்த்தபோது சங்கடமாகவும் இருந்தது. அப்பாவை ஜெயராஜ் மாமா மறுபடி பார்த்து அடிவயிறு எவ்வ கெக்ஷ் என சிரித்தார்.
ஜெயமாலா அக்கா மிக நல்லகாரியம் செய்தார். அப்பாவின் நண்பர்களைப் பிரிக்கவில்லை. “நச்சன்னு வரத்தெரியுது. லுக் விட தெரியுது. செருப்படி கெடச்சாலும் பரவாயில்லென்னு ஏறிப்போய் கேட்கத் தெரியலையே” என்றார் சின்னச்சாமி அண்ணா பொதுப்படையாக. தாமோதர் அண்ணாவின் சட்டைக்காலரைத் தொட்டு அப்பாவைப் பார்த்தார் ஜெயராஜ் மாமா. “எருமை நாக்கு மாதிரி காலர நீட்டி தச்சுக்கொடுத்த, பட்டிவச்சு பட்டன் போட்ட, ரெண்டுபக்கம் ரெண்டு பாக்கட் வச்சு அதுக்கு மூடி பட்டன் போட்டும் கொடுத்த, அரக்கையில ‘ப’ வெட்டு, அதுல ரெண்டு பட்டன் எங்க பார்த்தாலும் பட்டன். நாக்கு நுனியில ரெண்டு பட்டன்… ‘தாமோதரன் அண்ணாவின் மூக்குத்திப் பூ போட்ட வெளிர் அரக்குநிற சட்டையில் ஒவ்வொரு இடமாகத் தொட்டுக்காட்டி பேசியபடி ‘வசந்தமாளிகை சிவாஜி ரேஞ்சுக்கு தூக்குனயே, ஏதாவது புரோஜனம் இருக்கா,” என்று அப்பாவைப் பார்த்தார்.
“ஆளும் அவனும் மேப்பல்லெல்லாம் சந்து, சிரிச்சா பத்து வாமடை தெரியுது. மூஞ்சியில விழுந்த கொத்தல்கூட மறையல. குண்டி வேட்டி பூராம் எண்ண பிசுக்கு. பக்கத்துல போக முடியாது, வேர்வை நாற்றம் வேறு. இம்மினி கண்ணையும் குத்துக்கழுத்தையும் வச்சுக்கிட்டு போட்டுட்டானே. ஏன் அந்த நெறம் சின்னச்சாமி கிட்ட இல்லையா, தாமோதரன்கிட்ட இல்லையா,” என்று சொல்லியபடி அப்பாவைப் பார்த்ததும் வயிறு பக்க்கென தூக்கி அடிக்க மறுபடி பலகையைப் பிடித்து சிரிக்கத் தொடங்கினார் ஜெயராஜ் மாமா. அப்பா இறங்கிவந்து ‘குசும்பப்பாரு’ என்று முதுகில் தொப்பென போட்டார். எல்லோருக்கும் சிரிப்பு பற்றிக் கொண்டது.
சின்னச்சாமி அண்ணா “மரத்துப்பாத்துக்கிட்டே இருந்தோம். அவன் பழத்த பாத்துக்கிட்டே இருந்திருக்கான்” என்றார். “இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று” அப்பா முணுமுணுத்தபடி கடைக்குள் ஏறினார். தாமோதரன் அண்ணா அவர் பங்குக்கு “துணிகிறவனுக்கு அவமானமெல்லாம் தூசுமாதிரி. நெனச்சத தூக்குறதுல மட்டுந்தான் நோட்டமிருக்கும்” என்றார்.
அப்பாவின் நண்பர்கள் என்னென்னவோ பேசியதுண்டு. ஜெயமாலா அக்காவின் பிரியம் அப்படியே தேங்கி இருந்தது. நான் நினைப்பதுண்டு. திரும்ப ஜெயமாலா அக்காவை சந்திக்காமலேயே இந்த வாழ்க்கை இப்படியே போய்விடுமோ என்று. சில மாதங்கள் தன் பின்னால் பிரியமாக ஓடிவந்த பிரசாத் என்ற பையன் எப்படி இருக்கிறான் என்று அந்த அக்கா நினைக்குமா? இப்போது போய்ப்பார்த்தால் என்ன நினைக்கும்? அருவிபோல ஒரு கணம் ஊற்றெடுக்குமா? வெறும் பாறையில் விழுந்தத் தடமாகத் தோன்றுமா? வெறும் பாறையாகவே தோன்றுமா? அவர் எப்படி இருக்கிறார் என்று பார்க்க விரும்பியதுண்டு. பாலக்காட்டில் எங்கு இருக்கிறார்களோ? பாலக்காட்டில்தான் இருக்கிறார்களா? வேறு எங்கோ போயிருப்பார்களா? எதுவும் நிச்சயமில்லை. ஒரு சந்திப்பு! விட்ட இடத்திலிருந்து தொடரமுடியாத சந்திப்பு. அப்படியே துண்டித்து எதுவுமே நடக்காததுபோல அங்கங்கே இருந்து மறைந்துவிடுமா? அந்த அழகு இன்னும் அப்படியே இருக்குமா? உருக்குலைந்து போயிருக்குமா? அந்தப் பையன் வளர்ந்திருப்பான். இந்த உறவெல்லாம் தெரியாமலே வளர்ந்திருப்பான். எல்லாம் அழிந்த சுவடுகள். இந்த வாழ்வின் விநோதம் புரிவதில்லை.
2
தோட்டச்சாலையிலிருந்து நேராக கடைக்கு வந்தால் இந்தாடா என்று கொய்யாக்காய்களையோ, நெல்லிக்காய்களையோ இலந்தைப்பழங்களையோ பையிலிருந்து எடுத்துத்தருவார் சின்னச்சாமி அண்ணா. அண்ணா வீட்டுக்குப்போனால் அவர்களோடு தோட்டமெல்லாம் சுற்றினாலும் எனக்கு அண்ணா வீட்டில் இருந்த பைண்ட் வால்யூம்களை எடுத்துப் படிப்பதில்தான் மனம் ஓடும். குமுதத்தில் வந்த கடல்புறாவை பூப்போட்ட கெட்டி அட்டையில் பைண்ட் செய்து வைத்திருந்தார். அதேபோல பொன்னியின் செல்வன் பைண்ட் வால்யூம்களில் மூன்றாவது நான்காவது வால்யூம் இருந்தன. பிரித்தால் பைண்ட் வால்யூம் தாள்களின் மக்கல் வாசம்தான் முதலில் மூக்கைத்தொடும். பாலகுமாரனின் ‘பச்சை வயல் மனது’ தொடர் வால்யூம் புதுசாக இருந்தது. அலமாரி தவிர, அண்ணாவே புரசு பலகையில் செய்த 5 அடுக்கு தட்டில் புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார். அண்ணாவின் தோட்ட ஓட்டு வீடு இரண்டு கூம்பு கொண்டது. வீட்டின் பின்புறம் இரண்டுபெரிய பலாமரத்தின் கிளைகள் ஓடுகளின் மேல் படர்ந்து விரிந்திருந்ததால் ஓட்டுவெக்கை இருக்காது. வெளிச்சம்கூட பளிச்சென இருக்காது. ஆனால் ஜன்னலோரம் அமர்ந்து லைட் போடாமல் படிப்பேன். மேற்கு சுவரோரம் இருக்கும் மடக்குக் கட்டிலில் படுத்துக் கொண்டும் படிக்கலாம்.
மு.வ., நா.பார்த்தசாரதி, அகிலன், தேவன் புத்தகங்கள் இருந்தாலும் கடல்புறாவை எடுத்து ஏதாவது ஒரு அத்தியாயத்தைப் படித்துவிட்டுத்தான் மற்றவற்றை எடுத்துப் படிப்பேன். சின்னச்சாமி அண்ணா வாங்கிவரும் கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் இதழ்களைப் புரட்டிப்பார்த்தாலும் எனக்கு நாவல் படிப்பதில்தான் விருப்பம் இருந்தது.
தமிழர்களைத் தொடர்ந்து தாக்கிக்கொண்டும் நீர்வழிச் செல்ல கடல் சுங்கம் தரவேண்டும் என்று தமிழர்களைப் பிடித்து சிறையிலிட்டும் தன்மானத்தோடு போரிட்டு தோற்ற தமிழ்வீரர்களை கழுவேற்றம் செய்து கொடுமை படுத்தி வந்த கலிங்கபீமனை நொறுக்கித் தூள் தூளாக்க வேண்டும் என்று கருணாகர பல்லவன் போரெடுத்துச் செல்லும் காட்சியை திரும்பத் திரும்ப படிப்பதில் தீராத ஆசை இருந்து கொண்டே இருந்தது.
மூசி நதியோ முரட்டுத்தனமாக ஓடக்கூடியது. மிக விரைவாகச் சென்றலொழிய முன் நகர முடியாது. நிலவற்ற கும்மிருட்டு காலம். நட்சத்திர ஒளிகள் தவிர வேறெதுவும் இல்லாத காலமும் நேரமும், கருணாகரப் பல்லவனின் கப்பலான கடல்புறா நிதானித்துச் சென்று தொலைவிலே நிற்கிறது. கலிங்கபீமனின் கப்பலோ பிரம்மாண்டமானது. எப்படியோ இளவரசன் அனபாய குலோத்துங்கன் திட்டப்படி போர் வரப்போகிறது என்று முன் உணர்ந்த கலிங்கபீமன் சுதாரித்து விடுகிறான். கருணாகரப் பல்லவன் பின்வந்த கப்பல்களை முன் செலுத்த முடியாமல் தத்தளிக்கின்றனர். காற்றின் வேகம் பின் தள்ளுகிறது. கருணாகரன் அவர்களை நங்கூரமிடச் சொல்லிவிட்டு கடல்புறாவை மட்டும் இன்னும் கொஞ்சம் முன் செலுத்துகிறான். கன்னங்கரிய இருட்டு. நதியின் ஓட்டம் சலசலக்கிறது. கருணாகரன் கழுத்தில் ஒளிரும் மாணிக்கக்கல் திசைகளில் ஒளிவீசி மரங்களையும் புதர்களையும், மரக்கிளையில் வேட்டைக்காக அமர்ந்திருக்கும் பூனையின் மின்னும் கண்களைக் காட்டுகிறது. தூரத்தே ஒரு கப்பலின் அசைவு தெரிய வீரர்களை துரிதமாக தயாராகும்படி கட்டளையிடுகிறான்.
மாட்டிக்கொண்ட கருணாகரனை கழுவேற்ற திட்டமிடுகிறான் பீமன். ஒரு எட்டு நகர்ந்தாலும் நெஞ்சு பிளக்கும் என்ற ஆணை வருகிறது. புன்னகை தவழ சட்டென தைரியத்துடன் இடப்புறம் ஒரு எட்டு உடம்பை நகர்த்த பின்னால் மறைந்திருந்த காஞ்சனதேவி பீமனின் கழுத்திற்கு குறிவைத்தபடி நிற்கிறாள். திடுக்கென காஞ்சனதேவி நாண் ஏற்றி காப்பாற்றும் இடம் ஆச்சரியத்தை உண்டாக்கும்.
ஓலை கொண்டுவரும் புறா, ஓலையை வளையத்திலிருந்து எடுக்கும்வரை எங்கும் பறந்து போகாது மாறி மாறி அங்கேயே சுற்றுகிறது. ஜெயவர்மனுக்கும் சீனத்து பெண்ணுக்கும் பிறந்த மஞ்சள் அழகி ஓலையை வாசித்ததும் ‘நீ ஒரு எதிரி’ என்பதை சொன்னதும் கருணாகரன் ஆடிப்போகிறான். வந்திருப்பவன் தூதன் இல்லை என்பதை ஒவ்வொரு வரியிலும் ஒரு எழுத்து மட்டும் தடித்து சற்றே பெரிதாக அழுத்தத்தோடு விழுந்திருப்பதை கவனித்துவிடுகிறாள். அந்த தடித்த எழுத்துக்களை கூட்டி வாசிக்கிறாள் ‘எதிரி’ என்று மஞ்சள் அழகியிடம் உண்மையைச் சொல்ல தமிழர்களை மீட்க அவளும் இணைகிறதாக வருகிற இடங்களைத் திரும்ப வாசிப்பதில் எனக்கு தீராத விருப்பம். மற்றவர்களுக்கு குறிப்பிட்ட அத்தியாயங்களைத் திரும்பத் திரும்ப வாசிக்கும் பழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு இருக்கிறது.
கோமதி அக்கா பத்தாம் வகுப்பு வரைதான் சைக்கிளில் போய் படித்தார். கதைகள் படிப்பார் என்றாலும் தோட்டத்தில் வேலை வேலை என்று கிடப்பார். தாரணி அக்கா +2 முடிந்த பின் கல்லூரிக்குப் போகவில்லை. கோமதி அக்காவிற்கு மூலநட்சத்திரம் என்பதால் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டு இருந்தது.
அந்த ஓட்டுவீட்டின் விலாசம் மற்ற தோட்டக்காட்டு வீடுகளில் இல்லை. வீட்டுக்கு முன் பெரிய களம். வீட்டுக்கு வடக்குப்புறம் மாட்டுக்கொட்டம். அதற்குப் பின்புறத்தில் தோட்டத்திலேயே தொழுகுப்பை. வடகிழக்கில் கூரையில்லாத குளியல்அறை. அதனை ஒட்டி கிணற்று டெலிவரி குழாய் நீர் விழும்படி பதிமூன்றடி உயரத்தில் பில்லர் தொட்டி, சமையலுக்கு சிறிய ஓட்டுச்சாலை, தென்கிழக்கில் அதை ஒட்டி கோழிகளை அடைக்க நான்கைந்து பெரிய கூடைகள், பெரிய மக்கிரிகள், சாக்குப்பைகள், மண்வெட்டிகள், முள்கவை எல்லாம் தாழ்வாரத்தடியில் இருக்கும். எப்போதும் ஒரு கோழி ஏழெட்டு குஞ்சுகளோடு வரப்போரமோ, குப்பை மேட்டிலோ வண்டித்தட வரிசை தென்னைமரத்தடி ஈரத்திலோ கிளரிக்கொண்டு இருக்கும். வானில் பருந்தோ வலசாரையோ பறந்தால் பாட்டி நடுத்தோட்டத்தில் பருத்தி எடுத்துக்கொண்டு க்கூய் என்று குரல் கொடுப்பார். ஈரவாய்க்கால்களைக் கிளரிக்கொண்டு நெளியும் மண்புழுக்களைக் கொத்தி எடுத்து குஞ்சுகளுக்குப் போட்டுக் கொண்டிருக்கும் பவளக்கால் நூலான் தலைநீட்டி கொர்ர்ர்ரென கத்த கேர்ர் என்றதும் விலகிப்போய் கிளரிக் கொண்டிருக்கும் குஞ்சுகள் எல்லாம் ஓட்டமாய் ஓடிவந்து தாய்க்கோழியின் காலடியில் பதுங்கி தலைசாய்த்து வானைப் பார்க்கும். காகம், கீரி, கருங்கால் கிளிமூக்கன், வெள்ளையன், பொன்றன் நிறங்களில் பெரிய பெரிய சேவல்கள் திரியும். ஒன்றையொன்று பறந்து தாக்கத் தொடங்கும் வயது வந்துவிட்டால் கால்களில் தும்பை மாட்டி பந்தல் கால்களில் அல்லது தென்னைமர நிழல் விழும் களத்தோரம் பதிந்திருக்கும் இரும்பு வளையங்களில் கட்டி வைத்துவிடுவார் சின்னச்சாமி அண்ணா.
3
கோமதி அக்காவிற்கு மங்கல்பாளையத்திலிருந்து வந்த சம்பந்தம் நல்லபடியாக முடிந்துவிடும் என்றுதான் இருந்தது. யார் என்ன சொன்னார்களோ நின்றுவிட்டது. “மூலநட்சத்திரமன்னு எவன் எழுதிவச்சான்? கிழிச்சுபோட்டு ருதவான நேரக்குறிப்ப மட்டும் கொடு சின்னச்சாமி. ஜாதகம்தான் குடும்பம் நடத்துதோ. நீ அஞ்சு பவுன் சேத்துப்போடுறேன்னா வாயத் தொறந்திட்டு சரியம்பான். விடு, அடுத்து நல்ல எடம் வரும்?” அப்பா சொன்னதற்கு, “அடுத்தும் ஒண்ணு நிக்கிதல்லண்ணா ஒரு பிள்ளைக்கு மட்டும் ஏர்க்கையா பண்ண முடியுமா” என்றார் சின்னச்சாமி அண்ணா.
அந்த சமயத்தில் கோமதி அக்காவிற்கும் தாரணி அக்காவிற்கும் தைத்த சட்டைகளையும் பாடர் பிடித்த நான்கு சேலைகளையும் சாரதா சில்க்ஸ் பையில் எடுத்துக்கொண்டு போனேன். வாய்க்கால் பள்ளம் போகும் பாதையின் இருபுறமும் தென்னந்தோப்பு. பூவரசமரம் தோட்டத்து விஜி டீச்சர் வீட்டிலிருந்து வண்டிப்பாதை வழியாக சரண்யா புத்தகத்தையும் நோட்டையும் நெஞ்சில் அணைத்துக்கொண்டு வருவது தெரிய சைக்கிளை மெதுவாக விட்டேன்.
+2 போகிறாள். எனக்கும் விஜி டீச்சர்தான் கணிதம் எடுத்தார். நல்லவேளையாக ஆங்கிலத்தில் தோற்றேன். டீச்சரிடம் டியூசன் வந்து படிக்கவில்லை. “பரவாயில்லே மேக்சில பாசாயிட்ட. இங்கிலீசு எப்படி போச்சு?” என்றார். எதையோ சொல்லி சமாளித்தேன். வைத்திருந்த பிட் கேட்கவில்லை என்பதும் ஒரு காரணம். அக்டோபருக்கு மொட்டை மனப்பாடம் செய்திருந்த சன்ஃபுலவர் ஸ்டோரியிலிருந்தும் தி லாஸ்ட் லீப் பாரகிராப்பிலிருந்தும் கேட்டிருப்பதைக் கண்டுதான் எனக்கு உயிரே வந்தது. அக்டோபரிலேயே ஆங்கிலத்தாளை பார்டரில் முடித்து தப்பித்தபோதுதான் அப்பாடா என்றிருந்தது.
வண்டித்தடத்திலிருந்து வாய்க்கால் சாலையில் நுழையும் கணப்பொழுதில் ஓரக்கண்ணால் பார்த்து சட்டென தெற்குமுகமாக நடந்தாள். கே.பி.ஆர்.பண்ணைத் தோட்டத்தின் முள்வேலியில் கோவைக்கொடிகளும், வேலிப்பருத்தி கொடிகளும் விட்டுவிட்டுப் படர்ந்திருக்கின்றன. வேலிக்கு அப்பால் மிளகாய்ச்செடிகள் கோவைக் கொடி படராத பகுதியில் தெரிந்தன. தோட்டத்தில் இருந்து கொடிபடராத இடைவெளியில் பார்த்தால் சாலையில் நடப்பவர்கள் தெரியும். வேலி நீளத்திற்கும் கொடிபடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. பெல் அடிக்கலாமா என்று வைத்த பெருவிரலை அடிக்காமல் எடுத்துவிட்டேன்.
தளர்வாகப் பின்னிய ஒற்றைச்சடையில் மெல்லிதாக பிசிறுகள் பறக்கின்றன. கொடிகளின் நாவுகள் போல அசைகின்றன. நீண்ட சடையின் நுனி இடவலம் சரிந்து நகர்ந்து சரிந்து நகர்ந்து உயிர் கொண்டு வாலாட்டுகிறது. இந்த வாய்க்கால் செல்லும் பாதையில் போனால் பாலம் தாண்டி வாய்க்கால் கரையின் வலப்பக்க தோட்டத்து வீடுகளில் நான்காவது வீடு தாரணி அக்காவீடு. அதற்கு அடுத்து இரண்டு தோட்டங்கள் தாண்டி சரண்யா தோட்டமும் வீடும். ஊரிலிருந்து பேருந்து சாலையிலே பள்ளிக்குப் போவதுதான் வழக்கம். அப்படிப் போகாமல் மின்சார வாரியத்தைக் கடக்காமல் அந்தப்பக்க வாய்க்கால் கரைவழியாக வந்தால் சரண்யா தோட்டத்தைத் தாண்டியபின் தாரணி அக்கா தோட்டம். அப்படி அந்த பக்கமிருந்து சரண்யாவை பார்க்கலாம் என்று வந்தபோதுதான் “என்னடா மெயின் ரோட்டுல போகாம இப்பிடி சுத்தி போற?” என்று கேட்டது தாரணி அக்கா. நல்லவேலை, “சிவகாமி அத்தை வீட்டில துணிய கொடுக்க வேண்டியிருந்தது” என்று சொல்லி தப்பித்தேன். வாய்க்கால் கரை நுழைந்து பெரிய சவுரிமரம் ஒட்டிய பாக்குத்தோப்பு சிவகாமி அத்தையுடையது. பத்தாம் வகுப்பை தொம்புளிபாளையத்தில் முடித்து +1 ஐ எங்கள் பள்ளியில் சேர்ந்தபின் தான் சரண்யாவை அடிக்கடி பார்க்க வேண்டும் என்று ஆசை தோன்றியது.
அரக்குநிற சுடிதாரிலும் இடையின் டிடிக் டிடிக் வெட்டு நடையில் துள்ளிவிழுகிறது. காதோரம் பறக்கும் முடிகளைக் கோதிவிட்டுக் கொண்டாள். இடது கை முட்டிவரை மூங்கில் கணுவைப்போல நேராக வழவழப்பாக இறங்கி சட்டென முழங்கையிலிருந்து முன் கை அழகாக சாய்ந்து போகிறது. என் கையைக்கூட அப்படி நீட்டி வைத்துப் பார்த்தேன். அந்த வளைவு வரவில்லை. பெண்ணுக்கே உரிய வடிவு. அதில் இந்த சன்னம் பருவத்தின் அம்சம். +2வில் நான் தோற்றப்பின் இந்தப்பக்கம் வரவே வெக்கமாகிவிட்டது. ‘பெயிலாயிட்டையா’ என்று கேட்டு விடுவாளோ என்று பரிகசிப்புக்கு அஞ்சி வாய்க்கால் கரைவழி வராமல்தான் இருந்தேன். சிவகாமி அத்தை வரச்சொல்லி பலாப்பழம் கொடுத்ததை வாங்கிக்கொண்டு இந்தப் பக்கமாக வந்தபோதுதான் சைக்கிளில் எதிராக வந்தவள் காத்தாடி மரத்திற்குப் பக்கம் இறங்கி நின்று “பழைய கொஸ்டின் பேப்பர் இருந்தா தர்றீங்களா” என்றாள். நானும் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றுதான் பழைய வினாத்தாளை எல்லாம் சேர்த்து வைத்தேன். அதிலும் அக்டோபர் தேர்வு எழுதியவன் என்பதும் தெரிய வருவதை நினைத்துக் கூசினாலும் சரி என்றேன். மறுநாளே எல்லா தாள்களையும் எடுத்து தூசிபோக தட்டி துடைத்து அளுக்களுக்காக வைத்து பாலத்தில் கொண்டு வந்து கொடுத்தேன்.
மேற்புறம் கருப்பும், அடிப்புறம் வெள்ளையும் கொண்ட ஆள்காட்டி குருவிகள் வாலிறகு வெட்டி வெட்டி குதிக்க சாலை ஓரம் பூச்சிகளைத் தேடி நீண்ட கூர்மையான மூக்கை நீட்டி சற்று முன் தள்ளி நடந்தன. செம்மன் மெட்டல் போட்ட பாதையில் சைக்கிள் சக்கரத்தில் ஒட்டிய குறுமணல் மர்கார்டில் சிடிசிடிசிடிவென அடித்து உதிர்ந்தன. மார்காடில் பட்டு பொடிமணல்கற்கள் உதிரும் ஓசை தோட்டத்தில் வேலை செய்பவர்களை எழுந்து பார்க்க வைத்து விடுமோ என்றிருந்தது. ஆள்காட்டி குருவியின் வால்துடிப்பு போல நெஞ்சில் திடுக் அடிப்பதை நன்றாகவே உணர முடிந்தது. சைக்கிளைவிட்டு இறங்கியபோது தலையை லேசாக சாய்த்துப் பார்த்து உதடுகள் லேசாக குறுகுறுக்க சிரித்தாள். “எங்க போறீங்க? தாரணி அக்கா வீட்டுக்கா” கேள்வியும் பதிலுமாகக் கேட்டாள். “ஆமாம் என்று சொல்லும் போதே சைக்கிளுக்கு வலப்பக்கம் ஒதுங்கி நடந்தாள். இடப்பக்கமாக பாதை ஓரம் நடந்தால் சைக்கிளை உருட்டியபடியே சரண்யாவின் வலத்தோள் பக்கம் பட்டும் படாமலும் நடக்கலாம் என்று இறங்கியதை அவள் யூகித்துக்கொண்டாளோ என்னவோ பாகம் பிரித்ததுபோல சைக்கிளை உருட்ட வேண்டியதாகிவிட்டது.
“வர்ற வருசம் காலேஜிக்கா” என்றாள்
“ஆமா”
“எந்த காலேஜீக்கு”
“கவர்மண்ட் காலேஜ். இல்லையன்னா பேரூர் சாந்தலிங்க அடிகளார் கல்லூரி. நீ”
“பி.எஸ்.ஜி.யில மேக்ஸ் எடுக்கலாமன்னு இருக்கேன்”
“ஏன் கவர்மண்ட் காலேஜிலயும் இருக்குதே”
“அங்கேயும் போடணும், அப்பா என்ன சொல்றாறோ நீங்களும் பி.எஸ்.ஜி.யில போட வேண்டியதுதானே”
“ஆமா அங்கயும் போடணும்”
+2 மதிப்பெண்ணே 783 தான் இந்த மதிப்பெண்ணிற்கு இயற்பியலோ கணிதமோ அங்கு கிடைப்பதற்கு சாத்தியம் இல்லை. ஆனால் சரண்யா சேரும் கல்லூரியில் வரலாறோ, தாவரவியலோ அதுவும் இல்லையென்றால் தமிழோ கிடைத்தால்கூட சேர்ந்துவிட வேண்டும் என்று தோன்றியது.
ஒரு தினுசான மெல்லிய குறுகுறுப்போடு கூடிய மகிழ்வின் புதுமை முகமெல்லாம் படர பார்த்தாள். அதில் மூக்கின் சுளிப்பும் முன் பல் லேசாக தெரிய வெளிப்பட்ட சிரிப்பும் என்னவோ பேச வருவதுபோல் இருந்தது. குமரிக்கே உரிய நளினபருவத்தின் நயனம்.
“நீங்க நிறைய புத்தகம் படிப்பீங்களாமே.”
“லைபரேரியில இருந்து அப்பா புத்தகங்கள் எடுத்து வருவார். எனக்கும் அப்படியே பழகிப்போச்சு.”
“உங்களுக்கு என்ன மாதிரி புத்தகம் பிடிக்கும்?”
“யவனராணி, கடல்புறா, மன்னன் மகள் இப்பிடி…”
“அதெல்லாம் ராஜா ராணி கதை தானே?”
“ஆமா ஆனா அது பிரமாண்டமா இருக்கும். பெரிய பெரிய போர் நடக்கும். நீ படிச்சிருக்கியா?”
“இல்லைங்க. +2 முடிச்சிட்டுத்தான் படிக்கணும். மார்க் ஸ்கோர் பண்ணணும். போனவருசம் லீவில கரையெல்லாம் செண்பகப்பூன்னு ஒரு நாவல் படிச்சேன்.”
“நல்லா இருந்திச்சா?”
“ம்ம். ஆனா கடைசியில வேற ஒரு பயமான கதைய ஒரு பாழடஞ்ச பங்களாவில வச்சு சொல்லியிருப்பாரு. டவுனில் இருந்து பாட்டு சேகரிக்க ஒருத்தர் வருவாரு. அது நல்லா இருந்திச்சு.”
கொஞ்சும் புன்னகையோடு பேசிக்கொண்டு போவதில் வெளியில் காட்ட முடியாத துடிதுடிப்பும் சொல்லமுடியாத மகிழ்ச்சியும் பொங்கியது. இப்படி இந்த நேரத்தில் அல்லது பள்ளிக்குச் செல்லும் நேரத்தில், பள்ளிவிட்டு வரும் நேரத்தில் தினம்தினம் பேசிக்கொண்டு வரவேண்டும் என்று தோன்றியது. வானில் துண்டுமேகங்கள் மிதந்து கிழக்கால் செல்கின்றன. பாக்குத்தோப்பும், தென்னந்தோப்பும் உயர்ந்து வெளிச்சத்தை குளிரவைத்துக் கொண்டிருக்கின்றன. சைக்கிளில் பச்சை வெள்ளைச்சோள தட்டை செமையோடு வருபவருக்கு வழிவிட்டு நடந்தார்கள். அவருக்கு கட்டிய உருமால்கூட தளர்ந்து புருவத்தை மூடியிருந்தது. மெல்லிய காற்றுக்கு நெற்றியில் விழுந்து புரளும் முடிகளை இடது கையால் ஒதுக்கியபோது முகத்தில் அபூர்வமான சிரிப்பு தோன்ற அப்படியே என் ஆவியைப் பற்றியது. மின்சார கம்பிகளுக்கு மேல் உயர்ந்து சாலை பக்கம் லேசாக வளைந்த தென்னை மரங்களின் மட்டைகளில் பச்சை குலைகள் இறுக்கத்துடனும் பளபளப்புடன் தாங்கும் மட்டையில் கிடந்தன. சரண்யாவின் மார்பகங்களைப் பார்க்கலாமா என்று தோன்றியது. தவிர்க்கவேண்டும் என்பதற்காக நெற்றியை கவனமாகப் பார்த்துவிட்டு முன்னே பார்த்தேன். சாலையோரத்தில் கருங்குலையும் அருகும் விட்டுவிட்டு அடர்ந்திருக்கும் பகுதியில் கிடேரியையும் பசுவையும் பக்கத்துத் தோட்டத்து அம்மா மேய்த்து கொண்டிருக்கிறாள். சிவலைக்கிடேரி கருங்குலையைப் பறித்து மென்றபடி கண்களைத்திரட்டி நாங்கள் கடந்து செல்வதைப் பார்த்தது. தின்னு தின்னு நானு ஒன்னும் சொல்ல மாட்டேன் என்பதுபோல அந்தக் கன்றை சரண்யா பார்த்தாள். அதன் தாடையில் நாயுருவி விதை பொட்டுகள் ஒட்டியிருந்தன. தண்டில் அடுக்கடுக்காக இருக்கும் பொட்டுகள் நாக்குக்கு சொரசொரப்பாக இருக்கும். கரிச் கரிச்சென மெல்லுவதற்கு உகந்த செடி.
வாய்க்கால்கரை புளியமரம் தாண்டியதும் மாதைய தாத்தா தோட்டத்து களத்திலிருந்து கரும்புள்ளி நாய் எழுந்து குரைத்தது. எனக்கு கொஞ்சம் பழக்கம்தான். இருந்தாலும் அது தனது எச்சரிக்கையைக் கொடுத்தது. வால்கூட மேலே சுருளும் முன்னே தொங்கியபடி குறைத்ததும் ‘உன் கடமை உணர்ச்சிக்கு அளவில்லை. அங்குவந்து உன்ன வச்சுக்கிறேன்’ மனதில் சொல்லிக்கொண்டேன். ‘வச்சிக்கிறேன்’ என்றால் அங்கு போகும்போது தலையையும் முதுகையும் தடவிக் கொடுப்பதைத்தான். வழக்கமாகச் செல்லும் சரண்யா என்பதை உணர்ந்து குறைப்பதை நிறுத்தி செல்லச்சடவை முன்கால் நீட்டி முறுக்குவிட்டு நீக்கியது. என்னையும் யூகித்திருக்கும். நம்ப பய என்று. தெரியாத்தனமாய் குரைத்துவிட்டேன் என்று மெல்ல வாசல் பக்கம் போனது. தோட்டத்தில் அவரை பூவெடுக்கும் பருவத்தில் அரும்பும் மொட்டுமாக காம்புகள் நீண்டிருக்கின்றன. ஒரு கொத்தை முறித்து எடுத்து அப்படியே கொண்டையில் வைத்துக்கொள்ளலாம். கொண்டை நிறைய பூவாகிவிடும். சென்ற ஆண்டு தாரணி அக்காவின் வீட்டு பலா மரங்களின் கிளைகள் ஓட்டுக்கு மேல் அடர்ந்து பந்தல் போட்டிருப்பது தெரிந்தது. சென்ற ஆண்டு பலாக்காய்களின் பாரம்தாங்காமல் முறிந்து விழுந்த கிளையின் சிகட்டை இளஞ்சிவப்பில் தெரிந்தது. மேலே ஏறி பழத்த இரண்டு பலாப்பழத்தை வெட்டி இறக்கியிருந்தால் கிளை முறிந்திருக்காது. சல்லையைப் போட்டு பழுத்த பழத்தை இழுக்க பாரம் தாங்காமல் பிஞ்சும் காயும் பழமுமாக கிளை முறிந்து விழுந்தது.
மெல்ல சரண்யாவை முன்னால் போகச் சொல்லலாமா என்று நினைத்தாலும் சொல்லவில்லை. தாரணி அக்காவிற்கு பயந்து வெட்டிவிடப் பார்க்கிறானா என்று நினைத்து விடுவாளோ என்று கூடவே நடந்தேன். தாரணி அக்கா தோட்டக்களத்தின் தாழ்வார கல்தூணில் சாய்ந்து வீட்டைப் பார்த்தபடி யாரோ நின்றிருப்பது தெரிந்தது. முகம் அந்தப்பக்கம் இருந்ததால் யாரென தெரியவில்லை. பாட்டி சமையல் கட்டு கிழக்குத் தாழ்வாரத்திலிருந்து நீண்ட கழியை எடுத்துக்கொண்டு வருவதைப் பார்த்தபோது தான் தாரணி அக்கா வெண்டைக்காய் காட்டிலிருந்து எங்களைப் பார்த்துக்கொண்டே வருவதை கவனித்தேன். சரண்யாவிடம் கேண்டில் பாரில் கைவைத்தபடி லேசாக டாட்டா காட்டிவிட்டு சின்னச்சாமி அண்ணா தோட்டத்து வண்டிச்சாலையில் இறங்கினேன். வெண்டை காய்ப்பு பருவத்திற்கு வந்துவிட்டது. அரும்பும் பூவும் பிஞ்சுமாக வரிசை சீராக நிற்கின்றன. வாய்க்கால் ஈரப்பதத்தில் மருந்தடித்துப்போன தடம் விழுந்திருக்கின்றன. கோரையும் அருகும் மறுபடி தலை காட்டுகின்றன. செடி இடுப்புக்கு மேல் வளர்ந்துவிட்டதால் இனி களை ஒன்றும் செய்யாது. தோட்டத்தைச் சுற்றி நிற்கும் தென்னை மரங்களின் நிழல் அடியில் மட்டும் செடி குறைவான உயரத்தில் இலை அடர்த்தி இல்லாமல் சிறுத்து நிற்கின்றன. பக்கவாட்டில் இலைகளை நீட்டி வரிசை வரிசையாக நிற்கும் வெண்டைச்செடிகள் இராணுவ வீரர்களின் அணிவகுப்புபோல நிமிர்ந்து நிற்கின்றன.
இப்படி வரும்போது தாரணி அக்கா தோட்டத்திலோ வாய்க்கால் கரைபாதையிலோ நின்றிருந்தால் நான் வரவும் என்னோடு சேர்ந்து பேசிக்கொண்டே வீட்டிற்கு அழைத்துப் போகும். தாரணி அக்கா ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு முன்னே போய்க்கொண்டும் இருந்தது. இது இதுக்கும் எப்படி வண்டியில் ஏறிவிடுவது என்று சைக்கிளை வேகமாக உருட்டிக்கொண்டு போனேன். கோமதி அக்கா ஒரு முடி ராகித்தாளை படப்பிலிருந்து உருவி எடுத்துக் கொண்டு வந்தார். என்னைப் பார்த்தும் “வாடா, மாப்பிள்ளையே ஓடிப்போன பின்னால கொண்டு வர்ற” என்றது. தாளை வலையர் மூக்கனிடம் கொடுத்துவிட்டு தொட்டிப்பக்கம் உள்ள வாளிநீரில் கைகழுவியது.
கோமதி அக்காவின் வருத்தம் போய்விட்டிருந்தது. பெண் பார்த்ததோடு அந்த சம்பந்தம் நின்றதால் அப்பாதான் சேலைகளையும், துணிகளையும் ஒருவாரம் போன பின்னால் கொடுத்துக் கொள்ளலாம் என்று வைத்துவிட்டார். கோமதி அக்கா ஈரக்கையை இரு தொடைப்பக்க சேலையில் துடைத்துக் கொண்டு முற்றத்துக்கு வந்தார். சாரதா சில்க்ஸ் பையை எடுத்துக் கொடுத்தேன். தாரணி அக்கா கையையும் காலையும் கழுவிக் கொண்டு வீட்டிற்குள் போனார். “தாரணி உனக்கு சரியா இருக்கான்னு பாரு” என்றது கோமதி அக்கா. தாரணி அக்கா துண்டை எடுத்து வந்தபடி வாசலில் நின்று முகத்தைத் துடைத்தது. திரும்ப “வாடி” என்றது. பதில் சொல்லாமல் துண்டை கொடியில் போட்டுவிட்டு மூக்கன் பக்கம் போனது. தாழ்வாரத்தில் இருக்கும் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து கோமதி அக்கா துணிகளை எடுத்து மடியில் வைத்தது. பிடிப்பாகவோ லூசாகவோ இருந்தால் தையலை எடுத்துவிட்டு தைக்க வேண்டிவரும். பெரும்பாலும் கோமதி அக்கா சரியாகத்தான் இருக்கிறது என்பார்.
தேன் எடுக்க ராகித்தாளை நான்கு பாகமாக மடக்கி முறித்து வாய் விளிம்பு வளையம் போன மண்சட்டியில் போட்டார் மூக்கன். முன்னமே வைக்கோலை சட்டியின் அடியில் மடித்து மெத்தையாகப் போட்டிருந்தார். அதற்குமேல் ராகித்தாள். ராகித்தாளில் நெருப்பு சட்டென பிடித்து திகுதிகுவென எரியாது. அதுவும் பழைய தாள்முடி. நன்றாக புகைவிட்டபின் தான் எரியும். கம்பின் நுனியில் நான்கு குச்சிகளை கிட்டி கட்டினார். அது புனல்போல விரிந்திருந்தது. ராகித்தாள் கூளம் நிரப்பிய சட்டியை அதில் வைத்தார். கழியைத் தூக்கிப் பிடித்துப் பார்த்தார். கிட்டி கிண்னென்று இறுக கட்டியதால் பானை கச்சென அமர்ந்தது. மடிந்த ராகித்தாள்களில் பூரான் இருக்கும். அந்த மடிவு வாசத்திற்கு பொன்றன் சேவல் தலைதூக்கி கேரிக்கொண்டு மயில் எட்டுவைப்பது போல விரல்களை சுருக்கி எடுத்து விரித்து வைத்து வடக்குப்பக்கம் வந்தது. கருப்பி குஞ்சுகளோடு கொய்யாமரத்தடியில் கிளரிக் கொண்டிருந்தது.
பாட்டி மோட்டாரை நிறுத்திவிட்டு கனகமணி சின்னம்மாவை அழைத்தது. அவரைச் சின்னம்மா என்று அழைத்தே பழக்கம். தோட்டத்து பின் வேலியின் நடுவில் நிற்கும் கிளுவை மரத்தில் தேன்ராடு இருப்பதை கனகமணி சின்னம்மா பார்த்து வைத்திருந்திருக்கிறது. அக்காக்களோடு இருந்து பேசிவிட்டு போகத் தாமதமானால் சாப்பிட வைத்துத்தான் சின்னம்மா அனுப்பும். பளபளவென மண் இல்லாமல் கழுவிய மண்வெட்டியை ஈரத்தோடு கொண்டுவந்து பந்தல்கால் அருகில் வைத்தார். தாரணி அக்கா பெரிய வெண்கலத் தாம்பாலத்தைக் கொண்டு வந்தது. அக்காவைப் பார்த்து சிரித்தேன். அக்கா கண்டுகொள்ளவில்லை. கோவம் இன்னும் தீரவில்லை.
மூக்கன் “மூக்கு காது வாய் எல்லாத்தையும் துணியில மூடிக்காங்க” என்றார். என்னைப் பார்த்து “வேட்டிய எறக்கிவிடு எங்க தொவரம் கெடச்சாலும் சர்ர்ர்ரன்னு வந்து ஈ நுழையும். உள்ளே போச்சுன்னா வெளியில சாமான்யதில வராது. அதுக்குப் பின்னாடி வர்ற ஈயும் நுழையும். கொட்டுற கொடுக்குமுள்ள எடுக்க முடியாது. ஒரு மாசம் கழிச்சு அங்கயும் தேன் எடுக்க வேண்டிவரும் ரணமாயிடும். கொஞ்ச நேரத்துக்கு எல்லா துவாரங்களையும் மூடுங்க” என்றார் சிரித்துக்கொண்டே. கோமதி அக்கா, சின்னம்மா பாட்டி தாரணி அக்கா எல்லோரும் கண்களை மட்டும் விட்டு துணியால் முகத்தை மூடினார்கள். சின்னச்சாமி அண்ணாவை காணவில்லை. சைக்கிளும் இல்லை.
அக்காக்கள், பாட்டி, சின்னம்மா தள்ளி நின்றார்கள். அழிந்த கத்தரி காட்டில் கட்டி வைத்திருந்த இரண்டு பசுக்களும், கிடேரியும் எங்களைப் பார்த்தன. தேன்ராடில் ஈக்கள் மரகதகுண்டுகள் போல ஜீவுஜீவுவென நகர்ந்தபடி மின்னின. நடுத்தரமான ராடு. மேல்கிளையின் அடியில் முக்கால் நிலவுபோல கருத்து பெரிதாகத் தொங்குகிறது. ஆளுயர கம்பை அவர் சொன்னபடி நேராகப் பிடித்தேன். கரையில் ஏறி நின்று நெருப்பை கூளத்திற்கு அடியில் வைக்க வைக்கோலில் பற்றியது கம்பை வாங்கிக்கொண்டார். நான் கரையில் ஏறி நின்றேன். மூக்கன் பழைய சாக்கை தலையிலிருந்து கவிழ்த்துப்போட்டு மூடிக்கொண்டார். கண்களுக்கு மட்டும் கிழிது துவாரமாக்கிக் கொண்டார். அரை நிமிடம் விட்டு ராகித்தாளின் மேல் லேசாக தண்ணீரைத் தெளித்தார். அடியில் நெருப்பும் மேலே புகையுமாகக் கிளம்பியது. தட்டை ராடுக்கு நேராக வைத்துவிட்டு புகையும் சட்டிக்கம்பை பிடித்துத் தூக்கி, தொங்கும் ராடுக்கு நேராக நீட்டிப் பிடித்தார். ஈக்கள் வேகவேகமாக ஊரவும் தேனை உறிஞ்சவும் எழுந்து மாறவும் செய்தன. புகை அடர்ந்து கிளம்பி தேன்ராடை மூழ்கடித்தது. கொல்லென தேனீக்கள் புகையைவிட்டுப் பறந்து கொய்ய்ங்கென மரத்தை வட்டமடித்து கிளம்பியது. அக்காக்களும், பாட்டி, சின்னம்மா வாய்க்கால் வழியாக களத்திற்கு ஓடினார்கள். கிடேரி ங்ங்க்காஆவென வாலைச்சுழற்றி கத்தி குதித்து, கட்டியிருந்த கத்தரிசெடியை வேரோடு இழுத்துக் கொண்டு வாலை விசிறிவிட்டுக் கொண்டு ஓடியது. எச்சவாயில் தேனீ பிடுங்கிவிட்டதுபோல. பசுக்களும் தலைகளை குலுக்கிக்கொண்டு அங்கும் இங்கும் விறண்டு ஓடி வட்ட மடித்தன. நான் முகத்தைத் துண்டால் நன்றாக மூடி அப்படியே அமர்ந்து கொண்டேன். காதுபக்கம் ஈக்களின் ஓசை கேட்டது. தலையில் இரண்டு மூன்று அமர்ந்தன. கையில் தட்டிவிட்டேன். ஒரு ஈ மேங்கையில் ஒரு கொட்டு வைத்ததும் சுரீர் எனக் கடுப்பு இறங்கியது. மண்ணை அள்ளி போட்டு உதறினேன். காந்தல் நிற்கவில்லை. கொட்டிய இடத்தில் புப்பென மெல்ல வீங்கியது.
மெல்ல துண்டை எடுத்துவிட்டுப் பார்த்தேன். மூக்கன் போர்த்திய சாக்கில் ஏழெட்டு ஈக்கள் அமர்ந்திருந்தன. புகை விலகியிருந்தது. முக்கால் பங்கு ராடில் தேன் இருந்தது. தேன் இல்லாத பகுதி மரக்கிளையில் எயில் மஞ்சள் நிறத்தில் ஒட்டி இருந்தது. தேனீக்கள் இனிமேல் தான் குடிக்கத் தொடங்கும் பருவம். தேன்ராடுக்கு நேராக வைத்திருந்த தட்டில் கெட்டியான மஞ்சள் நிற தேன் சொட்டுக்கள் விழுந்து கொண்டிருந்தன. கெட்டிச் சொட்டு விழவிழ மஞ்சள் நிறம் அரக்கு நிறத்தில் மாறிக் கொண்டிருந்தது. மூக்கன் சாக்கை கூண்டாக எடுத்து கீழே போட்டார். சட்டியில் புகை அடங்கியிருந்தது. சாக்கால் சட்டியை மட்டும் எடுத்து வைத்துவிட்டு கழியை நீட்டி கிட்டி குச்சியால் ராடை லேசாகத்தள்ள தேன், தட்டுத்தட்டாக தாம்பாளத்தட்டில் விழுந்தது.
தட்டை கொண்டுவந்து களத்தில் வைக்கவும் கனகமணி சின்னம்மா தேன் ஊறிக்கிடக்கும் ராடையே கொஞ்சம் பிட்டுபிட்டுத் தந்தார். அதன் கெட்டித்தன்மையும் சுவையும் தொண்டைக்குழியில் இறங்கி அப்படியே வயிற்றிலும் இறங்கியது. தட்டின் ஓரத்தில் தெறித்து படிந்த தேன் துளிகள் மெல்ல வடிந்தும் வடியாமலும் அடர்த்தியோடு நின்றன. பாட்டி, பிழிந்துபோட்ட சக்கையை எடுத்துத் தின்றார். தேன்ராடின் சக்கையைத் தின்றால் கண் பார்வை நன்றாகத் தெரியும் என்றார். சரியான பருவத்தில் எடுத்துவிட்டார் மூக்கன். பத்து நாட்கள் தள்ளிப்போயிருந்தால் ராடு துவாரங்கள் முழுக்க வெள்ளைப் புழுக்களாக இருக்கும். கொஞ்சநாளில் தேனீக்களாக மாறவும் ராணித்தேனி மழைவிழுந்து அரும்பு கட்டிய பகுதிக்கு அழைத்துக்கொண்டு போகும்.
சின்னம்மா பையில் கொடுத்த முருங்கைக்காய், கத்தரிக்காயைக் கேண்டில்பாரில் தொங்கவிட்டு கிளப்பினேன். தாரணி அக்கா வெண்டைத்தோட்டத்தைப் பார்ப்பது போல வண்டித்தடத்தில் நின்றிருந்தது. “அக்கா போயிட்டு வர்றேன்” என்றேன். அக்கா சரி என்று சொல்லாமல் திரும்பி, “நீ சரண்யாவை லவ் பண்றயா?” என்றது. “ஐயையோ இல்லைக்கா” என்று மலுப்பினேன். “எதுக்கு அவ போறப்ப வர்றப்ப பின்னாடி போற”
“இல்லக்கா இங்க துணிகொடுக்கத்தான் வந்தேன்கா. மாதையா தோட்டத்துப்பக்கம் வரவும் நாய் குரைச்சுச்சா அப்படியே எறங்கி நடந்தேன்க்கா, சரண்யா முன்னால போயிட்டிருந்திச்சு. எங்க போறேன்னு கேட்டா இப்பிடி தாரணி அக்கா தோட்டத்துக்குன்ன சொல்லிட்டு வந்தேன்கா” என்னைத் திரும்பிப் பார்த்து “என்ன நம்பச்சொல்ற” என்றது. “நிஜமாக்கா” என்றேன். “சரி போ” என்றது. நான் தப்பித்தேன் பிழைத்தேன் என்று வந்தேன் என்றாலும் தைரியமாக சரண்யாவை காதலிக்கிறேன்க்கா என்று சொல்ல பயமாகவும் இருந்தது.
சனிக்கிழமை நூலகப் புத்தகங்களைத் திரும்பத்தந்து புதிய நூல்களை வாங்கி வரும்படி தாரணி அக்கா சொல்லி இருந்தார். படித்த லட்சுமி, அநுத்தம்மா புத்தகங்களை வாங்கி சைக்கிள் கேரியரில் வாங்கி வைத்துவிட்டு இளநீர்காய்கள் இறக்கியவர்கள் சிறுத்துப்போன. கோணையான, லேசாக சொறி விழுந்த காய்களை வண்டித்தடமரவரிசையடியில் கழித்து ஒதுக்கிப்போட்டுவிட்டுப் போயிருந்தார்கள். அதெல்லாம் இரண்டு மூன்று நாட்கள் வெட்டித்தின்னலாம். சின்னம்மா இளநி சாப்பிட்டுப்போடா என்றது. ஏற்கனவே பத்து பனிரெண்டு இளநீர் காய்களை வெட்டி குடித்துப் போட்டிருந்தார்கள். இரண்டிரண்டாக பிளந்துபோட்ட குடுவையில் திரள்களை குடைந்து வலித்து தின்றிருந்தார்கள். ஒட்டியிருந்த பிசிறு தேங்காய் பருப்பை சேவல்களும் கோழிகளும் கொத்தி விழுங்கிக் கொண்டிருந்தன. நானும் இரண்டு இளநீர் காய்களை வெட்டி குடித்தேன். நல்ல ருசி. மூன்றாவதை வெட்டி குடிக்க அறுவாளை நீட்டி அதன் மூக்கால் கொத்தி தூக்கும்போது சைக்கிளில் சரண்யா வாய்க்கால்வரை பாதையில் போவது தெரிந்தது. அவசர அவசரமாக இளநீரை சாப்பிட்டுவிட்டு வந்தேன். வாளிநீரில் பிசுபிசுக்கிற கைகளையும் வாயையும் துடைத்தேன். தாரணி அக்கா கட்டிலில் அமர்ந்து கல்கி பத்திரிகையை படித்துக் கொண்டிருந்தார்.
அக்காவிடம் சொல்லிக்கொண்டு சைக்கிளை எடுத்து சாதாரணமாக மெல்ல நடப்பவன் போல வண்டித்தடத்தில் திரும்பி பார்க்காமல் நடந்தேன். உயர்ந்த வாய்க்கால்கரை சாலையில் சைக்கிள் கேரியர் மேல் கட்டிய பெட்டிக்குள்ளிருந்து கன்றின் தலைதெரிந்தது. கன்று எழுந்து குதித்துவிடாமல் இருக்க இரண்டு சுற்று போட்டு கட்டியிருப்பது தெரிந்தது. உருட்டிக்கொண்டு செல்லும் அவரின் சைக்கிளுக்குப் பின்னால் செங்காரி தாய்பசு கனத்த மடி தொடையிடுக்கில் அசைய ஓட்டமும் நடையுமாய் தலை தூக்கியபடி சென்றது. மேற்கே எங்கோ தோட்டக்காட்டிலிருந்து வாங்கிக்கொண்டு போகிறார். அவ்வப்போது பசு அடிவயிற்றை எக்கி செருமி பின்னாலேயே வருகிறேன் என்று கன்றுக்குப் பாதுகாப்பாகச் சென்றது. கரையேறியதும் மெல்ல விடுபவன் போல விட்டேன். கொஞ்சம் தள்ளிப்போனதும் சரண்யாவை பாலம் தாண்டி இறக்கும் இறக்கத்தில் பிடித்துவிடலாம் என்று வேகமாக ஓட்டினேன். பாலத்திற்கு முன்னமே மின்னல் வேகத்தில் என் சைக்கிளுக்கு குறுக்காக தாரணி அக்கா சைக்கிளை நிறுத்தி காலையும் ஊன்றி எழுந்து நின்றார். எனக்கு திக்கென்றது. ஒருவகையில் பாலத்தைத் தாண்டாததால் வடக்கே செல்லும் மெட்டல்பாதை தெரியாது. சரண்யா அந்த பள்ளத்து மெட்டல்பாதையில் அக்கா குறுக்கடித்து நின்றதற்கு அரைவிநாடி முன்னாகத்தான் இறங்கினாள்.
அக்காவிற்கு மூச்சு வாங்கியது. பெருமூச்சொன்றை இழுத்துவிட்டு மேற்கால் திரும்பி பார்த்தது. யாரும் வாய்க்கால்கரையில் வரவில்லை.
“உண்மைய சொல்லு நீ அவள லவ் பண்றயா” பேசாமல் நெளிந்தபடி அசட்டுத்தனமாக சிரித்தேன். “நீ அவள லவ் பண்ணக்கூடாது. ஆமா” என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்த வழியே போனது. அக்கா குடும்பத்திற்கும் சரண்யா குடும்பத்திற்கும் பகை இல்லை. சரண்யா அப்பா சின்னச்சாமி அண்ணாவுடன் இதே வாய்க்கால் கரையில் நின்று பேசிக்கொள்வதை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். இதென்னடா பெரிய எழவா போச்சு என்று சைக்கிளை உருட்டிக்கொண்டுபோய் நிறுத்திவிட்டு பாலத்தில் அமர்ந்தேன். சரண்யா விஜி டீச்சர் வீட்டு வண்டி தடத்தில் நுழைந்துவிட்டாள். சரண்யா நல்லவள். பேசுவதில்கூட இனிமை இருக்கும். சிரிப்புக்கலை அக்கா முகத்திற்குக்கூட வாய்க்கவில்லை. அக்காகூட நல்ல புதுநிறம்தான். சரண்யா அதைவிட சற்றே சிவப்பு. உயரம்தான் அக்காவை விட கம்மி. அவள் நல்லவள் என்பதை தாரணி அக்காவிற்கு எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை. அக்காவிற்குப் பிடிக்கும்படி சரண்யாவை பழக வைப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். அக்காவை எதிர்க்கவும் முடியாது. உண்மையில் என் சொந்த அக்காக்களை விட இவர்களிடம் தான் பிரியமாக பழகியிருக்கிறேன். அவர்களுக்குத் தம்பியோ அண்ணனோ இல்லாததால் என்னை சொந்த தம்பியாக உரித்தை எடுத்துக்கொள்வதும் தெரிகிறது. தாரணி அக்காவின் பேச்சை மீறி சரண்யாவை காதலிக்கவும் சங்கடமாக இருக்கிறது. மீறினால் அக்கா வைத்திருக்கும் உருத்து சிதைந்து போகும். தான் சொன்னால் நான் கேட்பேன் என்று நம்புகிறது. அக்கா தடைபோட்டதும் சரண்யா மீது விருப்பம் கூடத்தான் செய்கிறது. அவள்தான் வருங்கால மனைவி என்று நினைக்கவும் தோன்றுகிறது. அக்கா அதுவாகவே எடுத்துக் கொண்ட உரிமையையும் நேசத்தையும் பார்க்க பெருமிதம் தோன்றுகிறது. எவ்வளவு நம்புகிறது. அந்த நம்பிக்கையை பொய்யாக்கினால் தாரணி அக்கா மனம் என்ன பாடுபடும். முடிவெடுக்க முடியாமல் சென்றேன்.
ஒருவாரம் தோட்டத்து சாலை பக்கமே போவதை நிறுத்தியிருந்தேன். புத்தகங்களைக்கூட சின்னச்சாமி அண்ணாவிடம்தான் கொடுத்துவிட்டேன். ஆனால் தாரணி அக்கா மீது மதிப்பும் கூடத்தான் செய்தது. என்ன வேகமாய் வந்து தடுத்தது. என் மீது அக்கா கொண்டிருக்கும் பாசத்திற்கும் சரண்யாமேல் கொண்ட காதலுக்கும் இடையில் கிடந்து தவிப்பது எனக்கு ஒரு பிரச்சனையாகிப்போனது. அக்காவைப் பார்த்து பேசாமலும் இருக்க முடியவில்லை. பேசி சிரித்துப் பழகிய வீட்டிற்கும் போகாமல் இருக்க முடியவில்லை. பார்க்காமல் இருப்பது எதையோ இழந்ததுபோல இனிய உறவொன்று கழன்று போய்விட்டதைப்போல ஆனது. யாருமற்று தனித்து நிற்பதாக ஓர் உணர்வு. நேசத்தை இழந்து அந்நியப்பட்டு இருப்பது துயரம் தருவதாக இருந்தது. தொடர்ந்து அப்படி விலகி இருக்க முடியவில்லை. திரும்பப்போனபோது தாரணி அக்காவிற்கு பெருமிதம் கூடியது.
கோமதி, சின்னம்மா, பாட்டி, சின்னச்சாமி அண்ணா நால்வரும் முத்துவாளி அம்மன் கோயிலுக்கு பால் ஊற்றப் போனார்கள். பூசாரி மூன்று வெள்ளிக்கிழமை பால் ஊற்றினால் மூல நட்சத்திரத்தின் பாதிப்பு குறைந்து கல்யாண தோஷம் நீங்கும் என்றார். அப்பாகூட எல்லாம் நல்லபடியாக கைகூடும் சின்னச்சாமி என்றார். கோமதி அக்கா வரவர முன் போல கலகலவென பேசுவதுகூட குறைந்து போனது. முகத்தில் ஒரு ஒருவித சம்பல் படர்ந்துவிட்டிருந்தது. முறிந்து விழுந்த கொப்பில் பூவரசு இலை சற்றுநேரத்தில் வாடுமே அப்படி ஒரு வாட்டம் குடிகொண்டுவிட்டது. கோமதி அக்கா முகத்தைப் பார்க்கும்போது இந்த நல்ல அக்காவிற்கு எதுக்கு இப்படி தடங்கல் ஏற்படுகிறது என்று நினைப்பேன்.
‘பசுவை மட்டும் கொறைநிலத்தில் கயிற்றை நீட்டி பதினோரு மணிக்கு மாற்றிக்கட்டு. ஒரு மணிக்குத் தண்ணீர்காட்டி கொட்டத்தில் கட்டிவிடு. அதற்குள் வந்துவிடுகிறோம்’ என்றார் சின்னச்சாமி அண்ணன். சரி என்றேன். தாரணி அக்காதான் பூசைக்கான தேங்காயை உரித்து எடுத்துப் பையில் போட்டது. வாழைத்தாரில் ஒரு சீப், பால்சொம்பு எல்லாவற்றையும் எடுத்துத் தந்தது. போகும்போது பாட்டி தாரணிக்கோ, வீட்டுக்கோ பேய் அண்டாமல் இருக்க மூன்று வெற்றிலையை வெளி ஜன்னல் ஓரம் வைத்து அதன் மேல் இரும்பு கொழு துண்டை வைத்தது.
எனக்கு சாண்டில்யனின் நாவல்களில் ‘மூங்கில் கோட்டை’யும் பிடித்த ஒன்று. அதிலும் தளபதி இளமாறன் சேரநாட்டிலிருந்து யானை கண்மாந்தரஞ்சேரல் இரும்பொறையை மீட்க பாண்டிய நாட்டிற்குள் நுழைந்து மாறுவேடத்தில் வந்த பாண்டியனை எதிர்கொண்டு போகும் சண்டை விருவிருப்பாக இருக்கும். அந்தப் பகுதியைப் படிக்கலாம் என்று நினைத்தேன்.
தாரணி அக்கா குறுனை கம்பை அள்ளி களத்தில் வீச மாட்டுக்கொட்டத்தில் திரிந்த கோழிகளும் பருவெடைகளும் சேவல்களும் றெக்கைகளை படபடவென அடித்து கழுத்துக்களை நீட்டி ஓடிவந்து தின்றன. கழுத்தை நீட்டி ஓடிவரும் போது கோழிகளின் முன்முதுகு தாழ்ந்து விடுகின்றன. தீனி போட்டப்பின் கைகளைத் துடைத்துவிட்டு நெஞ்சில் போட்டிருந்த நீளமான சடையின் நடுப்பகுதியைப் பிடித்து சும்மா சுற்றிக்கொண்டு வந்தது.
“ஏன்க்கா, கோமதி அக்கா உனக்கும் மூத்தது. ஆனா அதவிட உனக்கு முடி நீளமா இருக்கே”
“எனக்கு அப்பா முடிக்கு முயல்ரத்தம் வாங்கிக்கொண்டு வந்து தந்தார். அத தேச்சதால நீளமா வளந்திருச்சு. அக்கா பயந்திட்டு வேணாமன்னிருச்சு”
“நெசமாவா”
“நெசந்தான்” சிரித்தார். எனக்கு நம்புவதா கூடாத என்றிருந்தது. ஆனால் இப்படி கேள்விப்பட்டதும் உண்டு.
உள் வரந்தா கட்டிலில் ஜன்னலோரம் படிக்கத்தோதாக அமர்ந்தேன்.
காட்டுயானைகளைப் பிடிப்பதில் வல்லவனான சேரமன்னன் யானைக்கண் மாந்தஞ்சேரல் அரும்பு மீசை வந்த பொடியனான பாண்டியனை, யானையைப் பிடிப்பதுபோல பிடித்துவிடுவேன் என்று போருக்குமுன் சவால் விடுகிறான். தன்மானத்தை சீண்டிய சேரனை தலையாலங்கானத்தில் போரிட்டு வென்று செருக்கை ஒடுக்கி அகழி சூழ்ந்த காட்டில், மூங்கில்கோட்டையில் கொண்டு வந்து சிறை வைத்துவிடுகிறான். அகன்ற அகழியில் கொடூரமான முதலைகள் சுற்றி வருகின்றன. யானைக்கூண்டில் அடைக்கப் பட்டதுபோல சேரன் இருக்கிறான். முதலை வாயில் சிக்கிய யானை பிளிறுவதைக்கேட்டு பெருமாள் வந்து காப்பாற்றினார். ‘இந்தச்சேரனை காப்பாற்ற இறைவன் வந்தாலும் அகழியில் வீழ்ந்து முதலைக்குத்தான் இரையாவான்’ என்று சொல்லி சிரிக்கிறான்.
சேரனின் நெருங்கிய தோழர் புலவர் குறுங்கோழியூர் கிழார். பாண்டியனிடம் சிறைபட்ட மாந்தரஞ்சேரலை மீட்க தளபதி இளமாறனிடம் பேசுகிறார். அதற்கு ரகசியமாக பாண்டியனின் தங்கை இமையவள்ளியிடம் அணுகுகிறார். அவளுடைய குருதியில் சேரப்பரம்பரையும் ஓடுகிறது. பாண்டியனின் அம்மா சேரநாட்டு வம்சத்தில் வந்தவள். அதனால் சிறைபட்ட சேரன் மீது பாண்டியனின் தங்கைக்கு இரக்கம் தோன்றுகிறது. ஆனால் தளபதி இளமாறனுக்கு இந்த உடன்பாடு தெரியாது.
புலவர் திட்டமிட்டபடி காட்டின் மையத்தில் இருந்த சித்தர் குடிலை அடைகிறான் இளமாறன். முதல்நாள் இரவு மதுரை நகரைச் சுற்றிப்பார்க்க விரும்பி நகருக்குள் நுழைகிறான். மீன் வடிவில் கட்டப்பட்ட மரகதமாளிகை வாசல்முன் கால் வைத்ததும் ‘நில்’ என்ற குரலோடு இளமாறன் கழுத்துக்கு வாள் நீளுகிறது. ‘அவன் வாளை உருவி நீட்டியதற்கும் ‘ஆ’ என்ற வியப்பு கூச்சலுக்கும் இடையே இடைக்காலம் எதுவுமே இல்லை. நீட்டிய வாள் மின்னல் போல வானில் பறக்கிறது. இருட்டில் சுழன்றுவரும் வாளை பற்றி நிறுத்துகிறான். அது மாறுவேடத்தில் வந்திருக்கும் பாண்டியனின் தளபதி வாள். பத்தடி தள்ளி மாறுவேடத்தில் நின்றிருந்த பாண்டியன் சிரித்தபடி தளபதியைத் தள்ளி நிற்கச் சொல்கிறான்.
இளமாறனிடம் சற்றே நெருங்கி “எங்கே அந்த வித்தையை எனக்குச் சொல்லிக்கொடு” என்கிறான் பாண்டியன். முன்னைவிட வேகமாக இளமாறன் வாளை வீசுகிறான். ஆனால் பாண்டியனின் வாள் பறக்கவில்லை. வாளின் சூச்சுமமான தாக்குதலை வேறு சூட்சுமத்துடன் உறுதியாக தடுத்து நிறுத்துகிறது. அதில் ஒரு நிதானமும் லாவகமும் வெளிப்படுகிறது. ‘நல்லது’ என்கிறான் பாண்டியன். இளமாறனுக்கு இது கோவத்தை மூட்டுகிறது. சட்டென மனதில் மூன்று வியூகங்களை அடுக்கி தெறிக்கும் நெருப்புப்பொறியாக வாளை படுவேகமாக கழுத்துக்கும், மார்பிற்கும் வயிற்றிக்குமாக வீசுகிறான். அந்த மூன்று வியூகங்களையும் அதைவிட வேகத்தோடும் விவேகத்தோடும் பாண்டியன் தடுத்து மெல்ல சிரிக்கிறான். இருவரும் களத்தில் மாறி மாறி சூறாவளியாக சுழன்று மோதுகின்றனர். இளமாறனுக்கு வீச்சிலே கை சலிப்பது போல இருக்கிறது. அடுத்த கணத்தில் இளமாறனின் வாள் அந்தரத்தில் சுழன்று பறக்கிறது. சுழன்று வரும் வாளைப்பிடித்து மறுபடி இளமாறனுக்கு பாண்டியன் தருகிறான். “உனக்கு என்ன தேவை” என்கிறான் பாண்டியன். “இப்போதைக்கு மரணம்” என்கிறான் இளமாறன். “அது வீரர்களுக்கு என்றும் இருக்கிறது” என்கிறான் பாண்டியன். இளமை பொழியும் பாண்டியன் முகத்தை பாண்டியன் என்பது தெரியாமல் பார்த்தபடி “மதுரையைச் சுற்றிப் பார்த்தேன் வீரத்தையும் நேரில் கண்டேன்” கூறிவிட்டு சட்டென இருளில் மறைந்து விடுகிறான்.
இளமாறன் வரும் தேரை குறுக்காட்டியதும் நடக்கும் சம்பவமும் நுட்பமானது. அதிலும் தேர் மெல்ல வருவதைக் கண்ட சித்தர் ‘தேரை நிறுத்து உள்ளே இருக்கும் நோயாளியை பார்க்க வேண்டும்’ என்பதும் பாண்டியனின் இரவுக்காவல் படை தளபதி திரையால் முழுவதும் மூடுண்ட தேரைச் சுற்றி வந்து ஓரிடத்தில் நின்று ‘வெளியே வா’ என்றதும், திரையைக் கிழித்துக் கொண்டு தளபதியின் கழுத்தில் வாள் இறங்குகிறது. சுற்றி வந்த நடையையும் நின்ற இடத்தையும் குரல்வந்த திசையையும் காதாலே கணித்து தளபதியை வீழ்த்துகிறான் இளமாறன். அந்தப் பகுதியில் மூழ்கினேன். பசுவை மாற்றிக்கட்டச் சொன்னதையும் மறந்துவிட்டேன். வீடே நிசப்தத்தில் மூழ்கி இருந்தது.
கதவு ட்ர்ர்ர்ரென ஓசையோடு திறக்கப் பார்த்தேன். தாரணி அக்கா குளித்த ஈரத்தோடு பாவாடையில் வந்து நின்றது. இரு தோள்புறமும் மூடிய சிறு துண்டை பிடித்தபடி நிற்கிறது. முழுமையாகப் போர்த்தியிருக்கவில்லை. நீர்பட்ட மினுமினுப்போடு நொங்குகள் போல திரண்டிருக்கும் இரு முலைகளும் தெரிந்தன. அக்கா பேசாமல் நிற்கிறது. இடது பக்கம் சுவர் ஓரம் துணி வைக்கும் பீரோ இருக்கிறது. போகும்போதே மாற்று உடுப்பை எடுத்துக்கொண்டு போகவில்லையா? நான் கட்டிலில் படித்துக்கொண்டிருப்பதை மறந்து உள்ளே வந்துவிட்டதா? ஒரு பார்வை வருகிறது. அக்கா அப்படியே நிற்கிறது. எழுந்து நின்றுவிட்டேன். நானும் பார்க்கிறேன். அக்காவும் பார்க்கிறது. வடிவான பகுதியும் தெரிகிறது. பொட்டுபொட்டாக ஈரமான பாவாடை ஒட்டியிருப்பது புறுபுறுப்பை ஏற்படுத்தியது. புத்தகத்தை எடுத்துக்கொண்டு கதவுப்பக்கம் சென்றேன். யார் கதவை மூடுவது. அச்சம் எழுந்தது. கண்கள் போவென்றும் சொல்லவில்லை இரு என்றும் சொல்லவில்லை. தொடர்ந்து நிற்கவும் முடியவில்லை. இருப்பதா செல்வதா என்று தெரியவில்லை. அக்கா என்னை மறுபடி பார்க்கிறது. கண்ணை மூடிக்கொண்டு நிற்கலாம். அக்காவின் பார்வையை பார்த்தபடி இருக்க துணிவும் இல்லை. ஆனால் அக்கா ஏதும் சொல்லாமல் பார்த்தபடி நிற்கிறது. அப்படியே பார்த்தபடி நிற்க ஆசையிருந்தாலும் நிற்க முடியவில்லை. அக்கா என்ன நினைக்கிறது? பரவாயில்லை. இது ஒரு அசந்தர்ப்பம், என்று பெருந்தன்மையாக நினைக்கிறதா? தவறாக நின்றிருப்பதாகவும் உள்ளம் கொதித்தது. கதவைத் திறந்து வெளியே வந்தேன். உடம்பில் அனல் வீசியது. கொட்டத்தில் நிற்கும் பசுக்களை நோக்கிப்போனேன்.
அன்று என்ன செய்வதென்று திகைத்து வெளியேறினேன். தாரணி அக்கா அன்று என்னதான் நினைத்திருக்கும்? தற்செயலா? வாய்ப்பிற்கான துணிவா? தாரணி அக்கா துணித்தளவு கூட நான் துணியவில்லையா? குளித்துவிட்டு நான் இருப்பதை மறந்து குளியலறையிலிருந்து இயல்பாக ஓடி வந்திருக்கலாம். தோட்டத்தில் குடியிருப்பவர்களுக்கு இது வழக்கம்தான். அண்ணனோ தம்பியோ இல்லாத பெண்மக்கள் வீடு, சிறு வயதிலிருந்தே ஒரு துண்டை போர்த்திக்கொண்டு வருவது இயல்பாக இருந்திருக்கும். அண்ணன் தம்பி இருக்கும் வீடுகளில் கூட அவர்கள் இல்லாதபோது இப்படி வருவதும் உண்டுதானே! தாரணி அக்காவிற்கு விருப்பம் இருந்தால் கதவை மூடியிருக்கும். அது லேசாகத் திறந்தபடி இருந்தது. நான் கதவை மூடுவேன் என்றிருந்ததா? அல்ல? உன் விருப்பம் என்று நின்றதா? எதிர்பார்த்தா? பெண்மை எல்லையில் நின்று கொண்டதா? தனக்கும் இது ஒரு அசந்தர்ப்பம் ஆகிவிட்டது. பரவாயில்லை நீ வெளியேறு என்று நாகரீகமாக நின்றதா? அந்த பளபளக்கும் மார்பகங்களை முழுதாக மூடவும் முடியவில்லை. ஒருவேளை நான் நெருங்கினால் என்னவாயிருக்கும்? அறை விழுந்திருக்குமா? அணைப்பு கிட்டியிருக்குமா? அணைத்து தழுவ ஆசை சுருள்விட்டாலும் பயமும் அச்சமும் மேலேறி வந்தது. கனகமணி சின்னம்மாவை அத்தை என்றும், சின்னச்சாமி அண்ணாவை மாமாவென்று முறைவைத்து அழைத்திருந்தால் தலைகீழாகி யிருக்குமா? அப்போதும் இப்படி வெளியேறியிருப்பேனா? இப்போதும் உறுதியாக சொல்ல முடியவில்லை. நாகரீகம் வாளாக இறங்கி தடுத்தாட்கொண்டதோ? தாரணி அக்கா அதை பெரிதுபடுத்தாமல்விட்டது. சந்தர்ப்பத்தை நம்பிக்கை விலக்கிவிட்டது. அக்கா என்ன நினைத்ததென்று இன்றுவரையும் தெரியாது. அந்த நிலையை எப்படி கேட்பது? யாரிடம் சொல்லமுடியும்? இன்றளவும் அப்படியே இருக்கிறது. என்னென்னவோ தோன்றியதுண்டு. ஆனால் தாரணி அக்கா அது பற்றிபின் எப்போதும் பேசியதில்லை. கருகூடி கிர்ர்ரென கருத்து திரண்டமேகம் மழை பொழியாமல் கலைந்து போவது உண்டுதானே. அப்படி அது ஒரு கனவுபோல தங்கிப்போனது. அக்காவிற்கும்கூட அப்படி இருக்கலாம்.
கோமதி அக்காவிற்கும் தாரணி அக்காவிற்கும் ஏழுநாட்கள் முன் பின்னாக திருமணம் நடந்தது. ஒரே நாளில் ஒரே வீட்டில் இரண்டு திருமணங்களை வைக்கக்கூடாது என்பதால் அப்படி செய்தார்கள். ஒரே நாளில் வேறு வேறு நேரத்தில் வைத்திருக்கலாம் என்று கூட சொன்னார்கள். இருவருக்கும் வெளியூர் சம்பந்தம்தான் அமைந்தது.
ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் பொங்கல் சமயம் தோட்ட வீட்டிற்கு தாரணி அக்கா வந்திருந்த போது என்னைப்பார்க்க வரச்சொல்லி இருந்தார். என் மூத்த அக்கா மாப்பிள்ளை இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி. சி.எஸ்.மருத்துவமனையில் இருந்ததால் கூடவே இருக்கவேண்டியதாகிவிட்டது. அக்கா அழைத்தும்போக முடியாமல் போனதில் எனக்கு வருத்தம்தான்.
4
சின்னச்சாமி அண்ணா தேவராயபுரம் நெருங்கும்போதே “தாரணிக்கும் மாப்பிள்ளைக்கும் போனமாசத்துக்கு முந்தின மாசம் அவங்களுக்குள்ள சண்டை. பிள்ளையவிட்டுட்டு தாரமங்கலம் போயிட்டா. விவகாரம் முத்திபோயிருச்சு. மாப்பிள்ளை தீத்துவிட்டுருங்கன்னு நிக்கிறாரு. கதிர்வேல்கவுண்டர் வீட்டில வச்சு விவகாரத்த பேசிக்கிடலாமன்னு முடிவு. என்ன பிள்ளையபெத்து சந்தோசத்த கண்டோம். பேரன் பேத்தி வந்த பின்னாடி கூட குடும்பத்தில் நிம்மதி இல்ல எனக்கு வயசு அறுபத்தேழு தொடப்போகுது. அசிங்கத்துக்கு அஞ்சி வெளியே தலைகாட்ட முடியல. அம்மாவும், கனகமணியும் அழாதநாளில்ல. இத்துப்போயி இருக்காங்க. தெரிஞ்சவங்க யாரும் என்ன ஏதுன்னு விசாரிப்பாங்களேன்னு தெக்கவடக்க தலைகாட்டாம இருக்கோம். எத்தனை நாளைக்கு இருக்கமுடியும். எல்லாம் கூண்டோட போயிடலாமன்று இருக்குப்பா,” என்றார். அவர் மனம் கனத்துத்தான் போனது. “எல்லாம் சுமூகமா முடியுமண்ணா,” என்று மட்டும் சொன்னேன். ஆனால் ஏதோ சிக்கலான விவகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.
கல்யாணத்திற்குப் பின்பும் தொடர்ந்து நான்கைந்து முறை தாரணி அக்காவை கட்டிக்கொடுத்த இந்த தேவராயபுரத்திற்கு வந்து பார்த்து திரும்பியிருக்கிறேன். அப்புறம் நாள்பட நாள்பட பழக்கம் விட்டுப்போனது. அக்கா ஒரு சமயம் அழைத்தபோது போய்ப்பார்த்திருந்தால் ஏதாவது சொல்லியிருக்குமா? இந்தளவு போகாமல் திரும்பியிருக்குமா என்ற எண்ணம் தோன்றுகிறது. சந்திரசேகரன் அண்ணா உற்சாகமாகப் பேசுவார். லட்சணமானவர். அதிர பேசமாட்டார். மென்மையானவர். தோட்டத்துரவைப் பார்த்துக்கொண்டு அருகில் மெட்ரிக்குலேசன் பள்ளியில் வேலையில் இருக்கிறார். பையனும் பிள்ளையும் மணிபோல இருக்க தாரணி அக்காவிற்கும் சந்திரசேகர் அண்ணாவிற்கும் தீத்துவிடுகிற அளவு சண்டை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
நாங்கள் வீட்டிற்கு முன் இறங்குவதைப் பார்த்ததும் நீண்ட தெருவில், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பெண்கள் கைசோலிகளைப் போட்டுவிட்டு வந்தார்கள். இந்தத்தெருவிற்கு அடுத்த தெருவழியாக வரும்போது பெண்களும் ஆண்களும் இரண்டு மூன்று பேர் அங்கங்கே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஊரே ஒரு மர்மத்திருவிழா காண தயாராகிக் கொண்டிருப்பது போல இருந்தது. சின்னச்சாமி அண்ணா தலைகுனிந்தபடி படியேறினார்.
கதிர்வேல் கவுண்டர் வீடு லாகடம்போட்ட பழையவீடு. சுவர் ஒன்றரை அடி அகலம் கொண்டது. பெரிய பெரிய ஜன்னல் வைக்கப்பட்ட வீடு. சோபாசெட், நாற்காலி எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு வராந்தாவில் மான் ஓவியம், தாமரை ஓவியம் கொண்ட இரண்டு போர்வை விரிப்புகளை விரித்திருந்தார்கள். உள்ளூர்காரர்கள், பக்கத்து ஊர்க்காரர்கள், சொந்தங்கள் என்று பதினைந்து பேர்களுக்கு மேல் சுவர் ஓரம் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். பெண்கள் நடுக்கட்டு பகுதியில் அமர்ந்திருப்பது தெரிந்தது. சந்திரன் அண்ணா மடியில் ஐந்து வயது மகள் வந்து அமர்வதும் எழுந்துபோய் பாட்டியிடம் சாய்வதுமாக இருந்தது. சந்திரன் அண்ணாவின் அம்மா இண்டாவது கட்டுவாசல் கதவோரம் அமர்ந்திருந்தது. நானும் சின்னச்சாமி அண்ணாவும் ஏழெட்டு பிளாஸ்டிக் நாற்காலிகளை அடிக்கி வைத்திருந்த மேற்குச்சுவர் ஓரம் அமர்ந்தோம். தலைகவிழ்ந்திருந்த சந்திரன் அண்ணாவின் முகம் சிவந்திருந்தது. பாட்டியிடம் இருந்த குழந்தையை சின்னச்சாமி அண்ணா கைநீட்டி அழைத்தார். அது சிரித்துக்கொண்டு பாட்டியின் கழுத்தை கட்டி திரும்பிப்பார்த்து சிரித்தது. பாட்டி முத்தம் கொடுத்தார். இதைவிட்டு எப்படி பிரிந்துபோக மனசு வரும். துன்பத்தின் சிறு சாயல்கூட இல்லாமல் அங்கும் இங்கும் மகிழ்வாக ஓடுகிறது. இந்த மகிழ்ச்சி இன்னும் பெருக வேண்டும். கலகலவென குழந்தையின் சிரிப்பு இப்போது ஒலித்தால் அபசுரமாகிவிடும் போல் இருந்தது. பல்வரிசை தெரிய சின்னச்சாமி அண்ணாவை பார்த்தபடி தலையாட்டுகிறது. இரண்டு மூன்று மாதம் வராதிருந்த தாத்தாவுக்கும் பேத்திக்குமான ஒரு விளையாட்டு, சின்னச்சாமி அண்ணா எழுந்துபோய் தூக்கினார். அது பிடிவாதமாக பாட்டியின் கழுத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டது. திரும்பவந்து அமர்ந்தார். குழந்தையைப் பார்த்து கைநீட்டினார். பாட்டியைவிட்டு எழுந்து தாத்தாவை பார்த்து கலுக் என்று சிரித்தது. கண்களில் பரவசத்தோடு தாத்தாவையும் பார்க்கிறது. ஐயோ தெய்வமே, இவள் உருவில் அப்படியே வந்து இருவரையும் அன்பால் சேர்த்து வைத்துவிடு என்று மனதார வேண்டினேன். நடக்கும் என்ற நம்பிக்கையும் பிறந்தது. பெரியவன் எங்கேனும் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறானா எங்கேனும் ஒடுங்கி அமர்ந்திருக்கிறானா என்று பார்த்தேன். சபைகூட்டத்தில் காணவில்லை. எங்கோ ஜன்னல் வழி பார்த்துக் கொண்டிருப்பான். அவனுக்கு விவரம் தெரியத் தொடங்கும் வயசு. அது அவனை ஒளிய வைத்திருக்குமோ? நல்லபடியாக முடியும்டா ராஜா. உன் கவலை தீரும்.
விவகாரம் தாரணி அக்கா கூட்டிக்கொண்டு போன ஆளோடு முடியவில்லை. அந்தாளின் மனைவி இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு வேறொரு ஆளை கூட்டிக்கொண்டு போயிருப்பது தெரிந்தது. அவன், தாரணியைக் கூட்டிக்கொண்டு ஓடியவனின் ஒரு காலத்து நண்பன். பேச்சிலிருந்து தெரிந்தது அவன் பெயர் காளிதாஸ் என்று. இவன் பெயர் தங்கராசு. சிக்கிக்கொண்டு முழிப்பவர் சந்திரசேகர் அண்ணா.
தீர்த்துவிட்டு விடுங்கள் என்று காளிதாசுடன் காதல்வயப்பட்டுச் சென்ற தங்கராசு மனைவி ரஞ்சிதாவும் சொல்கிறது. காதலர் தங்கராசுவுடன் சென்ற தாரணி அக்காவும் சொல்கிறது. இந்தப்பக்கம் இரண்டு குழந்தை அந்தப்பக்கம் இரண்டு குழந்தைகள். தாத்தா பாட்டிமார்களின் அரவணைப்பில் இருக்கின்றன. தங்கராசுவும், காளிதாசும், சந்திரசேகர் அண்ணாவும் சேர்ந்துதான் பைனான்ஸ் வைத்திருக்கிறார்கள். காதல் களியாட்டத்தில் கணக்கு வழக்குகள் ஒழுங்கில்லாமல் போய் பைனான்ஸ் ஒரு வருடத்திற்கு முன்பே மூடுவிழா கண்டுவிட்டது. காதல் திறப்புவிழா அதற்கும் முன்பே தொடங்கிவிட்டதுபோல. காதலிகளுக்கு மனதார செய்திருக்கிறார்கள். சீராட்டி யிருக்கிறார்கள். பாராட்டியிருக்கிறார்கள் ராத்திரி கொஞ்சட்டைகளைச் சொல்லி சொல்லி கொண்டாடியிருக்கிறார்கள். எந்த கணவன் காலமெல்லாம் கொஞ்சுகிறான். கொஞ்சிக்கொண்டிருக்க முடியும் தானா என்ன. இந்தக்காதலர்கள் கொஞ்சும் காலம் முடிவுக்கு வராமலா போயிடும். பசிவர பத்தும் பறந்து போகும்.
தாரணி அக்காவை வடக்கு அறைக்கு வரச்சொல்லி பெரியவர்கள் மூவர் எழுந்துபோய் சிக்கலை தீர்க்கும் விதமாகப் பேசப் போனார்கள். சந்திரசேகர் அண்ணாவை சமாதானப்படுத்தி “ரெண்டு குழந்தைகளுக்காக பாரப்பா. குடும்பம் நாலாவதியாகிப் போயிடும். ஊர் உலகத்தில நடக்காததா. வீட்டுக்கு வீடு வாசப்படி” கதிர்வேல் கவுண்டர் சொன்னபோது அமைதியாக மட்டும் அமர்ந்திருந்தார். ஐயாவுக்கு எண்பது வயது நெருக்கியிருக்கும். தாரணி அக்கா வந்துவிட்டால் ஓரளவு பிரச்சனை முடியும் என்று நினைத்தேன். சின்னச்சாமி அண்ணா தளும்பும் கண்ணீரை யாருக்கும் தெரியாமல் வேட்டி நுனியில் துடைத்தார். வரும்போது சொன்னார் “குழந்தைகளை அனுப்பினால் நாங்கள் வளர்த்து ஆளாக்கித் தருவோம்” என்று. விவகாரத்தை சின்னச்சாமி அண்ணாவால் வெளிப்படையாக பேச முடியாமல் இருந்தது புரிந்தது.
தாரணி அக்கா “முடியவே முடியாது நான் தங்கராசு மாமாவுடன் தான் வாழ்வேன்” என்று ஒரே முடிவாக நிற்பதாக வந்து சொன்னார்கள். “அந்தப் பிள்ளை தீத்து விடுங்கிறதுப்பா” என்றார் பெரியவர். பட்டென சின்னச்சாமி அண்ணா எழுந்து வேட்டியை விறுவிறுவென மடித்துக்கட்டி வெளியில் போட்ட செருப்பை எடுத்துக்கொண்டு தாரணியை அடிக்க அந்த அறையை நோக்கி ஓடினார். கதவோரம் நின்றிருந்தவர் அண்ணாவை நெஞ்சோடு அணைத்து முட்டி தள்ளிக்கொண்டு வந்தார். “தேவடியா மவளே. மூணு நாளில உன் சாவு செய்தி என் காதுக்கு வரணும். இல்ல உன் காதுக்கு என் சாவுச்செய்தி வரும்படி கண்டாரோலி…” என்றவரின் உதடுகள் துடிக்க கலங்கிவிட்டன கண்கள். நான் அண்ணாவை அமரவைத்து முதுகைத்தட்டி “அமைதியா இருண்ணா” என்றேன்.
ரஞ்சிதாவும் பிடிவாதமாக காளிதாசுடன் வாழ்வேன் என்றபோது ரஞ்சிதாவின் அண்ணா கையில் வைத்திருந்த முழக்குச்சியால் அவள் இருந்த அறைக்குள் படுவேகமாகப் புகுந்து மடார் மடார் என்று அடிக்க இரண்டுபேர் விலக்கி இழுத்துக்கொண்டுவந்தனர். ரஞ்சிதாவின் அப்பா “டேய் அவ ரெண்டு காலயும் ஒடிச்சு வீட்டிலபோடணும்டா. பீ மூத்திரத்தோட மூலையில கெடந்து நாறணும்” என்று அவரும் ஏறி வந்தார். அவரையும் தள்ளிக்கொண்டு போனார்கள். இரண்டு பிள்ளைகள் “தாத்தா தாத்தா வேணாம் தாத்தா” அவர் கையைப்பிடித்தபடி கூடவே சென்றன. குழந்தைகள் அம்மாவின் காலை ஒடிக்கப்போகிறார்கள் என்பதை உண்மையென நம்பி கெஞ்சுகின்றன. எந்த சாலமன் மன்னன் வந்தாலும் தீர்க்கமுடியாமல் ஓடிவிடுவான் போல கரச்சலாக இருந்தது. “குளம் வத்தினாலும் குத்துக்கல்லுக்கு வாட்டமில்லையன்னு ஒத்தக்காலில நிக்கிறாளே” ஜன்னல் பக்கம் நிற்கும் கிழவி சொன்னது. பக்கத்தில் இருந்த பெரியம்மா “அது அது தான்மட்டுந்தான் முக்கியம்; எனக்கு எதப்பத்தியும் கவலையில்ல. யாரு எக்கேடு கெட்டு போனாலும் எனக்குக் கவலையில்ல. நான் நல்லா அனுபவிக்கனுமன்னு திரியுதுக. ஊரு உறவுக்கு நீ ஒன்னும் செய்யவேணாம். நீ பெத்த இந்த பச்சமண்ணுகள தூக்கியெறிஞ்சிட்டு போறேங்கறீயே எவ்வளவு கல் நெஞ்சக்காரியா இருப்ப” என்றது. “காலம் மாறிப்போச்சுக்கா” என்றது இன்னொரு அம்மா. “சந்திரன் தம்பிக்கு அந்தஸ்தில்லையா. அழகில்லையா, மணிமாதிரி பிள்ளைகள பெத்துக்கொடுத்திருக்கிறான் என்ன குறை இப்படி அமிரிக்கையான பையன் கெடச்சிருக்கானேன்னு காலுல விழுந்து கிடக்காமா கொழுப்பெடுத்து திரியிறாளே” அலமாரி ஓரம் நின்றிருந்த அம்மா ஆதங்கமாக சொன்னது. நான்கு குழந்தைகள் அங்கும் இங்கும் ஓவென அழ நடுகட்டில் இருந்த பெண்கள் அணைத்துக்கொண்டு ஆறுதல் படுத்தினார்கள்.
கடைசியாக கதிர்வேல் கவுண்டர் ரஞ்சிதாவை சந்தித்துப் பேசிவிட்டு தாரணி அக்காவிடம் சென்று பேசினார். “குழந்தைகள பாரும்மா. இன்னிக்கி எல்லாம் சொகமாத்தான் இருக்கும். ஆனா கையில இருக்கிற காசு போயிட்டா கருமாயப்படணும். அது மூணுமாசத்து வரைக்கும்கூட நிக்காது. ஒரு அப்பாவா, தாத்தாவா நெனச்சு சொல்றேன். யாரும் மதிக்காம லோலோன்னு ஓடுற காலம் வரும். அது இப்ப ஒங்களுக்குத் தெரியாது. வந்த பின்னாடி அது காலம் கடைசிவரைக்கும் உங்களப் பிடிங்கித் தின்னும். தெருவில நாய்கூட மதிக்காது. அப்ப தெரியும். அய்யோ தப்புப் பண்ணிட்டேனேன்னு, ஆனா என்ன கதறுனாலும் அப்போ நிம்மதி வராது. நொந்து நொந்து சாகவேண்டி வரும். என்ன சொல்ற…” என்றார்
.
தாரணி அக்காவும் முடியவே முடியாது என்றார். “எதுக்கும் கட்டுப்படமாட்டேங்கிற. சரி, அதை சபையில வந்து சொல்லு” என்றார். தாரணி அக்கா, “அதுதான் உங்ககிட்ட சொல்லிட்டேனில்ல. அங்க வந்தெல்லாம் சொல்லமாட்டேன்” என்றது. “ஏம்மா ஊரு உலகத்துக்கே தெரிஞ்சுபோச்சு. ரெண்டு கொழந்தைக மேல இம்மி அளவு பாசம் இல்ல. அந்த மன்மதன்தான் வேணுமங்கிற. அதையும் பஞ்சாயித்தில சொன்னாதான அத்துவிடுறதா, ஸ்டேசனுக்கு அனுப்புறதா, இல்ல கோர்ட்டுக்குப் போங்கன்னு அனுப்ப முடியும்” என்றார். ‘கூந்தலிலே ஒரு மலர்’ படித்த தாரணி அக்காவை திரும்ப காணமுடியாது போனது ஏமாற்றமாக இருந்தது. அக்கா அந்தக்காலத்து கலையோடு வந்தால் எத்தனையோ பேருக்கு நிம்மதி.
நான் எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப நேர வாக்குவாதத்திற்குப் பின் தாரணி அக்கா வாசல்தாண்டி சுவர் ஒட்டி வந்து தலைகுனிந்தபடி நின்றார். இடுப்பு மடிப்பு போட்டிருந்தது. கொஞ்சம் சதைபோட்டதால் இன்னும் அழகாகவே இருந்தார். புது புஷ்டி மேனியில் தெரிந்தது. காதில் புதுசான ஜிமிக்கி. ஜலஜலவென இறங்கும் கைநிறைய கண்ணாடி வளையல்கள். கைச்சதையை லேசாகப் பிதுக்கும் கண்டைக்கரைச்சட்டை. எடுப்பாக காட்டுகிற பாடியின் பிடிப்பு. நகங்களுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன் பாலீஸ் வைத்திருக்க வேண்டும். நன்றாகவே இருந்தார். கண்கள் மட்டும் இடவலம் போகிறது. இப்படி ஒரு அக்காவை நான் பார்த்ததில்லை. அந்த அக்கா வேறு என்று தெரிந்தது. தாரணி அக்காவின் பையன் “அம்மா நம்ம அப்பா, பாட்டி தாத்தாவோட இரும்மா” என்றான். அப்போதும் அக்காவின் கண்கள் மட்டும் அசைந்தன. சபையே ஒரு கணம் அமைதியாக இருந்தது. பாட்டி மடியில் இருந்த குழந்தை அம்மாவையே பார்த்தது.
தாரணி அக்கா “எனக்கு தங்கராசு மாமாதான் பிடிச்சிருக்கு அவரோடதான் வாழ்வேன்” என்றது.
சந்திரசேகரன் அம்மா மடியில் அமர்ந்திருந்த குழந்தையை ஆத்திரத்துடன் தூக்கியபடி “ஏன்டி கொண்டி பலபட்டற நாயே…” என்று ஆரம்பித்தது. “டேய் சந்திரா இவ நமக்கு ஆகமாட்டாடா. சிறுக்கிமவ காமக்கிறுக்கில பிள்ளைகளகூட கொன்னாலும் கொன்றுருவா. இந்த பசலைகள நான் வளக்கறேன்டா” நெஞ்சில் அறைந்து சொன்னது. தாரணி அக்கா பக்கம் திரும்பி, “ஊத்து தண்ணி குடிச்சவளுக்குக் கிடை தண்ணி பிடிக்குமா? ஒனக்கு புதுசு புதுசா பண்றவதாண்டி பிடிக்கும். நாக்கு ருஷி கண்டிட்டில்ல. ஒழுங்கு முறை இனி உனக்குப் பிடிக்காது. உனக்கு சொகந்தானே முக்கியம். நீ ஏறிவிளையாட அப்றாணி சப்றாணி ஆகுமா? தேவிடியா சிறுக்கி இந்தாடி ஒனக்கு ஒரு தேன்பாட்டில் தர்றேன். வச்சுக்கோ த்தூ நாதாரி… காறித்துப்பிவிட்டு எதிர் அறைக்குள் குழந்தையைத் தூக்கியபடி ஓடினார். கதவைத் திறந்துவிட்டு ஓடும் பாட்டியையே பார்த்தனர்.
கைகலப்பும் வசைகளுமாக முடிந்தது. குழந்தைகளின் கண்ணீரையும் துக்கத்தையும் பார்க்கப்பார்க்க சங்கடமாக இருந்தது. தாத்தாக்களும் பாட்டிக்களும் தாயாவார்கள். தோற்று ஊர் திரும்பினோம்.
அண்ணாவிற்குத் தெரியாமல் தாரணியைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் எனக்குள் மெல்லத் துளிர்த்தபடி இருந்தது.
மிக நீளமான சிறுகதை என்பதால் பலர் வாசிக்கச் சுணங்கியிருக்கலாம். ஆனால் கதை வாசிக்கத் துவங்கியதுமே வஜ்ரம் போல ஒட்டிக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. முதல் பாதியில் ஜெயமாலா கதையின் ஆன்மாகத் திகழ்கிறாள். அவள், வயதில் மூத்தவர்களை தன் மேனி வனப்பால் ஆட்டுவிக்கிறாள். அதனைப் பார்த்து ரசித்து உள்வாங்கிக்கொண்டே இருக்கிறான் இளம் வயது கதை சொல்லி. முன் பாதி முழுவதும் வாய்விட்டுச் சிரிக்கும்படியான அங்கத நடை. அடுத்த பாதி துவங்கும்போது முதல் பாதிக்குச் சம்பந்தமே இல்லாமல் நகர்வது போல இருந்தாலும் கடைசி வரி அதனைப் பொய்யாக்குகிறது. கதையின் மையக் கரு சிதைவுறாமல் ஒரு சரடுபோல அறுபடாமல் துலங்கி வந்ததை அக்கடைசி வரி நிர்ணயிக்கிறது அற்புதச் சிறப்பு. முதல் பாதியை ஜெயமாலா என்ற ;சில்க்’ பாத்திரம் இழுத்துச் சென்றாலும் அடுத்த பாதியை தாரணி அக்கா நுழைந்து கலக்குகிறாள். தொடக்கத்தில் உள்ள அங்கதம் இரண்டாம் பாதியில் சீரியஸாகப் போகிறது. அங்கதப் பகுதிக்குச் சற்றும் குறையாத சீரியஸ் பகுதி தாரணி அக்கா வரும் இரண்டாம் அத்தியாயம்தான். கதையின் மையச் சரடு தேக இச்சை.. இளம் வயது தொடங்கி முதிய வயதுவரை வந்து தாக்கும் பாலியல் இச்சை.. தாரணி அக்கா கதை சொல்லியிடம், நீ சரண்யாவைக் காதலிக்காதே என்று எச்சரிக்கும்போதே நாசுக்காக தாரணி தன் உடல்பசியைச் சொல்லிவிடுகிறார். அவள் கோடிகாட்டுவதை கதை சொல்லியால் பிடிக்க முடியவில்லை. அப்படிப் புரிந்துகொண்டிருந்தால் தாரணி மழையில் நனைந்து உடல் வாகு தெரிய கதைசொல்லியின் முன்னால் நிற்கும்போதே எசகுபிசகாக ஏதாவது நடந்திருக்கும். பின்னால் தாரணியின் உடல்தேவை நன்றாக உருக்கொண்டு துலங்கி வந்ததைக் கண்டிப்பாகச் சொல்லவேண்டும். இதில் ஜெயமாலாவை மிஞ்சிவிடுகிறாள் தாரணி. கதையின் கிராம மண்வாசம் துல்லிதமாக காட்சியாக்கப்பட்டிருக்கிறது. பாத்திரங்கள் கண்ணாடியில் பார்ப்பதைபோல தெளிவாகத் தெரிகிறார்கள். சுவேவின் கையொப்பமே அந்த அம்சத்தில்தானே கூடுதலாக ஒளிரும். கதை தறிகெட்டு ஓடுகிறதே என்று வாசகன் நினைக்கும் வேளையில் கடைசி வரி மையத்திலிருந்து விலகாமல் நிற்பதை உறுதிபட சொல்கிறது. படு சுவாரஸ்யமான கதை. தவற விடாதீர்கள் நண்பர்களே.
அன்புள்ள சு.வேணுகோபால் சாருக்கு
வல்லினம் தளத்தில் வெளிவந்திருந்த மோகப்புயல் கதையை வாசித்தேன். கதையை இருமுறை வாசித்தேன். நுண்ணிய விவரணைகளைப் போகிறப்போக்கில் வாசித்து முடித்து மீண்டும் சொல் சொல்லாக வாசித்தேன். பிரசாத் நடுவயதை அடைந்தவுடன் தன்னுள் காமம் என்னும் உணர்வு உருவாகி வந்திருக்கும் வழித்தடத்தை எண்ணவோட்டமாகப் பார்க்கிறான். இவையனைத்தும் சமூக மதிப்பீடுகளுக்கு பிறழான காமம் சார்ந்த அனுபவங்களாகவே இருக்கின்றன. இளவயதில் அப்பாவின் தையற்கடைக்கு வந்து அரட்டையடிக்கும் அவர் வயதையொத்த நண்பர்கள் கவர நினைக்கின்ற ஜெயமாலா அக்கா பிரசாத் மனத்தில் ஏற்படுத்தும் குறுகுறுப்பும் அவளுடன் இன்னும் அதிக நேரம் இருக்க வேண்டுமெனத் தோன்றச் செய்யும் உணர்வும் முழுவதுமாய்ச் சொல்லாகத் திரளாத எதோ நுண்ணிய உணர்வைத் தொடுகிறது. தாரணி அக்கா தன்னை முழுதாக அளிக்க பிரசாத்தின் முன்னால் நிற்கின்ற போது எதோ ஒன்று அதனைச் செய்யத் தடுக்கிறது. தேன் ராட்டை எடுக்கச் செய்யும் முன் தயாரிப்புகளில் காட்டும் நிதானமும் தேன் ஊறும் ராட்டை எடுத்து விழுங்கும் போது உண்டாகும் சுவையெனவே காமம் முற்றிலும் அணுகிடவும் விலகாமலும் தித்திக்கிறது. அந்தத் தேனின் சுவையை நினைவுப்படுத்துபவையாகவே பிரசாத்தின் அனுபவங்கள் அமைந்திருந்தன. அதைத் தவிர ஆள்காட்டிக் குருவி வால் துடிப்பின் சத்தம் கூட சரண்யாவுடன் நடந்து செல்லும் பொழுதை மற்றவர்களுக்குக் காட்டிக் கொடுத்து விடுமா என்ற தயக்கம் தொடங்கி திருமண வயதாகியும் தள்ளிப் போகும் திருமணத்தை எண்ணி வருந்தும் கோமதி அக்காவின் மனநிலையைக் காட்டும் பாரந்தாங்காமல் முறிந்து விழும் பலா மரக் கிளை என நுண்விவரணைகள் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. அக்காவின் பேச்சை மீறியும் சரண்யாவுடன் பேசுவதும் பழகுவதும் ஏற்படுத்தும் குற்றவுணர்வு, அவள் தன்னை அளிக்க முன்வந்தும் மறுத்துச் சென்ற குறுகுறுப்புமாக இருக்கின்றவன் அவள் திருமணமாகி வேறொருவருடன் ஓடிப் போகின்ற போது திரும்ப பார்க்க எண்ணுகின்றான். ஒருவகையில் தாரணியை பிரசாத் சந்தித்தால் அவளை மீட்டு வந்துவிடலாம் என்று எண்ணியிருந்திருக்கலாம். தேன் பாட்டில் வாங்கி தார்ரேன் என தாரணியின் மாமியார் எனக் கண்டமாதிரியாக அவளை ஏசுகிறார். உடல் முழுதும் போர்த்தி தேன் எடுக்கும் எச்சரிக்கை போய் கொட்டுகள் வாங்கியும் தேனெடுத்து விடத் துணிந்தவளின் முன்னால் துளித்தேனின் தித்திப்பை நினைந்து ஏங்குவதாகக் கதையைப் புரிந்து கொள்கிறேன்.
அரவின் குமார்
பொய்ம்மையில் கட்டப்படும் காமத்தின் மீது அதீத நம்பிக்கைக் கொண்ட ஆணும் பெண்ணும் தங்களுடைய இச்சையை மட்டுமே நோக்காமாகக் கொண்டு உறவுகளையும் பெற்ற குழந்தைகளையும் தூக்கி வீசியெறியும் சமகாலத்திய பிரச்சினையை மையப் பொருளாகக் கொண்டு புனைவுபடுத்தியுள்ள என் குருநாதர் சு.வே.அவர்களுக்கு நன்றியும் அன்பும்.