“இரும்மா, நான் மேல போனதுக்கப்பறமா கதவத் தெற. அவங்ககிட்ட நான் இல்லைன்னு சொல்லி அனுப்பிடு. வேற எதுவும் பேசாத. புரியுதா” அம்மாவின் அருகில் குனிந்து எச்சரித்துவிட்டு விறுவிறுவென்று படிகளில் ஏறினேன். நான் மேலே வரும்வரை தலைதூக்கிப் பார்த்திருந்தவளின் முகத்தில் குழப்பமும் கொஞ்சம் கவலையும்.அறைக்குள் புகுந்து கதவைத் தாழிட்டேன்.
எந்தச் சத்தமும் கேட்கவில்லை. கதவைச் சாத்திவிட்டால் எப்போதுமே எதுவும் காதில் விழாது. மேற்குப் பக்கமாய் வாசலுக்கு மேலாக இருக்கும் அறை. தெருவில் விரையும் வாகனங்களில் இரைச்சலும் ஒலிப்பான்களின் அலறலும்தான் அறைக்குள் கேட்கும். விசிறியை இயக்கிவிட்டு பாயில் படுத்தேன். மதியத்தின் வெம்மை அறைக்குள் தகித்தது. இவளைக் கண்டு ஏன் இப்படி ஓடி மறைகிறேன்? அஞ்சல் வழிக் கல்வி வகுப்புகளில் பழக்கம். பழக்கம் நட்பாகி நெருங்கிய வேளையில் இன்னொருவனை மணந்துகொண்டு போய்விட்டாள். அதன் பிறகு எந்தத் தொடர்புமில்லை. அலைபேசி எண்கூட தெரியாது. வெகுநாட்கள் கழித்து இன்று காலையில் அழைப்பு வந்தது. யாரென்று தெரியாமலே எடுத்தேன். அவள் குரலையே என்னால் அடையாளம் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும், சந்தோஷமாக இருந்தது. பெண் குரல் என் அலைபேசியில் ஒலிப்பதே அபூர்வம். அவள் என்று தெரிந்ததுமே பெரும் உற்சாகம். வருடங்கள் கழிந்தும் நினைவில் வைத்திருக்கிறாள், சந்திக்க விரும்புகிறாள் என்பதே என் வயதை சரிபாதியாக குறைத்துவிட்டது. தன்னிலை உணராமலே முகவரியைச் சொல்லிவிட்டேன். கொப்புளித்த உவகை தணிந்து சமநிலை அடைந்தபோதுதான் செய்த தவறை உணர்ந்தேன். எதற்காக அவளைப் பார்க்கவேண்டும்? தெரிந்துதான் வருகிறாளா? யாராவது சொல்லியிருப்பார்களா? எப்படியிருந்தாலும் இந்த சந்திப்பு இதமானதாய் இருக்கப் போவதில்லை. வாதையைக் கூட்டும் ஒன்றாகத்தான் இருக்கும். வேண்டாம் என்று அப்போதே தீர்மானித்தேன். அழைத்துச் சொல்லலாமா? வேண்டாம், வந்துவிட்டு போகட்டும். எத்தனை முறை எத்தனை பேரிடம் அந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியும். என்னிடம் இருப்பது ஒரே பதில். அந்த பதில் கேட்பவர்களிடம் எழுப்பும் கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் சந்தேகங்களுக்கும் என்னிடம் கூடுதலாய் எந்த விளக்கங்களும் கிடையாது. அதைவிட அவர்கள் தரும் இலவச ஆலோனைகளை என்னால் பொறுக்க முடிவதில்லை. ‘மூடிட்டு வேலையப் பாத்துட்டு போங்கடா’ என்று கத்தவே விரும்புவேன்.
இப்போதெல்லாம் யாரையும் பார்க்கவோ பேசவோ பிடிக்கவில்லை. விடிந்ததும் எல்லோருக்கும் முன்பே எழுந்து தயாராகி ஏழு மணி ரயிலைப் பிடித்து வடகோவையில் எட்டு ஐம்பதுக்கு இறங்கும்போது என்னவோ ஒரு விடுதலையுணர்வு. அதன் பிறகு பள்ளிக்கூடம், பாடங்கள், பிள்ளைகள் என்று நான்கு மணி வரை நேரம் போவதே தெரியாது. பள்ளியில் யாரும் அந்தக் கேள்வியைக் கேட்பதில்லை. உடன் பணியாற்றும் ஆசிரியைகளில் இருவரைத் தவிர மற்றவர்கள் மணமானவர்கள். அந்த இருவரும் என்னிடம் நெருங்குமளவு வசீகரமோ வயதோ இல்லை என்பதால் இதுவரையும் எந்த பிரச்சினையுமில்லை. ‘சார்கிட்ட ஃபேமிலியப் பத்திக் கேட்டா சிரிச்சுட்டே போயிடுவார்’ என்ற பொது அபிப்ராயம் எனக்கும் வசதியாகத்தான் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் இப்படி யாரிடமாவது மாட்டிக்கொள்ளாமல் இருந்தால் இந்த அறை உண்டு, கொஞ்சம் புத்தகங்கள் உண்டு என்று பொழுதைக் கழித்துவிடுவேன். பெண்ணுடலை திரையில் பார்ப்பதில் இப்போது அதிக நாட்டம் இல்லை. அதுவும் சலித்துவிட்டது. சுயமைதுனமும் பல்லில்லாக் கிழவன் சவைக்கும் கறித்துண்டுபோல, ஒரு சடங்கு. தினவுடன் உடல் பரபரத்த காலங்களில் கற்பனையில் கூடிய பெண்ணுடல்களுக்கே இப்போது கணிசமான வயதேறிவிட்டது. ‘சீக்கிரமா முடிச்சிட்டு விடு’ என்று கால்விரித்து எங்கோ வெறிக்கிறார்கள். தனி அறைக்குள் கிடக்கும் அவஸ்தை தாளாமல் பால்கனியில் வந்து கிடப்பேன். கீழே கூடத்தில் அம்மாவின் கட்டிலுக்கு அருகில் படுப்பேன். வாசுவின் மனைவி மஞ்சுவுக்கு பிடிக்கவில்லை. என்னவோ முனகியிருக்கிறாள். அதன் பிறகு கதவைத் திறப்பதுமில்லை. வெளியில் படுப்பதுமில்லை.
வெளிச்சம் குறைந்திருந்தது. பக்கத்து அறைக் கதவு திறக்கும் சத்தம். வெளியில் போயிருந்த சுந்தரும் அவன் மனைவி சியாமளாவும் வந்துவிட்டார்களா? என் அறை உள்ளே தாழிட்டிருப்பதை அவள் பார்த்திருப்பாள். அறைக்குள் சென்று கதவைச் சாத்திய பிறகுதான் அவனிடம் எதுவும் சொல்லுவாள். என் அறையின் சுவர்களுக்கும் கூட கண்கள் இருப்பதாய் அவள் அஞ்சுவாள். உண்மையும்தான். மூடிய அறைக்குள் உடல்களைக் காணும் திருட்டுத்தனத்தை அறியமாட்டார்களா என்ன? அவர்கள் வெளியில் வருவதற்குள் கீழே போய்விடலாம். எழுந்தேன். வேட்டியை இறுக்கிக்கொண்டு சட்டையை மாட்டினேன். செல்போனை எடுக்கலாமா? வேண்டாம். யார் அழைக்கப் போகிறார்கள். மெதுவாக கதவைச் சாத்திவிட்டு ஓசைப்படாமல் கீழே இறங்கினேன்.
காத்திருந்ததுபோல அம்மா எழுந்து சமையலறைக்குள் நடந்தாள். போட்டு வைத்திருந்த காபியைக் கொண்டுவந்து நீட்டினாள்.
“உங்கூட படிச்சுதாமே. என்னவோ பேர் சொல்லிச்சு. நீ இல்லேன்னு சொன்னதுமே பாவம் பொக்குன்னு போயிருச்சு.” எழுபத்தி ஒன்று முடிந்துவிட்டபோதும் இன்னும் எனக்கு காபி போட்டுத் தரும் விதி அவளுக்கு. நான் ஒன்றும் சொல்லவில்லை. அவளுக்கு இது பழக்கந்தான். வீட்டில் நான் இருக்கும்போதே பலருக்கும் இதுபோல இல்லையென்று பதில் சொல்லி அனுப்பியிருக்கிறாள்.
ஞாயிற்றுக்கிழமைக்கான அமைதியுடன் மங்கிய வெளிச்சம்கூடிய சாலையில் கிழக்கு நோக்கி நடந்தேன். சடையப்பன் கோயில் வாசலில் அடுத்தடுத்து வாகனங்கள். வசதிகள் பெருகி வாகனங்கள் பெருகி ஊரே மாறிப்போனபோதும் சடையப்பன் மட்டும் அப்படியேதான் வீற்றிருக்கிறார். அவரும் என்னைப்போலத்தான். நினைவு தெரிந்த நாளிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். நானும். வீட்டை அடையாளம் சொல்லவும் அவர் பெயரைத்தானே பயன்படுத்துகிறேன். அம்மாவையடுத்து எனக்காக யாரேனும் கவலைப்படக்கூடுமென்றால் இந்த சடையப்பனாகத்தான் இருக்க முடியும். சாலையைக் கடந்து கே பி என் காலனியின் பிரதான வீதியில் நுழைந்தேன். மரங்களுடன் கூடிய அழகான தெரு. அடக்கமான தனி வீடுகள். எல்லோரும் தொலைக்காட்சிகளில் மூழ்கியிருப்பார்கள். வீட்டிலும் அம்மா எப்போதும்போல தன்னுடைய பிரம்பு நாற்காலியில் சாய்ந்திருப்பாள். சுந்தரும் சியாமளாவும் இருக்கக்கூடும். சேலத்துக்குப் போயிருந்த வாசு ஏழு மணிக்கு வந்துவிடுவான். ரமாவையும் பிள்ளைகளையும் அழைத்து வந்துவிடுவான். ரவி போன வாரம்தான் ஆயிஷாவுடன் வந்துவிட்டு போனான். மறுபடி அடுத்த வாரம்தான் வருவான். பிள்ளைகளும் படம் பார்க்கிறார்கள் என்றால் கூடம் நிறைந்திருக்கும். மாடியில் கூடத்தில் எல்லா பிள்ளைகளுக்குமான என்னுடைய கணக்கு வகுப்பு இன்று இல்லை. ராத்திரி டிபன் சாப்பிட்டு முடித்து அவரவர் அறைக்குச் செல்ல பத்து மணியாகிவிடும். அம்மாவும் கூடத்தில் கிடக்கும் படுக்கையில் சாய்ந்துவிடுவாள். எனக்காகக் கதவைத் திறந்து வைத்துக் காத்திருப்பாள். பத்தரைக்குப் போனால் சரியாக இருக்கும். இருப்பதைத் தின்றுவிட்டு மாடிக்கு ஓடிவிடுவேன். சில நாட்களில் மட்டும் காலை அமுக்கிவிடச் சொல்லுவாள் அம்மா. அவளுக்கு கால் வலிக்கிறதோ இல்லையோ என்னை இன்னும் கொஞ்ச நேரம் பக்கத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். முடிந்தால் யார் மூலமாகவேனும் புதிதாக அவளுக்குக் கிடைத்திருக்கும் ஜாதகங்களைக் குறித்தோ, பெண்களைக் குறித்தோ பேச வேண்டும். நாற்பது வயது வரைக்கும்
நானும் பொறுமையுடன் கேட்டுக்கொண்டுதானிருந்தேன். ‘உனக்குன்னு ஒருத்திய பகவான் நிச்சயமா படைச்சிருப்பார்’ என்று சொல்வதை நானும் நம்பினேன். இப்போது வெறுத்துவிட்டது. இதுதான் காரணம் என்று தெரியாமல் புரியாமல் அடிவாங்கி அவமானப்பட்டு அனைத்திலும் ஆர்வம் வற்றிவிட்டது. அம்மா சொல்வதைக்கூட பொறுமையுடன் கேட்கும் நிலையைக் கடந்துவிட்டேன். அந்தக் கணங்களில் என் நாவிலிருந்து பாயும் தீச்சொல்லை அஞ்சுகிறாள். எனக்குள் சேர்ந்திருக்கும் கசப்பும் வன்மமும் அவளைத்தான் முதலில் தீண்டுகிறது, பாவம். அதனாலேயே பல நாட்களில் அவளைக் கண்டுகொள்ளாமல் அறைக்குள் அடைந்துகொள்கிறேன்.
தனலட்சுமி மில் வளாகத்தையொட்டிய பாதையில் திரும்பினேன். ஒருகாலத்தில் இந்தப் பகுதியின் அடையாளம். பெரும் பஞ்சாலை. இன்று தரைமட்டமாக்கப்பட்டு வீட்டு மனைகளாகப் பிரிக்கப்பட்டு பங்களாக்கள் அணிவகுத்துள்ளன. மகிழம்பூவின் வாசனையுடன் காற்று முகத்தில் மோதிக் கடந்தது. தெருவிளக்கின் ஒளிக்கு சற்று விலகி நின்றிருந்தது அந்த இணை. அவள் பைக்கில் உட்கார்ந்திருக்க அவன் தோளணைத்தபடி நின்றிருந்தான். முத்தமிட்டிருப்பானா? என் வருகையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்களை பார்க்காததுபோல கடந்தேன். சின்னதாய் ஒரு சிரிப்பொலி. என்னைப் பார்த்துச் சிரிக்கிறாளா? இவளுமா? இருக்காது. அவன் எதுவும் சில்மிஷம் செய்திருப்பான். பரவச கணங்களில் திளைத்திருக்கிறார்கள். பாவம், அனுபவிக்கட்டும். எல்லாம் சரியாக வந்தால் மணமக்களாகி இல்லறம் காணட்டும். என்போல அணைக்க உடலும், நுழைக்கத் துளையும் வாய்க்காமல் காய்ந்து இப்படி இருட்டில் மறைந்து ஒளிந்து ஓட வேண்டாம். எனக்கு ஏன் யாருமே வாய்க்காமல் போனார்கள்? இல்லை, அப்படியும் சொல்லமுடியாது. வாய்த்ததெல்லாம் வாஸ்தவம்தான். நான்தான் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளவில்லை. அஞ்சல் வழிக் கல்வியின் முதுகலைப் படிப்புக்கான நேரடி வகுப்புகளின்போதுதானே அனுவைச் சந்தித்தேன். கோவை, அரசுக் கலைக் கல்லூரியில் நடந்த வகுப்பின் முதல் நாள். திருப்பூரிலிருந்து வருகிறேன் என்று தெரிந்ததும் அவளே வந்து அறிமுகப்படுத்திக்கொண்டாள். அந்த ஒரு வாரமும், தனித் தனி இருக்கைகள் என்றாலும், ஒரே பேருந்தில் பயணம். மரத்தடியில் ஒன்றாக மதிய உணவு. எல்லாம் சரியாகத்தான் அமைந்தது. படிப்பு முடியும் வரையிலும் வாய்க்கும்போதெல்லாம் வீட்டுக்குப் போனதுண்டு. அவளும் சிலமுறை வந்து அம்மாவைப் பார்த்ததும் உண்டு. சின்னதாய் ஒரு கற்பனை சிறகு முளைத்திருந்தது. அவள் என்ன நினைத்தாள் என்பது உறுதியாக எனக்குத் தெரியவில்லை. கால்குலஸிலும் அல்ஜீப்ராவிலும் நல்ல மதிப்பெண் வாங்கியதற்கு நன்றி கடனாக அழகான பேனா ஒன்றையும் பரிசளித்தாள். அது காதல்தானா என்று எனக்குள் நான் உறுதிசெய்ய சற்று அவகாசம் எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். அதற்குள் அவள் திருமண அழைப்பிதழை கொண்டு வந்து நீட்டிவிட்டாள். அத்தோடு எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது எங்கிருந்தோ யாரிடமோ எண்ணைத் தெரிந்துகொண்டு அழைத்தாள். சந்திக்கவேண்டுமெனக் கேட்டாள். நான்தான் தவிர்த்துவிட்டேன். அவளுக்கு தெரிந்திருந்தாலும் தெரியாமலிருந்தாலும் சந்திக்காமல் இருப்பதே நல்லது. சந்திக்க நேர்ந்தால் என் மீதான பரிதாபக்கணக்கில் அவளுடைய பங்கும் சேர்ந்துவிடும்.
ரயில்வே கிராஸிங் சாலையில் திரும்பாமல் நேராக நடந்தேன். கணேஷ் மெஸ்ஸில் சரியான கூட்டம். மாஸ்டர் தன் இசைத் திறனை கொத்துப் புரோட்டாவில் நிரூபிக்க வேர்வையுடன் நின்றார். சேமலைதான் கல்லாவில் இருந்தான். தலை நிமிர முடியாமல் காசு வாங்கிப்போடும் அவசரம். பாதி வழுக்கை. நரை கூடிய முள் தாடி. என்னுடைய வகுப்புதான். எனக்கின்னும் முழு வழுக்கை இல்லை என்பதுதான் ஆறுதல். ஆனால், சேமலையின் மூத்த பையன் சென்னையில் பொறியியல் படிக்கிறான். இரண்டாமவன் பதினொன்றில். பத்தாம் வகுப்பில் கணக்கில் முப்பத்தி ஐந்து வாங்கி தப்பித்து, பனிரெண்டாம் வகுப்பில் தேற முடியாதபோது கடைக்கு வந்துவிட்டான் சேமலை. இருபத்தி ஐந்தாவது வயதில் கல்யாணம். என்னுடன் படித்தவர்களில் முதலில் கல்யாணம் அவனுக்குத்தான். மணப்பந்தலில் மாலையுடன் நின்ற அவளைப் பார்த்தபோது சேமலையின் மீது பொறாமை கிளர்ந்தது. எப்போதாவது வழியில் பார்க்க நேரும்போது சில வார்த்தைகள் பேசுவான்.
‘கல்யாணமே பண்ணிக்காத. இம்சை. நமக்கு புடிச்சமாதிரி எதையுமே செய்யமுடியாது. என்னையப் பாரு எப்பப் பாரு அந்த சோத்துக் கடையிலதான். எத்தனை குளிச்சாலும் ஊத்த சாம்பார் வாடை போகவோ போகாது. அப்பல்லாம் அப்பனுக்கு பயந்து உக்காந்திருந்தேன். இப்ப இவளுக்கு.”
“நீ சொல்லாம இருப்பே. நல்லா அனுபவிச்சு ரெண்டு பசங்களையும் பெத்துப்போட்டாச்சு. நான் மட்டும் கையடிச்சுட்டே காலந்தாள்ளனுமாடா?”
“அடப்போடா. அதெல்லாம் ஆரம்பத்துல கேந்திபுடிச்சமாதிரி இருக்கும். கொஞ்சநாள்தான். இப்பல்லாம் பக்கத்துலயே வர்றதில்ல, சாம்பார் நாத்தமாம். எனக்கும் பெரிசா நாட்டமில்லாத போச்சு. இதுக்காக ஒருத்தியைக் கட்டிக்கறதுன்னா, ரொம்ப மடத்தனமா இருக்குடா.”
அவனுக்கு எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்த பிறகு வரும் அலுப்பு. எனக்கு எதையும் பார்க்காததால் வரும் வெறுப்பு.
‘காலத்தே பயிர் செய்’யும் கணக்கு எங்கே தவறிப் போயிற்று எனக்கு?
ரவி ஆயிஷாவைக் கட்டிக்கொண்ட நாளில்தான் எல்லாக் குழப்பங்களும் தொடங்கிற்று. அப்போது குடியிருந்தது பத்து வீடுகள் கொண்ட சுப்பு மேஸ்திரி காம்பவுண்டில் கடைசி வீட்டில். வீடென்று சொல்லலாமா, தெரியவில்லை. மேற்கு நோக்கி நிற்கும் பழங்கதவைத் திறந்ததுமே சிறிய வாசல். வாசலையொட்டியிருந்த ஆறுக்கு நாலு அளவிலிருந்த இடத்தை கூடமென்று சொல்லலாம். அங்கேயேதான் சமையல், சாப்பாடு, படிப்பது, அம்மா பேப்பர் திருத்துவது, காய்கறி நறுக்குவது என்று எல்லாவற்றுக்கும். வடக்குமுகமாய் ஒரு அறை. மூலையில் மர பீரோ. அதையொட்டி சிறிய கட்டில். உள்ளே போனதும் கட்டிலில் தாவிவிடவேண்டும். நடந்து திரும்புவதுகூட சிரமம். வாடகை குறைவென்பதாலா, அம்மாவுக்கு பள்ளிக்கூடம் பக்கத்தில் என்பதாலா,ஒத்தாசைக்கு சித்தியும் அதே காம்பவுண்டில் இருந்தாள் என்பதாலா என்ன காரணம் என்பது உறுதியாகத் தெரியாது. ஆனால், ராத்திரிகளில் ஒண்டிக்கொள்ள ஒரு இடம். பஞ்சு குடோன் ஒன்றில் கணக்கெழுதிக் கொண்டிருந்தவன் ஒரு நாள் மதியம் ஆயிஷாவை அழைத்துக் கொண்டு வந்து நின்றான்.
“கல்யாணம் முடிஞ்சிருச்சி. சொல்ல முடியாத நிலைமை. ஒண்ணு ரெண்டு நாள் இங்கதான் இருப்பா. அதுக்குள்ள வீடு பாத்துருவேன். சமாளிச்சுக்கோ” ரவி அம்மாவிடம்தான் சொன்னான். மூட்டுவலிக்கு இலைப்பத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தவளின் காலைத்தொட்டு வணங்கினாள் ஆயிஷா.
அவள் தலையைத் தொட்டாள் அம்மா “சின்னப்பொண்ணா இருக்காளே. உன்னை நம்பி வந்துட்டா. நல்லபடியா பாத்துக்கோ.” அம்மா வேறெதுவும் சொல்லவில்லை. பெரிய ரகளையை எதிர்பார்த்து கூடிநின்ற காம்பவுண்ட் பெண்கள் உதட்டை சுழித்தபடி கிசுகிசுத்தபடி நகர்ந்தனர். அன்றிரவு சித்தியின் வீட்டுத் திண்ணையில்தான் படுத்திருந்தேன்.
வாசலில் அம்மாவும் சித்தியும் பேசிக்கொண்டிருந்தார்கள். “கட்டிட்டு வந்துட்டான். என்ன செய்ய சொல்றே?”
“அதுக்காக இத்தனை சின்னஞ்சிறுசுக இருக்காங்க. எல்லாரையும் இப்பிடி வெளியில கெடத்திட்டு உள்ளே கதவைத் தாப்பாப் போட்டுக்கறது நல்லாவா இருக்கு?”
“அந்தப் பொண்ணப் பத்தி யோசிச்சு பாரு நீ. பாவம், எங்க எப்பிடி இருந்துதோ. இங்க வந்து இந்த பொந்துக்குள்ள கெடக்குது. ரெண்டு மூணு நாள்ல வீடு பாத்துருவேன்னு சொல்லிருக்கான். இருக்கட்டும்.”
அம்மா அப்படித்தான். ஆரம்ப பள்ளி ஆசிரியை. முப்பத்தியிரண்டாம் வயதில் கணவனை இழந்து, நான்கு பிள்ளைகளை வளர்த்து படிக்கவைத்திருக்கிறாள். அவளுக்கு எதிலுமே குறைகள் கண்ணுக்குத் தெரியாது. தெரிந்தாலும் வெளியில் சொல்லமாட்டாள்.
கருடா மருத்துவமனை வளாகத்துள் வழக்கமான பரபரப்பில்லை. நோய்மைக்கும் வார விடுமுறையா? ஒரு காலத்தில் பஞ்சு குடோனாக இருந்த இடம். இன்று பஞ்சுக்கே கடும் பஞ்சம். ஆலைகளுமில்லை நூற்புமில்லை. அந்த நேரத்தில் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியிலிருந்த ‘நீதி விநாயக’னிடம் ஒரு கிழவி கையேந்தி மன்றாடி நின்றாள். கண்ணீர் வழிந்தது. அம்மாவும் இப்படித்தான் ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டு கிடப்பாள். சீக்கிரமாக எனக்கொரு வழி பிறக்கவேண்டும் என்று இஷ்ட தெய்வங்களிடம் கெஞ்சுவாள். என்னை தனிமரமாய் நிறுத்திவிட்டுப் போய்விடக்கூடாது என்ற கவலையைத் தவிர வேறென்ன துக்கம் அவளுக்கு? அண்ணன், தம்பி உறவெல்லாம் விலகி நிற்கும் வரைதான். எப்போதும் ஒட்டிக்கொண்டிருந்தால் அசௌகரியந்தான்.
ரவி தன் வழியைப் பார்த்துக்கொண்டான். குழப்பங்கள் அடங்கி எல்லோரும் வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக்கொண்ட பிறகு மூன்று வருடங்கள் கழித்து வாசுவுக்கு மணமானது. பின் அம்மா என் ஜாதகத்தை எடுத்தாள். முதல் தடையாக நின்றது ஜாதகக் கட்டத்தில் யாரோ ஒரு அதிபதி கூடாத இடத்தில் குடிகொண்டிருந்ததாக சித்தி புலம்பினாள். அதைவிட முக்கியமான தடை, எனக்கு நிரந்தரமான வேலை ஒன்றில்லை என்பது. எனக்குப் பிடித்த வேலையை நான் செய்துகொண்டிருந்தேன். கணிதம் சொல்லித்தருவது எனக்குப் பிடித்திருந்தது. காலையிலும் மாலையிலும் டியூசன். தனியார் பள்ளியொன்றில் கணித ஆசிரியர் வேலை. இதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது. கல்யாணம் செய்துகொள்ள அரசுவேலை கட்டாயம் என்ற நிபந்தனையை நான் அறிந்திருக்கவில்லை.
இளமைக் கனவுகளில் நாம் வேண்டுவதெல்லாம் ஷோபனாக்களையும் அமலாக்களையும் ரேவதிகளையும்தானே. அப்போதைய காட்சிகளில் நாம் இருக்கும் இடங்களெல்லாம் நம் கண்ணுக்குப் புலப்படாமல் மங்கிவிடுவதுதான் பிரச்சினையே. அந்த இடங்கள் தெளிவடைந்து நமது லட்சணத்தை நாமே பார்க்கும்போதுதான் பக்கத்தில் இருக்க வாய்க்கும் பெண்கள் தம்மருகே கமலஹாசன்களையும் மைக் மோகன்களையும் தேடுகிறார்கள் என்பது தெரியவரும். இந்த ஏற்றத்தாழ்வுகள் ஒருபோதும் சமன்படுவதேயில்லை. பரவாயில்லை என்று வலிய வந்த வரன்கள் சிலவற்றை அம்மாவும் சித்தியும் ஒதுக்கினார்கள். நானும் ஒன்றிரண்டை ஒப்புக்கொள்ளவில்லை.
பரிகார தலங்களுக்கும் தோஷ நிவர்த்தி தலங்களுக்கும் நடந்து களைத்திருந்த களைப்பில் சோர்ந்திருந்தபோது சுந்தர் மங்கையும் மாலையுமாய் வந்துநின்றான். எனக்கடுத்து பிறந்த கடைக்குட்டி என்றாலும் புத்திசாலி. அம்மாவுக்கு சிரமம் தரக்கூடாது என்று அவன் பணிபுரிந்த கணக்காயரே தன் மகளைக் கட்டிக்கொடுத்துவிட்டார்.
ஓய்வு பெற்று கிடைத்த பணத்தில் வீடு கட்டினாள். கீழே கூடம், ஒரு படுக்கையறை, மேலே மூன்று படுக்கையறை, ஒரு சிறிய கூடம். தனக்கென தனி வீடு கட்டிக்கொண்டதால் ரவிக்கு தேவையிருக்கவில்லை. வாசுவும் சுந்தரும் ஆளுக்கொரு அறையில் இருக்க இன்னொரு அறையில் நான் தனியன். இருவரின் பிள்ளைகள் மூவருக்கும் பக்கத்து வீட்டிலிருந்து சில பிள்ளைகளுக்குமாய் மாலையில் வகுப்பெடுக்கிறேன். வாசுவின் மகள் கோதைபத்தாம் வகுப்பு. சுந்தரின் மகள் மாயவி ஒன்பதாம் வகுப்பு. இருவரும் என்னைப்போலவே கணக்கில் புலிகள். அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் வேளைகளில்தான் நான் சுமையற்று சிரிப்பேன்.
யுனிவர்சல் தியேட்டர் சாலையில் திரும்பினேன். வரிசையாக தெருவோரக் கடைகள். உடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், செல்போன்கள், அலங்காரப் பொருட்களென்று அல்லங்காடிகள். வடக்கிலிருந்து வந்து பனியன் ஆலைகளிலும் நூற்பாலைகளிலும் அடைந்து கிடப்பவருக்கான விடுமுறை நாள். கூட்டம் கூட்டமாய் திரிந்தார்கள். இணையில்லாமல் தனியே நடந்தவர்கள் என் கண்ணிலேயே படவில்லை. எனக்கென்று இப்படித் தெரிகிறதா? குலாலர் திருமண மண்டபத்தில் அலங்கார விளக்குகள் ஒளிர்ந்தன. மணமகளின் பெயரைப் பார்த்தேன். ‘மங்கையர்க்கரசி’. அவள்தானா? சட்டென்று வேர்த்தது. நின்று வளாகத்துக்குள் பார்த்தேன். போய் பார்க்கலாமா? இருக்காது. அவளுடைய வீடு சூலூர்தானே. இங்கே திருமணம் நடக்க வாய்ப்பில்லை. அதுவுமில்லாமல் அவளிடம் பேசி, எல்லாம் முடிந்து இரண்டு வருங்களாகிவிட்டன.
அம்மாதான் எத்தனை நம்பிக்கையுடன் இருந்தாள். உடன் பணிபுரிந்த டீச்சரின் சிபாரிசில் வந்த ஜாதகம். பெண்ணுக்கு வயது முப்பத்தி நான்கு. அம்மா அப்பா கிடையாது. ஒரேயொரு அண்ணன். அவன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை. இதுவெல்லாம் எனக்கு எந்த கேள்வியையும் எழுப்பவில்லை. ஆனால், அவள் பணிபுரிவது ஒரு வங்கியில் என்று சொன்னபோதுதான் யோசித்தேன். வங்கிப் பணியில் இருப்பவளுக்கு ஏன் இத்தனை வயது வரை மணமாகவில்லை? ஏதேனும் குறையா? காதல் தோல்வியா? எதுவும் பிரச்சினையில்லையென்றால், நாற்பத்தி ஐந்தான என்னை எதற்கு ஒப்புக்கொள்கிறாள்? கேள்விகளும் சந்தேகங்களும் இருந்தாலும் பார்க்கலாம் என்ற யோசனையுடன் வங்கியின் தொலைபேசி எண்ணைத் தேடி எடுத்து ஒரு நாள் பின் மதிய வேளையில் அழைத்தேன். அவள் பெயரைச் சொல்லிக் கேட்டேன்.
“ஹலோ…” அவள் குரல் கேட்டதுமே ஒரு நிமிடம் தயங்கினேன். அடுத்த நொடியில் அவசரமாய் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவளுக்கும் அது எதிர்பாரா அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். சிறிய இடைவெளி.
“சொல்லுங்க…”
“என்னைப் பத்தி எல்லாத்தையும் சொல்லிருக்காங்களா?”
“ம். ஓரளவு தெரியும். ஸ்கூல்ல வேலை பாக்கறீங்க. திருப்பூர்லேர்ந்து டிரெய்ன்ல வர்றீங்க.”
“பரவால்லையே. நெறைய விஷயம் தெரியும்போல.”
“ம். தெரிஞ்சிட்டாதானே முடிவெடுக்கலாம்.”
அன்றைய தினம் சுருக்கமாக பேசி வைத்துவிட்டேன். அவளும் என் அலைபேசி எண்ணைக் கேட்கவில்லை. நானும் விசாரிக்கவில்லை..
அவளுடைய அண்ணன் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு பதில் சொல்வதாக சொன்ன விஷயத்தை அன்றிரவு அம்மா சொன்னாள். இந்த ஜாதகம் இன்னும் என்னை விட்டபாடில்லையா? இரண்டு நாட்கள் இடைவெளி. மீண்டும் நானே அழைத்தேன்.
“உங்கண்ணன் ஜாதகம் பாத்து முடியலையா இன்னும்?”
“அவன் அப்படித்தான். சீக்கிரத்துல சொல்ல மாட்டான். உங்களுக்கு அவசரமா?”
“ஆமாம் சொல்ற வயசெல்லாம் தாண்டியாச்சு. இன்னும் நாலு மாசமாகும்னு சொன்னாலும் என்ன பண்ண முடியும்?”
அவள் சிரித்தாள். குரலையும் சிரிப்பையும் வைத்து உருவத்தை தீர்மானிக்க முடியுமா?
“உங்க ஸ்கூல் பேங்க் வேலையெல்லாம் நீங்கதான் பாக்கறீங்களா?” அவள் சிரிப்பை ஒளித்துக்கொண்டே கேட்டபோது சட்டென்று உடலில் விறுவிறுப்பு கூடியது.
“ஏன் கேக்கறீங்க?” நா வறண்டது.
“நேத்து எங்கியோ பேங்க் போயிருக்கீங்கன்னு சொன்னாங்க. அதான் கேட்டேன்.”
“நீங்க போன்ல பேசினீங்களா?”
“பேசலை. பாத்தேன்.” மறுபடியும் உள்ளுக்குள் நடுக்கம்.
“பாத்தீங்களா? எங்கே?”
“வேறெங்க. நான் வேலை பாக்கற பேங்க்லதான். நீங்க வர்லையா?”
அட! பார்த்துவிட்டாளா? வெகுநேரம் நிற்கவில்லையே. உள்ளே போன சுருக்கில் வந்துவிட்டேன். அதற்குள் எப்படிப் பார்த்திருக்க முடியும்? வசமாய் மாட்டிக்கொண்டேன்.
“வந்தீங்கல்ல. பாத்து பேசிட்டு போக வேண்டிதுதானே. அதுக்குள்ள என்ன பயம்?”
“நீங்க என்ன பாத்தீங்களா?”
“பாத்தேனே.”
“எப்பிடி நான்தான்னு தெரியும்?”
“தெரிஞ்சுது. எப்பிடின்னு கேட்டா சொல்லாத் தெரியலை.”
மறுநாள் மதியம் உணவு இடைவேளையில் பக்கத்திலிருந்த உணவு விடுதியில் சந்தித்தபோது வியந்தேன். இவளுக்காகத்தான் இத்தனை நாள் வறுமையா? கடவுளே! இவளைக் காட்டத்தான் இத்தனை கால தவிப்பா? மூப்பின் அடையாளத்தை எங்கும் பார்க்க முடியவில்லை. இயல்பாகச் சிரித்தாள். எல்லா கதையையும் சொன்னாள். நான் நிலைமறந்து வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தேன். விடைபெறும்போது அவள் எச்சரித்தாள் “ரொம்ப கனவு காணாதீங்க. கீழே எறங்கி நிதானமா போங்க. இன்னும் எதுவும் முடிவாகலை. எங்க அண்ணன் அத்தனை சீக்கிரம் விட்டுற மாட்டான்.”
அவள் அப்படிச் சொன்னதை அப்போது பொருட்படுத்தும் நிலையில் இருக்கவில்லை. மறுநாள், மாலையில் பள்ளியிலிருந்து புறப்படும் நேரத்தில் அவளுடைய அண்ணன் அழைத்தான்.
“சாரி ஸார். ஜாதகம் செரியா வர்லை. பர்தரா புரசீட் பண்றதுல விருப்பம் இல்லை. இதோட விட்ருவோம். அம்மாகிட்டயும் சொல்ல சொல்லிருக்கேன்.”
நான் எதுவும் கேட்கும் முன்பே அவன் தொடர்ந்தான் “அப்பறம் அவளைக் கூப்பிட்டு பேசறது, பாக்கறதெல்லாம் இதோட நிறுத்திருங்க. நல்லா இருக்காது.”
அப்போது அவனுடைய குரலில் சிறிதும் இணக்கம் இருக்கவில்லை, மிரட்டல்தொனிதான் ஒலித்தது.
மறுநாள் அவளே அழைத்தாள் “நான் சொன்னதுதானே நடந்துச்சு.”
“உனக்குத் தெரியுமா முன்னாடியே?”
“ரொம்ப முன்னாடியே தெரியும். யாருக்கும் அவன் என்னைக் கட்டித்தர மாட்டான்.”
“ஏன்?”
“என்னோட சம்பளம்.”
ஒருகணம் நிதானித்தேன். இப்படியுமிருக்குமா?
“தெரிஞ்சும் நீ ஏன் ஒத்துக்கறே? புடிச்சவனை கட்டிக்க வேண்டிதுதானே?”
“முடிஞ்சா முன்னாடியே செஞ்சிருக்க மாட்டனா? அதெல்லாம் அவன் விடமாட்டான். நீ வேற யாராச்சும் நல்ல பொண்ணா பாத்துக்கோ. ஆல் தி பெஸ்ட்.”
அதன் பிறகு ஓரிருமுறை பேச முயன்றபோது அவள் பதிலளிக்கவில்லை. அதன் பின் நானும் விட்டுவிட்டேன். இப்போதும் அவள் அப்படியேதான் இருக்கிறாளா?
எஸ்பிஎஸ் துணிக்கடை வாசலில் கிடந்த நாற்காலியில் சாய்ந்திருந்தார் பாலு ஐயா. வெள்ளைத் துண்டை விசிறி கொசுவை விரட்டியவரின் கண்கள் மூடிக் கிடந்தன. துணிமூட்டையை சைக்கிளில் கட்டி ஊர் சுமந்த நினைவுகளில் ஆழ்ந்திருப்பார். இன்று வியாபாரம் வளர்ந்து பிள்ளைகள் தலையெடுத்து பேரப் பிள்ளைகள் குளிரூட்டிய பிரமாண்ட கடைகளில் வேர்வை தெரியாமல் முதலாளிகளாகிவிட்டார்கள். அவர் இன்னும் சைக்கிளை விட்டு இறங்கவில்லை. நானும் இப்படித்தான் எனக்கான தனி உலகில் இருந்துகொள்ள பழகிவிட்டேன். இப்போது யாரையும் பார்ப்பதில்லை. எந்த குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை. என்னால் எல்லோருக்கும் அசௌகரியம் என்பதால் தவிர்த்துவிடுகிறேன். பிள்ளைகள்தான் ‘சித்தப்பா, சித்தப்பா’ என்று கேட்டுக்கொண்டிருக்கும். அம்மா இருக்கும் வரை இங்குதான். கோவையிலேயே தங்கிவிட அவள் ஒப்புக்கொள்ளவில்லை. எனக்குமே அவளைவிட்டுச் செல்ல மனமில்லை. ஆனாலும் பயமாகத்தான் இருக்கிறது. இப்போதெல்லாம் சகோதரர்கள் மனைவியரோடு சேர்ந்து என்னவோ பேசிக்கொள்கிறார்கள். கிசுகிசுக்கிறார்கள். அம்மாவும் எதையோச் சொல்ல நினைக்கிறாள். ஆனாலும் சொல்லாமல் புழுங்குகிறாள். ரவியின் பிள்ளையும் தலையெடுத்துவிட்டான். ஜாதகம் எடுக்கவேண்டும் என்று பேசிக்கொள்கிறார்கள். எடுக்கத்தானே வேண்டும். அவனுக்கேனும் வயதில் வாய்க்கட்டும் வாழ்க்கை. இல்லையென்றால் என்னைப்போல அவமானங்களைச் சுமந்துகொண்டு சிரிக்கவேண்டும்.
வடவள்ளியில் தெரிந்த குருக்கள் ஒருவர் சொன்னதாக சித்தி ஒரு ஜாதகத்தைப் பார்த்தாள். பொருத்தம் கூடி வந்திருக்கிறதென்றும் மேற்கொண்டு பேசுவதற்கு முன்பு ஒருமுறை சந்தித்துப் பேசினால் பரவாயில்லை என்றும் அவர்கள் அபிப்ராயப்படுவதாக சித்திதான் சொன்னாள் “சாய்பாபா கோயில்ல பாக்கலாம்னு சொல்றா. உனக்கு ஸ்கூல் முடிஞ்சு அப்பிடியே போய்ட்டு வந்துடேன்டா” என்று சொன்னபோது நானும் மறுக்கவில்லை. “சமத்தா நடந்துக்கோ. எது கேட்டாலும் பல்லக் காட்டி சிரிக்காதே. சுருக்கா பதில் பேசு” அவளுக்குள் இருக்கும் பயத்தை புரிந்துகொண்டேன்.
கோயிலில் செவ்வாய் கிழமை என்பதால் கூட்டம் அதிகமிருக்கவில்லை. பள்ளியிலேயே முகத்தைக் கழுவி லேசாக ஒப்பனை செய்து வந்திருந்தேன் என்றாலும் மறுபடியும் முகம் கழுவித் துடைத்தேன். லேசாக விபூதி இட்டுக்கொண்டு பளிங்குத் தரையில் சம்மணமிட்டு காத்திருந்தேன். கற்பனை வரப்போகிறவளின் உருவத்தைத் தீட்டுவதை தடுக்க முடியவில்லை. தையல் வகுப்பு நடத்துகிறாள். சில வருடங்களுக்கு முன்பு நிச்சயமாகி கல்யாண நாளன்று திருமணம் நின்றுபோய்விட்டது. மாப்பிள்ளை வீட்டில் வரதட்சணைப் பணத்தை உடனே கேட்டதாக காரணம் சொன்னார்கள். அதைக் குறித்து விசாரித்து என்னவாகப் போகிறது? அதன் பிறகு திருமண ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொள்ளாதவள் இப்போதுதான் சம்மதித்திருப்பதாக சித்தியிடம் சொல்லப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம். ஒருவரின் நியாயம் இன்னொருவரின் நியாயமாக இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
ஒன்றரை மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு அலைபேசி ஒலிக்க பரபரப்புடன் எழுந்தேன். காதில் வைத்தபடி வெளியில் வந்தேன். வாகன நிறுத்தத்தின் அருகில் நின்ற இருவர் என்னை நோக்கி வந்தனர். நடுத்தர வயது பெண்மணியும் அவரைவிட சற்று இளையவராக ஒரு ஆணும். இவர்களா?
“கணக்கு வாத்தியார்?” தயக்கத்துடன் அவர் கேட்டபோது உறுதியாயிற்று. அப்படியென்றால் பெண்ணை அழைத்து வரவில்லையா?
“இவங்கதான் பொண்ணோட அம்மா. நான் இவங்க தம்பி.”
அம்மா என்னை பார்வையால் அளந்தபடியே நின்றாள். சாயமேற்றப்பட்ட கூந்தல். மல்லிகைச் சரம். தடித்த சட்டமிட்ட கண்ணாடிக்குப் பின்னே கூரிய பார்வை. இறுகிய கன்னக் கதுப்புகள். சிறிதும் இணக்கமில்லாத முகபாவம்.
பள்ளிக்கூடம், வேலை, தினசரி ரயில் என்று அவர்தான் விசாரித்தபடியே நின்றார். ஒரு சந்தர்ப்பத்தில் எதற்கு இந்த வேடிக்கை என்ற எண்ணம் எழுந்தது.
“பொண்ணைக் கூட்டிட்டு வர்லிங்களா?”
“அவ எதுக்கு வரணும்?” முதன்முறையாக அம்மா பேசினாள்.
“அவங்க என்னைப் பாக்க வேண்டாமா?”
“அதெல்லாம் தேவையில்லை. நான் பாத்தா போதும்.”
“நான் பாக்க வேண்டாமா?”
“முடிவாச்சினா பாக்கலாம். அதுக்குள்ள எதுக்கு?”
திகுதிகுவென எரிந்த கொப்பரைத் தீயை ஏறிட்டேன். இது மண பந்தத்துக்கான ஏற்பாடு போலத் தெரியவில்லை. சதுரங்க விளையாட்டு போல அவரவர் திறம் காட்டும் தருணம்.
“சரி. எல்லாத்தையும் விசாரிச்சாசு. ஜாதகமும் பாத்தாச்சு. நேர்ல பாக்கணும்னு சொல்லி பாத்தாச்சு. எப்ப முடிவு பண்ணுவீங்க?”
“இப்பதானே பாக்கறோம். முடிவு பண்ணலாம். கொஞ்ச நேரம் வேணுமில்லை.உள்ளே போயிட்டு வந்தர்றோம்.”
இருவரும் உள்ளே நடந்தனர். எனக்கு சிறிதும் நம்பிக்கை எழவில்லை. ‘நான் பாத்தா போதும்’ என்று சொன்னபோது ‘உங்களையா கட்டிக்கப் போறேன்’ என்று கேட்க நினைத்ததை எண்ணிப் பார்த்துச் சிரித்தேன். கேட்டிருக்கவேண்டும். தப்பெதுவுமில்லை. கோயில்களுக்குரிய பரபரப்பும் சந்தடியுமின்றி நிறைந்த அமைதி கூடிய கோயிலில் நான் மட்டும் இப்படி தவித்துத் தத்தளித்து நிற்கிறேன். பற்றுகோலின்றி காற்றில் நிலைதடுமாறி அலைந்தபடியிருக்கிறேன்.
நெற்றியில் விபூதிக் கீற்றும் கையில் பிரசாதத் தொன்னையுமாய் இருவரும் வந்தனர். கல்கண்டு சாதம்.
“எடுத்துக்கறீங்களா?” அவர் தொன்னையை நீட்டினார்.
“வேண்டாங்க. நீங்க சாப்பிடுங்க” நான் தலையாட்டியபடியே அம்மாவின் முகம் பார்த்தேன்.
“தப்பா நெனக்காதீங்க. ரொம்ப வயசான மாதிரி தெரியறீங்க” விரல்களில் சாதத்தை எடுத்து வாயில் போட்டாள். “எம் பொண்ணு கூட நின்னீங்கன்னா ஹஸ்பண்ட் மாதிரி தெரியாது.”
பீறிட்ட ஆத்திரத்தை அடக்கியபடி சிரித்தேன் “வயசு நாப்பத்தி அஞ்சுன்னு தெரிஞ்சுதானே வந்தீங்க. இதான் நான். நீங்க இன்னும் யூத்தா பாக்கறீங்க போல. ஆல் தி பெஸ்ட்.”
அவள் தொன்னையிலிருந்த மீதி பிரசாதத்தை வழித்து வாயில் போட்டாள்.
சுப்ரமணியர் கோயிலில் நடை சாத்தியிருந்தது. இதற்கு மேல் யார் வரப்போகிறார்கள்? படியில் அமர்ந்தேன். வெம்மையுடன் காற்று. அரசமரத்தில் இலைகளின் சலசலப்பு. இன்னும் ஓரிரு நாட்களில் பாதாளச் சாக்கடைக்காக வெட்டிவிடுவார்கள். இத்தனை வருடங்கள் ஓங்கி நின்ற அடையாளத்தை அப்படியே அகற்றிவிடுவார்கள். மனிதர்களையும் இப்படி வேரோடு பிடுங்கி அகற்ற முடிந்தால் துன்பமில்லைதான்.
வாசற்கதவை ஓசைப்படாமல் திறந்தேன். நிலைப்படி விளக்கு இன்னும் எரிகிறது. வழக்கமாய் அணைத்துவிடுவாளே? செருப்பைக் கழற்றும்போது பேச்சுச் சத்தம் காதில் விழுந்தது.
“இத்தனை நாள் பரவால்லே. இப்ப ரெண்டுமே வயசுக்கு வந்த பொண்ணுங்க. சித்தப்பா சித்தப்பான்னு ஒட்டிக்குதுங்க. வெவரம் தெரியாது. நமக்கு இவனப்பத்தி தெரியும்னாலும் சரியா இருக்காதில்ல. சொல்றதுக்கு யோசனையாதான் இருக்கு. அவனாப் புரிஞ்சிட்டா தேவலை. நீதான் எடுத்துச் சொல்லணும்” சுந்தரின் குரல்தான். அப்படியே நின்று கேட்க எனக்கு விருப்பமில்லை. என்னைப் பற்றித்தான் பேச்சு. நேரடியாகவே தெரிந்துகொள்ளலாம். ஒருமுறை கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தேன்.
அம்மா கட்டிலில் அமர்ந்திருக்க சுந்தர் அருகிலும் ரவி காலடியிலும். சியாமளாவும் மஞ்சுவும் சோபா அருகே தரையில். எனக்காகத்தான் காத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகவே தெரிந்தது.
“சாதம் போடட்டுமா?” சுரத்தில்லாமல் அம்மா கேட்டபோது தலையாட்டினேன்.
“சாப்புடறா” சுந்தர் சற்று உரக்கச் சொன்னான்.
“என்னவோ சொல்லணும்னு வெயிட் பண்றீங்க. சொல்லுங்க. அப்பறமா நான் சாப்பிட்டுக்கறேன்” நான் முகத்தைத் துடைத்துக்கொண்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்தேன்.
“நீ தப்பா எடுத்துக்காதடா. உனக்கே தெரியும். அதான்…” வாசு முகத்தை ஏறிட்டு பேச முனைந்தபோது அம்மா கையை உயர்த்தினாள்.
“இங்க வாடா” அழைத்தாள்.
எழுந்து அருகில் சென்றேன். சுந்தர் எழுந்து நகர்ந்தான். உட்கார்ந்ததும் என் முகத்தைப் பார்த்தாள் “இனிமே நீ பொண்ணுங்களுக்கு கிளாஸ் எடுக்க வேணாம். அவங்களே பாத்துப்பாங்க. வேற யாருக்குமே இங்க எடுக்க வேணாம். ஸ்கூல்ல என்னமோ பண்ணிக்கோ. இங்க வேண்டாம். புரிஞ்சுதா?”
பெறாவிட்டாலும் என் பிள்ளைகள் அவர்கள். ஆனாலும் நான் தனியன். ஆண் எனும் அச்சம். சரிதான், யாரிடமும் எதையும் நிரூபிக்க முடியாது. “அவ்ளோதானா?”
“ரூமைக் காலி பண்ணியாச்சு. இங்கதான் இனிமேல. மேல போ வேணாம்.”
இது வெகுநாட்களாக நானே யோசித்துக்கொண்டிருப்பதுதான். “சரி. வேற.”
“நீங்க எதுவும் தப்பா நெனக்காதீங்க. நாலுபேர் நாலு விதமா…” சியாமளாவைத் திரும்பி பார்த்தேன். அப்படியே நிறுத்திக்கொண்டாள்.
“சரிடா நேரமாச்சு. நீ சாப்பிடு. அம்மா நீயும் தூங்கு. நேரமாகுது. நாளைக்கு சீக்கிரமா கௌம்பணும்” சுந்தர் என் தோள்களில் தட்டிவிட்டு படிகளில் ஏறினான். மூவரும் தயங்கியபடியே மேலேறினார்கள். யாரையும் நான் நிமிர்ந்து பார்க்கவில்லை. அம்மாவும் தரையைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள். மேலுத்தட்டோர மருவிலிருந்த ஒற்றை முடி மூச்சின் வேகத்தில் அசைந்தது.
“படுத்துக்கம்மா” நான் எழுந்து தரைக்கு நகர்ந்தேன்.அறையிலிருந்த ஒற்றைப் பாய், தலையணை, போர்வை, உடைகள் இருந்த பெட்டி, புத்தகப் பெட்டி எல்லாம் அவள் கட்டிலுக்குக் கீழே கிடந்தன.
ஒன்றும் சொல்லாமல் படுத்தவள் மேல் போர்வையை போர்த்தினேன்.
சுற்றும் மின்விசிறியை வெறித்தபடியே சொன்னாள் “என்னோட புள்ளதான்டா நீ?”
புரியாதவனாய் எழுந்து அருகில் அமர்ந்தேன். “நா சொல்றதக் கேப்பியா. போயிருடா. எங்கயாவது போய் எப்பிடியோ இருந்துக்கோ. இந்த வீட்ல இருக்காதே. இத்தோட போகட்டும். அவங்க வேற எதாச்சும் தப்பா சொல்லிட்டா என்னால தாங்க முடியாதுடா.”
சொல்லிவிட்டு இதற்கு மேல் ஒன்றுமில்லை என்பதுபோல புரண்டு சுவரைப் பார்த்தபடி படுத்தாள். கண்ணோரமாய் நீர் வழிந்தது.
எழுந்தேன். விடிவிளக்கை எரியச் செய்துவிட்டு கதவைத் திறந்து வெளியே வந்தேன்.
0
மனதை அலைய வைத்த கதை. ஒவ்வொரு வரிகளும் அழகிய கவிதை.
கடவுளே!… தனியனின் மனபாரம் அப்படியே நமக்குள் இறங்குகிறது.
மிகச் சாதாரணமாகச் சொல்லப்பட்ட கதை. மிக வேகமாகச் செல்கிறது. அதனால் கதை ஓட்டம் எங்கும் தேங்கவில்லை. தொடக்கத்திலிருந்தே ஒரு தோல்வியடைந்த பாத்திரமாக காட்டப்படும் அவன் கதையின் கடைசி கட்டத்தில் அவனை வந்து மோதிச்செல்லும் எதிர்க்காற்று அவன் ஆளுமையை முழுமையாகவே உச்சியிலிருந்து தள்ளிச் சாய்த்துவிடுகிறது. அவன் அம்மா அந்த வார்த்தைகளை சொல்லாமல் இருந்திருக்கலாம் என்றே மனம் பதைபதைக்கிறது, எம். கோபாலகொருஷ்ணன் நல்ல கதைசொல்லி என்பதை வலிமையாக நிறுவிய மேலுமொரு புனைவு இது.
இந்தக்கதை எனக்குப் பிடித்திருக்கிறது. ஓர் நடுத்தர வயது ஆணின் எதிர்பார்ப்புக்கள், சஞ்சலங்கள், தவிப்புக்கள், ஏக்கங்கள், சபலங்களை தன்னிச்சையாக வெளிப்படுத்தியும் நகர்கிறது. ஆனாலும் தனியன் தனியனாகவே இருக்கிறார்..
நம் சமூதாயத்தில் நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், திருமணம் ஆன பிறகு. திருமணம் ஆகாமல் இருக்கும் போதுதான் ஒரு ஆணுக்கு ஏற்படுகிற சிக்கல் முதிர்க்கன்னியின் நிலையை விட மோசமாக மாறுகிறது. சற்று ஆழமாக யோசிக்கும் போது, தற்போதைய சூழல் மற்றும் திரைப்படங்களில் காண்பிக்கப் படும் தம் வீட்டு குழந்தைகளே சுற்றியுள்ள மாமா சிற்றப்பா மற்றும் உறவுகளின் மூலம் வண்புணர்வுக்குள்ளாவதைப் போன்ற கொடூரங்கள் நிகழ்ந்து வருவதால், பெற்றோர்களின் எச்சரிக்கை மனப்பான்மை சிலவேளைகளில் சுற்றியுள்ள உறவுகளை ரணமாக்கும். முடிவு சரியானதே. வருத்தம் கொள்வதற்கும் ஒன்றுமில்லை.
கதை அருமையாக நகர்ந்துள்ளது. நற்பத்தைந்து வயது ஆண் தன் தேவைக்கு வேண்டி ஒரு துணையினைத் தேட அம்மா மற்றும் உறவுகளின் நிழலை வேண்டி நிற்கும் அவலம் என்பது.. நம் இன ஆண்களையும் கூட்டுக்குடும்பங்கள் மற்றும் சுற்றங்கள் கோழையாகவே வைத்துள்ளது என்பதைக் காட்டுவதாக எனக்குப் படுகிறது.
சூப்பர் சார்.