எஸ். எம். ஷாகீர் ஓர் அறிமுகம்

மலேசியாவில் நவீன மலாய் இலக்கியச் சூழலைத் தொடக்கி வைத்தவர்கள் அசாஸ் 50 எழுத்தாளர்கள். அவர்களைத் தொடர்ந்து 60ஆம், 70ஆம், 80ஆம் ஆண்டு படைப்பாளர்கள் தங்களின் பங்கினையாற்றி வந்தனர். நவீன மலாய் இலக்கியச் சூழலில் யதார்த்தவியலை மையமாகக் கொண்ட எழுத்துப் படைப்புகள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கிய காலக்கட்டத்தில் யதார்த்தவியலோடு புராணங்களையும் வரலாற்றையும் தொடர்புப்படுத்தி புனைவுலகில் புதிய முயற்சியில் ஈடுபட்ட எழுத்தாளர்களில் ஒருவர்தான் எஸ். எம். ஷாகீர்.

ஷேட் முகமது ஷாகீர் பின் ஷேட் ஓத்துமான் எனும் இயற்பெயரைக் கொண்ட எஸ். எம். ஷாகீர் பிப்ரவரி 4, 1969ஆம் ஆண்டு கோத்தா பாருவில் பிறந்தார். மலேசியாவின் ஒன்பதாவது தேசிய இலக்கியவாதியான எஸ். ஓத்மான் கிளந்தான் அவர்களின் மகன்தான் எஸ். எம். ஷாகீர். இவர் 1990களிலிருந்து எழுதி வருகிறார். சிறுகதை, நாவல், கவிதை, இலக்கியக் கட்டுரை, திரைப்பட விமர்சனக் கட்டுரை என இலக்கியச் சூழலின் பல்வேறு தளங்களில் இயற்றியுள்ளார். எஸ். எம். ஷாகீர் ‘Di Bawah Lembayung’, ‘Kembang Kanigara’, ‘Ahli Politik’, ‘Cerita Sebuah Rumah’, ‘Dewa Cinta’, ‘Dunia Lelaki’, ‘Ikarus’, ‘Rumah Kupu-kupu’ எனும் நாவல்களைப் புனைந்துள்ளார். இவரது சிறுகதை ‘Merengkuh Langit’, ‘Fatamorgana’, ‘Sekuntum Kembang di Sayap Jibril’, ‘Menyirat Nirmala’, ‘Sekeping Ruh di Atas Bantal’, ‘Serigala dan Sekuntum Tulip’, ‘Bidadari Burung’ எனும் பெயர்களில் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் இவரது கவிதைகள், தத்துவவாதியல் கட்டுரைகள் ஆகியவையும் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு  இலக்கிய வடிவங்களின் மூலம் தமக்கான ஓர் இடத்தை வகுத்துக் கொண்டாலும், எஸ். எம் ஷாகீரின் முத்திரை படைப்புகளாக விளங்குவது இவரின் சிறுகதைகள்தான். இவர் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் புனைந்துள்ளார். தத்துவம், மதம், ஒரு சமுதாயத்தின் சிந்தனை, ஆன்மிகப் பார்வை, வாழ்வியல் முறைமை போன்றவற்றைப் பேசக் கூடிய புனைவுகளாக எஸ். எம். ஷாகீரின் சிறுகதைகள் அமைகின்றது. எஸ். எம். ஷாகீரோடு 90களில் பல புதிய எழுத்தாளர்கள் எழுந்திருந்தாலும் பெரும்பாலானவர்களின் புனைவுகள் காலம் கடந்து பேசக்கூடிய படைப்புகளாக அமையவில்லை. இதற்குக் காரணம், பெரும்பாலானவர்கள் சிறுகதையில் தாங்கள் கூற வருவதை நேரடியாக முன்வைத்துச் செல்லும் பாணியிலே சிறுகதைகளை எழுதினர். ஆனால், எஸ். எம். ஷாகீர் தமது சிறுகதைகளில் கூற வருவதை நேரடியாக முன் வைத்துச் செல்லாமல், கதை திருப்பத்திலும் இறுதியிலும் வாசகனைச் சிந்திக்க வைக்கச் செய்தார். இதுவே அவரின் கதைகளை வாசிக்கும் வாசகர்களுக்குள் வாசகப் பங்கேற்பை மேலோங்கச் செய்தது; மலாய் இலக்கியச் சூழலில் அவரைத் தனித்தும் காட்டியது.

பரந்த வாசிப்பும் தொடர்ந்து ஆய்வு செய்யும் பழக்கமும் எஸ்.எம். ஷாகீரின் சிறுகதைகளைத் தரமிக்கதாக்கியது. இவரின் சிறுகதைகளில் ‘மெரெங்குஹ் லாங்கீட்’ எனும் சிறுகதை தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அனைவராலும் பரவலாகப் பேசப்படும் சிறுகதைகளாகும். ‘மெரெங்குஹ் லாங்கீட்(1995)’ சிறுகதை தொகுப்புக்கு ‘பெர்டான’ இலக்கிய விருதும் வழங்கப்பட்டது. இச்சிறுகதை தொகுப்பில் மொத்தம் 20 சிறுகதைகள் உள்ளன. மலாய் மக்களின் வாழ்க்கையை மட்டும் காட்சிப்படுத்தாமல் உலக மக்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் கதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.

‘மெரெங்குஹ் லாங்கீட்’ சிறுகதை தொகுப்பில் உள்ள சில சிறுகதைகளில் எஸ். எம். ஷாகீர் தன்னுடைய கற்பனை வளத்தோடு புராணங்களையும் வரலாற்றையும் இணைத்துக் கதைகளை எழுதியுள்ளார். ‘இந்திரஜித்’ , ‘மிம்பி சேனாபதி’, ‘கிசா இகாரூஸ்’ போன்ற சிறுகதைகள் புராணங்களையும் வரலாற்று சம்பவங்களையும் மையப்படுத்தி எழுதப்பட்ட கதைகளாகும். காட்டாக, ‘இந்திரஜித்’ சிறுகதை ரமாயணத்தை மையப்படுத்திய கதையாக அமைகின்றது. ராவணனின் மகனான இந்திரஜித்தின் அகப்போராட்டத்தை இக்கதை காட்சிப்படுத்தும். பெண்ணுக்காகப் போர் செய்ய எண்ணும் தன் தந்தையின் திட்டத்தில் உடன்பாடு இல்லாத மகன், தந்தையின் சொல்லுக்காக மட்டுமே போரிடுகிறான். ஒரு மகனாகத் தந்தையின் போரிடும் திட்டத்தை மீறவும் முடியாமல் ஒரு வீரனாக பெண்ணுக்காக போரிடும் அந்தத் திட்டத்திற்கு முழு மனதோடு உடன்படவும் முடியாமல் இந்திரஜித் தனக்குள்ளேயே சிரமப்படுகிறான். மகனின் கடமைக்கும் வீரனின் ஆற்றலுக்கும் இடையில் ஏற்படும் அகப்போராட்டத்தை இந்திரஜித் கதாப்பாத்திரத்தின் வழி ஷாகீர் காட்டியுள்ளார். அதேபோல், ‘மிம்பி சேனாபதி’ சிறுகதை 1867ஆம் ஆண்டு சிலாங்கூரில் ராஜா மஹாடி, தெங்கு கூடின் இருவருக்கும் இடையே நிகழ்ந்த கிள்ளான் போரை மையப்படுத்திய கதையாகும். இக்கதையில் ஆக்கிரமிக்கப்பட்ட உரிமைக்காகவும் தன்மானத்திற்காகவும் போராடும் நிலையை ஷாகீர் சித்தரித்துள்ளார். இவரின் கதைகளில் வரும் மைய கதாமாந்தர்கள் தங்களின் அகவுணர்வோடு போராடும் கதாபாத்திரங்களாக அமைந்து தமக்குள்ளேயே உரையாடிக்கொள்ளும் எழுத்து நடையை எஸ்.எம். ஷாகீர் தமது சிறுகதைகளில் கையாளுகிறார். புராணங்களையும் வரலாற்றையும் அடித்தளமாகக் கொண்டு அவற்றில் கற்பனையையும் தனி மனிதனின் அகவுணர்வுகளையும் ஏய்தி சிறுகதைகளைப் படைத்துள்ளார் எஸ். எம். ஷாகீர்.

எஸ். எம். ஷாகீரின் துணிச்சலும் அவரை மலாய் இலக்கியச் சூழலில் தனித்துக் காட்டியது. தமது தொடக்கக்காலத்திலேயே இலக்கியப் பரிசோதனை முயற்சியை ஷாகீர் செய்துள்ளார். நடைமுறையில் உள்ள இலக்கிய வடிவத்தையே புதிய எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்கள் கையாளுவர். எஸ். எம். ஷாகீர் தமது தொடக்கக்காலத்திலே புதிய எழுத்தாளர்கள் எடுக்க தயங்கும் கருக்களைத் துணிச்சலோடு எடுத்து, அக்கருக்களின் அடிப்படையில் சிறுகதைகளை எழுதினார். ஆரம்பக்காலத்திலே உள்ளூர் மக்களின் உணர்வுகளையும் தத்துவத்தையும் மட்டும் காட்டாமல், உலகளாவிய ரீதியில் உள்ள தத்துவத்தையும் உலக மக்களின் உணர்ச்சிகளையும் தமது கதைகளைக் காட்டினார். காட்டாக, தாவோயியம் என்ற சீன சமயத் தத்துவத்தை மையமாகக் கொண்டு ‘தாவோ’ எனும் சிறுகதையை இவர் எழுதியுள்ளார். தலைமைத்துவத்தைத் தாவோவியம் தத்துவத்தோடு ஒப்பிட்டு இக்கதை புனையப்பட்டுள்ளது. அதோடு, மலாய் சூழலுக்கு வெளியில் உள்ள மற்ற கதாப்பாத்திரங்களான இந்திராஜித், கிரேக்கிய மன்னனான இக்காரூஸ் மன்னன் போன்ற கதாப்பாத்திரங்களையும் அக்கதாப்பாத்திரங்கள் எதிர்நோக்கும் சவால்களையும் கற்பனையோடு கதைகளில் இவர் எழுதியுள்ளார்.

சிறுகதைகளில் மட்டுமின்றி எஸ். எம். ஷாகீரின் கவிதைகளும் நாவல்களும்கூட உலகலாவிய வாழ்வியலையும் தத்துவார்த்த ஆழத்தையும் சூஃபிச உலகத்தையும் ஆராய்வதாக அமைகின்றது. கிழக்கு, மேற்கு எனும் இரு வேறு கண்டங்களை ஒன்றினைத்துப் புனைவுகளைப் புனைவதே எம். எஸ். ஷாகீரின் தனித்தும் எனலாம். மேற்கத்திய இலக்கியத்தின் நவீனச் சாயலோடு கிழக்கத்திய மெய்யியலைப் புகுத்தும் படைப்புகளாக இவரின் படைப்புகள் கருதப்படுகின்றன. அதோடு, சிக்கலான சர்வதேச அரசியல் பிரச்சினைகளைப் பேசும் படைப்புகளாகவும் எஸ். எம். ஷாகீரின் எழுத்துகள் அமைகின்றது. எஸ்.எம்.  ஷாகீரின் எழுத்துப் படைப்புகள் அவரின் கூர்மையான சிந்தனையாற்றலையும் வெளிக்காட்டுபவையாக இருக்கின்றன. காட்டாக,  ‘இக்காரூஸ்'(Icarus) எனும் இவரின் நாவலில் நாட்டின் எதிர்க்கால அரசியல் குறித்த பார்வை முன்வைக்கப்பட்டிருக்கும். இளைய சமுதாயத்தை மையமாகக் கொண்டு காதல், மாயை, அரசியல், சித்தாந்தம், வாழ்க்கையின் யதார்த்தம், யதார்த்தத்திற்கு அப்பால் உள்ள உலக வாழ்க்கை போன்ற கூறுகளை நாவலில் இணைத்து ஷாகீர் எழுதியுள்ளார். இந்நாவல் ‘Icarus Complex’ எனும் உளவியல் கோட்பாட்டினை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. அதீத இலட்சிய எண்ணம் கொண்டவர்களின் உளவியலை இந்நாவல் காட்டுகின்றது.

எஸ். எம். ஷாகீரின் கவிதைகளும் பலரால் பரவலாகப் பேசப்படுபவையாக விளங்குகின்றது. கவிதைகளிலும் மெய்யியலை இணைத்து ஷாகீர்  எழுதுகிறார். இவரின் கவிதைகளில் புகழ் பெற்ற கவிதை தொகுப்பாக விளங்குவது ‘Puisi Perjalanan Sang Zaman’ எனும் கவிதை தொகுப்பு நூல். ‘இக்பால்’ சிந்தனைகளை இணைத்து இக்கவிதைகளை இவர் இயற்றியுள்ளார். வாசிப்பவர்களின் உணர்ச்சி, உளவியல், அறிவாற்றல் போன்றவற்றோடு ஊடாடும் கவிதைகளாக இக்கவிதைகள் விளங்குகின்றன.

சிறுகதை, நாவல், கவிதைகளைத் தவிர்த்து எஸ்.எம். ஷாகீரின் படைப்புலகத்தை நாம் அவரின் இலக்கியக் கட்டுரைகளின் வழி அறிந்திட முடியும். இவரின் தர்க்கப்பார்வையையும் கூர்மையான அறிவாற்றலையும் இவரின் கட்டுரைகள் வெளிகாட்டுகின்றன. இவரின் குறிப்பிடத்தக்க கட்டுரையாக விளங்குவது PENA வெளியிட்ட Idealisme Penulis Muda என்னும் கட்டுரை தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘Sastera Harus Radikal’ எனும் கட்டுரையாகும். மாற்றத்தை நோக்கிய இலக்கியத்தைக் குறித்து இவர் அக்கட்டுரையில் எழுதியிருப்பார். இவர் இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இலக்கியக் கட்டுரைகளைப் படைத்தும் உள்ளார். எஸ். எம். ஷாகீரின் தமது மொழியறிவையும் அறிவாற்றலையும் ஆழ்ந்த வாசிப்பையும் இலக்கியக் கட்டுரைகளின் மூலம் பிரதிபளிக்கின்றார்.

மலாய் இலக்கியச் சூழலில் தரமிக்க படைப்புகளைப் படைத்து வரும் எஸ். எம். ஷாகீருக்குப் பல விருதுகளும் பரிசுகளும் கிடைத்துள்ளன. அவற்றில் பெர்டான இலக்கிய விருதும் ‘செகுந்தும் கெம்பாங் டி சாயாப் ஜிப்ரேல்’ என்னும் சிறுகதை தொகுதிக்கு வழங்கப்பட்ட கிளாந்தான் மாநில இலக்கிய விருதும் குறிப்பிடத்தக்கவை. இவற்றைத் தவிர டேவான் பஹாசா டான் புஸ்தாக்காவால் இவர் பங்கேற்பாளராக ‘Asean Youth Writer’s Conference’ மற்றும் இந்தோனிசியாவில் நிகழ்ந்த ‘மாஸ்தரா’ எனும் சிறுகதை பட்டறைக்கு அனுபப்பட்டார். தென்கிழக்காசியாவின் மாஸ்தரா இளம் இலக்கியவாதி விருது (Anugerah Sasterawan Muda Mastera) 2010ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. அதோடு, தென்கிழக்காசிய நாடுகளின் ஆசியான் (ASEAN) கூட்டமைப்பை உள்ளடக்கிய எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படும் இலக்கிய விருதான S.E.A Write Award விருதும் எஸ். எம். ஷாகீருக்கு வழங்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் தொடங்கப்பட்ட இவ்விருது தென்கிழக்காசிய எழுத்தாளர்களின் படைப்பாற்றலை அங்கீகரிப்பதோடு, சமகால இலக்கியம் குறித்த பரந்த விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்துவதையும், பல்வேறு தேசங்களைச் சார்ந்த எழுத்தாளர்களை ஒன்றிணைப்பதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளது. அவ்வகையில் 2011ஆம் ஆண்டு எஸ். எம். ஷாகீர் இவ்விருதைப் பெற்றார்.

எஸ். எம். ஷாகீர் எழுதுவதோடு மட்டும் தமது இலக்கியப் பணியை நிறுத்தாமல், இலக்கியப் பட்டறைகளில் பேச்சாளராகவும் செயல்பட்டு வருகிறார். எழுத்தாளர் இயக்கங்களிலும் செயல்பட்டு வந்துள்ளார் எஸ். எம். ஷாகீர். இவர் ‘GAPENA’ அமைப்பில் இளம் எழுத்தாளர்களுக்கான பிரிவில் துணை ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றியுள்ளார். கலை, கலாச்சாரம் மற்றும் அறிவியலுக்கான ஆராய்ச்சி மையமான நுசா மையத்தையும் இவர் நிறுவியுள்ளார்.

எஸ். எம். ஷாகீர் காலத்துடன் நகர்ந்து செல்பவர். இலக்கியப் படைப்புகளைப் பொழுதுப்போக்கு நோக்கத்திற்கு எழுதாமல், இலக்கியத்தின் ஆழம் அறிந்து அதனை சரியாக வாசகர்களுக்குப் படைத்து வருகிறார். 1990களில் தொடங்கிய இவரின் இலக்கியப் பயணம் இன்றளவும் தொடர்ந்து கொண்டே உள்ளது.

மாற்றத்தை நோக்கியதே இலக்கியம் – எஸ்.எம். ஷாகீர் கட்டுரை

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...