குறுங்கதை எனும் வடிவம் கோவிட் பெருந்தொற்று காலத்தில் பரவலாக எழுதப்பட்டபோது அது குறித்து தங்கள் புரிதலுக்குள் கட்டமைக்க பல்வேறு கருத்துகள் கூறப்பட்டன.
அவை குமுதம், விகடன் போன்ற இதழ்களின் ஒரு பக்கக் கதைகளின் வடிவம் என்றும், ஒரு வரிக் கதைகள், படக்கதைகள், துணுக்குகள் போன்றவற்றின் மேம்படுத்தப்படுத்தப்பட்ட பாவனை என்றும் சமூக ஊடகங்களுக்கென்றே எளிமையாக்கப்பட்ட கலை வடிவம் என்றும் பலரால் கூறப்பட்டது.
இன்னும் சிலர் ஜென் கதைகள், உபநிஷத்துக் கதைகளின் தத்துவ விசாரணைகளின் நவீன பாணி இந்தக் குறுங்கதைகள் என்றனர். பஞ்சதந்திரக் கதைகள், ஈசாப் கதைகள், முல்லா நசுருதீன் கதைகள், விக்ரமாதித்தியன் கதைகள் உள்ளிட்ட குட்டிக் கதைகளின் புதிர்த்தன்மைதான் குறுங்கதையின் ஆதாரம் எனவும் சிலர் வரையறை செய்தனர்.
இலக்கியத்தில் சமகாலத்தில் நிகழும் மாற்றங்களைக் கவனிக்கும் எந்த இலக்கிய வாசகரும் குறுங்கதை என்பது பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொள்ளவே முயன்றனர்.
முதலில் இவ்வடிவம் கேளிக்கை எழுத்துக்கானது என எண்ணம் கொண்டவர்கள்கூட விட்மன், செக்காவ், காஃப்கா, எர்னஸ்ட் ஹெம்மிங்வே, போர்ஹெஸ் போன்ற சிறுகதை வித்தகர்கள் குறைந்த சொற்களில் புகழ்பெற்ற குட்டிக் கதைகளை எழுதியுள்ளதை மேற்கோளாகக்கொண்டு அவ்வடிவை ஏற்கவும் எழுதவும் முன் வந்தனர். உண்மையில் குறுங்கதை வடிவம் தமிழ் நவீன இலக்கியத்துக்கு நெருக்கமானது. எப்போதும் போல பாரதியே இதற்கும் முன்னோடி. ‘குதிரைக் கொம்பு’ கதையில் ராமாயணத்தைத் தன் பாணியில் நகைச்சுவையாக மாற்றிச் சொல்லியிருப்பார். அதில் ஊடுருவியிருக்கும் தேசிய சிந்தனை இக்காலத்திலும் பொருத்திப் பார்க்கக் கூடியது. அவரது காலத்து மொழியும் சூழலும் புரியாவிட்டாலும்கூட படித்து ரசித்துச் சிரிக்கக் கூடியவை அவரது கதைகள். காக்காய் பார்லிமெண்ட், சின்ன சங்கரன் கதை, பேய்க்கூட்டம் போன்ற கதைகள் அங்கதமும் ஆழமான சிந்தனை வெளிப்பாடும் நிறைந்தவை. அவரைத் தொடர்ந்து புதுமைப்பித்தன் சிறிய வடிவிலான கதைகளை எழுதியுள்ளார்.
இலக்கணத்தால் இலக்கியம் உருவாவதில்லை எனும் நிலைபாட்டுக்குள் குறுங்கதையும் அடங்கும். பல ஆண்டுகள் அவ்வடிவம் எழுதப்பட்ட பிறகே ‘ஃபிளாஷ் பிக்சன்’ என்ற பதம் 1992இல் அறிமுகமானது. இத்தகைய உருவக, புதிர், செவ்வியல் கதைகளிலிருந்து மாறுபட்ட குட்டிக்கதைகளுக்கு ஜேம்ஸ் தாமஸ் என்ற எழுத்தாளர் இப்பதத்தைச் சூட்டினார்.
சொற்களின் அளவுக்கு ஏற்ப (1,500 இருந்து 6 சொற்கள் வரை) Flash fiction, Sudden fiction, Drabble or microfiction, Twitterature, Six-word story என்று இதில் பலவகை உண்டு. குறுங்கதைகள் வெறும் சீண்டல்களாக மட்டும் எழுதப்படும் மலினமான முயற்சியாக இல்லாமல் தமிழில் முதன்மையான எழுத்தாளர்களால் அது கையாளப்பட்டபோது ஒரு பக்கக் கதை எனும் வெகுசன இலக்கிய இடத்திலிருந்து நகர்ந்து தீவிர இலக்கிய முயற்சிகளில் ஒன்றாகவே தன்னை நகர்த்திச் சென்றது.
தமிழில் நான் அறிந்து முதல் குறுங்கதைத் தொகுப்பை வெளியிட்டவர் ஈழ எழுத்தாளர் ஐ. சாந்தன் (கடுகு, 1975). நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2008இல் யுவன் சந்திரசேகர் ‘மணற்கேணி’தொகுப்பை வெளியிட்டார். குறுங்கதைகள் எழுச்சி பெற்ற காலத்தில் எஸ். ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார இந்திரஜித், போகன், பா. ராகவன், கே. என். செந்தில், சி. சரவண கார்த்திகேயன் எனப் பலரும் குறுங்கதைகள் எழுதினர். சிங்கப்பூரில் சிறிய வடிவ உருவகக் கதைகளுக்கு மூத்த எழுத்தாளர் அமரர் சிங்கை முகிலன் பெயர்பெற்றவர். தற்காலத்தில் வாசிக்க ஏற்புடையது என சிங்கை மாணவர்களிடம் குறுங்கதை அறிமுகப்படுத்தப்படுகிறது. மலேசியாவின் எஸ். பி. அருண், சுமிதன், ஓவியன் போன்றவர்கள் நயனம், மன்னன் இதழ்களில் ஒரு பக்க கதை எழுதுவதில் வல்லவர்களாக இருந்தாலும் தயாஜி, கே. பாலமுருகன் போன்றவர்கள் அம்முயற்சியை இலக்கிய வடிவத்தை நோக்கி இழுத்துச் சென்றனர்.
குறுங்கதை முயற்சிகளை ஆராய்ந்தவரையில் படிமமோ, உருவகமோ இல்லாமல், சொல்விளையாட்டில் மொழியைச் சிக்கவைக்காமல், நுண்மையான உணர்வுகளையும் புரிதல்களையும் சித்திரமாகத் தரும் இந்த அழகியலை செம்மையாகவும் வலுவாகவும் கையாண்டிருப்பவர் பேயோன். தமிழின் முதல் ட்விட்டர் நூலை எழுதியிருப்பவர். உடனடி வாசிப்பில் நையாண்டி கதைகளாக இருந்தாலும், நுணுக்கமும் உள்ளடுக்குகளும் கொண்ட ஆழம் நிறைந்தவை இவரின் குறுங்கதைகள்.
புதுமைப்பித்தனுக்கு முன்னரே சிறுகதை முயற்சிகள் நிகழ்ந்திருந்தாலும் அவரை அத்துறையின் முன்னோடி எனச் சொல்ல காரணம் அதில் அவரது இடையறாத பங்களிப்பு. இன்றைக்கு எந்த வகையான சிறுகதை அழகியலை முன் வைத்தாலும் அதற்கான தொடக்கம் என்பது புதுமைப்பித்தனிலிருந்தே தொடங்கும். அப்படிப் பல ஆண்டுகளாக எழுதப்பட்டு வரும் தமிழ் குறுங்கதைகளின் முன்னோடி எனப் பெருந்தேவியையே என்னால் முன்வைக்க முடிகிறது.
‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்’ (சஹானா, 2020) ‘கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?’ (காலச்சுவடு, 2022) ஆகிய இரு தொகுப்புகளும் தமிழில் குறுங்கதைகளின் இலக்கியத் தகுதியை வளர்த்தெடுத்திருப்பவை. இதுகாறும் நிகழ்ந்த குறுங்கதை முயற்சிகளில் சில உச்சங்களைத் தொட்டவை.
பெருந்தேவி
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழில் எழுதி வருகிறார் பெருந்தேவி. ஒன்பது கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல், தொகை நூல் என ஏராளமாக எழுதியுள்ளார். அமெரிக்காவின் சியனா கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
இணைய இதழ்கள், சமூக ஊடகங்கள் பலவற்றிலும் ஏராளமான நுண்கதைகளை எழுதியிருக்கும் இவர், அவற்றில் தேர்ந்தெடுத்த கதைகளை இரு தொகுப்புகளாக்கியுள்ளார். ‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்’ தொகுப்பில் மொத்தம் 51 குறுங்கதைகளும், ‘கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?’ தொகுப்பில் 33 குறுங்கதைகளும் இடம்பெற்றுள்ளன.
அன்றாடத்தின் வண்ணங்கள்
தமிழகம், அமெரிக்கா என இருவேறு களங்களில் நகரும் இக்கதைகளின் மாந்தர்கள் தமிழ் மக்கள் என்றே புரிந்துகொள்ளலாம்.
இவரது கதை மாந்தர்கள் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் வாழ்பவர்கள். கருவிகளூடான மனித உறவுகளில் தன்னைப் பேணித்தனமும் சுய பட்சாதாபமும் மிகைப்பட்டிருக்கும் நிலையில், கேள்விக்குள்ளாகும் இருத்தலியச் சிக்கலை வெளிப்படுத்துபவர்கள்.
பாலினச் சமத்துவம், முதுமையின் தனிமை, ஓரின, இருபாலின ஈர்ப்பு, சமூக அக்கறை என எழுதித் தீராத கருப்பொருள்களில், அன்றாட வாழ்வின் எளிய தருணங்கள் வழியாக, இன்றைய வாழ்க்கை அளிக்கும் மனநிலைகளையும் எண்ணங்களையும் புதிய குறுஞ்சித்திரங்களாக்கியுள்ளார் பெருந்தேவி.
பெருந்தேவியின் குறுங்கதைகள் மீபுனைவுத் தன்மை கொண்டவை. நிகழ்காலத்தின் வெளிப்பாடாகத் துலங்குபவை. வாழ்வின் கருத்தியல் கூறுகளை ஒன்றையொன்று மறுத்து, ஒன்றையொன்று ஊடுருவிப் பார்ப்பவை.
அன்பின் நிதர்சனம்
இவரது கதைகளுக்கு உள்ள பொதுத்தன்மையாகப் பேரன்பு என்பதைச் சொல்லலாம். நியதிகள், வரையறைகள், வழமைகளுக்குள் அடைபடாத, எதிர்பார்ப்புகளும் கட்டுப்பாடுகளும் அற்ற அன்பு அது.
நெருக்கடிகளும் மன இறுக்கங்களும் நிறைந்த நகர வாழ்க்கை முறையில் தனி மனிதச் செயல்பாடுகள், சிந்தனைகள், குடும்ப அமைப்பு, சமூக அமைப்பு, சமூகச் சிந்தனை எனப் பல நிலைகளிலும் அதன் வெளிப்பாட்டையும் வெளிப்படமுடியாத அடைப்பையும் பல்வேறு தருணங்களின் தெறிப்புகள் வழியாகக் காட்டுகிறார். இந்த அடைப்புகளை நீக்குவதற்கான சாத்தியங்களைச் சொல்லாமல் சொல்கிறார் பெருந்தேவி.
‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்’ தொகுப்பின் முதல் கதையான ‘தவறைச் சரி செய்தல்’ கதையில் “நீங்கள் நாலுகால் பிராணிக்கு ஏதோ துன்பம் தந்திருக்கிறீர்கள். அதுதான் மனக்கஷ்டப்படும்படி இப்படியெல்லாம் நடக்கிறது. அதைச் சரி செய்யப் பாருங்கள்” என்கிறார் குடும்ப ஜோசியர். சொகுசான வளர்ப்புப் பிராணியாக இருக்கும் பொமரேரியனிடம் தொடங்கி, தெருவில் சொறி நாய்கள் வரைக்கும் குனிந்து குனிந்து “மன்னித்துக்கொள், மன்னித்துக்கொள்” என்கிறார் நகரவாசிப் பெண். எந்த நாயும் அவரைச் சீண்டுவதாக இல்லை. முன்னங்காலை நீட்டும் நாயிடம்கூட அவரால் இணங்கி வர முடியவில்லை. எவரும் பார்க்காதவாறு ரகசியமாக மன்னிப்புக்கோர விழைகிறார். மனதின் ஆழத்திலிருக்கும் குற்றவுணர்ச்சியை வெளிக்கொணர்ந்து, அதை வெளியேற்ற அவர் தயாராக இல்லை. உள்ளே தள்ளி ஆழப் புதைத்துத் தனக்குத் தொடர்பில்லாததாக்கவே முயல்கிறார். “இந்த ஜோசியர்கள் என்றைக்கு எதைச் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்?” என்று அவர் தப்பித்தோடுவதோடு கதை முடிகிறது. குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடுகள் அன்பாவதில்லை என்கிறது இக்கதை.
‘பொழுது விடிஞ்சா பிச்சைக்காரனுக்கு’ அன்பு உட்சுருங்கிய எளிய உளவியலைக் காட்டும் மற்றொரு கதை. தாழ்ந்த நிலையிலிருப்பவர்களை மேலும் மேலும் தாழ்த்திப் பார்க்கும், தங்கள் அழுக்குகளையெல்லாம் தங்களைவிடத் தாழ்ந்தவர் மீது கொட்டி நிம்மதிகொள்ளும் எளிய மனதின் நிலையைச் சில உரையாடல்களில் சொல்லிவிடுகிறது இக்கதை.
“பொதுவா யட்சியெல்லாம் நல்லமாதிரிதான். ஒண்ணு ரெண்டுதான் அப்படி இப்பிடி. அதெல்லாம் நம்ம வீட்டுக்கு வராது” என்று தங்கள் மனசாட்சியின் உறுத்தல்களையே அடக்கிவிடும் பொதுப் புத்தியை விமர்சனங்களின்றி இக்கதையில் வெளிப்படுத்தும் அதேநேரத்தில், எளிய மனிதர்களிடமிருக்கும் மிகுந்த காருண்யத்தையும் அன்பையும் சிலாகிப்புகளின்றிச் ‘சித்த புருஷரில்’ சிலாகிக்கிறார். தக்க சமயத்தில் விபத்தில் சிக்கவிருந்த குழந்தையைக் காப்பாற்றும் சாதாரண மனிதரை அதிசயப் பிறவியாக எண்ணிக் கொண்டாடும் குறுந் தருணங்களில் பேரன்பின் எளிய சாத்தியங்களை வெளிப்படுத்துகிறார்.
அன்றாட வாழ்வில் அன்பின் இயல்புநிலைச் சாத்தியத்தை அழகாகச் சொல்லும் கதை ‘பூனையும் அவளும்’. சாப்பிடாத பூனைக்கு நிலா காட்டுபவள், தன் மடியில் வைத்து ஊட்டிவிடவா முடியும் என்றும் நினைப்பதே வாழ்வின் நிதர்சனம்.
இந்தியத் தாம்பத்தியத்தின் அழகுகளும் அசுவாரஸ்யங்களும்
ஊர், சமூகம், குடும்பம் எனப் பலவற்றின் வழமைகளாலும் கட்டமைக்கப்படுள்ள இந்தியத் தாம்பத்திய வாழ்வில் கட்டற்ற, எதிர்பார்ப்பற்ற அன்பு சாத்தியமற்றுப் போகும்போது ஏற்படும் சலிப்பைப் பல கதைகளில் ஆராய்கிறார் பெருந்தேவி. அதில் துடுக்கான கதை, 96 படத்தை யதார்த்தின் எள்ளலோடு விமர்சிக்கும் ‘ஜானுவும் ராமும்’.
வயதான தம்பதியான ஜானுவும் ராமும் ஒருவர் மேல் மற்றவர் அளவற்ற அன்பு கொண்டிருந்தாலும் முகம் மறந்து போனதால், எதிரில் இருப்பவரை விட்டுவிட்டு இல்லாத ஒருவருக்காகக் காத்திருக்கின்றனர். ஊரில் எல்லாருமே அப்படித்தானிருக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாமல் கற்பனையாக இருக்கும்போது அன்பும் காத்திருப்பும் எத்தனை சாத்தியமாகிறது! வாழ்வின் நிதர்சனத்தையும் அபத்தத்தையும் ஒருசேரச் சொல்லும் இக்கதையை அடுக்குகள் பிரித்துப் பிரித்து வாசிக்க அர்த்தங்களும் விரிந்துகொண்டே போகிறது. ‘உரையாடல்’ கதையில் காது கேட்காத உடன்பிறப்புகள் மூவரின் உரையாடல். படித்துச் சிரிக்கும்போதே பளிச்செனத் தெரியும் அங்கதம். “ஆமாம், ஒருவர் பேசுவது மற்றவருக்குக் கேட்காதபோது எதற்காகச் சண்டை வரப்போகிறது.”
அன்பற்ற வாழ்வின் அலுப்பையும் சலிப்பையும் நுணுக்கமான மொழியில் சொல்கிறது ‘படுக்கை அறைகளின் கதை’. உடல் பிணைப்பில் உருவாகும் நெருக்கம், மெல்ல மெல்ல தளர்வடைந்து விரிசலாகி, வேற்றாளாகத் தனிமைப்பட்டுப் போய்விடுவதை எவ்விதமான கருத்தாடலும் விமர்சனங்களும் இன்றிப் பதிவாக்கும் கதை. மனநெருக்கம் பற்றிப் பேசாமலே அதுவின்றி ஏற்படும் உறவுச்சிக்கல்களைச் சில வரிகளில் சொல்லி விடுகிறார்.
சுய அன்பின் ஒற்றைத்தன்மையான வாழ்வின் சலிப்பூட்டலை ‘கொசு’ நகைச்சுவையாக நகர்த்துகிறது.
தனிமை கொடுமையில் ஒவ்வொன்றாய்க் கழன்று இறுதியில் மாய்ந்துபோகும் மனதின் ஆழ வலியை, இறப்புக்குப் பின்னான பொருட்கள் கழிக்கப்படும் வெகு இயல்பான ஒரு சிறு செயல் மூலம் மெல்லூசியாய் குத்தும் கதை ‘மனம் எடுக்கும் முடிவு’. ‘அங்கீகாரம்’ வேறு களத்தில் சொல்லப்படும் இதேபோன்றதொரு கதை. அன்பின்றிப் போவதால் ஏற்படும் மன வெறுமையை வளர்க்கும் நவீன குடும்ப வாழ்வின் ஆரவாரங்களை விமர்சிக்கின்றன இக்கதைகள்.
மேடைகள்
//இருபது வருடங்களுக்கு முன்னால் கடலூரில் நாங்கள் வசித்த ஓட்டு வீடு வினோதமானது. இருக்கும் அறைகளிலேயே மிகப் பெரிய, முற்றம் இருந்த சமையலறையில் இருபது மேடைகள் இருந்தன. பால், தயிர் வைக்கத் தலா ஒன்று, வெந்நீர் அடுப்புக்கு, தவலைக்குத் தலா ஒன்று, விளாவத் தண்ணீருக்கு ஒன்று, விறகுக்கு ஒன்று, காப்பிப் பொடிக்கு ஒன்று, பெரிய, சிறிய பாத்திரங்கள், கரண்டிகளுக்குத் தலா ஒவ்வொன்று, வால் பாத்திரங்களுக்கு ஒரு மேடை, மாவடு ஜாடி, மாகாளி ஜாடி, கல் உப்பு கச்சட்டிக்குத் தலா ஒன்று, கடையிலிருந்து வாங்கிவந்திருக்கும் காய்கறி பழங்களோடு அப்பா உட்கார ஒன்று, வாங்க வேண்டிய மளிகை சாமான்கள் பட்டியலுக்கு ஒன்று, வழக்கம்போல அடுப்புக்கு, சமைத்ததை வைக்க இரண்டு, சாமி படங்களுக்கு ஒன்று. ஸ்பூன்கள் வைக்க மேடையில்லை என்று அம்மாவுக்கு ஒரே மனக்குறை. விறகு மேடையில் ஒரு நாள் விறகோடு விறகாகச் சாரைப் பாம்பு படுத்திருந்தது. மாகாளி ஜாடியை ஒருநாள் குட்டி மரநாய் ஒன்று நக்கிக்கொண்டிருந்தது. அப்பா அமர்ந்திருந்த மேடையில் ஒரு நாள் பூசணிக்காயை மடியில் வைத்துக்கொண்டு கடவுள் அமர்ந்திருந்தார்.//
படித்தவுடன் வாய்விட்டுச் சிரிக்கவைத்த கதைகளில் ஒன்று.
அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ கதையின் இன்னொரு கோணமாக இந்த நுண்கதையை வாசிக்கலாம். அக்கதைக்கு எதிர்க்கோணத்தில் இதில் காட்சியமைத்துள்ளார் பெருந்தேவி. வீட்டிலேயே பெரிய இடமாக சமையலறை இருக்கிறது. வீட்டின் அத்தனையும் அங்கே இருக்கிறது. அங்கிருந்துதான் தொடங்குகிறது. இங்கே வெளிக்காட்சியிலிருந்து அகச் சித்திரத்தை உணர்த்துகிறார் பெருந்தேவி. குடும்பத்தின் தலைவியானவளிடமிருந்தே எல்லாம் தொடங்குகிறது. ஒவ்வொன்றுக்கும் அவள் தனித்தனி இடம் கொடுத்திருக்கிறாள். அவள் இல்லாதபோது அல்லது அவளின் ஆளுமை இல்லாதபோது அதாவது அவளின் அன்பு இல்லாதுபோகும்போது, நெருப்பின் உறைவிடத்தில் பாம்பு உறங்குகிறது. வழி வழியாகத் தொடரும் பாரம்பரியம், சடங்குகள் தொடர்பற்று நாய் நக்குவானவாகின்றன. அப்பாவின் இடத்தில் – அதாவது இயங்குவிசையின் மறுபாதியின் இடம் வெறுமையாகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் படைப்பியக்கமான கடவுள் பூசணிக்காயோடு உட்கார்ந்திருக்கிறார். அடுக்குகளால் ஆன கதை.
குடும்ப அமைப்பிலுள்ள நம்பிக்கையையும் விமர்சனத்தையும் இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன. இவற்றில் பலவும், வாழ்வில் அன்றாடம் பார்க்கும், வாசித்து அறிந்த களங்கள் என்றாலும் பெருந்தேவி பிரித்துக்காட்டும் வண்ணவேறுபாடு, இலக்கிய அழகியலின் சிறப்பு.
அச்சம் தரும் அடையாளங்கள்
பெருந்தேவி நிலம், மக்கள், கடவுள் என்ற பண்பாட்டுச் சூழலில் சிக்குண்டிருப்பவர். அதேநேரத்தில், பண்பாட்டின் பலத்தையும் பிரசாரமின்றி தன் எழுத்துகள் வழியாக எடுத்துரைப்பவர்.
பெண்ணியம் என்பது மானுட, பாலினச் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் கோருவது. தாழ்மை, அடிமை நிலைகளில் இருந்து மீண்டெழுவது. ஆணை வெறுப்பதோ, வெல்வதோ அல்ல. பெண்ணின் பெருமை பேசுவதல்ல. வியந்தேற்றல்கள் இன்றி, பலங்கள், பலவீனங்களோடும் பெண்மையைக் கொண்டாடுவது.
இந்த வகையில் முக்கிய பெண்ணிய எழுத்தாளராக அடையாளப்படுத்தக்கூடியவர் பெருந்தேவி என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால், இப்படிச் சொல்வதால் பெண்ணியம், தலித்தியம், திராவிடம் போன்ற வகைப்பாடுகள் இலக்கிய அரசியல் ஆயுதங்களாகிவிட்ட இன்றைய சூழலில் அவர் எழுத்துகள் கட்டம் கட்டப்படுவிடுமோ என்ற பயமும் ஏற்படுகிறது.
அத்துடன், பெண் எழுத்து என்பதாலேயே தகுந்த அங்கீகாரமும் வாசிப்பும் கிடைக்காதுபோவதும்; தமிழ்ச் சூழலில் பெண்ணியம் குறித்து இன்றைக்கிருக்கும் பொதுவான சில புரிதல்கள், பிரசாரங்களும் மேலும் அச்சத்தைத் தருகின்றன.
இன்றைய பெண்
குடும்ப, சமூக அமைப்பில் பெண்கள் மீதான காருண்யம் அன்பினாலானதா அல்லது அவர்களைப் பலவீனமாக்குவதா அல்லது அடிமைப்படுத்துவதா என்பதை இத்தொகுப்புகளின் பல கதைகள் அலசுகின்றன.
‘சுப்புணி’ கதையில் சாகக் கிடக்கும் பாட்டி சொல்வது “சுப்புணி” என அர்த்தம் கொள்ளப்படுகிறது. “சுப்புணின்னு ஒருத்தர நாம கேள்விப்பட்டதே இல்லியே” என்ற எண்ணம் எழ அது அனர்த்தமாகிறது. “பாட்டிக்கு நம்மளவிட்டா யாரைத் தெரிஞ்சிருகும்?” என்று வாயை அடைக்கிறார் பெரியப்பா. பாட்டிக்கு உப்பைக் கரைத்துக் கொடுத்து கதையை முடித்துவிடுகிறார்கள். கூடவே கற்பனையையும். ஆனாலும் அது நிஜமான ஆள் என்ற நம்பிக்கை சில நாட்களுக்கு அண்ணன் மனதில் உறைந்துவிடுகிறது. படுக்கையில் கிடக்கும் பாட்டியாக இருந்தாலும் பெண் என்பவளுக்கு ரகசியம் என்பதிருக்கக் கூடாது, தன்னை மீறிய ஒன்று அவளுக்கு இருக்கக் கூடாது என்பதும் அதே நேரத்தில் அப்படியும் இருக்குமோ என்ற சந்தேகமும் ஆண்களை ஆட்டிவைப்பதைப் போகிறப்போக்கில் நகைச்சுவையோடு சொல்லிப்போகும் அசத்தலான கதை.
ஆணாதிக்கம் உலக இயல்பாக இருக்கையில் பெண்கள் தங்களை மனதாலும் உடலாலும் வலுப்படுத்திக்கொள்வதே அவர்கள் திடம்பெறுவதற்கான வழி என்பதைச் சொல்லும் மற்றொரு கதை, ‘வாதிடப் பழகுதல்’. “போடி, எங்கப்பா நெனச்சாருன்னா டயனோசரையே வேட்டையாடுவாரு” என்கிற சிறுவனிடம், “என்னோட அப்பா டயனோசரைவிடப் பெரீய டயனோசரை அடிச்சி இழுத்துட்டு வருவாரு. அதோட பல்லுங்கள நான் பூக்கட்டி வச்சிப்பேன்” எனப் பதில் சொல்லச் சிறுமிக்கு ஏன் தோன்றுவதில்லை என்ற கேள்விதான் கதையின் கரு. “அப்படித் தனக்குச் சொல்லத் தோன்றாததை எண்ணி அவளுக்கு அழுகையாய் வந்தது” என்பதே பெண்ணின் நிலையாக, யதார்த்தமாக உள்ளதைச் சொல்லும்போதே காலம் காலமாகத் தங்களை ஒப்புக்கொடுத்து வரும் எல்லாப் பெண்களின் வருத்தமும் படிகிறது. கூடவே விடுபடல் துணிவும்.
பெண்ணை இச்சைப் பொருளாக வர்ணிக்கும் வேத சிந்தனைகளை எள்ளல் செய்கிறது இச்சையை நாடிச் செல்லும் ‘ஆப்பிள்’ கதையின் பெண்.
எல்லாரும் எழுதிப் பார்த்துவிட்ட ‘துச்சலை’யையும் தன் துடுக்குத்தனமான எள்ளலோடு எழுதிப் பார்த்திருக்கிறார் பெருந்தேவி. இதில், கதை சொல்லும் இரு கிழவர்களைத் துரத்திவிட்ட கிழவி, துச்சலையை கலீஜூ அல்ல, கடைசி உதிரம், கடைசி ரத்தம், கடைசி வரை உயிர்த்திருந்தவள், ராசாத்தியாக வாழ்ந்தவள் என்று உச்சத்தில் வைக்கிறார். இளம் பெண்ணுக்கு வழித்துணையாகச் செல்கிறார். பின்தொடரும் காலடிகளையும் வழித்துணையாக்குகிறார்.
‘பல்லி’, ‘பிரதி மாறாட்டம்’, ‘கடவுளாகப் பொறுப்பேற்கும்போது’ கதைகள் சமூக மாற்றத்தில் வாழ்க்கைப் போக்குகளும் ஆண்-பெண் நிலைகளும் எத்தனை மாற்றங்களைச் சந்தித்தாலும், பெண்ணின் இடம் குறித்து ஊறிப்போன எண்ணச் சிக்கு என்றுமே மண்டிக்கிடப்பதை அங்கலாய்ப்பவை.
எல்லாக் காலத்திலும் எந்த இடத்திலும் அன்புக்கும் காதலுக்கும் காமத்துக்கும் அங்கீகாரத்துக்கும் அரவணைப்புக்கும் ஏங்கும் மனித மனத்துக்குப் பால்பேதமில்லை. இதில் கையறு நிலையிலோ, தாழ்வுற்றோ இன்றைய நவீனப் பெண்கள் இல்லை என்பதைச் சாதாரண சம்பவங்கள் வழி காட்டிவிடுகிறார் பெருந்தேவி.
‘நெருக்கத்தை அனுபவித்தல்’ கதையில் வரும் பாத்திரம் “தூராதி தூரத்தில் இன்னும் இருக்கிறவனுக்காக இங்கே இவள் இருக்கிறாள். ஆனால் காத்திருக்கவில்லை.” தன்னிறைவடைந்த பெண்மை அல்லது பெண்ணியம், ஆண்மையின் அணுக்கத்தைத் துறப்பதில்லை. ‘நெருக்கத்தை அனுபவித்தலை’ விழைகிறது என்பதைப் பல கதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
ரசனையையும் பாதுகாப்பையும் ‘ஆசீர்வாதம்’கதையின் பாத்திரம் ஏற்றுக் கொள்கிறது. ‘இறக்க சந்தர்ப்பம் வாய்த்த நேரத்தில்’ வரும் பெண் விமானம் விபத்துக்குள்ளாகக்கூடும் என அறியும் மரண கணத்தில் ஊடலும் கூடலும் கொண்டு பெண்மை பேரன்பில் துரோகங்களையும் மன்னிப்புக்கோரும் முன்னரே மன்னித்து மறந்துவிடுகிறது.
‘முடிக்கற்றை’, ‘ஒரு மெஸேஜை வாசிப்பது எப்படி?, ‘நகர்ந்து செல்’, ‘உண்மையில் உண்மை ஒரு அசெளகரியம்’, ‘உறவு’, ‘இது நடந்த கதை’, ‘பச்சைக் கண் விளக்கு’, ‘ஆசீர்வாதம்’ என நகர வாழ்வின் பின்நவீனத்துவக் காதல் மனதின் மாறுபட்ட நிலைகளின் பெண்ணின் பார்வையிலிருந்து சொல்லும் பல கதைகள் உள்ளன. இந்த மாந்தர்களது அன்பின் எதிர்பார்ப்பு, கட்டுப்பாடுகளால் ஆனதல்ல.
சமூக மனம்
‘குழந்தையின் இருமல்’ கதையில் “முழு ஆளுக்கான எந்தச் சுகத்தையும் சோகத்தையும் குழந்தை அனுபவித்திராதபோதும் முழு ஆளைப்போல குழந்தையும் எதையோ வெளியே தள்ளப் பார்க்கிறது.” ஒரு குழந்தை முழு ஆளுக்கான இருமலை இருமுவதை அநீதியாகக் கருதுபவர், “இந்த அநீதிக்காக, யாரிடம் போய் முறையிட முடியும்?” என்று அங்கலாய்கிறார். வாழ்க்கையின் நீண்ட அனுபவத்தின் பெரும் வலியின் வெளிப்படும் இந்தக் கதையில் குழந்தை மீதான, எதிர்காலத்தின் மீதான பேரன்பையும் பரிதவிப்பையும் கொட்டுகிறார். அறச்சீற்றத்தையும் அழகாக, மெல்லிய எள்ளலோடு வெளிப்படுத்தும் அரிதான கலை இவருக்குக் கைவந்துள்ளது. இவரின் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று.
நகர வாழ்வின் மந்தை போக்கை, தன்னைப்பேணித் தனத்தை, சமூகச் சிக்கல்களைப் பேசும் மாய யதார்த்த, அறிவியல் புனைவுகளான, ‘அழுமூஞ்சிகளின் ஊர்’, ‘பாட்டிலான்’, ‘விரல்‘, ‘கண்ணிலே என்ன உண்டு’ கதைகளில் அன்பின் சாத்தியங்களைத் தேடுகிறார்.
‘பக்கத்து வீடு’, ‘மானுடவியல்’, ‘கடைசியில்’ போன்ற கதைகள் எழுத்தாளரின் சமூக அரசியல் விழிப்புணர்வின் அக்கறையைக் காட்டுபவை.
அன்றாட வாழ்வியில்புகளைப் புதிய, மாறுபட்ட தளங்களில் சொல்லும் கதைகளான ‘பயணம்’ கதைகள், ‘போகாதே’, ‘பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள் கதைகள்’, ‘தவிர்க்க வேண்டியது தவிர்க்க முடியாதது’ போன்றவற்றில் அனுபவப் பாடங்களும் அடிபடல்களும் கழுத்து வரை இருந்தாலும் பிடிப்பைத் தக்கவைக்கும் எதிர்பார்ப்புகளையும் பாதை தடுக்கிவிடும் நப்பாசைகளையும் வெவ்வேறான எழுத்து மாதிரிகளில் எழுதிப் பார்த்துள்ளார்.
‘16’ மனங்களின் எதிர்மறை, நேர்மறை எண்ணங்களின் மனச்சித்திரம். ஒரு பெரிய கதையைப் படித்து முடித்துவிட்ட நிறைவைத் தரும் செறிவும் ஒழுங்கமைதியும் நிறைந்த கதை.
சீண்டலும் கிண்டலும்
‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்’ பெருந்தேவிக்குக் கைவந்த சீண்டும் கிண்டலுக்கு ஒரு சான்று. “எல்லாப் பாதிரியாரும் சிங்கிள்தான் என்று ஒரு மாணவன் பல்பு கொடுத்ததைக் கேட்டேன்” என்பதும் பயந்தோடும் பேயைப் பார்த்து, “நான் அடிக்கக்கூட இல்லையே ஏன் இப்படி” என்பதும் உச்ச சீண்டல்.
‘ஹிந்தி/குஜாராத்தி ரீயூஷன் ரீச்சர் தேவை’ கதையும் இந்த வகையைச் சேர்ந்தது. பேயுடன் உரையாடும் எளிய கற்பனைக்குள் அம்மா பேய், குட்டிப் பேய்களின் திறன்களைச் சிலாகிப்பது, அவற்றின் அறியாமைகள் பற்றிய கவலை, கரிசனம், மொழிபேத கிண்டல் என்று நகைச்சுவை இழையோட அடுக்குகளாகக் கதை சொல்கிறார்.
உள்மனதின் ஆழங்களை நுட்பமாகக் காட்டும் ‘மலைப்பாம்பு’ பெருந்தேவியின் சிறந்த கதைகளில் ஒன்று. மலைப்பாம்பு எதுவாகவும் இருக்கலாம். மறு இறுக்கம், வெறுமை, தனிமை, பைத்தியக்காரத்தனம், நப்பாசை, எதிர்பார்ப்பு, நயவஞ்சகம், ஏமாறுதல் எதுவாகவும். அது தன்னை மீறும்போது அதை மிதித்து மேலெழ வேண்டும் எனும் மகிஷாசுரமர்த்தினி தனம் பெருந்தேவி எழுத்தினூடாக வெளிப்படுத்தும் பெண்ணியம், துனிவு, திறன், அறிவாழம் எதுவாகவும் இருக்கலாம்.
இத்தொகுப்புகளிலுள்ள மிகக்குறைவான சொற்களில் எழுதப்பட்டுள்ள நெகிழ்வான கதைகளில் இது ஒன்று.
சமூகப் போக்கின் அவலத்தையும் குரூரத்தையும் வார்த்தைகளாலன்றி விவரிக்கும் ‘உட்பக்கம் பூட்டியிருந்த வீடு’ புனைவின் சிறப்பு மேலெழுந்து நிற்கும் கதை. கொலையுண்டு கிடக்கும் குடும்பம் அல்லது ஆண், பெண், குழந்தைகள். எவ்விதமான விமர்சனங்களோ, நியாயப்பாடுகளோ இன்றி உள்மனத்தின் கோரங்களையும் வன்மைத்தையும் அழுக்குகளையும் விடுவிக்க முடியாத புதிர்நிறைந்த துப்பறியும் கதை பானியில் எழுதப்பட்டுள்ள இக்கதையில் புனைவுக் கற்பனைப்பால் வெளிப்படும் யதார்த்தமும் நிதர்சனமும் அதிர்ச்சிக்குள்ளாக்குபவை.
பகிடியின் உச்சம்
இலக்கியம், குறிப்பாகத் தமிழில் எத்தனை முற்போக்கானதாகவும் முன்னேற்றம் அடைந்ததும் இருந்தாலும் இன்னமும் தமிழ்ச் சமூக பழமைவாதச் சிந்தனைப் பூச்சுகளால் பாசிபிடித்தே உள்ளது. படைப்பின் திறனைப் பால்பேதத்தால் மதிப்பிடுவது என்பது மேலும் வளர்வதாகவே தெரிகிறது. எழுத்து என்னும் பொதுப்படை ஆண்களுக்குரியதாகவும் பெண் எழுதுவது பெண் எழுத்து என்பதாகவும் பிரிக்கப்படுகிறது. இது முதல் படி. அடுத்தடுத்து, கரு, பொருள், மொழி, கட்டமைப்பு என அடுத்தடுத்த ஒவ்வோர் அடுக்கிலும் எழுத்தை, பெண் எனும் பிம்பத்தோடே பார்க்கப்படுகிறது. செக்சிஸம் பேசப்படுகிறது.
தனித்த ஆளுமையாக, தன்னிறைவு பெற்றவராக எழுத்தில் தனக்கென ஓர் இடம் பிடித்திருக்கும் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான பெருந்தேவி போன்றவர்களையும் இது வேதனைக்குள்ளாக்குகிறது. இந்தப் பெரு வலியை பகிடியாக எளிதில் கடந்துவிடும் கலை அவருக்குக் கைகூடியுள்ளது. ‘ஒரு எழுத்தாளனின் சுயசரிதை’, ‘இப்படித்தான் சமயத்தில்’, ‘பிரதியின் உள்ளர்த்தம்’ ஆகிய கதைகளில் அவர் செய்துள்ள பகிடி கனமான தருணங்களை எளிதாகிக்கிவிடக் கூடியவை. வேறென்ன செய்வதாம்?
‘ஒரு எழுத்தாளரின் கதை’, ‘என்றும் மாறாதவை’ கதைகளில் எழுத்துலகின் போலித்தனங்களையும் ஜாலப் போக்குகளையும் ஜாலியாக ஓட்டுகிறார்.
இத்தொகுப்பின் மிகச் சிறந்த கதை என்பதைத் தாண்டி தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான கதைகளில் ஒன்றென ‘ஒரு எழுத்தாளரின் கதை’யைச் சொல்ல முடியும்.
‘புதுமைப்பித்தனுக்குச் சிலை’ கதையில் கிண்டல் பேர்வழியான புதுமைப்பித்தனை வைத்தே தமிழ்ச் சிந்தனையை இவர் செய்யும் கிண்டல் இதில் உச்சம். ‘மவுண்ட் ரோட்டில் மாம்பழக்கூடக்காரிங்க நின்ன இடத்தில’ அவரை நிற்கவைத்துப் பார்ப்பதோடு நிறுத்தியிருக்கலாம். வாசக புரிதலுக்காகப் பதிப்பாளரின் புலம்பலை இறுதியில் சேர்த்து, பொங்கி வரும்போது தண்ணீர் தெளித்து அடக்கிவிடுகிறார்.
இதுவே இரு தொகுப்புகளிலும் உள்ள சில கதைகளில் காணும் பலவீனமாக உள்ளது. ஆசிரியரின் தர்க்க சிந்தனை ஆங்காங்கே தலைதூக்குவதும் புனைவின் முழுமையிலிருந்து கதைகளை வெளித்தள்ளி விடுகிறது.
தமிழ்ப் புனைவின் புதிய நகர்வு
நவீனம், பின்நவீனம் என்பவையெல்லாம் எழுத்துமுறைகளுக்கு அப்பால் சிந்தனையிலும் வாழ்க்கை குறித்த பார்வையிலும் ஏற்பட வேண்டியவை என்பதற்கான எடுத்துக்காட்டுகள் பெருந்தேவியின் இந்தக் குறுங்கதைகள்.
சீண்டல், நிசர்சனம், கண்டடைதல் என அன்றாட வாழ்க்கையிலிருந்து கண்டடையும் கதைத் தருணங்களை, அதற்கப்பால் நகர்த்திச் செல்கிறார். கதாபாத்திரங்களின் குணவியல்புகளுடன் அப்படியே ஏற்றுக்கொண்டு, அவரவர் நியாயங்களின் வழியே, வாசகரின் தேடலைத் தூண்டுகிறார்.
தமிழ்ப் புனைவின் அடுத்த கட்ட நகர்வாக இந்த இரு நூல்களையும் குறிப்பிடலாம். கதைகள், கதைமாந்தர்களைக் கடந்து சிந்தனைகளை உள்ளே நிலைநிறுத்துவது இத்தொகுப்புகளின் வெற்றி எனக் கூறலாம்.
புறக்காட்சி, செயல்பாடுகள் வழியாக அகவோட்டங்களைச் சொல்லும் இக்கதைகளின் அழகியல், பெருந்தேவியின் காய்தலற்ற பகிடியும் துடுக்கான மீறல்களும் எனலாம்.
‘எதனாலோ’, ‘அவன் கேட்டது’, ‘காதலை நிரூபித்தல்’, ‘இது நடந்த கதை’, ‘உறவு’ முதலிய கதைகள் இவரின் மொழியாளுமைக்குச் சில எடுத்துக்காட்டுகள். புதிய கதை மொழியைச் சோதித்துப் பார்க்கும் இக்கதைகள் வாசிப்பு அனுபத்தைக் கூட்டுபவை.
எள்ளலும் சீண்டலும் நிறைந்த மொழியால், அறிவியல் புனைவு, மீபுனைவு, மிகையதார்த்தம், மாய யதார்த்தவாதம், Gothic comedy எனப்படும் இருண்மை நகைச்சுவை என்று வெவ்வேறு உத்திகளைக் கையாண்டு அக மன உணர்வுகளையும் உணர்வுச் சிக்கல்களையும் புறவயமான செயல்பாடுகளூடாக காட்சிப்படுத்துகிறார்.
‘மால்’, ‘என்றும் மாறாதவை’, ‘ஒரு காலத்தில்’, ‘பாட்டிலான்’, ‘ஒட்டுக் கேட்டது’- அறிவியல் புனைவுகள், ‘விரல்கள், ‘அத்தனை நீண்ட கனவு (அல்லது) சாபவிமோசனம்’ , ‘மலைப் பாம்பு’ – மிகைபுனைவு, ‘கழுவேற்றப்பற்றவள்’, ‘கண்ணிலே என்ன உண்டு’, ‘தவிர்க்க வேண்டியது தவிர்க்க முடியாதது’ – மிகையதார்த்தம், ‘15ரூ 50 காசு’, ‘கடவுளாகப் பொறுப்பேற்றிருக்கும்போது’ – இருண்மை நகைச்சுவை, ‘எதனாலோ’, ‘போகாதே’,‘பக்கத்து மேஜையில் அமர்ந்திருப்பவர்கள்’- ஒரு பாலின ஈர்ப்பாளர்களின் கதைகள், ‘படபடப்பு’, ‘பொது இடம்’ ஆகியவை அந்நியமாதல் சிக்கலை மையப்படுத்திய கதைகள்.
இவ்விரு தொகுப்பிலுள்ள கதைகளின் சிந்தனைக் கட்டமைப்பை இவ்வாறு பிரிக்கலாம்.
1. தேடல் கொண்ட மனித மனம் இருண்மையில் சென்று முட்டும்போது அடையும் வெறுமை. பெரும்பாலும் குடும்பம், ஆண்-பெண் உறவுகள் வழியாக இந்த இருண்மை வெளிப்படுகிறது.
2. சமகால சமூக, இலக்கிய அரசியலும் தத்துவங்களும் பழங்காலச் சிந்தனையுடன் இருப்பதால் ஏற்படும் முரண்கள். இதனால் கையறு நிலையடையும் மனிதர்கள்.
3. காமம், அடையாள உருவாக்கம், அங்கீகாரம் என்பனவே மனித உறவுகள் சென்றடையும் இடம் என்பதன் உணர்தல். இதனால் ஏற்படும் குறுகல்.
4. காதல் எனும் பேரன்பினால் இத்தகைய எண்ணச் சிடுக்குகளிலிருந்து விட்டு விடுதலையாகும் சாத்தியப்பாடுகள்.
பெருந்தேவியின் முதல் கவிதைத் தொகுப்பான ‘தீயுறைத் தூக்கம்’ வாசித்தபோது அந்த எழுத்தின்மீது ஏற்பட்ட விவரிக்கவியலாத வியப்பும் பிரியமும் இந்த இரு தொகுப்புகளையும் வாசித்தபோதும் உண்டானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுங்கதை என ஏராளமாக எழுதியிருக்கும் பெருந்தேவியின் புனைவு மொழி சமகலாத்தினுடையது. Modern, current எனப்படுபவை இவரது எழுத்துகள். நவீனம் எல்லாக் காலத்துக்கும் பொதுவானது. எல்லாக் காலத்திலும் இருப்பது. அந்த வகையில் இன்றைய நவீன எழுத்து.
சட்டென்று பார்க்க ‘மேற்கத்தியமாக்கல்’ போல தோன்றும். ஆனால், ஆசிய, தமிழ்ச் சிந்தனைகள் வழியாக மேற்கத்திய சிந்தனை முன்வைக்கும் முற்போக்கையும் மாற்று எண்ணங்களையும் கோருவது. நவீனத் தமிழுக்கு, தமிழ்ச் சிந்தனைக்கு வளம் சேர்க்கும் எழுத்து. பெருந்தேவியின் எழுத்துகள் இன்றைய தமிழ் இலக்கியப் போக்கின் திசைகாட்டியாக உள்ளன. புதிய எழுத்தின் தேவை, பேசுபொருள், மொழி குறித்த அறிதலைப் பெற இவரது எழுத்துகள் பொது விவாதங்களிலும் வாசிப்பிலும் இன்னும் அதிகமாக இடம் பெற வேண்டும்.
வாசித்தேன். பெருந்தேவியின் குறுங்கதைகள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே குறுங்கதை எனும் வடிவத்தை அணுகுவதைக் குறித்த தெளிவான பார்வை அளிக்கும் கட்டுரை
‘பெருந்தேவியின் குறுங்கதைகள்’ – நீண்ட கட்டுரை படித்தேன். மிக விரிவான பல தகவல்கள் அடங்கிய கட்டுரை. இத்தகு விரிவான கட்டுரை எழுதப் பரந்துபட்ட இலக்கிய ஞானம் வேண்டும்.
இக்கட்டுரையைப் படிப்பவர்கள் இலக்கியம் தொடர்பான தகவல்களைப் படித்தறிந்து கொள்ள இயலும்.
பாராட்டுகள் லதா. இந்தக் கட்டுரையைப் படிக்க வாய்ப்பு கிடைத்தமையை எண்ணி மகிழ்கிறேன்.
குறுங்கதையின் வடிவத்தில் தொடங்கி அதன் ஆதர்சங்களை அறிமுகப்படுத்தி, பின் பெருந்தேவியை அவ்வழியில் இணைத்தை அருமை என நினைக்கிறேன். அவரின் எழுத்தினை வடிவ ரீதியாகவும் கருப்பொருளாகவும் வரையறுத்த விமர்சனம் உள்ளது. இறுதியில், இன்றைய நாளில் பெருந்தேவியின் எழுத்து எவ்வகையான சிந்தனைகளைக் கோறுகிறதென்றும் எழுதியுள்ளார். வாசிப்பின் தேய்வழக்குகளைச் சுட்டிக்காட்டும் பெருந்தேவியின் எழுத்துகளை முழு கட்டுரையாக லதா எழுதியுள்ளார். Thanks Latha.
சிங்கை லதா எப்போதுமே ஆய்ந்து ஆராயாமல் எழுதி நான் வாசித்ததில்லை. கட்டுரையின் முன்னுரையாக குறுங்கதை வடிவத் தோற்றம் பற்றிய தொடக்கம் தேடித் தேடி வாசித்து எழுதப்பட்டது. பெருந்தேவியின் கதைகளையும் அவ்வாறே உள்நுழைந்து அலசி ஆராய்ந்து தன் விமர்சனத்தைப் படைத்திருக்கிறார். பெருந்தேவியின் கதைக்குள் நுழைவதற்கு இந்த விமர்சனம் கதவைத் திறந்துவிடும். பெருந்தேவியின் கதைகளை முகநூலில் மட்டுமே வாசித்தேன். பெண்ணியம் பேசும் அருமையான கதைகள் அவை.
சிறப்பான பார்வை. எனக்கு பெருந்தேவியின் குறுங்கதைகள் பிடிக்கும். கொரோனா காலத்தில் தொடர்ந்து அக்கதைகளை வாசித்தேன். தனித்துவமான கதைகளாக அவை இருக்கும். லதாவின் விமர்சனம் எனக்கு பெருந்தேவியின் கதைகள் பற்றிய புரிதலை மேலும் தெளிவாக்கிக் கொடுக்கிறது.
அற்புதமான கட்டுரை. பெருந்தேவி படைப்புகளை வாசிக்கத்தூண்டுகிறது. லதாவுக்கும் வல்லினத்துக்கும் நன்றி!