ஸலாம் அலைக் : ஒரு கிளைக்கதை

2009 இல் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நிகழ்ந்த உச்சக்கட்டப் போர் காட்சிகளை நாள்தோறும் காலையில் ஒளிப்பரப்பாகும் மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்துக் கொண்டிருப்பேன். அதை போல, செய்தித்தாள்களிலும் போர் குறித்த செய்திகளை வாசித்துக் கொண்டிருப்பேன். இனம்புரியாத சோகமும், பீறிட்டு வரும் சினமும் எனக் கொஞ்ச நேரத்துக்கு மாறி வரும் உணர்வலைகளிலிருந்து மீண்டிருக்கிறேன். அந்த நேரத்து உணர்வைக் கலைக்கும் எதனையும் குற்றவுணர்வாகக் கூட கற்பனை செய்திருக்கிறேன். பின்னாளில், ஷோபா சக்தியின் நாவல்களைப் படிக்கிற போதுதான், இலங்கையில் நிகழ்ந்த போராட்டத்தைப் பற்றிய மாற்றுப்பார்வைத் தெளியத் தொடங்கியது. தனிநாடு போராட்டத்தின் பின்னணியில் ஊடகங்களில் வரும் அரசியல், கொள்கைகள் ஆகியவற்றிலிருந்து மாறுபட்டுத் தனிமனிதர்களை அலகாகக் கொண்டு ஷோபா சக்தியின் நாவல்களை வாசிக்க முடிந்தது. அவை போர் குறித்த சித்திரத்தை மட்டுமின்றிப் போராளிக் குழுக்களிடையே இருந்த அரசியல், சாதிப் பிரிவினைகள், போரால் புலம்பெயர்ந்தோர் வாழ்வு, மன உணர்வுகள் எனப் போரின் மாற்றுப்பக்கங்களை விரிவாகப் பேசியிருக்கின்றன.

2022 ஆம் ஆண்டு வெளிவந்த ஷோபாவின் ஸலாம் அலைக் நாவலும் அவருடைய முந்தைய நாவல்களைப் போல போரால் புலம்பெயர்ந்தவரின் வாழ்வை மையமாகக் கொண்டு போரின் விளைவுகளைத் தொட்டுப் பேசுவதாக அமைந்திருக்கிறது. இந்த நாவல் வடிவமைப்பிலே சிவப்பு, நீலம் என ஒரே நாவலில் இடமிருந்தும் வலமிருந்தும் தொடங்கும் இரு வேறு  பிரதிகளாக வெளியிடப்பட்டிருக்கிறது. இரண்டு பிரதிகளும் ஒரே புள்ளியையே தொடுகிறது. சிவப்புப் பிரதி புலம்பெயர்வுக்கு முந்தைய வாழ்வையும் நீலப்பிரதி புலம்பெயர்வுக்குப் பிந்தைய வாழ்வையும் பேசுகிறது என வகை பிரிக்கலாம். இருந்த போதிலும், இரண்டிலும் இரண்டு வாழ்வும் ஊடுபாவுகளாகப் பயணிக்கவே செய்கின்றன. நீலப்பிரதியின் தொடக்கத்திலே அரசியல், போர் காரணங்களுக்காக வேறொரு நாட்டுக்குப் புலம்பெயரும் மக்களுக்குப் பாதுகாப்பும் உரிமைகளும் வழங்க வலியுறுத்தும் 1951 ஜெனிவா சாசனத்தின் குறிப்புடன் அமைந்திருக்கிறது. சிவப்புப்பிரதியின் தொடக்கத்தில் மாக்சிம் கார்க்கியின் புத்தகம் என்பது வாழ்க்கையின் இறந்துபோன கருத்து நிழல். அதன் பணி உண்மைகளை ஜாடையாகச் சொல்வது. ஒரு நல்ல புத்தகத்தைக் காட்டிலும், ஒரு கெட்ட மனிதன் சிறந்தவன் என்ற மேற்கோள் இடம் பெற்றிருக்கிறது. இரண்டு பிரதிகளும் அந்நிய நாட்டுப் படையினரிடமிருந்து பிரஞ்சு குடிமக்களைக் காப்பதற்காக எழுச்சியுடன் பாடப்படும் பிரஞ்சு நாட்டுப் பண்ணை இணைப்புப்புள்ளியாகக் கொண்டிருக்கின்றன.

ஸலாம் அலைக் நாவலின் மையப்பாத்திரமான ஜெபானந்தன் இளையதம்பி  யாழ்ப்பாணத்தின் மண்டைத்தீவுப் பகுதியில் சோதிடம் கணிக்கும் சாத்திரியின் மகன். ஜெபானந்தனின் குடும்பத்தினர் வசிக்கும் பலாலி பகுதிக்கு அருகில் ராணுவப்படையின் விமானத்தளம் இருக்கிறது. அந்தத் தளத்தில் இருந்த விமானமொன்றினால் ஜெபானந்தனின் தங்கை குண்டு வீசி அவன் கண் முன்னாலே கொல்லப்படுகிறாள். அங்கிருந்து, தந்தை வழிப் பூர்வநிலமான மண்டைத்தீவுக்குச் செல்கின்றனர்.  இலங்கையில் போராளிக்குழுக்களுக்கும் ராணுவத்துக்கும் இணக்கத்தை உருவாக்க இந்திய அரசால் அனுப்பப்படும் அமைதிப்படையினர் (Indian Peace Keeping Force) மண்டைத்தீவில் தரையிறங்குகின்றனர். ஜெபானந்தனின் அக்காவும் அம்மாவும் அமைதிப்படையினரால் வன்புணர்வுக்கு உள்ளாகின்றனர்.

போராளிக்குழுவில் வலுக்கட்டாயமாக ஜெபானந்தன் சேர்க்கப்படுகிறான். அங்கிருந்து சில நாட்களிலே தப்பியோடி வீட்டுக்கு வருகிறான். ஒரு பக்கம் ராணுவத்தாலும் இன்னொரு பக்கம் போராளிக்குழுக்களாலும் என இரு தரப்பாலும் ஜெபானந்தன் போன்ற தமிழ் இளைஞர்கள் தேடப்படுகின்றனர். அங்கிருந்து கொழும்புக்குத் தப்பிச் செல்கிறான். ராணுவம் வீசிய குண்டால் பெற்றோர் இருவரும் இறந்துவிட்டதை அறிகிறான். கொழும்பிலும் சிக்கல் நேர, போலிக்கடப்பிதழில் தாய்லாந்துக்குச் செல்கிறான். தாய்லாந்தில் இருக்கும் ஐக்கிய நாட்டுச் சபைகளின் அகதிகள் உதவித்தொகையைப் பெற முயல்கிறான். தொடர்ந்து, அவனுடைய மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. அங்கிருந்து, பிரான்ஸுக்குக் கள்ளத்தனமாகப் பயணித்து அகதியாக நுழைகிறான். தாய்லாந்தில் அறிமுகமாகியிருந்த உமையாள் எனும் பெண்ணைத் திருமணம் புரிந்து கொள்கிறான். இருவரும் சேர்ந்து பிரான்ஸு அகதி விண்ணப்பத்துக்குப் பல முறை விண்ணப்பிக்கின்றனர். அத்தனை விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படுகின்றன. ஜெபானந்தன் வாழ்க்கை மீதான நம்பிக்கைகளை இழந்து கசப்பானவனாக மாறுகிறான். அடுத்தடுத்து, அவன் மது அருந்தி உணர்வுச்சமநிலை இழந்து கொண்டு வரும் சிக்கல்களால் காவல்துறையால் கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் செல்கிறான். அவனிடமிருந்து மணவிலக்கை உமையாள் பெறுகிறாள். கதை நிகழும் நிகழ்காலத்தில், ஜெபானந்தன்-உமையாள் தம்பதியரின் மகனான மெக்கன்ஸ் பிரஞ்சு ராணுவத்தில் பங்கேற்று அங்கோலாவில் நிகழும் உள்நாட்டுப் போரில் பங்கேற்கச் சென்று மரணமடைகிறான். அவனுடைய மரணத்தைக் காரணமாகக் கொண்டு பிரிந்திருக்கும் கணவன் மனைவி சேர்ந்து வாழ நண்பர்கள் வற்புறுத்துகின்றனர். உமையாளைச் சந்திக்கச் செல்கின்ற ஜெபானந்தன், மகனின் இறப்புச்சான்றிதழைக் கொண்டு அகதி உரிமத்தைப் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்துடன் இறப்புச்சான்றிதழை உமையாளிடம் கேட்டுப் பெறுவதோடு கதை நிறைவடைகிறது.

போரினால் சொந்த நிலத்திலிருந்து தப்பியோடிக் குடியேறும் நாடுகளிலும் அதிகாரம், இறையாண்மை, அரசியல் எனப் பல காரணங்களால் இரைக்காகத் துரத்தப்படும் விலங்கைப் போல ஓடி ஒளிவதாகவே  ஜெபானந்தனின் வாழ்க்கை அமைந்திருக்கிறது. அவனுடைய வாழ்க்கையில் நிகழ்ந்துவிட்ட துயர்களையும் இழப்புகளையும் கூட ஒருவிதமான மரத்துப் போன உணர்வுடனே அவனால் அணுக முடிகின்றது. வாழ்வில் நேர்ந்து விடுகின்ற அவலங்களைப் புதிய நிலத்தில் சுதந்திர மனிதனாக வாழ்வதற்கான முயற்சிகளில் பணயமாக வைக்க தயங்காதவனாக இருக்கிறான்.  அவனுடைய மனச்சோர்வும் உளைச்சலும் இன்னொரு பக்கம் அவனை விரட்டவே செய்கின்றன. ஆனால், இறுதியில் சுதந்திர மனிதனாக வாழும் வேட்கையே எஞ்சுகிறது. இவ்வாறாக, ஒரு நிலத்தில் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்படுகின்றவனுடைய அகம் கொள்கின்ற உணர்வு ஊசலாட்டத்தையே இந்நாவல் பேசும் மையமாகக் கொள்ளலாம்.

ஒரு புனைவை வாசிக்கும்போது அதனுடன் தொடர்புடைய அல்லது அதே ஆசிரியரின் முந்தைய புனைவுகளைத் தொட்டு வாசிப்பனுபவத்தைத் தொகுத்துக் கொள்வதைத் தடுக்க இயலாது. ஷோபாவின் முந்தைய நாவல்களான கொரில்லா, ம், இச்சா போன்ற நாவல்களை வாசித்திருப்பதால், அதனுடைய சாரத்தைச் சலாம் அலைக் நாவலிலும் இருப்பதை உணர முடிந்தது. இந்த நாவலின் மையப்பாத்திரமான ஜெபானந்தனே அடிக்கடி நாவலில் குறிப்பிடுவதைப் போல ‘’இந்த உலகத்தில் ஒரே கதை தான் உள்ளது,”என்பதைப் போல ஷோபாவின் நாவல்கள் மீண்டும் மீண்டும் ஒரே களத்தையே பேசுகின்றன. நாவலை வாசித்து முடித்தப் பின், மீள வாசித்த சோர்வை உணர முடிந்தது. இருந்த போதிலும் நாவலின் கலைத்தன்மையை மதிப்பிட அம்மாதிரியான அணுகுமுறை சரியானதாகவும் இருக்காது. ஒவ்வொரு புனைவும் தான் தேர்ந்து கொண்ட களத்துக்கு எந்தளவு நியாயம் செய்திருக்கிறது என்பதை ஒட்டித் தனியே வாசிக்க வேண்டியிருக்கிறது. அதனடிப்படையிலே இந்த நாவலின் வாசிப்பனுபவத்தைத் தொகுத்துக் கொள்ள முயல்கிறேன்.

ஷோபா சக்தியின் நாவல்களில் போர்பாதிப்பு, இலட்சியவாதத்தின் வீழ்ச்சி ஆகியவற்றிலிருந்து எழும் அகச்சோர்வு பேசப்படுவதைக் காண முடியும். அதிலும், தனிமனிதனொருவன்  சூழலில் நேரும் நிகழ்வுகளிலிருந்தும் உணர்வுகளிலிருந்துமே பெறும் அகச்சோர்வையே புனைவாக்கியிருப்பார். அந்த அகச்சோர்வுக்கான காரணமென்பது போர், புலம்பெயர்வு, மனித உறவுகள் எனத் தனிமனிதனை மிஞ்சிய பெரும் பின்னணியாக இருக்கிறது. அந்தச் சூழலில் அவன் சார்ந்திருக்கும் சமூகத்தையும் பின்னணியையும் விவரித்தாலே அகச்சோர்வு துலங்கி வரும். இந்த நாவல் ஜெபானந்தனின் மன உணர்வுகளைக் காட்டும் முனைப்பில் மற்ற பாத்திரங்களின் விவரிப்பைத் தவற விட்டிருக்கிறது. உமையாள், மொட்டச்சி அய்யன் ஆகிய பாத்திரங்களின் வார்ப்பும் முழுமை பெறாமல் போயிருக்கிறது. குறிப்பாக, ஜெபானந்தனின் மனைவியான உமையாள் பாத்திரத்தைக் குறிப்பிடலாம். கணவன் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதால் அவனை விட்டுப் பிரிந்து தனியே செல்கிறாள். மகன் இராணுவத்துக்காகப் பணியாற்றி உயிர் நீத்தப் பின்னர்தான் நாவலில் அவள் பாத்திரம் மீண்டும் விவரிக்கப்படுகிறது. அதற்கிடையில் அவளைப் பற்றிய போதிய பாத்திரவார்ப்பே இல்லாமல் போகிறது. ஜெபானந்தனின் மகன் மெக்ஸன்ஸ் அவ்வாறே அழுத்தமாகச் சித்திரிக்கப்படாதப் பாத்திரம். மொத்த நாவலிலும் அவர்களைப் பற்றிய சித்தரிப்புகள் சில வரிகளுக்குள் அடங்கிவிடுகின்றன. ஜெபானந்தனின் மனச்சோர்வு, உணர்வுகள் ஆகியவற்றை மட்டுமே மையப்படுத்தி நாவல் பேசுகிறது.  இவ்வாறாக, நாவல் ஒரே மையத்தில் குவிய இணைக்கோடுகளான பின்னணி, பிற பாத்திரங்களின் வார்ப்பு சரியாகக் காட்டாமல் போய்விட்டது.

ஷோபா தன்னுடைய ஒவ்வொரு நாவலிலும் புதுமையான கதை உத்தியைப் பயன்படுத்தியிருப்பார். ம் நாவலில் சிறு சிறு தலைப்பிட்டுக் கதை கூறல் வடிவத்தை அமைத்திருப்பார். கொரில்லா நாவலில் இரு பாத்திரங்கள் இரண்டு கதைகளைக் கூறி அதனை ஒரு முடிச்சில் இணைத்திருப்பார். இச்சா நாவலில் புனைவும் உண்மையுமாய் கலந்த கதை சொல்லல்லாக நிகழும். கதை கூறல் உத்திகள் நாவல் பேசும் தத்துவத்தையோ அல்லது கதைமாந்தர்களின் உணர்வோட்டத்தைத் தொகுத்துக் கொள்ளவும் பயன்படுகிறது. ஸலாம் அலைக் நாவலில் அகதியாகப் பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்த ஜெபானந்தனின் வாழ்வில் நிகழ்ந்துவிட்ட சம்பவங்கள், மன உணர்வுகளை முன் பின்னாகக் குறிப்பிட்டுப் புலம்பெயர்ந்த நாட்டுப் பண்ணுடன் கதையை இணைக்கும் உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார். பிரஞ்சு நாட்டுப் பண் அயல் நாட்டுப் படையினரிடமிருந்து தன் குடிகளைத் தற்காக்கும் பொருட்டு எழுச்சியாகப் பாடப்படுகிறது. நாவலில் ஜெபானந்தன் வாழ்வு அகதியாக அதிகாரத்தரப்பால் அலைகழிக்கப்படுவதாக அமைந்திருக்கிறது. அகதிகள் விண்ணப்பத்தை அரசு பல முறை நிராகரித்தும் அதிகாரத்தரப்பால் கண்காணிக்கப்படுகிறவர்களாகவும் அகதிகள் வாழ்வு அமைந்திருக்கிறது. இதனைப் பகடி செய்யும் விதமாகவே நாவலின் இணைப்புப்புள்ளி அமைந்திருக்கிறது. ஆனால், நாவலுக்கு அவ்வடிவம் எவ்வாறு துணைபுரிகிறதென்று பார்த்தால் பெரிதாக இல்லையென்றே குறிப்பிடலாம். அந்த உத்தி நாவலின் புரிதலுக்கும் மேலதிக வாசிப்புக்கும் இட்டுச் செல்வதாக அமையவில்லை.

ஸலாம் அலைக் அலைகழிப்பு மிகுந்த அகதிகள் வாழ்க்கையை முன்வைக்கிறது. ஐரோப்பிய நாடுகள் அகதிகளை வரவேற்கும் நாடுகள் எனப் பரவலாக அறியப்பட்டாலும் அங்கும் காவல்துறையின் கண்காணிப்பும் பொதுமக்களின் பாரப்பட்சத்தையும் தாண்டியே வாழவேண்டியிருப்பதை நாவல் காட்டுகிறது. ஜெபானந்தன் காவல்துறையினரின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க எந்நேரமும் பிரெஞ்சு மொழி அறிந்த கனவானைப் போல பிரெஞ்சு நாளிதழைக் கையிலேந்தி நீளங்கியும் அணிந்து நடமாடும் பாவனையைக் கைகொள்கிறான். அதைப் போல பிரெஞ்சு மொழியைப் பேசவும் பிரெஞ்சு நாட்டுத் தகவல்களை நினைவில் கொள்ள தடுமாறுவதையும் பகடியாகக் கதையில் குறிப்பிடுகிறார். ஷோபா சக்தியின் நடையில் இருக்கும் அங்கதம் மிகச் சரியாக வேறு வழியின்றிச் செய்யப்படும் இம்மாதிரியான பாவனைகளின் அபத்தத்தைக் குறிப்பிடுகிறது.

இந்த நாவலில் வரும் மொட்டச்சி அய்யன் பாத்திரம் முக்கியமானது. ஜெபானந்தனின் தந்தைக்கு முறைப்பெண்ணான சீனமலர் தன் பதினைந்து வயதிலே வீரபத்திரரின் அவதாரமாகத் தன்னை உருவகித்து ஆண்களைப் போல கட்டையாக முடி திருத்தித் தன்னை அய்யன் என்றழைக்குமாறு கேட்டுக் கொள்கிறார். மரங்களில் ஊர்வது, சிவனைப் போற்றும் பாடல்களைப் பாடுவது போன்று செயல்களைச் செய்கிறார் மொட்டச்சி அய்யன் என்பவர். அதன் பிறகு, சித்தர்களைப் போல வேட்டியும் சட்டையும் உடுத்தித் தனிப் பண்டாரக் குடிலையும் எழுப்பிக் கொள்கிறார்.  அவரின் ஆன்மீக ஆற்றலை ஜெபானந்தன் குடும்பத்தினர் நம்புகின்றனர்.  ஜெபானந்தனின் அக்கா ஜெபலீலா இந்திய ராணுவத்தால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவளின் ஈமக்கடன் முழுவதையும் மொட்டச்சி அய்யனே முன்னின்று நடத்துகிறார். அதன் பின், வீட்டுக்குப் பின்னாலே ஜெபலீலா அடக்கம் செய்யப்படுகிறாள். சவக்குழியில் மூன்றாம் நாளே சவம் காணாமற் போகிறது. சவம் காணாமற் போனதைக் குடும்பத்தாரிடமிருந்து ஜெபானந்தன் மறைக்கிறான். தமிழ்த்தேசிய ராணுவத்தின் முகாமிலிருந்து தப்பிக் கொழும்புக்குச் செல்ல மொட்டச்சி அய்யனின் குடிலிலே ஜெபானந்தன் பதுங்கியிருக்கிறான். அவனை ஆற்றுப்படுத்தி உணவையும் அளித்துத் தேற்றுகின்ற அய்யன், காணாமற்போன சவத்துக்கு அணிவிக்கப்பட்டிருந்த சேலையைக் குறுக்காகக் கட்டிக் கொண்டு வருவதைக் கண்டு ஜெபானந்தன் திடுக்கிடுகிறான். ஆன்மீக அனுபவத்தால் முற்றாகத் தன்னை ஆணாக உணர்ந்து ஆணைப் போன்று தோற்றம் நடவடிக்கைகள் என அனைத்தையும் மாற்றிக் கொண்டு சித்தரைப் போலவும் மொட்டச்சி அய்யன் உருமாறுகிறார். அவரே ஜெபலீலாவின் சவத்தை எடுத்துச் சென்றிருக்கக்கூடும் என எண்ண முடிகிறது. ஆன்மீக அனுபவத்தின் காரணமாகப் பாலடையாளத்தையும் மாற்றிக் கொள்கிறவரின் மனம் பயணிக்கும் ஆழத்தையே நாவலில் காண முடிகிறது. ஆனால், அந்த ஆழத்தை மேலெடுத்துச் செல்லும் சாத்தியம் நாவலில் இல்லை.

தந்தை மகன் உறவின் ஆழத்தையும் நாவல் சித்திரித்திருக்கிறது. ஜெபானந்தனுக்கும் அவன் தந்தை நயினார் தீவு சாத்திரிக்கும் இடையில் இறுகிய உறவே இருக்கிறது. கண்டிப்பானவராகவும் மகனிடம் அதிகம் பேசாதவராய் சாத்திரி நடந்து கொள்கிறார். ஆனால், போரால் குடும்பம் பாதிக்கப்படும் போது அவரது இறுக்கம் தளரத் தொடங்குகிறது. அவன் விடுதலைப் புலிகளின் பயிற்சிக்குச் சென்றுவிடுவான் என்ற அச்சத்தில் வெளிநாட்டுக்கு அனுப்ப அம்மா முயலும்போதெல்லாம் அப்பா தடுக்கிறார். ஆனால், மனைவியும் மகளும் வன்புணர்வுக்கு உள்ளாகிக் கண்புரை நோய் கண்ட பின்பு உடலும் உளமும் தளரத் தொடங்குகிறார். அவரின் செயல்களும் அதன் உச்சமாய்ச் சோதிடம் கணிக்க மகனுடன் செல்லுமிடத்தில் திருடர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டு இருவரும் தாக்கப்படுகின்றனர். அவர்களிடத்தில் தன்னை நயினார் தீவு சாத்திரி என அறிமுகப்படுத்தும்போது ஜெபானந்தன் அவரை வாய் மூடச் சொல்கிறான். அவரின் பிம்பம் மகன் முன் சிதைந்து போய்விட்டதாகக் குறுகிப் போனவரின் முன்னே மகனையும் தாக்குகின்றனர். அங்கிருந்து வெளியேறி, ஊர் திரும்பும்போது மகனின் கன்னத்தை வருடி கலங்குகிறார். அவன் முன்னால் தான் அவமானப்பட்டதும் மகன் தாக்கப்படும்போது செய்வதறியாமற் நின்ற நிலையையும் எண்ணி தளர்ந்தவராகிறார். தந்தை இறந்துவிட்டார் எனத் தெரிந்தப் பின்பு ஜெபானந்தனைச் சூழ்வது பேரமைதியே. ராணுவம், தமிழ்த்தேசிய ராணுவம் இரண்டுக்கும் பயந்து கொழும்பில் இருக்கின்றவனுக்குத் தந்தையின் இறப்பு செய்தி கிடைத்ததும்,  தனக்கான தளையொன்று அறுந்துவிட்டதாகவே எண்ணுகிறான். ஜெபானந்தனுக்கும் அவன் மகனுக்குமான உறவும் வேறொரு வகையிலான மாற்றத்தைக் கொண்டதாக அமைகிறது.  மகனுக்கு நிகேதன் எனப் பெயர் சூட்ட எண்ணுகிறான். ஆனால், உமையாள், அவனைப் பிரெஞ்சு நாட்டுக் குடிமகனாக வளர்க்க எண்ணி அவனுக்கு மக்ஸன்ஸ் எனப் பிரெஞ்சு மக்களுக்கு இடப்படும் பொதுவான பெயரொன்றைச் சூட்டுகிறாள். இங்கிருந்தே, ஜெபானந்தனுக்கும் அவன் மகனுக்குமான உறவின் தூரம் தொடங்குகிறது. தமிழைத் திணறிப் பேசுகின்றவன் கொஞ்சம் நிதானமாய்க் கேட்டே பொருளும் அறிந்து கொள்கிறான். உமையாள் மணவிலக்கு பெறுகின்றபோது அவளுடனே மகனும் சென்றுவிடுகிறான். மகனை வாரமொருமுறைத் தேவாலயத்தில் சந்திக்கும் அனுமதி பெற்று சந்திக்கும் பொழுதில் உமையாளைப் பற்றி குறை சொல்லப் போகிறவனை மகன் ‘ஸலாம் அலைக்’ எனக் கூறித் தடுத்து நிறுத்துகிறான். சிறு வயதிலே பெரியவனைப் போல பேசுவதாகச் சொல்லப்படும் பையன் அப்பாவை நோக்கி அரபு மொழியில் உங்களிடத்தில் சாந்தி உருவாகுவதாக எனப் பொருள்படும்படியான சொல்லைச் சொல்கிறான். அந்தச் சொல்லின் அலைக்கழிப்பே நாவல் முழுதும் ஜெபானந்தனைத் துரத்துகிறது. இறுதியில், மகன் பிரஞ்சு நாட்டுப் படையில் இணைந்து சென்ற களத்தில் உயிர் துறக்கிறான். அவனுடைய, இறப்புச் சான்றிதழைக் கொண்டாவது குடியுரிமை பெற்றுவிடலாம் என ஜெபானந்தன் எண்ணுகிறான். இந்நாவலில் தந்தை மகன் உறவு என்பது உணர்வுப்பூர்வமானதாக இல்லாமல் சூழலுக்கேற்ப உணர்வுகள் மாறுவதாக அமைந்திருக்கிறது.

ஷோபாவின் நாவல்களில் மனத்தை உலுக்கும் தீவிரச் சம்பவங்களையும் மிக உள்ளடங்கிய தொனியில் சொல்லப்படுவதைக் காண முடியும்.  அடுத்தடுத்து, வாழ்வில் நிகழ்ந்துவிடும் துயரமும் அதிர்ச்சியுமிக்க சம்பவங்கள் உருவாக்கும் மரத்த உணர்வே அதற்குக் காரணமாய் அமைந்திருக்கிறது. ஈழப்போரைப் பின்னணியாகக் கொண்ட நாவல்களில் வரும் போரின் கொடூரமான சித்திரங்கள் போரின் கோரத்தைச் சொல்லக்கூடியவை. இந்த நாவலிலும், ஜெபலீலா, ஜெபராணி, ஜெபானந்தனின் பெற்றோர், வள்ளி ஆச்சி என ஒவ்வொருவரும் போர் பாதிப்பால் இறந்து போகின்றனர். இந்திய அமைதிக்காப்பு படையினர் மருத்துவமனையில் மருத்துவர்களோடு பொதுமக்களையும் கொன்றது, வன்புணர்வு ஆகிய உண்மை சம்பவங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த நாவல் முன்வைக்கும் அகதிகள் வாழ்வு பற்றிய சித்திரத்தில் தாய்லாந்தில் இருக்கும் இடைவழிமுகாம்கள் வாழ்வு முக்கியமானது. ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர எண்ணும் அகதிகள் தற்காலிகமாகத் தாய்லாந்து போன்ற நாடுகளில் அடைக்கலமாகிறார்கள். அந்த மாதிரியான நாடுகளில் இயங்கும் ஐக்கிய நாட்டுச் சபையின் அகதிகள் புணர்வாழ்வு முகாம்கள் கடமைக்காக இயங்குவதையும் உள்ளூர் குடிநுழைவுப்பிரிவு நடத்தும் முகாம்களின் மோசமான சூழலும் காட்டப்படுகிறது. மோசமான உணவும் போக்கிரிகளின் வன்முறையுடன் முகாம்கள் இயங்குகின்றன. ஷோபாவின் கதை கூறல் உத்தியென்பது பெரிதும் கதைசொல்லிகளுக்கே உரிய முறையில் கோட்டுச் சித்திரமாகப் பின்னணியை ஒரிரு வரிகளுக்குள் உருவாக்கி நடந்த கதையைச் சொல்வதாகவே அமைந்திருக்கும்.  அப்படி உருவாகும் சில பின்னணிகள் முழுமையாக வெளிப்படாமல் போய்விட்டன. தாய்லாந்து முகாம்கள், பிரெஞ்சு சிறை ஆகியவைக் கதை சொல்வதற்கான பின்னணியாக இருந்ததன்றி அதன் சூழல் சொல்லப்படவில்லை எனலாம்.

ஸலாம் அலைக் நாவல் நிகழ்வுகளை முன்பின்னாகச் சொல்லும் கதை கூறல் உத்தியின் வாயிலாக அகதியாக அலைகின்றவரின் மன ஊசலாட்டத்தைப் பேச முயன்றிருக்கிறது. நம்பகமான தகவல்கள் வாயிலாக அதை நிறுவவும் செய்திருக்கிறது. இருப்பினும், அதற்காகத் தேர்ந்து கொண்ட களங்களும் நிகழ்வுகளும் முன்னர் வாசித்த நாவல்களை நினைவுபடுத்துகிறது. உணர்வுகள் மரத்த ஜெபானந்தனின் சோர்வைப் போன்ற வாசிப்புச் சோர்வையே ஸலாம் அலைக் நாவல் வழங்குகிறது. ஷோபாவின் தனித்துவமான உள்ளடங்கிய தொனியிலும் அங்கதமான நடையிலும் முன்னரே வெளிவந்திருக்கும் சிறந்த படைப்புகளின் வரிசையில் கிளைக்கதையைப் போலவே ஸலாம் அலைக் நாவல் அமைந்திருக்கிறது.

ஷோபாசக்தி – தமிழ் விக்கி

அரவின் குமார் – தமிழ் விக்கி

1 comment for “ஸலாம் அலைக் : ஒரு கிளைக்கதை

  1. Manimaran A/L Ammasy
    September 14, 2023 at 7:52 am

    சிறப்பு.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...