சிந்திப் பரவி தெருவின் அமளியிலேறும் நீலம்

“இரு கொட்டகைக்கிடையில் எப்போதும் போல தேங்கி நிற்கும் பாசியேறிய நீரில் தவளைக்கண்கள் முளைத்திருக்கும். அவை தலைப்பிரட்டைகளாய் அவ்வப்போது வெள்ள மிகுதியில் கொட்டைகையோரம் மண் திட்டாய் உயர்த்தப்பட்ட கரையோரம் உலவித் திரியும் போது பார்த்திருக்கிறேன். இப்போது பெரிய மழை பெய்து நாளானதில் மடுவுக்குள் சுருங்கிக் கொண்ட நீண்ட கால்களைக் கொண்டு பறக்கும் தவளைகளைக் கொஞ்சமாக உற்றுப் பார்த்தபடி இருப்பேன். வெண்பலகையிலோ பெண்கள் பென்சுகளிலோ அவை பாய்ந்தேறியதும் நிகழும் சில நிமிடக் களேபரங்களுக்காக அந்தத் தவளைகளை அழைத்து ஒரு விருந்து வைத்தாலென்னவென்றிருக்கும். 

மதிலோரம் குறுகிய தென்னை மரங்களைப் பார்த்ததில் அவளது நண்பிகளை ஞாபகம் வந்திருந்தது. நீண்ட மெலிந்த தட்டையான உடற்கலவை. நீலச் சாயம் ஆங்காங்கே வெளிறிய பர்தா அணியும் அவர்களது உடலமைப்பை நான் எப்படித் துல்லியமாகச் சொல்கிறேனென நீ கேட்க வேண்டாம். அந்த மழை நாட்களில் ரப்பர் செருப்பு பிசுபிசுக்க மழை நீருறுஞ்சிய பலகை பென்சுகளில் தாள்களை விரித்து அதன் மேல் உட்காரும் போதெல்லாம் பின்பக்கமாகத் திரும்பிக் கொள்வேன். அகல விரிந்தபடி வெண்ணிற பர்தாவொன்று ஆரஞ்சுக் குடை பிடித்து தூறலை விலக்கியபடி கொட்டகைக்குள் ஏறுகிற போது அந்தக் கண்களை, காலோரம் நீந்தித் திரியும் தலைப்பிரட்டைக் கண்களைப் பார்த்தபடியிருக்கும் என் தலை. வயல்வெளிகளில் பட்டாசுச் சத்தங்களுக்காகப் பாளமாக அலைந்து திரியும் வயற்குருவிகளுக்கு நடுவில் நடந்து திரியும் காணான் குருவிகளைப் போல ஒருபக்கமாகத் திரும்பியிருக்குமது.”

“ நீ இன்னும் கதக்குள்ள வர்ல.”

“சொல்லு எப்படி லவ்வச் சொன்னே”.

“அவள் வீட்டிலிருந்து அப்படியே நீளுகிற வீதி ட்யூசனுக்குத் திரும்புகிற சந்தியில் ஆரஞ்சுக் குடை நுழைகிற ஒரு மழை நாளில் எங்கிருந்தோவெல்லாம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எதையாவது பேசி வைக்கலாமென்று நின்றிருந்தேன். வரிசையாக சைக்கிளடுக்கப்பட்ட அந்தத் தெருவில் குழம்பியபடி வரிசைக்குள் புகுத்தப்பட்டு நீண்டிருந்த சைக்கிள்களுக்காய் போக இடம் போதாமல் தெருவில் வந்த வாகனங்கள் இடர்பட்டு நின்று கொஞ்சம் நிதானித்ததில் தெரு பூரித்துக்கிடந்தது. ஆரஞ்சுக் குடை நெருங்க நெருங்க என்ன பேசவேண்டுமென்று ஒரு மேடை நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்ப்பது போல  உள்ளூர ஓதிக் கொண்டேன். என்னளவில் அது ஒரு பிரார்த்தனை. இன்னும் சில எட்டுகளுக்குள் குடையை மடக்கி ட்யூசன் வாசலுக்குள் நுழைந்து விடுவாள். அன்றைக்கென்னமோ பர்தா நீலச்சாயம் கீழே சிந்திப் பரவி சைக்கிள் குழப்பங்களுக்குள் தெருச் சந்தடி அமளிக்குள் ஏறுவது போலவிருந்தது. எனக்கென்றால் தடித்த நீலச்சாய பர்தாக்களைக் கண்ணில் காட்டக் கூடச் சகிப்பதில்லை. கவனயீனமாக நீலத்தைக் கவிழ்க்கும் பெண்கள் எனக்கு ஆகாதென்று தோன்றியது. ஏதோ வெறுமையானது. நெற்றியில் புடைத்த நாளத்துடி நின்றிருந்தது. வியர்வையும் கூட. அவளை வழிமறிக்க ஒரு கையை விரிக்கவும் அந்த வழியால் காத்திருந்த ஒரு ஆட்டோ சைக்கிள் மடுத்த தெருவிலிருந்து அப்போதுதான் வழி கிடைத்து என்னை விலக்கித் தப்பித்துப் போனது. இப்படித்தான் ஒவ்வொரு குடை மடக்கலும் எனக்குத் தவறிப் போகின. ஒரு நண்பனோ ஒரு நாயோ அல்லது யாராவது தெரிந்த முகங்களோ என் தடித்த நீலத்தெருவை அதன் ஆரஞ்சு அமளியை நிர்மூலமாக்கினார்கள்.” 

“அப்போ இன்னும் நீ லவ்வ சொல்லல, நீ கெட்ட கேட்டுக்கு ஒனக்கு எவ்ளோ நெனப்பு”

“ சரி சொல்லு என்ன தான் உன் லவ்னு பாப்போம்”.

“என்னை இறுக்கிப் பிடித்திருந்தாள். ஒரு யுகத்தின் துயரை அழுந்தி மெல்ல மெல்ல பிறப்பெடுப்பது போல இடுப்பெலும்பை நலிவுறுத்துவது போன்ற பிடியது. என்னைப் பொறுத்தவரை உரிய கணத்தில் சந்தர்ப்பங்களைப் பாவிக்க முடியவில்லை. அல்லது தெரிந்திருக்கவுமில்லை. நாங்கள் காதலிக்கிற மூன்றாவது சஞ்சலமான ஆண்டு. எங்கள் வீட்டில் இன்னும் ஒருமனதாக சம்மதித்திராத வெறுமையான காலமது. எங்கள் வயலில் வேலை நடந்ததனால் அவளது பெரியப்பாவின் கடையில் தான் பைப்புகளை வாங்கியிருந்தேன். ஒரு மாலை நேரம், உழுத வயல்களிலிருந்து ட்ரக்டர்கள் வெளியேறி வாய்க்காலுக்குள் ஆளும் எந்திரமுமாய் குளித்துப் பரத்தும் நேரத்தில் அவர் எங்கள் வயலுக்குள் வந்திருந்தார். வயிற்றைப் புழுக்களால் நிறைத்தும் பறக்க அசதியுற்று சேற்றில் நடந்து திரிந்த கொக்குகள் அந்த மனிதரை ஒரு கணம் திரும்பிப் பார்த்தன. பைப்பு வைப்பதொன்றும் பெரிய வேலை கிடையாது. அவருக்கு என்னோடு பேசவேண்டுமென்று ஒரு ஆவலாதியிருந்திருக்கிறது. வயிறு நிரம்பிப் பறக்காமல் காத்திருக்கும் கொக்குகளின் நடுவில் காதலையே நேரில் சொல்லத் துப்பில்லாதவனின் யோக்கியதை என்னவெனப் பார்க்க வந்திருக்கிறாரென்று தோன்றியது. எனக்கு முன்னரே வயலில் இறங்கிய மனிதரிடம் பேச முன்னாயத்தங்களைச் செய்து கொண்டேன். வழக்கமான ஓதல் தான். சஞ்சலமும் வெறுமையும் நிறைந்த காதலின் மூன்றாமாண்டில் அவருக்கு என்னைப் பற்றி ஏற்படப் போகும் நல்லபிப்பிராயம் ஒரு நங்கூரம் போல் எங்கள் காதற் கடலில் ஊன்றி நிற்குமென்று பட்டது. அப்போது பார்த்து எண்ணெய்க்காரர் கூக்குரலிட்டார். வாடிக்குள் திரும்பப் போய் ஒரு ஐநூறு ரூபாய்க்காகப் அவரிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தேன். கனத்த வயிறுகளைச் சுமந்த கொக்குகள் மேற்குப் பக்கமாக வானை ஏறிப்பிடித்தபோது நான் இருட்டிய மங்கலில் சந்திக்க முடிந்திராத பெரிய மனிதரைத் தேடவுமில்லை. பேசவுமில்லை. நெற்றிக்குள் புடைக்கிற நாளங்கள் அப்போதும் நின்றிருந்தன. பாழாய்ப் போன எண்ணெய்யொன்று என்னைச் சூழப் பீடித்திருந்தது. 

சில ஆண்டுகளில் அவள் விட்டுச் சென்ற போதும் அவர் என்னோடு பேசக் காத்திருந்தார். காதலுக்கான அவரது புரிதல் பழமையானவையே அல்ல. அவருக்குக் காதலென்பது தடாலடியாக இருந்தது. காதலென்பது எல்லோரும் தூங்கிய பின்னர் மதிலேறிக் குதித்துக் காதலியின் கால்களை உசுப்பும் ஆண்மகனின் நெஞ்சுரத்தையே அவர் காதலென ஏறக்குறைய பெயரிட்டார். ”

“ நல்ல பெரியப்பா…”

“அவளது சத்தம் வழக்கமான சிரிப்பிலிருந்து மயில்களின் பாடுகையை ஒத்திருந்தது. என் மார்பில் விரல்களைச் சுழற்றியபடி துடிப்பை அவள் அந்நேரத்திற்கு வாசித்திருக்க வேண்டும். ”

“ சரி வா…”

“இம்முறை நான் கொஞ்சம் சளைத்திருந்தேன். கனத்த கொக்கு வயிறு போல ஆக்ரோசமாக என்னை இடித்த போது அவள் புணருவது வயல்வெளியில் ட்யுசன் தெருவில் நெற்றிபுடைத்துத் தோல்வியடைந்த அயோக்கியனை என்று பட்டது. சமரசமாகச் சரிந்து கிடந்த இடைவெளியில் மௌனத்தை எளிதாக இட்டு நிரப்புபவளில்லை அவள். ”

“ ம் சொல்லு அப்றம்.” 

“கையை இடது மார்பின் மேல் தட்டிச் சுட்டிக் காட்டினேன். கதை கேட்க லாவகமாக முகத்தை மார்பில் பொருத்திக் கொண்டதும் சொல்லத்துவங்கினேன். தவளை போல ஒரே பாய்ச்சலால் என்னால் எதையும் சொல்லி விட முடியாது. பளிங்குக் கடலோரம் காட்டுப் பக்கமாகக் கடல் நீலத்தை ஒதுக்கி வைத்திருந்த ஒரு பகல் நேரத்தில் என் நண்பர்கள் கடல் குளியலுக்காகக் கிளம்பியபடி இருந்தனர். அவளும் தோழிகளும் கடலோரமாக உலவ வரும் போதாவது என்னை எதுவும் பேச உந்தியிருக்கவில்லை. அந்தப் பயணமே என் காதலுக்குத் தான் என்பது எத்தனை மறைவான ரகசியமென்று அந்த வெயிலிலும் எனக்குச் சுட்டது. ஒரு செமினாருக்காக திருகோணமலை செல்லவிருந்த பயணத்தில் அவர்களது பாடசாலையையும் எங்களோடு சேர்ந்து வரும்படி இலாகா வரை சென்று பேசி சேர்த்திருந்தோம். நான் மட்டும் அந்தப் பகலில் குளிக்க இறங்கவும் இல்லை. புழல்வல்சிக்கும் இந்தக் கண்களை, மென்னீல பர்தாவிலிருந்து எக்கணமாவது வெளிப்பட்டுவிடுமென்று நான் உறுதியாக நம்பிய சமிக்ஞைக்காகத் தான் காத்திருந்தேன்.”

“அக்கரப்பத்துலயே உன்னால ஒன்னும் கிழிக்க முடில… இதுல நீ திருகோணமல வரைக்கும் போனியாக்கும்…”

“அவள் கிளம்புவதற்கு நேரமிருக்கிறது. அவளது ஊர் பொள்ளாச்சி. அது மட்டும் நிஜம் போல. அவள் ஒவ்வொரு முறையும் சொல்லுகிற பெயர்கள் மீது எனக்கு அவநம்பிக்கையிருந்தது.

மேசையின் மீது மூடியிருந்த பீட்சாவைக் கொஞ்சம் சூடாக்கலாமென்று அவளாகவே கொஞ்சம் எழுந்து செல்லவும் திரைச்சீலையை விலக்கி அபுதாபியின் இரவைத் திரும்பிப் பார்த்தேன். தெருக்களை முடிந்து வைத்த சந்திகளை நோக்கி சிவப்பு மஞ்சள் பல்புகளாக வாகனங்கள் ஒன்றை ஒன்று நிரை போல மிதித்துத் தாவுவது போலவிருந்தது. செய்க் முகமது வீதியிலிருந்து பச்சைச் சமிக்ஞைக்காகக் காத்திருக்கும் பஸ்ஸில் என் வயதை ஒத்த இளைஞன் நின்று கொண்டிருந்தான். ஏறக்குறைய அவன் மட்டும் இருந்த பஸ்ஸில் அவன் நின்றிருந்ததில் பக்கத்தில் எங்கோ இறங்கப் போகிறானென்று தெரிந்தது. நினைவுத் தெருவில் முட்டியபடி அத்தனை நிற பல்புகளையும் எங்கேயாவது ஒரு தரிப்பிடத்தில் இறக்கிச்சரித்து விட, எங்கே என் பொன்னிற மேனிப் பொள்ளாச்சிக் காரியென்றிருந்தது. உருண்ட கண்களோடு ஒரு சிறிய மூக்குத்தியோடு, அவள் அடிக்கடி சொல்லுகிற கரப்பாடி காளியம்மனின் தேரோட்ட நாட்கள் போல மின்னியபடி எனக்குத் தேவையான அத்தனை பெண்குணமும் மொத்தமாகச் சப்பளித்திக் கிடந்தது அந்தக் கண்களில்.”

***

“எங்கள் வீட்டில் வாசலில் பெரிய முட்களைக் கொண்ட ரோசாச் செடியில் மஞ்சள் குருவிகள் கூடு கட்டியிருந்தன. இரண்டு பசிய நீல முட்டைகளை மிருதுவான தும்புபோலவிருந்த பீர்க்கங்காய் வடிவக் கூட்டில் அவை அடைகாத்து வந்தன. எங்கள் காதலின் இறுதித் துயரமான ஆண்டில் அவளுக்கொரு கெடு இருந்தது. சில நாட்களுக்குள்ளேயே நான் அவளை மணந்து விடவேண்டுமென்கிற பைத்தியத்தனமான பிடிவாதமது. ஐந்தாண்டுகளிலில்லாத வெறுமையும் பனிக்க மறந்த வெறுமையான கண்களும் எஞ்சிய அந்நாட்களை நினைத்து அச்சப்படுகிறேன். அந்தச் செப்டம்பரில் கெடு முடிவதற்குச் சில மணி நேரம் மட்டுமிருந்த ஒரு நாள் அவள் அம்மாவும் பெரியம்மாவும் எங்கள் வீட்டுக்கு வந்த நாளிலாவது துணிவோடு உள்ளே நுழைந்து பேசி வாதாடிக் கொஞ்சம் சமரசம் செய்திருக்கலாம். கணங்களில் சித்தமானவைகள் நிகழுவதென்பது எனக்கு இல்லவே இல்லை. கணங்களைக் கைக்கொள்வதில் ஒரு வகையான அசூயை. வேகமான ரயிலிலிருந்து தற்கொலைக்கு முயலும் ஒரு பெண்ணைப் பாய்ந்து காப்பாற்றும் ஒரு மனிதரின் துலங்கலுக்கு அப்படியே நேரெதிரான விறைப்பும் உறைவும் குருவி முட்டைகளின் மீது குத்தியபடியிருந்தது. அவர்கள் சென்றுவிட்டனர். என்னிலிருந்து எதையோ உருவுவது போல குருவி முட்டைகள் பதட்டமாகி உள்ளே உடைவது போலவொரு பிரக்ஞை. தடாலடியான பெரியப்பா ஒரே ஒரு அழைப்பில் என் ஆரஞ்சுக் குடையை நொறுக்கியும் பரவிய நீலத்தைக் கிழித்தும் எறிந்த இரவில் நான் அழுதிருக்கவில்லை. அவர் ஏறக்குறைய காதல் முறிவை உத்தியோகப் பூர்வமாக வாசித்திருந்தார். அம்மா சென்டிமென்ட் படங்களுக்காக அழுது வடிக்கிற அப்புராணியாகவிருந்திருக்கிறேன். அத்தனை ஆண்டுகளிலும் புழல்வல்சித்த என் பர்தாக் கண்களுக்காகவாவது உடைந்து கதறியிருக்கலாம். அந்தப் பெரும் பேறுடைய தருணத்தைக் கூட எல்லோரும் ஏற்றுக்கொண்ட வடிவத்தில் ஒப்புவிக்க என்னால் முடிந்திருக்கவில்லை. இந்தத் துணிவற்ற முடிவுக்கதை என் பொள்ளாச்சிப் பொன்னிற மேனிக்குத் தெரிய வேண்டாம். மெல்லிய பட்டாலான இறுக்கமற்ற துருக்கிய கஃப்கானை அணிந்திருந்தாள். ரொஜோ லெவன்டே மார்பிள்களை ஒத்த நிறத்தில் பொன்னாலானவள் மூடியிருந்தாள். அந்தப் பின்னங்கால் திரட்சியின் மீது அவ்வளவு ஒட்டுதலெனக்கு. என் இயலாமையின் வடிசல் அவளுக்குத் தெரியவே வேண்டாம். பீட்சாவைப் பாதி மென்ற கையோடு மெத்தையில் கால்களை முக்கோணமாக முட்டிறுத்தி பின்னாலிருந்த தலைமாட்டில் சாய்ந்திருந்தாள். கதை கேட்கத் தயாரான பாவமது. பளீச்சென்ற அபுதாபியின் இரவின் நெறித்த சாயல். ஒரு திருமண விருந்தில் அவள் உட்கார்ந்திருந்த வட்ட மேசையில் நானும் சித்தியும் போய் உட்கார்ந்திருந்தோம். இரண்டாவது ஆண்டின் நெரிசலில்லாத உறுத்தலில்லாத புழல்வல்சியில் புதிதாகத் தெரிவது புடவை வெட்கம் என களித்த நாட்களவை. அதுவும் ஆரஞ்சு தான். மண்டரின் ஆரஞ்சு நிறத்தில் சோலை சுற்றியிருந்தாள். உள்ளே நெற்றியில் வெளித்தெரிய மட்டை வைத்து தலையை வ்ரப் பண்ணுகிற இசுலாமியப் பெண்களைப் பிடிப்பதில்லை. நெற்றி முகட்டை சிதைக்கிற உபாதையது. ஆகக் கிட்ட அவளைப் பார்த்த தருணம் பிறகு கிடைக்கவே இல்லை. அந்தச் சாரியில் அவ்வளவு அழகென்பதை எத்தனையோ முறை சொல்லிக் காட்டியிருப்பேன்.”

“இப்டியே பாத்துட்டேதான் இருந்தியாக்கும். அவள சீண்டினதுகூட இல்லயா. நீ லாம் எதுக்கு டா லவ் பண்ணிட்டு திரிஞ்சே…”

அவள் புறப்படத் துவங்கியிருந்தாள். வழக்கமான அவசரத்தோடு ஏதோ நிர்க்குணம் தொற்றியிருப்பது போலப் படபடத்தாள். தட்டுமுட்டுகிற சத்தங்கள் எழும்பின. இரண்டு முறை கட்டிலைப் பின்னங்கால் இடித்துக் கொண்டது. அசூயை என்னைப் பீடிக்க தலைமாட்டிலிருந்து எழும்பக் கூட இல்லை. தன் கைப்பையிலிருந்து அந்தப் புடவையை வெளியிலெடுத்தாள். என் பொள்ளாச்சி இந்த அறைக்கு வந்த முதல் நாளில் என் கேபினெட்டில் இருந்து அதை தன்வசமாக்கிக் கொண்டாள். மங்கிய அப்பச்சோடா வெளிர் வட்டங்களுக்கு நடுவே மென்னீலமாய் பருத்திச் சேலை மீது ஆரஞ்சுக் கரைக்கோடுகள் ஒரு சாணளவில் இருமருங்கும் லாவாக் குழம்புகள் போல தகிக்கும். மீண்டும் கேபினெட்டில் அந்தச் சேலையை அவள் மடித்து வைத்தபோது உடைந்தெழும் ஒரு அணையை வழிமறிப்பது போல ஐந்தாண்டு தேக்ககத்தைக் கைகளால் பொத்தப் பார்த்தேன். அவள் கஃப்கான் வாசனை முற்றாக மறையும் வரை அந்தப் பெருக்கு நிற்கவே இல்லை. 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...