குவான் யின்: பேரன்பும் பெண்ணான தெய்வமும்

உருவ வழிபாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித நடைமுறைகளின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்களின் பிரதிபலிப்பு மற்றும் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு தாக்கத்தால் உருவ வழிபாடு பலதரப்பட்ட வடிவங்களை எடுத்து, தற்போது 21-ஆம் நூற்றாண்டிலும் மக்களால் தீவிரமான மத வழிபாடாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. பல கடவுள் கொள்கை (polytheistic) கொண்ட நாகரிகங்களான மெசொப்பொதாமியா (Mesopotamia), எகிப்து (Egypt), கிரேக்கம் (Greece) முதல் பல்வேறு தெய்வ வழிபாடுகளைக் கொண்டுள்ள இந்து மற்றும் புத்த மதம் வரை, அதன் பக்தர்கள்  கடவுளுடன் ஒரு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்த உருவ வழிப்பாட்டை ஒரு பாலமாக கருதினர். ஒரு பக்கம் உலகளவில் மிக அதிகமான பிரிவைக் கொண்டிருக்கும் ஆபிரகாமிய சமயங்களான (Abrahamic religions) யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மூன்று பெரிய சமயங்கள் பாரம்பரிய உருவ வழிபாட்டில் இருந்து விடுபட்ட போதிலும், ஆசிய கலாச்சாரங்களிலும் பூர்வக்குடியினரின் வாழ்க்கை நடைமுறையிலும் பல்லுருவ வழிப்பாடு அதிகளவில் நீடிக்கவே செய்கின்றது.

உருவ வழிபாடு (Idolatry) என்பது சிலை அல்லது படிமம் போன்ற இயற்பிய வடிவத்தின் ஊடாக இறைவனை வணங்குவது. சிலைகள், படங்கள் மற்றும் பிரதிநிதித்துவங்களை வணங்குவது தெய்வீக நிலையை அடைவதற்கான வழித்தடம் என்பது உருவ வழிபாட்டாளர்களின் நம்பிக்கை. அதுமட்டுமில்லாமல், ஒரு சிலையை வடிவமைத்து அலங்கரிக்கும் செயலை பக்தியின் கலை வெளிப்பாடாகவும் காணலாம். பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவ வழிபாடு பலவகையான வடிவங்களை பெறுகின்றது. சிலைகள், சின்னங்கள், இயற்கை கூறுகள், புனித நூல்கள், நாட்டார் தெய்வங்கள் மற்றும் புனிதர்களாக ஏற்கப்பட்ட மனிதர்கள் எனப் பல்வேறு வடிவங்களை உள்ளடக்கியது உருவ வழிபாடு. இப்படி ஒவ்வொரு வடிவங்களுக்கும் வழிப்பாட்டு காரணங்களும் தனி வழிப்பாட்டு முறைகளும் உள்ளன. இவற்றில் கடவுளர் சிலைகள், சிறுதெய்வங்கள் மற்றும் புனிதர்களாக ஏற்கப்பட்ட மனிதர்களின் உருவ சிலைகளுக்குத் தனித்தனியே புராணக்கதைகளும் வரலாறுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.  

ஒரு சிலையின் வடிவமைப்பு, தோரணை மற்றும் பண்புக்கூறுகள் பெரும்பாலும் குறியீட்டு அர்த்தத்தைக் கொண்டுள்ளன. இச்சின்னங்கள் தெய்வத்தின் அல்லது தனிநபரின் குணாதிசயங்கள், போதனைகள் அல்லது குணங்களின் அம்சங்களை வெளிப்படுத்தும். சில மத மரபுகளில், புராணக்கதைகள், தார்மீக படிப்பினைகள் மற்றும் மதத்தின் வரலாற்றை தங்களுடைய மதத்தினருக்கும், எதிர்கால தலைமுறைகளுக்கும் கடத்தும் ஒரு கருவியாகவும் சிலைகள் விளங்குகின்றன.

அவலோகிதர்

பௌத்த மதம் சார்ந்த சிலைகளில் கௌதம புத்தர் சிலை அனைவருக்கும் நன்கு பரீட்சியமானது பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் மன அமைதியின் வடிவமாக புத்தர் சிலைகளைத் தங்கள் வீடுகளில் வாங்கி வைத்துக் கொள்வதுண்டு. ஆனால் பௌத்தத்தில் மிக முக்கிய போதிசத்துவரான குவான்யின் மலேசியாவில், சீனர்களின் கடவுள் என்றே பெரும்பாலோரால் அறியப்படுகிறார். குவான்யின் சிலைகளை வீடுகளில் வைப்பது கூடாது எனும் நம்பிக்கையும் இங்கு பரவலாக உள்ளது.

அவலோகிதர்

புத்தரின் சிலைகள் தியானம் மற்றும் பக்திக்கான மைய புள்ளிகளாக கருதப்படுகின்ற வேளையில் குவான்யின் உருவம் இரக்கம் மற்றும் கருணையின் உருவகத்தை எடுத்துக்காட்டுகின்றன. குவான்யின் (Guanyin) அல்லது குவான்ஷியின் (Guanshiyin) என்ற பெயர் சீன மொழியில் மறுவிய பெயர் ஆகும். குவான்யின் என்றால் ஒலிகளை உணருபவர் என்றும் குவான்ஷியின் உலகின் ஒலிகளை உணருபவர் என்றும் பொருள்படுகின்றது. குவான்யின் எனும் பெயர் சமஸ்கிருத மொழிபெயர்ப்பின்படி உலகின் வலிகளின் ஒலியை கேட்கும் போதிசத்துவர் (Bodhisattva) எனக் கூறப்படுகிறது. குவான்யின் எனும் போதிசத்துவரின் உண்மையான பெயர் அவலோகிதர் (Avalokiteśvara), கீழே உலகை நோக்கி பார்க்கும் தேவன் எனப் பொருள்படும்.

அவலோகிதர் என்னும் கடவுள் பௌத்த மரபிலிருந்து சீன கலாச்சாரத்தில் இணைக்கப்பட்ட கடவுள் அல்ல என வரலாறு கூறுகின்றது. இருப்பினும், பௌத்த பிக்குகளுக்கும் புதிதாக பௌத்தத்தில் சேரும் மாணவர்களுக்கும் அவலோகிதர் அவர்களின் வரலாறும் போதிக்கப்படுவது மட்டுமின்றி, அவர் பௌத்த மதத்தின் முக்கிய கடவுள் எனவும் வழியுறுத்தப்படுகிறது. ஆரம்ப காலக்கட்டங்களில், பௌத்தர்களின் மறுபிறவிக்கான நிலம் என நம்பப்படும் புனித நிலத்தில் அவலோகிதர், அமிதாப புத்தர்  (Amida Buddha) உதவியாளராக இருந்துள்ளார் எனச் சொல்லப்படுகிறது.

அமிதாபின் வழிபாட்டு முறைக்கு முன்பே அவலோகிதரின் வழிபாட்டு முறை நிறுவப்பட்டுவிட்டது என்று சிற்பங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த ஆரம்ப காலக்கட்டத்தில், வரலாற்று புத்தர் என்று அழைக்கப்படும் ஷக்யமுனி (Shakyamuni) மற்றும் மைத்திரேயர் (Maitreya) மீது இருந்த அதீத பக்கியால் அவலோகிதர் மறைக்கப்பட்டார் எனக் குறிப்பிடப்படுகிறது. காலப்போக்கில், அமிதாப புத்தர் மற்றும் அவலோகிதரின் வழிபாட்டு முறைகள் வெகுவாகப் பரவியுள்ளன. இச்சூழ்நிலையில் எந்த ஒரு பிரச்சாரமும் போதனைகளும் இல்லாமல் அவருடைய தோற்றத்திற்காகவே அவலோகிதரின் வழிப்பாடுகள் சீனாவில் வளர்ந்துள்ளன என்று மகாயான நூல்களில் (Mahayana scriptures) குறிப்பிடப்பட்டுள்ளது.

குவான்யின் உருவ பரிணாமம்

சீனாவில் குவான்யின் உருவங்களின் உருவாக்கம் புத்த நூல்களின் மொழிபெயர்ப்பிற்குப் பிறகு அதிகமாக நடந்துள்ளது. இந்தியாவில் நிகழ்ந்த அவலோகிதர் உருவப்படத்தின் பரிணாம வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகள் சீனாவிலும் சில புதுமைகளுடன் நிகழ்ந்துள்ளன. தாங் அரசமரபில் (Tang Dynasty) குவான்யின் வெள்ளை ஆடை அணிந்தவராக சித்தரிக்கப்பட்டார். பின்னர், பத்தாம் நூற்றாண்டில் இருந்து, கருணை மற்றும் இரக்கத்தின் வடிவான பெண் தெய்வமாக சீனாவில் வழிப்படப்பட்டார். பத்தாம் நூற்றாண்டில் இருபாலியம் (Androgyny) எனக் கூறப்படும் ஆண்பால் பண்புகளும் பெண்பால் பண்புகளும் ஒரு தெளிவற்ற வடிவத்தில் இணைந்த கூட்டாக இருக்கும் நிலையைக் குறிப்பிடும் வகையில் நீர்-நிலவு குவான்யின் (Water-moon Kuan-yin) போன்ற புதிய உருவப்படங்களின் உருவாக்கம் தொடங்கி, சீன கலைஞர்கள் சங் காலக்கட்டத்திற்குப் (Sung: 960-1279) பிறகு குவான்யின் போதிசத்துவரை முழுவதுமாக பெண்பால் உருவில் சித்தரித்தனர். 1368-1644 (Ming) காலப்பகுதியில் குவான்யின் கடவுளை ஐம்பத்திரண்டு அல்லது ஐம்பத்து மூன்று வடிவங்களில் சித்தரிக்கும் ஓவியங்களின் தொகுப்புகள் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. இது மட்டுமில்லாமல், காமகுரா (Kamakura) காலத்திலிருந்து (1185-1333) சீன-ஜப்பானிய பௌத்த (Sino-Japanese Buddhist) கலையில் ‘முப்பத்து மூன்று வடிவங்களில் குவான்யின்’ என்று சித்திரங்கள் வெகுவாகப் பரவியுள்ளன. இவ்வாறு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல்வேறு  கலாச்சாரத்திற்கும் நம்பிக்கைக்கும் ஏற்றவாறு பல மாற்றங்களை ஏற்று குவான்யின் உருவ சிலை நாளடைவில் ஒரு பெண் தெய்வமாகவே வழிபடப்பட்டது.

குவான்யின் காலப்போக்கில் மிக முக்கியமான புனித சக்தியாகவே போற்றப்பட்டார். ஆரோக்கியம், செல்வம் மட்டுமல்லாமல் தாமரை சூத்திரத்தில் (Lotus Sutra) அவலோகிதரனின் சக்தியான குழந்தை பேறு ஆகிய வேண்டுதல்களுக்கும் குவான்யின் முதன்மையானவராக திகழ்கின்றார். ஒரு சீன தேவியின் வடிவத்தைத் தழுவிய குவான்யின் மக்களுக்கு எளிதில் நெருக்கமான கடவுளாக மாறினார். தங்களுடைய கலாச்சாரத்தின் சாயலில் குவான்யின் சிலையைப் பார்க்கும் போது அவர்கள் குவான்யின் தங்களுடைய முன்னோர்களில் ஒருவராகவே கருதினார்கள். மேலும், குவான்யின் கோயில்கள் மற்றும் சிலைகளில் காணப்படும் அரவணைப்பு மற்றும் தாய்மைக்கான அம்சங்கள் இன்னும் நிறைய மக்களை ஈர்த்தது.

குவான்யின் புராணம்

சீன கலாச்சாரத்தில் குவான்யின் முழுவதுமாக பெண் தெய்வமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டார். குவான்யின் பாலினம் பற்றிய எந்தவொரு குழப்பமும் தேடலும் அவசியமற்றது என அவர்கள் நினைக்கின்றனர். முத்திநெறியியல் அடிப்படையில் இது முக்கியமற்றாதாக (soteriological insignificant) இருந்தாலும் கூட அவரது காட்சிப் பிரதிநிதித்துவம் எப்படித் தோன்றுகிறது என்பது ஒரு முக்கிய காரணியாக உள்ளது. ஏனெனில் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ வெளிப்படும் திறன் இருந்தபோதிலும், சீன வடிவமான குவான்யின் உருவம் பெண்ணாகவே சித்தரிக்கப்பட்டு, சீனச் சூழலுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது. குவான்யின் ஒவ்வொரு புராணக்கதையிலும் ஒரு மனித வெளிப்பாட்டைப் பிரதிபலித்து ஒரு உண்மையான வாழ்க்கையை வாழ்ந்தார் எனக் கதைகளில் எழுதப்பட்டுள்ளது.

சீனாவில் தாங் அரசமரபு காலக்கட்டங்களில் குவான்யின் நான்கு முக்கிய பெண் வடிவங்களில் சித்தரிக்கப்பட்டார். போதிசத்துவர் குணாதிசயத்தில் சீன கலாச்சாரத்தைப் புகுத்த, சீன மக்களுடன் தொடர்புடைய வெவ்வேறு அடையாளங்களைக் கொண்ட குவான்யினின் நான்கு பெண்பால் உருவங்களை உருவாக்கினர்.

சீனாவில் பெண்மயமாக்கல் (feminization) மற்றும் பூர்வீகமயமாக்கல் (indigenization) செயல்முறை மிகவும் வெற்றிகரமாகவும் முழுமையாகவும் நடந்திருந்தது. சீனர்கள் பௌத்தத்தை நன்கு அறிந்திருக்கவில்லை என்றால், குவான்யின் பௌத்த தோற்றம் பற்றியும் அவர்கள் அறிந்திருக்க வாய்பில்லை என்ற நிலையே இருந்துள்ளது. வெள்ளை அங்கி அணிந்திருப்பது போல் இருக்கும் குவான்யின் உருவம் சீனர்களை வெகுவாக ஈர்த்தது. மற்ற மூன்று பெண் வடிவங்களும் அவற்றின் உருவப்படங்களும் வெள்ளை அங்கி அணிந்த குவான்யின் உருவத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டன. இந்த நான்கு வகை உருவ வடிவங்களில், மிகவும் பிரபலமான மற்றும் முக்கிய புராணக்கதையைக் கொண்டுள்ளது இளவரசி மியாவோஷன் (Miaoshan) குவான்யின் வடிவம்தான். மியாவோஷன் புராணக்கதை ஒரு முக்கியமான குவான்யின் யாத்திரை தளமான ஹெனானில் (Henan) உள்ள சியாங்-ஷானில் (Xiang-shan) தொகுக்கப்பட்டுள்ளது.

மியாவோஷன் (Miaoshan)

இளவரசி மியாவோஷனின் கதை குவான்யினை ஒரு பெண் உருவமாக சித்தரிப்பதில்  முக்கியத்துவம் பெற்றது. அதே சமயம் பல்வேறு இலக்கிய வடிவங்களில் அறியப்பட்ட இக்கதை, குவான்யின் பற்றி உள்நாட்டு மக்கள் புரிந்துகொள்வதற்கும் அவர்களுக்கு விளக்கி கூறுவதற்கும் அடிப்படையாக உள்ளது. புராணக்கதைகளின்படி, மியாவோஷன் என்பவர் பிறப்பிலேயே தன் சிறப்பு நிலைகளின் அறிகுறிகளைக் கொண்டு பிறந்தவர். மியாவோஷன், மியாவ்-சுவாங் மன்னனின் (King Miao-Chuang) மூன்றாவது மகள் ஆவார். இவள் இளம் பெண்ணாக இருந்த பருவத்தில் ஆடம்பர ஆடைகளை அணியாமல் பழைய அழுக்கடைந்த ஆடைகளையே அணிந்து எந்த அலங்காரமும் பயன்படுத்தாமல் இருப்பாள். சுவையுள்ள உணவை உண்டதில்லை. ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடுவாள் என கதைகளில் எழுதப்பட்டுள்ளது. மேலும், மியாவோஷன் இளவரசிக்குப் பௌத்தத்தின் மீது அதீத ஈடுபாடு இருந்துள்ளது. இதனால் கவலையடைந்த மன்னன் அவளைக் கண்டித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். ஆனால், திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் மியாவோஷன் தன்னுடைய எதிர்ப்பைக் காட்டினாள்.

சிறுவயதிலிருந்தே துறவற வாழ்க்கையைத் தொடர விருப்பம் காட்டியதால், ஒரு செல்வந்தரைத் திருமணம் செய்துகொள்ளும் மன்னனின் கட்டளைகளை மீறினாள். அவள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் தனிமைப்படுத்தப்பட்டாள். மியாவோஷன் அரண்மணையில் இருந்து வெளியேறி கோயிலில் அடைக்கலம் தேடி துறவற வாழ்க்கையைத் தொடர முயற்சித்து கொண்டிருந்தாள். அவளது தாய் மற்றும் சகோதரிகளின் வேண்டுகோளுக்கும் கூட அவள் செவி சாய்க்கவில்லை. கோயிலில் இருந்த சில கன்னியாஸ்திரிகள் மன்னனின் தூண்டுதலுக்கிணங்க, கன்னியாஸ்திரியின் வாழ்க்கை கடினமானது எனவே தன் தந்தை கூறுவதை ஏற்றுக் கொள்வதே சிறந்தது என்று பரிந்துரைக்க முற்பட்ட போதிலும், அவர்களின் அறிவுரையை நிராகரித்தாள். மியாவோஷன் திரும்பவும் அரண்மனைக்கு வரும்பொருட்டு, அவளுடைய மன உறுதியையும் ஊக்கத்தையும் உடைக்கும் வகையில் கோயிலில் அவளுக்கு கடினமான வேலைகளைக் கொடுக்கச் சொல்லி மன்னன் கட்டளையிட்டார். ஆனால், அவளுடைய இரக்க குணம் காரணமாக, கோயிலில் உள்ள அனைத்து விலங்குகளும் அவளுடைய வேலைகளை நிறைவேற்ற அவளுக்கு உதவின என்று புராணக்கதை கூறுகிறது.

மியாவோஷன் இளவரசிக்கு ஒரு டிராகனின் ஆன்மா (dragon spirit) உதவியுள்ளதாகவும் கதைகளில் சொல்லப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல், இந்த டிராகனின் ஆன்மா மியாவோஷன் சாதாரண மனிதர் அல்ல தெய்வீகம் உடையவர் என கன்னியாஸ்திரிகளை நம்ப வைக்க முயற்சி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த மன்னன் சினம் கொண்டு இளவரசி மியாவோஷனைக் கொல்ல ஒருவரை அனுப்புகிறார். ஆனால் அந்த டிராகனின் ஆன்மா அவளைக் காப்பாற்றுகிறது. அதன் பிறகு மன்னன் கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் கோயிலை எரிக்க மற்றும் கன்னியாஸ்திரிகளைக் கொல்ல உத்தரவிட்டார். மியாவோஷன் தன் சக்தியைக் கொண்டு வெறும் கைகளால் தீயை அணைத்ததாக கதைகள் உண்டு. இன்னும் சில கதைகளில் மியாவோஷன் தூக்கிலிட உத்தரவிடப்பட்டு  காப்பாற்றப்பட்டார் எனச் சொல்லப்படுகிறது. கதையின் வெவ்வேறு பதிப்புகள் வெவ்வேறு நிகழ்வுகளையும் காரணங்களையும் கொண்டுள்ளதால் இந்த மியாவோஷன் இளவரசியின் வரலாற்றில் பல இடைசெறுகல்கள் மற்றும் கட்டுக்கதைகள் நிறைந்துள்ளன.

இவ்வாறு தன் தந்தைக்கும் தனக்கும் இடையே நிகழ்ந்த இந்த போராட்டத்தின் இறுதியில் மியாவோஷன் தான் எப்பொழுதும் தியானம் செய்யும் நறுமணமிக்க மலைக்குச் (Fragrant Mountain) சென்றுவிட்டதாக கதைகள் கூறுகின்றன. அதன் பிறகு, அவள் அந்த மலையிலேயே இருந்து தியானம் செய்து கொண்டிருந்தாள். அதே நேரத்தில் அவளுடைய தந்தை அவர் செய்த பாவ வினையின் காரணமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். அவருடைய நோய் தீவிரமடைய தொடங்கியது. எந்த சிகிச்சையும் பயனளிக்கவில்லை. இந்நிலையில் ஒரு நாள் ஒரு துறவி மன்னனைப் பார்க்க வந்த போது நோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்தை தன்னால் உருவாக்க முடியும் ஆனால் அதற்கு இரண்டு முக்கிய பொருட்கள் தேவைப்படுகின்றன என்றார். அதற்கு மன்னன் அது என்ன பொருள் நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார். அதற்கு துறவி  கோபம் என்ற உணர்வே இல்லாமல் இருக்கும் ஒருவரின் கைகள் மற்றும் கண்கள் கிடைத்தால் இந்த நோய்யைக் குணப்படுத்தகூடிய மருந்தைக் கண்டுபிடிக்கலாம் என்று துறவி பதிலளித்தார். இதை கேட்டு கோபம் கொண்ட மன்னன் ஒருவருடைய கைகளையும் கண்களையும் பறித்தால் அவர்கள் அப்பொழுது கோபம் கொள்ளமாட்டார்களா என துறவியிடம் கேட்க, அதற்கு துறவி “அப்படிப்பட்டவர் உங்கள் நாட்டில் இருக்கிறார். உங்கள் ஆதிக்கத்தின் தென்மேற்கில் நறுமண மலை என்று பெயரிடப்பட்ட மலையின் உச்சியில் ஒரு துறவி தியானம் செய்து வருகிறார். இத்துறவியிடம் சிறிதும் கோபம் இல்லை, இவருடைய கைகள் மற்றும் கண்களைப் பெறுவதன் மூலம் இந்த நோயை உடனடியாக குணப்படுத்த முடியும்” என்று நம்பிக்கையோடு கூறினார். ஆதலால், நோயைக் குணப்படுத்த கைகள் மற்றும் கண்களைக் கோருவதற்காக ஒரு தூதுவர் அத்துறவி இருக்கும் மலைக்கு அனுப்பப்பட்டார்.

இதனை கேட்டு மியாவோஷன்,  மன்னன் பௌத்த தர்மத்தை மறுத்ததே நோய்க்குக் காரணம் என்று கூறினார். இருப்பினும் மியாவோஷன் துறவி மன்னனுக்குச் சிகிச்சை அளிக்க உதவ ஒப்புக்கொண்டாள். மேலும் மன்னன் அவருடைய மனதை அறிவொளியின் பக்கம் திருப்பும்படியும் கோரினாள். வந்திருந்த தூதரிடம் தனது இரு கண்களையும் கத்தியால் பிடுங்கி, தன் இரு கைகளையும் துண்டித்து எடுத்து செல்ல சொன்னார். தூதுவரும் அவ்வாறே செய்தார். மன்னனும் பூரண குணமடைகிறார்.

மன்னன் குணமடைந்த பிறகு, மன்னனும் அரசியும் தங்கள் நன்றியைத் தெரிவிக்க மலைக்குச் சென்றபோது, ​​துறவி உண்மையில் தங்களை விட்டு பிரிந்து சென்ற மகள் என்பதைக் கண்டு அதிர்ச்சியுற்று, மேலும் வருத்தம் அடைந்து அவளிடம் மன்னிப்புக் கோரினர். இதற்கு மியாவோஷன் “இந்த மனிதக் கண்களை விட்டுவிட்டு, நான் வைரக் கண்களால் பார்ப்பேன். இந்த மரண ஆயுதங்களை விட்டுக்கொடுத்து, நான் தங்கக் கரங்களைப் பெறுவேன்” என்று சொல்லி முடிக்கும் போது ஆயிரம் ஆயுதம் ஏந்திய கைகள் மற்றும் ஆயிரம் கண்களைக் கொண்டு குவான்யின் போதிசத்துவராக உருவெடுத்து, பின்னர் சொர்க்கத்தைச் சென்றடைந்தார். இறுதியாக, தன் தவறுகளை உணர்ந்த மன்னன் பௌத்த வழியைப் பின்பற்றுவதாக கூறி உறுதி மொழி எடுத்தார். மியாவோஷன் மீண்டும் ஒரு முறை தோன்றி அவரை ஆசீர்வதித்து விட்டு மறைந்து விடுகிறார். அதன் பின், மன்னன் பல கோயில்களை மீட்டு, மியாவோஷனின் நினைவாக ஒரு தாது கோபுரத்தைக் (stupa) கட்டி, புத்த தர்மத்தை பின்பற்றி வந்ததாக கதைகள் உள்ளன.

மியாவோஷனில் இருந்து குவான்யின் தெய்வமாக உருவெடுத்த இந்த மாற்றம் குவான்யின் பெண் தெய்வம் என்று ஏற்றுக் கொள்வதற்கு முக்கியமானதாக உள்ளது. ஏனெனில் இக்குறிப்பிட்ட அவதாரம் குவான்யினுக்கு மனித வாழ்க்கையின் மற்றும் பெண்மையின் சிறப்பியல்புகளை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. இதுவே சீன சூழலில் குவான்யின் தங்களுடைய பூர்வீகத்தைச் சார்ந்த பெண் தெய்வம் என்று ஏற்றுக் கொள்வதற்கு மிக வலுவான காரணமாக இருக்கின்றது.

குவான்யின் பெண் அடையாளம்

சீன பெண்கள் தங்களின் பெண் அடையாளத்தால் உருவாகும் அவமானம் மற்றும் ஒடுக்குமுறைகளைக் கடக்க குவான்யின் வழிபாட்டை  ஒரு தீர்வாக கருதுகின்றனர்.  மூன்று பெரிய பாரம்பரியங்களான பௌத்தம் (Buddhism), தாவோயிசம் (Taoism), கன்பூசியம் (Confucianism) ஆகிய சீன மரபுகளின் மத சிந்தனை மற்றும் நடைமுறையின் படி மாதவிடாய் மற்றும் பிரசவ காலங்களில் பெண்களின் உடலில் இருந்து இரத்தம் வெளியேறுவது ஒரு பாவமாக பார்க்கப்படுகிறது. பெண் இரத்தத்தை விழ அனுமதிப்பதன் மூலம் அவள் பூமியையே மாசுபடுத்துகிறாள் என்பதால் அவள் நரகத்திற்கு அனுப்பப்பட வேண்டியவள் போன்ற மூடநம்பிக்கைகள் வலுவாக வேரூன்றி இருந்த காலக்கட்டத்தில் குவான்யின் வழிப்பாடு இது போன்ற சிந்தனைகளை மாற்ற உதவியது. தன் உருவகத்தின் அடிப்படையில் பெண்களுக்கு குவான்யின் விடுதலை மற்றும் அதிகாரம் அளித்ததாக போற்றப்படுகிறது.

குவான்யின் வழிபாட்டு முறையில் திருமண எதிர்ப்பும் அடங்கும். பெண்கள் மனைவியாக தங்கள் பாத்திரங்களை விட்டு குறுகிய காலத்திற்கு அல்லது நிரந்தரமாகவோ வெளியேறுவதற்கான வாய்ப்பை இவ்வழிப்பாட்டு முறை வழங்கியது. நிலப்பிரபுத்துவ சீன கலாச்சாரத்தில் (feudal China) நடத்தப்படும் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் பல பெண்கள் மகிழ்ச்சியற்ற அல்லது பொருத்தமற்ற உறவுகளில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து தப்பித்து விடுதலைபெற முடியாத சூழ்நிலையே அதிகம் இருந்தது. குவான்யின் வழிபாடு மேலோங்கி இருந்த காலங்களில் அரசு பெண்களுக்கு சாதகமான சில மத ஆணைகளை பிறப்பித்தது. இந்த புதிய ஆணைகளின் அடிப்படையில் பெண்கள் தங்கள் கணவரை விட்டு வெளியேறவும் அல்லது விருப்பமில்லாத வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக தங்களை விடுவித்துக் கொள்ளவும் அனுமதித்தது.

ஆயினும், இந்த ஆணைகள் ஆண்களை அதிகம் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்துக் கொண்டனர். ஆகவே, திருமண பந்தத்தில் இருந்து வெளியேறும் மனைவிகளின் கணவன்கள் விலைமாதுகளைத் தேடிச் செல்லுதல் அல்லது மறுமணம் செய்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. நடைமுறை வாழ்க்கையில் இது சில சிக்கல்களை ஏற்படுத்தினாலும் சீனப் பெண்களுக்கு மியாவோஷன் பற்றிய இலக்கியங்கள் வழங்கிய இந்த திருமண மறுப்பு சிந்தனைகள் பெண்களின் நலனுக்காகவே முன்னெடுக்கப்பட்டது.

மேலும், தனிமையில் வாழும் வயதான பெண்கள், விலைமாதுகள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை இன மக்கள் என அனைத்து தரப்பட்ட மக்களுக்குமான தெய்வமாக குவான்யின் விளங்கினார். குறிப்பாக விலைமாதுகள் மற்றும் வெளிநாட்டவர்களையும் அரவணைத்து ஆசி வழங்கியதால் சில தீவிர சீன மதவாதிகள் குவான்யின் தெய்வ வழிப்பாடு சீன கலாச்சாரத்தின் நெறிமுறைகளைச் சிதைக்கின்றது என்று குவான்யினுகு எதிராக தங்களுடைய எதிர்ப்பைக் காட்டியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குவான்யின் சித்திரங்கள்

குவான்யின் வழிபாட்டு முறையின் சான்றுகளும் சித்திரங்களும் டன்ஹுவாங்கின் குகைகளில் (caves of Dunhuang) உள்ளன. டன்ஹுவாங்கின் குகைகளில் பொதுவாகக் காணப்படும் படங்களில் குவான்யின் படங்களே அதிகம் எனக் குறிப்பிடுகின்றனர். அங்கு வரையப்பட்ட அனைத்து ஓவியங்களும் ஒன்றுக்கொன்று வலுவான ஒற்றுமையைக் (stylistic resemblance) கொண்டுள்ளன. போதிசத்துவர் மையத்தில் வைக்கப்பட்டு அவருக்கு பின்னால் ஒளி வட்டம் (aureole) மற்றும் மழை மேகம் (nimbus) இருப்பது போன்றும் குவான்யினைச் சுற்றி பல்வேறு ஆபத்தான சூழ்நிலைகள் இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. சில குவான்யின் சிலைகள் மீசை வைத்துள்ள உருவங்களில் இருப்பது போதிசத்துவரின் ஆண்பால் அம்சங்களைக் குறிப்பிடுகின்றன. மேலும் காட்சிக் கலைகளில் குவான்யின் இந்தியாவிலும் பல தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலும் காணப்படும் இளம் இந்திய இளவரசராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

டன்ஹுவாங்கில் கண்டுபிடிக்கப்பட்ட நீர்-நிலவு குவான்யின் (Water-moon Kuan-yin) ஓவியங்களில் ஒன்று 10 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டதாக கூறுகின்றனர். மற்றுமொரு சித்திரம் டாங் (Tang dynasty) மற்றும் பிற்கால வம்சங்களின் போது குவான்யினின் தனித்துவமான பண்புகளை குற்றிக்கும் வகையில் வித்தியாசமாக ஒரு கையில் வில்லோ கிளை (willow branch) மறு கையில் தண்ணீரை வைத்திருப்பது போல் வரையப்பட்டிருக்கிறது. மேலும், குவான்யின் முழு நிலவின் ஒளி வட்டத்தில் சுற்றிலும் மூங்கில் மரங்கள் இருக்க ஒரு பாறையின் விளிம்பில் அமர்ந்திருப்பது போல ஒரு சித்திரமும் வெகுவாக பேசப்பட்டது.

பிற்காலத்தில், குவான்யினின் உருவ சித்திரங்கள் ஒவ்வொரு காலத்திற்கும் மாறுப்பட்டு இருப்பதை டன்ஹுவாங்கின் குகைகளில் நன்கு காண முடியும். பதின்மூன்றாம் அல்லது பதினான்காம் நூற்றாண்டில் வரையப்பட்ட குவான்யின் சித்திரங்கள் அனைத்தும் சீன கலாச்சார அம்சங்களுடன் முழுமையான பெண் உருவில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது போலவே சீன ஓவியங்களுக்கான பாரம்பரிய அமைப்பைக் கொண்ட பல உருவப்படங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

ஆரம்பக்காலகட்டத்தில், முழுவதுமாக பௌத்த மரபைச் சித்தரிக்கும் அம்சங்களைக் கொண்டிருந்த குவான்யின் உருவப்படங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றில் சீன மரபு அம்சங்களும், சீன பாரம்பரிய ஓவியங்களில் காணப்படும் சில விடயங்களும் புகுத்தப்பட்டும் மாற்றப்பட்டும் உள்ளன. உதாரணத்திற்கு, படங்களில் உள்ள பின்னணியில் இருக்கும் மூங்கில் மரங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிக்குப் பதிலாக பைன் மரங்கள் (pine tree) இருப்பது போல் வரையப்பட்டுள்ளது. மேலும், தியானம் செய்கின்ற தோரணையில் இருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கும் குவான்யினின் உருவம், ஒரு மலைப்பகுதியில் அறிஞர் ஒருவர் நிதான நிலையில் அமர்ந்து ஓய்வு எடுப்பது போல் மாற்றி வரையப்பட்டிருக்கும். பௌத்த மரபு அம்சங்களை கொண்டிருந்த படங்களில் பாரம்பரிய சீன இலக்கிய ஓவியங்களில் பொதுவாக காணப்படும் அம்சங்கள் அனைத்து புகுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

இந்தப் புதிய உருவப்படத்தின் தோற்றம், பௌத்த தெய்வத்தை தங்கள் கருப்பொருளாகக் கொண்டு, சீன ஆடைகளை அணிவித்து, பாரம்பரிய சீன நிலப்பரப்பு அமைப்பில் வைத்த, படைப்பாற்றல் மிக்க சீன ஓவியர்களால் வரையப்பட்டிருக்களாம் என நம்பப்படுகிறது. இந்த புதிய வகை குவான்யின் உருவ படம், பிற்காலத்தில் குவான்யின் சீன கலாச்சாரம் மற்றும் பெண்பால் வடிவத்தின் வளர்ச்சிக்கான முன்மாதிரியாக செயல்பட்டுள்ளது. பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் வெள்ளை அங்கி அணிந்த குவான்யின் ஆண் குழந்தையை வரமாகக் கொடுக்கும் தெய்வமாக உருவகப்படுத்தப்பட்டார். அந்த குவான்யின் சிலை ஓர் ஆண் குழந்தையை தன் கையிலோ அல்லது மடியிலோ வைத்திருப்பது போல் அமைந்திருக்கும். இது போன்று ஆண் குழந்தையைக் கையில் ஏந்தியிருக்கும் வடிவம் குழந்தை இயேசுவுடன் கன்னி மேரி சிலையோடு ஒத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பௌத்தம், சீன கலாச்சாரம், கிறிஸ்துவம் மட்டுமில்லாமல் இந்தியர்களுடைய தெய்வங்களில் ஏதேனும் ஒரு தெய்வ சிலையின் உருவமும் அதனுடைய வரலாறும் கூட குவான்யினோடு ஒத்திருக்கக்கூடும். இந்தியாவில் பௌத்தம் தழுவிய ஆண் துறவியை, சீனர்கள் தங்களுக்கு சாதகமான வகையில் தோற்றம், உருவம், கதைகள் மற்றும் பாலினம் உட்பட மாற்றி அமைத்து கொண்டது வியப்புகுரியதாக உள்ளது.

மேற்கோள் பட்டியல்

David A. Palmer, Martin M. H. (2019). Guanyin’s Limbo: Icons as Demi-Persons and Dividuating Objects. American Anthropologist, 121(4), 897–910. https://anthrosource.onlinelibrary.wiley.com/doi/epdf/10.1111/aman.13317

Devotion to Guanyin. (n.d.). The Pluralism Project. https://pluralism.org/devotion-to-guanyin

Gehrmann, V. (n.d.). Guan Yin – Bodhisattva/ Goddess of compassion. Valeska Gehrmann – nationsonline.org. https://www.nationsonline.org/oneworld/Chinese_Customs/Guan_Yin.htm

Hedges, P. (2012). The identity of Guanyin: Religion, convention and subversion. Culture and Religion, 13(1), 91–106. https://doi.org/10.1080/14755610.2012.658426

Huang, Y., Chen, D., Wang, H., & Wang, L. (2022). Gender recognition of Guanyin in China based on VGGNet. Heritage Science, 10(1). https://doi.org/10.1186/s40494-022-00732-3

Jeong-Eun, K. (2018). White-robed Guanyin: The Sinicization of Buddhism in China Seen in the Chinese Transformation of Avalokiteshvara in Gender, Iconography, and Role. Florida Open Journal, 19(1), 17–25. https://journals.flvc.org/athanor/article/view/126459/125931  

Levering, M. (2006). Guanyin/Avalokitesvara in Encounter Dialogues: Creating a place for Guanyin in Chinese Chan Buddhism. Journal of Chinese Religions, 34(1), 1–28. https://doi.org/10.1179/073776906803525147

Meeks, L. (2020). Women and Buddhism in East Asian History: The Case of the Blood Bowl Sutra, Part I: China. Religion Compass, 14(4). https://doi.org/10.1111/rec3.12336

Meulenbeld, M. (2016). Death and Demonization of a Bodhisattva: Guanyin’s Reformulation within Chinese Religion. Journal of the American Academy of Religion, 84(3), 690–726. https://doi.org/10.1093/jaarel/lfv104

RELS 144 – Chinese Traditions – Acalog ACMSTM. (n.d.). https://catalog.sjsu.edu/preview_course_nopop.php?catoid=10&coid=45527#:~:text=Religious%20thought%20and%20practice%20of,the%20modern%20world%2C%20including%20China.

Tay, C. N. (1976). Kuan-Yin: The cult of Half Asia. History of Religions, 16(2), 147–177. https://doi.org/10.1086/462762

Wilf, R. (2020). The Transition of Guanyin: Reinterpreting Queerness and Buddha Nature in Medieval East Asia. Religious Studies Honors Papers. https://digitalcommons.ursinus.edu/cgi/viewcontent.cgi?article=1006&context=rel_hon

Yü, C. (2000). Kuan-yin: The Chinese Transformation of avalokitesvara. http://buddhism.lib.ntu.edu.tw/BDLM/toModule.do?prefix=/search&page=/search_detail.jsp?seq=350778

Zhang, B., Liu, A., & Shu, X. (2022). Visual metaphor and image interpretation of “Guan-Yin-Ma-Lian.” Religions, 13(12), 1197. https://doi.org/10.3390/rel13121197

Zhang, J. (2017). Research on the Guanyin Statues Feminine Appearance in the Tang Dynasty. Advances in Social Science, Education and Humanities Research. https://doi.org/10.2991/hss-17.2017.57

1 comment for “குவான் யின்: பேரன்பும் பெண்ணான தெய்வமும்

  1. PKM
    October 27, 2023 at 1:19 pm

    குவான்யினையும் அவலோகிதரையும் தனித்தனியாகவே அறிந்து வைத்திருந்தேன். இளவரசையின் கதையுடன் குவான்யின் தெய்வத்தின் தொன்மம் பேசப்படுவதால், உங்கள் கட்டுரை புனைவுக்குரிய வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. வட மாநிலங்களில் பத்து நிமிடங்க்களுக்கு ஒரு முறை எப்படி மாரியம்மன் கோவில்களைக் காணலாமோ, அதே போல், சீனர்களுக்கு குவான் யின் கோவில்களைப் பார்க்க முடியும். மலேசியாவின் மிகப் பெரிய குவான் யின் இன்றைய உருவச்சிலையும், மூன்று வித கட்டுமானத்தின் [Chinese, Thai, Burmese] ஒரு பழைய பகோடாவும் [Pagoda] வும் பினாங்கில் உள்ளது. அழகிய இடம். இறைவன் உருவமல்ல அருவம் என வாதிடும் களத்தில் உருவங்கள் அருவத்தின் படிமமென கட்டுரையைத் தொடங்கியது சிறப்பம்சம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...