பேரருளாளனின் கருணை எனும் கிஸா

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் முன் நானும், எழுத்தாளர் அஜிதனும் மத்திய ஆந்திரா நிலத்தில் நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டோம். அப்போது எங்கள் பயணத்தை முடித்து பேருந்துக்காகக் காத்திருந்த இரண்டு மணி நேரத்தில் எத்தேச்சையாகக் கடப்பா அமீன் பீர் தர்காவிற்கு சென்றோம். அன்று அஜிதனின் அடைந்த மனநிலை ஒரு புனைவு எழுச்சிக்கானது. அன்று என்னிடம் சூஃபி மெய் ஞானத்தின் பின்னால் உள்ள தூய காதலின்/அன்பின் மனநிலையை பற்றிக் கூறிக் கொண்டிருந்தார். அல் கிஸா நாவலின் பின்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல் ஏ. ஆர். ரஹ்மானின் இசை அவனுக்கு சூஃபி மெய்யியலின் பின்புலத்தை அறியும் ஊற்றுமுகமாக இருந்தது பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது இந்த பின்னணியில் ஒரு திரைக்கதை எழுதும் எண்ணம் உள்ளது பற்றிச் சொன்னார். ஆனால் இரண்டே ஆண்டில் அது அல் கிஸா எனும் நாவலாக வந்துள்ளது.

ஒரு நாவலின் உச்சமென்பது அது நிகழ்த்திக் காட்டும் உணர்வுச்சங்கிலியிலேயே உள்ளது. கதைக்களங்களும், கதை மாந்தர்களும் இரண்டாம் பட்சமே. நாவல் எய்தும் இந்த உச்சங்களையே நாம் தரிசனம் என்கிறோம். ஒரு நாவலை இத்தகைய உச்சத் தருணங்களால் மட்டுமே நிகழ்த்திக் காட்ட முடியும் என்ற சாத்தியத்தை எய்தியிருக்கிறது அஜிதனின் இரண்டாவது நாவலான ‘அல் கிஸா’.

இந்நாவலின் நான்காம் அத்தியாயத்தின் இறுதியில் வரும் குவாஜா மொயினுதின் சிஷ்டியின் சமாதியின் (கபர்) மேலுள்ள ஹுசைன் பற்றிய வாசகம் முதல் நான்கு அத்தியாயங்களும் சென்று தொட்ட உச்சங்களைக் காட்டி நிற்கும் பாடல். ஹைதர், சுஹாரா, படே குலாம் அலி கான், இமாம் என நாவலின் வெவ்வேறு மைய கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும்போது அவர்கள் சென்றடைய போகும் ஆன்மிக உச்சத்திற்கான முடிச்சும் நாவலின் தொடக்கத்திலேயே நிகழ்ந்துவிடுகிறது. அவ்வுச்சம் இரண்டு வெவ்வேறு கால நிலைகளில் மூன்று வெவ்வேறு கதைச் சூழலில் எப்படி எவ்வண்ணம் நிகழ்ந்தது என்பதே மீதி அத்தியாயம்.

அஜிதனின் நாவல்களாகட்டும், சிறுகதைகளாகட்டும் அதன் பிரத்தியேக சிறப்பம்சம் என நான் காண்பது அவரிடம் உள்ள மொழி செறிவு. ஆசிரியரின் நாவல்கள் குறைந்த பக்கங்களில் எழுதப்படுவதற்கு இதுவே காரணம் என நினைக்கிறேன். நூற்றியிருபது பக்கம் கொண்ட அல் கிஸா நாவல் வெளிவந்த இந்த ஒரு மாதத்தில் அடர்த்தியான, செறிவான நாவல் எனச் சொல்லப்படுவதற்கு ஒரு காரணம் அவரிடம் எப்போதும் உள்ள மொழி செறிவும், சொற் சிக்கனமும்தான்.

உதாரணத்திற்கு நாவலில் நான் மேலே சொன்ன இடத்தைச் சுட்டலாம். நாவலின் நான்காம் அத்தியாயத்தின் இறுதியில் கர்பலா படுகளத்தில் தன் சுற்றத்தார் உயிருடன் சேர்த்து தன்னுயிரையும் கொடுத்த ஹுசைன் பற்றிய பாடல் ஒன்று குவாஜா சிஷ்டியின் கல்லறை மேலிருப்பது போன்று வருகிறது. அதற்கு முந்தைய வரியில் “சூஃபி ஞானியர் கர்பலாவை ஃபனாவின் இடமாக கண்டனர்” என்ற ஒற்றை வரி ஹுசைன் கர்பலாவில் நிகழ்த்திய போர் தியாகத்தின் பின்னால் உள்ள ஆன்மிகமான மனநிலை என்ன? அந்த உயிர் தியாகம் ஏன் இத்தனை காலம் கழித்தும் இந்த மண்ணில் பாடப்பட்டுக் கொண்டிருக்கிறது? அவற்றை பற்றி ஏன் திரும்ப திரும்ப மனிதர்கள் அழுத கண்ணீருடன் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றனர் என்ற கேள்வியை நாவலாசிரியர் வாசகன் மனதில் எழுப்புகிறார். இதில் ஃபனா என்ற சொல்லுக்கு சூஃபி மரபில் தன்னை முற்றாக எரிந்தழித்தல், தான் என்ற ஆணவத்தை அழித்தல் எனப் பொருள் தருகிறது. அங்கே ஃபனா என்ற சொல்லுக்கு பதிலாக வேறு எந்த சொல்லைக் கொண்டு அக்கதை மாந்தர்களின் லட்சிய மனநிலையை கடத்தியிருக்க முடியாது என்றே எனக்கு படுகிறது. அதனை பத்தி பத்தியாக நீட்டி எழுதியிருந்தாலும் இச்சொல் அளிக்கும் உந்துதலை எய்தியிருக்க முடியாது.

அஜிதனின் முதல் நாவலான மைத்ரிக்கும், அல் கிஸாவிற்கும் கதை கட்டமை ரீதியாக நிகழ்ந்த முன்னேற்றத்தை / மாற்றத்தை தொகுத்துக்கொள்ளுதல் ஓர் இளம் எழுத்தாளனை இன்னும் ஆழமாக அறிவதற்கான வழியாக அமையலாம்.

ஒரு நாவல் என்பது அடிப்படையில் காலவெளியின் ஊடாட்டம்தான். ஓர் ஆசிரியர் காலத்தை தன் நாவலில் எப்படி கையாள்கிறார் என்பது பொருத்தே அந்நாவலின் விரிவு அமையுமே தவிர பக்க எண்ணிக்கையில் அல்ல. என்னை பொருத்த வரை நாவலை பக்கங்களில் விரிப்பதற்கு பதிலாக காலங்களில் விரிக்க வேண்டும் அதுவே நாவலாசிரியனின் முதல் சவாலாக இருக்க வேண்டும்.

அப்படி யோசிக்கும் போது அஜிதன் தன் இரண்டாவது நாவலான அல் கிஸாவிலேயே நாவலுக்கான முழு சவாலையும் ஏற்கிறார். மைத்ரி நாவலில் ஜீத்து பெரியப்பா, மைத்ரியின் பெரியம்மா, பாட்டி, தொன்ம கதையாக வரும் ஜீது பகட்வால் என்ற மாவீரனின் கதை மூலம் அதனை எய்த முயற்சித்திருந்தாலும்கூட அதன் முழுமையான சாத்தியம் அல் கிஸாவிலேயே நிகழ்ந்துள்ளது. சில கதை கட்டமைப்புகள் அத்தகைய கால விரிவுகளை கோரவில்லை என்ற நிபந்தனையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அத்தகைய நாவல்களை சிறு நாவல் அல்லது குறு நாவல் என்றே சொல்ல வேண்டும்.

அல் கிஸா நாவல் அந்த சாத்தியத்தை திறம்பட கையாண்டிருக்கிறது. நாவல் 1960 களில் அஜ்மீரில் நிகழ்கிறது. நாவலின் மைய கதாபாத்திரங்களான ஹைதரும், சுஹாராவும் அஜ்மீர் தர்க்காவில் மொகரத்தின் பத்தாவது நாளான அஷுரா தினத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். அங்கே அந்த புனித நாளில் கர்பலா படுகளத்தை நினைவு கூறும் மர்ஸியா பாடல் இசைக்கப்படுகிறது. அங்கே கச்சேரியை பாகிஸ்தானிலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்த பிரபல ஹிந்துஸ்தானி பாடகர் படே குலாம் அலி கான் நிகழ்த்துகிறார். பாடலில் இமாம், அலி, ஹசன், ஹூசைன் என சூஃபி மரபில் போற்றி பாடப்படும் கர்பலா படுகளத்திற்கு பின்னணியான கதை பாடப்படுகிறது. இயல்பாகவே நாவலுக்கான கால முடிச்சுகள் பின்னப்பட்டுவிட்டன. நாவலின் நேர் பாதி வெற்றி இந்த முதற்கட்ட பின்னலிலேயே உறுதியாகிவிட்டது. இனி அதனை ஊடும்பாவுமென தைத்து துணியாக்குவதே நாவலாசிரியனின் மீதி பணி.

நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல் ஒரு நாவல் அதன் உச்ச சாத்தியமான உணர்வுகளைச் சென்று தொடும் போது அதன் மீதி வெற்றியும் சாத்தியமாகும். அதுவும் இந்நாவலில் எப்படி நிகழ்ந்தது எனச் சொல்ல நாவலின் பின்பகுதியில் வரும் ஜாபிர்பின் அன்சாரி எழுதிய கிஸாவின் கதையை சொல்லலாம்.

இறைத்தூதரின் மகள் ஃபாத்திமாவின் வீட்டிலுள்ள ஏமன் நாட்டு கிஸாவை (போர்வை) எடுக்கும் படி பணிகிறார் இறைத்தூதர். ஃபாத்திமா அதனை எடுத்து அவரை போர்த்தி விடுகிறார். ஹசன், ஹுசைன், அலி, ஃபாத்திமா என ஒவ்வொருவராக சென்று அதனுள் தங்களை இருத்திக் கொள்கின்றனர். இறைத்தூதர் அலியிடம் தூய அன்பும் சகோதரத்துவமும் கொண்ட இந்நிகழ்வு எப்போதும் பாடப்பட்டுக் கொண்டே இருக்கும் என்கிறார். நினைவுக்கூறப்படும் இடம் தோறும் இறைவனின் ஆசியும், ரஹ்மத்தும் பொழியும் என்கிறார்.

நான் இங்கிருந்து சென்று நாவலை பின்னோக்கி பார்த்தேன். அந்த கிஸா நோய்வாய் பட்டு தன் குரல் வலம் இழந்து பாட முடியாமல் போன பாடகர் படே குலாம் அலி கான் தன் முழு அர்ப்பணிப்பால் இழந்தவற்றிலிருந்து மீண்டு வந்து அஷூரா திருநாளில் மர்ஸியாவை எப்படி பாடுகிறார் என்பதினுள் வந்தமர்கிறது. ஹைதர் அஜ்மீர் தர்காவில் கோடி ஜனங்கள் கூடி பாடிக் கொண்டிருக்கும் மர்ஸியா நிகழ்வில் முதல் பார்வையில் சுஹாராவிடம் உணரும் காதல் எவ்வண்ணம்? சுஹாராவும் அதே மனநிலையை அந்த கணப்பொழுதில் அடைவது எங்கணம்? அவர்கள் இருவரின் மேலும் அந்த கிஸா எவ்வண்ணம் வந்தமர்கிறது? இறுதியாக கர்பலா பாலை வெளியில் உச்சம் கொண்டிருக்கும் போரில் இமாம் ஹுசைனின் குழந்தைகளான காசீமும், அப்துல்லாவும், அலி அக்பரும், பிஞ்சு குழந்தையான அஸ்கரும் பின் இமாம் ஹுசைன் தானும் என அக்களத்தில் தங்கள் உயிரை முழுதளித்து நிற்கும் தருணத்தில் அந்த கிஸா அவர்கள் மேல் எப்படி வந்தமர்கிறது என்ற கேள்விகளினூடாக நாவல் என்னுள் பின்னி பின்னி வளர்ந்துச் செல்கிறது.

தூய காதல், தூய அர்ப்பணிப்பு, தூய சரணடைதலும் ஒன்றை ஒன்று எவ்வாறு நிறைத்து அந்த கிஸாவினுள் அமர்கின்றன என நாவல் உசாவி பார்க்கிறது.

சூஃபி மரபில் உள்ள காதலின் ஏழு நிலைகள் சுவாரசியமானது. கண்கள் ஒன்றை மற்றொன்று சந்தித்துக் கொள்ளும் முன் பின் அறியாத அந்த முதற் தூய கணத்தில் முதல் நிலை எழுகிறது. இரண்டாம் நிலையில் ஒன்றை ஒன்று நேசிக்க தொடங்குகிறது. மூன்றாம் நிலையில் உலகில் அவையன்றி வேறேதும் இல்லை என்னும் நிலையை அடைகிறது. நான்கும், ஐந்திலும் அவை மரணத்தையும், குழப்பதையும் எதிர்கொள்கின்றன. அதனை கடந்து வரும் ஆறாம் நிலையில் காதலில் பிறிதொன்றில்லாத பித்து எழுகிறது. ஏழாம் நிலையில் அவ்வுயிர்கள் அனைத்தும் அதுவாகின்றன.

ஹைதர், சுஹாரா காதல் இதனை வெளிப்படையாகவே சொல்கிறது. காதலுக்கு நிகரான கர்பலா போரும் அதனை அவ்வண்ணமே வெளிப்படுத்துகின்றது. ஆனால் இதற்கு இடையில் வரும் படே குலாம் அலி கானின் குடும்ப சூழல் பற்றிய விவரணையும், அவ்வறுமையிலிருந்தும், நோயிலிருந்து படே சாஹேப் தன்னை மீட்டெடுத்து வந்து மர்ஸியா பாடலை இசைப்பது இந்த ஏழு நிலையில் எவ்வண்ணம் வருகிறது என யோசிக்கும்போது எனக்கு நாவல் மேலும் விரிகிறது. படே சாஹேப்பும், இசையும் இரண்டன்றி ஒன்றாகும் தருணமே அந்த மர்ஸியா பாடல் என எண்ணிக் கொண்டேன்.

காதலும், போரும் மனிதனுள் நிகழ்த்திக் காட்டும் உச்சநிலையை இசை ஒரு மனதில் எவ்வண்ணம் நிகழ்த்துகிறது என்பதை படே குலாம் அலி கான் கதாபாத்திரம் சித்தரிக்கிறது.

படே குலாம் அலி கான் மொஹரம் இரவில் பாடத் தொடங்கும் போது அவரருகில் இருக்கும் அவரது மகன் முனாவர் தாழ்ந்த சுருதியில் நிரவல் பாடிக் கொண்டிருக்கிறார். படே குலாம் சடாரென கையை வான் நோக்கி உயர்த்தி உச்ச ஸ்தாயியில் அலியின் பாடலை பாடத் தொடங்கிவிடுகிறார். தன்னை மறுபடியும் பாட வைத்த அந்த பெருங்கருணையாளனின் அருளை அவ்வாறன்றி வேறு எவ்வாறு தன்னால் பாட முடியும் எனும் பாவத்தில்.

ஒரு காலகட்டத்தின் ஒட்டுமொத்த கலைஞர்களின் மனநிலை ஒவ்வொரு தனி எழுத்துகளிலும் எவ்வண்ணமோ வெளிபட்டுக் கொண்டே இருக்கும். அல்லது தன் எழுத்து வழியாக அந்த காலகட்டத்தின் மனநிலை உருவாகிறது என்றும் கொள்ளலாம். அப்படி யோசிக்கும்போது நவீனத்துவத்திற்கு பின்பான காலகட்டத்தில் நவீனத்துவம் உருவாக்கி வைத்திருந்த மனித கசப்பும், ஒட்டுமொத்தமான மனித குலத்தின் மேல் இருந்த அவநம்பிக்கைக்கும் எதிரான குரல்கள் கலையில் எழத் தொடங்கின. அவற்றின் உச்சம் என தமிழ் இலக்கியத்தில் நான் வாசித்த வரையில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய குமரித்துறைவி நாவலை சொல்வேன்.

அஜிதனின் அல் கிஸா நாவலும் குமரித்துறைவிக்கு இணையான மானுட மேன்மையின் உச்சம் நிகழ்ந்த தருணங்களால் நெய்யப்பட்டிருப்பதை காண்கிறேன். இதனை எழுதி முடிக்கும் போது “இந்நாவல் அந்த பேரருளாளனின் கருணையால் மட்டுமே என்னால் இப்போது இங்கே நாவலாக எழுதப்பட்டிருக்கிறதே அன்றி நான் ஒரு நாவலை எழுதி முடித்துவிட்டேன் எனும் எண்ணம் எதுவும் என்னுள் எழவில்லை” என என்னிடம் சொன்ன அஜிதனின் முகம் மட்டுமே கண் முன் எழுகிறது.

அஜிதன் – தமிழ் விக்கி

1 comment for “பேரருளாளனின் கருணை எனும் கிஸா

  1. விஜயபாரதி
    September 2, 2023 at 3:51 pm

    சிறப்பான அறிமுகம் நவீன். அல் கிஸா நாவலின் இரண்டு முக்கிய கூறுகளாக நான் உணர்ந்தவை காலமும் , உச்ச தருணங்களும். ஒன்று , குறுகிய பக்கங்களிலேயே நாவல் 2000 வருட விரிவை காட்ட முடிந்ததை வியப்புடனே வாசித்தேன். கால விரிவு மட்டுமன்று, இரண்டாவது, தொடர்ந்து உயர் மின்னழுத்தம் செல்லும் கம்பிபோல் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை உச்ச தருணங்களின் வழியே சென்று முடிந்திருக்கிறது இந்நாவல். இரண்டுமே நாவலின் பலம். இரண்டையுமே இந்த கட்டுரையில் காண முடிந்ததில் மகிழ்ச்சி.

    கூடுதலாக இந்த கட்டுரையிலிருந்து நான் அடைந்தவை நாவலின் சொற்சிக்கனம் , முக்கியமாக ஃபனா போன்ற ஒற்றை வார்த்தைகளுக்குப் பின் இருக்கும் ஆழத்தை தவறவிடக்கூடாது என்னும் கவனம், மைத்ரியுடனான ஒப்பீடு இரண்டும். நன்றி நவீன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...