அசோகமித்திரனை அறிதல்

கலை என்பது குறியீடுகளின்வழி உணர்வுகளையும் எண்ணங்களையும் தொடர்புப்படுத்தும் முறை என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். ஒலிக் குறியீடுகள் இசைக் கலை ஆகின்றன, உடல் அசைவின் குறியீடுகள் கூத்துக் கலையாகின்றன, காட்சிகளின் குறியீடுகள் ஓவியக் கலையாகின்றன. அதுபோலவே சொற்களின்/ மொழியின் குறியீடுகள் இலக்கியக் கலையாகின்றன. இப்படிச் சொற்கள் உணர்த்தும் குறியீடுகளைப் புரிந்து கொள்ளும்போது இலக்கியம் நம் வசப்படுகிறது.

இலக்கியக் கலை என்பது பிற கலைகளைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது. பிற கலைகள் யாவிலும் அறிவுத்துறைக்கு அடிப்படையாக இருக்கின்ற தர்க்கவியலுக்கான கூறுகள் அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால், இலக்கியக் கலையில் மட்டும் தர்க்கவியலான தத்துவார்த்தத் தன்மை மிக நெருங்கி இருக்கிறது. ஆகவே, இலக்கியம் எனும் கலை அறிவுத்துறையின் வளர்ச்சிக்கு அடிப்படையாகிறது.

காலங்காலமாக இலக்கியம் அறிவுரை களம் என்ற  சிந்தனையில் மரபார்ந்த எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்து வருகின்ற பலர் புது வகை இலக்கிய வகைகளை நுகரும்போது அதனை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி விலகுகின்றனர். இதற்குக் காரணம் இலக்கியத்தின் கலைத்தன்மையை உணராமல் இருப்பதும் அதற்கேற்ற பயிற்சி இல்லாமையும்தான்.

அவ்வகையில் தமிழாசியா முன்னெடுக்கும் வாசிப்புப் பகிர்வு கலந்துரையாடலை ஒட்டி அசோகமித்திரனின் மூன்று சிறுகதைகள் வாசித்து ஆராயப்பட்டன. இந்தச் சந்திப்பு ஜூன் 10 மெட்ராஸ் காப்பேயில் நடைபெற்றது. புலிக்கலைஞன், பிரயாணம், காலமும் ஐந்து குழந்தைகளும்  ஆகிய சிறுகதைகள் இந்தச் சந்திப்பை ஒட்டி முன்னமே வாசிக்கப் பகிரப்பட்டன. அவ்வகையில் வாசித்து விவாதித்ததன் சாரத்தின் தொகுப்பாகவே இந்தக் கட்டுரை அமைகிறது.  

அகோகமித்திரனின் புனைவுகலமானது கலைத்தன்மை மிக்க தர்க்கவியல் கொண்டது. சமூகத்தின் ஆழ்ந்த அவதானிப்புகளை நடப்பியல் வாழ்க்கைக்கும் மேலாகக் கற்பனை செய்து அறியும் தன்மை கொண்டது. இதனாலேயே இவரின் படைப்புகள் ஆரம்ப நிலை வாசகனைத் தடுமாற வைக்கிறது. 

தமிழ்ச் சிறுகதை ஆளுமைகளில் மிகக் கவனிக்கக் கூடியவராகத் திகழ்பவர் அசோகமித்திரன். நவீன தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் புதிய செல்நெறியை ஏற்படுத்தி தமிழ்ப் புனைவுலகத்தை மாற்றுப் பாதைக்கு அழைத்துச் சென்றவர். இவரின் அன்றைய படைப்புகள் நமக்கு இன்றைய சிறுகதை உலகத்தைப் புரிந்து கொள்வதற்குக் களம் அமைத்துக் கொடுக்கின்றன. அதேவேளை, அடுத்து வருகின்ற காலத்திற்கும் வழிகாட்டியாக நிற்கும் என்பதில் ஐயமில்லை. நூற்றாண்டுகளைக் கடந்த நிலையிலும் இவரின் சிறுகதைகள் நமத்துப் போகாமல் இளமைத் தன்மையுடன் விளங்க இவர் சிறுகதைகளில் ஓங்கி நிற்கும் கலைத்தன்மையே காரணம்.

அசோகமித்திரன் பாரம்பரியமான சிறுகதை எழுத்துப் போக்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டுப் புதிய கோணத்தில் கதைகளை அமைத்து வெற்றி கண்டவர். அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட அகப் புறச் சூழல்களே இவரின் புதுமைநோக்குக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். புற வாழ்க்கையில் பழகிப்போன நடப்பியல்களைத் தன் கற்பனையால் அகப்படிமமாக்கி அதை கலைத்தன்மை கொண்ட சிறுகதைகளாக்கியிருகின்றார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

பொதுவாக இலக்கியத்தில் கலை நயம் எனச் சுட்டப்படுவது எது  என்பது மிக விரிவாக அலசப்படவேண்டிய பேசு பொருள். எவ்வகை கூறுகள் ஒரு படைப்பைக் கலைநயம் மிக்கதாக மாற்றுகின்றது என்பதை நாம் சுறுக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஓவியத்தில் வண்ணங்களின் தேர்வும் வளைவுகளும் கோடுகளும் அப்படைப்பின் கலை மதிப்பை முடிவு செய்கின்றன என்று கொண்டால், இலக்கியத்தில் மொழி,  நடை, பாத்திரவார்ப்பு, உரையாடல், நுண்விவரணை, காட்சியாக்கம் எனப் பல கூறுகளும் ஒன்றோடு ஒன்று பொருந்தி அக்கலையை முடிவு செய்கின்றன என்று கூறலாம். மேலும் குறியீட்டுத் தன்மையும் தத்துவார்ந்த தேடலும் கூட இலக்கியத்தைக் கலைப்படைபாக ஆக்கும் கூறுகள் என்றே சுட்டலாம். அவ்வகையில் அசோகமித்திரன் தன் சிறுகதைகளைச் செறிவான கலைப்படைபுகளாகவே வாசகருக்குத் தந்துள்ளார்.

காட்சிப்படுத்தும் கலை நுட்பம்

அசோகமித்திரனின் கதைகளை வாசிக்கும்போது பெரும்பாலானவை வாழ்க்கையின் நடப்பியலைப் பதிவு செய்யும் கதைகளாகவே அமைந்திருக்கின்றன. நம்மைச் சுற்றி உலவிக் கொண்டிருக்கின்ற எளிய மனிதர்களே இவர் கதைகளின் முக்கியப் கதைப்பாத்திரங்களாகுகின்றனர். இவர்களின் எளிய வாழ்க்கையே கதையில் முக்கியப் பேசு பொருளாகின்றது. தான் வாழ்ந்த நிலத்தில் தன்னைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களின் அகம் மற்றும் புறம் சார்ந்த வாழ்க்கையையே மிக அழகாகக் கதைகளாக்கியுள்ளார். கலைஞன், துறவி, சம்சாரி, வழிப்போக்கன், பிச்சைக்காரன் எனப் பலர் அசோகமித்திரனின் கதைக் கேமிரா குவியத்தில் துல்லியமாகக் கலை நுட்பத்தோடு காட்சியாக்கப்பட்டுள்ளனர். நேரடியாகக் காணும் அனுபவத்தையும்விட அசோகமித்திரனின் சொற்கள் செதுக்கும் கதை மாந்தர் சிற்பக் கலைத்தன்மை மிக்கது.

அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’ என்ற சிறுகதை தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று.  இச்சிறுகதையில் வரும் ‘டகர் பாயிட் காதரின்’ உருவத் தோற்ற விவரிப்பு வெறுமனே ஒரு தோற்ற விவரிப்பாக மட்டும் அமையாமல் தோற்றத்தின் பின்னணியில் ஆழ்ந்திருக்கின்ற காதரின்  வாழ்க்கையின் வலிகளைக் காட்டுவதாக அமைகிறது.  

‘குள்ளமாகத்தான் இருந்தான். ஒரு காலத்தில் கட்டுமஸ்தான உடம்பு இருந்திருக்க வேண்டும். இப்போது தோள்பட்டை எலும்பு தெரிய இருந்தான். நன்றாகத் தூங்கியிருந்த அவனுடைய தாடை மூட்டுக்கள் அவனுடைய கரிய கன்னங்களை அளவுக்கு மீறி ஒட்டிப் போனதாக காண்பித்தன. வெள்ளை கொண்டு வரும் ஆட்கள் எல்லாரும் அநேகமாக அப்படித்தான் இருப்பார்கள். ராமராஜ்யம் பற்றி படம் எடுத்தால் கூடப் படத்தில் வரும் பிரஜைகள் தாது வருஷத்து மக்களாகத்தான் இருப்பார்கள்.’                                                               (புலிக்கலைஞன்)

 டகர் பாயிட் காதர் போன்ற ஒருவரை நாம் நேரில் காணும்போதுகூட நம் கண்கள் மிகத் துல்லியமாக அனைத்தையும் படம் பிடித்திருக்காது. பெரும்போக்கில் மேலோட்டமாக அளந்து முன்தீர்மானம் செய்திருக்கும். ஆனால், அசோகமித்திரனின் கதை கண்கள் சொற்களின்வழி நம் கண்முன் காதரை முப்பரிமாண காட்சியாக நிறுத்துகிறது.  

இந்த விவரிப்பில் ராமராஜியம் – தாதுவருஷ பஞ்சம் என்ற முரண்கள் கூர்ந்து கவனிக்கத் தக்கன. ராமராஜியம் என்பது மக்கள் மிகச்செழிப்பாக வாழ்ந்ததாகக் கூறப்படும் ஒரு காலத்தின் கற்பனை வடிவம். ஆனால் தாதுவருட பஞ்சம் என்பது 1876ஆம் ஆண்டில் கண்முன்னே நடந்த ஒரு கொடும் வறுமை நிலை. சினிமா என்னும் கற்பனை உலகில் ராமராஜியங்களை உருவாக்கி மக்களைத் தற்காலிகமாக மகிழ்விக்க முடியும் என்றாலும் அதில் பங்கு கொள்ளும்  அசல் கலைஞர்களின் நிலை பசியும் பட்டினியுமாகவே இருப்பதை அசோகமித்திரன் பகடியாகச் சித்தரிக்கின்றார்.

நவீன கதை போக்கில் கதைச் சொல்லும் பாங்கு காட்டாறு போல பாயும் தன்மைக் கொண்டதாக அமைவது சிறப்பு. காட்டாறு பாயும்போது எப்படி இரு மருங்கிலும் இருக்கும் அனைத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டு பாயுமோ அதுபோல கதை வீச்சும் இருக்க வேண்டும். கதையின் மையத்திற்கான சாதகங்கள் அனைத்தையும் அள்ளி படையலிடுவதே வாசகனுக்கு முழு அனுபவத்தை வழங்கும். இக்கதையில் காதரின் பாத்திர வார்ப்பும் அத்தகையதாக அமைந்துள்ளது.

மேலும், இக்கதையில் புலியாகி போயிருந்த காதரின் கலை திறமையின் உச்சத்தையும் மிக நுட்பமாகக் காட்டுகின்றார் அசோகமித்திரன். கலையை உயிராகப் போற்றும் காதரை ஒரு சின்ன அறைக்குள் புலியாகவே நிறுத்துகிறார். காதர் மறைந்து புலி ஒன்று அந்த அறையையே காடாக உருவகித்துச் சீறுகிறது. வாசகனும் கதையில் வரும் சர்மாவைப் போல அப்புலியின் இயல்பில் இரும்பாகி நிற்கின்றான்.

அசோகமித்திரனின் கதை மாந்தர் வார்ப்புகளில் இன்னொரு சிறப்புக் கூறு என்னவென்றால் மிகை கூட்டப்படாத மாந்தர்கள். நாம் கூட்டத்தோடு நடந்தோம் என்றால் நம் பக்கத்தில் பத்தோடு பதினொன்றாக நடந்து வரும் வழிபோக்கன்தான் அசோகமித்திரனின் கதை நாயகர்கள். ஒரு சாமான்யனின் மேல் மட்டும் தன் பார்வையைக் கிடத்தி சில கணங்கள் அவனை நம்மோடு உறவாடவிட்டுச் செல்லும் இயல்பு கொண்டதுதான் அசோகமித்திரனின் புனைவின் சிறப்பு.

இயல்பாக உறவாடும் கதை மாந்தர்கள் என்றதும் நம் பார்வைக்கும் அறிவுக்கும் எட்டும் அளவோடு மட்டும் அவரின் கதை மாந்தர் வார்ப்பு நின்றுவிடுவதில்லை. அந்தக் கதை மாந்தர் வார்ப்பு நின்ற இடத்தில் அது சொல்லாமல் உணர்த்தும் விரிவு என்பது மிக ஆழமானது. இதற்கு ஒரு சான்றுதான் ‘பிரயாணம்’ என்ற சிறுகதையின் இறுதி முடிவில் காட்டப்படும் குருதேவர் கதைப்பாத்திரம். கதையில் முடிவில் குருதேவரின் வலது கைப்பிடியில் பிய்த்து எடுக்கப்பட்ட ஒர் ஓநாயின் தோள்பட்டை இருந்தது. இந்தத் தருணம் கதையில் வலுவற்றுச் சோர்ந்திட்ட குருதேவர் பற்றிய எண்ணத்தை முற்றிலுமாக மாற்றி அமைக்கிறார் அசோகமித்திரன்.  இதுவரையிலும் குருதேவர் பற்றி கொண்டிருந்த எண்ணமெல்லாம் தகர்க்கப்பட்டு முற்றிலும் மாறுப்பட்ட குருதேவர் வாசகனின் நிலையில் விரிவடைகின்றார்

கதைமாந்தர் வார்ப்பு மட்டுமின்றி கதை களத்தைச் சொற்களால் உருவமைக்கும் கலையில் அசோகமித்திரனுக்கு நிகர் அவரே என்று சொல்ல வேண்டும். மிக எளிய சொற்களில்  கதை களத்தை வாசகனின் அகக் கண்ணில் காட்சிப்படுத்தும் சொற்கலையில் சிறந்தவர். தமிழ்ச் சிறுகதை உலகத்தில் மிக முக்கிய கவனத்திற்குரிய ‘பிரயாணம்’ என்ற சிறுகதையில் சீடனின் விழிவழி மலைப்பகுதியின் இரவுச் சூழலை மிகப் பிரமிப்பாகக் காட்சிப் படுத்துகிறார் அசோகமித்திரன்.

//அந்தப் பிரதேசத்தில் பறவைகளே கிடையாது. காற்று மிக லேசாக வீசிக் கொண்டிருந்தாலும் மலைச் சாரலில் மோதி பிரதிபலிக்கவேண்டியிருந்ததால் ‘கும்’ என்ற ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. பல நூறுஅடிகளுக்கு கீழே, குறைந்தது அரை மைலுக்கப்பால் பிரவாகமாக மாறும் ஓடை, தொடர்ந்து இரைச்சல் எழுப்பிக் கொண்டிருந்தது.// 

இப்பகுதியை மிக உன்னிப்பாக வாசித்துக் கடந்து செல்லும் வாசகன் சீடனாகவே மாறி அசோகமித்திரன் காட்டிய மலைப் பிரதேசங்களில் அலைந்து திரிந்து வர முடியும். காற்றில் உரசலையும் ஆற்று நீரின் சலசலப்பையும் நுகர முடியும்.

காலமும் ஐந்து குழந்தைகளும் என்ற சிறுகதையில் இரயில் நிலையத்திற்குச் செல்ல பஸ் ஏறிய இளைஞனின் தோற்றமும் அங்கு நிலவிய சூழலின் விவரிப்பும் மிக நுட்பமாகக் காட்சியாக்கியுள்ளார். நெருக்கடிகள் மிகுந்த அந்த இளைஞனின் பயணம் சிக்கல் மிகுந்த வாழ்க்கைக்கான முன்நோக்காகவும் அமைகிறது.  

//நடுவில் சிறிது நேரம் மழைத் தூறல். சாலையில் ஒரே மாடுகள்; அல்லது மாட்டு வண்டிகள். பெருச்சாளி சந்து கிடைத்த மட்டும் தன் பெருத்த, தினவெடுத்த உடலை மந்த கதியில் வளைத்துப் போவதுபோல, பஸ் முன்னேறிக்கொண்டிருந்தது. பெருச்சாளி வயிற்றுக்குள் ஒற்றை இறக்கையை விரித்து நின்று கொண்டு அவன் ரெயில் நிலையம் அடைவதற்குள் அவன் வயிறு நிரந்தரமாகக் கழுத்தில் தங்கிவிட்டது. ரெயில் நிலையம் எங்கேயோ, ரெயில் நிலையத்தின் பெயரைச் சொல்லி பஸ் நிற்கும் இடம் எங்கேயோ//

மேற்கண்ட பத்தியில் அசோகமித்திரனின் சொற்கள் ஏற்படுத்துகின்ற விளைவை ஒரு வாசகன் கற்பனையின்வழி காட்சியாக்கி நுகரும்போது அவன் பெறும் அனுபவமானது நேரடி அனுபவத்திற்கும் மேலாக விரிந்து நிற்கிறது. நேரடி பார்வையில் நம் கண்களில் மறைத்துவிட்டதையும் நமக்குக் காட்சியாகக் காட்டும் தன்மை கொண்டதாக அமைந்திருக்கிறது. மிகச் சாதாரண எளிய நடையில் மிகத் துல்லியமாகக் கதை களத்தைக் காட்சிப்படுத்தும் கலை அசோகமித்திரனின் தனித் தன்மை.  

ஒவ்வொரு காலக்கட்டதிலும் எழுதப்படும் புனைவுகள் அந்தக் காலகட்ட அரசியல் சாயம் இல்லாமல் எழுதப்படுவதில்லை. இவற்றில் அந்தந்த காலக்கட்ட அரசியல் ஜனநாயக தாக்கமே அதிகமாக இருக்கும். ஒரு நாட்டின் அரசியல் ஜனநாயகம் விளைவிக்கும் பொருளாதாரத் தாக்கம், கல்வித்துறைத் தாக்கம், இனக்குழு வாழ்வாதாரத் தாக்கம் போன்றவையே கதைப்பொருளாகி சிறுகதைகளை அலங்கரித்து வந்தன. அதற்கு அடுத்த நிலையில் சமூக ஜனநாயக கதை போக்குகள் மேலெழுந்த போது சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் போன்ற கருப்பொருள்களைக் கொண்டு கதைகள் படைக்கப்பட்டன. இந்த இரண்டு அரசியல் தாக்கங்களுக்குச் சிறிதும் ஆட்படாமல் தனிமனித ஜனநாயகத்தைப் மிக எளிமையாகப் பேசின அசோகமித்திரனின் சிறுகதைகள்.

தனிமனித ஜனநாயகம் என்பது எந்த அரசியல் போக்குகளுக்கும் சமூக கட்டுப்பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல்  தனிச்சையாக மிக எளிய மனிதனின் அகப் புற நிகழ்வுகளை எல்லைகளற்று முன்வைப்பதாகும்.

பொதுவாக நவீன சிறுகதைகள் எழுதப்பட்ட காலத்தில்  சாமானிய மனிதர்களை நாயகர்களாகக் கொண்ட கதைகளை எழுதுவது இலக்கியத்தின் புது வீச்சாக இருந்தது. பெரும் லட்சிய நோக்கோ, கொள்கை பிடிப்போ இல்லாத, அன்றாட வாழ்வின் போராட்டங்களை எதிர்கொண்டு வாழும் மனிதர்களின் வாழ்க்கையைக் கதையாக்குவதை எழுத்தாளர்கள் முதன்மை படுத்தினர்.  அசோகமித்திரன் அவ்வகை சாமானிய மனிதர்களின் புறக்காட்சிகளைத் தாண்டி அவர்களின் அகவெளிப்பாட்டையும் நுட்பமாகச் சித்தரித்தார். அதேவேளை, அவை முன்முடிவுகளற்றும் அதன் வீச்சில் பல திறப்புகளுக்கு வழிவிட்டுச் செல்லவதாகவும் அமைந்துள்ளன. .

இதற்கு மிக நல்ல சான்றாக அமையும் சிறுகதை, புலிக்கலைஞன். மிக வறிய நிலையில் அன்றாட தேவைகளுக்காகப் பொருள் தேடும் நோக்கில் ஒரு கலைஞன் வாய்ப்புத் தேடி அலைகின்றான். ஒரு திரைப்படத் தயாரிப்பாளரிடம் சென்று வாய்ப்புக் கேட்கிறான். தான்  புலி வேடம் இட்டு ஆடும் கலைஞன் என அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அவர்கள் முன் புலியாக மாறி தன் கலை திறத்தைக் காட்டுகிறான். அங்கு இருந்த அனைவருமே வியந்து நிற்கின்றனர். புலி ஒன்று கர்ஜிர்த்து அடங்குகிறது.  ஆடி முடித்த அடுத்த கணம் புலி பூனையாகி மனைவிக்குப் பயந்து நிற்கிறது. மீண்டும் வாய்ப்புக்காக மன்றாடுகிறது. இந்தத் தருணத்தில்  தன்னிலையில் மிக எளிய மனிதானாகத் தோன்றுகிறான்.  கலை என்ற தன்னாற்றலுக்கும் விலைவைக்கும் தன்தேவைகளுக்கும் இடையே பிளவுப்பட்டுத் தடுமாறுகிற தருணத்தில் முடிவில்லாமல் காதர் புலியா? பூனையா? என்ற வினாவோடே கதை முடிகிறது.   

தத்துவார்த்த கலை நுட்பம்  

அறிவுத்துறையோடு மிக நெருக்க தொடர்புடைய கலை வடிவம் இலக்கியம். அறிவுத்துறையில் கலைநயத்தோடு தர்க்கவாதத்தை ஏற்படுத்தி உரையாடும் தன்மை கொண்டது. இதுவே அசோகமித்திரனின் இலக்கியப் போக்கின் அடிப்படையாகவும் விளங்குகிறது.

அசோகமித்திரனின் சிறுகதைகளை முதல் வாசிப்பில் முழுமையாகப் புரிந்து கொள்வது என்பது சவால் மிக்கதே. அசோகமித்திரனைத் தொடர்ந்து வாசித்து அவர் புனைவின் கலை நோக்கைத் தெரிந்து தெளிய வேண்டும். அதன் பின்னரே அவரின் படைப்புகள் நமக்கு ஓரளவுக்கு வசப்படும். மிக எளிய நடை, அடுக்குகள் அற்ற கதைப் போக்கு, குறியீடுகள் இல்லாத உத்தி என மிகச் சாதாரண மொழி அமைப்பைக்  கொண்டவை அசோகமித்திரனின் புனைவுகள். அவரின் சிறுகதைகளை யாரும் எந்தச் சிக்கலும் இன்றி வாசித்து முடித்துவிடலாம்.

ஆகவே அவர் கதைகளை இரண்டுவிதமாக அணுகும் வாசகர்கள் உள்ளனர். முதலாவது “ஒரு எளிய அன்றாட சிக்கலைச் சொல்வதைத் தவிர இக்கதையில் என்ன இருக்கிறது” எனக் கேள்வி கேட்கும் வாசகர்கள். இரண்டாவது எளிய மொழிநடையால்,  அக்கதை முன்வைக்கும் சூழலையும் மனிதர்களையும் புறவயமாக உள்வாங்கிக் கொண்டு அக்கதை முழுதும் தமக்குப் புரிந்துவிட்டதாக நம்பும் வாசகர்கள்.  ஆனால் வாழ்க்கையின் அடிப்படை மெய்யியலை அலசும் கலை பார்வவை அசோகமித்திரனுடையது. ஆகவே, இயல்பு வாழ்க்கை பற்றிய இவரின் மிக உன்னிப்பான அவதானிப்பும் அதன் ஆழமான தத்துவார்த்த நோக்கையும் புரிந்து கொள்ளாத வாசகர்களுக்கு அக்கதைகள் எளிதில் வசப்படுவதில்லை

மிக இயல்பான வாழ்க்கை சித்திரத்தை அமைத்து அதனூடாக மானுட மெய்யியல் தத்துவங்களை உரையாடுகின்ற உச்சநிலை இலக்கியக் கலைநயம் கொண்டவை அசோகமித்திரனின் புனைவுகள்.  இந்தக் கலைத்துவ அம்சமே அசோகமித்திரனை ஒரு வாசிப்பில் புரிந்து கொள்ள முடியாத நிலைக்கும் தள்ளுகிறது.

‘பிரயாணம்’ சிறுகதையை முதல் வாசிப்பில் கடந்து செல்லும்போது அது ஒரு சீடனின் குரு பக்தியை உணர்த்தும் கதையாகத்தான் தோன்றுகிறது. உடல் தளர்வுக்குள்ளாகிச் சோர்ந்திட்ட குருதேவரை மலையிலிருந்து கொண்டு வருவதற்குச் சீடன் எதிர்நோக்கும் சிக்கல்களும் போராட்டங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். மலைபிரதேசத்தின் மலைப்பு, இரவின் பயங்கரம், ஓநாய்களின் அச்சுறுத்தல் எனச் சவால்கள் அடுக்கடுக்காக அமைந்து சீடனை மிரட்டுகிறது. இறுதியில் இவை அனைத்திடமும் போராடித் தோற்று ஓநாய்களுக்கு தன் குருதேவரைப் பலிகொடுப்பதாகக் கதை நிறைவு பெறுகிறது.

இருப்பினும் இதுதான் இக்கதையின் மையப்புள்ளி என்பதில் மனம் நிறைவு கொள்ளவில்லை. கதையின் முடிவில் குருதேவரின் கைப்பிடியில் ஓர் ஓநாயின் பிய்த்து எடுக்கப்பட்ட தோள்பகுதி இரத்தம் தோய்ந்து காணப்படுவதைச் சீடன் காண்கிறான். இந்த முடிவு வாசகனுக்கு ஒரு நெருடலை ஏற்படுத்துகிறது. மனம் மீள்வாசிப்பைக் கோருகிறது.

முதல் வாசிப்பில் கதையில் வாசித்த சில சம்பவங்கள் சார்ந்து செய்த முன்முடிவுகள் இரண்டாவது வாசிப்பில் தகர்க்கப்படுகின்றன. புதிய பார்வையில் சீடனோடு புதிய பயண அனுபவம் நீடிக்கிறது. இருள், மலைப்பு, அச்சம் உணர்த்திய பொருள் மறுகட்டுமானம் செய்யப்பட்டுப் புதிய பார்வையில் கதை பயணிக்கத் தொடங்குகிறது. 

இரண்டாம் வாசிப்பில் சீடனின் குருபத்தியைக் கடந்து குரு முதன்மை பெறத் தொடங்குகிறார். சமயக் கற்பிதங்களில் ஆழ்ந்து தன்னைத் தண்மையானவராக்கிக் கொள்கிறார் குரு. உலக வாழ்க்கையின் பற்றறுத்து பளுவற்று வாழ்பவராகக் காட்சிப்படுத்தப்படுகிறார். புலன்களின் ஆசைகளை முற்றிலும் அடக்கி தன்னைக் தனக்குள்ளே புதைத்துக் கொள்கிறார். ஆனால் கதையின் இறுதியில் குருதேவர் தன்னை அறியாமலே தனக்குள் போர்த்திக் கொண்ட திரைகளிலிருந்து வெளிப்படுகிறார். என்னத்தான் மூடி மறைத்தாலும் மனித இனத்தின் அனாதி இச்சைகளில் ஒன்றான வன்மம் கதையின் இறுதியில் குருதேவரிடம் வெளிப்பட்டு விடுகிறது. 

மனித இனத்தின் மிக நுட்பமான இந்த மானுடவியல் சார்ந்த உரையாடலைச் சிறுகதையின்வழி முன்வைத்திருப்பது சிறப்பு.

அடுத்ததாக காலமும் ஐந்து குழந்தைகளும் சிறுகதையின் தத்துவார்த்த கலைநோக்கு. இக்கதையினை மேலோட்டமாக வாசிக்கும்போது பஸ், இரயில் நிலையங்களில் உள்ள நெருக்கடிகளைக் கடந்து இண்டர்வியூக்குச் செல்லும் ஒருவனின் பயண அனுபவம்தான் கதையின் மையம் என புரிந்து கொள்ள முடிகிறது. ரயில் நிலையம் செல்ல, பேருந்தில் ஏறுவதிலிருந்து டிக்கிட் வாங்கி ரயிலில் நுழையும் வரை வரிசையாகக் காட்சிகள் இண்டர்வியூவுக்குச் செல்பவனின் விழி வழியாக கடத்தப்படுகிறது. வாழ்க்கையைப் போராடிதான் வாழவேண்டும் என்ற சிந்தனையைப் பயணப் போராட்டத்தை மையப்படுத்திக் கதைச் சொல்லப்பட்டிருக்கிறது என்ற புரிதலோடு நமக்குள் கதை மேலோட்டமாக நிறைவடைகிறது.

முதலில் வாசிக்கும்போது கதையில் எழுந்த சில நெருடல்களை மீள்பார்வை செய்து பார்க்கும்போது புதுப்புது பொருள் உரைப்பதாகத் தோன்றுகிறது. கதையின் தலைப்பை அடிப்படையாக வைத்துக் கொண்டு வாசிக்கும்போது கதை முன்வாசிப்பின் புரிதல்களை அடியோடு சரித்து விடுகிறது. மனித வாழ்க்கைக்கும் காலத்திற்கும் உள்ள தொடர்பின் எல்லைகளை நம்மோடு கதை உரையாடுவதாகத் தோன்றுகிறது. பேருந்தில் ஏறுவதற்காக ஓடி வருபவன்  பிளார்ட்பாரத்தில் படுத்துறங்கும் ஐந்து குழந்தைகளை வைத்துக் கொண்டு ஒருவன் பிச்சை எடுக்கும் காட்சியை வாசிக்கும்போது கதையின் மையம் இங்குதான் நிலை கொள்வதாகத் தோன்றுகிறது. ஐந்து குழந்தைகளும் இயற்கையின் ஐம்பூதங்களை நினைவுப்படுத்துகின்றன. இவை காலத்தின் குழந்தைகளா என்ற சிந்தனை மேலிடுகிறது. இந்தப் புரிதலோடு கதையைத் தொடர்ந்து வாசிக்கும்போது மனிதனுக்கும் காலத்திற்கும் உள்ள அடிப்படை தொடர்பினை அலசுவதாகக் கதை நீள்கிறது. காலம் எனும் எல்லையற்ற ஆற்றலுடன் போராடிக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கையின் இயல்பினைக் கதை முன்வைக்கிறது.

கதையில் இரயிலைப் பிடிக்க ஓடிக் கொண்டிருப்பவன் முன் திடீரென தோன்றும் கடவுளுடன் ஏற்படும் உரையாடலும் வாசகனை ஒரு கணம் நிறுத்திச் சிந்திக்க வைக்கிறது. கால ஓட்டத்தில் சில கணங்களில் கடந்து செல்லும் ஒரு பொருள் கடவுள்  என்றும் அதற்காக அதிக காலம் செலவிடுவது அபத்தம் என்ற எண்ணம் வாசிக்கும்போது தோன்றாமலில்லை. 

இவ்வாறு, காலம் சார்ந்த உரையாடல்களைக் கலைநயத்தோடு மிக அனாசயமாக இக்கதையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் அசோகமித்திரன் என்றே எண்ணம் தோன்றுகிறது.

முடிவு

அசோகமித்திரனின் சிறுகதைகள் சாதாரண மக்களின் நடப்பியல் வாழ்க்கை சம்பவங்களையே அதிகம் முன்வைக்கின்றன. எளிய சொற்களின்வழி இந்த வாழ்க்கையின் மீது வாசகர்களை ஆழ்ந்த கவனத்தைச் செலுத்தச் செய்கிறார். இது வாசகர்களை அதிகமாகவே  பாதிக்கின்றன. தங்கள் வாழ்க்கையின் மீது வைத்திருந்த பல்வேறு புரிதல்களை மீளாய்வு செய்து அதிர்வுக்குள்ளாக்குகின்றன. இந்தக் கலை நுட்பமே அசோகமித்திரனின் சிறப்பு. எழுத்தாளர் ஜெயமோகனும் அசோகமித்திரனின் இச்சிறப்பு அம்சத்தைப் பற்றி குறிப்பிடுகையில் ‘சாதாரணத்துவத்தின் கலை நுட்பம்’ என்கிறார்.

தமிழாசியா சந்திப்பை ஒட்டி வாசித்த அவரது மூன்று கதைகளும் அதைதான் எனக்கு உறுதிப்படுத்தின. சாதாரணம் என்பது எவ்வளவு அசாதாரணமானது எனப் புரிய வைத்தது.

அசோகமித்திரன் – தமிழ் விக்கி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...