சிறுகதை என்பது ஒரு கலை வடிவம். அதன் எளிமையும் வாசிக்க எடுத்துக்கொள்ளப்படும் நேரமும் பலரையும் அதன்பால் ஈர்க்கிறது. இச்சூழலில் மொழியால் ஆன அக்கலை வடிவத்தை முழுமையாகச் சென்றடைகிறோமா என்பது புதிய வாசகர்களிடம் எப்போதும் உள்ள பிரதானமான கேள்வி. சிறுகதை வாசிப்பு என்பது அதனுள் பூடகமாகச் சொல்லப்படும் கருத்தை உருவி எடுத்து ஒப்புவிப்பதாகவே மலேசியாவில் பழக்கமாகிவிட்ட சூழலில் அதன் கலைத்தன்மையின் நுட்பங்களை உள்வாங்கி வாசித்தல் என்பது தொடர் பயிற்சிகளால் மட்டுமே நிகழ்கிறது. ஒரு சிறுகதையில் சித்தரிக்கப்படும் வாழ்க்கையை நமது அகத்தில் கற்பனையால் விரித்தெடுத்து கதையோடு ஒன்றிச் செல்லும் சிறந்த வாசிப்பு அனுபவத்தை அடைய கூட்டு வாசிப்பு முறையும் வழிகாட்டுதல்களும் அவசியமாக உள்ளன.
புதிய வாசகர்களுக்குப் பயனளிக்கும் இந்த முயற்சியைத் தமிழாசியா முன்னெடுத்தபோது அதில் நானும் கலந்துகொண்டேன். ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இச்சிறுகதை கலந்துரையாடலில் இது வரை 9 சிறுகதைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கலந்துரையாடலும் நடைபெறுவதற்கு முன்னரே, சிறுகதைகள் புலனக்குழுவில் பகிரப்படும். கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் வாசகர்கள், கட்டாயம் ஒவ்வொரு சிறுகதைகளையும் வாசித்து வர வேண்டும்; கலந்துரையாடலில் பங்குபெற வேண்டும். அவ்வகையில் நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான புதுமைப்பித்தனின் சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடல் ஜூலை 22ஆம் திகதி நடத்தப்பட்டது. செல்லம்மாள், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், பால்வண்ணன் பிள்ளை எனும் புதுமைப்பித்தனால் புனையப்பட்ட 3 கதைகள் குறித்த பார்வைகள் இந்தக் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டன.
தமிழ் நவீன இலக்கியத்தில் கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டியவர் புதுமைப்பித்தன். சொ.விருத்தாசலம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், நவீனத் தமிழ் சிறுகதைகளைத் தொடங்கி வைத்தவர்களுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்காற்றியுள்ளார். தமிழ் உரைநடையின் அனைத்து சாத்தியமான அழகியல் வடிவங்களையும் இவரது சிறுகதைகளில் காண முடியும் என்பதால் ம. நவீன் இவர் புனைவுகளைச் செவ்வியல் தன்மை கொண்டவை என வரையறுத்தார்.
தமிழாசியா வழி ஏற்கனவே இரு கலந்துரையாடல்கள் நடைபெற்றிருந்ததால் புதுமைப்பித்தன் சிறுகதைகளில் கவனிக்க வேண்டிய வடிவம், உள்ளடக்கம், கலைத்திறன், நுண்சித்தரிப்பு, தத்துவம் போன்றவற்றைக் அடிப்படையாகக் கொண்டே என் வாசிப்பு அமைந்தது. அதுவே சிறுகதையின் மையத்தை அடையவும் உதவியது.
அன்றைய கலந்துரையாடலில் முதல் கதையாகக் கலந்துரையாடப்பட்ட கதைதான் ‘பால்வண்ணம் பிள்ளை’. வீட்டிலும் அலுவலகத்திலும் இரு வேறு பரிணாமத்தில் நடந்துகொள்கின்ற பால்வண்ணம் பிள்ளை என்பவரை மையமாகக் கொண்டு இச்சிறுகதை புனையப்பட்டிருந்தது. பால்வண்ணன் பிள்ளை அரசு அலுவலகத்தில் வேலை செய்பவர். பயமும் அதனால் உண்டாகும் பணிவும் அவரின் வாழ்க்கையின் சாரமாக அமைகின்றது. இருந்தபோதிலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற பிடிவாதக் குணம் கொண்டவராகவும் பால்வண்ணன் பிள்ளை திகழ்கின்றார். அதோடு, அலுவலகத்தில் பசுவாகவும் வீட்டில் ஹிட்லராகவும் விளங்கும் பால்வண்ணம் பிள்ளை, தனது மொத்த அதிகாரத்தையும் பலத்தையும் காட்டும் இடமாக அவரின் குடும்பம் அமைகின்றது.
அலுவலகத்தில் ஒரு நாள் பால்வண்ணன் பிள்ளைக்கும் அவரின் நண்பருக்கும் மெக்சிக்கோவின் அமைப்பிடம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. பால்வண்ணன் பிள்ளை மெக்சிக்கோ தென்னமிரிக்காவில் உள்ளது என்று சொல்ல, அவரின் நண்பர் வட அமெரிக்காவில் உள்ளது என்று சொல்ல இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. தமது விடைதான் சரி என்று நிருபிக்க, பால்வண்ணன் பிள்ளை கோபத்துடன் வீட்டில் உள்ள தனது பழைய புத்தகத்தில் சான்றைத் தேடினார். அந்தப் புத்தகத்தில் மெக்சிக்கோ வட அமெரிக்காவில்தான் உள்ளது என்பதனை அறிந்தவுடன், அச்சமயத்தில் பிள்ளைகளின் நலனுக்காகவும் பாலுக்காகச் செலவு செய்யும் தொகையைக் குறைப்பதற்காகவும் பசுவொன்று வாங்க அனுமதி கேட்கச் சென்ற தன் மனைவியிடம் பசு வாங்க அனுமதி தராமல் தனது கோபத்தைக் காட்டினார் பால்வண்ணன் பிள்ளை. இருப்பினும், பால்வண்ணன் பிள்ளையின் மனைவி பசுவை வாங்கிவிடுகிறார். குடும்பத்தின் தேவைக்காகத் தனது மனைவி தமது பேச்சை மீறி பசு வாங்கியதால், பால்வண்ணம் பிள்ளை பல வகையில் தமது ஆதங்கத்தையும் அதிருப்தியையும் காட்டுகின்றார். இறுதியில், பசுவை இரவோடு இரவாக விற்று மனத்திருப்தி அடைகின்றார்.
வாசித்தவுடனே புரிந்துகொள்ளும் வகையில்தான் இக்கதை அமைகின்றது. அதன் காரணமாகவே இக்கதையில் அதிகம் பேசப்படுவதற்கு ஒன்றுமில்லை என்ற பார்வையே முதலில் வாசகர் ஒருவரால் வழங்கப்பட்டது. பின்னர், மெல்ல மெல்ல அனைத்துப் பங்கேற்பாளர்களும் கதையில் காட்டப்பட்டுள்ள ஆணாதிக்கம், குடும்ப அரசியல், குடும்பத் தலைவனின் மனநிலை, பிடிவாதம் குறித்த பார்வைகளையே முன்வைத்தோம். பால்வண்ணம் பிள்ளையின் கதாப்பாத்திரத்தை ஆணாதிக்கத்தோடு ஒப்பிடுவதைக் காட்டிலும் பலமற்ற ஒருவர் தன்னைவிட பலத்தில் குறைந்தவர்களிடம் அதிகாராத்தைக் காட்டி திருப்தி அடையும் கதாப்பாத்திரமாகத்தான் என்னால் பார்க்க முடிகின்றது என்பதை நான் பதிவு செய்தேன்.
சில நண்பர்கள் இக்கதையை உணர்ச்சிப்பூர்வமாகவும் அனுகினர். பால்வண்ணம் பிள்ளையின் மேல் உண்டாகிய கோபத்தையும் அதிருப்தியையும் அவர்களின் பேச்சில் வெளிக்காட்டினர். ஆக மொத்தத்தில், இக்கதையைக் குறித்த அனைவரின் பார்வையும் ஒத்த நிலையில் இருந்தது. ஆணாதிக்கம், குடும்ப அரசியல் என்ற கட்டுக்குள் மட்டுமே இக்கதை அமைந்துள்ளதை அனைவரின் பார்வையிலிருந்தும் புரிந்துகொள்ள முடிந்தது.
தொடர்ந்து, புதுமைப்பித்தனின் ‘செல்லம்மாள்’ கதை குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது. புதுமைப்பித்தனின் கலந்துரையாடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கதைகளில் என்னை அதிகம் கவர்ந்த கதை ‘செல்லம்மாள்’. இக்கதை புதுமைப்பித்தனின் சிறந்த கதைகளில் ஒன்று என்றும் அது ஒவ்வொரு காலத்திலும் வேறுபட்ட வாசிப்புகளால் எவ்வாறு காலம் கடந்து நிற்கிறது என்பதையும் நவீன் விளக்கினார். இவ்வாறு ஒவ்வொரு காலத்திலும் மாறுபட்ட வாசிப்பு புரிதலைக் கொடுப்பதும் செவ்வியல் இலக்கியத்தின் பண்பு என்றார்.
இச்சிறுகதை பிரமநாயகப் பிள்ளை – செல்லம்மாள் எனும் கணவன் மனைவி இணையரை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. கதையின் தொடக்கத்திலே கதையின் முடிவு சொல்லப்பட்டிருந்தது. செல்லம்மாளின் இறப்பு, அந்த இறப்பை எந்தவொரு அதீத உணர்ச்சி ததும்பளின்றி ஏற்றுக்கொள்ளும் பிரமநாயகப் பிள்ளையின் போக்குப் போன்றவைக் கதையின் தொடக்கத்திலே வாசகனை திடுக்கிட வைப்பவை. தொடர்ந்து செல்லம்மாள், பிரமநாயகம் பிள்ளை அவர்களின் பின்புலம், செல்லம்மாள் இறக்கும் நாட்களில் நடந்த நிகழ்வுகள், பிரமநாயகத்தின் கையறு நிலை என கதை நகர்ந்தது.
கதையைத் தொடக்கத்திலிருந்து வாசிக்கும் பொழுது பிரமநாயகப் பிள்ளை – செல்லம்மாள் இருவருமே அன்பான, அந்நியோன்யமான, பொறுப்பான இணையராகவே சித்தரிக்கப்படுகின்றனர். பிரமநாயகப் பிள்ளை செய்யும் அர்ப்பணிப்பு, மனைவியின் மீது அவருக்குள்ள காதல் போன்றவைப் பிரமநாயகப் பிள்ளையின் மேல் ஒரு பாசமுள்ள கணவன் என்ற பிம்பத்தையே ஏற்படுத்தியது. அதுபோலவே இயலாத சூழலிலும் செல்லம்மாள் தன் கணவன் மேல் காட்டும் அக்கறை அவள் கொண்டுள்ள காதலைப் பிரதிபளிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு சிறுகதையில் ஒவ்வொரு வரியும் எப்படி முக்கியமாகின்றது என்பதை இக்கதையை வாசிக்கும்போது உணர்ந்தேன். அந்தச் சில வரிகளே முதல் வாசிப்பில் ஏற்படும் அத்தனை அபிப்பிராயங்களையும் மாற்றி அமைத்தது.
சிறுகதையில் ஓரிடத்தில் “அம்மா, அம்மா, ஊருக்குப் போயிடுவோம். அந்தத் துரோகி வந்தா புடிச்சுக் கட்டிப் போட்டு விடுவான்… துரோகி! துரோகி…” எனும் பிரக்ஞையற்ற நிலையில் இருக்கும் செல்லம்மாளின் புலம்பல் ஆழ் மனதில் அவள் தன் கணவன் மேல் வைத்துள்ள அபிப்பிரயாத்தின் சுவடுகள் என அறியும்போது கதையின் கோணத்தையே அது மாற்றி அமைத்தது. தொடர்ந்து //பூதாகாரமாகச் சுவரில் விழுந்த தமது சாயையைப் பார்த்தார். அதன் கைகள் செல்லம்மாள் நெஞ்சைத் தோண்டி உயிரைப் பிடுங்குவனபோல் இருந்தன// எனும் வரி பிரமநாயகம் தன் ஆளுள்ளத்தின் கொண்டுள்ள வெறுப்பின் திட்டுகளாக வெளிபட்டது. சிறுகதையில் இந்த இரு சிறிய பகுதிகள் வழி காதல், பாசம் எனக் காட்டப்படும் இணையர்கள், உண்மையில் தங்களின் ஆழ்மனதில் என்னவாக உள்ளனர் என உணர்த்துவதாய் உள்ளது.
கூடுதலாக //நெருப்புப் பெட்டியை எடுத்து அருகிலிருந்த சிமினி விளக்கை ஏற்றினார். அந்த மினுக்கட்டான் பூச்சி இருளைத் திரட்டித் திரட்டிக் காட்டியது. அதன் மங்கலான வெளிச்சம் அவரது ஆகிருதியைப் பூதாகாரமாகச் சுவரில் நடமாட வைத்தது.// போன்ற சித்தரிப்புகளைக் கொண்டு அரவினும் சல்மாவும் பிரமநாயகப் பிள்ளையின் அகத்திற்குள் இருக்கும் ‘தான்’ என்ற அகங்காரத்தைச் சுட்டிக்காட்டினர்.
இப்படி ஒரு பிடி கிடைத்தபிறகு அந்தக் கோணத்தில் இச்சிறுகதை மேலும் அலசி ஆராயப்பட்டது. செல்லாம்மாளின் மேல் ஈ ஒன்று அமர்ந்ததும் அதை விரட்ட முயன்ற பிரமநாயகப் பிள்ளையின் போக்கைக்கூட கதையின் சாரத்தோடு இணைத்து நண்பர்கள் பேசினர். அந்த ஈ அவளை எழுப்பி தன் நிம்மதியைக் கெடுத்துவிடுமோ என்ற அச்சத்தால் பிரமநாயகம் அவ்வாறு செய்திருக்கக்கூடும் என்பதாக நண்பர்கள் பகிர்ந்தனர். இவ்வாறு கதையின் போக்கில் சொல்லப்படும் குறிப்புகளைக் கொண்டு கதையின் பார்வையை முன் வைப்பதன் மூலம் இக்கதையை மேலும் தீவிரமாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு அமைந்தது.
புஷ்பவள்ளி, சண்முகா ஆகியோர் பிரமநாயகப் பிள்ளையின் அர்ப்பணிப்புக் குறித்த பார்வையை முன்வைத்தனர். வாசகர்களில் சிலர் இக்கதையை வறுமையின் வலி கொடுக்கும் உணர்வுடன் அணுகியுள்ளதையும் கலந்துரையாடலின் போது அறிய முடிந்தது.
ம.நவீன் இச்சிறுகதை நகரம் புறக்கணித்த ஒரு தம்பதியரின் கதையாகவும் இரு காதலர்களின் கதையாகவும் வெவ்வேறு காலங்களில் வாசிக்கப்பட்டதை எடுத்துரைத்து இதுதான் இறுதி வாசிப்பு எனும் நிலைக்கு வர வேண்டியதில்லை என்றார். அன்றைய வாசிப்பில் மகிழ்ச்சியற்ற நிலையில் வாழும் இரு இணையர்கள், தங்களின் ஆழ்மனதில் தங்கள் இணையறைப் பற்றி கொண்டுள்ள பிம்பத்தைத்தான் செல்லம்மாள் கதை சுட்டியுள்ளதாகப் புரிந்துகொண்டாலும் இன்னும் கூட சிறந்த வாசிப்பை நிகழ்த்தக்கூடிய சிறுகதையாகச் செல்லம்மாள் அமையும் என்றார்.
துக்கம் மிகுந்த இணையரைப் பற்றிய ஒரு சிறுகதை எங்கள் கண்முன்னால் மெல்ல மெல்ல அவர்களின் உளவியலைப் பேசும் வேறொரு சிறுகதையாக உருவாகி வளர்வதை ஆச்சரியத்துடன் கவனிக்க முடிந்தது.
அன்றைய சந்திப்பில் இறுதி சிறுகதை ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ ஆகும். ஒரு சிறுகதை கொடுக்கும் தாக்கம் வெவ்வேறு காலங்களில் அதன் தீவிரம் குறையாமல் தொடர்வதும் செவ்வியல் இலக்கியத்தின் தன்மை என இக்கதையை மையமாகக் கொண்டு ம.நவீன் கூறினார்.
கந்தசாமிப் பிள்ளை என்பவர் முன் கடவுள் மனிதரைப் போல் தோன்றி பூலோகத்தில் பயணிப்பதை மையமாகக் கொண்டு கதை எழுதப்பட்டிருந்தது. கடவுளைப் பார்த்தவுடன் கந்தசாமிப் பிள்ளை வரம் ஏதும் கேட்காமல், தம்முடன் இணைந்து பயணிக்க வேண்டுமென்றால் மனிதரைப் போல் நடந்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை மட்டுமே முன் வைக்கிறார். அந்த நிபந்தனையை ஏற்கின்றார் கடவுள். ஆனால், அந்த நிபந்தனையைக் கடவுள் பின்பற்றுகிறாரா, கடவுளால் பூலோகத்தில் வாழ முடிகின்றதா என்பதனைக் காட்டும் வகையில் இக்கதை புனையப்பட்டுள்ளது.
அங்கதம் மிகுந்த இக்கதையைக் குறித்துப் பல பார்வைகள் முன் வைக்கப்பட்டன. கந்தசாமிப் பிள்ளை, கடவுள் என்ற கதாப்பாத்திரங்களின் மூலம் மனிதர்களிடையே நிழவும் போலித்தம், ஏமாற்றம், சுத்தமின்மை, நிற பேதமை போன்ற கூறுகள் இக்கதையில் கூறப்பட்டுள்ளது. அதோடு, கதையில் மறைமுகமாகக் கூறப்படும் புராணச் சித்தரிப்புகளைக் குறித்த அங்கதமும் கலந்துரையாடலின் போது கலந்துரையாடப்பட்டது. கந்தசாமி பிள்ளையின் மகளைப் பற்றி கடவுள் கேட்டவுடன் கந்தசாமி பிள்ளை பதில் கூற தயங்குவார். அதற்கு, கடவுள் உடனே //சும்மா சொல்லும்; இப்பொவெல்லாம் நான் சுத்த சைவன்// என்று கூறுவார். இந்த வரி புராணக்கதைகளில் கூறப்படும் பிள்ளைக்கறி கதையை வாசகர்களுக்கு நினைவூட்டுகின்றது. அதனை அங்கதமாகக் கையாண்டுள்ளார் புதுமைப்பித்தன்.
கடவுள் பூலோகத்தில் மெய்யான தொடர்பை உணர்வது கந்தசாமிப் பிள்ளையின் மகளிடம் மட்டும்தான் என்பதனையும் வாசகர்கள் கூறினர். அனைவரின் பார்வையும் ஒத்த நிலையில் இருந்தாலும் ‘கடவுளாக இருந்தாலும் சூழலோடு பொருந்தி வாழ வேண்டும், அவ்வாறு வாழ முடியவில்லை என்றால் கடவுளுக்கே இடமில்லை’ எனச் சுந்தரி சுருக்கமாகக் கூறியது கதையின் மையத்தை விளக்குவதாக இருந்தது. கலந்துகொண்ட வாசக நண்பர்கள் பலரும் சுந்தரி கருத்தோடு ஒத்துப்போனாலும் அதை விரிவாகப் பேசுவதில் சிக்கல் இருப்பதை ஒப்புக் கொண்டனர்.
ம.நவீன், நவீன காலக்கட்டம் என்பதை என்னவென்று வரலாற்று ரீதியாக விளக்கி, அங்கிருந்து மரபான மன அமைப்பும் நவீன மனிதனின் மன அமைப்பும் எவ்வாறு மாறுபட்டு இயங்குகிறது எனத் தெளிவுபடுத்தினார். கடவுள் எனும் மரபிலிருந்து தோன்றிய கருத்தாக்கம் நவீன மனிதனின் வாழ்வுக்குள் எவ்வாறு பொருள்படுகிறது என்றும் இரு வெவ்வேறு காலத்துக்கும் இடையிலான முரண் எவ்வாறு அபத்த நகைச்சுவையாக (black comedy) வெளிபடுகிறது எனவும் விளக்கினார். இந்தப் புரிதலுடன் இச்சிறுகதையை வாசிக்கும்போது அதன் ஒவ்வொரு வரியும் எவ்வாறு புதிய ஒளி கொடுக்கிறது என்பதையும் அறிய முடிந்தது.
மேலும், புதுமைப்பித்தனின் முதன்மையான சிறுகதைகளோடு ஒப்பிடுகையில் பால்வண்ணம் பிள்ளை சாதாரண சிறுகதைதான் என்றும் அதை சாதாரண சிறுகதை என அறிய இதுபோன்ற பலதரபட்ட வாசிப்பு அவசியம் என்றார். பால்வண்ணம் பிள்ளை எவ்வாறு ஒரு இடத்தில் கருத்தாகத் தேங்கி விடுகின்றன என்றும் மற்ற இரு சிறுகதைகளும் எப்படி வளர்ந்துகொண்டே செல்கின்றன எனவும் இந்த மாறுபட்ட கதை வாசிப்பால் உணர முடிந்தது.
தமிழாசியா சந்திப்பு ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமை இரண்டு மணி நேரம் மட்டுமே நடைபெறுகிறது. எனவே இந்த இரண்டு மணி நேரத்தில் மூன்று சிறுகதைகளைப் பற்றி விரிவாகப் பேசி உணர முடிந்ததில் அனைவருக்கும் மனநிறைவு.
புதுமைப்பித்தனின் 3 கதைகளைக் குறித்து நடத்தப்பட்ட இக்கலந்துரையாடல் வாசகர்களின் மத்தியில் கதையின் புரிதலை மேலோங்கச் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஒருவர் கவனிக்க தவறுகின்ற இடத்தைக் கண்டறிந்து அது குறித்த கலந்துரையாடலை மேற்கொள்ளும் பொழுது, கதையை அடுத்த முறை சரியாக அணுக வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது.
பு, பி னின் செல்லம்மாள் கதை கணவன் மனைவியின் தூய காதலைச் சொல்கிறது என்றுதான் பல இணைய தளங்களில் வாசித்திருக்கிறேன், ஜெ மோ தளத்தில் அந்தப் பார்வை உடைத்தெறியப்பட்டிருக்கிறது. தமிழாசியா கலந்துரையாடலில் இக்கதையின் சில நுட்பங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அவர்களுக்கிடையே உள்ளது காதல் அல்ல.அவர்களின் உள்ளக்கிடக்கையில் பிரிவெண்ணம் உள்ளது என்பதை பங்கேற்பாளர்களின் உரையாடல் வழி நிரூபித்துக் காட்டுகிறது. சாலினியின் கட்டுரை எளிமையாகவும் ஆழமாகவும் உள்ளது.