‘தமிழாசியா’ மாதம் ஓர் எழுத்தாளரை அறிமுகம் செய்துவைக்கும் வண்ணம் தொடர்ச்சியாகச் சிறுகதைக் கலந்துரையாடல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெவ்வேறு நிலையிலான இலக்கிய வாசிப்புப் பயிற்சி கொண்ட எட்டுப் பேர் பங்குகொண்டு வருகிறோம். ஆகஸ்ட் 19ஆம் திகதி நான்காவது சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், இருவர் கண்ட ஒரே கனவு மற்றும் காற்று ஆகிய நான்கு சிறுகதைகள் முன்னமே வழங்கப்பட்டு வாசிப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டன. சந்திப்பின்போது, ஒவ்வொரு சிறுகதையை ஒட்டியும் தத்தம் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கலந்துரையாடினோம்.
எழுத்தாளர் கு. அழகிரிசாமி குறித்த அறிமுகத்தை ம. நவீன் செய்துவைத்தார். மலேசியாவில் நவீனத்தமிழ் இலக்கியம் வேரூன்றுவதற்கு கு. அழகிரிசாமி ஆற்றிய பணியைக் குறிப்பிட்டார்.
1950 களில் தமிழ்நேசன் இதழில் ஆசிரியர் பொறுப்பேற்ற கு. அழகிரிசாமி மலேசிய எழுத்தளர்களின் சிறுகதைகளை அதிகம் ஞாயிறு பதிப்புகளில் வெளியிட்டார். எழுத்தாளர்கள் அனுப்பும் கதைகளின் பலம், பலகீனம் பற்றிய குறிப்புகளை எழுத்தாளர்களுக்கு அனுப்புவதோடு, அக்கதைகளை மேம்படுத்தி பத்திரிகையில் வெளியிட்டார். இது எழுத்தாளர்களுக்கு வழிகாட்டுதலாகவும் ஊக்கமூட்டுவதாகவும் அமைந்தது. சுதந்திர தின சிறப்பு மலரில் பல புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு வழங்கினார். மேலும் தமிழ் நேசன் பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிய கடைசி ஆண்டில் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி இலக்கிய கலந்துரையாடல்களை மாதந்தோறும் நடத்தினார். சுமார் முப்பது பேர் கலந்துகொண்ட அந்தக் சந்திப்புகள் பத்து முறை மட்டுமே நடத்தப்பட்டதாக ஆய்வாளர் பாலபாஸ்கரன் குறிப்பிடுகின்றார். இலக்கிய வட்டம் சந்திப்பில் உலக இலக்கியங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, அலையென இருபதாண்டுகளுக்கு ஒரு முறை மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தனிநபர்களும் இயக்கங்களும் ஆற்றிய பங்கைக் குறிப்பிட்டார் நவீன். அந்த அலையின் தொடர்ச்சியாகக் கூட தமிழாசியா ஏற்பாடு செய்துவரும் சிறுகதைக் கலந்துரையாடல் நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.
சக்தி இதழ் மூலம் தமிழ்ச் சிறுகதையில் தடம் பதித்த அவரைப் புதுமைப்பித்தனுக்குப் பிறகு கவனம் செலுத்தி வாசிக்க வேண்டிய முக்கிய எழுத்தாளராகக் குறிப்பிட்டார். நாவல், சிறுவர் சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு எனப் பல துறைகளில் இயங்கினாலும் கு. அழகிரிசாமியின் ஆளுமை சிறுகதையில் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் எல்லா சிறுகதைகளின் தரத்தையும் அளக்க ஒரே விதமான அளவுகோள்கள் இல்லை எனச் சொன்னவர் கு. அழகிரிசாமியை வாசிக்கும் முறை முற்றிலும் வித்தியாசமானது என்றார். புதுமைப்பித்தன் கதைகளை வாசித்துத் தருக்கத்தின் வாயிலாக விரித்தெடுத்துக் கொள்ளும் வாசிப்பு முறையிலிருந்து கு. அழகிரிசாமியின் கதைகளின் போக்கு வேறுபட்டிருப்பதைக் குறிப்பிட்டார். கதைசொல்லியாகவே அறியப்படும் கு. அழகிரிசாமியின் கதைகளை வாசித்து விரித்தெடுக்கக் கற்பனையே முக்கியமென்பதையும் குறிப்பிட்டார்.
ம.நவீனின் அறிமுக உரைக்குப் பின்னர் எங்கள் உரையாடல் ‘அன்பளிப்பு’ சிறுகதை குறித்துச் சென்றது. இக்கதை மையக்கதைமாந்தரின் பார்வையில் கூறப்படுகிறது. அவர் ஒரு பத்திரிகையில் வேலை செய்கிறார். தன் வசிப்பிடத்தருகில் வாழும் சுந்தரராஜன், சித்திரா, பிருந்தா மற்றும் சாரங்கன் இன்னும் பிற சிறுவர்களுடன் நட்பு கொண்டுள்ளார். மற்ற சிறுவர்களின் நட்பு கிடைக்கும் முன்னர் அவருக்குச் சுந்தரராஜன், சித்திராவுமே அறிமுகம். எனவே அவர்களுடன் கூடுதல் நெருக்கமாக உள்ளார். பத்திரிகை அலுவலகத்தில் இருந்து அவர் கொண்டு வரும் புத்தகங்களைச் சுந்தரராஜன் மற்றும் சித்திராவுக்கு முதலில் அன்பளிப்பாகக் கொடுப்பார். அவர்கள் படித்த பின் மற்ற இருவரிடமும் பகிர்கிறார்கள். இப்படிச் செல்லும் குழந்தைகளுடனான உறவில் கதைச்சொல்லிக்கும் சாரங்கனுக்கும் ஏற்படும் பிணக்கமும் பின்னர் கதைச்சொல்லி சாரங்கன் வழி குழந்தைகளின் மனதை அறிவதுமாகக் கதை முடிகிறது.
இக்கதையை ஒட்டி ஒவ்வொருவரும் தங்களின் பார்வையை முன் வைத்தனர். இக்கதையில் இடம் பெற்ற பிள்ளைகள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுவதையும் அன்பை மையமாகக் கொண்டிருப்பதையும் பெரும்பாலோர் தங்கள் எண்ணமாக வெளிபடுத்தினர். கதைச்சொல்லி ஒருமுறை சுந்தரராஜன் மற்றும் சித்திராவுக்கு வழங்கிய டைரியைப் போல சாரங்கன் வாங்கி அவரிடம் கையொப்பம் பெறும் உச்சமான காட்சியைப் பற்றி பல்வேறு வியாக்கியானங்கள் கூறப்பட்டன. கதைச்சொல்லி தான் செய்த தவற்றை உணர்ந்த தருணம் என இளம்பூரணனும் தவறு செய்த கதைச்சொல்லியைத் சாரங்கன் தன் செயலின் வழி தண்டித்ததாகச் சுலோச்சனாவும் அன்புக்கு ஏங்கும் குழந்தையின் மனம் எத்தனை எளிமையானது என்பதை சண்முகாவும் பகிர்ந்தனர். குழந்தைகளின் அன்பு உண்மையானதாகவும் பத்திரிகையாளரின் அன்பு பாகுபாட்டினைக் கொண்டதாகவும் இக்கதையில் உணர இயன்றது என்று சுதாகார் கூறினார். அன்பு குறித்தும் சிறுவர்களுடன் பழகுவது குறித்தும் தனித்த பார்வை கொண்ட கதைசொல்லி, கதையின் முடிவிலே சாரங்கன் புறக்கணிக்கப்பட்டிருப்பதை உணர்கிறான் என்று அரவின் குறிப்பிட்டார். அத்துடன், தனக்கு மறுக்கப்படுகின்ற அன்பைத் தானே உருவாக்கிப் பெற்றுக் கொள்வதாகக் கதையின் இறுதி அமைந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
அனைத்துக் கருத்துகளையும் செவிமடுத்த நவீன் இக்கதையை இன்னொரு கோணத்தில் வாசிப்பது பற்றி தன் அபிப்பிராயத்தைக் கூறினார். இக்கதையில் யாரும் எதிர்மறைக் கதாபாத்திரம் இல்லை. அந்த எண்ணத்தை நீக்கிவிட்டு இக்கதையை வாசிக்கும்படி கூறினார். இக்கதையின் கதாமாந்தர்கள் அவரவரின் நிலைக்கு ஏற்ப நியாயமாகவே நடந்துள்ளனர். கதைச்சொல்லி, சாரங்கனின் வீட்டுக்குச் செல்ல முடியாததும் குறிப்பிட்ட இரண்டு குழந்தைகளிடம் நெருக்கமாக இருப்பதும் இயல்பானதே, அது பாகுபாடு காட்டுவது ஆகாது என்றவர், குழந்தைகள் தாங்கள் விரும்பிய ஒன்று கிடைக்காதபோது அதை கற்பனையால் எப்படி வேறொன்றாக நிகழ்த்துகிறார்கள் என்பதாக இக்கதையைப் புரிந்துகொண்டால் வேறு வகையான வாசிப்பைக் கதை வழங்கும் என்றார். சாரங்கன் கதைச்சொல்லியை நெருங்கி செல்ல முயல்கிறான். ஆனால், அதற்கான பிடி அவனுக்குக் கிடைக்கவில்லை. எனவே, அவர் அதிகம் வாசிக்கும் கவிதை நூலைக் கேட்கிறான். அதற்குக் காரணம் அக்கவிதைகளை வாசிக்க அல்ல; அவர் தன் மீது வைத்துள்ள அன்பை உறுதிப்படுத்த. அது கிடைக்காதபோது அவன் அழுவதும் அந்த நூலுக்காக அல்ல. ஆனால், கதைச்சொல்லி அதை நூலுக்கான அழுகை என்றே நினைக்கிறார். அவன் செயல்களைப் பொருட்களோடு தொடர்புப்படுத்துகிறார். இறுதியாகச் சாரங்கன் ஒரு டைரியைக் கொடுத்து மற்ற இரு பிள்ளைகளுக்கு எழுதுவது போல ‘என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு’ என எழுதச் சொல்லும்போது அவன் அவரிடம் விரும்பியது பரிசுகளை அல்ல அவர் பிரியத்தை மட்டுமே என உணர்கிறார். பெரியவர்கள் அன்பைப் பொருட்களாக மாற்றுவதையும் சிறுவர்கள் பொருளில் இருந்து அன்பை மட்டும் பிரித்தெடுத்துக்கொள்வதையும் இக்கதை காட்டுவதாக நவீன் கூறினார். திடப்பொருளாக இல்லாத அந்த அன்பைத் தங்கள் சிந்தனைக்கு ஏற்ப உருமாற்றி பகிர்வதைப் பெரியவர்கள் புரிந்துகொள்ள தவறும் இடத்தை இக்கதை சுட்டுவதாக நவீன் தெளிவுபடுத்தினார். அத்துடன், தான் புறக்கணிக்கப்படுகிறோம் என்று அறியும் சாரங்கன் கதைசொல்லியிடம் மிக வலிந்து வீட்டுக்கு வரச்செய்தும் டைரியில் பெயரை எழுதித்தருமாறு கேட்டும் வலுக்கட்டாயமாக அன்பைப் பெற்றுக் கொள்வதை குறிப்பிட்டது நெகிழ்ச்சியாக இருந்தது.
தொடர்ந்து, ‘ராஜா வந்திருக்கிறார்’ எனும் சிறுகதை ஒட்டி விவாதிக்கப்பட்டது. இக்கதை இரு வேறுப்பட்ட பொருளாதாரப் பின்னணி கொண்ட குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கின்றது. ராமசாமி பணக்கார குடும்பத்தில் பிறந்தவன். ஆனால், செல்லையா, தம்பையா மற்றும் அவர்களது தங்கையான மங்கம்மாள் மூவரும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்கள். ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் எப்போதும் போட்டி நிலவிக் கொண்டிருக்கும். அந்தப் போட்டி சுவாரசியமானது. உதாரணமாக, ஒருவர் வீட்டில் உள்ள பொருளைக் கூறிய பிறகு இன்னொருவர் தன் வீட்டில் அது போல வேறு என்ன உள்ளது என்று கூற வேண்டும். இப்படி ராமசாமி எதாவது சொல்ல செல்லையா மற்றும் அவன் சகோதர சகோதரிகள் இணைந்து அவனை வாதிட்டுத் தோற்கடிக்கின்றனர். இப்படிப் போகும் கதையில் ராமசாமியின் அக்காவைத் திருமணம் செய்து கொண்ட நிஜமான ராஜாவின் (ஜமீந்தார்) வருகை ராமசாமியின் வீட்டில் நிகழ, அம்மாவை இழந்த பரிதாபமான ராஜா எனும் சிறுவனின் வருகை செல்லையாவின் வீட்டில் நிகழ்கிறது.
தங்கள் வீட்டுக்கும் ஒரு ராஜா வந்துள்ளதால் தாங்கள் வெற்றியடைந்ததாகவும் அந்த வெற்றியையே ‘எங்கள் வீட்டுக்கும் ராஜா வந்திருக்கிறார்’ எனக் குழந்தைகள் சொல்வதாகவும் நான் புரிந்து கொண்டேன். கதையில் வரும் ராஜா எனும் சிறுவனுக்காக வறுமையில் வாடும் செல்லையாவின் அம்மா கொடுக்கும் சலுகைகள் அந்தச் சிறுவர்களின் பார்வையில் அவனை ராஜாவாக மாற்றுகிறது என்றார் சுதாகர். பெயரால் ராஜாவாக இருந்த சிறுவன் தனக்கென ஒரு சாம்ராஜியத்தை எளியவர்களின் அன்பினால் அமைத்துக் கொண்டு செல்லையா வீட்டில் ராஜாவாக வாழ்கிறான் என்பதை ரேவின் பகிர்ந்தார். அலங்கோலமான தோற்றத்தில் வீட்டுக்கு வரும் ராஜாவைப் பார்த்து அண்ணன்களின் அசூயையான பார்வையையே மங்கம்மாளும் கொண்டிருக்கிறாள். ஆனால், அவளின் தாயின் பரிவான நடத்தைகளும் சொற்களும் அவளின் எண்ணத்தை மெல்ல மாற்றுவதையும் கதையின் இறுதியில் அவனை ஏற்றுக் கொள்ளும் உளவிரிவாக மாறுவதையும் அரவின் குறிப்பிட்டார். அவ்வுணர்வு குழந்தைகளுக்கே உரிய உணர்வு என்றும் அரவின் குறிப்பிட்டார்.
இறுதியாக ம. நவீன் தன் தரப்பை முன்வைத்தார். நாம் பெரியவர்கள் மீது வைத்துள்ள மதிப்பீடுகளைக் குழந்தைகளின் மீது வைக்கும் போதே நம் வாசிப்பு தோல்வி அடைகிறது என்றார். இக்கதையை வாசிக்கும்போது வாசகன் தன்னை ஒரு குழந்தையாக உணர்ந்தால் மட்டுமே இக்குழந்தைகளின் மனநிலையும் நமக்குள் துலங்கிவரும் என்றார். மேலும், குழந்தைகளின் சமூகப்பின்னணியின் ஏற்றத்தாழ்வை ஒட்டி கதையை அணுகும்போது கதையின் விஸ்திரணம் சுருங்குவதையும் சுட்டினார்.
மேலும், ராமசாமியிடம் ஓரிடத்தில் கூட பணக்காரன் என்ற பெருமை எழாததைச் சுட்டிக்காட்டியவர் அதை வாசிக்கும் வாசகன்தான் ஒரு பணக்காரச் சிறுவன் என்றவுடன் அவன் மேல் அகந்தையையும் வன்மத்தையும் திணிக்கிறோம் என்றார். அவன் மீதான சமூகப்பின்னணியை விலக்கிப் பார்த்தால் மற்றவர்களைப் போல அவனும் களங்கமில்லாச் சிறுவனே. அப்படி அவனை ஒரு சிறுவனாகக் கருதி வாசிக்கும்போது இக்கதை கொடுக்கும் தரிசனம் புரியும்” என்றார் நவீன்.
எல்லா அடையாளங்களையும் நீக்கிவிட்டு வாசித்தபோது சிறுகதையின் இறுதியில் மங்கம்மாள் ராமசாமியிடம் “எங்கள் வீட்டுக்கும் ராஜா வந்திருக்கிறார்” எனச் சொல்வதன் பொருள் வேறொன்றாக இருந்தது. எப்படிப் பசுக்களையும் கோழிகளையும் ஒப்பிடுவதை ராமசாமி ஒப்புக்கொண்டானோ, எப்படி சில்க் துணியையும் கிழிந்து போன கார்ட்டன் துணியென இரு பொருத்தமில்லா ஒப்பீட்டை ஏற்றானோ அதேபோல அவன் வீட்டுக்கு வந்திருக்கும் ஜமீந்தாரின் மகன் ராஜாவும் மங்கம்மாள் வீட்டுக்கு வந்த சிரங்கு பிடித்த சிறுவன் ராஜாவும் ஒன்றென்றே எண்ணியிருக்கக்கூடும். குழந்தைகளின் கள்ளமின்மை உலகத்தை எந்தப் பேதங்களுமற்று விசாலப்படுத்துகிறது எனும் பார்வை துலங்கி வருவதை அறிய முடிந்தது.
கு. அழகிரிசாமியின் மூன்றாவது கதையாக ‘இருவர் கண்ட ஒரே கனவு’ விவாதிக்கப்பட்டது. ஒரு தாயின் இறப்பும் இரு குழந்தைகளின் பரிதாபமான நிலையும் ஒவ்வொருவராலும் விவரிக்கப்பட்டது. குழந்தைகள் வளரும் ஏழ்மைச் சூழலை கு. அழகிரிசாமி விளக்கிச் சொல்லும் விதம் பலராலும் சிலாகிக்கப்பட்டது. உடுத்த உடை இன்றி வேலைக்குச் செல்ல இயலாமல் குளிர்க் காய்ச்சலால் உண்ண உணவு இல்லாமல் வறுமையில் வாழும் தாய் மற்றும் இரு பிள்ளைகளின் கொடுமையான நிலையை ஒவ்வொருவரும் தங்கள் நினைவில் இருந்து திரட்டிக் கூறினர். இக்கதையையொட்டி நண்பர்கள் வாழ்வின் இறுக்கமான தருணங்களையும் வறுமையின் தாக்கத்தையும் எடுத்துரைத்தனர். குறிப்பாக அனைவரையும் பதற வைத்த தாயின் மரணத்தைக் கு. அழகிரிசாமி மிக எளிமையாகக் கையாண்ட விதத்தைக் குறிப்பிட்டுப் பேசினர்.
இந்தக் கதை குறித்த கலந்துரையாடலில் கதைக்குத் தேவையில்லாதவற்றைப் புகுத்தி பார்ப்பதைத் தவிர்த்துக்கொள்வது நல்லது என்பதை நான் அறிந்து கொண்டேன். அம்மாவை இழந்த இரு சிறுவர்கள் காணும் கனவில் தங்கள் மேல் போர்த்தப்பட்ட வெள்ளை வேட்டி இறுதி சடங்கில் அம்மாவின் மேல் போர்த்தப்பட்ட வெண்புடவையாக வருவதும் அந்த வெண்புடவையைத் தங்கள் மேல் போர்த்திவிட்டு அம்மா நிர்வாணமாக இருளில் மறைவதும் ஏன் எனும் குழப்பம் சிறுகதையை வாசித்த நண்பர்கள் சிலருக்கு இருந்தது. பெரும் அன்பின் வழி கிடைக்கும் எதுவும் தங்கள் தாயின் வழியாகவே கிடைப்பதாக நம்பும் இரண்டு குழந்தைகளின் மன இயக்கம் குறித்து உரையாடல் நிகழ்ந்தபோது சிறுகதையை ஓர் அனுபவமாக எப்படி மாற்றுவது என்பதைக் கொஞ்சம் உணர்ந்துகொள்ள தொடங்கினேன். அந்த அனுபவத்தை நமக்குள் உருவாக்கி நாம் அடையும் மனநிலையே தரிசனம் எனப் புரிந்தது. அதற்கு மனதில் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ள சிறுகதை குறித்த கட்டுமானங்களை அகற்றி கு. அழகிரிசாமியின் கதைகளை எவ்வித முன் அனுமானமுமின்றி அணுக வேண்டும் என்பதும் புரிந்தது.
இறுதியாக ‘காற்று’ சிறுகதை விவாதிக்கப்பட்டது. ஐந்து வயது கற்பகம் எனும் சிறுமி சென்னை நகரத்தில் ஒண்டுகுடித்தன வாழ்வில் விளையாட இடமின்றித் தவிப்பதை மையமாகக் கொண்ட கதை. கதையில் கற்பகத்தின் வசிப்பிடம் குறுகிய இறுக்கமான சூழலைக் கொண்டதாக உள்ளது. மாற்றான் வீட்டு திண்ணையில் விளையாடி அடிவாங்குகிறாள். அவளின் சூழலைச் சிந்தித்து அவள் அப்பா பள்ளிக்கு அனுப்புகிறார். ஒரு நெருக்கமான சூழலில் இருந்து விடுபட்டுப் பள்ளிக்கும் செல்லும் தருணத்தில் அவளின் ஏக்கங்கள் நிறைவேறும் இடமாகப் பள்ளி வளாகம் அமைகிறது. அவ்வேளையில் அவள் உலகத்தில் எல்லையற்ற இன்பத்தில் திளைக்கிறாள். அவளுக்கு ஏற்ற இடம் அமைந்தாலும் ஆசை நீடிக்கிறது. இந்த ஆசையால் ஓர் அபத்த நிலையில் தன் உயிரையும் பறிக்கொடுக்கிறாள்.
இக்கதையில் அச்சிறுமியின் இறப்பு ஓர் அர்த்தமற்ற சுதந்திரமாகவே எனக்குத் தோன்றியது. பெரும்பாலும் அனைவரும் இக்கதையை ஒட்டி ஒரே விதமான கருத்தையே பகிர்ந்தனர். ஒரு சிறுமிக்கு வெளி தேவை எனும் ஒற்றை வரியே எப்படி அதை ஓர் உலக இலக்கியத்திற்கான கச்சா பொருளாக மாற்றுகிறது என விவாதிக்கப்பட்டது. இப்படி ஒரு வரி தமிழகக் கதைகளில் மட்டுமே உருவாக முடியும். ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ எழ இயலாது. அப்படி எங்குமே தொடங்க முடியாத ஒரு கதையின் சாயலை கு. அழகிரிசாமி கதைகளில் காண முடிவதே அவரைத் தனித்த எழுத்தாளனாகக் காட்டுகிறது. ஒரு புனைவு தனித்துவமாக இருக்க அது அந்நிலத்தில் இருந்து எழுந்துவர வேண்டிய தேவை உள்ளது என உரையாடப்பட்டது.
கு. அழகிரிசாமியின் நான்கு கதைகளைப் பற்றிய பல தரபட்ட பார்வையைக் கலந்துரையாடலின் வழி காண இயன்றது. நண்பர்கள் தங்களின் கருத்துகளைத் தொகுத்துக் கூறும்போதும் கதையில் புரிதலையும் அதை பல்வேறு நிலைகளில் அணுகலாம் என்பதையும் தெரிந்து கொண்டேன். கதைக்குள் ஒளிந்திருக்கும் தரிசனத்தை மீட்டிப்பார்க்க இலக்கியம் குறித்து முன்னரே உருவாகியிருக்கும் பார்வையை ரத்து செய்து நிதானமாகக் கதையை வாசித்துக் கற்பனையால் விரித்துக் கொள்ள வேண்டுமென்பதையும் உணர்ந்தேன்.