‘கரிப்புத் துளிகள்’ நாவலில் ஒரு பகுதி

(மிக விரைவில் வெளியீடு காணப்போகும் எழுத்தாளர் அ. பாண்டியன் எழுதிய கரிப்புத் துளிகள் நாவலின் ஒரு பகுதி)

ஐயாவுவிடம் மறுபடியும் மறுபடியும் தேவதைகள் பற்றிக் கேட்பது சிறு பிள்ளைபோல இருக்கும் என்று தயங்கினான். ஆனாலும் மோதிச் சிதறும் அலையோசையும், நிலவொளி படிந்த கடற்கரையும், பெரு நிலவும், எங்கிருந்தோ கரையேறி வந்துகொண்டிருக்கும் கடலாமைகளும் அவனுக்கு மயக்கத்தைக் கொடுத்தன. மாய உலகத்தில் நிற்பது போன்ற பிரமையில் தடுமாறினான். அந்த இடம் உலகத்திற்கு அப்பால் எங்கோ இருக்கும் மாயநிலம்போல இருந்தது.

அலைகளின் பெரும் ஓசைக்குள் ஊடுருவி வரும் விநோதச் சத்தம் அவன் கவனத்தைக் கலைத்தது. பாறைக்கு அருகில் இருந்து வெளிப்படும் உடுக்கைச் சத்தம் போன்ற அந்த சத்தம் இருவருக்கும் தெளிவாகக் கேட்டது. பக்கி பறவையின் மாலை நேர சத்தத்தைப்போல ஒரே சீராக அந்த சத்தம் வந்துகொண்டிருந்தது. ஐயாவு வேக வேகமாக அங்கு ஓடினான்.

பெரிய பாறையின் பக்கத்தில் பல சிறு பாறைகள் காளான்போல முளைத்திருந்தன. தட்டையான ஒரு பாறையின் மேல் டானு அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் துரைசாமி திடுக்கிட்டான். அவன் கைலியும் வெள்ளை பனியனும் அணிந்திருந்தான். தலையில் அதே சிவப்பு நிறத் துண்டை முண்டாசாகக் கட்டியிருந்தான். இடுப்பில் கிரீஸை செருகியிருப்பது தெளிவாகத் தெரிந்தது. தடித்த மூங்கில் ஒன்றைத் தோளோடு சாய்த்துக்கொண்டு அவன் அமர்ந்திருந்தான். அவன் கைகளில் இருந்த இரண்டு சிறு கழிகளால் அந்த மூங்கிலை தட்டி விநோத ஓசையை உருவாக்கிக்கொண்டிருந்தான். மூங்கிலின் மேல் சிறியதும் பெரியதுமாக இருந்த துவாரங்கள் அபூர்வமான ஓசைகளை சிருஷ்டித்துக்கொண்டிருந்தன. டுங் டுடுக் …டுங்…டுடுக் டுங் டுடுக்… என்று தாளம் அடுக்கடுக்காக வந்துகொண்டிருந்தது. கழிகளை மூங்கிலின் மேல் உராயவிடும்போது காட்டு விலங்கொன்று உறுமுவதுபோலவும் பறவைகள் கூட்டமாக கிரிச்சிடுவதுபோலவும் வினோத ஓசைகள் எழுந்தன. அதுபோன்ற ஓர் இசைக்கருவியை துரைசாமி அப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கிறான். டானுவுக்கு பக்கத்தில் சட்டையில்லாத கிழவன் ஒருவன் கடலைக் கூர்ந்து பார்த்தபடி புகையிலைத் தாளைப் புகைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

துரைசாமி, டானுவை அங்கு எதிர்பார்க்கவே இல்லை. அந்த அச்சமூட்டும் சூழலில் அவன் அங்கு அமர்ந்திருந்த விதம் துரைசாமிக்கு மேலும் அச்சம் கொடுத்தது. அவன் ஐயாவுவிடம் ஏதோ கேட்க நினைத்தான். ஆனால் ஐயாவு, துரைசாமி அங்கு இருப்பதையே மறந்தவன்போல இருந்தான்.

ஐயாவு மெல்ல அவர்கள் அமர்ந்திருந்த பாறைக்கு அருகில் போய் நின்றான். துரைசாமியும் திகிலுடன் ஐயாவு பின்னால் போனான். கடல் நீர் முட்டிவரை நனைத்துக்கொண்டு சென்றது. கால் மணலில் புதைந்து மீண்டது. டானு ஐயாவுவைப் பார்த்து மெல்ல புன்னகைத்தான். ஐயாவு பதிலுக்கு சிரித்ததில் இருந்து ஐயாவுவின் வருகையை அவன் எதிர்பார்த்திருந்தான் என்பதை துரைசாமி புரிந்துகொண்டான். டானுவின் பக்கத்தில் அமர்ந்திருந்த கிழவன் தன் பஞ்சடைந்த கண்களால் இருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு எந்த உணர்ச்சியும் இல்லாமல் கடலை நோக்கி முகத்தைத் திருப்பினான். அவன் வாயில் புகைந்துகொண்டிருந்த ரோக்குதாள் அந்த மங்கிய இருட்டில் திடீரென செக்கச் சிவந்து அடங்கியது.

சிறு பாறை ஒன்றின் மேல் ஐயாவு அமர்ந்துகொண்டான். துரைசாமி அங்கு இருப்பதையே அவன் மறந்ததுபோல கடலையும் டானுவையும் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களில் எப்போதும் இல்லாத பளபளப்பு துரைசாமியை ஆச்சரியப்படுத்தியது. அவன் அமைதியாக ஒரு சிறுபாறையில் அமர்ந்தான். கல்லில் மோதிய அலைகள் அவன் உடலை ஈரமாக்கின. தூரத்தில் மேடு மேடாக கடலாமைகள் நகர்ந்துகொண்டிருப்பது நிழல்போல தெரிந்தது.

டானு மெதுவாக ஏதோ சொன்னான்.

ஐயாவு சட்டென கடலைத் தொட்டு வணங்கினான். கடல்நீரில் முகத்தைக் கழுவிக்கொண்டு கண்களை மூடி நின்றான். துரைசாமியிடம் திரும்பி… “அண்ணே கடலை வணங்கிக்கங்க… தேவத நம்ம பார்த்துக்கிட்டுதான் இருக்கும்,” என்றான்.

துரைசாமிக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது… ஏதோ ஒன்று இருளில் தம்மை பார்த்துக்கொண்டிருப்பதாக உணர்வு எழுந்து உடல் சிலிர்த்தது. சட்டென கடல் நீரை தொட்டு வணங்கினான். தனக்கு ஏதும் ஆபத்து நேரக்கூடாது என ஜாலான் பாரு முனியாண்டியை வேண்டிக்கொண்டான். பெரிய அலைகள் சடேலென பாறைகளில் மோதித் தெறிக்கும் போதெல்லாம் அவன் மனம் படபடத்துக்கொண்டது.

அவன் மீண்டும் டானுவைப் பார்த்தபோது அவன் தன் கையில் இருந்த கருவியில் ஆழ்ந்து தாளத்தைத் தட்டிக்கொண்டிருந்தான். டுங் டுடுக் டுங் டுடுக் டுங் என்ற ஓசை மேலும் மேலும் கூர்மையாகி வருவதுபோல இருந்தது. அந்த தாளம் அலைகளின் ஓசைக்கு இடையில் மணியோசைபோல கேட்டுக்கொண்டிருந்தது. வெகு நேரம் கடல் அலைகளின் ஓசையும் டானு தட்டிய தாளமும் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தன. நிலவு மெல்ல மேலே ஏறி உச்சி வானில் சிறு வட்டமாகத் தெரிந்தது.

துரைசாமிக்கு ஆர்வம் குறைந்தாலும் அச்சம் கூடி இருந்தது. ஐயாவு டானுவின் மேல்கொண்டிருக்கும் அபார நம்பிக்கையை துரைசாமி அறிவான். அதை நம்பரில் கிடைத்த பணத்தால் நிரூபித்தும் இருந்தான். ஆனாலும், இப்போது இந்த கடலின் முன்னே நின்று தேவதையைத் தேடிக்கொண்டிருப்பது அதீதமாகப்பட்டது. டானு சொல்லும் ஏதோ ஒரு கற்பனைக் கதையை நம்பிக்கொண்டு ஐயாவு இங்கு வந்துவிட்டானோ என்று நினைத்தான். தானும் அந்த கதையைக் கேட்டு ஏமாளித்தனமாக ஐயாவு பின்னால் வந்து விட்டிருக்கிறோமோ என்று நினைத்தபோது உள்ளூர அவமானமாகவும் இருந்தது. உடனே அங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்று நினைத்தான். தெலூக் பாஹாங் கடற்கரையோரம் ஒரு கடையில் நிறுத்திவிட்டு வந்த மோட்டார் சைக்கிள் பற்றிய நினைவும் வீட்டில் சாந்தியும் சுந்தரும் தனியாக இருப்பார்கள் என்ற நினைவும் எழுந்தன.

சட்டென டானு தாளத்தை நிறுத்திவிட்டு, செருமினான். அவன் பக்கத்தில் கிழவன் சிலைபோல அமர்ந்திருந்தான். ரோக்கு புகையின் வாடை மட்டும் வந்துகொண்டிருந்தது. பாலம் கட்டும் இடத்தில் பார்த்ததுபோல இல்லாமல் டானு இப்போது வேறு மாதிரி தெரிந்தான். நிலவொளியில் அவன் முகம் மஞ்சள் பூசியதுபோல மாறியிருந்தது. அவன் குரல்கூட மாறியிருந்தது.

அவன் மீண்டும் ஐயாவுவிடம் என்னவோ சொன்னான்.

துரைசாமிக்கு டானு சொல்வது புரியவில்லை. அவன் குரல் அலையோசையில் சிக்கிச் சிதறியது. ஐயாவு துரைசாமியைப் பார்த்துவிட்டு ஆமாம் என்பதுபோல தலையசைப்பதற்குள் டானு இடைமறித்தான்.

“…..இது தெய்வம்… கடல் தெய்வம்… காலங்காலமா பூமியை சுமக்கிற அகூபாராவின் அம்சம்… கடல்ராணி… எல்லார் கண்ணுக்கும் தெரியாது… ஆனா அதைப் பார்க்க முழு மனசா நம்பணும்… சந்தேகம் இருக்கக்கூடாது…”

அவன் குரலில் இருந்த அழுத்தமும் தீவிரமும் இருவரையும் நடுங்கச் செய்தன.

துரைசாமிக்கு தூக்கிவாரிப்போட்டது. டானு சொல்லும் ஒவ்வொரு சொல்லும் இப்போது அவனுக்கு மிகத் தெளிவாகக்கேட்டன. எல்லாச் சொற்களுக்கும் பொருள் புரிந்தது. அவன் பிற மொழியில் பேசுகிறான் என்ற உணர்வே எழவில்லை. டானு வாய் அசைக்கும்போது தன் மனதிலிருந்தே அந்த சொற்கள் வருவதுபோல எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாக விளங்கின. டானு தன் மனதை ஊடுருவிப் பார்க்கிறான் என்பது புரிந்தபோது துரைசாமிக்கு உடல் முழுவதும் உஷ்ணம் பரவியது.

துரைசாமியைத் தொட்டு ஐயாவு நடுங்கும் குரலில் சொன்னான்… “அண்ணே மனச அலையவிடாதீங்க,” துரைசாமியின் உடலும் அப்போது நடுங்கிக்கொண்டிருந்தது.

துரைசாமி உள்ளம் நடுங்க டானுவைப் பார்த்தான். டானுவின் கண்கள் ஒளிமிகுந்து மின்னிக்கொண்டிருந்தன. உடல் கடல்நீரில் நனைந்து பளபளத்தது. அவன் அந்த பாறையின் மேல் அமர்த்தப்பட்ட ஐம்பொன் சிலைபோல தெரிந்தான். தான் வணங்கும் கடல் தெய்வத்தோடு அந்த இசையின் வழி அவன் பேசிக்கொண்டிருப்பதுபோல இருந்தது. மிகப்பழங்காலத்தில் இருந்து அவன் இங்கே அமர்ந்து கடல் தெய்வத்தோடு பேசிக்கொண்டிருப்பதாக ஓர் உணர்வு எழுந்து துரைசாமியின் உடல் சிலிர்த்தது. தன்னை அறியாமல் கடலைத் தொட்டு மீண்டும் வணங்கினான். அவன் கண்கள் கலங்கிவிட்டன.

டானு தாள ஓசையை மீண்டும் எழுப்பத் தொடங்கினான். துரைசாமி தன் மனதை கட்டுப்படுத்த முயன்றான். கவனத்தை டானு உருவாக்கிக்கொண்டிருந்த தாள ஓசையில் முழுமையாகக் செலுத்தினான். டானுவின் தாள ஓசை மேலும் மேலும் பெருகிக்கொண்டு வந்தது. சட்டென துரைசாமிக்கு கடல் அலைகளின் பெரும் இரைச்சல் முற்றாக கேட்காமலானது. தாள ஓசை மட்டுமே அந்த கடற்கரையெங்கும் நிரம்பிவிட்டதாகத் தோன்றியது. காதும் மனமும் டுங் டுடுக் …டுங்…டுடுக் டுங் டுடுக் என்ற ஓசையில் ஆழ்ந்து போயிருந்தது. துரைசாமியின் தலையும் உடலும் தானாக அசைந்தன. கண் முன்னால் கடல் கருப்பு திரைபோல அசைந்துகொண்டிருந்தது. திடீரென பூம்ம்ம்ம்ம்ம் என்ற பெரும் ஓசை கேட்டு துரைசாமி திடுக்கிட்டுப் பாறையைப் பார்த்தான்.

டானுவோடு அமர்திருந்த கிழவன் பெரிய சங்கு ஒன்றை கடலில் நின்று ஊதிக்கொண்டிருந்தான். அவ்வளவு நேரம் அவன் அந்த சங்கை தன்னோடு வைத்திருந்ததை துரைசாமி பார்க்கவில்லை. பெரிய சங்கு… ஒரு தேங்காய் அளவு இருந்தது. நிலவொளியில் அது பளபளத்தது. ஐயாவுவும் எழுந்து நின்றான். டானு தன் தாள கதியை மேலும் தீவிரமாக்கினான். அவன் தலை தாளத்துக்கு ஏற்ப அசைந்துகொண்டிருந்தது. கிழவன் கடலில் குதித்து கைகளையும் உடலையும் அசைத்து ஆடத் தொடங்கினான். அவன் கைகளையும் விரல்களையும் இளம் தளிர்போல வளைத்து நீரில் சுற்றிவந்து ஆடினான். அவன் பாவனைகள் பெரும் பார்வையாளர் முன்னால் அரங்கில் ஆடும் ஒரு நாட்டியத் தாரகையை நினைவூட்டின.

துரைசாமிக்கு காற்றில் மிதந்துகொண்டு எங்கோ செல்வதுபோல இருந்தது. இதயம் பலமாக அதிர்ந்துகொண்டிருந்தது. அங்கேயே மயங்கி விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பாறையில் கைகளை ஊன்றிக்கொண்டான்.

ஐயாவு… “அதோ… அதோ…” என்று பரபரப்பாக கைகாட்டிக் கத்தினான். அவன் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் பரபரத்தான். துரைசாமியின் தோள்களை பற்றி அழுத்தி மீண்டும் “அதோ… அதோ” என்று உளறினான்.

ஐயாவு காட்டிய இடத்தில் கடல் நீர் வட்டமாக வெளிச்சம் கூடியிருந்தது. நீருக்குள் எரியும் பந்தம்போல அது அசைந்தது. அந்த வெளிச்சம் மெல்ல நகர்ந்து கரையை நோக்கி வருவது தெரிந்தது. டானுவின் தாளமும் கிழவனின் நடனமும் சேர்ந்து எழுச்சியைக் கொடுத்தன. மனம் துள்ளியது. ஓர் அரசனை வரவேற்கும் கொண்டாட்டம்போல அது இருந்தது. ஒளிவட்டம் மெல்ல பெரிதாகிக்கொண்டே வந்தது. நால்வரும் அமர்ந்திருந்த பாறைக்கு மிக அருகில் அந்த வட்டம் மெல்ல கடலுக்கு மேலே எழுந்தது.

தங்கத் தாம்பாளம் போன்ற ஜொலிப்புடன் ஒரு பெரிய பவளப்பாறைபோல கடலாமை ஒன்று மேலே வந்தது. கிழவன் நடனத்தை நிறுத்திவிட்டு கடலில் குதித்து கத்தினான்… “அகூபாரா அகூபாரா….”

அவன் உடலில் புது சக்தி பாய்ந்தவன்போல துடிப்பாக இருந்தான்.

அ. பாண்டியன் – தமிழ் விக்கி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...