இருள் நிரப்பி மிரட்டும் புனைவு

ம.நவீன் எழுதிய ‘சிகண்டி’ நாவலில் ஒரு பகுதி அதிகம் என்னை ஈர்த்தது. அந்நாவலின் நாயகன் தீபன் அவசரத்தில் இன்னும் தயாராகாத கரிபாப்பை கடையிலிருந்து எடுத்து ருசித்துக் கொண்டே செல்கிறான். அதே நாளில் கரி மீ , நாசி ஆயாம், சென்டோல் என்று வயிற்று பசிக்கேற்பத் தின்றுக் கொண்டே மனதில் திட்டம் ஒன்றை சுமந்து நடக்கிறான். யோசித்துப் பார்த்தால் தீபனின் ஒட்டுமொத்த குணமும் அடங்கிய பகுதி இது.

இந்த அசாதாரண வயிற்று பசி போலவே அவனின் மனதில் தோன்றும் எல்லைகளற்ற காமப் பசியையும் தான் தோன்றித் தனமாக தணிக்க முயன்றதில் சபிக்கப்பட்டு ஆண்மையை இழக்கிறான். அதை மீட்டெடுக்கும் முயற்சியின் வினோதமான விளைவுகளே இந்த நாவல்.

தீபன் எனும் கதாபாத்திரம் தன்னிலையில் சொல்வதாக நாவல் நகர்கிறது. ‘சொளவாட்’ என்ற ஆற்றில் அதன் போக்குக்கு அடித்து செல்லப்படுபவன் மனதில் எப்போதும் லூனாஸ் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. நிகழ்கால வாழ்வில் கரை சேர்ந்து நிஜ நதியில் தன்னை மூழ்கி விடுதலை பெறுவதே அவன் நோக்கம். அதன் உச்சமாக அம்மா மடியில் தலைவைத்து படுத்து அழுவது மட்டுமே அவன் எண்ணம். அந்த எண்ணத்தை ஈடேற்றவே இடைவிடாத திட்டங்கள் தீட்டுகிறான் தீபன்.

அது சௌவாட்டை விட்டு ஓடிவிடும் திட்டம். அதுவே அவனது விதியை வரைகிறது. தன்னை விரும்பிய சரா என்ற திருநங்கையின் கொலை வரை அது தொடர்கிறது.

சராவை தானே கொன்றிருந்தாலும் தீபன் தன்னைக் குற்றமற்றவனாகவே கருதியிருப்பான். ஆனால் தன் மீதுள்ள அன்பினால் சரா தானே தற்கொலைச் செய்து கொண்டதைப் பார்த்தவனின் மன நிலையை ஆசிரியர் உணர்வால் பதிந்திருப்பது வாசகன் மனதையும் ஒரு பாடு படுத்திவிடுகின்றது. அவளைக் கொல்வது அந்த விடுதியில் மிக சுலபம். அதற்காக தூக்கு கயிறு , முக்காலி என்று எல்லாமே கையிலும் அவன் கண் முன்னாலும் இருந்தும் கண்ணுக்குத் தெரியாத மனதிலிருந்து எழுந்த எதோ ஓர் உணர்வு, அவளைக் கொல்ல விடாமல் தடுப்பதை ஆசிரியர் மிக எதார்த்தமாக சித்தரிக்கின்றார். அதையும் மீறி அவளின் கண்ணாடி வளையலை மிதித்து உடைந்து காயம் ஏற்படுத்தும் வரைச் செல்கிறான். தரையைக் குத்துகிறான். தன்னிடமிருந்து இன்னொரு உயிரை தற்காக்கவே அவள் மீது செலுத்தும் குறைந்தபட்ச வன்முறையை தன் மீதும் பிரயோகிக்கிறான்.

ஏன் தீபன் இப்படியானவனாக மாறுகிறான். அவனிடம் இருக்கும் சிறுவன் அவனது அம்மா அவனுக்குக் கொடுத்தது. அவனிடம் இருக்கும் குரூரன் அவன் அப்பா கொடுத்தது. இந்த இரு சக்திகளும் ஒன்றுடன் ஒன்று எப்படி முரணியக்கமாகச் செயல்படுகின்றன என நாவல் விவரிக்கும் இடங்கள் முக்கியமானவை.

கூட்டு காசில் சைக்கிள் வாங்கி தருவதாக ஆசை காட்டிய அம்மா, பின்பு அப்பாவிற்காகத் தீபனிடம் காரணம் சொல்வதில் அடைந்த ஏமாற்றமே மூழ்கப் போகும் கப்பலின் சிறு ஓட்டை. தீபனின் அத்தை வட்டி முதலைகளால் கடத்தப்பட்ட தன் மகனை நினைத்து அவள் கணவனான தீபனின் மாமாவைக் கெட்ட வார்த்தையால் திட்டுவதும், அடித்து தாக்குதும் முக்கியமான சித்தரிப்பு. தன் கணவனுக்காக மகனின் மனதையும் அதன் பாதிப்பையும் உணராத ஒரு தாய் (தீபனின் அம்மா), அதற்கு நேரெதிராக மகனை வட்டி முதலைகளிடம் தொலைத்ததற்காக கணவனைத் திட்டக் கூடாத வார்த்தையால் திட்டி அடித்து உதைக்கும் தீபனின் அத்தையும் தாய்மையின் இன்னொரு கோணத்தில் காட்டப்பட்டுள்ளாள்.

திருநங்கைகளின் வாழ்க்கை முறையும், அவர்களுக்கானச் சடங்கு சம்பிரதாயம், கடவுள் என்று சிகண்டியில் முழுமையாக இதுவரை நாம் அறிந்திடாத அவர்களின் வாழ்க்கை சொல்லப்பட்டுள்ளது. பகுச்சரா மாதா அவர்களின் குல தெய்வம். இந்துகளின் தெய்வ வழிபாடுகளோடும், சடங்கு சம்பிரதாயங்களிலும், அதன் அடையாளத்தோடும் திருநங்கைகள் ஒன்றியிருப்பது, அந்த மதம் கொடுத்த சுதந்திரமாக இருக்கும்.

பள்ளிகள், வேலை இடங்கள், குடும்பம், என அனைத்து நிறுவனங்களும் அவர்களைப் புறக்கணித்து விட்டன. அதனாலேயே அவர்கள் சட்டத்திற்கு புறம்பானதான பாலியல் தொழில் செய்கிறார்கள், போதை மருந்து விற்கிறார்கள் எனும் நியாயத்தோடு சிகண்டியில் இன்னொரு கோணத்தில் திருநங்கைகளைப் பார்க்க முடிகிறது. ஒருவகையில் திருநங்கைகளின் உளவியலை ஆழமாக அறியவும் இந்நாவல் துணை செய்கிறது.

இறக்கை இருந்தும் பறவைப் போல பறக்க முடியாதென்பதை நன்கு உணர்ந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தோல்வியடையும் பென்குயின் மாதிரியாகவே திருநங்கைகள் திகழ்கிறார்கள். கருவைச் சுமந்து, குழந்தையைப் பெற்று தாய்மைப் பூர்த்தியாகி முழுப் பெண்ணாக மாற இயலாதச் சூழலை நன்கு உணர்ந்திருந்தாலும் திருங்கைகள் தங்கள் வாழ் நாள் முழுவதுமே அந்த முயற்சியைக் கைவிடுவதில்லை. அந்த முயற்சியிலேயே தங்களின் பெண்தன்மை வெளிவருவதாகவே வாழ்கின்றார்கள். உள்ளம் சார்ந்தே தங்களின் தாய்மை உணர்வை அதிக அளவில் நிரப்பிக் கொள்கிறார்கள். தாய்மைக்கு வழி வகுக்கும் பெண்மையை அவர்கள் காதல்களின் வழியாக வளர்த்தெடுக்கிறார்கள்.

தீபனோடு சரா காதல் வசப்பட்டதும், அவனின் முத்தங்களும் தொடுதல்களும் அவளுக்குள் பெண்மைத் தன்மையைத் தூண்டி விடுபவை. அவளைப் புறக்கணிப்புச் செய்வதை உணர்ந்த சரா, தீபனோடு திருமணம் வேண்டாம் என்று, அவனை மகனாக ஏற்றுக் கொள்வதாக ஈபுவிடம் மல்லுக்கு நிற்கிறாள். தன்னை விட்டு போகும் ஓர் பிரியத்தை திருநங்கைகளால் தாய்மையின் வழியாகவே தக்க வைக்க முடிவது நெகிழ்வான தருணம்.

நாவலின் கட்டமைப்பு கூர்மையான வாசிப்பை எதிர்ப்பார்ப்பது. கேளிக்கை இலக்கியங்களை வாசிப்பதைப் போல அவ்வளவு சாதாரணமாகக் கடக்க இயலாதது. தன்னிலையில் தீபன் நேரடியாக மனதுக்குள் பேசிக்கொண்டே கதையைத் தள்ளிக் கொண்டு செல்லுகையில், படர்க்கையில் அவனின் தாத்தாவின் பிரிட்டிஷ் காலகட்டத்திலானக் கதையும் இன்னொரு புறம் நகர்த்தப்படுகிறது. இரட்டைத் தன்மையில் நகரும் கதையின் தன்மையைப் போலவே, அதனுள் பெண்மையும் தாய்மையும், பசிக்கு வயிற்றில் ஒரு மிருகமும், காமத்துக்கு மனதில் ஒரு மிருகமும், கருணையும், வன்முறையும் என்றே இருவேறு துருவத்தில் நாவல் தொடர்ந்து 500 பக்கத்திற்கு மேல் பயணிக்கிறது. அதன் ஒரு முனை தீபனின் தாத்தா வீரன் என்றால் இறுதி முனை மாமாவின் மகன் கண்ணன்.
பூமியின் பெரும்பகுதியை நீர் சூழ்ந்துள்ளது போல தீபனின் மனதிலேயே பெரும்பகுதியான கதை சூழ்ந்துள்ளது. அது ஈபு இல்லை சிகண்டி என்பதை அவன் உணரும் தருணம் படர்க்கையாக இன்னொரு துருவத்தில் பயணித்து வந்த கதை, தீபனின் தன்னிலையில் இயல்பாகவே இணைக்கப்பட்ட விதத்தில் ஆசிரியர் தனித்து நிற்கிறார்.

நாவலின் முடிவு கொஞ்சம் உடல் நடுங்க வைக்கக் கூடியது. ஈபு அவனுக்கு ஏன் அப்படி ஒரு தண்டனையைக் கொடுத்தார்? உண்மையில் அது அவனுக்கு வரமா சாபமா என்பதை மனம் ஆராயத் தொடங்குகிறது.

வாசகனின் மனதில் ஈபுவின் செல்ல மகள் சரா, தன் மகனாகப் ஏற்றுக் கொண்ட தீபனை ஈபுவும் பேத்தியாக ஏற்றுக் கொண்டு விட்டாளோ எனக் கேள்வி எழுந்தது. அவர்களுக்கு உறுப்பை அறுத்து போடுவதென்பது ஒரு தெய்வீகமானச் சடங்காகக் கருதப்படுவதால் அதையே ஏன் தீபனுக்கானத் தண்டனையாக வழங்க வேண்டும்? தீபனுக்குதான் அது சாபம். ஈபுவின் பார்வையில் அது வரம். இப்படி வாசகர்கள் முடிவு செய்யும் வகையிலேயே நாவல் முடிந்துள்ளது. ஆனால் அங்கிருந்து நாவல் வாசகர் மனதில் இன்னொரு முறை தொடங்கி வருகிறது.

நொடிப்பொழுதில் அவன் அருத்தெறிந்த உறுப்பை, அவன் காப்பதற்காக எங்கெங்கோ அலைந்தான். எத்தனை மருத்துவரைப் பார்த்தான்? தொங்காட் அலி, உடம்புப் பிடி பெண், புத்தர் கோவிலில் ராஜ பல்லி பச்சை, பாம்பு வித்தைக்காரர் அமீர்கான் என்று அதை குணமாக்க எத்தனை எத்தனை போராடினான். நாக பித்துக்கானப் பத்தாயிரம் வெள்ளிக்காகவே அவன் சராவை அறுவை சிகிச்சையின் போது பேங்காக்கிலேயே விட்டுவிட்டு வரும் சதியையும் தொடங்கினான். உண்மையில் அவன் இவ்வளவு தூரம் ஓடிய ஓட்டத்திற்கு பொருள்தான் என்ன? அவன் ஓடுவது அவனிடமிருந்து தப்பிக்கதான். ‘க்காவா’ எனும் பொருளற்ற சொல்லில் இருந்து தப்பிக்க.

தனபாலனின் உள்ளங்கையில் ‘அ’ வடிவில் சத்தியம் செய்து கொடுத்தும் இதுவரை ஊமைப் படமாக மட்டுமே பார்த்த நீலப் படத்தை ஒலியோடு பார்க்கிறான். உடல் ஊனமுற்ற தனபாலனின் தங்கை தன் தலையைச் சுமக்க முடியாமல் ஊர்ந்து ‘க்காவா’ என்பதும், தொடர்ந்து அவனின் உடல் கோணிய வாயாலும் குழம்பிய சொற்களாலும் சபிக்கப்பட்டு விட்டது. இறுதியில் அதே ‘க்காவா’ எனச் சொல்லிவிட்டு அவனின் ‘பல்லி’ யும் இனி திரும்பி வர முடியாத இடத்திற்கு ரத்தத்தைக் கக்கி சென்று விட்டது.

இழந்ததை மீட்டெடுக்க அவன் எடுத்த ஓட்டம் மிட்டெடுத்ததை இழந்ததிலேயே முடிந்தது. வாழ்க்கை என்பது இவ்வளவுதானா எனும் கேள்வியே மிச்சமிருந்தது. ஒருவகையில் தீபன் வாழ்வில் குவிந்துள்ள அந்த அர்த்தமின்மையை அறிந்தவன்தான்.

விபச்சார விடுதில் பாதுகாவலனாக வேலைக்குச் சேர்ந்த தீபன், அங்குள்ளப் பெண்களை விட வந்து போகும் ஆண் வாடிக்கையாளர்களைக் கவனிக்கின்றான். பெண் சுகத்தைத் தேட வந்தவர்கள், அது கொட்டிக் கிடக்கும் இடத்திலிருந்து வெளியாகும் போது யாருடைய முகத்திலும் மகிழ்ச்சி இல்லை என்பதைப் அறிகிறான். எதேதோ கற்பனையில் எதையோ தேட படிகள் ஏறி, திரும்புகையில் இருப்பதையும் தொலைத்து விட்ட முகத்துடனே செல்கிறார்கள். கற்பனையில் அதிக நேரம் இன்பம் கண்டவர்கள், நிஜத்தில் இவ்வளவுதானா என்ற ஏமாற்றத்தையே முகத்தில் காட்டி விட்டு செல்கிறார்கள். அவர்கள் வழியாக தீபன் அந்த கற்பனையின் மாயத்தை அறிகிறான்.

அதன் இன்னொரு கற்பனைதான் கனகா.

அதிகம் நாணப்படாத, அழகில் குறைவான, கச்சிதமான, எல்லாவற்றுக்கும் சிரிக்கும், தீபனின் மனதுக்கு நெருக்கமானப் பெண்ணாக வரும் கனகாவைப் பற்றி பள்ளியில் அவனது நண்பர்கள் கிளுகிளுப்பாக எதையும் பேசாமலும், அவர்களது பார்வையில் ஈர்க்கப்படாதது குறித்து அவன் பெரிதும் ஆறுதல் அடைகிறான். தீபனின் நண்பர்களின் பார்வையில் ஈர்க்கப்படாதப் பெண்ணான கனகா வாசகனின் மனதை ஈர்த்து விடுகிறாள். ஒர் இலக்கியப் படைப்பின் வெற்றி அதுதானோ?

தீபனின் மன உணர்வுகளால் எழுதப்பட்ட சிகண்டியில் தனக்குத்தானே தீபன் கேட்டு கொள்ளும் கேள்விகள், போட்டு கொண்ட வேடங்கள், நியாயப்படுத்தும் நிகழ்வுகள், சுயநலம் (அமீர்கான் ‘ஐட்டம்’என்று குறிப்பிட்ட விபச்சாரம் செய்யும் பெண்களில் ஒருத்தியான பிலிப்பைன்ஸ் பெண் மறுத்தும் அவளை தீபன் வன் புணர்வு செய்தது உட்பட) கருணை (பிச்சை எடுக்கும் பிள்ளைகளை, அவன் மலேசியாவில் கல்வி இலவசம் தானே எனப் படிக்க சொல்லி அறிவுரை கூறுவதும், மாமா மகன் வட்டி முதலைகளால் கடத்தப் பட்டதைக் கேட்டு துடித்ததும், அவன் மேல் இவனுக்கு இருக்கும் பாசமும்), என சிகண்டி முழுவதிலும் மனித மனதின் பல்வேறு உணர்வு நிலைகளின் நாடகத்தையும் அது அவ்வப்போது போடும் வேடத்தையும் பார்க்க முடிகின்றது.

பல்வேறு பிரமாண்டமானக் காட்சி அமைப்புகளில் தீபனை நம் கண்களில் ஹீரோவாகக் காண்பித்து நம்மை ரசிக்க வைத்த ஆசிரியர், இன்னொரு துருவத்தில் சிகண்டியை (ஈபு) வைத்து மிரட்டியிருக்கிறார். சிகண்டிக்குள் எவ்வளவு குரோதம். நம் மனதை உருக்குலைவுச் செய்யும் காட்சிகள் நிறைய உண்டு. விரலில் கத்திப் பட்டு ரத்தம் வடிவதைப் பார்த்தே பயந்து மயங்கி விழும் பெண் தாதியாக ஆசைப்படுவதாக சொல்வதை நாம் ஏற்று கொள்ள முடியாதததைப் போலவே சிகண்டியை வாசிக்க ஒரு துணிவு வேண்டும்.

சிகண்டி – தமிழ் விக்கி

1 comment for “இருள் நிரப்பி மிரட்டும் புனைவு

  1. September 1, 2023 at 10:14 pm

    சிகண்டி பெரு நாவலின் கதைக்கு உயிர்ப்பைக் கொடுக்கும் அதன் நாயகன் தீபனை மட்டுமே உருவி எடுத்து முன்வைத்த இந்தப் பார்வை அவனை இன்னும் ஆழமாக தரிசிக்க உதவுகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...