நான் ஒரு பயண விரும்பி. தனியாகவும் நண்பர்களுடனும் ஏராளமான இடங்களுக்குச் சென்றுள்ளேன். பயணங்கள், இடங்களைச் சார்ந்தது மட்டுமல்ல; மனிதர்களையும் உட்படுத்தியது. அப்படி எவ்வித அறிமுகமும் இல்லாத மனிதர்களோடு பயணம் மேற்கொள்ள விரும்பி பாத யாத்திரை ஒன்றில் கலந்துகொண்டேன்.
மார்ச் மாதம் 25 முதல் 28 ஆம் திகதி வரை பஹாங் மாநிலத்தில் எழுந்தருளியிருக்கும் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தை நோக்கிய பாத யாத்திரை அது. இப்பாதயாத்திரை பாம்பன் சுவாமி பக்தர்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது வழுவாக வேர் ஊன்றி பல கிளைகளாக இயங்குகிறது.
என்னுடன் என் நண்பர்கள் இருவரும் இணைந்தனர். சாகசப் பயணங்களில் எப்போதும் இருக்கும் உற்சாகத்தைவிட பக்தியே எங்களைச் சுற்றிச் சூழ்ந்திருந்தது.
பத்துமலை கோவிலிலிருந்து எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். ஒரு நாளுக்கு முன்பதாகவே பினாங்கு முதல் ஜொகூர் வரை உள்ள பக்தர்கள் பத்துமலை வளாகத்தில் குவிந்தனர். புனித நடை பயணத்திற்கு உடலளவில் மட்டும் தயார் ஆன எங்களுக்கு அங்குத் திரண்டிருக்கும் மக்களைக் கண்டு வியப்பு. ‘நாங்கள் உண்மையிலேயே மலேசியாவில்தான் இருக்கிறோமா?’ என எங்களை நாங்களே கேட்டுக் கொண்டோம்.
மலேசிய இந்தியர்களின் வாழ்க்கை முறையில் நடை என்பது மிகவும் குறைவு என்பது நிதர்சனமான உண்மை. நானும் என் நண்பர்களும் பொதுவாக நடை பயிற்சி, மெதுவோட்டம், மலையேற்றம் போன்றவற்றை மேற்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டவர்கள். அவ்வாறு செல்லும்போது ஏன் இந்தியர்கள் இவ்வாறான ஆரோக்கிய வாழ்க்கை முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதே ஆதங்கமாக இருக்கும். அப்படி இருக்க, இவ்வளவு மக்கள் எப்படி 204 km பயணத்தை மேற்கொள்ள துணிந்தனர்? அதில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் வயோதிகர்கள் வேறு.
பக்தர்கள் அனைவருக்கும் தளா நான்கு வெவ்வேறு வர்ணச் சட்டைகள் வழங்கப்பட்டன. புனித நடை பயணம் பல்வேறு கழகங்களின் ஏற்பாட்டில் நடைபெறுவதால், தத்தம் பக்தர்களை வேறுபடுத்துவதற்காக அந்த வர்ணச் சட்டைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு கழக உறுப்பினர்களின் உடமைகளை ஏற்றி வருவதற்காக பிரத்தியேக கனவுந்து ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வகையில் அந்தக் கனவுந்தும் ஒருவகையில் முருகர் சேவகன்தான்.
மார்ச் 25, காலை மணி 4க்கு எங்கள் புனித நடை பயணம் தொடங்கியது. அதிகாலை குளிரை நான் பல முறை பல்வேறு ஊர்களில் எதிர்க்கொண்டுள்ளேன். பெருந்திரளில் அது வீரியமற்ற பாம்பு போல கன்னியமாக எங்களிடையே ஊர்ந்து சென்றது. அந்த மிதமான குளிர் கொடுத்த உற்சாகத்தில் சக்கரத்தைப் போல் சுழன்ற எங்கள் கால்கள், மெல்ல தொய்வடைந்தன. பின்னர் 500 மீட்டருக்கு ஒரு முறை நீர் கொடுக்கப்பட்டது. இருப்பினும் தொண்டையோடு சேர்ந்து கால்களும் வரண்டன. காராக் கோலாலம்பூர் நெடுஞ்சாலை பயணம் சூரிய உதயத்திற்குப் பிறகு மிகவும் கடுமையானதாக மாறியது. காவல் அதிகாரிகளின் கெடுபிடியால் நெடுஞ்சாலையில் நீர் வினியோகம் தடைப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் காராக் நெடுஞ்சாலையில் பயணிப்பது காட்டுப் பாதையில் பயணிப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும். அடர்வனமும் மலைப்பாதையும் பயணத்தை உற்சாகப்படுத்தும். இப்போது இரு பக்க மரங்களும் நீர்த்தொட்டியில் ஒட்டப்பட்ட கடலடி போஸ்டர் போல பாவனைக்கு இருப்பதாகவே தோன்றியது. பழைய குளிரும் பசுமையும் குறைந்திருந்தது. அதனால் வெக்கையும் அதிகமாக இருந்தது.
பொதுவாக 31 டிகிரி முதல் 33 டிகிரி வரை இருக்கும் வெப்ப அளவு, காராக் – கோலாலம்பூர் நெடுஞ்சாலையில் 36 டிகிரி முதல் 39 டிகிரி வரை உயர்ந்திருந்தது. சில இடங்களில் பக்தர்கள், புற்தரையிலும் சாலை ஓர இரும்பு தடுப்புகளிலும் அமர்ந்து ஓய்வெடுக்க தொடங்கினர். அப்படி ஓய்வெடுக்கும் தருணத்தில் மட்டுமே கால்கள் நாங்கள் சொல்வதைக் கேட்கத் தொடங்கின. என் கழகத்தைச் சேர்ந்த பல வருட அனுபவமுடையவர்களைக் கூட நாங்கள் கடந்து செல்லும்போது எங்கள் உடல் வலிமையை நினைத்துப் பெருமிதம் கொண்டோம்.
எல்லாமே கொஞ்ச நேரம்தான். உற்சாகமும் சோர்வும் கடலலை போல மாறி மாறி உள்சென்று மீண்டும் பெருக்கெடுத்து திரும்பியது. வானிலிருந்து பார்த்தால் நாங்கள் சாரையாகச் செல்லும் எறும்பாகத் தெரிவோமோ எனக் கற்பனை சென்றது. அப்படியானால் இயற்கைக்கும் இறைமைக்கும் எறும்பென்றும் மனிதர்களென்றும் என்ன பாகுபாடு இருந்துவிடப்போகிறது எனத் தோன்றியது. பெரும் பிரபஞ்சத்தில் எல்லா உயிர்களும் ஒன்றுதானே.
“முருகா எங்களைக் காப்பாற்று” என்று சொல்லிக் கொண்டே நடந்த எங்களுக்கு மயில் வாகனமாக ஒரு மகிழுந்து வந்தது. நாங்கள் மிகவும் மெதுவாக நடப்பதாகவும் நாங்கள்தான் எங்கள் கழக உறுப்பினர்களிலே இறுதி நடைப்பயணராகவும் கூறி மகிழுந்தில் ஏறச் சொன்னார் வாகன ஓட்டி. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எங்கள் கழக உறுப்பினர்களில் பலர் எங்களைவிட பின் தங்கியுள்ளனர் என நாங்கள் அறிந்தே வைத்திருந்தோம். ஆனால் உடல் சோர்வுக்கு முன் உண்மையைத் தேட எங்கே நேரம் வாய்க்கிறது? மகிழுந்தில் ஏறிக் கொண்டோம்.
மகிழுந்தில் செல்லும் வழியெல்லாம் எங்கள் கழக உறுப்பினர்கள் என்று சட்டையை வைத்து அறிந்து கொண்ட ஓட்டுனர், நீர் வேண்டுமா?”, “காரில் ஏறுகிறீர்களா?” போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்தார். சில கிலோ மீட்டர் தள்ளி ஒருவரை ஏற்றுவதற்காக எங்களை இறக்கிவிட்டார். அப்படி ஒரு போக்குவரத்துச் சேவை இருப்பதை அப்பொழுதுதான் நாங்கள் அறிந்தோம். அந்தச் சேவையைப் பயன்படுத்திதான் சிலர் எங்களைக் கடந்து சென்றிருக்கிறார்கள் என்பதையும் பலர் அதை நம்பிதான் இந்தப் புனித நடை பயணத்திற்கே வந்திருக்கிறார்கள் என்றும் மெல்ல புரிந்து கொண்டோம். எங்கள் கழக பக்தர்களை ஏற்றிச் செல்வதற்குச் சில மகிழுந்துகளும் ஒரு மூடுந்தும் ஒரு பேருந்தும் இருக்கிறது என்று லிபூர் லெந்தாஙில் மதிய உணவிற்குப் பின் தெரிந்து கொண்டோம்.
சுமார் 4 மணியளவில் பேருந்தில் ஏறி காராக்கில் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்திற்குச் சென்றடைந்தோம். எங்களுக்கு முன்னதாகவே சிலர் வந்து சேர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். 31 கிலோ மீட்டர் நடந்த திருப்தியில் நாங்களும் ஒரு இடத்தைத் தேடி உறங்கினோம்.
நூறு பேருக்கு மத்தியில் உறங்குவது முற்றிலும் புதியதொரு அனுபவமாகவே இருந்தது. பக்தர்கள் அனைவரும் எல்லாவித அடையாளங்களைத் துறந்து எந்தவொரு பாகுபாடும் இன்றி பாய் தரையிலும், கிடைக்கப்பெற்றச் சிறிய இடத்திலும், மண்டபத்திற்கு வெளியிலும், நாற்காலியிலும் மேசை மீதும் கண்ணுறங்கியபடி இருந்தனர். உலகம் முழுவதும் பக்தியுடன் பயணம் செய்யும் மனிதர்களின் இயல்பு அது. ஓரிரு கழிப்பறை மற்றும் குழியலறையை மட்டும் கொண்டிருக்கும் அந்த மண்டபத்தில் முகம் சுழிக்காமல் ஒருவர் பின் ஒருவர் பொறுமை காத்து, ‘நான்’ என்ற எல்லா அடையாளத்தையும் கழற்றி எறிந்து, முருகப் பக்தர்கள் என்ற அடையாளத்தை மட்டும் கெட்டியாக இறுக்கிப் பிடித்திருந்தனர். ‘யான் எனது என்னும் செருக்கருப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்’ என்ற வள்ளுவனின் வாக்கு நினைவுக்கு வந்தது.
பக்தி பொதுவானது போல, வலியும் பொதுவானதுதான்.
முதல் முறை நடப்பவர்களுக்கும் பல வருடமாக நடப்பவர்களுக்கும் பாரபட்சம் பார்க்காமல் பாதங்களில் கொப்பளங்கள் வந்தன. அவை அதிகபடியான வெப்பத்தின் காரணத்தாலும் காலுறையும் காலணியும் உரசுவதாலும் ஏற்படும் நீர் கொப்பளங்கள். கழகத்தின் ஏற்பாட்டில் மூன்று மருத்துவ உதவியாளர்களுடைய ஒரு குழு பக்தர்களின் உடல் நலத்தை உறுதிப்படுத்துவதற்கு எங்களுடன் பயணித்தனர். ஒவ்வொரு நாள் இரவும் பக்தர்களின் கால்களில் உள்ள கொப்பளங்களைச் சுத்தம் செய்து மருந்திட்டுப் பிற உபாதைகளுக்கும் மருந்து கொடுத்து மிகவும் கனிவாக நடந்து கொண்டனர்.
இரவு உணவுக்குப் பின் நன்கொடையாளர்களுக்கு நினைவுபரிசு வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எல்லாவற்றையும் களைப்படைந்த கண்களுடனேயே கண்டேன். பின்னர் கண் மூடியதை மறப்பதற்குள் காலை 2 மணியளவில் அனைவரையும் எழுப்பத் தொடங்கினர். 4 மணிக்குள் குளித்து, சிற்றுண்டி சாப்பிட்டு கடவுளைப் பிராத்தனைச் செய்து நடை பயணத்திற்குத் தயாராகினர் பக்தர்கள். மனம் இயல்பாக அவர்களில் ஒன்றானது. புறப்படும்போது இருந்த அத்தனை தனி எண்ணங்களும் உருகி ஒரு பெருங்குழுவுடன் ஒன்றாகக் கலக்கத் தொடங்கியது.
இந்தப் பயணத்தில் குறிப்பிடத்தக்க விசயம் கழக உறுப்பினர்களின் சேவை. தினமும் நாங்கள் எழுவதற்கு முன்பதாக எங்களுக்குச் சிற்றுண்டியைத் தயார் செய்து வைத்தனர். உறக்கத்தைப் பொருட்படுத்தாமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்தனர். காராக்கிலிருந்து பயணத்தைத் தொடங்கிய ஒரு சில மணி நேரத்திலே இது பாதை யாத்திரையா அல்லது பயணயாத்திரையா என்று தெரியா வண்ணம் பல நல்லுள்ளங்கள் அன்னதானத்தைக் குவித்தனர்.
புக்கிட் டிண்டிங், சுங்கை கவாங், லஞ்சாங், ஐந்தாவது மையில், மூன்றாவது மையில், மெந்தகாப், தெமெர்லோ போன்ற இடங்களில் மோர், பழங்கள், கூழ், சுக்கு காப்பி, சைவ உணவுகள், இளநீர் ஆகியவற்றைப் போதும் போதும் எனும் அளவிற்கு அள்ளித் தந்தனர். தேன் சிந்தும் மலர்ச்சோலையைக் கண்ட வண்டு போல ஒவ்வொரு தண்ணீர் பந்தலிலும் இலைப்பாறி மகிழ்ந்தோம். முருகபக்தர்களுக்கு உணவளிப்பதை அவர்கள் பல வருடக் காலமாகச் செய்து வருகின்றனர் என்பது அவர்களுடன் பேசியதில் தெரிந்தது. “தயவு செய்து எடுத்துக்கொள்ளுங்கள்” என்றும் உணவை எடுத்ததற்கு பின்பு “மிக்க நன்றி” என்று கூறும் அவர்களது குணம் நெகிழ வைத்தது. பொதுவாக இலவசமாக ஏதாவது கொடுக்கும் மனிதர்களைக் காட்டிலும் எதிர்மறையாக இருந்தது.
மெந்தகாப் மாரியம்மன் கோவிலில் மதிய உணவிற்குப் பின் கோவிலிலே குட்டித் தூக்கம் போட்டோம். குட்டித் தூக்கத்திற்குப் பின் பேருந்திலும் மூடுந்திலும் மகிழுந்திலும் பாதிக்கும் மேற்பட்டோர் பயணத்தைத் தொடர்ந்தனர். மிகச் சிலரே நடை பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்களுள் நாங்களும் அடங்கினோம். மாலை மணி 5 போல கம்போங் ஆவா முருகர் கோவிலைச் சென்றடைந்தோம். எங்களுக்கு முன்பதாக வந்தடைந்தவர்கள் வழக்கம் போல கோவில் மண்டபத்தை நிரப்பியிருந்தனர். கம்போங் ஆவா முருகர் கோவிலும் அதன் மண்டபமும் மிகவும் சிறியதாகும். அவ்வளாகத்தை எங்கள் கழகத்தினரும் பாம்பன் சுவாமிகள் கழகத்தினரும் தங்குமிடமாக உபயோகித்தனர்.
இறுதியாகச் சென்ற எங்களுக்கு மண்டபத்தினுள் இடம் கிடைக்காததால் நாங்கள் மண்டபத்தின் நுழைவாயிலில் படுத்துக் கொண்டோம். கம்போங் ஆவா முருகனைப் பற்றி நிறைய கேள்விபட்டிருக்கும் நிலையில் அவரை நேரில் தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் தூங்கியும் தூங்கா நிலையிலும் எழுந்து ஒரே ஒரு குளியலறையைப் போட்டியின்றி பயன்படுத்தி முருகருக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து நான்கு மணிக்கெல்லாம் புறப்பட்டோம். முன்பதாக நாங்கள் பயணித்த பாதைக்கும் கம்போங் ஆவாவில் இருந்து ஜெங்காவிற்குச் செல்லும் பாதைக்கும் பல வித்தியாசங்கள் இருந்தன.
கம்போங் ஆவா சாலை இரு புறமும் இருள் சூழ்ந்திருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாமல் மயான அமைதியான சாலையில் நடப்பதற்குச் சற்றே தயக்கமாக இருந்தாலும் கந்த சஷ்டி கவசத்தைக் கூறிக் கொண்டே சென்றதால் பயம் தெரியவில்லை. சிலர் சினிமா பாடல்களைச் சத்தமாகக் கேட்டுக் கொண்டும் கதை பேசிக் கொண்டும் வந்தனர். யாத்திரை என்பது இறுதியில் சென்று அடைவதில் இல்லை; அதன் பலன் பயணம் நெடுக்கவே நிகழ்கிறது என அவர்கள் அறிந்திருக்கவில்லை. அறியாதவர்கள் எதையும் அடையப்போவதும் இல்லை.
காலை 11 மணியளவில் ஜெங்கா 16 சமூக மண்டபத்தை வந்தடைந்தோம். பக்தர்கள் பலரும் களைப்பில் உறங்கிக் கொண்டிருந்தனர். கழக உறுப்பினர்களும் தன்னார்வலர்களும் மதிய உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். வாழை இலை உணவுக்கான சமையல்கள் நடந்து கொண்டிருந்தது. என் பங்குக்கு என்னால் முடிந்த உதவிகளை நானும் செய்தேன். மாலை நன்கொடையாளர்களுக்கான நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் எந்த வாகனத்திலும் ஏறாமல் 204 KM தூரத்தையும் நடந்தே வந்த எழுவரை ஊக்குவிக்கும் வகையில் சன்மானம் வழங்கப்பட்டது. மேலும் வயதானவர்கள் முதல் முறை நடப்பவர்கள் சிலருக்கும் பதக்கம் அளித்து பெருமைப்படுத்தினர். முதல் முறை நடப்பவர்களில் என்னையும் இன்னொரு பக்தரையும் தேர்வு செய்து பதக்கம் வழங்கினர்.
இரவில் மீண்டும் இலை சாப்பாட்டோடு, மண்டபத்தின் நுழைவாயிலில் நண்பர்களோடு படுத்துக் கொண்டேன். நாங்கள் உறங்கினோம் என்று பிறர் நினைத்திருப்பர். ஆனால் இரவெல்லாம் வெப்பத்தின் காரணத்தால் மண்டபத்தின் வாசலில் படுத்த யாருமே தூங்கவில்லை. என் மனதில் பல வகையான எண்ணங்கள் திரிந்து திரிந்து எழுந்து அடங்கின. நான்கு மணி நேரம்கூட என் கைப்பேசியைப் பிரியாத நான், நான்கு நாட்களுக்கு அதை மின்னூட்டம் செய்யாமல் இறையெண்ணத்தோடும் இயற்கையோடும் வாழ்ந்திருந்தேன் என்பது ஆச்சரியமாக இருந்தது.
அன்று அதிகாலை 3 மணிக்கே நாங்கள் மரத்தாண்டவர் கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கி காலை 7 மணியளவில் கோவிலைச் சென்றடைந்தோம். பல முறை மரத்தாண்டவரைத் தரிசித்திருந்தாலும் அன்று மனம் முற்றிலும் நெகிழ்ந்திருந்தது. பயணத்தைத் தொடங்கியபோது இருந்த ‘நான்’ எனும் எண்ணமெல்லாம் இல்லாமல் உடலின் எல்லை குறித்த எண்ணங்களாலும் இவ்வுடலின் நிலையாமையாலும் முற்றிலும் எண்ணங்கள் களைந்து கிடந்தன.
கண்களில் கண்ணீர்.
பாத யாத்திரை என்பது புறவயமானதல்ல; அது நம்மை நம் ஆளுமையை மீள் கட்டமைப்பு செய்யும் ஒரு யோகப் பயிற்சி. அதனால் மனதில் துளிரும் தனி உண்மைகளை நீடிப்பதும் நீருற்றி வளர்ப்பதும் அவரவர் உளபலத்தில் உள்ளது.
நான் எனும் அகந்தையைப் போக்கிய பாதயாத்திரையே ஒரு முருகன் தான். சிறப்பான அனுபவ பகிர்வு. வேல் வேல்.
சிறப்பான பகிர்வு.