உடல் தளர்ந்து பின்னால் படுக்கையில் சாய்ந்து, மெல்ல என் தலையை மட்டும் தூக்கி பார்த்தேன். முழங்கை அளவே உள்ள சிற்றுடல் ஒன்றைத் தலைகீழாக டாக்டர் பிடித்திருந்தார். இத்தனை நாட்களாக நான் என்னுள் எனது மட்டுமே என்றுணர்ந்த உயிரசைவின் உடலுருவம்.
நீல நிறம்.
அன்று மதியம் இந்திர நீலத்தில் வாசித்த வரி ஒன்று நினைவில் எழுந்தது, ‘நீலம் அருளின் நிறம். இப்புவியை அணைத்திருக்கும் இருள் நமக்கென புன்னகை கொள்வதன் நிறம்’. அந்த நீல உடலில் மெல்ல இளஞ்சிவப்பு நிறம் எழுவதைக் கண்டேன். அந்த உடலை என்னுடன் இணைத்திருந்த தொப்புள் கொடியை டாக்டர் அறுத்தார். தளர்ந்து மீண்டும் படுத்து கண்களை மூடிக் கொண்டேன். அந்த உடலிலிருந்து எழுந்த அழுகை அறையைப் பீறிட்டது. என் மொத்த உடலாலும் அந்த அழுகையை உணர்ந்து கொண்டிருந்தேன். கணீரென்ற அடிக் குரல். அந்த உடலைத் துணியில் சுத்தி என் முகத்தின் அருகில் வைத்தார். அந்த உடலிலிருந்து எழுந்த அழுகை மெல்ல மெல்ல தணிந்தது. என் இடக்கையைத் தூக்கி அதன் தலையையும் முகத்தையும் வருடினேன். துணியை மெல்ல விலக்கிக் கீழே பார்த்தேன். பெண் குழந்தை. சட்டென்று எழுந்த உணர்வெழுச்சியில் கண்களில் கண்ணீர் பெறுக குழந்தையை அணைத்துத் தலையில் முத்தமிட்டுக் குரல் கம்ம “என் மகள்!” என்றேன்.
கருவுற்ற செய்தியை அறிந்த கணம் அதுவரை என் வாழ்வில் அடைந்திராத மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன். அன்று நாள் முழுவதும் கண்ணீரும் சிரிப்புமாகக் கனவுலகில் வாழ்ந்தேன். பிறக்கவிருக்கும் குழந்தையைப் பற்றியும் எங்கள் வாழ்வில் நிகழப்போகும் மாற்றங்களைப் பற்றியும் நவினிடம் பேசிக் கொண்டே இருந்தேன். ஆனால், அன்றிரவு என்னால் துயில்கொள்ள முடியவில்லை. அச்சம் என்னை ஆட்கொண்டது. என் சித்தம் முழுக்க எதிர்மறை எண்ணங்களால் நிறைந்திருந்தது. கண்களை இறுக்க மூடி தலையணையை அணைத்துக்கொண்டு இரவு முழுவதும் படுத்திருந்தேன். மறுநாள் காலை சூரிய ஒளி எழுந்ததும் என் எண்ணங்களும் தெளிவடைந்தன. ஆனால் அந்த அச்சங்கள் என் நினைவில் எங்கோ இருப்பதை உணர்ந்தேன். இதிலிருந்து விடுபட ஒரே வழி எதிலாவது தீவிரமாகச் செயல்படுவதுதான் என்பதால் இக்காலத்தில் வெண்முரசு படிக்கலாம் என்று எனக்கு நானே கட்டளையிட்டுக் கொண்டேன்.
வெண்முரசு படிக்க ஆரம்பித்ததும் அதன் விசையே என்னை இழுத்துச் சென்றது. முதல் மூன்று மாதங்களில் ‘முதற்கனல்’, ‘மழைப்பாடல்’ மற்றும் ‘வண்ணக்கடல்’ படித்து முடித்தேன். அக்காலத்தில் எனக்கும் நவினுக்குமான உரையாடல் முழுவதுமே வெண்முரசைச் சுற்றியே இருந்தது. மிகத் தீவிரமாக என்னை உணர்ந்த காலங்கள் அவை. ஆனால் ‘வண்ணக்கடல்’ முடிக்கும் வேளையில் கர்ப்பக்கால உடல் உபாதைகள் காரணமாக என்னை எவ்வகை உடல் உழைப்பும் செய்யாமல் ஓய்வில் இருக்கும்படி டாக்டர் கறாராக கூறிவிட்டார்.
மீண்டும் என் அச்சங்கள் என்னுள் தோன்ற ஆரம்பித்தது. உடல் தளர்ந்ததும் மனமும் தளர்ந்தது. முற்றிலும் சோர்ந்து எச்செயலிலும் ஈடுபாடில்லாமல் நாட்களைக் கடத்தினேன். வெண்முரசு படிப்பதையும் நிறுத்திவிட்டேன். அப்பொழுது ஒரு நாள் காலையில், என் வீட்டுத் தோட்டத்தை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் அங்கே ஒரு மயில் நிற்பதைக் கண்டேன். எங்கள் சுற்றுவட்டத்தில் மயில்கள் அதிகம்தான். ஆனால் அவ்வளவு அண்மையில் இதுவரை கண்டதில்லை. எனவே, அதை பார்க்க வெளியே சென்றேன். அதற்குள் சிம்பா குரைத்ததால் அது பறந்துவிட்டது.
ஏமாற்றத்துடன் திரும்பும் வேளையில்தான் கவனித்தேன். தோட்டம் முழுக்க மயில் பீலிகள். தோட்டமே பச்சை நீல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அனைத்தையும் சேகரித்து வீட்டினுள் கொண்டு சென்று ஒரு கண்ணாடி புட்டியில் வைத்தேன். அன்று முழுவதும் அதனை வருடுவதும் அதை கையில் எடுத்து அதன் வண்ணங்களைப் பார்ப்பதுமாக நாளைக் கழித்தேன். அன்றிரவே ‘நீலம்’ வாசிக்க ஆரம்பித்தேன். இல்லை, ‘நீலம்’ தன்னை வாசிக்கும்படி எனக்கிட்ட கட்டளையை ஏற்றுக்கொண்டேன். அதன் பிறகு ‘நீலம்’ விரித்து காட்டிய உலகிலேயே வாழ்ந்தேன். மும்முறை அந்நாவலை வாசித்தேன்.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உணர்வுகள், அறிதல்கள். இரவும் பகலும் கிருஷ்ணனுடன் நினைவில் நடித்தும் கனவில் மகிழ்ந்தும் அம்மாதங்களைக் கழித்தேன். தேவகியாகக் கிருஷ்ணனைக் கருவுற்றேன், யசோதையாக அவனுக்கு முலையூட்டினேன். ராதையாக என் மடியிலும் இடுப்பிலும் தோளிலும் அவனை வளர்த்தெடுத்தேன். இப்போது என் மகளை ஏந்துகையிலும் அந்த அன்னைகளின் நீட்சியாகவே என்னை உணர்கிறேன். மூன்று மாதங்கள் நான் அந்தரங்கமாக வாழ்ந்த கனவுலகின் எச்சமாக அந்த மயில் பீலிகளை இன்றும் என் வீட்டில் வைத்துள்ளேன்.
குழந்தை பிறந்து இரண்டு மணிநேரத்தில் நாங்கள் அறைக்கு மாற்றப்பட்டோம். அதற்குள் குழந்தையின் உடலைத் துடைத்து உடை அணிவித்துத் துணியால் முழுதாகப் போர்த்திவிட்டுருந்தனர். அறைக்கு வந்ததுமே பாலூட்ட குழந்தையை என்னிடம் அளித்தனர். முதன் முதலாக அவளை என் கைகளில் ஏந்திக் கொண்டேன். என்னுள் பதற்றம் கலந்த ஒரு பரவசம் தோன்றியது. என் மார்போடு அணைத்துக் கொண்டு அவளையே நோக்கிக் கொண்டிருந்தேன். அக்கணம் என் உலகில் அவளைத் தவிர வேறு எவரும் இல்லை. என்னைச் சுற்றியிருப்பவர்களின் பேச்சு எதுவும் என் செவியை எட்டவில்லை. ஆடைகள் நனைய கொட்டும் மழையில் கண்ணனைக் காண பர்சானபுரியிலருந்து கோகுலம் செல்லும் ராதையின் பித்து நிறைந்த விழிகளுடன் அவளைக் கண்டேன். தனது சிறு கண்களைப் பாதி மூடி உதட்டைக் குவித்து வைத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். உடலை நெளித்து கைகளையும் கால்களையும் உதைத்தாள். அவள் மெல்ல அழ ஆரம்பித்தாள்.
பசித்திருக்க வேண்டும் என என் முலையை அவளுக்கு அளித்தேன். முதலில் அவளுக்கு அதனைப் பற்றிக்கொள்ள தெரியவில்லை. எனக்கும் அவளுக்கு எப்படி உதவுவது என்று புரியவில்லை. சற்று நேரம் முயற்சித்த பின் பொறுமையிழந்து பீறிட்டு அழத் தொடங்கினாள். பசியின் கோபத்தில் என் முலையைக் கடித்துப் புண்ணாக்கினாள். பின்பு நர்ஸின் ஆலோசனைப்படி பாலை அவள் வாயில் பீய்ச்சினேன். பால் மணத்தை அறிந்ததும் அவள் என் முலையைப் பற்றிக்கொண்டாள். அது பழகியதும் அவள் இலகுவானாள். கைக்கால்களை அசைத்துக் கொண்டே கண்களை விழித்து என்னை நோக்கினாள். பல்லாயிரம் ஆண்டுகளாக இவ்வுலகில் மலைகளின் மேல் உறைந்து தவம் செய்யும் பாறைகளின் அசைவின்மை அவள் கண்களில் இருந்தது. கண்ணனின் வாயில் ஏழுலகைக் கண்ட யசோதையைப் போல அந்தக் கண்களில் இருந்த அசைவின்மையைக் கண்டு உடல் சிலிர்த்தேன். அக்கணம் நவின் என் அருகில் வந்து கூறினான், “அணங்கன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். பாப்பா பிறந்தது ரோகிணி நட்சத்திரம்”. கண்களில் நீருடன் “நான் படித்த நீலம் நாவல் வழியாகப் பிறந்தவள் இவள். என் குட்டி கிருஷ்ணை” என்றேன் அவளை முத்தமிட்டபடி.
நான் கருவுற்றதிலிருந்தே என் அம்மா என்னுடனேயே தங்கி என்னைக் கவனித்துக் கொண்டார். ஆனால், குழந்தை பிறந்ததும், குழந்தையை முழுக்க முழுக்க நான் மட்டுமே கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. காலை அவளைக் குளிப்பாட்டுவது முதல் இரவு தூங்க வைப்பது வரை, அவளுக்கான அனைத்தையும் நானே செய்தேன். நவினுக்கு மட்டுமே உதவ அனுமதி உண்டு. கருவுற்றிருக்கும் பொழுதே குழந்தை வளர்ப்பு நூல்களை எல்லாம் தேடி தேடி படித்திருந்தேன். ஆனாலும் அவளைப் பார்த்துக் கொள்வதில் பல சந்தேகங்கள். அனைத்திற்கும் நேரம் பார்க்காமல் டாக்டரான மாரி அண்ணாவை அழைத்து உதவி கேட்பேன். ஒரு முறை குழந்தை ஓயாமல் அழுதுகொண்டே இருந்தாள். அது பயப்பட வேண்டிய விஷயம் அல்ல என்று மாரி அண்ணா முன்னரே கூறியிருந்தார். ஆனாலும் அவள் அழுவதை மனம் தாங்கவில்லை. அவளைச் சமாதானம் செய்ய நான் செய்த அனைத்து முயற்சிகளும் தோற்றுவிட்டன. அப்பொழுது என் அம்மா வந்து அவளை வாங்கிக் கொண்டு அவர்களில் மடியில் குப்பற படுக்க வைத்து மெல்ல முதுகைத் தடவிக் கொடுத்தார். அவ்வளவுதான் சட்டென்று குழந்தை அழுகையை நிறுத்திவிட்டுத் துயில ஆரம்பித்தாள். அழுகையை நிறுத்திவிட்டாள் என்ற நிம்மதி தோன்றினாலும் என் அம்மாவின் மீது பெரும் பொறாமை தோன்றியது. இதற்கு முன்பு எவரிடத்திலும் அப்படி ஒரு தீவிரமான உணர்வு எழுந்ததில்லை. வெண்முரசு முழுக்க கண்ணனின் அன்பிற்காக அன்னைகள் பொறாமை கொண்டு பூசலிட்டுக் கொள்வது ஏன் என்று அப்பொழுது உணர்ந்து கொண்டேன். அவ்வுணர்வு அன்னைகளுக்கு மட்டுமே உரியது.
வயிற்றில் இருக்கும்பொழுதே குழந்தைக்குப் பல வகை இசைகளை அறிமுகம் செய்திருந்தேன். தினமும் இரவு அரை மணி நேரமாவது இசை கேட்போம். சைதன்யா ஹிந்துஸ்தானி மற்றும் மேற்கத்திய இசைகள் கொண்ட பட்டியலை எனக்குத் தயாரித்து அனுப்பியிருந்தாள். அதுவல்லாமல், தமிழ் கர்நாடக சங்கீதமும் சில கிருஷ்ணன் தாலாட்டு பாடல்களும் கேட்போம். குழந்தை பிறந்து சில நாட்களுக்குப் பின், பின்னிரவில் ‘ஆயர்பாடி மாளிகையில்’ பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தோம். அப்பொழுது, ‘நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியபின் ஓய்வெடுத்து தூங்குகிறான் தாலேலோ’ என்ற வரி வந்தபொழுது நவின் மிகுந்த ஆர்வத்துடன் “குழந்தையின் பெயர் இது தான். முடிவு செய்துவிட்டேன்” என்றான். அவனது ஆர்வம் என்னிலும் பிரதிபலிக்க அவனைப் பார்த்தேன். “மானசா” என்றான். சட்டென ஆம் அதுவே அவள் என்று தோன்றியது.
என் கர்ப்பக்காலம் முழுவதும் என் அணுக்கத்துணையாக இருந்த வெண்முரசிலிருந்து குழந்தைக்குப் பெயர்சூட்ட வேண்டும் என்பது என் ஆசை. மொத்த வெண்முரசும் மானசாவிலிருந்தே தொடங்குகிறது. எங்கள் புத்தக அறைக்குச் சென்று புராணக் கலை களஞ்சியத்தை எடுத்து வந்து மானசா தேவி பதிவை வாசித்தேன். அந்தப் பதிவில் ஒரு தகவல் என்னை மேலும் ஆர்வம் கொள்ள செய்தது. மானசா தேவி கிருஷ்ண பரமாத்மாவை வேண்டி மூன்று யுகங்களாகத் தவமிருந்தாள். அவள் வேண்டுதலின் பலனாகக் கிருஷ்ணன் துவாபர யுகத்தின் முடிவாக மண்ணில் தோன்றினான். கருவிலிருந்தே கிருஷ்ணனின் கதை கேட்டு தவத்தில் இருந்தவளுக்கு இதைவிட பொருத்தமான பெயர் ஏதுமில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆய்வாளர் ஜெயக்குமார் நடத்திய ஆலயக்கலை வகுப்பின் ஒரு பகுதியாக ஹம்பி பயணத்தை ஒருங்கிணைத்தோம். அதில் ஹம்பி விருபாஷர் ஆலயத்தில் மானசாதேவியின் சன்னதி முன் நின்று முதற்கனலின் முதல் அத்தியாயத்தை வாசித்தோம். மானசாதேவி ஆஸ்திகனை அருகமர்த்தி பேசிக் கொண்டிருந்தாள். அப்போது மானசா என் கருவில் இருந்தாள் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
மிகச் சிறந்த உணர்வுகளின் வெளிப்பாடு உனது எழுத்தின் நடையில் தெரிகிறது.
மானசா என்ற மான்குட்டியின் பெயராக்கமும் அதனைத்தொடர்ந்த உனது விளக்கமும் ஒரு தாயின் முதலனுபங்களை வெளிப்படுத்திய விதமும் மிக அருமை.
எனது பேத்தியின் அழகிய உணர்வுகளை அவள்
அவள்அ ழகிய தமிழில் வெளிப்படுத்தியிருக்கும் விதம் என்னைப்பளகாங்கதப்டுத்தி விட்டது.
இந்தப்பிறப்பின் பெருமையை உணரத்திய தருணமிது. வாழ்க வளர்க.
ஆஹா ஆஹா அருமையான பதிவுசகோதரி.குழந்தை பிறப்புதற்கு முன் எடுத்த வைகள், பிறந்த பின் அருமை அருமை. வாழ்க வாழ்க வாழ்க வளர்க. பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து.கைபேசிஎண்:9113988739.
முதல் கட்டுரையே மிக பிரமாதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் கிருபா
நன்று. மகிழ்ச்சி. ரோகிணி நட்சத்திரம் கிருஷ்ணனோடு தொடர்புடையது எனினும் ரிசப ராசி ஆகையால் பெரிய சிவபக்தையாக வாழ் வாய்ப்புண்டு. என் சொந்த அனுபவம். ரிசப-ரோகிணியோடான என் வாழ்க்கை.
கிருபாவை தாய்மையடைந்த பருவத்தின் கோயம்புத்தூரில் அவர் வீட்டில் பார்த்தேன். வரவேற்று நன்றாக உபசரித்தார். அவர் முகத்தில் தான் தாயாகப்போகிறேன் என்ற பரவசமும் உடற்களைப்பில் சற்று சோர்வும் தென்பட்டது. ஓர் இளம் தாய்க்கு உண்டாகும் தன் வயிற்றுக் குழந்தையை கையில் ஏந்திக் கொஞ்சவேண்டும் துடிப்பையும் பார்த்தேன். அந்தத் துடிப்பு இக்கட்டுரையில் சுய அனுபவமாக எழுதிக் காட்டியிருக்கிறார். இளம்தாயின் மெல்லுணர்வுகள் நன்றாக வெளிப்பாட்டிருக்கிறது. புத்தம் புதிய தாய்க்கும் தந்தைக்கும் சேய்க்கும் வாழ்த்துகள்.
The passage beautifully encapsulates the themes of motherhood and the enduring bond between a mother and her child, framed by the backdrop of “நீலம்” and “வெண்முரசு.” The act of naming the child “மானசா” signifies not only a tribute to the goddess but also a sublimation of thought that the narrator embodies with “வெண்முரசு.” An engaging and captivating read!
வெண்முரசு எப்படி வாழ்வில் அன்பும், பொறுமையும், கனிவும் ,பக்குவமும் பெற வெண்முரசு உதவும் என்பதை இந்தக் கட்டுரை காட்டுகின்றது.