தலைசிறந்த உலக எழுத்தாளர்கள் எழுதி எழுதி கூர்மையான இலக்கிய வடிமாகச் சிறுகதையை வளர்த்தெடுத்துள்ளனர். கவிதையின் சொல்லாப் பொருளும் கட்டுரையின் தகவல் செறிவும் நாவலின் காட்சிப்படுத்தலும் கூடிய மிக நுட்பமான இலக்கிய வெளிப்பாடாக இன்று சிறுகதை உள்ளது.
ஒரு நல்ல சிறுகதை உருவாக இவையெல்லாம் கட்டாயம் இருக்கவேண்டும் என யாரும் கட்டளையிடமுடியாது. காற்றில் மிதக்கும் இலை, வெளியின் அத்தனை வண்ணங்களையும் மணங்களையும் குணங்களையும் தன்னகத்தே சேர்த்தபடி, காற்றின் போக்கிலேயே தன்னிடத்தைச் சென்றடையும். அதை வலிந்து பிடித்து இடம்சேர்க்கும்போது, அதில் வண்ணங்களிருந்தாலும் மணமோ, குணமோ அடைந்திருக்காது.
யதார்த்தமான ஒன்றில், எழுத்தாளர் கண்டடையும் புதிய ஒன்றை வாசகனுக்கு உணர்த்தும்போது அது சிறந்த சிறுகதையாகிறது.
அவ்வகையில் சிகிரி மார்க்கம் வாசித்து, விவாதிக்கப்பட வேண்டிய தொகுப்பு.
‘அத்தர்’ சிறுகதைத் தொகுப்பால் தமிழ் வாசகர்களின் கவனத்தை ஈர்த்த ரியாஸின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு சிகரி மார்க்கம்.
தமிழகத்திலிருந்து இலங்கை, சிங்கப்பூர், இந்தோனேசியா, துபாய் என்று கடலாடியும் கடல்தாண்டியும் வாழ்க்கையைத் தேடும் மனிதர்களின் கதைகளைச் சொல்லும் தொகுப்பு. பல்வேறு அனுபவங்கள், வெவ்வேறான சிந்தனைகள் என மொத்தம் ஒன்பது சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தின் தஞ்சைப் பெருநிலத்தை அடுத்துள்ள கடற்கரைப் பகுதியை ஒட்டி வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கையை அவர்களது நம்பிக்கைகள் ஊடாக சொல்லிப் பார்க்கிறார் ரியாஸ். அண்மைக் காலத்திலிருந்து நூறாண்டுகளுக்கு முன்னர் வரையிலான வெவ்வேறான காலகட்டங்களை, அந்தந்தக் காலத்துப் பேச்சு வழக்குகளாலும் சூழல்நிலைகள், வாழ்க்கை முறைகளாலும் காட்சிப்படுத்த முனைகிறார்.
கடலில் ஒரு காலும் நிலத்தில் ஒரு காலுமாக வாழும் இந்த மக்களிடம் புலம்பெயர் புலம்பல்கள் இல்லை. வாழ்ந்த நிலத்தை விட்டுச் சென்ற வருத்தங்கள் இல்லை. புதிய நிலத்தில் அமைந்த வாழ்வோடு ஒட்டிக்கொள்ளும் அதே இயல்புநிலையோடு, மீண்டும் தாய்நிலத்துக்குத் திரும்பும் யதார்த்தவாதிகள் இவர்கள். பொருளோடு பல்வேறு அனுபவங்களையும் சேகரித்தவர்கள். மொழிப் பிரயோகங்களையும் பண்பாட்டுப் பரிமாற்றங்களையும் சுமந்து திரிபவர்கள்.
மானுட நம்பிக்கை எனும் மையச் சரட்டை இறுக்கிப் பிடித்தபடி, இடர்பாடுகள், மனச்சிக்கல்களின் அலையாடல்களுக்கிடையே வாழ்க்கையை நீந்திக் கடக்க பிரயத்தனப்படும் இந்த மனிதர்களை, வியப்பும் மிகைப்பும் பழிப்பும் மதிப்பீடுகளும் இன்றி எழுத்துக்குள் நிறுத்தி வைக்கும் சாகசம் ரியாஸுக்கு கைவருகிறது.
எமலியும் ஹலிமாவும் பெம்லாவும் பெத்தம்மாவும் மன்சூரும் சாகிபுவும் ஏழாவது வனத்தில் வீடு கொள்பவனும் வாழ்க்கையை முழு ஈடுபாட்டுடன் நம்பிக்கையுடனும் வாழ்கின்றனர். அதேவேளையில் வாழ்க்கைக்குள் மூழ்கித் தங்களைத் தொலைத்துவிடாத தன்மையில் தனித்து நிற்கின்றனர்.
இஸ்லாம் தந்த கொள்கை வளம், முஸ்லிம்களின் புலம்பெயர்வைத் தனித்தன்மையானதாக ஆக்கியுள்ளது. பிற சமுதாயங்களுடனும் பண்பாடுகளுடனும் ஊடுபாவக்கூடிய இத்தன்மையை பதிவு செய்யும் முயற்சியை ரியாஸ் கைக்கொண்டுள்ளார்.
எடுத்துக்காட்டாக, ‘பிறைக்கொடிக் கப்பல்’ கதையில் அரிசிச் சோறும் சேவல்கறியும் படைத்து, மரத்தில் படகு கட்டி அந்த ஊர் மக்கள் நேர்ந்துகொள்கிறார்கள். நேர்ந்துகொள்ளும் இந்த வழக்கம், உள்ளூர் சமுதாயங்களுடன் இஸ்லாமியம் கலக்கும் தருணத்துக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இத்தகைய வழமைகளை தமிழக கிராமங்களில் வாழும் முஸ்லிம் சமூகங்களில் நாட்டுப்புற நம்பிக்கைகளாகப் பார்க்கலாம். தூய்மைவாதிகள், புத்துயிர்ப்புவாதிகளால் அழிந்தொழிந்து வரும் இதுபோன்ற எண்ணற்ற நாட்டுப்புற நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் தொகுக்கப்படுவதும் பதிவாவதும் முக்கியமானது.
அதேபோல், சிகரி மார்க்கம் கதையில் விதவையான, வயதுகூடிய பெண்ணை தம்பி மணம் செய்வதை விரும்பாத அண்ணன் இருவரையும் அடிக்கிறார். தம்பியின் செயல் சமூகத்துக்கு ஒவ்வாததாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இது இஸ்லாத்துக்கு எதிரானதல்ல. ஏழையான முகம்மது நபி, வயதுகூடிய, விதவையான கதீஜாவை மணம் செய்துள்ளார். இங்கே, பன்முகச் சமூகத்தின் பிற பண்பாட்டு மதிப்பீடுகள் அண்ணனிடமும் அவர் சார்ந்த சமூகத்திலும் ஆட்கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
அதுவே, ‘மீரான் (எ) மரியா’ கதையில் ஹாஜா சீட்டாடி சீட்டாடி எல்லாவற்றையும் இழக்கிறார். அவர் மனைவியும், மற்றவர்களும் அதுகுறித்து எதுவுமே சொல்லாதிருக்கின்றனர். அக்கதையில் சீட்டாட்டம்தான் மைய இழையாக கதையைப் பின்னிச் செல்கிறது. சூதாடுவதை இஸ்லாம் தடைசெய்துள்ளது. ஆனால், அக்கதையில் சூதாட்டம் மூலம் ஏமாற்றிப் பிடுங்குவதே குற்றமாகிறது. அக்குற்றத்துக்கே தண்டனையும் வழங்கப்படுகிறது. கரையோர மீன்பிடி சமூகத்தின் பாசாங்குகள் அற்ற அந்த வாழ்க்கை வழியாக, இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளியைக் கண்டுணர வாய்ப்பாய் இக்கதை உள்ளது.
இத்தகைய யாதார்த்தமான வாழ்க்கையின் தரிசனங்கள், இஸ்லாமிய நம்பிக்கை குறித்த பெருங்கதையாடலுக்கு வெளியே உலவும் வாழ்க்கைக் கதைகளாக மதிப்பு பெருகின்றன.
மேலும், பெத்தம்மா கதையில் வரும் பெத்தம்மா என்ற வார்த்தை, தமிழ் பேசும் முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் தெலுங்குப் பரப்பையும் விழுமியங்களையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
றாத்தா, காக்கா, பெத்தம்மா போன்ற உறவுமுறைச் சொற்கள், ரங்குப்பெட்டி போன்ற முஸ்லிம் பயன்பாட்டுச் சொற்கள் மூலம் பண்பாட்டு ஆய்வுகளுக்கு ஆவணமாகவும் இக்கதைகள் உள்ளன.
கதை வழி அனுபவத்துக்கு அப்பால், இஸ்லாமிய அறிதல் முறைக்குள் தொய்த்தும் உதறியும் அச்சமூகத்தின் பல்வேறுபட்ட பண்பாடுகளையும் தொன்மங்களையும் அறியத்தரும் நோக்குடன் ரியாஸ் தொடர்ந்து எழுதி வருகிறார்.
சிகரி மார்க்கம் தொகுப்பில் ‘சிங்கா’. ‘பிறைக்கொடிக் கப்பல்’, ‘நகுதா’, ‘மீரான் (எ) மரியா’ ஆகியவற்றைக் குறிப்பிடத்தக்க சிறுகதைகளாகச் சொல்லலாம்.
‘சிங்கா’, மிகை யதார்த்தவாதக் கதை. இக்கதையில் பல சாத்தியப்பாடுகளையும் நிகழ்த்திப் பார்த்துள்ளார் ரியாஸ்.
சிங்கத் தலையும் மீன் உடலும் கொண்ட மெர்லையன் மலாய் நாடோடிக் கதைக்கும், சீனர்களின் கடல்நாக நம்பிக்கைக்கும் கற்பனையூட்டி சிங்காவைக் உருவாக்கியுள்ளார் ரியாஸ். 1970களில் சிங்கப்பூரின் பணிவன்புச் சின்னமாக உருவான சிங்காவை, குதிரை வண்டிகள் ஓடிய, போலிஸ் நிலையத்தை டாணா என்று அழைத்த 19ஆம் நூற்றாண்டு காலகட்டத்துக்குக் கூட்டிப்போய் சர்க்கஸ் வித்தை காட்டுகிறார். மாயமும் கற்பனைகளுமாக, சிங்கப்பூரின் ஒரு காலகட்ட வாழ்க்கையில் ஒரு துண்டை வெட்டிச் சுவைக்கத் தருகிறார். 1940களில் கடைசியில் சிங்கப்பூரில் சிலமுறை சர்க்கஸ் படைத்திருக்கும் கமலா சர்க்கஸை, கதைக் களமாக்கி, நம்பிக்கைக்கும் உண்மைக்குமான மயிரிழையில் கதை சொல்கிறார்.
தனது அறிவுத்திறனைவிட சந்தா சாகிபுவின் மந்திரத்தில் நம்பிக்கைகொண்ட இன்ஸ்பெக்டர், தன் கனவுகள் மீதான நம்பிக்கையில் கோலோச்சும் சந்தா சாகிபு, எல்லாவற்றையும் எப்படியும் படியச் செய்துவிடலாம் என்று நம்பியிருக்கும் சர்க்கஸ் சங்கரன், போகும் இடத்தையெல்லாம் காடென நம்பும் சிங்கம் என்று மாறுபட்ட பாத்திரங்களாலும், சரசரவென்ற நடையாலும் கச்சிதமாக அமைந்துள்ள கதை.
வெளிநாட்டு வேலை என ஏமாற்றப்படும் எளிய மக்கள் பற்றிய வழக்கமான கதை ‘பிறைக்கொடிக் கப்பல்’. ஆனால், சொல்லும் முறையாலும் களத்தாலும் முடிவுத் தருணத்தாலும் அதைச் சுவாரஸ்மாக்கியிருக்கிறார் ரியாஸ்.
துயரமிகு வாழ்வெங்கும் வெளிச்சக்கோடாகப் பளிச்சிடும் நம்பிக்கையில், பஞ்சமும் பசியும் கடும் உழைப்பும் ஏமாற்றப்படுதலின் வலியும் கடந்தவையாகி விடுகின்றன.
செவத்தக்கனியும் அலிமாபூவும் சிரம வாழ்க்கையிலும் கனவுகளோடு மகனையும் மகளையும் வளர்க்கின்றனர். இருந்த ஒரே சொத்தான பச்சை மாலையை விற்று மகன் மன்சூரை துபாய் அனுப்ப ஏற்பாடு செய்கின்றனர். அவனால் அரிசிச் சோறும் பவுடர், சோப்பு, அத்தர் போன்ற பொருள்களுடனும் வாழ்க்கை ஒருபடி உயருமென அப்பா கனவு காண்கிறார். தங்கள் பணக்காரத் தோழியின் நிலைக்கு பலபடிகள் உயரப்போவதாக எண்ணுகிறாள் தங்கை செல்வி. தங்கள் பிள்ளைகள் தங்கள் விதியை மாற்றிவிடுவார்கள் என்று ஊரில் பல செவத்தக்கனி குடும்பங்கள் நம்பிக் காத்திருக்கின்றன.
மன்சூரும் மற்றவர்களும் ஏமாற்றப்படுகிறார்கள். மும்பையில் அவர்கள் தவித்து நிற்கிறார்கள்.
பெற்றோரின் கனவு, ஊரின் கனவு, தனது கனவு எல்லாவற்றையும் தொலைத்த ஒருவனுக்கு முன்பின் தெரியாத இடத்தில் ஆட்டோக்காரன் காட்டும் கருணையும் எவரோ கொடுத்த உணவும் ஏதோ ஒரு நம்பிக்கையைத் தருகின்றன.
மூழ்கிய வாழ்க்கை மீண்டும் எழும் கனவைத் தேடி, ஆண்டாண்டு கால உறக்கத்துக்கு மன்சூர் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும்போது, இருத்தலியக் கேள்விக்குள் கதை நகர்கிறது.
எளிய மக்களின் கனவுகளை, கனவுகளாகவே பத்திரப்படுத்திவிடும் வாழ்க்கை முரணைச் சமன் செய்வதாக பாவனை செய்யும் தருணங்களைச் சொல்லிப் பார்க்கிறார் ரியாஸ்.
இதை செல்வியின் கனவு வழியாகவும் காட்டுகிறார்.
எத்தனையோ மைல் தூரத்தில் மும்பாயிலிருந்து கிளம்பும் கப்பல், தமிழக கடற்கரையோர சிறு ஊரில் வாழும் செல்வியின் கனவில் வருகிறது. அவளுடன் ஆசையாகப் பேசுகிறது. சாபிரா என்ற தன் பெயரை செல்வி என்று மாற்றிக்கொள்கிறது. பச்சைப் பிறக்கொடியுடன் தங்க எழுத்துகளில் செல்வி எனப் பெயர் பொறித்த அந்தக் கப்பல் அவள் கனவுகளில் ஆர்ப்பரிக்கிறது. ஒருநாள், எல்லார் வீடுகளின் முன்னாலும் நின்ற எல்லாக் கப்பல்களும் மக்களைக் கைவிட்டதற்கு கண்ணீருடன் அவளிடம் மன்னிப்புக்கேட்டபடி கடலில் மூழ்குகின்றன. சாபிரா கப்பலும் அவள் அம்மாவின் பச்சை மாலையை அவளிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு மூழ்கிவிடுகிறது.
செல்வியின் குழந்தைமையையும் தோழியுடன் போட்டிபோடும் அவளது யாதார்த்தத்தின் கொடூரத்தை அறியாத குழந்தை உலகையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
நகுதா சுவாரசியமான வாசிப்பைத் தரும் சிறுகதை. ஹலிமா தன் கணவனையும் அவன் குடும்ப சாபத்தையும் எதிர்கொள்வதும் அவளின் உள்மனத்தின் நேர் எதிர் திசையிலான நகர்வும்தான் கதை.
தங்கக் காசுகளைத் திருடிய தன் கணவன் குடும்பத்தின் மீது விழுந்த இழிச்சொல்லை தங்கத்தாலேயே மறைக்கச் செய்துவிடும் நம்பிக்கையில் சுழல்கிறாள் ஹலிமா.
சிங்கப்பூரில் நண்பர் கோழி மரைக்கான் கொடுத்துவைத்திருந்த இரண்டு தங்க நாணயங்களை அவன் இறந்ததும் அபகரித்துக்கொள்கிறான் சேந்த மரைக்கான். அவனது கப்பவீடு சடசடவென்று சரிகிறது. சொத்துகளை இழக்கிறான், அவனும் இறந்துவிடுகிறான். கடை பறிபோகிறது. பிள்ளைகளும் வாழ்க்கையைத் தொலைக்கின்றனர். பயண வண்ணத்தி பறக்கும் கப்பவீட்டில் மகிழ்ச்சியாக வாழ கனவுகளோடு வந்த ஹலிமாவுக்கு, அந்த வீட்டின் சாபங்கள் பற்றியோ சரிவுகள் பற்றியோ எந்தக் கேள்வியும் இல்லை. அவளுக்கு குழந்தை பாக்கியமில்லை என்று குறிசொல்லப்பட்டபோதும் சலனமின்றிக் கடக்கிறாள். வளர்த்த மகன் எடுத்தெறிந்து சென்றபோதும், தன் வீடு வளமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதிலேயே கவனம் செலுத்துகிறாள்.
சிங்கப்பூர் உணவங்காடி தேநீர் கடையொன்றில் கால்கடுக்க வேலை பார்க்கும் கணவனை துரத்திக்கொண்டே இருக்கிறாள். அசதிக்கு கால்நீட்டிக்கூடப் படுக்கமுடியாத ஓரறை வீட்டுக்குள், உணவையும் உறக்கத்தையும் எளிய வசதிகளையும் சுருக்கி, ஒவ்வொரு காசாகச் சேர்த்து சேர்த்து கணவன் அனுப்பும் பணத்தையெல்லாம் நகைகளாக்கி தன்மேல் பூட்டிக்கொள்கிறாள்.
“என்னிடமிருக்கும் நகைகளுக்கு இரண்டு தங்கக் காசுகள் எம்மாத்திரம்” என்று ஊருக்கெல்லாம் சொல்லாமல் சொல்கிறாள். தன் இறுக்கத்தாலும் கறார் தன்மையாலும் எந்த வலியும் துயரும் தங்கள் குடும்பத்துக்கு இல்லை என்பதை வலியுறுத்தி வலியறுத்தி கோழி மரைக்கான் சாபத்தை இல்லாமலாக்க முயல்கிறாள்.
அப்பாவின் மஞ்சள் பையிலிருந்து நகுதா கண்டெடுத்த தங்க நாணயங்களை கோழி மரைக்கான் வீட்டுக்குள் வீசியெறியும்போது, கதை உயிர் பெறுகிறது.
கற்பனைகளும் கனவுகளுமாக மலர்ந்திருக்கும் இளம் பெண் ஒருத்தி, மணவாழ்வில் தன் சிறகுகளை முறித்துப்போட நேரும்போது வேறொருத்தி ஆவதைச் சொல்லும் கதை.
‘மீரான் (எ) மரியா’ கதையில் வாழ்க்கை எனும் வட்டச் சுழற்சியின் நிதர்சனத்தை தன் பாணியில் முன்வைக்கிறார் ரியாஸ்.
அமலி, தன் குடும்பத்தின் மீது விழுந்த சாபத்தில் நம்பிக்கை கொள்கிறாள். அச்சாபத்தைத் துடைப்பதையே வாழ்தலின் இலக்காக்குகிறாள். நண்பன் ஹாஜாவுடன் சூதாடி அவனது பெரும் சொத்தையும் அவன் வாழ்வையும் அபகரித்த அவள் கணவன் செபாஸ்டியன், குடியாலும் நோயாலும் நலிவடைகிறான். உடல் முடியாத நிலையிலும் மரியா படகை மீட்கும் அவனது போராட்டம், அவளுக்கு கருநிழலாய் படிந்துவிட்ட சாபத்தைத் துடைத்தொழிப்பதின் இறுதி நம்பிக்கையாகிறது. படகுக்காக அவன் பிரார்த்தனை செய்ய, அவனுக்குத் தெரியாமல் சாபத்திடம் அவள் மன்றாடுகிறாள். இலங்கை நீதிமன்றத்தில் செபாஸ்டியன் போராடி மீட்ட படகில் தான் வளர்த்த ஹாஜாவின் மகன் மீரான் கம்பீரமாக ஏறி வருவான் எனும் நம்பிக்கையில் கைகட்டி கடற்கரையில் காத்திருந்த அமலியின் நம்பிக்கை, தூக்கிப்போட்டு விளையாடும் கால அலைகளில் மனித வாழ்வை நிறுத்திப் பிடிக்கிறது. கதை முழுவதும் அமைதி காக்கும் பெண்களின் குரலே ஒலித்துக் கொண்டிருக்கிறது.
கதையின் முடிவில், ஹாஜாவின் மகன் தலையில் சூடப்பட்டிருந்த ‘கருவேலம்’ கிரீடம் கம்பீரமாகக் காட்சியளித்தது எனும்போது ஒருவனின் தோல்வி தனக்கான தண்டனையா அல்லது எதிராளிக்கானதா என்ற கேள்வி எழுகிறது.
பெம்பலா சிறுகதையின் நாயகன் தனக்குள்ளேயே விடுதலையைத் தேடுபவன். வட இலங்கையிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிமான அவன், அலைக்கழிக்கப்பட்டு, குடும்பத்தைத் தொலைத்து, தமிழகத்தில் கரையொதுங்குகிறான். வாழ்வு சீரழிந்த நிலையிலும் அவனுள் மானுட நம்பிக்கை மகத்தான ஒளியுடன் மிளர்கிறது. குண்டடிபட்ட காலை இழுத்து இழுத்து ஊருக்கெல்லாம் உதவுகிறான். ஊர்மக்களின் நல்லெண்ணமும் அன்பும் பெருகப் பெருக அவன் மனம் விடுதலையை நோக்கி விரைகிறது. அவனுக்கு மணமுடித்து அவனை அந்த நிலத்தில் ஒட்ட வைக்க முடிவெடுக்கிறார்கள். அடையாளங்கள் தொலைந்து, பெயரும் ஊரும் உறவுமற்ற பெருவெளியாகி விட்ட அவன் வாழ்வில் மீண்டும் அடையாளங்களைத் திணிக்க எத்தனிக்கும்போது திணறுகிறான். நிலம் அவனுக்கு விலங்காகிறது. கட்டவிழ்த்து கடலுக்குள் ஓடிக் காணாமல் போகிறான்.
ஏழாவது வானத்தில் வீடு சிறுகதையில் கொவிட்-19 நெருக்கடி காலத்தில் வாடகை கொடுத்துக் கட்டுப்படியாகாமல், குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட்டு, அடுத்த வேளை தங்க இடமின்றி சிங்கப்பூர் பூங்காவொன்றில், வானத்துக் கீழே படுத்துக்கிடக்கிறான் கதைசொல்லி. அவன் மீது இலந்தை மர நிழலாய்ப் படர்கிறது, அநாதரவாக நின்ற அவனுக்கும் அவன் தாய்க்கும் ஆதரவளித்த பெத்தம்மா, அவனுக்குள் வளர்த்திருந்த வாழ்வின் பெரு நம்பிக்கை.
உரிமையில்லை என்று விரட்டிய உறவுகளைத் துறந்து, தனித்து நின்ற அவன் தாயின் உறுதி, அந்தக் கையறு நிலையில் அவனை ஆசுவாசப்படுத்துகிறது. ஒரு கரையில் வீசியெறிந்த பாத்திரங்கள் மறுகரையைச் சென்றடையும் காலத்தை அந்த நிழலில் அவன் கடத்திவிடுவான் என்பதைச் சொல்கிறது.
கடைசித் தருணம் வரையிலும் வாழ்ந்து பார்த்துவிடும் போராட்டத்துக்குள் கைபிடித்து அழைத்துச் செல்லும் நம்பிக்கையை ‘நிகரி மார்க்கம்’ சிறுகதையில் உணரலாம்.
வேறு நிலங்களில் அடையாளங்கள் எதுவுமின்றி வாழவதற்கும், அந்த வாழ்க்கையைப் பிடித்ததாக ஆக்கிக்கொள்வதற்குமான துணிவை, இருத்தலின் மீதான நம்பிக்கையே தருகிறது. விசா, பாஸ்போர்ட் எதுவுமில்லாமல் ஜோகூரில் வேலை பார்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அவன், இந்தோனீசியாவிலிருந்து கள்ளத்தனமாக வந்து வேலை பார்க்கும் தன்னைவிட மூத்த, இரு பெரிய பிள்ளைகளுக்குத் தாயான ரிடாவுடன் குடும்பம் அமைக்க விழைகிறான். அவன் வாழ்ந்த சமூகம் அதற்கு ஒப்புதல் அளிக்காதபோது, இந்தோனீசியாவுக்குச் செல்ல முடிவெடுக்கிறான். சட்டவிரோதமான அந்தப் பயணம் போதைப்புழங்கிக் கும்பலால் தடைப்படும்போது, அதை உடைக்க எல்லாவிதமான சாத்தியங்களையும் அவன் மனம் ஆராய்கிறது. வல்லது வெல்லும் எனும் ஆதி குணத்தை அசைத்தெழுப்புகிறது. துன்புறுத்தும் கும்பலில் ஒருவனாகி, உடன் வந்தவர்களை வதைத்து, தனக்கான விடுதலையைத் தேடுகிறான்.
இந்தக் கதையில் மையம் எது என்பதில் குழப்பம் உண்டு. தமிழ் நாட்டிலிருந்து செல்லும் இளைஞன், சமூக அடுக்குகளை எதிர்த்து வயது மூத்த, இந்தோனீசிய மாதை மணம் முடிப்பதையா, அல்லது ஆசை என்பது மனித மனங்களை எப்படியெல்லாம் அசைத்துப் பார்க்கும் என்பதையா, அல்லது சுயம் மிகுந்த ஆதி குணத்தையா, எதை மையமாக இக்கதை கொண்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது.
ஒரு புள்ளியை மட்டுமே குறிவைத்து நகரும்போதே சிறுகதையின் ஒருமை பேணப்படுகிறது. கதைத் திருப்பங்களில் அந்த ஒற்றை மையமே பளிச்சென வெளிப்பட வேண்டும். பல மையப் புள்ளிகளை நோக்கி நகரும்போது, மையமே கலைந்துவிடுகிறது. மீரான் (எ) மரியா, பிறைக்கொடிக் கப்பல், நகுதா, ஏழாவது வானத்தில் வீடு, நிழல் உள்ளிட்ட கதைகளிலும் இந்தச் சிக்கல் உள்ளது.
ஏராளமான தகவல்களும் நிகழ்வுகளும் வாசகனின் ஊகத்துக்கு அப்பால் கதையைச் திசை திருப்பிச் செல்கின்றன. சில நேரங்களில் வாசிப்பை ஈர்க்கவும் செய்கின்றன. ஆனால் திசைதிரும்பலுக்காகவும் பலவற்றையும் சொல்லும் நோக்கத்திற்காகவும் வரும் தேவையற்ற மனிதர்களும் தகவல்களும் கதையை மைய ஓட்டத்திலிருந்து விலக்கி, சிதறலாக்கி விடுகின்றன.
உதாரணமாக பிறைக்கப்பல் கதையில் செல்வின் கற்பனைகளும் அச்சிறுமி தன் தோழியோடு போடும் போட்டியும் கதை குழந்தைகளின் மனம் குறித்துப் பேசுகிறதோ எனும் எண்ணத்தை உருவாக்குகிறது.
நகுதா கதையில், தங்க நாணயங்களை கோழி மரைக்கான் வீட்டுக்குள் வீசியெறிவதோடு கதை முடிந்திருந்தால், வாசகரின் கற்பனை வளர இடமிருந்திருக்கும்.
எதையெல்லாம் கதையாக்கலாம் என்பதை உணர்ந்திருக்கும் ரியாஸ், எங்கே முடிப்பது என்பது குறித்தும் ஒரு பரிசீலனை செய்து பார்க்கலாம்.
முழுமை பெறாத ‘நிழல்’ கதையும், சராசரி அறநெறிக்கதையான ‘மலே பாஜு’ கதையும் இடங்கள், தகவல்கள், நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்காகவே ரியாஸ் கதை எழுதுகிறாரோ என நினைக்க வைக்கின்றன. அறியப்பெறும் வெவ்வேறு ஊர்கள், மக்கள் குறித்த சம்பவங்கள், நிலங்கள், சிறு – பெரு விஷயங்கள் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்ற ரியாஸின் தவிப்பு சில சமயங்களில் புனைவோட்டத்துக்கு தடையாக இருக்கிறது.
வாசிப்பைத் தூண்டும் வழுக்கிச் செல்லும் நடையும் சொல்லாடலும் ரியாஸின் சிறப்பு.
வாக்கிய அமைப்பிலும், எழுதியதை மீண்டும் மீண்டும் படித்துச் செறிவாக்கும் பயிற்சியும் கதைகளின் தரத்தை மேலும் உயர்த்தும்.
எடுத்துக்காட்டாக, “ஒருநாள் சிலோனில் இருந்து கோட்டையூருக்கு வரும் சரக்குப் படகு நெய்னார் சர்வீசில் செவத்தகனியும் அலிமாப்பூவும் ஜோடியாய் வந்திறங்கினர்” என்ற வரிக்கு அடுத்த வரி இப்படியிருக்கும்: “காங்சேந்துறையில் இருந்து கோட்டையூருக்கு வந்திறக்கும் சரக்கு மெயிலில் செவத்தகனி ஜோடியாக வந்திறங்கினார்…”
வாழ்க்கை அள்ளிக்கொட்டும் அனுபவங்களை ஒரே மாலையாகத் தொடுத்துப் போட்டுப் பார்ப்பது பெருங்கதையாடல் என்றால், ஒவ்வொன்றையும் ஒரு பூ போல சூடி, அதன் நிறத்தையும் மணத்தையும் குணத்தையும் தனித்தனியே உணரத் தருவது சிறுகதையாடல்.
ஆன்மீகம் தரும் உள் வெளிச்சமும் இதுவாகவே உள்ளது.
அது, மனிதனைச் சுற்றி அகத்திலும் புற உலகிலும் நடக்கும் செயல்களை தனித்தனிக் கூறுகளாக்கி, அவையெல்லாமே இந்தப் பேரண்டச் செயல்பாட்டின் பகுதிகள் என்ற அறிதலைத் தருவது. வித்தியாசங்களை ரசிக்கச் சொல்லித் தருவது. ஜென், சூஃபியிசம் போன்றவற்றின் பாதைகள் இவை. இதில் பயணிக்கும் ரியாஸ், தன் கதைகளையும் கதை மாந்தர்களையும் அவ்வழியிலேயே இழுத்துச் செல்ல விரும்புகிறார்.
அதில் முழுமையான வெற்றிபெற, அவர் வாசகருக்கு இடம்கொடுக்க வேண்டும். அவர்களைக் கற்பனைசெய்ய வைக்கவேண்டும். ஊகித்து உணர்ந்து சென்று அடைவதற்கான வழி இருக்க வேண்டும்.
அவ்வாறான கலை நேர்த்தியும் கைக்கூடும்போது ரியாஸ் இன்னும் முக்கிய எழுத்தாளராக அறியப்படுவார்.
ரியாஸின் ‘சிகரி மார்க்கம்’ பற்றிய விமரிசனம் லதாவால் ஆழ்ந்த பார்க்கப
பட்டுள்ளது. அவருடைய நுணுக்கமான பார்வை சிறுகதையின்பால் அவருக்குள்ள ஆழமான புலமையை உணர்த்துகிறது. இந்நீண்ட கட்டுரையில் கூறப்பட்டுள்ள செய்திகள் ரியாஸுக்கு மட்டுமன்றி இலக்கிய ஆர்வலர்களுக்கும் உதவியாக இருக்கும்.
கே. முகம்மது ரியாசின் சிகரி மார்க்கம் நூல் பார்வையை வாசிக்கும்போது இந்து முஸ்லீம்களின் கடலோடி வணிகர்களின் சிக்கலான வாழ்க்கையைச் சொல்லும் கதைகளாக இருக்கின்றன. இந்து முஸ்லீம் வணிகப் பயணத்தில் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் ஒரு குறிப்பிட்ட காலக்கட்ட வாழ்க்கையை காட்டி நிற்கும். அவர்களின் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான காலகட்டம். லதா கோடிகாட்டும் கதைச் சித்திரங்கள் வாசக இன்பத்தை நல்குபவை. கதைகளின் சாரம் கெடாமல் எழுதப்பட்டுள்ளது.