“வேப்டியான் கத சொல்லு தாத்தா,” என்றாள் அம்மு.
இப்போதெல்லாம் இரவானால் பேத்திக்கு நான் கதை சொல்ல வேண்டியுள்ளது. நன்றாக வாயடிக்கவும் பழகியிருந்தாள். என்னிடம் கதைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால், பேய்க் கதைகளைச் சொல்லி, அவளிடம் தேவையில்லாத பயத்தைப் புகுத்துவதில் எனக்கு அவ்வளவாக ஒப்புதல் இல்லை.
பேய் என்பதை வேம்படியான் என்றே அவளுக்குப் பழக்கியிருக்கிறேன். என் அப்பா அப்படித்தான் சொல்வார். பெரும்பாலும் திட்டுவார். அவர் வழியாக அச்சொல் என்னிடம் தொற்றிக் கொண்டது. அது அவள் வாயில் வேப்டியானாக மருவி வந்தது.
ஒருவகையில் அச்சொல் எங்கள் குடும்பத்திற்குள் மட்டுமே புழங்கியது. பரம்பரையில் யாருக்காவது துர்மரணம் நிகழ்ந்தால் வேப்பமரத்தை நட்டு வைத்து வழிபடும் பழக்கம் முன்பு இருந்ததாம். இறந்தவர் பேயாக வந்து தொல்லை கொடுக்காமல் இருக்க வேம்படியான் என்றே அம்மரத்தை இறந்தவர் நினைவாக வழிபட்டனராம். துர்மரணம் சம்பவித்து இறந்தவர் யார் என எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. எங்கள் குடும்பம் அந்த வழிபாட்டில் இருந்து விலகி வந்திருக்கலாம். சொல் மட்டுமே எங்களுடன் ஒட்டிக் கொண்டு வந்தது.
“நாளைக்கி சொல்லுறேன்டா அம்மு,” என்றேன். முழுமையான பெயர் அமுதவரசி. அமுதத்திற்கெல்லாம் அரசி போல இனிமையானவள்.
“நேத்தும் இப்புடிதான் சொன்ன…” என முதுகைக் காட்டிப் படுத்துக் கொண்டாள். அவள் அப்பனைப் போலவே அலையலையான கேசம். வருடிக் கொடுக்கக் கையெடுத்துச் சென்றபோது வெடுக்கென என் பக்கம் திரும்பியவள், “நாளையிலேருந்து நா அப்பா ரூம்புலயே படுத்துக்குறேன் போ,” என்றாள் கோபமாக. அவள் பேசும் ஒலி அறைக்கு வெளியே கேட்டுவிடுமோ எனப் பயமாக இருந்தது. மகன் உள்ளே வந்தால் இன்னும் தூங்கவில்லையா எனத் திட்டுவான்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். கட்டவிழ்ந்த முடி அசைந்தாடிக் கொண்டிருந்தது. பத்தாவது மாடியில் காற்றுக்குப் பஞ்சமில்லை. சன்னலைப் பார்த்தேன். கோலாலம்பூர் இரட்டை கோபுரத்தின் இரு முனைகளும் ஒளிக்கூம்புகளாகத் தெரிந்தன. அவளும் அதையே பார்த்துக் கொண்டிருக்கலாம்.
“தாத்தா பாவமில்லையா?” என்றேன் இளகிய குரலில். அவளிடம் பதில் இல்லை.
“கொஞ்சம் பேசேன்டி அம்மு,” என்றேன்.
மௌனம்தான். பிடிவாதக்காரி அவள்.
வேறு வழியில்லாமல் “செரி… பேய்க்கதயே சொல்லுறேன்,” என்றேன் ரகசியக் குரலில்.
உண்மையில் என்னிடம் நான்கு பேய்க் கதைகள் இருந்தன. நான்குமே பிளாக்காயனோடு சம்பந்தப்பட்டவை. அக்கதைகளை இதுவரை நான் யாரிடமும் பகிர்ந்ததில்லை. என்னிடம் யாருமே பேய்க் கதைகள் சொல்லக் கேட்பதுமில்லை.
எனக்குப் பன்னிரெண்டு வயதாக இருக்கும்போதுதான் பிளாக்காயன் லூனாஸ் கம்பத்துக்கு வந்தார். தம்பிக்கு அப்போது பத்து வயது இருக்கலாம். தாசேக் குளுகோரில் இருந்த மிண்டன் பரக்ஸ் இராணுவ முகாமில் சமையல்காரர் வேலை அவருக்கு. ஆஸ்திரேலிய இராணுவ வீரர்கள் பிளாக்காயன் கைப்பக்குவத்துக்கு அடிமை என அப்பா அம்மாவிடம் சத்தம்போட்டு பேசிக் கொண்டிருந்தபோதுதான் அப்படி ஒருவர் கம்பத்தில் இருப்பது பற்றியே தெரிந்து கொண்டேன்.
“நல்லா இங்கிலீஸூ பேசுறான். அந்த பாசைய சொல்லித் தர முடியுமான்னு கேட்டேன். சரினுட்டான். சும்மா கம்பத்த சுத்துறதுக்கு… போயி நாலு பாச தெரிஞ்சிக்கிடட்டும்… நாள பின்னால வெள்ளக்காரனுக்கே வட்டிக்கு உடலாம்,” என அம்மாவிடம் அப்பா உரக்கச் சொன்னது எங்களுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான்.
அப்பா எங்களிடம் நேரடியாகப் பேச மாட்டார். தற்செயலாக எதிர்கொண்டாலும் முறைப்பார். வட்டி வசூலிப்பில் ஏதாவது இசக்கு பிசக்கு நடந்தால், சாராய போதையுடன் நுழைந்த வேகத்தில் அம்மாவைத்தான் முதலில் போட்டு அடிப்பார். அது சலித்தவுடன் எங்களையும் அடிப்பதற்காகச் சிவந்த கண்களுடன் அருகில் அழைப்பார். அப்போதெல்லாம் தம்பி என் பின்னால் பதுங்கிக்கொள்வான். மற்றபடி அவர் இருக்கும் பக்கமே நாங்கள் இருவரும் செல்வதில்லை.
“காசு கட்டணுமே!” என்றாள் அம்மா. அம்மா அப்பாவிடம் முனகுவதுபோல்தான் பேசுவாள். காதைத் தீட்டி வைத்தால் மட்டுமே அவள் என்ன பேசுகிறாள் என்பதுபுரியும்.
“அதெல்லாம் வேணாம். வட்டியில கழிச்சிக்கிறேன்னு சொல்லிட்டேன்,” என்றார் அப்பா.
“அந்த ஆளப் பத்தி ஒரு மாரியா பேசிக்கிறாங்களே…” அம்மாவின் குரல் தயங்கியபடி வரவும் அறையின் சன்னல் வழியாக அம்மாவை எட்டிப் பார்த்தேன். துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள். தான் அப்படிப் பேசவே இல்லை என்பதைப் போல முகத்தை எந்த உணர்ச்சியும் இல்லாமல் வைத்திருந்தாள்.
“என்னா பேசிக்கிறானுங்க… என்னாடி பேசிக்கிறானுங்க… கொலகாரன்னு பேசிக்கிறாங்களா… இருந்துட்டு போவட்டும்… சொல்லு பேச்ச கேக்கலனா நானுன்தான் கொல பண்ணுவேன்,” என அப்பா சன்னலைப் பார்த்து முறைக்கவும் நான் கழுத்தை வெடுக்கென இழுத்துக் கொண்டேன். அம்மாவின் குரல் அதோடு அடங்கிவிட்டது.
காலையில் லூனாஸ் மாரியம்மன் கோயில் மண்டபத்தில் எங்களுக்குப் பள்ளிக்கூடம் நடக்கும். அங்கு மொத்தமாகப் பதினைந்து பேர் படித்தோம். இரண்டு ஆசிரியர்கள் எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தனர். எனவே எங்களுக்கான பிரத்தியேக ஆங்கில வகுப்பு மாலையில் ஏற்பாடாகியிருந்தது.
பிளாக்காயன் வீடு கம்பத்துக் கோடியில் இருந்தது. அவர் வீட்டைக் கடந்தால் அடர்காடு. காட்டுப்பன்றிகள் பயிர்களை நாசம் செய்வதால் யாரும் அப்பகுதியில் தங்குவதில்லை. சூரியன் மறைவதற்குள்ளாகவே அந்த வீடு இருளுள் மூழ்கி இருப்பது போலத்தான் தெரிந்தது. வீட்டினுள் எரிந்த டியூப் லைட் அவ்வீட்டை மேலும் பயங்கரமாகக் காட்டியது.
நாங்கள் அவர் வீட்டுக்குச் சென்றபோது சிறுவன் ஒருவன் கால்களைத் தாங்கி தாங்கி நடந்து வந்து எங்களைப் பார்த்தான். அவனுக்கு உடலைவிட தலை பெரியதாக இருந்தது. கண்களின் கருவிழிகள் வெவ்வேறு திசைகளில் பார்த்தன. தெற்றுப்பற்கள். உடல் கோணியும் வலது கால் சூம்பியும் கிடந்தன. பல நாட்களாக வாரப்படாத தலையுடன் பரட்டையாக வந்து நின்றான். அதில் ஏதோ காட்டு இலை ஒன்றைச் செருகி வைத்திருந்தான். உடலில் ஆங்காங்கே சேற்றீரம்.
எங்களை வரவேற்பது போல அவன் சிரித்தபோது நான் தம்பியைப் பார்த்தேன். அவன் தரையில் தெரியும் தன் நிழலையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.
நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தார் பிளாக்காயன். நல்ல நெட்டை. “வட்டிக்காரன் அனுப்பிச்சானா?” எனக் கேட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்று ஒரு பிரம்பு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். அந்தப் பிரம்பு நாற்காலியே சாய்ந்து படுப்பதற்கு வாகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வாசலில் பாதியை மறைத்துக் கொண்டு நின்ற சிறுவனைக் கடந்து உள்ளே சென்றபோது ஆசுவாசமாக உணர்ந்தேன். தம்பியின் கைகள் வியர்த்திருந்தன. குளிர்ந்த தரையில் அவரருகில் அமர்ந்து கொண்டோம். அந்தச் சிறுவன் அவரது மகனாக இருக்க வேண்டும். பிளாக்காயனின் காலடியில் சென்று அமர்ந்து கொண்டான். பிளாக்காயன் அவனைப் பொருட்படுத்தாதவர் போல எரிச்சலாக முகத்தை வைத்திருந்தார். நாங்கள் வந்தது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது போன்ற பார்வை.
“எனக்கு பொடிப்பசங்கள பாத்தாலே புடிக்காது,” என்றவர் எங்களைக் கூர்ந்து பார்த்தார். அவரது புருவங்கள் கூட மீசையைப் போல நல்ல தடிமனில் இருந்தன. நெரிக்கும் பார்வையை எதிர்கொள்ள பயந்து வீடு முழுவதும் கண்களை அலையவிட்டேன். பலகை வீடு. எரியும்போது பாதியில் அணைத்ததைப் போல சாம்பல் பூத்துக் கிடந்தது. பூச்சு பொட்டுகள் வராமல் சன்னல்கள் அகன்ற அழுக்கடைந்த வெள்ளைத் துணிகளால் மூடப்பட்டிருந்தன. மூன்று பிரம்பு நாற்காலிகள், ஒரு சிறிய மேசையன்றி சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. ஆங்காங்கு ஆணிகளில் பிளாக்காயன் உடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒரே ஒரு டியூப் லைட் வெளிச்சத்தில் வீடு வெறிச்சோடித் தெரிந்தது.
“ஒங்கப்பங்கிட்ட கை நீட்டி காசு வாங்கிட்டதால இங்கிலீஸு சொல்லிக் கொடுக்க ஒத்துக்கிட்டேன். மத்தபடி எனக்கொண்ணும் தலவிதி இல்ல,” என்றார் பிளாக்காயன்.
“சரி அங்கிள்!” என்றேன். தம்பி ஒன்றும் புரியாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“அங்கிளா… மண்டய பொழந்துபுடுவேன்… இங்கிலீஸ் வாத்தியார ‘சார்’ன்னு கூப்புடணும்… புரிஞ்சுதா?” என்றார்.
புரிந்ததாகத் தலையாட்டினேன். தம்பி என்ன செய்வதெனத் தெரியாமல் என் முகத்தையே பார்த்தபடி இருந்தான். சிறுவன் எங்களைப் பார்த்து சிரிப்பு மாறாமல் இருந்தான்.
“என்னையப் பத்தி ஒங்களுக்கு தெரியாது… எவனுக்கும் பயப்பட மாட்டன்… எமனுக்கும் பயப்பட மாட்டன். சொல்லுற படி படிக்கலனா கை கால முறிச்சி போட்டுடுவேன்,” என்றார் மிரட்டலாக. அப்போது தம்பியின் தொடையில் உதறல் இருப்பதை நான் உணர்ந்தேன். காற்சட்டையிலேயே மூத்திரம் போய்விடுவானோ எனப் பயமாக இருந்தது. அப்படி நிகழ்ந்தால் அடுத்து என்ன செய்வதென தெரியவில்லை. அவன் தோள்களில் கை வைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல இருந்தது. அதற்கும் பிளாக்காயன் என்ன சொல்வாரோ எனும் அச்சத்தினால் அவன் உடலோடு உரசும்படி இன்னும் நெருங்கி அமர்ந்தேன். முறுக்கிக் கட்டியது போன்ற அவரது உறுதியான தேகமும் கரகரத்தக் குரலும் என்னை அதிகமாகவே மிரட்டின.
பிளாக்காயன் பெரும்பாலும் பாடம் என எதையும் எங்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. ஏதாவது ஒரு வாக்கியத்தைத் தமிழில் சொல்லி அதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வதென கேட்பார். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விழிப்போம். “கோச முட்ட… கோச முட்ட… வட்டிக்கு பொறந்த கோச முட்ட” எனச் சொல்லி சத்தமாகச் சிரிப்பார். பின்னர் அவ்வாக்கியத்தை ஆங்கிலத்தில் உச்சரித்துக் காட்டுவார். அதையே நூறு முறை சொல்லச் சொல்வார். அன்று அவருக்கு என்ன வாக்கியம் மனதில் உதிக்கிறதோ அதுதான் அன்றைக்கான பாடம். ‘இன்றைக்கு என்ன சமையல்?’ , ‘ஏன் குழம்பில் காரம் குறைவாக இருக்கிறது?’, ‘சமையல் பிரமாதம்’ என ஏதாவது சமையல் குறித்துதான் அந்த வாக்கியங்கள் இருந்தன.
நாங்கள் அந்த வாக்கியத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் சைக்கிளை எடுத்துக் கொண்டு எங்காவது கிளம்பி விடுவார். மீண்டும் அவர் வந்து சேர்வதற்குள் அந்த வாக்கியத்தை ஆயிரம் முறைக்கு மேல் சொல்லியிருப்போம். வந்தவுடன் “படிப்பு முடிஞ்சது… ஓடு!” என்பார். நாங்கள் ஓட்டமாக ஓடி வீட்டுக்கு வந்துவிடுவோம்.
லூனாஸ் கம்பத்தில் இருபத்து நான்கு வீடுகள்தான் இருந்தன. பெரும்பாலும் சீனர்களுடையது. எவ்வளவு இருட்டிலும் எனக்குப் பாதைகள் அத்துப்படி. தம்பி என் சட்டையைப் பிடித்துக் கொண்டே பின்னால் நடந்து வருவான். எங்களுக்குப் பின்னால் சில நாய்கள் ஓடி வரும். நாங்கள் இரவில் வீட்டுக்குள் நுழையும் வரை அம்மா வாசலிலேயே அமர்ந்து காத்திருப்பாள். தொலைவில் வீடு தெரிந்ததும், தம்பி ஓடிச் சென்று அம்மாவின் மடியில் படுத்துக்கொள்வான். சில சமயங்களில் அழுவான். நான் அப்படிச் செய்ததில்லை. நான் பெரியவனாகிவிட்டேன் எனும் எண்ணம் எனக்கு இருந்தது. எனவே, தம்பியிடம் பிளாக்காயன் வீட்டைக் குறித்து நினைவு வரும்படி எதையும் பேசுவதில்லை. அவனைப் பாதுகாப்பதாலேயே நான் பெரியவனாகிவிட்டதாக நம்பியிருந்தேன்.
பிளாக்காயன் எங்களை இப்படித் தனியாக வீட்டில் விட்டுச் செல்வதை அப்பாவிடம் போட்டுக்கொடுக்கலாம் எனத் தம்பி சில முறை சொல்லியும் நான் சம்மதிக்கவில்லை. அப்பா எப்போது எதற்காக யாரை அடிப்பார் என்பது அவருக்கே தெரியாது. ஏதாவது சொல்லப்போய் விபரீதமாகிவிடும் எனப் பயந்தேன்.
தம்பிக்கு அந்த ஆங்கில வகுப்பு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இருளடைந்த அந்த வீடும் பூச்சிகளின் கூச்சலும் ஆங்காங்கு திரியும் சொறித்தவளைகளும் பல்லிகளும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. கண்களில் உயிரில்லாமல் திரிந்தான். அங்குச் சென்றவுடன் தன்னிச்சையாக அவன் தலை கவிழ்ந்துவிடும். விகாரமான தோற்றத்தில் வாயில் கோழை வடிய சிரிக்கும் அந்தச் சிறுவனைப் பார்த்தால் அவன் மேலும் பயப்படக்கூடுமென தூரத்தில் கண்டவுடனேயே “போடா” எனக் கையோங்கி காற்றில் விசிறி பலமுறை விரட்டியுள்ளேன். அவன் சிரித்துக் கொண்டே பின்வாங்கி இருளடைந்த அவன் அறைக்குள் நுழைந்து கொள்வான். அச்சிறுவனுக்கு என்னைவிட தம்பியைத்தான் அதிகம் பிடித்திருந்தது. இருவரும் ஒரே ஈடுதான். தம்பியை ஆசையாகப் பார்ப்பான். எங்குச் சென்று விளையாடிவிட்டு வந்திருப்பானோ தெரியாது. உடலெல்லாம் இலை தழைகள் ஒட்டிக் கிடக்கும்.
கொஞ்ச நாளிலேயே பிளாக்காயன் வெளியே புறப்பட்டால் எப்போது திரும்புவார் எனும் பிடி கிடைத்தது. நானும் தம்பியும் அதை எங்கள் விளையாட்டு நேரமாக மாற்றி அமைத்தோம். அவர் சைக்கிள் கண்களிலிருந்து மறைந்தவுடன் நாங்கள் இருவரும் ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடத் தொடங்கினோம். விளையாடும்போது தம்பி பயமில்லாமல் இருந்தான்.
அப்போதைக்குக் கையில் என்ன கிடைக்கிறதோ அதுதான் விளையாட்டு. சில சமயம் புளியங்கொட்டைகளைக் காற்சட்டைப் பையில் நிரப்பிக் கொண்டு சென்று சுண்டி விளையாடுவோம். கற்களைப் பொறுக்கி வந்து கல்லாங்காய் ஆடுவோம். நாங்கள் விளையாடுவதை அந்தச் சிறுவன் ஓரமாக நின்று சிரித்தபடி பார்த்துக் கொண்டிருப்பான். அவனது உமிழ்நீரின் வாடை அந்த வீடு முழுவதும் மெல்ல மெல்ல நிரம்பும்போது மூச்சடைக்கும். எங்களுடன் இணைந்து விளையாட அவன் உடல் முழுவதும் துடிப்பிருக்கும். நான் திட்டுவேன் என்பதால் எங்கள் அருகில் நெருங்க மாட்டான்.
இந்த விளையாட்டுகள் எங்களுக்குச் சில நாட்களிலேயே சலித்தது. இதுவெல்லாம் பெண் பிள்ளைகள் விளையாட்டு எனத் தோன்றியது. நான் வளர்ந்த ஆண் பிள்ளையாகிவிட்டதாக உணர்ந்ததால் அதற்கேற்ற விளையாட்டு ஒன்றை நானே உருவாக்கினேன். தம்பியையும் அதில் கூட்டணி சேர்த்துக் கொண்டேன்.
அதற்கு வேம்படியான் விளையாட்டு எனும் பெயரிட்டேன்.
வேம்படியான் விளையாட்டு சுவாரசியமானது. பிளாக்காயான் வீட்டு சன்னல் மறைப்புக்காக வைத்திருந்த வெள்ளைத் துணி ஒன்றை எடுத்து, தலையுடன் போர்த்திக் கொண்டு கம்பத்து முச்சந்தியில் உள்ள புதரோரம் காத்திருப்பேன். கண்களுக்கு மட்டும் துளை இட்டுக் கொள்வேன். அப்போது முழுவதுமாக வேம்படியானாக மாறியிருப்பேன். சில சமயம் உறுமக்கூட செய்வேன்.
தம்பி சில அடிகள் முன் சென்று ஏதும் சைக்கிள் வருகிறதா எனக் காத்துக் கொண்டு நிற்பான். அப்படிச் சைக்கிள் வரும் அரவம் தெரிந்தாலே “வருது வருது” எனச் சொல்லிக் கொண்டு விளக்குக் கம்பத்தின் பின்புறம் ஒளிந்துகொள்வான். தயாராகப் புதர் மறைவில் மறைந்திருக்கும் நான், நிழலசைவை உணர்ந்தவுடன் விருட்டென சாலையின் குறுக்கே பாய்ந்து, வெள்ளை துணியைப் போர்த்தியபடி எதிர் திசையில் ஓடுவேன். பெரும்பாலும் வருபவர்கள் சைக்கிளை நிறுத்தி அப்படியே திருப்பிக் கொண்டு பறந்துவிடுவார்கள். தங்கள் கண்ணால் பார்த்தது என்னவென்று நெடுநேரம் நின்று யோசித்து அவ்விடத்தை எச்சரிக்கையுடன் கடப்பவர்களும் உண்டு. அப்படி அருகில் வருபவர்களை நான் பயமுறுத்துவதில்லை. கையில் அகப்பட்டால் தோல் உரிந்துவிடும்.
கொஞ்ச நாளிலேயே அது எங்களுக்குச் சுவாரசியமான விளையாட்டானது. தம்பியும் விளையாட்டில் நன்றாகவே தேறியிருந்தான். அவனை அதி உற்சாகமாகப் பார்த்தது அந்த விளையாட்டில்தான். நாங்கள் இப்படி வீதிக்குச் சென்று விளையாடுவதைப் பிளாக்காயன் வீட்டில் இருந்தச் சிறுவன் வாசலில் நின்றபடியே வேடிக்கைப் பார்த்தாலும் தன் அப்பாவிடன் சொல்வதில்லை. அவனால் பேச முடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது. பிளாக்காயன் வருவதற்குள் மீண்டும் திரைச்சீலையை மாட்டிவிட்டு சமத்தாக அமரும் எங்களைச் சிரிப்பு அகலாமல் பாத்துக் கொண்டிருப்பான்.
எல்லாம் நன்றாகத்தான் போனது. கம்பத்தில் பேய்கள் உலாவுவதாகக் கதைகள் கிளம்பத் தொடங்கின. அந்தக் கதைகளைக் கேட்டு நானும் தம்பியும் சிரித்துக் கொள்வோம்.
ஒரு முறை நான் வேம்படியானாக மாறிக் காத்திருந்தபோது சைக்கிள் ஒன்று வேகமாக வந்தது. தம்பி வழக்கம்போல “வருது வருது” எனச் சொல்ல நான் வீதியில் பாய்ந்துவிட்டேன். பிளாக்காயன் சைக்கிளைக் கையாள முடியாமல் தடுமாறி விழுந்தார். எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. “சார் சார்… சோரி சார்” என கைகளை நீட்டிக்கொண்டு அவர் அருகில் செல்லவும் அவர் மேலும் பயந்து சாலையில் பிட்டத்தைத் தேய்த்தபடி அலறிக்கொண்டு பின் நகர்ந்தார். அவர் அலறல் வினோதமாக இருந்தது. “ஊ ஊ” என அடிபட்டு ஊளையிடும் நாயின் குரல் அது. நான் உடம்பில் துணி போர்த்தப்பட்டிருந்ததை அப்போதுதான் உணர்ந்து நீக்கினேன்.
பிளாக்காயனின் முகம் அவமானத்தில் கோணியது. எழுந்த வேகத்தில் பொளேர் என முதுகில் ஓர் அறை விட்டார். நான் அவரிடமிருந்து தப்பி ஓட முயன்றபோது விடாமல் முடியைப் பிடித்திழுத்து மேலும் சிலமுறை முதுகில் அறைந்தார். எனக்கு மூச்சு விடவே சிரமமானபோது அங்கேயே அப்படியே விட்டுவிட்டுச் சைக்கிளை உருட்டிக் கொண்டு நகர்ந்தார்.
இந்தக் கதையை நான் சொன்னபோது பேத்தி தாள முடியாமல் சிரித்தாள். எதையோ சொல்ல வந்து சொல்ல முடியாதபடிக்கு சிரிப்பு அவள் சொற்களை முட்டித் தள்ளியது. எழுந்து நின்று மீண்டும் மெத்தையில் தொபக்கடீர் என விழுந்து மீண்டும் சிரித்தாள். பின்னர் உருண்டு வந்து என்னைக் கட்டிக் கொண்டாள். பின்னர் ஏதோ யோசித்தவள் “தாத்தா கத நல்லா இருக்கு… ஆனா இது வேப்டியான் கத இல்லயே!” என்றாள்.
“இது வேம்படியான் கததான் அம்மு,” என்றேன்.
அவள் மீண்டும் சிணுங்க ஆரம்பித்தாள். “இது அவன் கத இல்ல. இதுல பயமே வரல,” என மெத்தையில் குதித்தாள். நான் அவளை ஆரத்தழுவி சமாதானப்படுத்தினேன். காற்றுப் போன்ற கனமற்ற உடல் அவளுக்கு.
உண்மையில் அந்த அனுபவத்தைப் பேத்தியிடம் சொன்னபோது பிளாக்காயனிடம் முதுகில் வாங்கிய அறைகள் ஒவ்வொன்றும் ஞாபகத்தில் எழுந்தது. கைகளைப் பின்னே விட்டுத் தடவிக்கொள்ளவும் செய்தேன்.
அவரிடம் அடிவாங்கியபோதுதான் நான் ஒரு சிறுவன் என்பதை மறுபடியும் உணர்ந்தேன். என்னால் அவரைப் பதிலுக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவர் ஒரு சிறுவனை அடிப்பது போலவே என்னைக் கையாளவில்லை. எனக்கு அப்போது தலைசுற்றி வாந்தி கூட வந்தது. அடிவாங்கியே செத்துவிடுவேனோ என்று கூடத் தோன்றியது. தலையில் விழுந்த அடியால் மண்டை கிர்ர்ர் என்றது. இதை அப்பாவிடம் சொன்னால் படிக்காமல் வேசம் கட்டி விளையாடினேன் என எனக்குத்தான் மேலும் அடிவிழும் என்பதால் தம்பியிடம் அதைப் பற்றி வாயே திறக்கக் கூடாது எனக் கூறிவிட்டேன். அவன் அதிகம் பயந்திருந்தான். ஆங்கில வகுப்பு என்றாலே அழத் தொடங்கினான். தன்னையும் பிளாக்காயன் என்றாவது அடித்துவிடக்கூடும் எனப் புறப்படும்போதே புலம்பினான்.
எதுவும் வேலைக்காகவில்லை.
அப்பாவின் மீதிருந்த பயமே எங்கள் இருவரையும் இயக்கியது. வேறு எந்தத் தண்டனைகளைவிடவும் அப்பா கொடுப்பது மோசமாக இருக்கும் என்பதால் வேறு வழியில்லாமல் சென்றோம். அச்சம்பவத்திற்குப் பிறகு பிளாக்காயன் என்னைத் தலையில் தட்டுவதும் கொட்டு விடுவதும் கன்னத்தைக் கிள்ளுவதுமாக இருந்தார். தம்பிக்கு ஏதும் அடி விழாததே எனக்கு நிம்மதியாக இருந்தது. எனக்கு அடி விழும் ஒவ்வொரு முறையும் தம்பி தன் உடலை ஒடுக்கிக்கொள்பவனாக மாறியிருந்தான்.
எனக்கு அந்தச் சிறுவனின் முன் அடிவாங்குவதுதான் அவமானமாக இருந்தது. அவர் அடிக்கும்போதெல்லாம் அந்தச் சிறுவன் என்னைப் பரிதாபமாகப் பார்ப்பான். அழுவதைப் போல உதட்டைப் பிதுக்குவான். அவன் கருணை என்னை இழிப்பது போல இருந்தது. அருவருப்பான அவன் தோற்றத்தைக் காணப்பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொள்வேன்.
பிளாக்காயன் வீட்டில் இருக்கும்போதெல்லாம் அந்தச் சிறுவன் அவருடன் மட்டுமே ஒட்டிக் கொண்டு திரிந்தான். அவர் பிரம்பு நாற்காலியில் வந்து அமர்ந்தவுடன் ஏதோ வளர்ப்பு நாய் போல காலடியில் அமர்ந்து கொள்வான். அப்போது மட்டும் அவன் முகத்தில் அவ்வளவு பிரகாசம் ஒளிவிடும். ஏதோ அரிய சாதனை ஒன்றை செய்துவிட்டவனாகத் தெம்புடன் பார்ப்பான்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பிளாக்காயனும் எங்களைத் தனியாக விட்டுவிட்டு வெளியே செல்வதில்லை. மிகவும் கெடுபிடியான ஆங்கில ஆசிரியராக மாறியிருந்தார். வாக்கியத்தைச் சொல்லிவிட்டு நாங்கள் எண்ணிலடங்கா முறை அதை திரும்பத் திரும்ப உச்சரிப்பதைக் கண்களை மூடிக்கொண்டே கேட்டபடி இருந்தார். தொண்டை வறண்டு ஓயும்போது மண்டையிலேயே ‘நங்’கென கொட்டு விட்டார்.
அப்படி ஒரு முறை ‘டோன்ட் அட் சால்ட்’ என ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தபோது தம்பி தனக்கு மூத்திரம் முட்டிக் கொண்டதாக என்னிடம் கிசுகிசுத்தான். நான் பிளாக்காயனைப் பார்த்தேன். அவர் கண்களை மூடியே வைத்திருந்தார். “உஸ்ஸு போவணும்!” என்றேன் நடுங்கும் குரலில். வீட்டின் பின்னால் புறங்கடை பக்கமாகக் கைக்காட்டினார்.
பிளாக்காயன் வீட்டில் வரவேற்பறையைத் தவிர வேறு எங்குமே விளக்கு எரியாது. எனவே இருள் படிந்த இடுக்கினுள் புகுந்து புறங்கடையை அடைவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அது வரையிலும் தம்பி “அண்ணெ அண்ணெ” என்று கைகளைப் பிறாண்டி எடுத்துவிட்டான்.
குசினி கதவைத் திறந்தபோது நிலவொளி பிரகாசித்தது. எதிர்கொண்ட காடு, ஒளியை உள்வாங்கிக் கொண்டு பயங்கரமாகத் தெரிந்தது. நாசியில் குளிர் ஏறியது. தம்பி எதுவும் பேசாமல் குறியைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தான். அச்சம் அவன் மூத்திரம் போகத் தடையாக இருந்தது. அப்போதுதான் எங்களுடனேயே வந்து நின்ற அந்தப் பையனைப் பார்த்தேன். நிலவு வெளிச்சத்தில் அவனுடலில் சில சிராய்ப்புகள் தெரிந்தன. அது மேலும் அவனைக் குரூரமாகக் காட்டியது. அவனை அச்சூழலில் பார்த்தால் தம்பி அஞ்சக்கூடும் என நினைத்தேன். சத்தம் எழாமல் பற்களைக் கடித்துக்கொண்டு “போடா!” என்றேன். அவன் சிரித்தபடியே அங்கேயே அசையாமல் இருந்தான்.
நான் தம்பியைச் சமாதானம் செய்து நிலவைப் பார்த்தபடியே மூத்திரம் போகச் சொன்னேன். எவ்வளவு நேரம் நின்று கொண்டிருந்தாலும் அவனால் மூத்திரம் போக முடியவில்லை. குறியைப் பிடித்தவாறே சிணுங்கிக் கொண்டிருந்தான்.
எனக்குத் தம்பியின் மீது கடுப்பாகி “இப்ப மூத்தரம் போகலனா இவங்கிட்ட ஒன்னைய புடிச்சிக் கொடுத்துருவேன்!” என்றேன் சத்தமாக.
தம்பி என்னை அச்சத்துடன் திரும்பிப் பார்த்தான். “யாருகிட்ட அண்ண!” எனக் கேட்டவன் திடீரென வீரிட்டுக் கத்தினான்.
எனக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. அந்தப் பையன் கைக்கொட்டிச் சிரிக்கத் தொடங்கினான். நான் தம்பியைத் தரதரவென இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினேன். அவன் கைகள் வழியாக நடுக்கம் என் உடலெல்லாம் பற்றிப் பரவத் தொடங்கியது. பிளாக்காயன் “என்னடா… என்னடா…” எனக் கத்தியதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
அம்மு போர்வையைக் கழுத்து வரை போர்த்தி அமர்ந்து கொண்டாள். “சின்னத் தாத்தாவுக்கு என்னா ஆச்சி?” என்றாள் நடுங்கும் குரலில்.
“மணியாச்சிடா அம்மு தூங்கலாமா?” என்றேன்.
“சொல்லு தாத்தா…” என்றாள்.
“வேணாம் அம்மு… ஒன்னோட சின்னத் தாத்தா எப்புடி பயந்தான் பாத்தில்ல…” என்றேன்.
“நீயுந்தான் பயந்த…” என்றாள் அம்மு.
“அதுவும் சரிதான்,” என்றேன்.
“அந்தப் பையனப் பத்தி சொல்லு…” என்றாள்.
“ரெண்டு தாத்தாவும் எப்புடி பயந்தோம் பாத்தியா?” என்றேன் கண்களை விரித்து. அப்படியாவது அவள் பயந்துகொண்டு வாயடங்குவாள் என நினைத்தேன்.
“சொல்லு தாத்தா… அந்தப் பையன் யாரு… சின்னத் தாத்தாவுக்கு அப்புறம் என்னாச்சி?” எனக் கெஞ்சினாள். விட்டால் அழுதுவிடுவாள் எனத் தோன்றியது.
அந்தச் சம்பவத்தால் தம்பி உண்மையில் பயந்துதான் விட்டான். முதல் நாள் பொருளற்ற மொழியில் நெடுநேரம் முணகியவன், மறுநாள் கடுமையான காய்ச்சலில் படுத்த படுக்கையாகி விட்டான். ஆங்கிலம் படிக்கப் போகமாட்டேன் என்ற என்னை, அப்பா சாத்துச் சாத்தெனச் சாத்தினார். நான் எல்லா அடிகளையும் பொறுத்துக் கொண்டேன். நிறைய அடி வாங்கினால் பெரியவனாகிவிடலாம் என நானே எனக்குள் சமாதானம் செய்து கொண்டேன். ஆனால், மூன்றாவது நாள் விழுந்த அடி தோல் இடைவாரில் என்பதால் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ள வேண்டியதானது. தனியாக மீண்டும் ஆங்கிலம் பயிலச் செல்வதில் எனக்குப் பயமாக இருந்தது. எவ்வளவு சொல்லியும் அப்பா விடுவதாக இல்லை.
மூன்று நாட்கள் கழித்து நான் ஆங்கிலம் கற்கச் சென்றபோது பிளாக்காயன் அமைதியாக நாற்காலியில் அமர்ந்திருந்தார். தம்பி இல்லாமல் அந்த வீடு இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாகிவிட்டதுபோல தெரிந்தது. அந்த விரிவு எனக்கு அச்சத்தைக் கொடுத்தது. சுற்றிலும் பார்வையை விட்டபோது அந்தச் சிறுவன் அங்கு இல்லாதது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஒன்றுமே நடக்காததைப் போல பிளாக்காயன் முகத்தில் அப்படி ஒரு அமைதி. ஆனால் வினோதமாகக் கால்களில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. உற்று பார்த்தபோதுதான் அவர் நன்கு நனைந்திருப்பது தெரிந்தது. முடியும் மீசையும் முகத்தோடு ஒட்டிக் கிடந்தன. விரல்களின் நுனிகளில் துளியுருண்டை.
அன்று பிளாக்காயன் நெடுநேரமாக ஒன்றும் பேசவில்லை. உறங்குவது போலக் கண்களை மூடிக் கிடந்தார். நான் அவர் ஏதும் பேசுவார் என நெடுநேரம் காத்திருந்தேன். நெடு நேரம் என்றால் சில மணி நேரமாவது கடந்திருக்கும். தரையில் அமர்ந்திருந்ததில் முதுகு நொந்தது. கால்கள் மறுப்புக் கட்டின. அவரிடம் ஏதாவது கேள்வி கேட்கவும் பயமாக இருந்தது. ஈரம் காயாத உடலுடன் அமர்ந்திருந்த அவரை நோக்கி காற்று மட்டும் வெளிப்படும் வகையில் “சார்” என்றேன். அசைவில்லை. பின்னர் இருந்த தைரியத்தை எல்லாம் திரட்டி “சார்” என்றபோது நெடு நேரம் கழித்துக் கண்களைத் திறந்தார். கண்களில் கண்ணீர். அவர் அழுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
மீண்டும் “சார்” என்றேன்.
அவர் மென்மையாக வருடும் கண்களில் பார்த்தார். அப்படி ஒரு கண்கள் அவரிடம் இருப்பதே அதிசயமாக இருந்தது. அப்போது எனக்கு ஒரு கதை சொன்னார். மிகச் சிறிய கதை. கதையைக் கேட்டுக் குழம்பியபடி வீடு திரும்பிய என்னை, அப்பா கொடுத்த ஓர் அறைதான் சுய நினைவுக்கு மீட்டது.
“எங்கடா போயிட்டு வர?” என்றார்.
“இங்கிலீஸ் கிளாஸுக்கு” என்றேன் பலவீனமாக. உண்மையில் அடி வாங்கி வாங்கி என் உடலும் மனமும் சோர்ந்து போயிருந்தன. உடம்பில் எங்கு தொட்டாலும் வலித்தது.
“எங்க போன?” என என் முடியைக் கொத்தாகப் பிடித்து ஆட்டியபடி கேட்டார்.
“இங்கிலீஸ் கிளாஸு ஊ ஊ” என இழுத்தேன்.
“யாருகிட்ட படிச்ச?” என்றார்.
“பிளாக்காயன் சாருகிட்டதான்!” எனச் சொன்னபோது அப்பா மீண்டும் அறைய ஆரம்பித்தார். தலை, முதுகு, கன்னம், பிட்டம் என அடி தாறுமாறாக விழுந்தது. அம்மா குறுக்கே புகுந்து எனக்காகச் சில அடிகளை வாங்கிக் கொண்டாள்.
“அந்த ஆளே சாயந்தரம் ஆத்துல உழுந்து செத்துக்கெடக்குறான்… ஊரே ஆத்தோரம் ஒதுங்கின பொணத்தாண்ட கூடி நிக்கிது… இவன் ராவெல்லாம் ஊரு மேஞ்சிட்டு இங்கிலீஸு கிளாஸ் படிச்சானாம்…” அப்பா அறைந்தபோது நான் காற்சட்டையில் மூத்திரம் போயிருந்தது எதனால் என எனக்கு இப்போதும் புரியவில்லை.
பேத்தியைப் பார்த்தேன். அதிகம் பயந்திருந்தாள். போர்வையை மூக்கு வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு கண்களால் மட்டும் அச்சத்தைக் காட்டினாள். “உண்மையாவா சொல்லுற தாத்தா” என்றாள். நான் மென்மையாகத் தலையாட்டினேன். அவள் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்.
“எனக்கு பயமா இருக்கு…” என்றாள்.
“அதுக்குதான் வேம்படியான் கத வேணாமுன்னு சொன்னேன்,” என்றேன் ஆறுதலாக. அவள் உடல் கொதித்தது.
“அவரு ஒங்கிட்ட என்னா கத சொன்னாரு?” என்றாள்.
“அதெல்லாம் சொல்லக் கூடாது,” என்றேன்.
“சொல்லு தாத்தா!” என்றாள்.
நான் அந்தக் கதையை என் தம்பியிடம் கூட கூறியிருக்கக் கூடாது. அன்று இரவில் ஜுரத்துடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அவனிடம் நான் கேட்டேன், “தம்பி அன்னிக்கு ராத்திரி நீ என்னா பாத்த?”
அவன் அழுவது போல என்னைப் பார்த்து சிணுங்கினான்.
“சொல்லுடா தம்பி,”
அவன் எதையோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் தவித்தான்.
“பிளாக்காயன் சாரு கத ஒன்னு சொன்னாருடா… அவருக்கு ஒரே ஒரு பையனாம். கொஞ்சம் பைத்தியமாம்.”
தம்பி எழுந்து அமர முயன்றான்.
“அவனுக்குப் பேச வராதாம். பிளாக்காயனுக்கு அவன சுத்தமா புடிக்காதாம். அவன் அம்மா செத்ததும் இன்னும் புடிக்காம போச்சாம். சிலுவாருலயே பேண்டு வைப்பானாம். வீடெல்லாம் ஒழப்பி வைப்பானாம்.”
தம்பி பலவீனமாகப் பார்த்தான்.
“ஆனா அவனுக்கு பிளாக்காயன புடிக்குமாம். எப்பவும் முத்தம் கொடுக்க வருவானாம். காலடியிலயே கெடப்பானாம். பிளாக்காயனுக்கு அவன வளத்தெடுக்குறதே ரொம்ப கஷ்டமா இருந்துச்சாம். ஒருநாளு நம்ம ஜூரு மல இருக்குல்ல… அதுலேருந்து தள்ளி உட்டுட்டாராம்,”
தம்பியின் கண்கள் விரிந்தன. மூச்சு விடுவது சிரமமாகி வயிறு உடலுடன் ஒட்டத் தொடங்கியது.
“அவன் செத்துட்டானாம். தம்பி… அந்த வீட்டுல நீ வேற பசங்க யாரையாச்சும் பாத்திருக்கியா?” என்றேன்.
நான் அப்படிக் கேட்டிருக்க வேண்டாம். தம்பி எஞ்சிய சக்தியை எல்லாம் திரட்டி வீரிட்டு அழுதான். என்னை அருகில் வர வேண்டாமென தள்ளி விட்டான். நெஞ்சு அதி விரைவாக ஏறி ஏறி இறங்கியது. முகம் வெளிறியது. நான் “தம்பி தம்பி” எனக் கத்தவும் அறையின் உள்ளே நுழைந்த அப்பா “ஒண்டியா என்னாடா பேசிட்டு இருக்க!” என மேலும் இடைவாரினால் இரண்டு விளாசு விளாசினார்.
நான் இந்தக் கதையை என் பேத்தியிடம் சொல்லவில்லை. இக்கதை என் பேத்தியின் மனதை பாதிப்பதை நான் விரும்பவில்லை. அவள் குழந்தை. இனிமையான அமுதத்தின் அரசி. இதை சொல்வதால் அவள் என்னை வினோதமாகப் பார்க்கக்கூடும். என்னைப் பார்த்து அஞ்சக் கூடும்.
என் மகன் அறைக் கதவைத் திறந்தபோது பேத்தி உறங்குவது போலப் போர்வைக்குள் முழுமையாகப் புகுந்து கொண்டாள்.
“படுக்கலயா?” என்றான் மகன்.
“தூங்கணும்” என்றேன்.
அருகில் வந்தவன் “தூங்குங்கப்பா” எனத் தலையை வருடி விட்டான்.
நான் சிரித்தேன்.
மெல்ல சன்னலருகில் சென்று எதிர்கொண்ட காற்றைக் கண்களை மூடி உள்வாங்கினான். பின்னர் அதன் கதவுகளைச் சாற்றியவன், கண்கள் கலங்க என்னைப் பார்த்தான்.
“யாருக்குதான் கவல இல்ல. அம்மு இனிமே வர மாட்டா… அவள நெனச்சி ஒங்க ஒடம்ப கெடுத்துக்காதீங்க…” எனச் சொல்லிவிட்டு அறைக் கதவை மென்மையாக மூடிவிட்டுச் சென்றான்.
வெகு நாட்களுக்குப் பின் நல்லதொரு பேய்க் கதையைப் படித்த திருப்தி. மணி 1.04 ஆகிறது. இந்நேரத்தில் படித்தது தான் கொஞ்சம் சங்கடமாக உள்ளது??
சின்ன வயதில் பேய் கதைகள் என்றாலே திகிலும் படபடப்பும்தான். என் பெரியக்கா கதைச்சொல்ல கேட்க நான், தம்பிகள், பக்கத்து வீட்டு பசங்க, எதிர்வீட்டு பிள்ளைங்க என ஒரு பட்டாளமே திரண்டிருப்போம். எல்லோர் முகத்திலும் கதையின் பயம் படர்ந்திருக்கும். அம்மு போர்வைக்குள் அமுங்கியதைப் போல் பேய் வந்துவிடுமோ எனும் அச்சத்தில் இரவெல்லாம் தலையோடு போர்த்திக்கொண்டு விழித்திருந்த நினைவுகளை இந்தக் கதை மீட்டுத்தந்திருக்கிறது. ஆசிரியருக்கு நன்றி. அது சரி இந்தக்கதையில் மொத்தம் எத்தனை பேய்கள்?
மலேசியாவில் எழுத்தாளர் மு.அன்புச்செலவன் அவர்களின் ” விழித்திருக்கும் ஈயக்குட்டை” சிறுகதை தொகுப்புக்கு பிறகு மர்மக்கதைகள் அல்லது அமானுஷ்ய கதைகள் வாசிக்கக் கிடைப்பது அரிதிலும் அரிது.
நம் மலேசியாவில் மூன்று இனங்களுக்கு இடையே அமானுஷ்ய கதைகள் நிறைந்து கிடைக்கின்றன. ஒவ்வொரு இனத்தவர்கள் இடையே ஆவிகள் அல்லது பேய் கதைகள் பல உள்ளன. மலாய்காரர்களின் “பொந்தியானாக்” , “போச்சோங்” , சீனர்களின் ‘கூய்’ (Gui) மற்றும் தமிழர்களின் ‘மோகினி’ ‘பூச்சாண்டி’ , ‘ குட்டி சாத்தான் பற்றிய அமானுஷ்ய கதைகள்
உள்ளன. சிலர் இவர்களை வணங்குகிறார்கள் பலர் அச்சம் கொள்கிறாரகள்.இப்பட்டியலில் வேம்படியானும் இக்கதையின் மூலம் சேர்ந்துக்கொண்டார்.
திரு.ம.நவினின் ‘வேம்படியான்’ சிறுகதை அவரின் மற்றுமொரு மர்மக்கதை. எமுத்தாளரின் மொழியறிவும் கதைச்சொல்லும் பாணியும் வாசகர்களை கதைக்குள் இழுத்துச் செல்கிறது.மேலும், எழுத்தாளரின் கன்னி,பூனியான்,பேய்ச்சியை வாசித்தவர்களுக்கு இப்படைப்பு ஓர் இனிப்பு.
தற்கால இலக்கியத்தில் சமூகவியல், உளவியல்,நவீனத்துவம்,பின்நவீனத்துவம் போன்ற தீவிர வாசிப்புக்கு இடையே மர்மக்கதை மற்றும் அமானுஷ்ய கதைகளும் வாசகர்களுக்கு ஓர் உயிர்ச்சத்தாகும்.
வேம்படியான் கதை அந்தக் கடைசி வரியில்தான் பேய்க்கதையாக மாறுகிறது. அந்த முனையைத் தொடும் வரை எங்கேயும் பீதி உணர்வை அடையமுடியவில்லை. பிளாக்காயான் வரும்போதெல்லாம் நகைச்சுவை உணர்வு உண்டாகிறது. அந்தப் பையன் பிளாக்காயான் என்ற ஆங்கில ஆசிரியரிடம் அடிவாங்கும் போது கொஞ்சம் துன்பியல் எட்டிப் பார்க்கிறது. இல்லாத செத்துப்போன பிளாக்காயானிடம் பாடம் கேட்கும்போது கொஞ்சம் அச்சத்தின் சலசலப்பு இருந்தது. ஆனால் இல்லாத அம்முவிடம் தாத்தா கதை சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார் என்ற உணர்வை கடைசி வரியில் முத்தாய்ப்பாய்ச் சொல்லும்போது கதை முழுக்க பேய் உலவல் நிகழ்ந்துவிடுகிறது.
கடைசியில் ட்விஸ்ட்க்கு மேல ட்விஸ்ட்.. ஒரு நல்ல பேய் கதை பிடித்த அனுபவம்..