மலேசியத் தமிழர்களின் வாழ்வை மலேசியப் புனைவிலக்கியம் காட்டும் சித்திரிப்புகளிலிருந்து நான்கு காலக்கட்டங்களாக வகைப்படுத்தலாம். முதலாவதாக, 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து பஞ்சம், பசி காரணமாகவும் வாழ்வாதாரத்தைத் தேடியும் ரப்பர் தோட்டங்களில் சஞ்சிக்கூலிகளாகப் பணியாற்ற புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கையின் சித்தரிப்பவையாகும். அதற்கடுத்த காலக்கட்டத்தில், தோட்டங்களில் தங்கள் வாழ்வை நிலைப்படுத்திக் கொண்ட காலக்கட்டம், பிறகு தோட்டத் துண்டாடலினாலும் வேலை வாய்ப்புகளைத் தேடியும் நகரங்களுக்குப் பெயர்ந்த காலக்கட்டம். இறுதியாக, நகரத்தில் சிதறிப் பரவி வாழும் காலக்கட்டம் என நான்காகப் பிரிக்கலாம். இடப்பெயர்வு, வாழ்க்கைச் சூழல் மாற்றம் எனச் சமூகச் சூழலை மையப்படுத்தியே இந்தக் காலக்கட்ட வரையறையைச் செய்ய முடிகிறது. இந்த நான்கு காலக்கட்டங்களையும் கொண்டே மலேசியத் தமிழிலக்கியப் புனைவுகளையும் பிரிக்க முடிகிறது.
மலேசியப் படைப்புகள் பெரும்பாலும் இரண்டாம் காலக்கட்டமான தோட்ட வாழ்வில் நிலைகொண்டதையும் அதன் அடுத்தக் காலக்கட்டமான இடப்பெயர்வின் தொடக்கத்தையும் ஒட்டியே அமைந்திருக்கிறது. ஒரே இடத்தில் சமூகமாகத் திரண்டு வாழும்போது இயல்பாகவே ஏற்படும் சமூகச் சூழல், பண்பாட்டுச் சூழல் ஆகியவைப் புனைவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்த இரண்டு காலக்கட்டத்தையொட்டி எழுதப்பட்ட மலேசிய நாவல் வரிசையில் முக்கியமானது சீ. முத்துசாமியின் ‘மண்புழுக்கள்’ நாவல். தோட்டத்தில் தங்கள் வாழ்வை நிலைப்படுத்திக்கொள்ள முயலும் முதலாம், இரண்டாம் தலைமுறை மக்களின் திரண்ட வாழ்க்கையை ‘மண்புழுக்கள்’ நாவலின் வாயிலாக எழுத்தாளர் சீ.முத்துசாமி காட்ட முயன்றிருக்கிறார். இந்த நாவல் காட்டும் காலக்கட்டத்தைத் தெளிவாக வகைப்படுத்த முயன்றால் 1930 தொடங்கி 1950கள் வரையிலான தோட்டப்புறச் சூழலைக் கொண்டதெனலாம்.
நாவல் இலக்கியத்தின் தனித்துவமே வாழ்க்கை நிகழ்வுகளையும் அனுபவங்களையும் காட்டும் ஒழுங்கில் விவாதமொன்றை நிகழ்த்தித் தரிசனங்களைக் காட்டுவதைக் குறிப்பிடலாம். சீ.முத்துசாமி மலேசிய சுதந்திரத்துக்கு முற்பட்ட குச்சிக்காட்டு மக்களின் வாழ்க்கையை ஆட்டுக்கார சின்னக்கருப்பன் எனும் பாத்திரத்தை மையமாகக் கொண்டு காட்டுகிறார். சுதந்திரத்துக்கு முந்தைய கெடா மாநிலத்தின் சென்றோல் பகுதியை ஒட்டிய தோட்டமெனும் கால இட வரையறைகளிலே சீ. முத்துசாமி தன் குச்சிக்காட்டை உருவாக்கியிருக்கிறார்.
தமிழ்நாட்டிலிருந்து பெயர்ந்து மலாயாவில் பிறந்த முதல் தலைமுறையைச் சேர்ந்த ஆட்டுக்கார சின்னக்கருப்பன் தோட்டத்தில் ஆடுகளையும் மாடுகளையும் வளர்த்துக் கொண்டு பால்மரம் சீவுகிறான். வானம், நிலவு, தோட்டச் சூழல், சமூகம் எல்லாவற்றையும் தனித்த ரசனையுடன் காணக்கூடிய நுண்ணுணர்வு கொண்டவன் சின்னக்கருப்பன். ஆடுகளை மேய்க்கச் செல்கின்ற சின்னக்கருப்பனின் மகள் சின்னபுள்ளை பொழுது போயும் வீடு திரும்பவில்லை. அந்தச் சூழலிருந்து முற்றிலுமாய் கதை திசை திரும்பி ஆட்டுக்காரனின் வாழ்வினூடே குச்சிக்காட்டின் விரிவான சூழலைக் காட்டிச் செல்கிறது. வெற்றிலைக் கொல்லை வைத்திருக்கும் சாலபலத்தான், துணிச்சலும் வம்புப் பேச்சுகளில் ஈடுபடும் கசியடி முனியப்பன், ஆலோசனைகளைச் சொல்லும் பெரியவர் புட்டுக்காரர், மாடுகளுடன் மட்டுமே பேசும் மாட்டுக்காரர், ரொட்டி விற்கும் வங்காளி என ஒவ்வொரு உதிரி பாத்திரங்களின் சித்திரிப்பின் வாயிலாகத் தோட்டத்தை உயிர்ப்புடன் உருவாக்கிச் செல்கிறார்.
காணாமல் போன சின்னபுள்ள கசியடி முனியப்பனால் கற்பழித்துக் கொல்லப்படுகிறாள். அவளுடைய இறப்பிலிருந்து ஆட்டுக்கார சின்னக்கருப்பனின் மொத்த வாழ்வும் சிதையத் தொடங்குகிறது. மகள் இறந்ததற்குச் சின்னக்கருப்பனைக் காரணம் காட்டி மனைவி வசைபாடுகிறாள். காலில் துருபிடித்த ஆணியேறி புடம் வைத்து கால் துண்டிக்கப்பட்டு முடமாகிறான். மகளின் இழப்பும், காலுமிழந்து வீட்டில் முடங்கிப்போகிறவனை மனைவி அவமானப்படுத்துகிறாள். வாழ்வின் மீதான ஆற்றாமையால் தற்கொலை செய்யத் துணிகிறான். சிவப்பு அடையாள அட்டை வைத்திருக்கும் தோட்டத் தொழிலாளர்களைப் பாதிக்கும்படியாக வேலை உரிம அறிமுகம், தோட்டங்களில் கம்யூனிஸ்டுகளின் தாக்குதல்களும் ஆரம்பமாகின்றன. இருண்டுவிடும் ஆட்டுக்காரச் சின்னக்கருப்பனின் வாழ்வுடன் குச்சிக்காட்டு மக்களின் வாழ்வும் இருளத் தொடங்குகிறது.
சீ. முத்துசாமி, அபாரமான காட்சி விவரிப்புகளால் கித்தாகாட்டை உயிர்ப்பாக நாவலில் உருவாக்கிக் காட்டுகிறார். ஒரே பகுதி வெவ்வேறு சூழலில் அடையும் வேறுபாடுகள் மிக நுட்பமாகக் காட்டப்படுகிறது. தைப்பூசம் தொடங்கும் நாட்களில் இலை உதிர்ந்து நிற்கும் மொட்டை ரப்பர் மரம், மழைக் காலத்தில் தொப்புற நனைந்த ரப்பர் மரம், இரவு வேளையில் கோட்டானின் அலறலிலும் காட்டுப் பூனை சத்தத்தாலும் அச்சமூட்டும் ரப்பர் மரங்கள் எனச் சூழலுக்கேற்ப ரப்பர் மரங்கள் உருமாறுகின்றன. கிழடு தட்டிய மரங்களின் மீது ஏணியைச் சாய்த்து மரம் சீவும் ஏணிக்கோட்டு வெட்டில் இருக்கும் கடினத்தை ஏணில ஏறி, அண்ணாந்து பாத்து, மேல போய்ட்ட வெட்டுக் கோட்டுல கத்தி போட்டு, தடிச்சு காஞ்சு கெடந்த மொரட்டு பட்டங்களோட வரட்டு வரட்டுன்னு ஒரியாடி முடிச்சுட்டு’எனக் கண்முன்னே நிகழ்த்திக் காட்டுகிறார். திருமணம் நடக்கும் வீடுகளில் பந்தல் நட மரங்களை வெட்ட காட்டுக்குச் செல்வது தொடங்கி பதினாறு குழிகளில் கால் ஊன்றி எழுந்து நிற்கும் பந்தல் வரையில் சித்திரிக்கப்படுகிறது. தோட்டக் காட்டில் வழிந்தோடும் ஆற்றில் அணைக்கட்டி நீர் இறைத்து விறால், விலாங்கும், மயிரையும் சேற்றுக்குள் மறைந்து பிடிபடுகின்றன. அத்துடன், ஒவ்வொரு காட்சிச் சட்டகமும் நுண்விவரணைகளால் உயிர்ப்படைகின்றன. திருமணத்துக்குப் பந்தல் ஊன்றும் பணிக்குப் பின்னால் அச்சிக்காய் விளையாடும் சிறுவர்கள், வீதியில் நடந்து செல்பவர்களுடன் வம்பளக்கும் கிழவிகள், தோட்டக் காட்டில் மூர்க்கமாய் அலைந்து கொண்டிருக்கும் ஜீன் பன்றி, ஓய்ந்திருக்கும் ரப்பர் மரங்களில் குதித்துத் தாவியோடும் கருங்குரங்குகள் என எல்லாமே அசைவூட்டப்பட்ட காட்சிச் சட்டகங்களாகவே சித்திரிக்கப்படுகின்றன.
தோட்டத்தில் மக்களுடன் மக்களாக இரண்டறக் கலந்திருக்கும் மாடுகள், ஆடுகள், நாய்கள், கோழிகள் என வளர்ப்பு விலங்குகளும் மனிதர்களுக்கு நிகராக நாவலில் காட்டப்படுகின்றன. சாமிக்கு நேர்ச்சையாக்கப்பட்டதால் எதற்கும் கட்டுப்படாமல் தோட்டம் முழுவதும் சாமி கிடா ஆடு அலைந்து திரிகிறது. சாமி கிடாவைக் கண்டு உணவு தந்து நடமாடவும் மக்கள் அனுமதிக்கின்றனர். தலை பிறழ்ந்த கன்றைச் சுமந்து ஈற்றின் போது சிரமப்படும் லட்சுமிக்குப் பிரசவம் பார்க்க பக்கத்துத் தோட்டத்திலிருந்து புதூரானை அழைத்து வருகிறான் ஆட்டுக்கார சின்னக்கருப்பன். குடும்பத்தையும் சமூகத்தையும் உதறி வேறொரு தோட்டத்துக்கு வந்து சேர்கின்றவர் மாடுகளுடன் கொள்கின்ற இணக்கத்தால் மாட்டுக்காரராகவே மாறிப் போகிறார். ஆடுகளை வளர்க்கும் சின்னக்கருப்பன் ஆட்டுக்காரனாகவே மாறிப்போகிறான். தோட்டத்து வாழ்க்கை விலங்குகளுடன் இரண்டற கலந்திருக்கிறது.
அகத்தை வரையும் கலைஞன்
இந்தச் சித்திரிப்புகளில் பாத்திரங்களின் அகமும் நுட்பமாய் காட்டப்படுகின்றன. நாவலின் தொடக்கத்தில் ரப்பர் மர நிரையின் இடைவெளியில் தெரியும் நிலவின் ஏகாந்தம் தரும் மகிழ்ச்சியால் தனக்குள் விம்மி அழுகிறான் ஆட்டுக்கார சின்னக்கருப்பன். அவனுடைய மொத்த வாழ்க்கையும் தலைகீழ் மாற்றம் கண்டு சிதைந்து போன சூழலில் இரவில் தூக்கம் கெட்டு வீட்டுத் திண்ணை பிராஞ்சாவில் அமர்ந்து நிலவைப் பார்க்கிறான். அப்பொழுதும் நிலவு அழகாகவே இருக்கிறது. அந்த நிலா வெளிச்சத்தில் கீழே தவறிய சுருட்டைத் தேட முடமான கால் தெரிகிறது. அந்த இடம், அறியாத அலையடித்து வீழ்ந்த ஆட்டுக்கார சின்னக்கருப்பனின் வாழ்வின் மொத்த துயரையும் சொல்லிவிடுகிறது.
அகத்தைத் தொட்டுக் காட்டும் கலைஞராக, சீ. முத்துசாமி மிளிர்வது கசியடி முனியப்பனின் விவரிப்பில்தான். வெள்ளம் சுழித்தோடும் அருவியில் பயமின்றி நீந்துவதும் வம்பில் திளைப்பதும் கிடையாட்டுக்குக் கொட்டையடித்து மலடாக்குவதும் திருமண வீடுகளில் நிகழும் புணர்ச்சிக்காட்சிகளை மறைந்திருந்து பார்ப்பதும் எனக் கட்டற்றவனாக வளர்பவனின் அகம் சிறுவயது அனுபவங்களால் சிதைவதைக் காட்டுகிறார். சிறுவயதில் தந்தையால் அடித்துத் துன்புறுத்தப்படும் அம்மாவை முனியப்பன் பார்த்து வளர்கிறான். குடிவெறியில் அம்மாவைக் கட்டாயப்படுத்தி அப்பா கொள்ளும் வல்லுறவைக் கண்ணெதிரே காண்பதும் அவனைத் தொந்தரவு செய்கிறது. முனியப்பனின் தந்தைக்கும் மேட்டுக்குச்சி பொன்னம்மாவுக்குமான கள்ள உறவைக் கண்டிக்க அம்மா செல்கிறாள். நோய்களால் தளர்ந்து போனவளின் உடலில் சந்நதம் கூடி பொன்னம்மாவை வசைபாடித் தாக்குகிறவளை வியப்புடன் முனியப்பன் காண்கிறான். அம்மாவைப் பிடித்திழுத்துக் கண்ட மாதிரியாக அடித்து தோட்ட மக்கள் பார்க்க தரையோடு இழுத்துச் செல்லும் அப்பனைக் கையறு சூழலில் பார்க்கிறான். அந்தத் தாக்குதலில் அவனுடைய அம்மா மனநலம் பிறழ்ந்து சில காலத்துக்குப் பின் இறந்து போகிறாள். இப்படிக் கண்முன்னே நிகழ்ந்த வக்கிரங்களும் கொடுமைகளும் கசியடி முனியப்பனின் வக்கிரத்துக்குக் காரணமாக அமைகிறது. முனியப்பன் சிறையிலிருந்து தப்பிக் காட்டுக்குச் சென்று கம்யூனிஸ்டாக மாறித் தோட்டத்து முதலாளி டன்லப் துரையைச் சுட்டுக் கொல்லும்போது தோட்ட மக்களால் வீரனாகக் கொண்டாடப்படுகிறான். ‘பொம்பள புள்ளய அநியாயமா கெடுத்து கொன்ன படுபாவி தான் அவன்…ஆனா, தைரியசாலி……புலிடா அவன்…’ எனச் சமூகக் கூட்டுமனம் குற்றவாளியாக எண்ணிய ஒருவனை வீரனாகப் போற்றும் இடத்திற்கு நகரும் சமூக மதிப்பீடுகளின் முரண் புள்ளியையும் நாவலாசிரியர் காட்டுகிறார்.
வாழ்வென்னும் அபத்தம்
வாழ்வின் மீதும் சுற்றிலுமிருக்கும் மனிதர்கள், விலங்குகள் மீதும் ரசனையும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறான் சின்னக்கருப்பன். ஆடுகள், மாடுகளின் மீது நேயத்துடன் நடந்து கொள்கிறான். தொலைவு வரை நடந்து களைத்த ஆடுகளுக்குச் சோற்று வடிகஞ்சி நீரை வைக்கிறான். தோட்டத்தில் நடக்கும் திருமணங்களில் முன்னின்று உதவுகிறான். உறவை உதறி வரும் மாட்டுக்காரருக்கு வீட்டில் தங்க இடம் கொடுத்து ஆதரவு தருகிறான். தமிழ்நாட்டில் அப்பா பிரிந்து வந்த முதல் மனைவியின் வாழ்வும் சிதைந்து போனதையெண்ணி துயருருகிறான். தோட்டம், ஆடுகள் எனத் தனியுலகொன்றுக்குள் வாழ்ந்து குடும்பத்தை விட்டு விலகி நிற்பவனை எண்ணி மனைவி பெரியத்தாய் சலிப்படைகிறாள். ஆடு மேய்க்கச் சென்ற மகள் சின்னப்புள்ளையை முனியப்பன் கொல்கிறான். துருவேறிய ஆணி குத்திக் காலும் புடம் வைத்து துண்டிக்கப்படுகிறது. மகள் இழந்த பழியும் குடும்பத்துக்குப் பொருளாதாரச் சூழலில் உதவ முடியாத கையாலாகாத நிலைக்கும் ஆளாகிறான். எல்லாவற்றையும் இழந்த சூழலில் உடல் வேட்கையைத் தணிக்க மனைவியிடம் நெருங்குபவனைப் பிள்ளைகள் காதுபடவே மனைவி வசைபாடி அவமதிக்கிறாள். மனைவிக்கு இன்னொருவனுடன் கள்ள உறவு இருப்பதையும் அறிகின்றான். இழப்புகளாலும் அவமானத்தாலும் துவண்டு நம்பிய எல்லாவற்றாலும் கைவிடப்படுகின்றவனின் கண்களுக்கு வாழ்வின் அபத்தம் புரிப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறான். ஒவ்வொரு மணற்துகளாய்ச் சேர்த்து மணற்கோபுரமொன்றை எழுப்புவதைப் போல ரசனை, நம்பிக்கையென நுட்பமாய் உள்வாங்கி உருவாகும் வாழ்வு அறியாப் பேரலையின் முன் தடம் எஞ்சாமல் சிதைந்துவிடுகிறது. தடமின்றி துடைத்து முடிக்கப்பட்ட வாழ்வின் பேரலைக்குள் ஆட்டுக்கார சின்னக்கருப்பனும் அடங்கிப் போகிறான்.
அதிகாரமும் அடக்குமுறையும்
குச்சிக்காட்டு மக்கள் படும் துன்பங்களையும் சமூக அவலங்களையுமே மண்புழுக்கள் நாவல் அதிகம் சொல்கிறது. துரை, கிராணி, தண்டல் என அதிகார அடுக்கொன்றின் தொடர் கண்காணிப்பும் அச்சுறுத்தலின் கீழும்தான் குச்சிக்காட்டு மக்கள் வேலை செய்கின்றனர். குறைந்த ஊதியத்தில் அதிக உழைப்பு ஒரு பக்கமென்றால் அவர்களின் அதிகாரம், இச்சைக்குப் பணியாதவர்களை ஏணி கோட்டு மரம் சீவ வைத்தல், வேலையை அதிகப்படுத்துதல் எனத் தண்டனைகளையும் தருகின்றார்கள். அதனாலே, அதிகார வருக்கத்தின் இச்சைக்கிணங்கி சோரம் போகிறவர்களைச் சமூகம் வெறுக்கவும் ஐயப்படவும் செய்கிறது. ஜப்பானியர் காலக்கட்டத்துக்கு முன்னர் தன் கணவனைத் தண்டலாக்கி அதிகாரம் கொண்டு விட எண்ணி கிராணி வர்கிஸுக்கு சோரம் போகிறாள் பச்சையம்மா. ஆனால், ஜப்பானியரின் படையெடுப்புக்கு அஞ்சித் தப்பிய கிராணியால் அவள் நினைத்த அதிகாரத்தை அடைய முடியாமல் போகிறது. அதே வேளையில், இந்த அடக்குமுறைகளுக்கு மனம் போடும் நுண்மையான எதிர்வினைகளையும் சீ.முத்துசாமி காட்ட தவறவில்லை. தோட்டத்தையே அதிகாரம் செய்யும் டன்லப் துரையின் நாயை ராஜநாகம் தீண்டி கொன்றுவிடுகிறது. துரையின் பங்களாவில் வேலை செய்யும் பாம்பு பாலா, அந்தப் பாம்பின் அழகைச் சிலாகித்து அதே மாதிரி தனக்குக் குழந்தை பிறந்து தோட்டத்து ஆளும் வருக்கத்தின் கொட்டத்தை அடக்க வேண்டுமென எண்ணுகிறான். குடிகார தந்தை, வாழாவெட்டியாய்ப் போன தங்கை எனத் துன்பங்கள் ஒரு புறமும் கணவனின் அடிக்கும் இச்சைக்கும் இணங்குவதுமென அடிமையைப் போன்று வாழ்கிறாள் முனியனின் மனைவி. அந்தக் கொடும் வாழ்விலிருந்து கண நேர விடுதலையாகத் தன் ஆதர்ச நாயகனான பாகவதருடனான குதிரையேற்றத்தைக் கற்பனை செய்கிறாள். கணவனுடனான வேண்டா வெறுப்பான புணர்ச்சிகளின் போதும் பாகவதரைக் கற்பனை செய்து கொள்கிறாள். அதிகாரத்தையும் அடக்குமுறையையும் எதிர்க்க முடியாத சூழலில் பாவனைகளின் வழி அதனை மனம் எதிர்கொள்கிறது.
இவற்றுடன், சமூகமாகவே சாதிய அதிகார அடுக்குக்குள் மக்கள் பிரிந்து வாழ்கின்றனர். தெளிவான வரையறைகள் இல்லையென்றாலும், திருமணத்தில் கொள்வினை கொடுப்பினை என வரும்போது சாதியைக் காட்டி நிராகரிக்கின்றனர். ஆட்டுக்கார கிருஷ்ணனின் காதலைத் தண்டல் தாழ்த்தப்பட்ட சாதியினன் என்றே நிராகரிக்கிறார். அவனது தங்கை அஞ்சலைக்கும் பக்கிரிசாமிக்குமான காதலும் சாதியைக் காட்டி கிருஷ்ணனின் தந்தை நிராகரிக்கிறார். அதனாலே, அவள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். தோட்டத்தில் மலம் கூட்டும் வாசக்கூட்டிக்குத் தண்ணீர் தரவும் மறுக்கும் ஒடுக்குமுறை சூழலில்தான் குச்சிக்காட்டுச் சனம் வாழ்கிறது. குச்சிக்காட்டு மக்கள் வெள்ளையர்கள் உருவாக்கி வைத்திருந்த அதிகார அடுக்கால் படும் துன்பங்களைச் சொல்லும் அதே வேளையில் சமூகமாக அவர்களிடமிருந்த சாதியென்னும் கீழ்மையையும் நாவலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
அறவுணர்ச்சியின் முரண்
இந்நாவல் சமூக அறவுணர்ச்சி செயற்படும் முரணைத் தொட்டுக் காட்டுகிறது. வாழ்நாளெல்லாம் விலங்குகள், மனிதர்கள் என எல்லா உயிர்களுக்கும் அன்பும் கனிவையும் மட்டுமே காட்டி வந்த சின்னக்கருப்பன் வாழ்வில் நிகழ்ந்த வீழ்ச்சியால் சமூகத்தாலும் குடும்பத்தாலும் ஒதுக்கப்படுகிறான். சிறுவயதில் நேர்ந்த உளவியல் பாதிப்பால் மனவிகாரம் கொண்ட முனியப்பன் பழியுணர்வைத் தீர்க்க துரையைக் கொன்று சமூகப் போராளியாக சமூகத்தால் அடையாளம் காணப்படுகிறான். அதே முனியப்பனைத்தான் சின்னப்புள்ளையைக் கொன்றதற்காகச் சமூகம் கொடூரனாக உருவகித்திருந்தது. தோட்டத்தில் தங்களை அதிகாரம் செய்யும் துரையைக் கொன்றதற்காக முந்தைய கொடும் நினைவை உடனடியாக மறந்து முனியப்பனை நாயகனாகக் கொண்டாடுகிறது. துரைக்கு அடிபணிந்த மக்களின் மனத்தில் இருக்கும் தாழ்வுணர்வே துரை கொல்லப்படும்போது ஆர்ப்பரிக்கிறது. முனியப்பனின் எல்லா தவறுகளையும் மன்னித்து அவனை நாயகனாக முன்னிறுத்துகிறது. அவனைக் காலம் முழுவதும் போராளியாகச் சமூகம் நினைவில் வைத்திருக்கும். தீமிதித் திருவிழாவின் கொண்டாட்டத்துக்கு மத்தியில் சாலபலத்தான் சின்னக்கருப்பனின் வாழ்வையும் வீழ்ச்சியையும் நினைவு கூர்கிறான். முனியப்பனுக்கு நாயக அந்தஸ்தைத் தரும் சமூகம்தான் எங்கோ ஒரிடத்தில் சின்னக்கருப்பனின் வாழ்வும் வீழ்ச்சியும் செவ்வியான் கேடாக நினைவில் வைத்திருக்கிறது.
சில குழப்பங்கள்
‘மண்புழுக்கள்’ நாவலின் மொத்த கதையுமே கதைசொல்லியின் பார்வையில் விரிகிறது. குச்சிக்காட்டுக் களத்தில் காணும் ஒவ்வொன்றையும் நுட்பம் புரிபட நுண்மையாய் விளக்கிச் செல்கிறார். ஒன்றை விளக்கும்போது அதன் நுட்பங்களுக்குள் புகுந்து கதையைக் கைவிடும் அபாயமும் நாவலில் நிகழவே செய்திருக்கிறது. ஆட்டுக்கார சின்னக்கருப்பனின் மகள் சின்னப்புள்ள காணாமற்போன கதையைச் சொல்லச் சென்று திசைமாறி ஆடுகளின் இயல்புகளை விளக்கும் முரண்பட்ட இடங்களை நாவலில் காணமுடிகின்றது. நாவலின் தொடக்கம் முதலே ஆட்டுக்கார சின்னக்கருப்பனுக்கும் சாலபலத்தானுக்கும் இடையிலான நட்பின் நெருக்கம் சொல்லப்படுகிறது. சாலபலத்தான் மனைவியின் பிரசவத்துக்கு உதவி செய்தல், சின்னப்புள்ளையின் பூப்பெய்தும் சடங்குக்குச் சாலபலத்தான் உதவுதல் என நெருக்கம் உருவாகிறது. நாவலின் இறுதியில், சாலபலத்தான் ஆட்டுக்கார சின்னக்கருப்பனை அண்ணனென அழைத்து மூன்றாவது ஆளுடன் பேசுவதைப் போல கடந்து செல்கிறான். இவர்களுக்குள் நிகழும் நெருக்கமும் விலக்கமும் கதைசொல்லலில் தவறவிடப்பட்டதாகவே தெரிகிறது. புனைவல்லாத எழுத்தில் கறாராக மதிப்பிட வேண்டிய கால வரையறை போன்றவற்றைப் புனைவில் சற்று நெகிழ்வாகவே காண வேண்டியிருக்கிறது. இருந்தபோதிலும், ‘மண்புழுக்கள்’ நாவல் பேசும் களத்தையொட்டிய சில காலக் குழப்பங்கள் எழவே செய்கின்றன. ஜப்பானியர்கள் காலத்தில் கட்டாய ரயில் கட்டுமானப்பணிக்கு அழைத்துச் செல்லப்பட்டு உருக்குலைந்த சீயாம் தாத்தா போன்றவர்களுக்கு வயதளவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைக் கொண்டு நாவல் 1960களில் நிகழ்கிறது என ஊகிக்கலாம். ஆனால், நாவலில் பல இடங்களில் பாகவதர் படங்கள், பாடல்கள், கம்யூனிஸ்டு அச்சுறுத்தல் ஆகியவைக் குறிப்பிடப்படுவதைக் கொண்டு 1940களின் பிற்பகுதி அல்லது 50களின் முற்பகுதி என நாவல் நிகழும் களத்தை ஊகிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
குச்சிக்காட்டு மக்களின் வாழ்க்கையை விரிவாகச் சொல்லும் முயற்சியில் இடைவெட்டாகக் கம்யுனிஸ்டுகளின் வாழ்க்கையையும் ஊடுருவலையும் ஆசிரியர் சொல்ல முயல்கிறார். அதைப் போல ஜப்பானிராட்சிக்குப் பிந்தைய வாழ்வென்பதால் மிகச் சுருக்கமாக ஜப்பானியர் ஆட்சியின் கொடுமையும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு சித்திரங்களுமே தனி நாவலுக்குரிய களங்கள். ஆனால் தோட்டத் தமிழர்களின் வாழ்வை ஒட்டுமொத்தமாய் சொல்லிவிட வேண்டும் என்கிற முனைப்பால் போதிய விரிவு காணாமல் நாவலில் உதிரியாக அமைந்திருக்கின்றன. உதாரணமாகத் தோட்டத்தையொட்டிய காடுகளில் பதுங்கி வாழும் சீனர் தான் ஏன் கம்யூனிஸ்டு ஆனேன் என விளக்கும் பகுதியும் ஜப்பானியர்களால் சியாமுக்கு ரயில் பாலம் அமைக்க அழைத்துச் செல்லப்பட்ட வரலாற்றைச் சியாம்கார தாத்தா சொல்லும் கதையும் முழுமையற்ற பகுதிகளாக இருக்கின்றன.
மண்புழுக்கள் எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி மண்ணை அயராது உழுது வளம் சேர்க்கின்றன. மண்ணுக்கு உரம் சேர்க்கும் மண்புழுக்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில்லை. சமூகமும் அவற்றை ‘புழு’ என அருவருப்புடன்தான் அணுகுகின்றது. இருள் துளைகளுக்குள் பதுங்கிக்கிடந்து அவை வாழ்ந்து மறைகின்றன. 1940ஆம் ஆண்டுகால ரப்பர் தோட்ட மக்களின் வாழ்வைப் பற்றிய இந்நாவலுக்கு ‘மண்புழுக்கள்’ எனும் தலைப்பு மிகச் சரியாகப் பொருந்துகின்றது.
மண்ணுக்குள்ளே ஊர்ந்து தடம் அமைத்து மறைந்து போகும் மண்புழுக்களுக்கு ஒரு நாளும் மண்ணின் பிரம்மாண்டம் புரியாததைப் போலவே குச்சிக்காட்டு மக்களுக்கும் வாழ்வைச் சூழும் புரிபடாத கண்ணிகளை அறிந்து கொள்ள முடியாமல் போகிறது. ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் அன்பும் ஆதரவும் அளிக்கும் ஆட்டுக்கார சின்னக்கருப்பன் இழப்புகளாலும் துயர்களாலும் வாழ்வின் மீது நம்பிக்கை இழக்கின்றான். தோட்டக்காட்டில் வாழ்வாதாரத்துக்காய் உழலும் மக்களின் வாழ்வைச் சிதறடிக்கும் இடர்கள் சூழ்கின்றன. வாழ்வைச் சூழ்ந்திருக்கும் ரகசியக்கண்ணிகளால் ஆட்டுவிக்கப்பட்டு ஓய்ந்தபின் அடையும் பெருஞ்சலிப்பை ‘மண்புழுக்கள்’ நாவல் தரிசனமாக முன்வைக்கிறது.