கிருஷ்ணை

நான் தங்கியிருந்த ஹாஸ்டலின் வெளியே நீண்டிருந்த பச்சை மாமரத்தின் சிறு கிளையின் மேல் அமர்ந்து கொண்டு ஒரு கருங்குயில் கூவியது. அவ்வொலி மிக அருகில்தான் கேட்டது. முழு மாமரமும் தெரியும் ஜன்னலைக் கொண்ட அறை அது. நீண்டு வளர்ந்து பெருத்திருந்த மாமரக் கிளை மட்டும் என் அறையைத் தொடும் வரை வளர்ந்திருந்தது. அங்கே தான் அந்தக் கருங்குயில் அமர்ந்திருந்தது.

என்னுடன் பல்கலைக்கழகத்தில் பயிலும் மொசியை நினைத்துக் கொண்டேன். அவள் ஓர் ஆப்பிரிக்க நாட்டுக்காரி. இன்றிரவு அவளைச் சந்திப்பதைப் பற்றிய எண்ணங்கள் மண்டையில் குவிந்துக் கொண்டிருந்தன.

காற்று வீசியதில் அறை முழுவதும் குளிர் படர்ந்தது. நான் வெளிக் கதவை மூடி விட்டு,  என் மெத்தை மேல் மீண்டும் சரிந்தேன்.

மொசியை முதன் முதலாய் நான் பயின்றுக் கொண்டிருந்த பல்கலைக்கழகத்தில் வைத்துதான் பார்த்தேன். உப்சியில் மொத்தம் பதினைந்து துறைகள். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனிக் கட்டடங்களும் அதைச்சுற்றி விசாலமான வளாகங்களும் அமைந்திருந்தன. உப்சியில் அனைத்துலக மாணவர் பிரிவில், அவள் நடனத் துறையில் முதுகலை பட்டம் பயின்றுக் கொண்டிருந்தாள்.  நான் நாடகத்துறையில் பயிலும் இளங்கலை பட்ட மாணவன். அவளை ஓரிரு முறை என் துறை வளாகத்தில் வைத்துப் பார்த்திருக்கிறேன். பேசியது கிடையாது. ஏதோவொன்று என்னைத் தடுத்தது என்றும் சொல்லலாம்.

என்னை விட அதிக உயரமவள். குறுகிய இடை கொண்டவள். மற்றபடி அதற்கு முன்னர் நான் பார்த்தப்படங்களில் வரும் கறுப்பின அழகிகள் போலவே அங்கங்கள் திரண்டிருந்தன.

பொதுவாகவே என் நண்பர்களுக்குக் கறுப்பின பெண்களின் நீலப்படங்கள் பிடிப்பதில்லை. என் கைப்பேசியை எட்டிப்பார்த்து உதடு பிதுக்கிச் செல்வார்கள். நெருக்கமானவர்கள் ”இதுக்கு யானையோட டாக்குமன்டரி பாக்கலாம்” எனக் கேலி செய்வார்கள்.

எனக்குக் கறுமை என்பது பரிசுத்த அழகாகத் தோன்றியது. கறுமையில் இருந்து வெளிபடும் ஒளி நண்பர்களின் கண்களில் படாதது ஆச்சரியமாக இருந்தது. மொசியிடம் அப்படி ஓர் ஒளி இருந்தது. சில முறை மட்டுமே அவளைப் பார்த்திருந்தாலும் என்றுமே நீங்காமல் நினைவில் பதிந்திருந்தாள் மொசி. அன்று இரவில் என்னைச் சந்திக்க வேண்டுமெனச் சொல்லியிருந்தாள். அனேகமாக என் கற்பனைகளெல்லாம் நிஜமாகும் என்றுதான் தோன்றியது.

கைப்பேசி கிணுகிணுத்தபோது, மொசி நினைவால் கொஞ்சம் உடல் முறுக்கிதான் படுக்கையில் கிடந்தேன். அம்மாதான் அழைத்துக் கொண்டிருந்தார். மூன்றாவது அழைப்பில் வெறுப்புடன் எடுத்து “ஹெலோ மா, சொல்லுங்க,” என்றேன். அம்மா வழக்கம் போல் வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தார். அப்பாவைப் பற்றி மட்டும் சொல்லும் பொழுது ரொம்பவே ஆதங்கப்பட்டார். என்னை மறக்காமல் சரியாய் சாப்பிட்டு விடும்படி சொல்லும் பொழுது எனக்குள் மெல்லியதாக ஒரு சிறு நெகிழ்ச்சி. நான் இப்போதெல்லாம் அம்மாவிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துக் கொள்வதில்லை. வீட்டிற்குப் போவதும் இப்போதெல்லாம் மிகவும் குறைந்திருந்தது. அப்பாவின் மீதிருந்த வெறுப்பு பல மடங்கு கூடியிருந்தது.

“என்னப்பா, வீடுப் பக்கமே வரது இல்ல. அடுத்த வாரம் நம்ம குல தெய்வத்துக்கு சாமி கும்புடுறோம். தெரியும் தானே, லீவு இருக்கா இல்லையா?”.

அம்மாவிடம் விடுமுறை இல்லையென்றே சொன்னேன். சாதாரணமாகப் பொய் சொல்லப் பழகியிருந்தது.

அம்மா கொஞ்சமாய் கோபம் கொண்டு, சில திட்டுகளை உதிர்த்துவிட்டுக் கைப்பேசியைத் துண்டித்து விட்டார். எனக்கு எதுவும் உரைக்காது என்பது போலிருந்தது அம்மாவின் திட்டுக்கள். அம்மாவைக் கோபப்படுத்தியது கொஞ்சம் நிம்மதியாகக் கூட இருந்தது. அப்பா எனக்கு ஏற்படுத்திய அவமானத்திற்கு முன் யாருடைய கோபமும் ஒரு பொருட்டாக இல்லை.

நான் படிவம் ஐந்து பயின்றபோது அப்பாவின் தலைமையில் எங்கள் குலத் தெய்வம்,  திரௌபதி அம்மன் கோயில் கட்டப்பட்டது. அதற்கு முன்புவரை வருடம்தோரும் தமிழகத்தில் உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்குதான் அப்பா தவறாது சென்று வந்தார். அப்பாவுடன் ஒவ்வொரு முறையும் யாராவது உறவினர்கள் பயணத்தில் இணைவது உண்டு. யார் வந்தாலும் வராவிட்டாலும் அப்பா ஒவ்வொரு வருடமும் செல்லத் தவறியதில்லை. இந்நிலையில்தான் அவருக்குத் தனது சொந்த நிலத்திலேயே திரௌபதைக்கு ஒரு கோயில் கட்டும் எண்ணம் வந்தது. அதற்காக அவருக்குச் சொந்தமாக இருந்த செம்பனைத் தோட்டம் ஒன்றை நல்ல விலைக்கு விற்றார்.

கோயில் நிர்மாணிப்பு முடியும் கட்டத்தில் திரௌபதி அம்மனின் திருவுருவச் சிலையைத் தமிழகத்தில் இருந்து அப்பா தருவித்தார். அம்மன் கருத்த மேனியாய் நின்ற கோலம் என்னை உறங்கவிடாமல் செய்தது. மகாபாரதத்தில் திரௌபதியைப் பற்றி படித்தது நினைவுகளில் வந்து அலைமோதிக் கொண்டிருந்தது. கோயில் எங்கள் வீட்டோடு ஒட்டியிருந்த நிலத்தில்தான் கட்டப்பட்டது. எனவே, யாருக்கும் தெரியாமல் அம்மனைப் பார்க்க நள்ளிரவுக்குப் பின் செல்வது அப்படி ஒன்றும் கஷ்டமானதாக இல்லை.

அப்படி ஒருமுறை நான் சென்றபோது ஒரேயொரு அகல்விளக்கு மட்டும்  எரிந்துகொண்டிருந்தது. அம்மன் மஞ்சள் துணி திரைக்குப் பின்னால் நிற்பது, நிழல் போல தெரிந்தது. அகல் விளக்கின் சுடர், காற்றில்  அசையும் பொழுது, கரிய நிழல் எனத் தெரிந்த அம்மனின் நிழலும் கூடவே அசைந்தது. ஒரு கணம் அவள் வீறுக் கொண்டு எழுந்து அசைந்தாடுவாளோ என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. சிறு வயதில் பார்த்த அம்மனின் பக்தி திரைப்படங்கள் எல்லாம் நினைவில் நின்றாடின. அதில் வருவது போல் எனக்கு மட்டும் ரகசியமாய் வந்து காட்சி தந்து பேசுவாளோ என்று எண்ணி மெல்லத் துணியை விலக்கியபோது சிலையென அமைந்த அம்மனின் திருமேனியில் கருமை சுடர்விட்டது. அடர் கருமை  நிறமது. சுடர் ஒளியில் அவள் முகத்தை உற்று நோக்கினேன். நீண்டிருந்த மீன் விழிகள், மெதுவாய் உப்பியிருந்த கன்னம், வாய்  குவித்து, உதட்டின் இறுதி நுனியில் சிறு கோடுபோல் விழும் மந்தகாசப் புன்னகையென அவள் அமர்ந்திருந்தாள். உற்று நோக்குகையில் அவள் மேனியெங்கும் ஒருவித ஈரப்பசை ஒட்டியிருந்ததைக் கவனித்தேன். அது ஒரு வேலை வியர்வைத் துளிகளோ என்று எண்ணிய மனம், மறுகணம் அது சுடர் ஒளியினால் எழுந்த பிரம்மை என்றெண்ணி  சமன் அடைந்தது. அனைத்தையும் கடந்து, அவள் மேனியிலிருந்த எனது விழிகள், அவள் கால்களைப் நோக்க பரபரத்தது. கண்கள் சுருக்கி, நோக்குக் கூர்மையடைந்து, அவள் பாதங்களைப் பார்த்தேன். அது அவளின் மஞ்சள் புடவையின் பாவாடையால் மூடப்பட்டிருந்தது. அதே கணம் நெற்றியில் நீண்ட கோடுபோல் வழிந்து, மூக்கின் நுனி வரை நீண்டிருந்த வியர்வைத் துளியைத் துடைத்துக் கொண்டேன். பெண்களின் பாதங்கள் எனக்கு நெருக்கமானவை.

பெண்களிடம் பேசும்பொழுது நான் மிக எதேச்சையாகப் பார்ப்பது அவர்களின் கால்களைத்தான். குறிப்பாக விரல்கள். நகங்களின் நேர்த்தியே ஒரு பெண்ணிடம் என்னை நெருக்கமாக்கும். பாதங்களைப் பார்க்க முடிந்தால் பரவசமாகிவிடுவேன். இப்பழக்கம் இயல்பாக இருந்து பின்னர் தவிர்க்க முடியாத ஒரு செயலாய் மாறியது.

நான் அவர்களின் கால் பாதங்களைத்தான் பார்க்கிறேன் என்று என்னுடன் பேசும் பெண்களுக்குத் தெரியாமலே பார்ப்பேன். இன்றுவரை வித விதமானப் பாதங்களைக் கண்டிருக்கிறேன். அதை அணைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தொட்டு தடவிப் பார்க்க வேண்டும் எனத் தோன்றும்.

நண்பர்களிடம் பேசும்போது அவர்கள் வர்ணிக்கும் பெண்களின் அவயங்களில் பாதங்களே இருந்ததில்லை. எனக்கு ஏதோ உளவியல் சிக்கலாக இருக்குமா என இணையத்தில் தேடிப்பார்த்தும் பதில் கிடைக்கவில்லை. பூமியில் மெல்ல அமிழ்ந்து பரவும் பாதத்தின் மேல் இருந்த ஈர்ப்பு எப்போது, எப்படித் தோன்றியது என நினைவில்லை.

அந்த ஆர்வத்துடன்தான் அம்மனின் பாவாடையை மெல்லத் தூக்கினேன்.

அவள் கால் விரல்கள் கரிய நிறத்தில் பளபளத்தது. விரல்களுக்கு மேல் சதைப்பற்றுடைய கால்கள். மனதில் பரவசம் தோன்றியது. இத்தனை சிறிய, இவ்வளவு நேர்த்தியான கால்களைப் பார்த்ததாய் ஞாபகமில்லை. அகல் விளக்கை எடுத்து வந்து காலுக்கு அருகில் வைத்தேன். மினுக்கும் கருமை என்னை உற்சாகப்படுத்தியது. அவள் பரிசுத்த அடிப்பாதம் என்ன வண்ணத்தில் இருக்குமென தோன்றியபோது அம்மனின் உடலைப் பிடித்தேன். கால்கள் பீடத்தோடு ஒட்டிக்கிடந்தன. உடலை அசைக்கவே முடியவில்லை. அப்படியே தள்ளிவிட்டால் உடல் மட்டும் தனியாகப் பிழந்துகொண்டு வந்துவிடுமென தோன்றி கை வைத்தபோது பின் மண்டையில் பொளேர் என ஒரு அறை விழுந்தது.  

“அம்மனோட பாவாடையில என்னாடா செய்யுற?” அப்பாதான் கத்தினார்.

நான் ஏதும் பேச முடியாதபடி தொடர்ந்து அடிகள் விழுந்தன. கோயில் பணியை வேடிக்கைப் பார்க்க வந்திருந்த மாமாவின் மகள்கள் அடக்க முடியாமல் வாயை மூடிச் சிரித்துக்கொண்டிருந்தனர்.

“பாவாடதான் வேணுமுன்னா,ந்தா அந்தப் பொண்ணுங்ககிட்ட வாங்கி கட்டிக்க” என்றவர் மேலும் அறைந்தார். அந்தப் பெண்கள் விடாமல் சிரித்தனர்.

முகம் அமிலம் ஊற்றியது போல் எரிந்து கொண்டிருந்தது. அன்றிலிருந்து அப்பாவிடமிருந்து ஒரு விலக்கம். சிலர் என்னைப் ‘பாவாடை’ எனக் கேலியாக அழைக்கவும்தொடங்கியிருந்தனர். பெண்களின் கால்களுக்குப் பார்வைப் போகும்போதெல்லாம் “என்னா பாவாட வேணுமா?” எனக் கிண்டல் செய்வோரும் உண்டு. திரௌபதியம்மன் கோவிலுக்குச் செல்வதை அன்றோடு நிறுத்திக் கொண்டேன். பாதங்களின் மீதிருந்த ஆர்வம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கி அறவே இல்லாமல் ஆனது. நீலப்படங்களைப் பார்க்கத் தொடங்கியப் பின் என்னை நானே கிறுக்கன் எனத் திட்டிக்கொண்டேன். ஊரில் இருந்த அத்தனை அழகிகளின் பாதங்களையே பார்த்து வீணடித்த காலங்களை எண்ணி நொந்துகொண்டேன்.

படிவம் ஐந்தை முடித்தவுடன் கல்லூரிக்கு எழுதிப்போட்டு உப்சி வந்தபிறகு எத்தனை முறை சொல்லியும் அம்மனின் முகத்தைக் கூட பார்க்கச்செல்லவில்லை. தவறே செய்யாத என்னை காக்காத அவள் எப்படிக் கடவுளாவாள்?

மெத்தையில் படுத்திருந்த நான் மணியைப் பார்த்தேன். மொசியைச் சந்திக்க இன்னும் நெடுநேரம் இருந்தது. அவள் என்னை இரவில் வரச் சொன்னது ஆர்வத்தை அதிகமாக்கியிருந்தது. ஆர்வமான காரியங்கள் எப்போதும் இப்படித்தான் தாமதிக்கின்றன. ஒரு தலையணையின் முனையை மோசியின் முலையாக எண்ணித் தடவிக்கொண்டேன்.

மொசியை வகுப்பு முடிந்து, மாலையில்தான் சென்று சந்தித்தேன். உப்சியின் பேருந்து நிறுத்துமிடத்தில் எதையோ பார்த்து நின்றுக் கொண்டிருந்தாள். யாரையோ தேடிக் கொண்டிருகிறாள் என்று அவள் உடல் அசைவுகளைக் கொண்டு யூகித்தேன். அவளிடம் பேசியே ஆக வேண்டுமென்ற எண்ணம் என்னை உந்தி தள்ளிக் கொண்டேயிருந்தது. ஆங்கிலம் சரளமாய் பேச வந்தாலும் நிச்சயம் எதையாவது உளறி வைப்பேன் என்ற எண்ணம் தோன்றி தடுத்தது. பின் என்னை முழுதாய் திரட்டிக் கொண்டு, அவளை நோக்கி நடந்து சென்று, நெருங்கியவுடன் குரலை மெல்ல கணைத்து எச்சிலைத் தொண்டைகுழிக்குள் இறக்கி கொண்டேன். என் வருகையை அவள் அறிந்து கொண்டு, மெதுவாய் திரும்பி இடது கையால் அவளின் சுருட்டையான புரிக்குழலை, பின்னுக்குத் தள்ளி என்னைப் பார்த்து மெல்ல சிரித்தாள். அவள் கன்னங்களில் விழுந்த குழிகள், என்னை இன்னும் எச்சரிக்கை அடைய வைத்தன.

பொதுவாகவே வெளிநாட்டுப் பெண்களிடம் காரணமில்லாமல் பேசுவதில் சிக்கல் இருப்பதில்லை. அவர்கள் புதிய சூழலில் தனியர்களாக உணர்கிறார்கள். எனவே, யாராவது பேசினால் இயல்பாக உரையாடலில் ஒன்றிவிடுகிறார்கள்.

நீண்ட நேரம் அவளிடம் பேசிக் கொண்டே மெல்ல நடந்தேன். இவ்வளவு விரைவாக அவளிடம் நெருக்கமாகி விடுவேனென்று நான் எண்ணவில்லை. நிறைய பேசினோம். பேசியது எல்லாம் என்னுள் சென்று தகவல்கள் என சேர்ந்துக் கொண்டிருந்தன. அவள் ஆப்பிரிக்க தந்தைக்கும், இந்திய தமிழ்ப் பெண்ணுக்கும் பிறந்தவள் என்று கூறிய பொழுது, கண்கள் விரிந்து அவளைப் பார்த்தேன். அவள் மெதுவாய் சிரித்துக் கொண்டாள். பின்பு அப்படியே எங்கள் உரையாடல் கலை நோக்கி நகர்ந்தது. நான் நாடகத்துறை மாணவன் என்பதால், நான் நடிப்பையும் சினிமாவையும் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவளும் என்னுடன் இணைந்து சில ஆங்கிலப் படங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். பின்பு அவள் நடனத்துறையில் முதுகலை படிப்பதாக என்னிடம் கூறினாள். அதை நான் முன்பே அறிந்திருந்தும், அப்பொழுதுதான் முதல் முறையாகக் கேட்பது போல் தலையாட்டிக் கொண்டேன். ஆங்கிலத் திரைப்படங்களில் காட்டப்படும் ஆப்பிரிக்க நடிகர்கள், ஆங்கிலம் பேசும் பொழுது ஒரு வகையான ‘ஸ்லேங்’ இருக்கும். ஆனால் இவளிடம் அப்படி ஒன்றுமில்லை. மிகத் தெளிவாகவே ஆங்கிலத்தில் உரையாடினாள். என்னைவிட மூன்று வயது பெரியவள் அவள். மிக இயல்பாக, எந்த வித தயக்கமுமின்றி என்னிடம் பேசிக்கொண்டு நடந்து, ஒரு சமயத்தில் நான் ஆங்கிலத்தில் சொன்ன ஒரு வரி நகைச்சுவைக்கு வெடித்துச் சிரித்து, கைகளைக் காற்றில் வீசி என் தோளில் மெல்ல தட்டியது எல்லாம் என்னை இன்னும் இயல்பாக்கியது.

“ உங்களுக்கு தமிழ் தெரியுமா?”

“கொஞ்சம் பேசத் தெரியும், அதைவிட கொஞ்சம் புரிந்துகொள்ள முடியும்” என்றாள் ஆங்கிலத்தில்.

நான் சிரித்துக் கொண்டே தலையசைத்தேன். பின்பு அவளும் மெல்ல சிரித்து என்னிடம் பேசத் தொடங்கினாள்.

“ஏன் திடீரென்று இந்தக் கேள்வியைக் கேட்டீர்கள், தெரிந்துகொள்ளலாமா?

“இல்லை சும்மா கேட்டேன். நடனத்துறை என்றால் உங்களுக்கு என்ன நடனம் தெரியும்?” சம்பந்தமே இல்லாத கேள்வி அது. நாக்கை உள்ளிழுத்து தாடையை இறுக்கிக் கொண்டேன்.

அவளுக்கு கதக் பிடிக்குமென்று சொன்னாள். அவள் அம்மா சிறுவயதிலிருந்தே அவளுக்குக் கதக் சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்றும், அவள் தந்தை இங்கிலாந்து நாட்டில் இருப்பதாகவும் சொன்னாள். நான் அமைதியாக அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்தேன். பின்பு அவள் சிரித்து விட்டு, தன் கைப்பைக்குள் கையை விட்டு, உதட்டில் பூசப்படும், ‘லிப்பாம்’ ஒன்றை எடுத்து, உதட்டை குவித்து அதன் மேல் மெல்ல தடவினாள். நான் பார்க்க வேண்டுமென்பதற்காகதான் அப்படிச் செய்கிறாளா, என்று முதலில் எண்ணிக் கொண்டேன். பின் இது அவர்களுக்கு மிக இயல்பானதே என்றெண்ணி, மீண்டும் அவளிடம் பேச முனைந்த பொழுது அவளே பேச ஆரம்பித்தாள்.

“இதற்கு முன்னாடி யாராவது கதக் ஆடி பார்த்து இருக்கீங்களா?”

“ஆம் பார்த்து இருக்கேன். சில திரைப்படங்களில், சில முறை நேரடியாக கூட. ஒரு முறை ஒரு பெரிய கதக் நிகழ்ச்சிக்குக் கூட சென்றிருக்கிறேன்” என்றேன்.

அவள் சிரித்து வைத்தாள்.

நான் அவள் பேசுவதை மட்டும் கவனிக்க முடியாமல் தவித்தேன். விழிகள் அவள் உடலையும் மிக சரியாகப் பார்த்து மீண்டுக் கொண்டிருந்தது. அவளுடைய மார்புகள் நிமிர்த்து நின்றிருக்க, வயிறு மட்டும் உள்ளே சென்று குவிந்திருந்தது. சட்டென ஓர் ஆப்பிரிக்க ஆபாச பட நடிகை நினைவுக்கு வந்தாள்.

“கதக் ஆடுவது என்பது காற்றை நம்மோடு அழைத்து செல்வது போல. காற்றோடு நாம் கலந்திருப்பது போல. காற்றே நாமென்று ஆவது போல. நான் அப்படிதான் நினைத்துக் கொள்வேன். காற்றிலே அசைந்தாடி சுழன்றாடும் பொழுது நான் எடையற்று இருப்பது போல் ஒரு உணர்வு வரும். ஆனால் கதக் ஆடும் பொழுது கால் பாதங்களின் அசைவுகள் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது,” என்றாள்.

நான் கூடுதலாக என்ன சொல்வது எனத் தெரியாமல் விழித்தேன். அவள் பாதங்களைப் பற்றி பேசியபொழுது புன்னைகை செய்து கொண்டேன்.

அவள் கொஞ்சமாய் கண்களைச் சுருக்கி, உதட்டைக் குவித்து, புன்னகைப்பதுப்போல் முகத்தை வைத்துக் கொண்டு, தலை சாய்த்து என்னை நோக்கினாள். அவள் முகம் பொலிவு கொண்டிருந்தது போலிருந்தது.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில், ஒரு குட்டிப் பூனை வாலையும் உடலையும் ஆட்டிக் கொண்டு, அவள் பக்கத்தில் சென்று, அவள் கால்களில் ஒட்டி உரசிக் கொண்டிருந்தது. அவள் அதை கைகளில் ஏந்தி முகத்தைக் குழந்தைகள் போல் குவித்து, கொஞ்சிக் கொண்டிருந்தாள். பின்பு தரையில் விடுகையில் மீண்டும் அவள் கால்களில் வந்து உரசிக் கொண்டு, அவற்றை முகர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தது. பூனை போவதாக இல்லை. அவள் உதட்டில் மெலிதாக ஒரு புன்னகை.

“சரி, நீங்க இங்கு வீடு வாடகை எடுத்து தங்குறிங்களா அல்லது எப்படி?” என்று கேட்டேன்.

“ஆமாம், இங்கு தான் அந்த ஸ்டார்பக்ஸ் கடையின் வரிசையில் ஒரு அறை வாடகை எடுத்து தங்கியிருக்கேன். பார்ட் டைம் வேலை வேறு செய்கிறேன். முதுகலை பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு, வகுப்புகள் வாரத்தில் ஒரு முறைதான் இருக்கும். மற்ற நாட்களில் அங்கு தான் வேலை செய்வேன்,”என்று எதிரே இருந்த ஒரு உயர் ரக காபி கடையை சுட்டிக் காட்டினாள். அங்கிருக்கும் ஸ்டார்பக்ஸ் கடைக்கு நான் சென்றதே இல்லையென்பதால், அவளை அங்குக் கண்டிருக்க வாய்ப்பில்லாமல் போனது.

அவள் எதிரே இருந்த ஒரு கடைக்கு ஓடிச் சென்று கையில் எதையோ வாங்கி வந்தாள். அது பூனைகளுக்குப் போடும் தீனி என்று அறிந்து கொண்டேன். அவள் அந்தப் பூனைக்கு வாங்கி வந்திருந்த, பூனை தீனியைப் பிரித்துத் தரையில் கொட்டினாள். பின் அந்தப் பூனையை கீச் போன்றொரு குரலால் அருகே அழைத்தாள். அது வாலையாட்டிக்  கொண்டே, தன் உருண்டை விழிகளால் அவளை உற்று நோக்கிவிட்டு, பின் மெதுவாக நடந்து சென்று, அதை நாக்கால் நக்கி தின்றுக் கொண்டிருந்தது. அவள் அந்தப் பூனையின் தலையைத் தடவிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

பின்பு பூனை சென்றதும் அவள் நிமிர்ந்து என்னைப் பார்த்து சிரித்தாள். நானும் சிரித்து விட்டு அங்கிருந்த பேருந்து நிறுத்துமிடத்தில், இருவரும் வந்தமர்ந்தோம். அமர்ந்த பொழுது அவள் மீண்டும் கைப்பைக்குள் கை விட்டு எதையோ எடுத்தாள். பின்பு என்னிடம் திரும்பி பேசினாள்.

“ஒன்னோட ஃபோன் நம்பர் தா,”  என மழலையாகத் தமிழில் சொல்லிச் சிரித்தாள்.

நானும் தாமதிக்காமல் கொடுத்தேன். பதிலுக்கு அவள் எண்ணைக் கேட்க தயக்கமாக இருந்தது. மெதுவாய் சிரித்து என்னிடமிருந்து விடைப்பெற்றுக்கொண்டாள்.

அன்றிலிருந்து எத்தனையோ இரவுகள் அவள் தங்கியிருக்கும் அறைக்குள் நுழைந்து அரை நிர்வாணமாகப் படுத்திருக்கும் அவளை முத்தமிடத்தொடங்குவதாகக் கற்பனை துளிர்விடுவதுண்டு. வகுப்புகள் இல்லாத நாட்களில் ஏக்கமாக அவ்விடத்தில் நின்று அவள் எங்காவது தெரிகிறாளா? என்னை அழைப்பாளா? தன் அறைக்குக் கூட்டிச் செல்வாளா? என ஏக்கத்துடன் காத்திருப்பேன். ஸ்டார்பக்ஸ் உள்ளே நுழைய தயக்கம் இருந்தது. உள்ளே நுழைந்தால் சடங்குக்காவது ஒரு காப்பி குடிக்க வேண்டும். அங்கே மிக மலிவான காப்பி வாங்கக்கூட எனக்குத் துப்பில்லை.

இப்படி ஏங்கிக்கிடந்த ஒரு பொழுதில்தான் அவளிடமிருந்து அழைப்பு வந்தது. தன்னை அறிமுகமே செய்துகொள்ளாமல், “பங்குங் புடாயா அருகில் வா” என அவசரமாகச் சொல்லிவிட்டு கைப்பேசியை வைத்தாள். கரகரத்த அவளது தடித்தக் குரல் எனக்கு நினைவிருந்ததால் எளிதாக அவளை அறிந்துகொண்டேன்.

அவள் சொன்ன ‘பங்குங் புடாயா’ இடம் எனக்குத் தெரியும். உப்சியின் நாடக, நடனத்துறையில் பயில்பவர்கள், தங்களின் திறமைகளை அரங்கேற்றும் பிரத்தியேக அரங்கு அது. அங்கே காதலர்கள் அமர்ந்து பேச போதுமான மறைவிடங்கள் இருந்தன. எல்லாவிதத்திலும் என்னைத் தயார் செய்துகொண்டு புறப்பட்டேன்.

நான் அவளைத் தேடி அங்கு சென்ற பொழுது ‘பங்குங் புடாயா’ அரங்கில் சில நடனங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன. நான் அரங்கில் செல்லாமல் அதன் ஒளிபடாத மறைவில் நின்று அவளைத் தேடிக்கொண்டிருந்தேன். எத்தனை முறை செல்பேசியில் அழைத்தும் அவள் எந்தப் பதிலும் கொடுக்கவில்லை. இன்று ‘பங்குங் புடாயா’ அரங்கில் ஒத்திகை உள்ளது எனச் சொல்லியிருந்தால் நானே வேறு இடம் பார்த்து வரச்சொல்லியிருப்பேன். இந்த ஒளி வெள்ளம் அவளிடம் காதல் மொழி பேச தடையாக இருக்குமென மனம் புலம்பத் தொடங்கியது.

அடுத்தடுத்த நடனங்கள் அரேங்கேறிக் கொண்டிருந்தன. விழிகளுக்கு அவள் புலப்படவே இல்லை. அழைப்பை எடுக்காத அவளை ஒருமுறை கெட்ட வார்த்தையில் திட்டினேன். அப்போது எதிர்பாராமல் பெருத்த கரகோஷம் எழுந்து அரங்கின் மொத்த வண்ண விளக்குகளும் அணைந்த பொழுது, விழிகள் அப்போதிருந்த இருட்டிற்குப் பழகி, அரங்கிலிருந்தவர்கள் தென்பட தொடங்கினர். அரங்கின் மேடையில் நடுவில் வெள்ளையோளி விளக்குகள் பளிச்சிடவே, விழிகள் அங்கே சென்று அமர்ந்தது.

அவள்தான்.

கால்கள் தன்னிச்சையாக அரங்கை நோக்கிச் சென்றது. முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டேன்.

பிடியாணை போல் அசைந்தாடி, மேடையின் நடுவே வந்தமர்ந்திருந்தாள். அவள் வெள்ளை நிற அனார்கலி அணிந்திருந்தது, அவளின் கருமையில் வெண்படலம் படர்ந்ததுப் போலிருந்தது. மாமலர் காற்றில் அசைந்தாடுவதுப் போல், அவள் சுழன்றுக் கொண்டிருந்தாள். கருங்கல்லில் இருந்து எழுந்து வந்தவள் போலிருந்தாள். மின்னும் கருமை என்று எண்ணிக் கொண்டேன். சுற்றியிருந்த வண்ண விளக்குகள் அவள் உடலில் பட்டு பிரதிபலிக்காமல், அவள் உடலே அனைத்தையும் உள்ளிழுத்துக் கொண்டிருந்தது. அவள் சுழலும் பொழுது மயிலின் வண்ணச் சிறகுகள் என அவளின் அனார்கலியின் கீழ் பகுதி துணி பரவி எழுந்து, சுழன்றாடி விரிந்து, பின் ஒரே இடத்தில் அமைய முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அவளின் கரிய முகத்தைப் விழி இமையாமல் உற்றுப் பார்த்தேன்.

அவள் கண்கள் மூடி இனிய ஊழ்கத்தில் இருப்பதுபோல் நடனமாடிக் கொண்டிருந்தாள். அவளை எந்த ஒரு இசையோ, ஒலியோ, சத்தமோ கூட தொட முடியவில்லை. அவள் இசையை மீறிய ஏதோவொன்றில் திளைத்திருந்தாள். தாளங்களும்ஜதிக்களும் நிறைந்த பாடலில்லாத ஒரு இசை பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்தது. அனைத்து தாளங்களுக்கும் சிறுப் பிசிறில்லாமல் அவள் சுழன்றாடிக் கொண்டிருந்தாள். அந்த ஆப்பிரிக்ககாரி கதக் ஆடிக் கொண்டிருக்கையில், அவளை ஏதாவதொரு நடிகையுடன் ஒப்பிட வேண்டும் என்று மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது. ஆனால் எவ்வளவு முயன்றும், யாருடனும் ஒப்பிட முடியவில்லை. அவள் நிறத்தில் நான் ஒருவரையும் கதக் ஆடிப் பார்த்ததில்லை.

முகத்தில் மென் புன்னகை ஒரு சிறு கோடென விரிந்திருக்க, அவள் ஆடிக் கொண்டிருந்தாள். புரிக்குழல் கரும் பேரலையான பரவி விரிந்தேழுந்து காற்றில் மிதந்துக் கொண்டிருந்தது. காதில் வெள்ளியிலான தோடுகள் ஜிமிக்கியெனத் தொங்கி கொண்டிருந்தன. அவளின் விழிகள் மட்டும், எனக்கு அவ்வளவுத் தெளிவாகத் தெரியவில்லை. அரை விழி மட்டும்  மூடியிருந்ததாகத் தோன்றியது. வைர மினுப்புக் கொண்டிருந்த பொட்டு, அவள் முக அழகை ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது.

அவள் காற்றுபோல அரங்கில் அலைந்துகொண்டிருந்தாள். கால்கள் தரையில் சுழன்றுக்கொண்டே இருந்தன. நடனத்தின் உச்சத்தில் அவள் குஞ்சித பாதத்தில் ஒரு வினாடி நிற்க வெளீர் என்ற அவளின் பாதங்களைக் கண்டு அதிர்ந்தேன்.  அது அன்னையின் பாதம். கொல் வேல் கொற்றவையின் பாதம்.

அகம் அறியாமல் கைகள் ஒன்றேன சேர்ந்து வணங்கிக் கொண்டன.

11 comments for “கிருஷ்ணை

  1. அஸ்வின் பழனிசாமி
    July 1, 2024 at 12:43 am

    பெண்மை எத்தனை அழகு! நவீனின் முகநூலில் எழுத்தாளரின் அறிமுகமதைப் படித்ததும் காத்திருந்தேன் இக்கதையை வாசிக்க. இவளின் நடனம் ஏனோ எனக்கு சிகண்டியின் அப்ஸரா நடனத்தையும், தாராவில் அந்தராவின் நடனத்தினையும் நினைவூட்டுகிறது. அருமை. பாராட்டுகள்.

    • Senthil Kumar
      July 10, 2024 at 6:45 pm

      புதுமைப்பித்தன் சிறுகதை போல கதையின் முடிவினை வாசகர்களே தீர்மானிக்க விட்டு விட்டீர்கள்..
      நன்று

  2. Mohan
    July 9, 2024 at 3:25 pm

    வாழ்கையை இயல்பாக தரிசிக்கும் இன்னொரு நிலைப்பாடு நகைச்சுவை. (என்னை இன்னும் இயல்பாக்கியது.)
    வாழ்க்கையின் உச்சங்களை நாம் கண்டு அடைபவை….கடைசி வரி…என்னை கைக்கூப்பி நிற்க வைக்கிறது.
    வாழ்த்துக்கள்.

  3. SenthilKumar
    July 9, 2024 at 4:48 pm

    நடனத்தின் உச்சத்தில் அன்னையின் பாத தரிசனம் …கதையும் அதேயிடத்தில் உச்சம் தொடுகிறது …..அருமையான படைப்பு !!!!
    வாழ்த்துகள் !!!!

  4. Perumal
    July 10, 2024 at 12:29 am

    நல்ல கதை

  5. Mughilan
    July 13, 2024 at 2:47 pm

    சர்வின் செல்வாவிண் சிறுகதையை இப்பொழுது வாசித்தேன். இயல்பான முறையில் பாலியல் சம்பத்தப்பட்ட விஷயங்கள் கதையின் வழியாக சொல்வதை ஆச்சரியமாக பார்கிறேன்.ஒரு ஆணின் அக உணர்வுகளை நன்றாக விவரித்து இருக்கிறார். தொடர்ந்து உங்கள் கதைகளை படிக்க ஆர்வம் ஓங்குகிறது. வாழ்த்துக்கள்

  6. சர்மிளா
    July 13, 2024 at 4:35 pm

    எதிர்பாராத முடிவு. ஒரு சிலரால் வெளிப்படையாகச் சொல்லவோ, பேசவோ இயலாத சில விஷயங்களைக் கூட எழுத்தின் வழி மட்டுமே இவ்வாறு அழகாகப் புனைய முடியும். அருமையான கதை.

  7. Dhivyashini A/p Thangaraja
    July 13, 2024 at 4:44 pm

    கிருஷ்ணை சிறுகதை வாசித்தேன். புது எழுத்தாளரின் சிறுகதை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. தேர்ந்த எழுந்த. அதற்கு நிறைய வாசிப்பு இருந்திருக்க வேண்டும். மொசியின் வடிவில் கிருஷ்ணை எனும் திரௌபதி வெளிப்படுகையில் மெய் சிலிர்த்து விட்டது. வாழ்த்துக்கள் சர்வின் செல்வா. தொடர்ந்து எழுதுங்கள்.

  8. PURNAA MURUGARAJOO
    July 13, 2024 at 8:56 pm

    தோழரே, உங்கள் சிறுகதை வாசித்தேன். அருமை தோழரே. உங்களுடன் 6 வருடம் தொடர்ந்து உரையாடலில் இருக்கிறேன். இலக்கியத்தை பற்றி நாம் நிறைய பேசியிருக்கிறோம். குறிப்பாக வெண்முரசுவைப் பற்றி. திரௌபதி கருமை என்று எனக்கு அப்பொழுதுதான் தெரியும். கிருஷ்ணை கதையில் வரும் அவளும் கருமை. அவளை கடைசியில் அன்னையின் பாதத்தோடு ஒப்பிடுகையில் மெய் சிலிர்த்தேன் தோழரே. வாழ்த்துக்கள்.

  9. R Elumalai
    July 30, 2024 at 12:22 pm

    தலையணை முனையை மொசின் முலையை தடவும் கதை சொல்லி, நீலப்படங்களிள் மொசியை தேடும் கதை சொல்லி, தனிமையில் அவள் அடையற்ற உடலை நினைத்து ஆர்கஸம் அடையும் கதை சொல்லிக்கு இருப்பது கருமையின் அழகு மீதுள்ள பித்து அல்ல வெறும் காமம்…. அதன் பொருட்டே திரௌபதி கலை தடவுகிறான் பெண்களின் பாத அழகு என்பது எல்லாம் அந்த அயோக்கியதன்திற்கு இடும் சப்பைக்கட்டு…. இறுதியில் கொல் வேல் கொற்றவையின் பாதம் என்பது எல்லாம் வெறும் பிதற்றல்…. சுத்தமான அரைவேக்காட்டு கதை

  10. கோ.மணிவண்ணன்
    August 6, 2024 at 12:44 pm

    எண்ணங்களுக்கேற்றபடி வண்ணங்ளும் மாறும். பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது சத்தியமும் மித்தியமும். வாழ்க்கையின் எதார்த்தம் இறைமையில் அர்த்தமாகிறது. கிருஷ்ணை அருமையான படைப்பு. வாழ்த்துகள் ஷர்வின். தொடர்ந்து எழுதுங்கள்!!!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...