அவனைப் பற்றி பெரிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை. அதாவது, ஜமாலி தன் கல்வியை முடித்த பிறகு, கலை, பண்பாடு தொடர்பான அமைச்சில் வேலைக்குச் சேர்ந்தான். பல்கலைக்கழகத்தில் அவன் விவசாயத்துறையில் படித்திருந்தான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் விவசாயமும் கால்நடை வளர்ப்பும்தான். ஆகவே, கலை பண்பாட்டுத் துறையில் வேலைக்குச் சேர்ந்தபோது அவன் மூளை காலியாக இருப்பது போல உணர்ந்தான். ஜமாலி, ஓவியக் கலை சிறப்பு பிரிவின் விளம்பரத்துறை பொறுப்பதிகாரியாக அனுப்பப்பட்டான்.
அது அவனை மேலும் திக்குமுக்காடச் செய்தது. ஜமாலிக்கு ஓவியக் கலை பின்னணி கிடையாது. அதோடு, ஓவியக் கலை, ஓவியம் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. ஆனால், அவன் தன் குறைகளைப் பற்றியோ போதாமைகளைப் பற்றியோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு வேலையில் இருப்பதும் சம்பளம் கிடைப்பதும்தான் அவனுக்கு முக்கியமாக இருந்தது. ஆகவே, அவன் மேலதிகாரிகளின் ஆணைப்படியும் கூட்டக்குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் முடிவுகளின்படியும் வேலை செய்து கொண்டிருந்தான்.
மற்றபடி, வெறுமனே கிடக்கும் நேரத்தை நிரப்ப, சாலையோரக் கடைகளில் தேநீர் அருந்துவது, வங்கிகளுக்குச் செல்வது, பலமாடி கட்டிடங்களில் ஏறி இறங்குவது எனப் பல வகையில் வேலைக்கு டிமிக்கி கொடுத்தான். பல நாட்களில் யாருக்கும் தெரியாமல் பொருள் அறையில் குட்டித் தூக்கம் போடுவதும் உண்டு.
தலைநகரில் பணியாற்றும் அவனுக்கு, அடிமட்ட அரசாங்க அதிகாரியாகக் கிடைக்கும் சொற்பச் சம்பளம், அன்றாட வாழ்க்கையை நகர்த்த மட்டுமே போதுமானதாக இருந்தது. மூன்று அறைகள் கொண்ட அடுக்குமாடி வீடொன்றில் அவன் வசித்தான். ஆறு பிள்ளைகள் இருந்தனர். இல்லத்தரசியான அவன் மனைவி வயிற்றில் ஏழாவது பிள்ளையைச் சுமந்து கொண்டிருந்தாள். வீட்டின் மூத்த பிள்ளையான அவனுக்குக் கம்பத்தில் வசிக்கும் அவனது பெற்றோர் மீதும் எட்டு உடன்பிறப்புகள் மீதும் கடமையிருந்தது. நல்ல வேளையாக உடன்பிறப்புகள் எல்லாருமே வேலை செய்பவர்களாக இருந்தனர். சிலருக்குத் திருமணமாகி குடும்பமும் அமைந்துவிட்டது. இதில் மனைவி வீட்டார் பக்கமுள்ள பொறுப்புகளைச் சேர்க்கவில்லை. ஆகவே அவன், கிடைப்பதை வைத்து சாமானிய வாழ்க்கைதான் வாழ வேண்டியிருந்தது.
ஆனால், ஒரு அரசாங்க அதிகாரியாக, அதிலும் தலைநகரில் பணிபுரியும் அதிகாரியாக, அவன் மேல் அவனது குடும்பத்தினருக்கும் மனைவி குடும்பத்தினருக்கும் அதிக மதிப்பு இருந்தது. அதை அவனும் மனைவியும் பெருமையாக உணரும்போது, தங்கள் சிரமஜீவனத்தை மறைத்துக் கொண்டு பகட்டு காட்டுவார்கள் என்பது உண்மைதான். ஆனாலும், குடும்பத்தினர் தரும் அந்த மதிப்பே பல நேரங்களில் இவர்களுக்குப் பெரும் தொல்லையாகவும் ஆகிவிடுவதுண்டு. சின்ன சின்ன விஷயங்களில் கூட குடும்ப உறவுகளிடம் உரசலும் பகையும் உண்டாகும்போதெல்லாம், அவனைக் கருமி என்றும் திமிர் பிடித்தவன் என்றும் அவர்கள் வசைபாடினர். ஆனால், உண்மையான சிக்கலுக்குக் காரணம் அவனின் கடும் பொருளாதார நிலையும் பற்றாகுறையும்தான் என யாருக்கும் தெரிவதில்லை.
இதெல்லாம் ஜமாலி என்னும் கதாப்பாத்திரம் பற்றிய அறிமுகம்தான். அது அவ்வளவு முக்கியமல்ல. முக்கியமான விஷயம் இனிமேல்தான் வருகிறது. அதுதான் சொல்ல நினைத்த கதை. அதாவது, ஜமாலி ஒரு முறை வெளிநாட்டில் நடக்கும் ஓவியக் கண்காட்சிக்கு அனுப்பப்பட்டான். இங்கிருந்துதான் சொல்லவந்த கதை தொடங்குகிறது.
அது ஜோக்ஜகார்த்தாவில் கடும் மழைகாலம். கோலாலம்பூர் போலவே ஒவ்வொரு மாலையும் மழை பெய்தது. ஜமாலிக்கு வெறுமையாக இருந்தது. அங்குச் சென்றதிலிருந்தே மனதில் சபித்துக் கொண்டிருந்தான். வேறு என்ன செய்வது. அந்த வெளிநாட்டுப் பயணம் சரியாக ஏற்பாடு செய்யப்படவில்லை எனும்போது எப்படிச் சகஜமாக இருக்க முடியும். ஆண்டு இறுதி என்பதால் அலுவலக கையிருப்பு தீர்ந்துவிட்டதைக் காரணம் காட்டி, வெளிநாட்டில் கைச்செலவுக்கு வழக்கமாகக் கொடுக்கும் பணத்தையும் கொடுக்க முடியாது என்று அந்த மந்த புத்தியுள்ள தலைமை கணக்கர் சொல்லிவிட்டார். இவன் எரிந்து விழுந்தான். வேறு என்ன செய்ய முடியும். பணி ஓய்வுக்கு நாட்களை எண்ணிக் கொண்டிருந்த அந்தக் கணக்கர் மறுநாளே, ஆண்டு இறுதி விடுமுறை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். நிர்வாகியும் பணி ஓய்வுக்கு முன்பான விடுமுறையில் இருந்தார். இது போன்ற ஆண்டு இறுதிகளில், எல்லா பணியாளர்களின் வேலை ஆர்வமும், மழைக்கால ரப்பர் மரக்கட்டை போல சொத சொதத்து மந்தமாகிவிடுகிறது.
ஜமாலி தன் பயணத்தை ரத்து செய்துவிடலாமா என யோசித்தான். ஆனால் இது தலைமை அலுவலகத்திலிருந்து வந்த கட்டளை. அதை மீற முடியாது. ஜமாலி பயணத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள என்னென்னவோ காரணங்களைத் தேடி குழம்பி, கடைசியில் அந்தக் குழப்பங்களுடனே ஜோக்ஜகார்தா வந்து சேர்ந்துவிட்டான். ஆனால் அவன் கையில் பணமோ, செலவுக்கு அரசாங்க உறுதி கடிதமோ எதுவும் இல்லை.
நல்ல வேளையாக, விடுதியும் உணவும் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல போக்குவரத்து வசதியும் மட்டும் ஏற்பாடாகியிருந்தன. ஆகவே நொந்துபோயிருந்த ஜமாலி பிற செலவுகளுக்குத் தனது சொந்த பணத்தையே எண்ணி எண்ணி செலவு செய்ய வேண்டியிருந்தது. ஆயினும், ஜமாலி வழக்கம் போல, நாட்டின் பிரதிநிதி என்ற தோரணையில் கருப்பு கோட்டு அணிந்துகொண்டு டாம்பீகமாக வந்தான். அவனை முக்கியமான சிறப்பு விருந்தினராக மதித்து வரவேற்றனர். அந்தக் கண்காட்சிக்குப் பொறுப்பேற்றிருந்த டேசி என்கிற அழகிய இளம் பெண் அவனை வரவேற்று, அங்குக் காட்சிபடுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு ஓவியமாக விளக்கிக் கொண்டிருந்தாள். ஜமாலிக்குத் தலையை மேலும் கீழும் நீருடும்பு போல ஆட்டுவதுவதைத் தவிற வேறு என்ன தெரியும்?
“இந்த பகுதியில் இருப்பவை எல்லாம் ராடென் சாலே, அஃபாண்டி, பாசுக்கி போன்ற பெரிய பெரிய மேஸ்ட்ரோக்களின் கைவண்ணம். இதோ இது, லி மான் ஃபுய்யின் ஓவியம். இவை எல்லாம் பல லட்சம் வெள்ளி மதிப்புள்ளவை. இது சமகால ஓவியங்களுக்கான பகுதி. இதோ இது நசிரூன் வரைந்தது… இதுவும் பல லட்சம் வெள்ளி மதிப்புள்ளதுதான்… அவரின் எல்லா ஓவியங்களும் இதுபோல அகண்டதாகத்தான் இருக்கும்…” என்று டேசி ஒவ்வொரு ஓவியத்தையும் விளக்கிக் கொண்டே வந்தாள். அந்த ஓவியங்களும், ஓவியர்களின் பெயர்களும் தனக்குப் பரிச்சயம் என்ற பாவனையில், ஜமாலி நீருடும்பு போல தலையை ஆட்டி ஆமோதித்துக் கொண்டே வந்தான். ஆனால், அந்த உள்ளூர் ஓவியர்களின் பெயர்களை அப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்படுகின்றான். ‘இந்த ஓவியங்களுக்கு லட்சக்கணக்கான விலையா? இது என்ன பைத்தியகாரத்தனம்…’ அவனுக்கு எல்லாமே மடத்தனமாக தெரிந்தது. சுற்றி வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் அவனுக்கு மன அழுத்தத்தைத் தந்தன. அசூசையாக உணர்ந்தான்.
சட்டென்று மலியோபோரோ சுற்றுப்பகுதியில் மலர் மணம் வீசும், உஷ்ணமான எண்ணெய் மசாஜ் கிடைக்கும் என நண்பன் சொன்ன தகவல் ஞாபகத்துக்கு வந்தது. தலையும் கழுத்தும் உடனே புடைத்துக் கொண்டு துடித்தன.
கடைசியில் என்னென்னவோ சமாளிப்புகளையும் தந்திரங்களையும் செய்து, மன அழுத்தம் தரும் அந்த ஓவியக் கண்காட்சி அரங்கிலிருந்து நழுவி வெளியேறிவிட்டான். மழை மேகம் அடர்ந்திருக்கும் அந்த மாலை நேரத்தில், மலர் மணம் வீசும் சூடான எண்ணெய் மசாஜ் பற்றிய கற்பனையில் மனம் மூழ்கியது. திடீரென உடலில் ஏற்பட்ட தசையிறுக்கம் மலர் மணம் வீசும் சூடான எண்ணெயில் நனைந்து இதமாக தளர்வது போலவும் அப்போது வெளியே அடை மழை பெய்து கொண்டிருப்பது போலவும் கற்பனையில் மிதந்தான். ஆனால், வீட்டில் மனைவி பிள்ளைகளுக்கு வாங்கிச் செல்ல வேண்டிய பரிசுப் பொருட்கள் பற்றிய சிந்தனையையும் அவனால் கைவிடமுடியவில்லை. கால்சட்டை பாக்கேட்டில் கைவிட்டுப் பணத்தை துழாவினான். ‘அட, பாக்கேட்டில் பொத்தல் விழுந்துவிட்டதா என்ன?’ பாக்கேட்டை மேலும் குடைந்து தேடினான்… இல்லையே… பிறகு ஏன் இந்த சொற்ப பணம் மட்டும் இருக்கின்றது? உண்மையிலேயே அவ்வளவு பணம்தான் அவனிடம் இருந்தது. அவனுக்கு தலை 360 பாகை சுற்றியது. மனைவி பிள்ளைகளுக்கு முதலில் ஏதாவது பரிசு வாங்குவோம். அது கட்டாயம் என முடிவெடுத்தான்.
ரிக்ஷா ஓட்டிகள் சூழ்ந்து கொண்டார்கள். ஜமாலி ஒரு ரிக்ஷாகாரனைத் தேர்வு செய்து கொண்டான். அவனுக்கு வயது நாற்பதைத் தாண்டியிருக்காது. ஆனால் ரிக்ஷா ஓட்டும் கடுமையான வேலையினாலோ என்னவோ கிழவனைப் போல இருந்தான். அந்த ரிக்ஷா ஓட்டி பாத்தேக் துணிகள், டகாடூ சந்தை, கிராத்தோன் பண்பாட்டு மையம் ஆகிய இடங்களைப் பார்க்கலாம் எனப் பரிந்துரைத்தான். ஜமாலி தலையை மட்டும் ஆட்டி வைத்தான். “நான் நினைவுப் பரிசுகள் வாங்க வேண்டும்” என ஜமாலி சொன்னதும் சரியென, வலுத்து வரும் மழைதூரலைப் பொருட்படுத்தாது ரிக்ஷாவை மிதிக்கத் தொடங்கினான். இந்த ரிக்ஷா ஓட்டி மட்டும்தான் ‘பெண் வேண்டுமா’ எனக் கேட்கவில்லை என்பது ஆறுதலாக இருந்தது. இதற்கு முன் சவாரி செய்த எல்லா ரிக்ஷா ஓட்டியும் பெண் பேசிவிடுவதில் மும்முரமாக இருந்தார்கள். “அடேய், வீட்டில் எனக்கு ஆறு பிள்ளைகள் இருக்கிறார்கள்… என் மனைவி ஏழாவது பிள்ளையைச் சுமந்து கொண்டிருக்கிறாள். வேறு எதையாவது சொல்லித் தொலையுங்கள்” என அவர்களிடம் கூச்சல் போட வேண்டும் போல இருந்தது ஜமாலிக்கு. பெண் தரகராக இருக்கும் அந்த ரிக்ஷாகாரர்களை அதட்டி வைக்க வேண்டும் என நினைத்தான்.
மழை சற்று குறைந்தது. தூரல் மட்டும் தொடர்ந்தது. ரிக்ஷா ஓட்டி பேச்சு கொடுத்தான். ஜாமாலியும் அவனைப் பற்றி விசாரித்தான். ரிக்ஷாகாரன் புறநகர் ஒன்றிலிருந்து பிழைக்க நகரத்துக்கு வந்து செல்பவன். கம்பத்தில் பிறர் நிலங்களில் கூலிக்கு வேலை செய்யும் விவசாயி. நடவு முடிந்த பின்னர் நகரத்துக்கு வந்து ரிக்ஷா ஓட்டுவான். அது தின வாடகை ரிக்ஷா. கிடைப்பதில் மூன்றில் ஒரு பகுதி வாடகைக்குப் போய்விடும். மீதி மூன்றில் இரண்டு பகுதிதான் இவனுக்கு வருமானம். அந்தச் சொற்பமான வருமானத்துக்கு ஒரு வாரம் இரவு பகல் பாராமல் ரிக்ஷா ஓட்டுவான். இரவானதும் ரிக்ஷாவிலேயே முடங்கி படுத்துக்கொள்வான். ஒரு வாரம் கழித்துதான் கம்பத்துக்குப் போவான். அவனது மூன்று ஆண் பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போகிறார்கள். ஒவ்வொரு மாதமும் பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டியிருந்தது. ஜமாலி அந்தச் சோகக் கதையை எந்த உணர்வும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான். எல்லாருக்கும்தான் சிரமங்கள் இருக்கின்றன. ஜாமாலியின் நிலையும் ஏறக்குறைய அப்படிதான் என்று அந்த ரிக்ஷா ஓட்டிக்குத் தெரியுமா என்ன? சவாரிக்கு வருகிற எல்லாரும், இந்தோனேசிய தொலைக்காட்சி நாடகம் போன்ற அந்த ரிக்ஷாகாரனின் சோகக் கதையைக் கேட்டு கண் கலங்கி கையில் இருப்பதை அள்ளிக் கொடுத்துவிடப் போகிறார்களா என்ன?
மழை மீண்டும் கடுமையானது. ஜாமாலியின் மேல் மழை நீர் படாமல் இருக்க ரிக்ஷா ஓட்டி, வண்டியின் முன்பகுதியைப் பிலாஸ்டிக் திரையால் மூடினான். மழையின் வேகத்தோடு போராடிக் கொண்டு ரிக்ஷாவை மல்லுக்கட்டி மிதிக்கத் தொடங்கினான். ஜமாலி, அடிமைகள் சுமந்து வரும் பல்லக்கில் சவாரி செய்யும் அரசனைப் போல சாய்ந்து அமர்ந்து கொண்டான். ரிக்ஷா மேடான பாதைக்கு வந்ததும், ரிக்ஷா ஓட்டியால் வண்டியை மிதிக்க முடியவில்லை. அவன் கீழே இறங்கி வண்டியை மேட்டில் தள்ளிக் கொண்டு சென்றான். ஜமாலி சாய்து அமர்ந்தபடி நெகிழித் திரையில் பலமாக மோதும் மழை நீரைப் பார்த்துக் கொண்டு வந்தான். ரிக்ஷா ஓட்டியின் மூச்சிரைப்பு சத்தம் அவனுக்குக் கேட்டது. வரட்டு இருமலும் சேர்ந்தே வந்தது. சற்று முன்பு அந்த ரிக்ஷா ஓட்டி 20 ஆயிரம் ரூபியா, அதாவது ஏறக்குறைய ஆறு ரிங்கிட், கட்டணம் சொன்னான். ஜமாலிக்கு அது மிக அதிகம் போல தோன்றியது. குறைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
தட்டுத் தடுமாறி ரிக்ஷா ஓட்டுபவன் மீது சிறு கருணையும் இன்றி மழை மேலும் பெரு மழையாக மாறியது. இருமல் சந்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. தன் உடல் சக்தியைத் திரட்டி ரிக்ஷாவை மிதித்துக் கொண்டிருக்கும் ரிக்ஷாகாரனை ஜமாலி ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் உடல் மழையில் தொப்பலாக நனைந்து குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. ஜமாலி வசதியாகச் சாய்ந்து கொண்டு மழைச்சாரல் படும் இடைவெளிகளைப் பிலாஸ்டிக் திரையை இழுத்து சரி செய்துகொண்டான்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருவுக்கு வந்ததும் ரிக்ஷா ஓட்டி கீழே இறங்கி நின்றான். சிறுத்து ஒல்லியான தேகம் என்றாலும் முறுக்கேறிய தசைகளைக் கொண்ட அவன் இப்போது மக்கள் கூட்டத்தைப் பார்த்தபடி ரிக்ஷாவின் பக்கமாக நின்றான். ஜமாலி மன்னனைப் போல சாய்ந்து அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். சிறுத்த உடலைக் கொண்ட ரிக்ஷா ஓட்டி, ஜமாலியின் சுமையையும் சேர்த்து ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு சாலையைக் கடந்தான். அவன் வண்டியை மிதிக்கவில்லை; தள்ளவும் இல்லை. மாறாக ரிக்ஷாவின் பின்னாலிருந்து இரு முனைகளைப் இறுகப்பற்றி இழுத்துக் கொண்டு சென்றான். மக்கள் நெரிசல் நிறைந்த தெருவைக் கடந்தனர். அந்த ரிக்ஷாக்காரனின் இருமலும் உடல் நடுக்கமும் கூடியிருப்பதாக ஜமாலி நினைத்தான்.
ரிக்ஷாகாரன் மீண்டும் வண்டியை மிதிக்கத் தொடங்கினான். ஆனால் அவனால் நிதானமாக ரிக்ஷாவைச் செலுத்த முடியவில்லை. ரிக்ஷா அங்கும் இங்குமாக அலசியது. ஜமாலி நெகிழித் திரையை அவசரமாக விலக்கினான். “பாக் முடியாது என்றால் முன்பே சவாரி எடுக்காமல் இருந்திருக்க வேண்டியதுதானே… இப்போது என்ன செய்வது…” என்றான். ரிக்ஷாக்காரன் ‘சரி சரி’ என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தான். ஜமாலி சலித்துக் கொள்ளத் தொடங்கினான். ‘உடம்புக்கு முடியாவிட்டால் எதற்கு அடித்துப் பிடித்து என்னை ஏற்றிக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் வேண்டும் என்ற பேராசைதானே காரணம்.’ ஜமாலி வெறுப்பில் கருவிக் கொண்டிருந்தான். அந்த ரிக்ஷாகாரனின் சக்தியெல்லாம் தீர்ந்துவிட்டது போல, வண்டி மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. ஜமாலி நெகிழி திரையை மீண்டும் திறந்து பார்த்தான். மழை சிறுதூரல் போட்டுக் கொண்டிருந்தது. அவன் அவசரமாகத் திரையைக் கழற்றினான். “எப்போதுதான் பாக் கொண்டு சேர்ப்பீர்கள்.” ரிக்ஷா ஓட்டியிடம் குரல் உயர்த்தினான். ரிக்ஷா ஓட்டி “சரி சரி” என்று மட்டும் மீண்டும் பதில் சொல்லிவிட்டு வண்டியைத் தன் பலத்தையெல்லாம் திரட்டி மிதித்தான். ஆனால் அவன் கால்களுக்குப் பெடலை மிதிக்கும் ஆற்றல் இல்லாதது தெளிவாக தெரிந்தது. வரட்டு இருமல் மேலும் முரட்டுத்தனமாக வெளிப்பட்டது. அவனது உடல் நடுக்கத்தால் ரிக்ஷாவும் அங்கும் இங்கும் தள்ளாடியது.
சற்று தூரத்தில் ரிக்ஷா நின்றே விட்டது. ஜமாலி தலையை நீட்டி ரிக்ஷா ஓட்டியை வெறுப்புடன் பார்த்தான். வண்டி நகரவில்லை. ஜமாலி சாய்ந்தபடி வெகு நேரம் காத்திருந்தான். ஆனால் வண்டி நகராமல்தான் இருந்தது. ஜமாலி பொறுமை இழந்து ரிக்ஷாவிலிருந்து வெளியேறினான். குறுகிய ரிக்ஷாவில் அடைபட்டுக்கிடந்த களைப்பு தீர உடலை அசைத்துக் கொண்டான். ரிக்ஷாக்காரனைப் பார்த்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன. சுவாசம் சில்வண்டின் சந்தம் போல வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. “நான் இறங்கிக் கொள்கிறேன்.” ரிக்ஷாக்காரன் கலங்கிய கண்களுடன் அமைதியாக இருந்தான். அவன் முகத்தைப் பார்க்காமல், ஜமாலி பத்தாயிரம் ரூபியா நோட்டு ஒன்றைப் பாக்கேட்டிலிருந்து உருவி எடுத்தான். ரிக்ஷாகாரன் நடுங்கும் கைகளை மெல்ல ஏந்தினான். மூச்சிரைப்பு கடுமையாக இருந்தது. அந்தச் சிவப்பு நோட்டு கிழே விழுந்தது. ஜமாலி கீழே விழுந்த பணத்தையும் அதை எடுக்க மெல்ல குனியும் ரிக்ஷா ஓட்டியையும் அலட்சியப்படுத்திவிட்டு வேறு திசையில் பார்வையை ஓடவிட்டான்.
அட இது எந்த இடம். தூரத்தில் அமைதியாகக் காட்சி தருகிறது பெரிய சாலை. ரிக்ஷாக்கள் எதுவும் கண்ணில் படவில்லை. இந்த ரிக்ஷா ஓட்டி ஏதோ ஒரு குறுக்குப்பாதையில் வந்திருப்பான் போல. ஜமாலி, ரிக்ஷாவையும் அதன் ஓட்டுனரையும் கடந்து, அமைதியான அந்தச் சாலையை நோக்கி நடந்தான். சில அடிகள் முன்னே சென்றவன் திரும்பி பின்னால் பார்த்தான். கையில் அவன் கொடுத்த பத்தாயிரம் ரூபியா நோட்டைப் பிடித்தபடி ரிக்ஷா ஓட்டி கிழே மல்லாந்து கிடந்தான். ‘ஐயோ இவன் விடமாட்டான் போல.’ ஜமாலி ரிக்ஷா ஓட்டியை எரிச்சலுடன் பார்த்தான். திரும்ப அவனிடம் சென்றான். “என்ன ஆனது பாக்?” என்றான். ரிக்ஷா ஓட்டி, கண்ணீர் ஆறாக ஓட ஜமாலியைப் பார்த்தான். “என் புள்ள படிக்கனும் பாக்.” ஜமாலி எரிச்சலில் முணுமுணுத்தான்… “படிக்கட்டுமே அதற்கு நான் என்ன செய்ய.” மல்லாந்து கிடந்த அந்த மனிதனை ஜமாலி தீர்க்கமாகப் பார்த்தான். “இப்போது என்ன செய்வது. நீ என்னை அதிகம் சோதிக்கிறாய்.” ஜமாலி அவனைத் தூக்கி ரிக்ஷாவுக்குள், முன்பு தான் ராஜாவைப் போல சாய்ந்து அமர்ந்திருந்த இடத்தில் கிடத்தினான். ரிக்ஷாஓட்டி சாகப்போகிறவன் போல கிடந்தான். இருமலும் மூச்சிரைப்பும் அதிகமாகியிருந்தன. மழை வேறு மீண்டும் கடுமையானது. ஜமாலி தலையைச் சொரிந்து கொண்டான். வானத்தைப் பார்த்தான். ஆகாயம் இருண்டு அடை மழை பெய்து கொண்டிருந்தது.
ரிக்ஷாகாரனின் பிரக்ஞையற்ற உடலை ஏற்றிக் கொண்டு ஜமாலி ரிக்ஷாவை மிதிக்கத் தொடங்கினான். அடை மழை பெய்து கொண்டிருந்தது. வரும் வழியில் சற்று முன், ஒரு மருத்துவமனையைப் பார்த்த ஞாபகம் இருந்தது. ரிக்ஷாவை நிறுத்தி, மற்ற ரிக்ஷாகாரர்களை உதவிக்கு அழைக்கலாமா என நினைத்தான். ஆனால் ஏனோ ஜமாலி அந்த எண்ணத்தைக் கைவிட்டான். “பரவாயில்லை. நானே அவனைக் கொண்டு செல்கிறேன். மருத்துவமனையில் ரிக்ஷாகாரனின் சிகிச்சைக்குப் நிச்சயமாகப் பணம் தேவைப்படும். என்னிடம் இருக்கும் பணம் அதற்குப் போதுமானதாக இருக்கும்” என ஜமாலி நினைத்துக் கொண்டான்.
மெலிந்த அந்த ரிக்ஷா ஓட்டியின் உடலைச் சுமந்து கொண்டு ஜமாலி கடும் மழையில் ரிக்ஷாவைச் செலுத்திக் கொண்டிருந்தான். களைப்பில் மூச்சு வாங்கினாலும் மனது மகிழ்ச்சியாக இருந்தது. இருக்கட்டும். இன்று அவன் கொஞ்சம் நல்லது செய்துவிட்டு போகட்டும். மூச்சு இரைக்க பின்னால் சாய்ந்து கிடக்கும் ரிக்ஷா ஓட்டியின் உடலைச் சுமந்து கொண்டு ஜமாலி வேகமாக ரிக்ஷவை மிதித்தான். கடும் மழையில் அந்த மருத்துவமனை தூரத்தில் மங்கலாகத் தெரிந்தது. ஜமாலி தொடர்ந்து மிதித்துக் கொண்டிருந்தான். மெஸ்த்ரோக்களின் பல லட்சம் வெள்ளி மதிப்புள்ள ஓவியங்கள், டேசியின் மயக்கும் பேரழகு, மலர் மணம் வீசும் சூடான எண்ணெய் மசாஜ், மனைவி பிள்ளைகளுக்கு வாங்க நினைத்த பரிசு பொருட்கள், எல்லாவற்றையும் மறந்துவிட்டு ரிக்ஷாவை மிதித்துக் கொண்டிருந்தான். இருக்கட்டும். அடைமழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. சுழற்றியடிக்கும் பேய் மழையில் நகரம் மங்கிக் கிடந்தது. ஜமாலி தொப்பலாக நனைத்துவிட்டான். கருணையற்ற இயற்கையின் ஒரு பகுதியான மழையும் அவன் உடலில் வழிந்த வியர்வையும் கலந்து அவன் உடைகளையெல்லாம் தொப்பலாக நனைத்துக் கொண்டு வழிந்தோடின. சரி அதனால் என்ன?
HUJAN KERUH DI JOGJA
மலாய் மூலம்: எஸ். எம். ஷாகீர்/ S.M. Zakir
தமிழில்: அ. பாண்டியன்
எஸ் எம் ஷாகிரின் இக்கதையை நான் விரும்பி வாசித்தேன். பிற கதைகள் அவ்வளவாகக் கவரவில்லை. மொழிபெயர்ப்பு நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது.
“ஜொக்ஜாவில் அடைமழை”- கதை சுவாரசியமாய் உள்ளது. நல்ல விறுவிறுப்பான நடை.