முன்னுரை : வெறிநாய்கள் கவிதை தொகுப்பிலிருந்து…

காமம் செப்பாது கண்டது மொழிவோம்

எனது இரண்டாவது கவிதை தொகுப்பு இது. எனது கவிதைகள் குறித்து ஒரு வரிகூட நான் பேசப்போவதில்லை. அதை வாசகர்கள்தான் பேச வேண்டும். ஆனால், ஓர் இதழாளனாக , கவிஞனாக நான் சந்திக்கும் பல்வேறு வாசகர்களின் வாசிப்பு மனநிலை குறித்தும் அதன் போதாமைகள் குறித்தும் கொஞ்சம் பேசலாம் என நினைக்கிறேன்.

‘எனக்கு இந்தப் படைப்பு புரியவில்லை’ என்ற வரி திரும்ப திரும்ப தமிழ்ச்சூழலில் படைப்புமீதான குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகின்றன.  பின்னர், அதையொட்டிய கிண்டல்கள், எரிச்சல்கள், வசைகள் வெளிப்படுகின்றன. இங்கு நன்கு கவனித்தால் படைப்பு அவர்களுக்குப் புரியவில்லை என்பதல்ல பிரச்னை;  வேறு படைப்புகள் எனக்குப் புரிகிறதே…இது ஏன் புரியவில்லை என்பதே அதன் உள்ளார்ந்த கேள்வி. வணிக எழுத்தில் ஊறியவர்களின் பொது எதிர்வினை இது. ஓர் இலக்கியப்படைப்பு புரியாதது  படைப்பின் குறைபாடல்ல .

எந்த ஓர் இலக்கியப்படைப்பும் வாசகனுக்கு ஒன்றை புரியவைப்பதற்காக எழுதப்படுவதில்லை. அவை தெளிவாக தர்க்கபுத்திக்குச் சிக்கக்கூடிய விஷயங்களைச் சொல்ல முயல்வதில்லை. அதாவது ஒரு பாட நூலின் வேலையை அது செய்வதில்லை. அதைச் செய்வதுதான் அதன் நோக்கம் என்றால் கலை என்பதற்கான தேவையே அங்கு இல்லை எனலாம். பேசாமல் நாம் சொல்லவருவதை கட்டுரை வடிவில் சொல்லிவிட்டு போய்விடலாம். அல்லது , ‘தம்பிக்கு’ என அழைத்து கருத்து கடிதம் எழுதலாம். இலக்கியத்தின் நோக்கமே உணர்த்துவதுதான். எப்போதுமே நல்ல படைப்பு புறவயமாக தெளிவாகச் சொல்லிவிடமுடியாத சிலவற்றைத்தான் சொல்ல முயல்கிறது. அவற்றை அவ்வாசிரியர் வாழ்க்கையில் இருந்து அவதானித்திருக்கிறார். அதைநோக்கி வாசகனைக் கொண்டுசெல்ல இலக்கியம் வழி முயல்கிறார்.

கவிதையையெல்லாம் ஒரு பக்கம் விடுங்கள். ஒரு கட்டுரையை எடுத்துக்கொள்வோம்.                    சி. ஜெயபாரதன் எழுதும் அறிவியல் கட்டுரைகளைப் படித்திருப்பீர்கள். அவரது கட்டுரைகளைப் புரிந்துகொள்வது எளியது அல்ல. அறிவியல் குறித்த அடிப்படை புரிதல் இருந்தால் மட்டுமே உங்களால் அதை முழுமையாக அறிய முடியும். ஓஷோவை வாசித்து புரியவில்லை எனச்சொன்னவர்களை நான் சந்தித்துள்ளேன். ஆன்மிகம் குறித்த ஓரளவாவது அறிமுகம் இருந்தால்தான் ஓஷோவை அணுக முடிகின்றது. தமிழனின் அமைப்பியல் தொடர்பான கட்டுரைகளை மிகவும் கஷ்டப்பட்டே வாசித்திருக்கிறேன். அக்கட்டுரை தமிழ் எனும் மொழியில் இயங்கினாலும் அவர் பேசுவது எனக்குப் பரிட்சயம் இல்லாத துறை எனவே புரிதலுக்காக மெனக்கெட வேண்டியுள்ளது. ஆக, மொழியுடைய ‘மெது நடை’ போல அங்கம் வகிக்கும் கட்டுரையையே நம்மால் அதன் பின்புல அறிவு இல்லாமல் வாசித்து உள்வாங்க முடியாத போது படிமங்கள், குறியீடுகள் மூலம் மொழியுடைய ‘நடனமாக’ வெளிப்படும் கவிதையை உடனடியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என நினைப்பது என்ன நியாயம்?

ஒரு மலரை அறிந்துக்கொள்ள  மூடியிருக்கும் அதன் இதழ்களை பிரிக்கிறேன் என்பது எவ்வளவு பெரிய வன்முறை. நீங்கள் மலர் மலர்வதைக் காண காத்திருக்க வேண்டும். அது மட்டுமே மலரை அறியும் வழி. ஓர் ஆண் தன் காதலியின் காமத்தை ஆராய அவளை நிர்வாணப்படுத்துவதுதான் வழி என நினைத்தால் அது எத்தனை அருவருப்பானது. நிர்வாணத்துக்கும் காமத்துக்கும்தான் என்ன சம்பந்தம்?  காமத்தின் இறுதி நிர்வாணத்தில் முடியலாம் . காமத்தின் தொடக்கம் நிர்வாணமாக இருக்கவே முடியாது. கவிதையை நிர்வாணமாக்கி நாம் எந்த கவித்துவத்தை அறியப்போகிறோம்?

இப்படிப் ‘புரியவில்லை’ கேள்வி கேட்பவர்களிடம் நான் எப்போதுமே ஒரு பதில் கேள்வி கேட்பேன்.

“ஈராயிரம் ஆண்டு கவிதை மரபில் உங்களுக்கு எந்தக் கவிதையின் பொருள் புரிந்தது?”

இந்தக் கேள்விக்கு விதண்டாவாதம் செய்பவர்களிடம் பதில் இல்லை. உடனே அவர்கள் பிரபலமான சில சங்க இலக்கியப் பாடல்கள், பாரதியார் பாடல்கள், திருக்குறள் போன்றவற்றின் பொருள்களை ஒப்புவிக்கத் தொடங்குவர். கல்விகூடங்களில் போதிக்காத , சினிமா அல்லது பிரச்சார மேடைகளில் முழங்காத எத்தனை சங்க இலக்கிய பாடல்களையும், திருக்குறளையும் , பாரதி பாடல்களையும் நமக்குத் தெரியும்? எதையுமே வாசிக்காமல், மொழிமீது மோகம்  உள்ளது போலவும்…இதற்கு முன்பு எழுதிய இலக்கியத்தையெல்லாம் படித்துக்கிழித்துவிட்டு நவீன கவிதையின் பொருள் மட்டும் புரியாமல் ஸ்தம்பித்துப் போய் நிர்ப்பது போன்ற செயல் நடிப்பன்றி வெறென்ன ?

உண்மையில் நாம் வாசித்து வருபவையெல்லாம் பழைய இலக்கியங்களின் பொருளுரைகளைத்தான் என்பதை உணர வேண்டும். சங்கப்பாடல்களுக்கும் திருக்குறள் என பழைய இலக்கியங்களுக்குப் பொருள் எழுதப்பட்டமையால் மட்டுமே அவை நமக்குப் புரிவதாக நாம் பாவனை செய்கிறோம். ஆனால் பொருளுரைகளே எத்தனை மாறுபட்டுள்ளன என அவற்றை ஒப்பிட்டுபார்த்தாலே தெரியும். ஒர் இலக்கியப்பிரதி ஒரு வாசகனுக்கு ஒரே பொருளைக் கொடுக்க முடியாது. கொடுத்திருந்தால் இத்தனை பொருளுரைகளின் தேவை இருந்திருக்குமா என்ன?

ஒரு கவிதை நமக்குப் புரியவில்லை என்றால், அக்கவிதையைச் சொல்பவருக்கும் அக்கவிதையைப் படிப்பவருக்கும் இடையிலான  மனோதளம், மொழித் தளம், அனுபவத் தளம் ஆகியவை மாறுபட்டிருக்கலாம்.  பாமரர்கள் என்று யாருமில்லை. மாறாக வரட்டு இலக்கிய கொள்கை உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் வருத்ததோடு  குறிப்பிடும் ‘பாமரர்’ என்பவர்கள் வேறுவிதமான மொழிப் பழக்கம் உள்ளவர்கள். அவர்கள் மொழியிலும் கூட தமிழ் இலக்கியத்தில் கவிதைகள் உண்டு. ஆனால், அவையும் தம்மளவில் உள் அடுக்குகளைக் கொண்டவைதான்.

இலக்கியம் என்பது வாழ்வை பொது புத்தி சார்ந்து ஒப்பிப்பது மட்டுமல்ல. வாழ்வின் புதிர்களையும் மறைபொருள்களையும் கண்டடைவது. புதிர்களையும் நுண்ணிய மன சிடுக்குகளையும் நீங்கள் நேரடிச்சொற்கள் மூலம்  அறிவது சாத்தியமே இல்லை. இருண்மையான கவிதைகளை மறுப்பது உங்களையே மறுக்கிற ஒரு முயற்சியே. அல்லது நம் மனம் பேசும் ஒரு சிக்கலான உண்மையை எதிர்க்கொள்ள தயங்கும் கோழைத்தனம் மட்டுமே.

கவிதை  நுட்பமாக உணர்வுகளை விளக்க சொற்களை பயன்படுத்திக்கொள்கிறது. சொல்லாமல் விடும் இடத்திலிருந்தே கவிதைக்கான அனுபவத்தை ஒரு வாசகன் பெருகிறான். இது நவீன கவிதைக்கு மட்டும் அல்ல சங்க இலக்கியம் தொட்டே இருப்பதை வாசிப்பு பயிற்சி உள்ளவர்கள் உணர்வார்கள். . உவமைகள் , உருவகங்கள், சொல்லணிகள் எல்லாமே வாசகன் ஊகித்து ரசிக்கவேண்டியவைதானே .

000

‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்

செறி எயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீ அறியும் பூவே.’

இது இறையனார்  எழுதியப் பாடல். சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்றுதான்  உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 2. இறையனார் என பெயர் உள்ளதால் இப்புலவரை  கடவுள் (சிவபெருமான்) என்று ஆக்கி, அரசன் அவையில் பரிசு பெறத் தருமி என்பவனுக்கு இப்பாடலைச் சிவபெருமான் எழுதிக் கொடுத்தார் என்னும் கதையாக்கித் திருவிளையாடற் புராணம் வடிக்கப்பட்டுள்ளது. ‘திருவிளையாடல்’ என்னும் திரைப்படத்தில் இந்தக் கதை பிரபலமாகி எல்லோரும் அறிந்த பாடலாகிவிட்டது.

திருவிளையாடல் புராணத்தில் நக்கீரருக்கும் சிவனுக்கும் நடைபெறும் விவாதம்தான் தமிழ்ச்சூழலில் கவிதைகள் குறித்து நடைபெரும் அர்த்தமற்ற விவாதத்திற்கான தொடக்கமோ எனக்கூட தோன்றுகிறது. இந்தக் கவிதையில் நேரடி பொருளை இப்படிச் சொல்லலாம்:

நேரடி பொருள் :

தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உன்னும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள்  கூந்தல் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா?

 

இதன் உட்பொருள் :

தலைவி சூடியுள்ள பூவில் மொய்க்கும் தும்பி என்னும் வண்டைப் பார்த்து நீ அறிந்த பூக்களில் என் தலைவியின் கூந்தலைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூவை அறிந்ததுண்டா? என்று வினவிக்கொண்டே அவளது உச்சியை முகர்கிறான். அவள் நாணம் நீங்குகிறது. உறவு மலர்கிறது.

இங்கு தலைவனுக்குத் தலைவியின் மேல் காதல் . அவளை அணுக அவன் வண்டிடம் பேசுவது போல பாசாங்கு செய்கிறான். வண்டிடம் தலைவியை புகழ்கிறான். இவள் கூந்தலில் உள்ள மணம் போல நீ பார்த்த மலர்களில் உண்டா எனக்கேட்பது கூந்தலுக்கு மணம் உள்ளது எனும் அர்த்ததில் இல்லை. மாறாக, உன் கூந்தல்தான் எத்தனை மகிமை எனும் காதல் அதில் ரொம்பி இருக்கிறது.

ஆனால், திருவிளையாடல் புராணத்தின் படி நக்கீரர், ‘பெண்களின் கூந்தலில் எப்படி மணம் இருக்க முடியும் ‘ என நேரடியாக கவிதையை அர்த்தப்படுத்திக்கொண்டு கேள்வி கேட்கிறார். உடனே சிவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வர, அது இலக்கிய விவாவதம் என மறக்கிறார். உடனே ‘ எப்படி எல்லா பெண்களுக்கும் இயற்கையில் கூந்தலில் மணம் இருக்க முடியாது ?’ எனக்கோபப்பட்டு விவாதத்திலிருந்து விலகுகிறார். தொடங்கியது பிரச்னை. கவிதைக்குள் இருக்கின்ற கவித்துவம் குறித்து இருவரும் பேசுவதை விட்டுவிட்டு கவிதையின் நேரடி பொருளை இருவரும் விவாதித்து கடைசியில் நெற்றிக்கண் திறந்ததெல்லாம் மீதிக்கதை.

நக்கீரனில் தொடங்கிய சிக்கல், இன்றுவரை நம்மை ஒட்டி வருவதை கவனித்தீர்களா?

நான் மொழியியல் கற்றவனல்ல. ஆனால், ஒரு கவிதையை ஆழமாக உணர மொழியியல் பங்களிக்கிறது என்பதை நம்புபவன். அதாவது மொழியியல் மாணவர்கள் எல்லாம் நல்ல ரசனை உள்ளவர்கள் என அர்த்தமாகாது. அவர்கள் தங்கள் தொழிலுக்காகக் கூட அதை படிக்கலாம். ஆனால், ஓர் இலக்கியவாதியிடம் மொழியியல் வந்து சேரும் தருணம் முக்கியமானது.

சசூரின் மொழி குறி (linguisitic sign) என்ற கருத்தாக்கத்தை அறிந்திருப்பீர்கள். இக்கருத்தாக்கத்தின் படி மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஒரு குறி (sign) . ஒவ்வொரு குறியும் வடிவம்  மற்றும் பொருள் என்ற இரு அம்சங்களைக் கொண்டுள்ளது.  இதில் வடிவத்தை குறிப்பான் (signifier)என்றும் அது குறிக்கும் பொருளை குறியம் (signified)என்றும் அழைக்கலாம்.

மரம் என்பது ஒரு குறி. மரம் என்றவுடம் நம் மனதில் விருட்சம் தோன்றுகிறது. கிளை, இலை, வேர் என அது உருவம் கொண்டுள்ளது. இப்போது இந்தச் சொல்லும் மனதில் தோன்றும் விருட்சத்துக்குமான உறவு மரபு ரீதியானது. அதாவது ஒரு மொழிக் குறியைப் பொருள் கொள்வதில் அம்மொழி மரபு பற்றிய அறிவு அடிப்படையானது என்பதையும் உணரவேண்டும். ஆனால், ஒரு குறிப்பான் பல குறியங்களைக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக:  அவள் என்னைத் திட்டும் போது நான் மரமாக நின்றேன். எனச்சொல்லும் போது எனது அசைவற்ற, உணர்வற்ற தன்மையை நான் வெளிப்படுத்துகிறேன்.

எனவே மொழியியல் அடிப்படையில் ஒரு குறியைத் தனிமைப்படுத்தி அதன் பொருளை நிர்ணயிக்க முடியாது. வாக்கிய அமைப்பில் அது பெறும் இடம், உரையாடல், சந்தர்ப்பம் முதலியவற்றின் அடிப்படையில் அது நிர்ணயிக்கப்படுகிறது.

எம்.ஏ.நுஃமான் சொல்கிறார் , “ஓர் இலக்கியப் பிரதியை ஓர் இலக்கியக் குறியாகக் கொள்ளலாம். இவ்விலக்கியக் குறி மொழிக் குறிகளால் அமைவது. அவ்வகையில் இது குறிகளால் அமைந்த குறியாகும். இது பொது வழக்கு அன்றி பெரிதும் சிறப்பு வழக்கு சார்ந்தது.  அதற்கே உரிய பொருள் கொள்வதில் வாசகனின் பங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. “

சொம்ஸ்கியின் மொழி உணர்வுதிறன் (linguisitic competence) அடிப்படையாக வைத்தும் கொஞ்சம் யோசிக்கலாம். மொழி உணர்வுதிறன் ஒருவருடன் உடன் பிறந்தது எனக்கூறும் அவர் இலக்கியத்திறன் பயிற்சியால் வருவது என்றும் கூறுகிறார் (1972). ஒரு செஸ் விளையாட்டை அதன் விதியறியாமல் எப்படி அறிந்துகொள்ள முடியாதோ அதுபோலவே இலக்கிய உணர்வு திறன் இல்லாதவர்களிடம் சிக்கும் கவிதை பரிதாபமான நிலைக்குத் தள்ளப்படும்.

‘மீண்டும் சொல்லுதல்’ எனும் உக்தியுனாலேயே கலை சாகிறது. இன்று காலண்டரில் உள்ள ஓவியங்களை நாம் கலை என ஏற்றுக்கொள்வோமா? அவை ஏற்கனவே உள்ளதை மீண்டும் அச்சாக்குகின்றது. ஒன்றைப் போலவே மீண்டும் மீண்டும் உற்பத்தியாகும் ஒரு எழுத்து கலையாகாது. அது ஒரு உற்பத்தி பொருள். காலண்டர் ஓவியத்துக்குக் கொடுக்க வேண்டிய கவனத்தை அதற்குக் கொடுத்தால் போதும்.

எழுத்தாளன் இலக்கியம் மூலம் மொழிக்கு புதுமை செய்ய முயல்கிறான். மொழியின் மீதான தீராத வேட்கையே அவனை அவ்வாறு செய்ய தூண்டுகிறது. நானும் அதையே செய்ய முயன்றுள்ளேன். முடிந்தவரை காலண்டர் ஓவியங்களை இந்தத்தொகுப்பில் கொடுக்காமல் இருக்க முயன்றுள்ளேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...