என் கவிதைக்குள்ளிருந்து எனக்கும் அரசியலுக்குமான தொடர்பு
என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் அரசியல் உணர்வைத் தூண்டிவிடவே இந்தக் கவிதைகளைத் தொகுத்துள்ளேன். என் நோக்கம் மக்களின் சிந்தனையை அதிகார மையத்தை நோக்கி நகர்த்த வேண்டும் ; ஓர் அரசியல் உரையாடலைத் துவக்கி வைக்க வேண்டும் என்பது மட்டுமே. மற்றபடி கவிதைகள் என்பது அதற்கொரு சாக்குத்தான்.
குறிப்பிட்ட ஒரு காலம்வரை வெறும் வார்த்தை அழகியலை மட்டுமே நம்பி எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால், அதையும் தாண்டி உண்மை அரசியலைப் பேச நேரடிக் கவிதை சொல்லாடல்கள் அவசியம் எனக் கருதியப் பிறகே இந்தக் கவிதைகள் உருவாகின. வெறுமனே மேற்பூசலாக உருவாக்கப்படும் அழகியல் என்பது சிந்தனைக்கு எதிரானதாகும். சிந்திக்கவிடாமல் நம்மை தடுப்பதைத்தவிர வெற்று அழகியல் வேறொன்றிற்கும் இல்லை என்றே தோன்றுகிறது. இரத்தமும் சதையுமாக இருக்கும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டுபோய் வர்ணனை வார்த்தைகளுக்குள் சிக்க வைத்து அதன் பின்னணியில் ஊடாடும் அரசியலைப் பேசவிடாமல் திசைத்திருப்புகின்றன.
என் கவிதைகளுக்குப் பின் சிதறுண்டு கிடக்கும் அரசியலை மட்டுமே நான் பேசிவிட்டுச் செல்கிறேன். அது நேரடியாக அந்த நிலத்தின் அரசியலை நமக்கு அறிவிக்கின்றது. எல்லாவற்றையும் ஏதோ சில காரணங்களுக்காகத் தாண்டிச் செல்லும் இந்த உலகம் என் கவிதைகளைக் கண்டுப்பிடித்துவிட்டு அதையும் தாண்டிச் சென்றுவிடும் என்ற விழிப்புடனே இக்கவிதைகளைப் படைத்துள்ளேன். இக்கவிதைகள் எழுதும் சூழலில் என்னுடன் கவிதை குறித்துத் தீவிரமாக உரையாடிய நண்பர் ரியாஸ் குரானாவிற்கும் வா.மணிகண்டனுக்கும் என் அன்பு. மேலும் ஆர்வமூட்டி அவ்வப்போது என் கவிதைகளை விமர்சித்த நண்பர் ம.நவீனுக்கும் நன்றி. இக்கவிதைகளில் உள்ள எழுத்துப்பிழைகளைப் பொறுமையுடன் கவனித்துத் திருத்தி உதவிய தோழி மலாயாப்பல்கலைக்கழகப் பொறுப்பாளர் திருமதி.விஜயலட்சுமி அவர்களுக்கும் என் நன்றி. முகநூலில் என் கவிதைகள் குறித்து தொடர்ந்து கருத்திட்ட நண்பர் ராஜ் சத்யாவிற்கும் மற்ற நண்பர்களுக்கும் என் அன்பு.
அரசியலுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஒரு சாமான்யன் ஒதுங்கிவிடுவதால்தான் இந்த நாட்டில் அரசியல் புரட்சிகள் பலவீனமடைந்துள்ளன. நன்றி.