2015 வரவு செலவு அறிக்கை – ஒரு சாமானியனின் பார்வை

pandiyanமலேசிய மக்களுக்கு பொருளாதாரம் குறித்த சிந்தனைகளும் விழிப்புணர்வுகளும் துளிர்விட்டு கிளம்பும் மாதம் அக்டோபர் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் அக்டோபர் மாதத்தில் தான் நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கை வெளியிடப்படுகிறது. ஆண்டுதோரும் அரசாங்கம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் முதல் வாசிப்பே ‘வரவு செலவு வாசிப்பு’ என்றும் பட்ஜெட் என்றும் அனைவரின் கவனத்தையும் பெரும் நிகழ்வாக கவர்ந்துவிடுகின்றது.

அதனினும் மலேசியாவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக (மகாதீர் காலம் தொட்டு) பிரதமரே நிதி அமைச்சர் பதவியையும் தக்கவைத்துக் கொண்டுள்ளதால், வரவு செலவு வாசிப்பு (நிதி அமைச்சர் செய்ய வேண்டிய வேலை) பிரதமராலேயே முன்வைக்கப்படுகிறது. (பிரதமர் அல்லாத) நிதி அமைச்சராக மட்டும் வரவு செலவு அறிக்கையை வாசித்த கடைசி நபர் அன்வார் இப்ராஹிம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில் 2015-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையை நேற்று பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப் நாடாளுமன்றத்தில் இரண்டு மணி நேரங்களுக்கு மேல் வாசித்தார். மிக விரிவாக பல பொருளாதார கலைச்சொற்களோடு வாசிக்கப்பட்ட அவ்வறிக்கையை மேலோட்டமாக பார்த்து புரிந்து கொள்ள முடியாது என்பதே உண்மை. இது பத்தாவது மலேசிய வளர்ச்சி திட்டத்தின் (RMK10 – 2011-2015) கடைசி வரவு செலவுத் திட்டம் என்பதாலும் அடுத்த ஆண்டு முதல் GST எனப்படும் பொருள் வரி விதிப்பு தொடங்க உள்ளது என்பதாலும் 2015-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமிடல் மிக முக்கியமானதாக அமைகிறது.

பொதுவாகவே, நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படும் வரவு செலவு வாசிப்பு என்பது கோலாகல வானவேடிக்கைப் போலும் அழகான கடல் அலைகள் போலும் பலரால் கண்டும் கேட்டும் ரசிக்கப்படுகின்றன. ஆனால் வரவு செலவு அறிக்கையில் முன்வைக்கப்படும் கூறுகள் வானவேடிக்கை போல் சற்று நேரம் அழகு காட்டி மறைவது பற்றியோ ஆழ்கடல் அடியில் உலாவும் சுறாக்களையும் திமிங்கிலங்களையும் போல் அபாயகரமானவை என்பது பற்றியோ யாரும் கூர்ந்து நோக்கி கருத்திடுவதில்லை. பெரும்பாலோர் தினப்பலன் பார்பது போல் மேலழுத்து வாரியாக மட்டும் பார்த்துவிட்டு அடுத்த வேலையில் மூழ்கிவிடுவதே இயல்பானது. அரசாங்க ஊழியர்கள் தங்களுக்கு ஆண்டு போனஸ் உண்டா என்று மட்டும் பார்ப்பதும் வியாபாரிகள் விலை உயர்வு வரி தளர்வு போன்றவற்றை மட்டும் பார்ப்பது வழக்கம்.

உதாரணத்திற்கு 2015 ஆண்டு வரவு செலவு அறிகையில், பள்ளிகளுக்கு மொழிவாரியாக 14 கோடி முதல் 5 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவ்வகையில் தமிழ்ப்பள்ளிகளுக்கு 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நிதி பள்ளி பராமறிப்புச் செலவுகளுக்கு பயன்படுத்தப்படும் என்று அறிகிறேன். ஆனால் அது குறித்த துள்ளியமான மேல் விபரங்கள் இன்றியே பலரும் தமிழ்ப்பள்ளிகளுக்கு பிரதமர் 5 கோடி நிதி அறிவித்து விட்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றனர். தேர்தலுக்கு முன் அறிவித்த 7 புதிய தமிழ்ப்பள்ளிகள் இன்னும் கட்டப்படாமல் இருக்கும் சூழலில் இது போன்ற அறிவிப்புகள் ஆய்ந்து பார்க்கப் படவேண்டியது அவசியம்.

இன்றைய எல்லா மொழி நாளிதழ்களும் பிரதமர் வாசித்த பட்ஜெட் “ மக்கள் மனம் கவர்ந்த பட்ஜெட்” என்றே தலைப்பிட்டு செய்தி இட்டுள்ளன. நாட்டின் பொருளாதார வல்லுனர்களும் எந்தவித மாற்று பார்வையும் அற்று பிரதமரையும் அவர் வாசித்த வரவு செலவு திட்டத்தையும் புகழ்ந்த வண்ணம் உள்ளனர். எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல், வரவு செலவு வாசிக்கப்பட்ட பிறகும் மறுநாளும் எல்லா ஊடகங்களும் “இதுதான் இதுவரை மலேசியாவில் கொண்டுவரப்பட்ட மிகச்சிறந்த வரவு செலவு திட்டமிடல்” என்றுதான் செய்தி போட்டுவருகின்றன. அது ஒரு சடங்கு போல அமைந்து விட்டது.

ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளில் நாட்டில் பொருட்களின் விலை குறந்ததாகவோ தனிநபர் கடன் அளவு குறந்ததாகவோ எந்த புள்ளி விபரமும் இல்லை. பணக்காரர் ஏழை இடைவெளி மலை அளவு உயர்ந்து விட்டது. ஒரு சாமானிய மனிதனின் பொருளாதார வாழ்க்கையோடு அவனது அகம் சார்ந்த வாழ்க்கை தரம் எந்த அளவு வளர்ந்துள்ளது என்பது கேள்விக்குறி. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் முன்வைக்கப்டும் வரவு செலவு திட்டங்கள் பலராலும் புகழப்பட்டபடியே இருக்கின்றன.

வளர்ந்த நாடாகவும் அதிகம் வருமானம் பெரும் மக்களைக் கொண்ட நாடாகவும் மலேசியாவை மாற்ற ஒவ்வொரு மனிதனும் குறிப்பாக 90% சாமானிய வர்க்கதினர் அதிகமாகவே விலை கொடுத்து வருகின்றனர். தம் வாழ்க்கையின் சுயமதிப்பை தொலைப்பதும் தேவை அற்ற பேராசைகளாலும் போட்டி பொறாமைகளாலும் மூழ்க்கடிக்கப்படுதலும் அவற்றில் முதன்மையானது. மக்களை சுற்றி வளைத்து பேராசையையும் பகட்டையும், போலி வாழ்க்கையையும் தூண்டும் விளம்பர உத்திகள் சந்தை உலகில் சாதாரணமாகி விட்டது.

நாட்டில் இன்று தலை தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல் பிரச்சனைகளும் மனநிலை பாதிப்புகளும் தற்கொலைகளும் வட்டி முதலைகளிடம் சிக்கி சீரழியும் நடுத்தர வர்க்கத்தினரின் துயர்களும் வளர்ந்த நாடு என்னும் தகுதியை பெற நடக்கும் போராட்டத்தின் ஒரு பகுதி என்பதை நாம் உணரவேண்டும். இதன் மொத்த வடிவமே அண்மையில் வெளிநாட்டு ஊடகம் மலேசியாவை ‘லஞ்ச ஊழல்களின் வெற்றி வீரன்’ என்று செய்தி இட்ட துயரம் நிகழ்ந்தது.

2015 வரவு செலவு திட்டத்தை முழுமையாக பகுத்தாயும் ஆற்றல் எனக்கு இல்லை என்றாலும் அதில் குறிப்பிடப் பட்ட முக்கிய அல்லது பலரையும் பேசத்தூண்டும் சில கூறுகளை மட்டும் இங்கு குறிப்பிடமுடியும்.

முதலாவதாக, அரசாங்கம் மக்களின் வாழ்க்கை தரத்தின் மேல் அக்கறை கொண்டுள்ளது என்பதன் அடையாளமாக வீடு வாங்கும் திட்டங்களில் சில மாற்றங்களையும் சலுகைகளையும் அறிவித்து உள்ளது. குறிப்பாக Skim Perumahan Belia எனும் திட்டத்தின் வழி 25 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட திருமணம் ஆன இளைஞர்கள் 5 லச்சம் வெள்ளிக்கு குறைவான விலையில் வீடுகள் வாங்கினால், அரசாங்கம் தன் பங்காக இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 200 வெள்ளி வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு கடனை 35 ஆண்டுகள் வரை செலுத்தமுடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இச்சலுகை 20000 வீடுகளுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இது வீடுவாங்கும் திட்டத்துடன் இருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கமூட்டும் தகவலாக இருப்பினும், வீட்டு விளையையும் இன்றைய இளைஞர்களின் வருமானத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அரசாங்கத்தின் இந்த திட்டம் முழுமையான பயன்தரக்கூடியது அல்ல என்பது தெளிவாகும்.

இன்று பரவலாக நடுத்தர வீடுகளின் விலை 300000 க்கு குறையாத படி உள்ளது. சராசரியாக மாதம் ஒன்றுக்கு 1800 வெள்ளி வங்கிக்கடனாக கட்டவேண்டிய நிலையில் அரசாங்கம் கொடுக்கும் இரண்டு ஆண்டுக்கான 200 வெள்ளி பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்து விடாது. ஆனால் அடுத்த ஆண்டு ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வீடுகளின் விலை மேலும் உயரும் என்று கணிகப்பட்டுள்ளது. மேலும் 35 ஆண்டுகள் கடனை அடைக்க முடியும் என்னும் தகவல் குறுகியகால நன்மையும் நீண்டகால தீமையையுமே பயனீட்டாளர்களுக்கு கொண்டு வரும். கடனை திரும்ப செலுத்துவதில் நீண்டகாலம் எடுத்துக் கொள்வதால் ஒரு பயனீட்டாளன் நீண்டகால கடனாளியாகவும், மிக அதிக வட்டியை வங்கிக்கு செலுத்தியவனாகவும் இருப்பான். அவனது பொருளாதாரம் நீண்டகால அடிப்படையில் எந்த வளர்ச்சியும் அற்றதாகவே இருக்கும்.

ஆகவே, அரசாங்கம் வீட்டு விலை உயர்வதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். பெரும் செல்வந்தர்கள் மட்டுமே வாங்கக்கூடிய விலையில் ஆடம்பர வீடுகள் கட்டப்படுவதை குறைக்க வேண்டும். கோலாலம்பூர், ஜோர்ச்டவுன் போன்ற நகர்ப்புரங்களில் சராசரிமக்கள் வாழவே முடியாத சூழல் உருவாகி இருப்பதை சீர்செய்ய வேண்டும். மலிவு விலை வீடுகளையும் நடுத்தர விலை வீடுகளையும் அதிகம் கட்டுவதும் அதன் பொருட்டு கட்டுமான நிறுவனங்களைப் பணிப்பதுமே மக்களை வீட்டுடமையாளர்களாக்க சிறந்த வழி. ஆனால் 2015 வரவு செலவு திட்டத்தில் மலிவு விலை வீடுகள் குறித்த அறிவிப்புகள் போதுமானதாக இல்லை என்றே தோன்றுகிறது. மலிவு விலை வீடுகள் அரசாங்கத்திற்கு கூடுதல் நிதிச்சுமையை கொடுக்கும் என்ற காரணத்தால் அத்திட்டம் மெல்ல மறைந்து வருகிறது என்பதை உணர முடிகிறது.

அடுத்ததாக, பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த BRIM உதவித்திட்டம் குறித்து சில தகவல்களை அறிந்திருப்பது அவசியம். 2015- வரவு செலவு திட்டத்தில் BRIM உதவித்தொகை ரிம750 முதல் ரிம950 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 3000 ரிங்கிட்டிற்கு குறைவாக குடும்ப வருமானம் பெருவோர் இந்த உதவித்திட்டத்தில் நன்மை அடைவர். இத்தொகை 2015-ல் மூன்று தவணைகளில் வழங்கப்படும். மேலும் 21 வயத இளைஞர்களுக்கும் 250 வெள்ளி வழங்கப்படுகிறது.

ஒரு அரசாங்கம் தம் மக்களுக்கு உதவித்தொகை வழங்க பின்வரும் சூழல்கள் காரணமாகலாம்

  1. போர், நோய், பேரிடர் போன்ற நெருக்கடி நிலையின் காரணமாக மக்கள் பொருளாதார வளம் குன்றி இருத்தல்.
  2. குடிமக்களில் பலருக்கு வேலை வாய்ப்பு இன்றி இருக்க ஏதோ ஒரு வகையில் அரசு காரணமாகி இருத்தல்.
  3. பொருளாதார மந்தநிலையின் காரணமாக சந்தையில் பணப் புழக்க மந்தப்போக்கை துரிதப்படுத்த

மேற்கண்ட காரணங்கள் எதுவும் மலேசிய அரசு வழங்கும் உதவித்தொகைக்கு சரியாகப் பொருந்தாது. மலேசியாவில் நஜீப் அரசு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மக்களுக்கு உதவித்தொகைகளை அறிவித்தாலும் அதன் உண்மை நோக்கம் யாருக்கும் தெளிவாக தெரியவில்லை. அரசு இத்திட்டங்களின் வழி மக்களிடையே தங்கள் அரசியல் பலத்தை நிறுவ முயல்வதாகவே தோன்றுகிறது. மக்களை ஆளும் அரசுக்கு ஆதரவானவர்களாக வைத்துக் கொள்ளவே இது போன்ற கவர்ச்சி திட்டங்கள் உதவக்கூடும்.

உதவித்தொகை வழங்குதல் எல்லாவகையிலும் தற்காலிகமானதே. மக்களின் நிதிச்சுமையைக் குறைக்கவும் வாழ்க்கை செலவீனங்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்தவும் உதவித்தொகை வழங்குவது தீர்வாகாது.

மக்களின் குடும்ப வருமானமாக 3000 ரிங்கிட்டுக்கு கீழ் இருப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்பதை உணரும் அரசு அதை களைய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே அன்றி தற்காலிக நிவாரணிகளைக் கொண்டு வாக்குச் சந்தையை தக்க வைத்துக் கொள்ள முனையக்கூடாது. ஒரு ஆண்டில் ஒரு குடும்பம் 950 ரிங்கிட்டை அரசாங்கத்திடம் இருந்து உதவித்தொகையாக பெருவதன் வழி அக்குடும்பத்தின் வறுமை எப்படி ஒழிய முடியும் என்று சிந்திக்க வேண்டும். ஆகவே அரசாங்கம் கொடுக்கும் BRIM உதவித்தொகை மக்களை போலியான மகிழ்ச்சியில் ஆழ்த்தவும் பொருப்பற்ற செலவாளிகளாக்கவும்தான் உதவமுடியும்.

நாட்டு குடிமக்களின் வறுமை நிலையை களைய சொற்ப்ப உதவித்தொகைகளைக் கொடுப்பதற்கு மாறாக அடிப்படை வாழ்க்கைச் செலவீனங்கள் உயர்வதை தடுப்பது, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது போன்ற நிரந்தர தீர்வுகளே அவசியமானவையாகும்.

முடிவாக, 2015 ஆம் ஆண்டு சாமானிய மக்களின் வாழ்க்கை போராட்டம் புதிய உச்சங்களை அடையும் என்று தெளிவாக தெரிகிறது. எரிபொருள் விலை உயர்வு, ஜிஎஸ்டி, வீட்டு விலை உயர்வு போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் மக்கள் வாழும் சூழல் உண்டாகலாம். வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்கள் எந்நேரமும் மன கொந்தளிப்பில் வாழ்வதால் சமூக பிரச்சனைகளும் அதிகரிக்கலாம். ஆயினும் அரசு முன்வைத்துள்ள 2015-ஆண்டுக்கான தற்காலிகத்தன்மைகள் நிரம்பிய வரவு செலவு திட்டத்தால் மேற்கண்ட சிக்கல்களை எதிர்கொள்ளமுடியுமா என்பது சந்தேகமே.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...