மலேசியாவில் தமிழ் தேசியம் தேவையா?

முதல் பாகம்

பெரியார்முன்னுரை

தமிழ் உணர்வு சிந்தனையாளர்கள் இடையேயும், தமிழர் அரசியல் முன்னெடுப்பளார்கள் இடையேயும் இன்று பெரிய சிந்தனை தாக்கத்தையும் தீவிர உரையாடல்களையும் தோற்றுவித்திருக்கும் களமாக அமைந்திருப்பது தமிழ்த் தேசியம் என்னும் இனவழி அரசியல் முன்னெடுப்பாகும். கடந்த நூற்றாண்டில் தேசியவாத கருத்தாக்கங்களின் எதிராகவும் காந்தியச்சிந்தனைகளின் எதிராகவும் நின்று, திராவிடர்கள் என்ற இனமரபுக்குள் தமிழர்களின் மாற்றுச் சிந்தனை களத்தை திராவிட கருத்தாக்கங்கள் கட்டமைத்திருந்தன. திராவிடம் என்னும் சொல் தமிழினத்தின் உந்து சக்தியாகவும் இன எழுச்சி முழக்கமாகவும் விளங்கிவந்ததை மறுப்பதற்கில்லை. தமிழ் நாட்டு தமிழர்கள் மட்டும் இன்றி, தமிழ் நாட்டிலிருந்து பொருள் தேடும் பொருட்டு உலகமெல்லாம் சென்ற எல்லா தமிழ் மக்களுக்கும் குறிப்பாக விளிம்பு நிலை தமிழர்களுக்கு திராவிடம் நம்பிக்கையூட்டும் பற்றுகோலாக விளங்கியது. மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் திராவிட கொள்கை பரப்பாளர்கள் தமிழின போராட்டவாதிகளாகவே செயல்பாடுகளை அமைத்துக் கொண்ட நிலையையும் கடந்த நூற்றாண்டின் மத்தியில் காணமுடிந்தது.

திராவிடம் என்ற சொல்லோடு தன்னைப் பிணைத்துக் கொண்ட ஆளுமை ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்னும் இயற்ப்பெயர் கொண்ட பெரியாராவார். பெரியாரும் அவர் முன்னெடுத்த ஆரிய – திராவிட போராட்ட அரசியலும் தமிழ்ச் சிந்தனை, பண்பாட்டு, அரசியல் பரப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மொழி, சமயம், பண்பாடு போன்ற கூறுகளில் அது மேல்தளத்தில் சில சலசலப்புகளை மட்டுமே உண்டாக்கி இருந்தாலும், தமிழ் நாட்டு அரசியல் வேராக அது இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர் முன்னெடுத்த போராட்டங்கள் திராவிட இனங்களின் குறிப்பாக தமிழின இருப்பை இந்திய அரசியலில் உறுதியாக காலூன்ற வைத்தது. தேர்தல் அரசியலில் பங்கெடுப்பதில்லை என்று தன் கடைசி மூச்சுவரை மிக உறுதியாக இருந்தவர் ஈ. வெ. ரா. ஆனாலும், கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ் நாட்டில் திராவிட அரசியல் கட்சிகளின் உதவியின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்னும் நிலையே அங்கு நிலவி வருகிறது.

ஆயினும், கடந்த இருபது ஆண்டுகளாக, குறிப்பாக ஈழ இனப்போராட்டம் உச்சத்தை அடைந்து ஒரு இனப்படுகொலையில் முடிந்த பின்னர் திராவிடம் என்னும் சொல்லும் அச்சொல்லை ஓர் இயக்கமாக மாற்றிய பெரியாரும் மாற்றுக் கருத்தாளர்களின் தீவிர விமர்சனத்திற்கு உள்ளாகி வருவது கண்கூடு. திராவிடம் என்னும் கட்டமைப்பின் வழி தனித்தமிழினம் சுரண்டப்பட்டு விட்டதாகவும், திராவிடர் என்ற சலுகையின் வாயிலாக தமிழ் நாட்டு அரசியலில் அதிகம் நன்மை பெற்றவர்கள் தமிழ் நாட்டு தெலுங்கரும் மலையாளியும் கன்னடருமேயாவர் என்பதும் அவர்களது குற்றச்சாட்டுகள். மேலும், தமிழ் நாட்டு அரசியலில் தமிழினத் தலைவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோர் பெருவாரியாக பிறப்பால் தமிழர்கள் அல்ல என்பதனால், தமிழினம் உலக பரப்பில் இன உணர்வுத் தலைமை இன்றி அனாதையாக்கப்பட்டுவிட்டதாகவும் எழும் குற்றச்சாட்டுகள் பெருகிவருகின்றன. திராவிடம் என்னும் கட்டமைப்பை ஒரு மாயை என்று சாடும் தரப்பினர் அதன் மாற்று கருத்தாக்கமாக தமிழ்த் தேசியத்தை முன்வைக்கின்றனர்.

தமிழ்த் தேசியம் என்னும் அரசியல் பண்பாட்டு வடிவம் அடிப்படிடையிலேயே திராவிடத்துக்கு எதிரான அணியாகும். கோவை ஞானி தன் “ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்’ என்னும் நூலில்  ‘திராவிடம் என்பதும் தமிழ்த் தேசியம் என்பதும் எந்த வகையிலும் இணைந்து செல்ல முடியாது என்று பதிவிடுவது குறிப்பிடத்தக்கது.

மேலும், மிகவும் தீவிரத்தன்மையுடன் பேசப்படும் தமிழ்த் தேசியம் என்னும் கட்டமைப்பு பல்வேறு கோணங்களில் இருந்து அணுகப்படுவதாலும், அது முந்தைய திராவிட கருத்தாக்கத்துக்கு நேர் எதிர் அணியாக கிளம்பியுள்ளதாலும் பலரும் அது குறித்த பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசியும் எழுதியும் வருகின்றனர். வரலாற்று மறு வாசிப்பின் வழி தமிழின சார்பு உள்ள மறைக்கப்பட்ட தகவல்கள் சில முன்வைக்கப்படுகின்றன. ஆனால் வரலாற்று சம்பவங்களை திரிக்கும் செயல்களும் நடந்தேறுகின்றன.  சிலர் இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் தூற்றுதல்களையும் இன பாசீசத்தையும் தங்கள் கருத்துக்களினூடே கலந்து ஓடவிடுகின்றனர்.

ஆகவே ‘அறிதல் ஆய்தல் பின்பற்றுதல் என்னும் மூன்று அடிப்படை ஆய்வு நிலைகளில் இருந்து நாம் நமது புரிதல்களை மேம்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயம். திராவிடம் என்னும் கருத்தாக்கம் ஏறக்குறைய 100 ஆண்டுகள் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அதன் உட்கருத்தையோ உட்கட்டமைப்பையோ பலரும் (பாசறை மானமிகுகள் உட்பட) தெளிவாக புரிந்து கொள்ளாத நிலையையே இன்றுவரை நாம் காணுகிறோம். தனிமனித துதிபாடல்களை முன்னிருத்தி பெரியாரையும் திராவிட அரசியலையும் தற்காக்கும் முயற்சியை சிலர் மேற்கொள்கின்றனர். மற்றொரு தரப்பில், ஆரியர் – திராவிடர் என்னும் மரபு இன கருத்தாக்கத்தை முன்னிருத்திய பெரியாரையும் திராவிட அரசியலையும் இன துவேசத்தின் காரணமாக சிலர் சாடுவதும் பழித்துரைப்பதும் வழக்கமாகி வருகிறது.

இந்நிலையில், புதிதாக வெகுண்டெழுந்திருக்கும் தமிழ்த் தேசிய இளைய போராளிகளின் நிலை வரலாற்று தெளிவின்றியும் இனத்துவேசப்பார்வை கொண்டதுவாகவுமே அமைந்துள்ளது. தமிழர் யார்? அவர்களின் அரசியல் தேவை என்ன? தமிழ்த் தேசியத்தின் மையம் என்ன போன்ற தேடுதல்கள் இன்றி ஒரு சிலர் முன் வைக்கும் இன பாசீச கருத்துகளுக்கு உடனடியாக செவி சாய்த்து பொங்கி எழும் ஆபத்தான சூழ்நிலை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஆகவே, திராவிடம் – பெரியார் – தமிழ்த்தேசியம் என்னும் மூன்று முக்கிய நிலையிலும் நின்று நாம் தீவிர மீள்சிந்தனையை நிகழ்த்தவேண்டியது அவசியமாகிறது.

நான் இக்கட்டுரையை முழுவதும் ஒரு நீண்ட உரையாடலுக்கு வழிவிடும் முகப்பாகவும் வாசலாகவுமே அமைக்க விரும்புகிறேன். யார் கருத்து சிறந்தது? யார் நல்லவன்? யார் அயோக்கியன் என்பன போன்ற பாமர விமர்சனங்களில் இருந்து விலகி, இன்றைய, நாளைய தமிழினத்திற்கு தேவையான தமிழின மீட்சி எந்த கோணத்தில் இருந்து அணுகப்படவேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டியதே நம் கடமை. நாம் இந்த போராட்டங்கள் மிகுந்த தொழில்நுட்ப உலகில்; இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட அட்டூழியங்களை கண்ட அனுபவத்தில் இருந்தும் உலகெங்கும் சிறுபான்மையினராகவும், நாடற்ற நிலையிலும் லட்சக்கனக்கான தமிழர்கள் வாழும் சூழலை கருத்தில் கொண்டும் கட்டப்போகும் புதிய கட்டமைப்பு எப்படி அமையவேண்டும் என்பதை அலசி ஆராயும் முகாந்திரமாகவே இப்பணியை முன்னெடுக்கிறேன்.

திராவிடம்

வரலாற்றில், முக்கிய நிகழ்வாக இருந்தாலும், ஆளுமையாக இருந்தாலும் அவை இரண்டு முறை அரங்கேற்றம் காணுகின்றன. முதலாவது முறை அவலத்துடனும் இரண்டாம் முறை கேலிக்கூத்தாகவும் அரங்கேறுகின்றன என்பது காரல் மார்ஸ்சின் கருத்து. இக்கருத்துக்குள் சமுதாயம் முன்னெடுக்கும் கொள்கைகளையும் அடக்கலாம். அதற்கு மிகச்சிறந்த உதாரணம், ஆரிய – திராவிட கருத்தாக்கங்கள்.

உலக பண்பாட்டியல் கோட்பாடுகள் (Theory of civilizations) கூறும் பண்பாட்டு வளர்ச்சிப் படிநிலைகளையும் அவற்றின் ஆக்கம் அழிவு குறித்த விளக்கங்களையும் ஒரு நிலப்பகுதியில் அலையென எழுந்து பின்னர் அடங்கும் அரசியல் விழிப்புணர்வுகள், சுதந்திர வேட்கைகள், பொருளாதார புரட்சிகள் போன்ற விடயங்களோடும் ஒப்பிட்டு பார்க்க முடியும். எல்லாவகை போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் துவக்கம் – வளர்ச்சி – உச்சம் – கலப்பு — சிதைவு – வீழ்ச்சி என்னும் படிநிலைகளில் உள்ளன. இந்திய வரலாற்றிலும் அரசியலிலும் முக்கிய உள்ளீடாக பேசப்படும் ஆரிய – திராவிட கருத்தாக்கங்களும் இப்போது தமிழ் நாட்டில் பேசப்படும் தமிழ்த் தேசியமும் உலக பண்பாட்டியல் கோட்பாடுகளுடன் ஒத்தே இருப்பதையும் கவனப்படுத்துதல் அவசியம்.

மாக்ஸ்முல்லரும் கால்டுவெல்லும்   

19-ஆம் நூற்றாண்டில் இந்திய தேசம் உலகத்தால் குறிப்பாக ஐரோப்பாவால் மீண்டும் கண்டெடுக்கப்படுவதற்கு மிகவும் உதவியவர் மாக்ஸ்முல்லர். இவர் ஆங்கில உலகியல் பார்வையில் இந்திய ஆன்மீகத்தையும் பன்பாட்டையும் அணுகியதோடு, இந்திய பண்பாட்டு மேன்மைகளுக்கு இன்று அழிந்துவிட்ட, மிகவும் உயர்ந்த நாகரீகத்தோடு வாழ்ந்த ஆரியர் என்ற இனக்குழுவே காரணம் என்ற தனது கண்டுபிடிப்பை ஐரோப்பிய அறிவுலகத்தில் விதைத்தார். இக்கருத்து ஆங்கில அறிவுலகில் நல்ல வரவேற்பைப் பெறக் காரணம், ஆரியர்கள் என்று கூறப்பட்ட இனம் பயன்படுத்திய சமஸ்கிருதம் என்னும் மொழியின் வேர் பண்டைய கிரேக்கத்திலும் உள்ளது என்றும் ஆரிய இனம் மறந்துபோன ஐரோப்பிய பண்பாட்டு உலகின் பிரதிநிதிகளே என்றும் அவர் முன்வைத்த கருத்துகளே ஆகும். இதனால் சமஸ்கிருத – ஆங்கில ஒப்பீட்டு மொழியியலை கற்க பல ஐரோப்பியர்கள் ஆர்வம் காட்டியதோடு, ஆரியரது மேன்மைகளாக மாக்ஸ்மூலர் பட்டியலிட்ட விழுமியங்கள் அனைத்தையும் இந்தியச் சிறப்புகள் அனைத்திற்கும் அவர்கள் விரிவுபடுத்தினர். ஆரியர்களை செயலூக்கம் மிக்கவர்கள் என்றும் தெய்வீக பண்புகள் மிகுந்தவர்கள் என்றும் வீரமும் போர் ஆர்வமும் மிக்கவர்கள் என்றும் பல லட்சிய வார்புகளை உருவாக்கினார்கள். ஐரோப்பியர்கள் ஆரிய இனம் என்று அழைக்கப்பட்ட இனக்குழுவை இவ்வாறு புகழ்ந்துரைப்பதன் வழி அவர்கள் தங்கள் பண்டைய ஐரோப்பிய பண்பாட்டின் இழந்துபோனதோர் நட்பைக் கண்டுவிட்டதாக மனம் மகிழ்ந்தார்கள். ஆரியர்களை புகழ்வதன் வழி அவர்கள் தங்கள் மூதாதையர்களை புகழ்வதாகவே நாம் பொருள்கொள்ள வேண்டியுள்ளது.

ஆரிய இனம் என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கியப்பின் ஆரியரல்லாதவர்கள் குறித்த தேடுதல் தொடந்தது. அதன் விளைவாக, ஐரோப்பாவில், யூதர்கள், செமிடிக் மக்கள் போன்றவர்களும் இந்தியாவில் திராவிடர்களும், தீண்டாச்சாதியர், பழங்குடி இனக்குழுக்கள் போன்றவையும் பட்டியல் இடப்படன.

மாக்ஸ்முல்லருக்கு, பின்னர் மொழி ஒப்பீட்டு ஆய்வின் வழி  இந்தியாவில் குறிப்பாக தென்மாநிலங்களில் பெரும் அதிர்வை கொடுத்தவர் ராபட் கால்டுவெல் என்னும் இங்கிலாந்து கிருஸ்துவ பாதிரியார். இவரது மொழி ஒப்பீட்டு ஆய்வுகள் மாக்ஸ்முலரின் கருத்துகளுக்கு நேரெதிரானவை. மாக்ஸ்மூலர் இந்திய மொழிகளின் தாய் ஆரிய இன மொழியான சமஸ்கிருதம் என்று நிறுவ முயன்றார். ஆனால் கால்டுவேல் தென் மாநிலங்களில் புழங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற மொழிகள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை என்றும் அவை திராவிட குடும்பத்தைச் சார்ந்தவை என்றும் ஆதாரங்களோடு தன் கருத்தை நிறுவினார். அந்த திராவிட குடும்பத்தின் மைய மொழியாக இருப்பது தமிழே என்றும் அவர் நிறுவினார். மேலும் ராபட் கால்டுவேல் தமிழை சமஸ்கிருத சார்புக்கு அப்பாற்பட்ட மொழி என்றும் அது சுயமாக நின்று இயங்கவல்லது என்றும் கூறினார். அதோடு அவர் திராவிட இனம் என்பது மிகப் பழமையானது என்றதோடு அது ஆரிய இன எதிர்ப்பை மரபாக கொண்டது என்றும் எழுதினார்.

ஆகவே இதன் வழி இந்திய துணைகண்டத்தில் ஆரிய- திராவிட என்னும் இரண்டு வித ‘இனக் கோட்பாடு’ (racial theory) உருபெற்று வேர்பிடிக்கத் தொடங்கியது. ஆனால் “மொழியியலாளர் செய்த பெருந்தவறு மொழியையும் இனத்தையும் சமமாக்கிவிட்டதுதான். இத்தவற்றை மக்ஸ்மூல்லர் பிற்காலத்தில் உணர்ந்தார். ஆனால் அதை அவர் வெளியிட்டுப் பிழையைத்திருத்தும் முன்னர் ‘ஆரிய இனம்’ என்ற கருத்து அறிவாளிகளிடையே பரவி நிலைத்துவிட்டது” என்று கூறுகிறார் வரலாற்று ஆய்வாளர் ரெமீலா தாப்பார்.

இதே கருத்தை அ.மார்க்ஸ் அவர்களும் ‘ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று வரலாற்றாசிரியர்களும், கல்வியாளர்களும் இனக் கோட்பாட்டை ஏற்பதில்லை. ஆரிய மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பம் என இருப்பது உண்மை. ஆனால் ஆரிய/ திராவிட இனங்கள் என்று ஏதும் இல்லை’ என்று தெளிவுபடுத்துகிறார்.

பெரியார் (1879 – 1973)

பெரியாரின் பொதுவாழ்க்கை மிக நீண்ட வரலாற்றை உடையதாக இருந்தாலும் இக்கட்டுரையின் தேவையைக் கருதி அவரின் சுயமரியாதை இயக்க அல்லது திராவிட கழக  தொடர்புகளை மட்டுமே நான் கவனம் கொள்கிறேன்.

ஏறத்தாழ 50 ஆண்டுகள் தமிழ் நாட்டு சமூகவியலிலும் அரசியலிலும் பலதரப்பட்ட எதிர்மறை கருத்துகளையும் மாற்று சிந்தனைகளையும் முன்வைத்து தீவிரக் களப்பணியாற்றியவர் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் என்ற இயற்பயரைக் கொண்ட பெரியார். அவர் வாழ்ந்த காலத்தில் அடித்தட்டு மக்களுக்குச் சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் பெரும்பான்மை மக்களாலும் அதிகார வர்கத்தாலும் தொடர்ந்து தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.

பெரியார் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், இந்திய சுதந்திர போராட்டம் உச்சத்தில் இருந்தது. காந்தி, அம்பேத்கர் போன்ற ஆளுமைகளின் காலகட்டமும் அதுதான். இந்திய சுதந்திரத்தை முன்னிருத்தி காந்தி இந்தியர்கள் என்னும் அடையாளத்தையும் தேசியத்தையும் முன்னெடுத்தார். ஆனால் அதே காலகட்டத்தில் பெரியார் திராவிடன் என்னும் இனக் கோட்பாட்டையும் தனித்தமிழ் நாடு கோரிக்கையையும் (1940-க்குப் பிறகு அது திராவிட நாடு என்று மாற்றங்கண்டது குறிப்பிடத்தக்கது ) பிரிவினைவாதத்தையும் முன்னிருத்தினார். அக்கோரிக்கைகள் நிறைவேறாததால், 1947- ஆண்டு இந்தியா சுநந்திரம் பெற்றதினத்தை அவர் துக்க நாளாக அறிவித்தார்.

சாதீய சிந்தனைக்கும், பார்ப்பனீயத்துக்கும் பிற்போக்கு சிந்தனைக்கும் பிறப்பிடமாக திகழ்ந்த வைதீக தர்மங்களுக்கு எதிராக அவர் தொடுத்த போர் தமிழ் நாட்டில் பல ஆத்திகர்களின் கடுங்கோபத்திற்கு காரணமானது. பல ஆன்மீகவாதிகளும் மதவாதிகளும் பிராமணர்களும் சாதித்தமிழர்களும் பெரியாரை தங்கள் முதல் எதிரியாகவே கொண்டு தங்கள் எதிர்ப்பை பலவகையிலும் வெளிப்படுத்தினர். பிராமண சமூகத்தாரின் சிறப்பு தகுதிகளை அவர் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்ததால் அவரை அவர்கள் இன்றுவரை விரோதியாகவே பாவிக்கின்றனர்.

எதிர்ப்பும் அவதூறுகளும் பெரியாருக்கு புதியனவல்ல என்றாலும் இன்று அவர் இறந்து ஏறத்தால நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவர்மீது பல்வேறு கோணத்தில் இருந்தும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.  அவர் கட்சி சார்ந்த அரசியல் நடத்தியவர் அல்ல. தேர்தல்களில் நின்றவரும் இல்லை. ஆளும் தரப்பில் இடம்பிடித்ததும் இல்லை. அரசாங்க பதவிகளில் இருந்தவரும் இல்லை. ஆரம்பகாலத்தில் அப்படி கிடைத்த சில வாய்ப்புகளையும் அவர் துறந்த பின்னரே தன் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். அவர் தன் கருத்துக்களை தீவிர எழுத்துக்கள் மூலமும் மக்கள் நேரடி சந்திப்புகள் வழியாகவும் பரப்பினார். அவை ஒரு சிந்தனைப் போராட்ட கச்சாப் பொருளாகவே மக்கள் முன் வைக்கப்பட்டன.

ஈ.வெ.ரா. தன் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த காலத்தில் (1925) சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட தென்நாட்டில் பிராமண மேட்டிமை, பெண்ணடிமை, தேவரடியார் வழக்கம், காணாமை, தீண்டாமை, கோயில்களில் நுழைய அனுமதி இல்லாமை போன்ற பல்வேறு மனித விரோத செயல்கள் சமுதாய அமைப்பில் இயல்பான ஒன்றாக இருந்ததோடு சமஸ்கிருத மொழி தேவபஷையாகவும் தமிழும் பிற தாய்மொழிகளும் நீஷபாசையாகவுமே அடையாளம் கொண்டிருந்தன. மேற்கண்ட பிற்போக்குத்தனங்கள் அனைத்திற்கும் இந்து சமய புராணங்களையும் வேதங்களையும் மேல்தட்டு மக்கள் ஆதாரம் காட்டியதோடு இவ்வழக்கங்களை மீறுவோரை கடவுள் நிந்தனையாளர்கள் என்று கூறி அடக்கி ஆளவும் செய்தார்கள்.

ஆகவே அவர் தன் சுயமரியாதை இயக்கத்தை வலுப்படுதவும் மக்களை ஒன்றுதிரட்டவும் தென்நாட்டு மக்களை ஒன்றாக ஆக்கும் பொருட்டும் பிராமணர் அல்லாதோர் அனைவரும் திராவிடர் என்று தன் இனக்கோட்பாட்டு அரசியலை வடிவமைத்துக் கொண்டார். திராவிடர் என்பவர் இந்து வேதச்சட்ட திட்டங்களுக்கும் சாங்கிய சம்பிரதாயங்களுக்கும் எதிரானவர்கள் என்று கூறுவதன் வழி அடிமைப்பட்ட இனமாக வாழும் பெருவாரி சமுதாயத்தை துணிவு கொண்டு எழச் செய்ய முடியும் என்று நம்பினார். இயல்பாகவே இந்திய மரபார்ந்த சிந்தனைகளும் தத்துவங்களும் சமயத்தின் கட்டமைப்பிற்குள் சிக்கியிருப்பது தவறு என்னும் இறைநீக்கல் கோட்பாட்டில் (Secularism) ஈர்ப்பு உள்ளவரான ஈ.வெ.ரா  ஐரோப்பிய செக்குலர் சிந்தனை மாற்றங்கள் தமிழ் சிந்தனை உலகிலும் வேண்டும் என்று நினைத்தார். சமய சட்டதிட்டங்களை மனித உரிமை மீறல்களுக்குச் சாதகமாக பயனபடுத்தும் பார்ப்பன மேட்டிமையை தகர்க்க அதுவே வழி என்று கண்டறிந்தார். கார்டுவெல் வெளியிட்டு இருந்த ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ பெரியாரின் சிந்தனை போக்கிற்கு ஏற்றதாகவும் அவருடைய நோக்கங்களுக்கு வடிவம் கொடுப்பதாகவும் இருந்தது. ஆகவே, அவர் திராவிடர் இனக்கோட்பாட்டை முழுதும் கல்டுவேல்லிடம் இருந்தே பெற்றிருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது.

பெரியாரின் முதன்மை மாணவரான சி. என். அண்ணாதுரை 1949 – ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விலகி திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கி அதன் வழி தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆனார். அவர் திரைப்பட கலைஞர்கள் பலரையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு ‘பெரியாரின் கொள்கைகள்’ என்ற போலி திட்டத்தை கட்டமைத்துக் கொண்டு அரசியல் பிரச்சாரங்களைச் செய்தார். அதோடு அடித்தட்டு மக்களின்  சக்திவாய்ந்த சுயமரியாதைப் போராட்டங்களை  மேம்போக்கான மேடை நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும் காட்டி ஜனரஞ்சக அரசியலாக்கி மலினப்படுத்தினார்.

மேலும் ஈ.வெ.ரா சமயம், மொழி, பண்பாடு போன்ற பல்வேறு விழுமியங்களின் மீது தன் கூர்மையான விமர்சனங்களை வைத்த போதும், அவர் வரலாற்று ஆய்வாளரோ, மொழி அறிஞரோ, தத்துவ ஞானியோ அல்லர். அவரின் விமர்சனங்களும் போராட்டங்களும் மனித இன சமத்துவத்தையும் சுயமரியாதையையும் மனித உரிமையையும் அடிப்படையாக கொண்டவையாக இருந்தன. ஒரு மனித உரிமை போராளி மொழி அறிஞனாகவோ, பண்பாட்டு ஆளுமையாகவோ அரசியல் வல்லுனராகவோ இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதை நாம் அறிய வேண்டும்

ஆகவே, அவர் அன்றைக்கு பெரும் அறிவாளிகளாகவும் சிந்தனையாளர்களாகவும், மொழி அறிஞர்களாகவும் சமய ஆசானாகவும் இருந்தவர்கள் கவனிக்கத் தவறிய அல்லது அலட்சியப்படுத்திய கடைநிலை மனிதர்களின் மனிதநேயத் தேவையை தூக்கிப்பிடித்தவராக முக்கியத்துவம் பெருகிறார்.

அதேபோல் பெரியார் தான் கன்னடன் என்பதையோ தன் வீட்டில் தாய் மொழியான கன்னடத்தைப் பயன்படுத்தாமல் தெலுங்கு மொழி பயன்படுத்தப்படுதல் உண்டு என்பதையோ மறைத்தார் இல்லை. அவர் தன் மனதில் தோன்றிய கருத்துகளை எந்த சமரசமும் இன்றியே மிக வெளிப்படையாக முன்வைத்தார். அவர் கூறிய கருத்துகள் பல பின்னாலில் அவராலேயே மாற்றங்கண்டுள்ளன. அதேப்போல் அவர் முன் வைத்த கருத்துகளை அன்றைய அவரின் தொண்டர்களே ஏற்காத நிலையும் இருந்துள்ளது. அவர், “நான் சொல்வதை அப்படியே நம்பிவிடாதீர்கள் உங்கள் பகுத்தறிவுக்கு ஆட்படுத்தி சரியா, தவறா என சீர்தூக்கி பார்த்து நல்லது என்றால் .ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றே கூறிவந்தார்.

இச்சூழலில், அவர் மீதான மத அரசியல் அடிப்படையிலான பழைய வகை சாடல்கள் இன்றும் நீளும் நிலையில் கடந்த பத்து ஆண்டுக்களாக புதியவகை சாடல்களும் அவரையும் அவர் தொடங்கிய திராவிட கழகம் தொட்டும் உத்வேகம் கொண்டுள்ளன. புதிய தாக்குதல்களைத் தொடுப்பவர்கள் அவர் முன்னெடுத்த ‘திராவிட’ இனக்குழுவை சேர்ந்தவர்களே ஆவர். அதாவது முன்னர் எதிராளிகளிடம் பெரியாரியம் போராடியது போக இப்போது தன் சொந்த படையினரே அவர் மீது போர் தொடுக்க முனைந்துள்ளனர். இப்புதிய போரை தொடங்கி முன்னேறிக் கொண்டிருப்பவர்கள் தமிழ்த் தேசியவாதிகளாவர்.

பொதுவாக தமிழ்த் தேசியவாதிகள் பெரியார் மீதும் அவர் தோற்றுவித்த திராவிட கழகம் மீதும் பல விமர்சனங்களையும் குறைகூறல்களையும் முன்வைகின்றனர். மேலும் சிலர் ஆதாரமற்ற அவதூறுகளையும் சுமத்துகின்றனர். அவற்றில் குறிப்பிடத்தக்கது:

1. பெரியார் ‘திராவிடம்’ அடையாளத்தை முன்னிருத்தி தமிழர்களின் இன உணர்வை சிதைத்து விட்டார்;
2. திராவிட இயக்கம், தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை தெலுங்கு மலையாள, கன்னடர்கள்  அபகரித்துக் கொள்ள அனுமதித்து துரோகம் இழைத்து விட்டது; மற்றும்
3. கன்னடரான பெரியார் தமிழை மிகவும் தாழ்வாக பேசியதுடன் அதன் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருந்தார்

போன்ற குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியமானவை. அதோடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையும் ஆகும். ஆகவே மேற்கண்ட தமிழ்த்தேசியவாதிகளின் கருத்துகளை பரந்து சிந்தித்து விடைகாணவேண்டியது அவசியம்.

தமிழ் தேசியவாதிகள் தங்களை திராவிடர் என்று குறிப்பிடுவதையே வெறுக்கின்றனர். அவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்தவே விரும்புகின்றனர். ஆகவே பெரியார் ‘திராவிடன்’ என்ற போலியான அடையாளத்தை தங்கள் மேல் திணித்து தங்கள் சுய அடையாளத்தை சிதைத்து விட்டார் என்னும் குற்றச்சாட்டை அவர்கள் மிக காட்டமாக முன்வைக்கின்றனர். பழங்கால அரசியலில் தமிழ்ச் சமுதாயத்தை ஆரியனும் பார்ப்பனனும் ஏமாற்றி அடிமைப்படுத்தியதாக முழங்கிய பெரியார் சமகால அரசியலில் தமிழனை ஏய்த்துப் பிழைப்பவன் வடுகனும் வந்தேரிகளுமே என்னும் உண்மையை மறைத்துவிட்டார் என்பதே அவர் மீது வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டாகும்.

அதோடு திராவிட அரசியல் என்கிற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு மாயையை உருவாக்கி வந்தேறிகளும் தெலுங்கு, மலையாளி, கன்னடர் போன்ற பிற மாநிலத்தார் அரசியலிலும் பொருளாதாரத்திலும் முன்னேற வழி வகுத்ததோடு மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் பின்னடைய காரணமாகவும் இருந்த ‘கன்னட சதிக்காரனாக’ பெரியாரையாரை அவர்கள் மறுவாசிப்பு செய்கின்றனர்.

பெரியார் ஒரு கன்னட வெறியர், அவர் தமிழ்மொழியை மிகவும் இழிவாக நினைத்தார், தமிழ்ச் சமுதாயம் குறித்து அவருக்கு தாழ்வான மதிப்பீடுகளே இருந்தன போன்ற பல நூறு குற்றச்சாட்டுகள் இன்று பல தமிழ்த் தேசிய முன்னெடுப்பாளர்களால் முன்வைக்கப்படுகிறன. தமிழினம் ஒன்றினைந்து முன்னேற வேண்டுமென்றால் பெரியாரையும் அவர் முன்வைத்த கருத்துகளையும் ஒழித்தே ஆகவேண்டும் என்பது இன்றைக்கு சிலரின் தீவிர பிரச்சாரமாக உள்ளது. பெங்குளூர் குணா என்னும் சேமுவேல் குணசீலர் எழுதிய ‘திராவிடத்தால் வீழ்ந்தோம் (1994)’ என்னும் நூல் பெரியாரையும் அவர் தலைமையேற்ற திராவிட கழக அரசியலையும் தகர்க்கும் ஒரே நோக்கத்துக்காக ஒரு ஆய்வாகவே எழுதப்பட்டுள்ளது. ‘பெரியார் யாருக்குப் பெரியார்? என்னும் கட்டுரையும் அவரின் சாதிய பார்வையை கேள்விக்குறியாக்குகின்றது.

ஆகவே பெரியார் இரண்டு பெரிய குழுக்களால் தொடர்ந்து விமர்சிக்கப்படுவது கண்கூடு:

1. இந்து-பிராமண- பார்ப்பனரும் அவர்களின் ஆதரவாளர்களும்; மற்றும்

2. தமிழ்த் தேசிய அரசியல் குழுவினர்

ஆகவே கடந்த நூற்றாண்டில் பெரியார் ஆரிய – பார்ப்பனர்கள் மேல் சுமத்திய அதே குற்றச்சாட்டுகளையும், அவர்களை பெரியார் நீதியின் முன் நிறுத்திய அதே இடத்திலும் இன்று தமிழ்த்தேசியவாதிகள் பெரியாரை வைத்து தங்கள் இருப்பை வலுப்படுத்த முயல்வது எதிர்ப்பாராத அரசியல் திருப்பமாகும்.  சுறுக்கமாக கூறுவதென்றால் பெரியார் முன்னர் மதச் சார்பாகவும் இன்று இனச்சார்பாகவும் இயங்கும் மக்களால் வெறுக்கப்படுவது தெளிவாகிறது.

இந்நிலையில், பெரியார் தன் வாழ்நாளில் என்ன செய்தார் என்று மீட்டுணர்வது மிகவும் அவசியமானது. பல தரப்பினரும் அவரை தூற்றவும் தாக்கவும் முயல்வதன் காரணம் என்ன என்பதும் நமக்கு தெளிவு படவேண்டும். அவர் முன்வைத்த கருத்துகளின் உண்மைகளையும் போதாமைகளையும் தீவிரமாக அலச வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

முதலில், பெரியார் சமுதாயம் தொடர்பான சில அடிப்படை முடிவுகளுடனேதான் தன் செயல்பாடுகளைத் தொடங்கினார் என்பது தெளிவாகிறது. அவர் மனம் எதை ஏற்று செயல்பட்டது என்பதை வைத்தே அவரின் செயல்களுக்கான காரணங்களை நாம் அறியமுடியும். அவ்வகையில் அவர் நான்கு திணை சார்ந்த இனக்கொள்கைகளை முடிவாகக் கொண்டிருந்தார். முதலாவதாக ஆரிய திராவிடங்களே இந்திய துணைகண்டத்தில் வாழும் அனைத்து இனமக்களின் மூதாதையர் என்னும் கோட்பாட்டை சந்தேகம் இன்றி ஏற்றுக் கொண்டார். அடுத்து, ஆரிய இனம் திராவிட இனத்தை அடிமைப்படுத்தி, திராவிட இனத்தின் மேன்மைகளைக் குழைத்து மேலான்மை புரிகிறது என்னும் இன அரசியலையும் ஐயம் இன்றி ஏற்றுக் கொண்டார். மூன்றாவதாக, சென்னை மாகாணத்தில் வாழும் பிராமணர் அல்லாத மக்களை எல்லாம் திராவிடர்கள் என்று ஏற்றுக் கொண்டார். அடுத்து திராவிடர்கள் வாழும் நிலப்பகுதியை அவர் முதலில் தமிழ்நாடு என்றும் பிறகு திராவிட நாடு என்றும் அடையாளப்படுத்தினார். ஆகவே அவரின் இனச்சார்பு கருத்துகள் அனைத்தும் மேற்கண்ட கண்ணோட்டதையே தளமாக கொண்டவையாகும்.

தொடர்ந்து, அவரது மொழியியல் செயல்பாடுகளின் தளம் பின்வருமாறு இருந்தது.  அவர் தமிழ் உட்பட எந்த மொழியையும் தொன்மை காரணமாகவோ புனிதம் அல்லது தெய்வத்தன்மை காரணமாக புகழுவதை பிற்போக்குத்தனம் என்று கருதினார். மொழி என்பது மனித தொடர்புக்கான ஒரு கருவி மட்டுமே என்னும் ஆங்கில நவீன மொழியியலார்களின் கருத்துகளை அவர் பின்பற்றினார். தொடர்ந்து, தமிழ் மொழியே திராவிட நாட்டில் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று வெவ்வேறு வகையில் பேசப்படுகிறது என்று கூறினார். அதாவது திராவிட இனத்தின் ஒரே மொழி தமிழ் மொழியே என்றும் அந்த ஒரே மொழி பிராந்திய /வழக்கு மொழியாக பலவகை உச்சரிப்பில் பேசப்படுவதாலேயே பிற மொழி போல தோன்றுகின்றது என்றார்.

“ஆனால் என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழி களென்றோ, அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழி லிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது  தமிழ் தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப் பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன்”.

அதாவது திராவிட இனத்தின் ஒரே மொழி தமிழ் மொழியே என்றும் அந்த ஒரே மொழி பிராந்திய /வழக்கு மொழியாக பலவகை உச்சரிப்பில் பேசப்படுவதாலேயே பிற மொழி போல தோன்றுகின்றது என்றார்.

திராவிட நாடு என்னும் ஒரு நிலப்பகுதியை இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என்றும் போராட்டங்களை நிகழ்த்தினார். இந்தியா சுதந்திரம் பெற்ற போது அதை விமரித்து வெளியிட்ட கருத்தில், ‘இந்தியா என்னும் பார்ப்பன ஆதிக்கதில் இருந்து திராவிட நாடு விடுதலை பெரும் வரையில் தமிழர்களை பார்பன அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுக்க முடியாது’ என்னும் கருத்துபட பேசினார்.  திராவிட சமூகம் என்பது வைதீகத்திற்கும் பார்ப்பனீயத்திற்கும் எதிராது என்பதோடு பார்ப்பனீயம் முன்னிருத்தும் வர்ணாஸ்ரமம் மனித விரோதச் செயல் என்று கூறினார்.

பகுத்தறிவின் வழி அறியக்கூடிய (அறிவியல் ஆய்வின் வழி கண்டறியக் கூடிய) உண்மைகளை மட்டுமே ஏற்க வேண்டும் என்று கூறினார். கடவுளின் இருப்பை பகுத்தறிவுவாதத்தின் வழி மெய்ப்பிக்க இயலாது என்பதால் அவர் இயல்பாகவே நாத்திகராக தன்னை அறிவித்துக் கொண்டார்.

பெரியாரின் இயங்குதன்மையை கூர்ந்து நோக்கும் போது அவர் தன் வாழ்நாளில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார் என்பதை விட அவர் சில கலகங்களை செய்தார் என்பதே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. சமுதாய கவனிப்பை கோரும் விடயங்களை நோக்கி மக்களின் கவனத்தை குவியச் செய்யும் ஆரம்பகட்ட பணியை கலகங்கள் செய்கின்றன. மரபாகிவிட்ட வழக்கங்களுக்கும் மரபை தொடர்ந்து கீழ்மட்ட மக்களின் மேல் செலுத்த முயலும் அதிகார மையங்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் கலகங்கள்தாம். கலகங்கள் சமுதாய சீரமைப்பை எதிர்மறை நிலையில் இருந்து தொடங்குகின்றன. உண்மையான கலகங்களின் நோக்கம் சமுதாய அமைப்புக்குள் தேங்கிவிட்ட அழுக்குகளை சுத்தம் செய்ய மக்களை சுயமாக சிந்திக்கத் தூண்டுவதே ஆகும்.

அவ்வகையில் பெரியார் அடிப்படையில்  அடித்தட்டு மக்களுக்கு தன்மான உணர்வை ஊட்டுவதையும் அவர்களை சமகால பிரக்ஞை உள்ள மக்களாக மாற்றுவதையும் சில கலகங்கள் வழி வழிநடத்தினார். அவரின் நோக்கத்திற்கு எதிராக நின்ற மதம், ஜாதீய உணர்வு, பண்பாடு, அரசியல், மொழி போன்ற அனைத்து அதிகாரங்களுக்கும் எதிராக அவரது கலகங்கள் நீண்டன என்றே நாம் புரிந்துகொள்ள முடிகிறது. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் தன்மான உணர்வை தூண்டுவதன் வாயிலாக அவர்கள் சுய சொரணை பெற்று தங்கள் நிலையை ஆய்வதோடு சமுதாயத்தில் தங்கள் தகுதியை ஆதிக்கச் சாதியினரோடு போட்டியிடும் நிலைக்கு வளர்த்துக் கொள்ள முடியும் என்று அவர் நம்பினார். மக்கள் தொடர்ந்து சிந்திக்கும் பொருட்டே அவர் பல்வேறு துறைகளில் தன் கலகங்களை நிகழ்த்தினார். கலகங்களை நிகழ்த்துவதன் வழியே மட்டுமே மேல்தட்டு கீழ்த்தட்டு இரு தரப்பு மக்களின் கவனத்தையும் பெறமுடியும் என்று அவர் நம்பினார். அது நாள்வரை சமுதாயம் ஏற்றுக் கொண்டு மரபாக ஆகிவிட்ட சமுதாய விழுமியங்களை அவர் தன் விமர்சனங்களால் தகர்த்தார். புனிதம் தெய்வீகம் போன்ற சொல்லாடல்களின் வழி பதுக்கி வைத்திருந்த உண்மைகளை அவர் ஈவு இரக்கம் இன்றி போட்டுடைத்தார். தமிழை கலைமகளோடு தொடர்புபடுத்தி தெய்வீகம் என்ற போக்கை சாடி அதை காட்டுமிராண்டி மொழி என்றார். சாதிய கட்டமைப்புக்கு முழுபொறுப்பையும் இந்து சமயம் கொண்டிருப்பதால் அவர் இந்துசமய நம்பிக்கைகளை விமர்சிக்கத் தொடங்கினார். இன்றைய நிலையில் அவரது கலக முறையை நாம் பின் நவீனத்துவ சிந்தனைகள் என்கிற வகையில்தான் அணுகமுடியும்.

ஆனால் இன்றைய அரசியல் சூழல்களில், அரை நூற்றாண்டுகளுக்கு முன் பெரியார் துணிந்து முன்வைத்த வாதங்களிலும் கலகங்களிலும் பாதியைக் கூட பொதுவில் வைக்க முடியாத நிலையிலேயே நாம் இன்று வாழ்கிறோம் என்பதே உண்மை. நமது பேச்சுரிமையையும் எழுத்துரிமையையும் மதம், இனம், நாட்டு இறையாண்மை, போன்ற பல்வேறு காரணங்களின் வழி கட்டுப்படுத்தப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. மதமும் அரசியலும் ஒன்றர கலந்த நிலையை அதிகாரவர்க்கம் வலுக்கட்டாயமாக சமுதாயத்தின் மேல் திணிக்க முயலும் சூழலே இன்று பல வளரும் நாடுகளின் அரசியலாக உள்ளது. சமய வெறியையும் இன வெறியையும் அரசியலாக்கி ஆதாயம் தேடக்கூடிய பணியையே பல அரசியல் கட்சிகள் சமுதாய அக்கரை என்ற போர்வையில் முன்னெடுக்கின்றன. இந்தியாவிலேயே, மதச்சார்பின்மை கொண்ட அரசியலை நிலை நாட்டுவதில் இன்று பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளதை காணமுடிகிறது. 1950-களில் தீவிரவாதிகள் என்றும் மதவெறியர்கள் என்றும் கருதப்பட்ட ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி போன்ற அமைப்புகள் இன்று மக்களை வழிநடத்தும் தலைமைக்கு வந்துள்ளதே இதற்கு போதுமான எடுத்துக்காட்டு.

பெரியார் முன்வைத்த பகுத்தறிவு சிந்தனை என்பது 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய அறிவுலகம் முன்வைத்த எம்பரிகல் மற்றும் எக்ஸ்பெரிமென்டலீசம் (Empirical and Experimentalism) போன்ற சிந்தனை மரபுகளின் வழியாக வந்திருக்க கூடியதே என்பது தெளிவு. ஆங்கில அறிவுலகில் மக்கள் சிந்தனை செய்யும் பாங்கும் நவீன சமுதாயமாக அவர்கள் மாறிவரும் வேகமும் அவரை கவர்ந்தன. ஆங்கிலமொழி தன் தொன்மைகளை மட்டும் நம்பிக் கொண்டு செயல்படாமல் சமகால அறிவியல் மொழியாகவும் பொருளாதார மொழியாகவும் மேலோங்கி இருப்பதை முன்மாதிரியாக கொண்டு தமிழ் மொழியும் தன் தோற்றத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறினார். ஆரிய மாயையில் இருந்து தமிழ் இனம் விடும்பட ஆங்கில கல்வி மிக முக்கியம் என நம்பினார்.

1920களில் தமிழ் மொழி முழுதும் பார்ப்பனர் கட்டுப்பாட்டிலும் முதலியார், பிள்ளைமார் போன்ற உயர்சாதி தமிழர்களின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. எழுத்தறிவற்ற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழ் மொழியோடு விலகியே இருந்தனர். அயோத்திதாசர் போன்ற ஒரு சில அறிஞர்களின் ஆக்கங்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

மேல்தட்டு புலவர்களின் கையில் சிக்கியிருந்த தமிழ் அதன் வழமை குன்றி பிராமண ஆதிக்க கருத்துகளை தமிழ் உலகுக்குள் கொண்டு செலுத்தும் கருவியாகவே பயன்பட்டு வந்தது. தமிழர் சமுதாய நலன் குறித்தோ அவர்களை மேம்படுத்தும் கவனம் கொண்டோ அது செயல்படவில்லை. (பாரதியின் பாடல்கள் விதி விலக்கு என்றாலும் அது தேசியமயத்தை உயர்த்துவதாக இருந்தது) தமிழ்மொழி என்றும் உயிர்ப்புடன் முன்னெடுத்துச் செல்லுவதற்கு பதிலாக அது புனிதம் என்றும் தெய்வீகம் என்றும் பல கற்பிதங்களைச் சுமந்து ஒரு சிறு வட்டத்துக்குள் அமுக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. தமிழ்மொழி கடவுளே பேசி மகிழ்ந்த மொழி என்று கூறிக்கொண்டாலும் அதன் சமகால நிலையையும் வளர்ச்சியையும் அறிஞர் பெருமக்கள் விரிவுபடுத்தவில்லை. சிற்றிலக்கியங்களும், புராணக்கதைகளும் மீண்டும் மீண்டும் இறைத்துதியையும் தனிமனிததுதியையும் பரப்பவே இயற்றப்பட்டனவே அன்றி விரிவான மொழி ஆய்வுகளோ, சமுதாய அறிவியல் ஆய்வுகளோ செய்யப்படவில்லை. மேலும் தமிழ் புலவர்கள் சாதியால் பிற்படுத்தப்பட்ட தமிழர்களின் வாழ்வியலை தமிழுக்குள் கொண்டுவரும் எந்தவித முயற்சியையும் செய்ததில்லை. இதன் காரணமாகவே தமிழ் மொழியை அவர் ‘காட்டுமிராண்டி மொழி’ என்று மிகக்கடுமையாக சாடினார்.

இன்று அவர் ஒரு கன்னடன் என்னும் காரணத்தாலேயே தமிழை அவ்வளவு துச்சமாக கூறினார் என்று சொல்வோர், பெரியார் தன் வாழ்நாளில் கடைசிவரை தமிழிலேயே எழுதியும் பேசியும் வந்தார் என்பதை மறந்துவிடுகின்றனர். அதோடு அவர் திராவிட குடும்பத்தின் ஒரே மொழி தமிழே என்று ஏற்றுக்கொண்டவர். ஆனால் அவர் தமிழுலகு மரபாக கொண்டாடிய மொழிப்பற்று என்பதையோ மொழியின் தெய்வீகத்தன்மை என்பதையோ ஏற்பவர் இல்லை. எல்லா மொழியும் மனிதத்தொடர்புகருவியாக மட்டுமே செயல்படுகின்றன என்றும் அதற்கு மேல் மொழியில் ஒன்றும் இல்லை என்பதுமே அவர் வாதங்களாக இருந்தன. ஆகவே அவர் கன்னடவெறியின் காரணமாகவே தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்றார் என்னும் பேச்சுக்கே இடமில்லை என்றுதான் கூற முடியும். இன்றைய அரசியல், உலகியல் பார்வையோடு வரலாற்று நிகழ்வுகளை சமன் படுத்தி ஒப்பிடுவது மிகப்பெரிய தவறாகும்.

ஆயினும் பெரியாரின் கருத்துப் போராட்டங்கள் தெளிவில்லாத நிலையை அடைந்த இடங்களையும் அரசியல் அடிப்படையில் தமிழ் நாட்டு தமிழர்களுக்கு சில பாதகமான சூழல்களை விட்டுச் சென்றிருப்பதையும் நாம் மறந்துவிட முடியாது. பெரியாரை விமர்சிப்பதே மாபெரும் குற்றச்செயலாக என்னும் சில அரைவேக்காட்டு ‘திராவிட வெறியர்கள்’ இன்று பெரியாரை தனிமனித துதி பாடி தெய்வமாக்கும் அசட்டுத்தனத்தையே செய்துவருகின்றனர். இது பெரியார் முன்வைத்த பகுத்தறிவுச் சிந்தனைக்கு முற்றும் முரணான செயல் என்பது தெளிவு. பெரியார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மனிதன் அல்ல. அதை அவரே பலமுறை கூறியும் இன்று சமுதாயத்தில் பெரியாரின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தவும் தங்களைச் சமுதாய பற்றாளர்களாகவும் மிகச்சிறந்த அறிவாளிகளாகவும் பிம்பங்களை உருவாக்க முயல்வோர் சிந்திப்பதில்லை.

பெரியார் முன்னெடுத்த போராட்டங்களில் மிகவும் சிக்கலான பகுதியாக இன்று எஞ்சி இருப்பது, அவர் திராவிட இனம் என்று கொண்டாடிய இனக்குழுவில் பல மொழி பேசும் மக்களும் இருந்ததும் அவர்கள் பின்நாளில் தங்களை தங்கள் தாய்மொழி வழி மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ள முன்வந்ததும் ஆகும்.

1956-ல் இந்திய அரசு மொழிவழி மாநிலங்களை அமைத்த போது சென்னை மாகாணம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ் நாடு என்று மொழியை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டன. அரசியல் சட்டப்படி ஒரு மொழியை தங்கள் பேச்சுமொழியாக வரித்துக் கொண்டவர்கள் அவர்களின் மொழி மாநிலங்களில் பிரஜையானார்கள். கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தோர் பெரும்பான்மை தங்கள் தாய்மொழி வழியே நின்றார்கள்.

ஆனால், தமிழ்நாடு பகுதியில் குறிப்பாக நகர்புறங்களில் பல வெளிமாநிலத்தார் தங்கள் தாய்மொழி பற்றோடு தமிழ் நாட்டு பிரஜைகளாகவும் வாழத்தொடங்கினார்கள். அவர்களை பழைய வழக்கப்படியே ‘திராவிடர்’ என்ற அரசியல் கண்ணோட்டத்திலேயே தமிழ் நாடு ஏற்றுக் கொண்டது. அதேப் போல் தமிழ் நாட்டு தமிழனுக்கு உள்ள அனைத்து சலுகையும் உரிமையும் தமிழ் நாட்டில் வாழும் புதிதாய் குடியேரும் அனைத்து இந்திய மக்களுக்கும் உண்டு என்ற திரந்த கொள்கையைத் திராவிட அரசியல் வகுத்தது. அதாவது பெயரளவில் தமிழ் நாடாக இருந்தாலும் அது உள்ளீட்டில் திராவிட நாடாகவே செயல்பட்டது

ஆகவே பெரியார் தென்னாட்டு மக்களை திராவிட கட்டுக்குள் வைத்துப் பேசிய கருத்துக்கள் அத்துடன் சார்புநிலையில் மிகப்பெரிய மாறுதலை சந்தித்தன. திராவிட கட்டுக்குள் தென்னாட்டு மக்களை ஒன்றிணைக்க நினைத்ததை தமிழர்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டதை உணர முடிகிறது. அவரின் தாய்மொழி மக்களான கர்நாடக மக்களாலேயோ, தெலுங்கர்களாலேயோ, மலையாளிகளாலேயோ முழுவதும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையே வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை. பெரியார் வலிந்து சென்னை மாகாண மக்களை திராவிடர்கள் என்று கூறினாலும் தமிழர் அல்லாத பிறர் அச்சொல் (திராவிடன்) தங்களையும் உட்படுத்துவதை ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியாரின் நிலைப்பாடு இங்குதான் தெளிவில்லாத இடத்தில் நிற்பதை பார்க்க முடிகிறது. 1959க்குப் பிறகு தமிழ் நாட்டில் தமிழர் நலம் பேசி இருக்க வேண்டிய சூழலே மிகுந்திருந்த போதும் தொடர்ந்து திராவிட அரசியல் பேசியது ஒரு முரணே.

இக்கால கட்டத்தில் சி.என் அண்ணாதுரை தி.மு.கவை மிகவும் ஜனரஞ்சகமான அரசியல் கட்சியாகவும், பெரியார் உருவாக்கிய மூல கருத்துக்களில் இருந்து வெகுதூரம் விலகி சென்று விட்ட நிலையிலும் நடத்திக் கொண்டிருந்தார். அவரது அரசியல் தேவைக்கு ‘தமிழர்’ என்ற சொல்லைவிட ‘திராவிடர்’ என்ற சொல்லே மிகவும் பொருத்தமாக இருந்தது.  ஆனால் பெரியாருக்கு அப்படி ஒரு தேவை இல்லாத நிலையில் தமிழ் நாட்டில் பிற மாநிலத்தாரின் கை ஓங்குவதை அவரே சில முறை வெளிப்படையாக பேசியுங்கூட திராவிட இனக் கொள்கையை அவரால் விட்டுக் கொடுக்க முடியாததற்க்குக் காரணம் அவருக்கு இருந்த பிராமண அச்சம்தான் அன்றி வேறில்லை. தமிழன் என்ற கட்டமைப்பின் வழி ஆரிய ஆதரவாளர்களும் பார்ப்பனர்களும் தமிழ் மக்களோடு கலந்து தன் போராட்டங்களை சிதைத்து விடுவார்கள் என்று அவர் அஞ்சினார். ஆனால், திராவிடன் என்ற பொதுப் பெயரின் வழி பிற மாநிலத்தவர்களும் தமிழ் நாட்டில் ஊடுருவி தமிழ் நாட்டு தமிழர்களின் உரிமைகளை பரித்துக் கொண்டு விட முடியும் என்ற எதார்த்த அரசியலை அவர் கவனப்படுத்தவில்லை.

ஆயினும் பிற திராவிட மாநிலங்களில் நிலை சற்றே வேறுபட்டு இருந்தது. அங்கு அந்தந்த மண்ணின் மைந்தர்களுக்கு அரசியல், வேலை வாய்ப்பு, சொத்து முதலீடு, வியாபாரம் போன்ற பல விடயங்களில் முன்னுரிமை வழங்கப்பட்டது. அரசாங்க வேலைக்கு மண்ணின் மைந்தர்களே தகுதியானவர்கள் என்ற இனக்கொள்கையை கர்நாடகம் போன்ற மாநிலங்கள் சட்டமாகவே கொண்டு செயல்படுத்தி வருவது குறிப்பிடத் தக்கது. மலையாள மொழியை கற்காதவர் கேரளாவில் அரசாங்க வேலைகளில் இணைய முடியாது என்ற சட்டம் உள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் தமிழ் மொழியை அறியாமலே ஒரு குடிமகன் உயர்ந்த பதவிகளை வகிக்க முடியும். தமிழ் நாட்டில் அண்ணாதுரைக்குப் பிறகு பிறப்பால் தமிழர் அல்லாத எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலித்தா, மு.கருணாநிதி போன்றோர் முதல்வரானாலும் அண்டை மாநிலங்களில் ஒரு தமிழருக்கும் அரசியல் உயர் பதவிகளில் வாய்ப்பு கிடையாது என்பது நல்ல உதாரணம்.

இதில் மு.கருணாநிதி அவர்கள் தெலுங்கு பின்னனி உள்ளவர் என்பது புதிய கண்டுபிடிப்பு. இக்கண்டுபிடிப்பில் உள்ள அபத்தம் என்னவென்றால் கருணாநிதியின் ஏறத்தாழ ஐந்து தலைமுறைகளுக்கு முன்பட்ட முன்பரம்பரையினர் தெலுங்கு இசை வேளாலர் சாதியைச் சார்ந்தவர் என்பதாகக் கூறுவதுதான். அதற்கான எவ்வித தரவுகள் உள்ளன என்பது சந்தேகத்திற்குறியது. அப்படியே இருந்தாலும் அதன் பின் பல தலைமுறைகளாக அவர் தமிழராகத்தான் வாழ்ந்து வந்துள்ளார். ஒரு தனிமனிதனின் இனத்தை முடிவு செய்ய இப்படி பலதலைமுறைகள் கடந்து சென்று ஆய்வு நடத்துதல் முறையா? சாத்தியப்படுமா? போன்ற கேள்விகள் நம்மை குழப்புகின்றன. ஒவ்வொரு தமிழ் நாட்டு குடிமகனின் இனமும் இவ்வகையில் ஆய்வுக்கு உட்படுத்தபடுதல் எங்கே கொண்டு விடும் என்று சிந்திக்க வேண்டாமா? இவ்வாறு அந்நிய இனத்தவர் பலரும் ஆண்ட தமிழகம் மற்றும் மலேசிய குடிமக்களை கணக்கில் எடுத்துப் பேசினால் அத்தனிப்பேரும் எல்லா தலைமுறையிலும் ரத்தக்கலப்பற்ற சுத்த தமிழராக இருப்பதை உறுதி செய்ய முடியுமா?

இன்றும் வேற்று மாநிலத்தில் பிறந்து வளர்ந்த தமிழர் அல்லாதவர்கள் குறிப்பாக  சினிமா கலைஞர்கள் பிழைக்க வந்த தமிழ்நாட்டில், தங்களுக்கு இருக்கும் மக்கள் கவர்ச்சியைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகளைத் தொடங்குவதும், தமிழர்களின் தலைவர்களாக தங்களைக் காட்டிக் கொள்வதும், மொழி, இனம், பண்பாடு, போன்ற விடயங்களில் மூக்கை நுழைத்து அறிவுரைகள் கூறுவதும் போன்ற கேளிக்கூத்துகள் நடைபெறுவதைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் இந்நிலையை கற்பனையும் செய்து பார்க்க முடியாது. திரைப்படத்துறையில் இருந்து ஓர் ஆளுமையைத் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்றாலும் ஆந்திரர்கள் என்.டி ராமாராவைத்தான் தேர்வு செய்தார்கள் என்பதை ஒரு உதாரணமாகக் குறிப்பிட முடியும்.

மொழிவழி மாநில பிரிவுக்குப் பின் பெரியார், திராவிட கருத்தை மீட்டுக் கொண்டு “தமிழ் நாடு தமிழருக்கே” என்ற அவரது 1938-ஆம் ஆண்டு அரைக்கூவலைத் தெளிவாக தொடர்ந்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் மொழிவழி மாநிலங்கள் அமைந்த பின்னரும் தொடர்ந்து சில நேரங்களில் தமிழர் என்றும் பல நேரங்களில் திராவிடர் என்றும் அவர் பேசியதால் தமிழ் மக்கள் இன்றளவும் இனச்சிந்தனையில் தெளிவற்று வாழ்கிறார்கள். “வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு” என்ற புகழ் வார்த்தைகள் இன்று “வந்தாரை மட்டும் வாழவைக்கும் தமிழ் நாடு” என்ற குத்தலாக மாறியதற்கு திராவிட அரசியல் கடைபிடித்த இரட்டை போக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

ஆயினும் இந்த அரசியல் குறைகளை முழுதும் பெரியாரின் மேல் ஏற்றுவது சரியான அரசியல் கண்ணோட்டம் ஆகாது. பெரியார் முன்னின்று நடத்திய சமூக கிளர்ச்சிகளை அரசியல் மயமாக்கியவர் சி.என்.அண்ணாதுரையாவார். வசீகர மேடைப்பேச்சு, ஜனரஞ்சக திரைப்பட கலைஞர்களின் அலங்காரம், தமிழ் அறிஞர்களின் எழுத்துப் பணி போன்ற சாதனங்களின் வழி திராவிட அரசியலை ஜனரஞ்சக அரசியலாக மாற்றியவர் அவர். பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளையும் பல சமரசங்களின் வழி ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் சைவ சமய கோட்பாட்டுக்குள் கொண்டுபோய் தலைமுழுகியவரும் அவர்தான். திராவிட அரசியலை தமிழ்த் திரைப்படத்துறையின் புகழிடமாக மாற்றியவரும் சினிமா வெளிச்சத்தைத் தனிமனித வழிபாட்டு அரசியலாக்கும் கலையாக வளர்த்தெடுத்தவரும் பேரறிஞர் சி. என் அண்ணாதுரைதான்.

பெரியார் முன்னெடுத்த சமுதாய கலகங்கள் முழுமை பெறாமல் போனதற்கு பலரின் அரசியல் சுயநலன்களும் காரணமாகின்றன. இன்றைய அரசியல் கண்ணோட்டத்தில் அவரின் அரசியல் நகர்ச்சிகள் சில குழப்பங்கள் உள்ளவை என்பது தெளிவு. குறிப்பாக பிராமண ஆதிக்க பதற்றத்தில் அவர் தமிழனை தனித்து அடையாளம் காட்டாமல் விட்டது இன்று தமிழ்நாட்டு அரசியலில் தமிழர்க்கு சில பின்னடைவுகளை கொண்டு வந்திருப்பதை மறுக்க முடியாது. தமிழ் நாட்டில் இன்று பிராமண ஆதிக்க இந்துதுவா கட்சிகளுக்கு இருக்கின்ற ஆதரவு கூட தமிழர் நலம் பேணும் திராவிட ஒட்டு இல்லாத கட்சிகளுக்கு இல்லை என்பதே உண்மை. இந்நிலை தமிழர் நலம் பேணும் தலைவர்களுக்கு மிகுந்த அயர்ச்சியைத் தருவது இயல்பு.  பிற மாநிலங்களில் இன மொழி அரசியல் பிடிப்பு முற்றிலும் வேறாக இருப்பதும் குறிப்பிட தக்கது.

ஆயினும் அரசியல் தளத்தைவிடுத்து சமுதாய தளத்திலும் பெரியாரின் பணிக்கு முக்கியத்துவம் இல்லை என்று தமிழ்த் தேசியவாதிகள் சொல்வதையும் ஏற்க முடியாது. ஐம்பது ஆண்டு வரலாற்றில் மக்களின் கல்வி வளர்ச்சியும் சமுதாய கண்ணோட்டமும் வெகுவாக மாறிவிட்ட நிலையில் பெரியார் முன்வைத்த பகுத்தறிவு, தன்மான கருத்துகளை மொத்தமாக புறக்கணிப்பது என்பது அறிவுடையோர் செயல் அன்று. அவர் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று இழிவு படுத்தினார் என்றும் தமிழ்ப்புலவர்களை அவமதித்தார் என்றும் கூறி அவரை தமிழ் இனவிரோதி என்று கட்டமைக்க முயல்வதை உணர்ச்சி மேலீட்டால் முன்னெடுக்கப்படும் செயல்கள் என்றே கூறமுடியும்.

பெரியாரின் மொழி, மத பண்பாட்டு தேசிய எதிர்ப்புகள் மையமிட்டு இருந்தது சாதிய விடுதலையிலேயே என்பது உறுதி.

“நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்
நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்
நம் அரசாங்கம் சாதி காப்பாற்றும் அரசாங்கம்
நம் இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம்
நம் மொழி சாதி காப்பாற்றும் மொழி “

என்பதே அவரின் நிலைப்பாடாக இருந்தது. அவரின் எதிர்ப்புகளும் கலகங்களும் அவரின் மேற்கண்ட நிலைப்பாடுகளையே தளமாக கொண்டு எழுத்தவை.

சாதிய மேலான்மைகள், பெண்விடுதலை, தன்மானச் சிந்தனை போன்ற சமூக கருத்துகளை இன்றும் பலரும் பூசி மெழுகிவரும் நிலையிலும் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தும் சூழ்நிலையிலும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படையாக பேசி விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றவர் பெரியார். இன்று அரசியல் பொருளாதார இயலாமையில் திராவிட அரசியல் சிக்கித் தினறுவதை சாக்காக கொண்டு பெரியார் முன்னெடுத்த சமுதாய சிதனைகள் மொத்தத்தையும் கழுவி ஊற்றிவிட நினைக்கும் தமிழ்த் தேசியவாதிகளின் செயல் உள்நோக்கம் கொண்டது என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ் இனம் தலைநிமிர பெரியார்தான் தடைக்கல் என்று கூறும் கருத்துகள் பார்ப்பனீயத்தை மீண்டும் உச்சத்துக்கு கொண்டுசெல்லும் திட்டத்தின் ஒருபகுதி என்றே தோன்றுகிறது. தோழர் குணா தன் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்னும் நூலில் ஆரியம் வேறு பார்ப்பனீயம் வேறு, ஆரிய பார்ப்பணர், தமிழ் பார்பணர் என்றெல்லாம் எழுதுவது நவீன ஆரிய ஆதிக்கத்துக்கு தமிழர்களை தயார்படுத்தும் முயற்சியே ஆகும்.

ஒவ்வொரு இனத்துக்காகவும் மொழிக்காகவும் போராட துணியும் தலைவர்கள் நீண்டகால வரலாற்று பார்வையில் வெவ்வேறு கண்ணோட்டங்களில் விமர்சிக்கப்படுவது உலக இயல்பு. அமெரிக்காவை கண்டுபிடித்தவன் என்று புகழப்படும் கொலம்பஸ், தென் அமெரிக்க பூர்வ குடிகளை ஏமாற்றி நம்மவைத்து அடிமைப்படுத்தியவன் என்கிற மாற்று வரலாற்று பார்வையையும் நாம் ஏற்று கொண்டே ஆகவேண்டும். இந்திய சுதந்திரத்துக்காக ஒரு துறவி போல வாழ்ந்த காந்தியின் அகிம்சை அரசியலை வியந்து நோக்கும் நாம், இந்தியாவில் இன்று நடைபெரும் மதம் சார்ந்த குழப்பங்களுக்கு அவரின் அரசியல் நடைமுறைகளும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட முடியாது. இந்தியாவில் பாகிஸ்தான் உருவாகவும் மத அடிப்படையில் நாடு பிளவுபடவும் காரணமே காந்திய காங்கிரசின் இந்துமதவாத அணுகுமுறைதான் என்னும் குற்றச்சாட்டுகளையும் காந்தி தன் ஆற்றல் வாய்ந்த அகிம்சா முறையை ஏகாதிபத்யங்களுக்கு சாதகமாகவும் சாமானியர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தினார் போன்ற குற்றச்சாட்டுகளும் வரலாற்று மறுவாசிப்பில் வெளிப்பாடுகளாகின்றன.

ஒரு காலகட்ட சூழலுக்கு ஏற்ப ஒரு தலைவனின் முடிவுகளும் செயல்களும் இருப்பதும், அந்த செயல்முறைகள் வேறு ஒரு காலப்பின்னனியில் வேறு பரிணாமம் கொள்வதும் தவிற்க முடியாத சமூக வரலாகிறது. ஆயினும் நல்ல விளைவுகள் கண்டு அத்தலைவனை கொண்டாடுவதும் மாற்றுச் சூழல் கண்டு அவனை வரலாற்றில் இருந்தே நீக்க துடிப்பதும் மிகவும் தவறு. வரலாறு ஒவ்வொரு மனிதனுக்குமான இடத்தை தானே முடிவு செய்து இருத்திக் கொள்கிறது. காந்தியை விரும்பினாலும் வெறுத்தாலும் வரலாற்றில் அவருக்கான இடம் எது என்பதை நாம் மாற்ற முடியாது. அது போன்றே பெரியாரை ஏற்றுகொண்டாலும் ஏற்க்காவிட்டாலும் அவர் வரலாற்றில் தமிழின தன்மானத்தை மீள்சிந்தனைக்கு உட்படுத்தியவர் என்பதை மறுக்க முடியாது. ஆகவே அவரை புகழ்வதன்வழியோ அல்லது தூற்றுவதன்வழியோ மட்டுமே நம்மை நிறுவிக் கொள்ள முடியும் என்ற சூழலில் இருந்து விடுபட்டு இன்றைய அரசியல் சமுதாய கடப்பாடுகளில் கவனம் செலுத்துவதே முறை.

இரண்டாம் பாகம் பெப்ரவரி 2015 இதழில் இடம்பெறும்…

13 கருத்துகள் for “மலேசியாவில் தமிழ் தேசியம் தேவையா?

 1. January 1, 2015 at 2:34 pm

  நீங்களே விளக்கத்தையும் ஆதாரபூர்வமாக சொல்லிவிட்டு மற்றவர்களிடம் அபிப்பிராயம் கேட்பது தேவையில்லை என்பது எனது அபிப்பிராயம்.பெரியார் அன்றைய காலகட்டத்தில் விதைத்தனால் பயன்பெற்ற தமிழர்களை கண்டறிந்து செவ்வியெடுத்து இணைத்தால் இந்தக்கட்டுரை முழுமை பெறும்.நான் பெரியாரின் தொண்டன் கிடையாது ஆனால் பெரியாருக்கு நன்றி சொல்லும் ஒருத்தன்.இருந்தும் தமிழன் என்று மட்டுமே சொல்வேன் திராவிடன் என்று சொல்லமாட்டேன்.இப்பொழுது தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் சரியானபாதையில் பயணிக்கின்றார்களா என்பது கேள்விக்குரியது

 2. January 1, 2015 at 6:15 pm

  மலேசியாவில் தமிழ் தேசியம் என்ற இக்கட்டுரையில் ‘மலேசியா’ என்ற சொல் இதுவரை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த பாகமாவது மலேசியாபற்றி இருந்தால் நல்லது.

 3. வ. புருஷோத்தமன்
  January 1, 2015 at 11:18 pm

  அருமையான பதிவு. இவர்களின் கூத்தை இங்தான் தாங்க முடியவில்லையென்றால்., அங்கேயுமா? அடுத்தப் பகுதியையும் இணைத்திடுங்கள்.

 4. Pon Rangan( Tamilavan)
  January 2, 2015 at 1:08 pm

  தமிழர் தேசியம் என்று ஆரம்பித்த கட்டுரை தடம் புரண்டு… பாருங்கள். 
  பெரியாரியல் பாடம் நடத்துவது இன்னும் தொடரும் என்பதில்…. திராவிட கொடுமைக்கு இந்த தமிழன் இனம் பலியானதை எழுதுங்கள். தமிழர் தேசியம் ; இது தொடர்பில் நான் செம்பரித்தியில் எழுதியமையை பார்க்கவும் உதவும்…தமிழர் தேசியம் என்றால்  தமிழர் ஒரு தேசிய இனம் .இன பண்பாடு இல்லாத அரசியல் கட்டிககணக்கில் கற்கள் கலந்த அரிசிதான். கலப்பதும் களவு எடுப்பதும் தமிழனாகத்தான். காலம் வந்து விட்டது, இதுவரை தோற்றுப்போன திராவிடம் மாற ; தமிழர் தேசிய சிந்தனை மலர உங்களால என்ன முடியும் என்று பாருங்கள் ?

  எதற்கு எடுத்தாலும் தமிழனுக்கு ஒற்றுமை இல்லை !என்று தமிழர்களே சொல்வதை கேட்டு ககேட்டு புளிச்சிபோயி  இத தலைப்பை தொடுகிறேன்.

  எனக்கு என்ன தரம் உண்டு இதை கையில் ஏந்த என்று சில அறிவர்கர்கள் கேள்வி கேக்கலாம் ? உண்மைதான். நியாம்தான். படித்ததை பகிர்ந்து கொள்வதில் தப்பில்லையே !

  வடவேங்கடம் தென்குமரி ஆயிடத்தமிழ்கூறு நல்லுலகத்து …என தொல்காப்பியம் பாயிரம் சொல்லி உள்ளதாம். ஆனால் மரபணு என்னும் அடிப்படியில் இன ஒற்றுமையை தமிழர்களிடம் தொன்று தொட்டு இல்லை , காணோம் என்று சொல்கிறார்கள்.

  காரணம், சமீபத்தில் 1300 ஆண்டுகளாக கட்டிக காத்து வந்த தமிழர்களின் வலிமையானதொரு கலிங்கத்து மன்னர் ஆட்சியை காரவேலன் என்ற இன்னொரு தமிழன் உடைத்து எறிந்தானாம்.

  இதனால் தமிழ் அரசர்கள் ,மன்னர்கள் மத்தியில் தமிழன் உணர்வு மேலோங்கவில்லை. மக்கள் சிந்தனையில் தமிழன் என்ற உணர்வு வளம் பெறவில்லை! குறிப்பாக படித்த அறிவர்கள் ( அறிவாளிகள்)இதை குறையாக போதித்து பாமர மக்கள் மனதில் தமிழன் மீதான நல்ல உணர்வை ஏற்படுத்த வில்லை இதனால் தமிழர்களின் மரபணுவில் இன உணர்வு வளரவில்லை அல்லது அந்த பதிவு இறக்கம் அரை குறையாக இன்று வரை முழுமை பெறவில்லை என்கிறார்கள்.

  பாமர தமிழர்களிடம் அன்பு எனும் உறவு கூட்டுறவு இருந்த அளவு அறிவர்களிடம் இல்லாமல் போய் விட்டது . இதனால் நாம் தமிழர்கள். ஒற்றுமையற்ற இனமாக வாழ்கிறோம். இதற்கு இன்னொரு காரணத்தையும் கண்டறிந்து உள்ளார்கள்.அறிவார்கள் பணம் ,பொருள் தேடி  கல்வி போதனை நடத்தியதால் பாமர மக்கள் முடியாதவர்கள் இந்த இனம் மான  கல்வி கலை காலச்சார சமூகவியல் கூறுகளை கற்காமல் தான் தோன்றி தனமாக கேள்வி ஞானத்தால்  இன்று வரை பல சமய கலாசார குழைவுகளால் இனம் சின்னாப்பின்னமாகா தெறித்துக கிடக்கிறோம் என்ற உண்ம்மையை மறுக்க முடியவில்லை.

  அப்படி அறிவார்கள் படித்தவர்களால் சரியான கல்வி முறை கலச்சார வழிகள் இருந்து இருந்தால் மன்னர்கள், மக்கள் ,சமுதாயம் ,இனம், மொழி, என்ற கூட்டுறவு வாழ்திருந்தால் ஒரு மரபணுமிக்க இன மான தமிழன் என்ற ஒற்றுமையில் நாடு மண் தமிழன்  வென்று வந்திருப்பான்.

  சந்தர்ப்ப வாதியான ஆரியரின் என்ற “சமயன் ” சமயம் என்ற சுய பய போதனையில் நேரம் பார்த்து  ஜாதி வழி போதனையில் நம்மை  பிரித்து ஆளுமைக்கு நாம் வயப்பட்டதால் இன்று தவிக்கிறோம். நமது வாழ்வியல் நெறிகளான  அச்சம் ,மடம், ஞானம், பயிர்ப்பு ,கடமை, கண்ணியம், கட்டுபாடு என்ற விந்தைகளை சொல்லாமல் ….கடவுள் பயம், கர்ம வினைப்பயன் என்று, நகரம் என்றும் சொர்க்கம் என்றும் வாழ்வில பயத்தை ஊட்டி தமிழர்களை கோழைகளாக   பலவித சமய சாம்பிராணி போட்டு ஒரு வித புகை மாயையில் நம்மை பிரித்து பிரிவு பகைமை எனும் மரபணு உள்ளே புகுந்து மயக்கி நமது ஒற்றுமை வலிமையை குழைத்து இன்று வரை மீளமுடியாமல் தவிக்கிறோம்.

  இதில், இன்று முளைத்த புதிய சுவாமிகள்  கொட்டம் வேறு நம்மை கூட்டம் கூட்டமாய் பஜனை பாடி மோசமாகி விட்டுள்ளது. சோம்பேறிகள் உட்காந்த இடத்தில சம்பாதிக்க நாமெலாம் நாடோடிகள் போல உழைத்து சாமி வரம் ,வரன் ,வரவு தந்து இவங்களுக்கு வாழ்வாதாரம் காட்ட வேண்டும்.

  தமிழன் உணர்வை உறவை நமது ஒருமித்த கலாசார பெருமைகளை வளர்க்கவோ பரப்பவோ இவர்கள் உழைப்பதில்லை. ஆரியன் கூட்டம் பணம் எனும் காரியத்தில் கண்ணை வைத்து தென்னக தமிழனை சுரண்டுவதிலே ஜாதியையும் பலதர சமய குழப்பங்களை நம்மில் விதைத்து சுகம் காண்கிறான். இதனால் நமது அடிப்படை இன மரபணு கருவில் புகுந்தும் விளையாடி விட்டான்.

  தமிழகத்து மீதும் தமிழ் ஈழம் மீதும் படை எடுத்த மாற்றான் தமிழனின் இனப பிரிவை கருவிலே கலைத்து நமது நமது தாய் தந்தையர் மண்டை எனும் மூளை முதல் தர மரபணுவில் விசக்குருதியை கொடுத்து கெடுத்து இன்று பைத்தியங்கள் போல இனப்பற்று அற்று திரிகிறோம்.

  தமிழையும் தமிழனையும் இந்த இந்திய இனம் ஓரங்கட்டுவதை காலங் கடந்தே உணர்துள்ளோம்.இப்படி அரை குறை கருவுற்ற தமிழனிடம் தமிழர் தேசிய உணர்வை ,அரசியல் அரசு ஆளுமை உணர்வை, பெற முடியாமல் தத்தலிக்கிறோம் .

  ஆதிததமிழனின் கருவில் திராவிடனும் ஆரியனும் செய்த கரு மரபணு கருகலைப்பு ஆதிக்கம் இன்றும் பல கோணங்களில் தொடர்கிறது. இதற்கு அடிப்படை காரணமே நம் தமிழ் மொழி மீதுள்ள ஆன்மிக மொழி பொறாமை என்றால் மிகை இல்லை.

  • அ.பாண்டியன்
   January 2, 2015 at 11:27 pm

   திரு. பொன் ரங்கன் அவர்களே, உங்கள் பதிவை வாசித்தேன். ஆனால் உங்கள் கருத்தை தெளிவாக புரிந்துகொள்ள முடியவில்லை. ஆயினும் இக்கட்டுரை தடம்புரண்டு பெரியாரியல் பாடம் நடத்துவதாக கூறுவதை மறுக்கிறேன். இக்கட்டுரை ஐந்து பெரிய தலைப்புகளில் அமைந்தது. விரிவாக எழுதியதால் பக்கங்கள் கூடிவிட்டன. ஆகவே இரண்டு பகுதிகளாக பிரித்து பதிவேற்றம் செய்துள்ளார் ஆசிரியர். மலேசியாவில் தமிழ்த்தேசியம் என்னும் மையகருத்துக்கு திடீர் என்று புகமுடியாது. அதன் வரலாறு, பின்புலம் போன்ற பல கூடுதல் தகவல்கள் தேவை. தமிழ்த்தேசியம் என்ற கருத்தாக்கம் திராவிட கருத்தாக்க விளக்கம் இன்றி தெளிவுபடாது. திராவிட கருத்தாக்கம் என்பதை பெரியாரை விடுத்து பேசமுடியாது. ஆகவே மலேசியாவில் தமிழ்த்தேசியம் என்னும் மையகருத்துக்குச் செல்லும் முன் வரலாற்று தெளிவு இன்றியமையாததாகிறது. அதன் பொருட்டே இக்கட்டுரை திராவிட பெரியாரியல் தகவல்களை முதலில் தருகிறது. பொருமையாக வாசியுங்கள். பதற்றம் வேண்டாம். உங்கள் அவசரம் இக்கட்டுரையின் சாரத்தை நீங்கள் புரிந்து கொள்ள தடையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்த தொடரில் பேசப்படும் கருத்துகளுக்கு இம்மாத கட்டுரை பின்புலமாக அமையும். அதோடு அறிவு தேடலில் முனைந்திருக்கும் இளையோருக்கு தமிழினம் தொடர்பான முழுமையான தகவல்களும் கிடைக்க இக்கட்டுரை வழிகோளும்.

   அடுத்து, பல இடங்களில் ‘மரபணு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளீர்கள். எனக்கு அவை புரியவில்லை. நீங்கள் எத்தனை தமிழர்களின் மரபணுவை சோதனை செய்துள்ளீர்கள் என்று எனக்கு குழப்பமாக உள்ளது. இனமான உணர்வை மரபணுவின் வழி கண்டறியும் முறையை நான் இன்னும் வாசித்ததில்லை… நீங்கள் அத்துறையில் நிபுணராக இருக்கக் கூடும் என்பதால் விரிவாகவும் பிழைகள் இன்றி தெளிவாகவும் எழுதுங்கள். பலருக்கும் பயனாக இருக்கும்.நன்றி
   அ.பாண்டியன்

 5. Pon Rangan( Tamilavan)
  January 3, 2015 at 4:19 pm

  பாண்டியன் சார் !என் அந்தக கட்டுரை வேறு தலைப்பில் வந்தது. ஒரு சாயலுக்கு பதித்தேன். நேரமின்மையால் மலேசியா தமிழ் தேசியம் தேவையா ? என்ற கட்டுரைக்கு நேராக பதில்
  எழுதவில்லை. இப்போது சுருக்கமாக தொடுகிறேன். கருத்துப்பிழை பாரும் எழுத்துப்பிழைகளை
  கவனிக்க பொறுமை இல்லை.தமிழில் முனைவருமில்லை. தமிழ் இன  முன்னோடி மட்டுமே !

  முடிந்தால் இந்தககட்டுரையாளர் 1920 களில் திராவிடர்கள் நடத்திய தமிழ் நீதிககட்சி மாநாட்டு அடிசுவற்றில் இருந்து வந்தால் தமிழ் தேசியம் என்ற கதை மறைத்த ஊடல் புரியும்.  அன்றே தமிழ் தேசியத்தை தமிழ் நீதிக்கட்சியை விரும்பாத ஈ வே ரா போன்ற தெலுங்கர் பார்ப்பனியர்கள் தமிழ்
  இனத்தை சமய பக்தியில் விட்டு இருந்தால் இன்று தமிழர் தேசியமும் தமிழர் நாடும் என்ற இன உரிமையாவது இருந்து இருக்கும்.  தமிழ் நாடு /தமிழ் மாநிலம் / என்ற மொழி சார்பு இந்திய குடி
  அரசியலில்  இரண்டும் மாயைகள்.  இன வரி “தமிழர் நாடு” இன சார்பு மண்ணுரிமை இல்லாமல்
  தமிழர் தேசியம் அரசியல் இப்ப உள்ள திராவிடர் அயலவன் குப்பையில் என்ன சாதிக்க போகிறது ?  

  இளஞ்செழியன் கேட்டது போல மலேசியா தமிழர்களுக்கு தமிழர் தேசியம்  அல்லது தமிழ் தேசியம் அரசியலை அலசுங்கள். பெரியார் கதை கேட்டு இந்த தமிழன் நொந்தது போதும்! தமிழர்  நாட்டை தமிழர்கள் ஆள முடியாமல்  பெரியார் திரை மறைவில் அரசியல் கூறு போட்டதும் போதும். 
  நன்றி மீண்டு (ம்)வருவேன்.

  இயக்குனர் 
  உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா 
  உ. தலைவர் நாம் தமிழர் மலேசியா 

 6. Pon Rangan( Tamilavan)
  January 4, 2015 at 11:19 am

  ஐயா ஆ பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.
  தமிழர் தேசியம் தேவையா என்ற தங்கள் தலைப்பு
  காலத்துக்கு ஏற்ப உலக மைய சிந்தனையில் இருக்க வேண்டும்
  என்று ஆசைப்படுகிறோம்.பழமை தனி மனித புகழ்ச்சிகளும் இன்றுவரை இதரவர் திராவிடத்தால்
  தானும் தோற்று தமிழனையும் (ஒரு மரபணு இனத்தை) தோற்கடித்த 1950 க்கு பின்னோக்கிய இதரவன் (திராவிடன்) அரசியல் மீண்டும் பதிவுக்கு வேண்டாம். இதற்கு முன் திரு நவீன் அவர்களும் தமிழனக்கு தனி அரசியல் தோற்கும் என்ற ஒரு பேட்டிடையை தந்துள்ளார். பார்க்கவும்.

  தமிழர் தேசியம் ..தேசியம் என்ற வார்த்தை கூட தமிழல்ல என்ற விவாதம் உண்டு. வெறும் மாநிலமாக உள்ள தமிழ் மாநிலத்தை நாடு என்று உலரும்(ஏமாற்றும் ) கூட்டத்தில் தமிழர் நாட்டில் அரசியல் ரீதியாக தமிழர் தேசியம் என்ற மூன்றாம் அணி உருப்பட் வாய்ப்பு உண்டா ? மலேசியாவில் அது வாழுமா என்று பாருங்கள்…..பாராட்டுகள். மலேசியாவில் Party Tamilar Thesiyam என்ற பதிவும் நிராகரிப்பில் உள்ளது. தமிழ்/ தமிழர் என்ற வார்த்தையை பயன் படுத்த முடியாதாம்.

  மேலும் அடிப்படையில் தமிழ் நாடா /தமிழர் நாடா / மலேசியத் தமிழர் என்ற பதிவு அரசியலாக வேண்டும் தண்டவாளத்தில் உங்கள் கட்டுரை பயணம் இலக்கு நோக்கி இருந்தால் நலம்.

  இதனுடன் செம்பருத்தியில் ஒரு கோயம்புத்தூர் காரருடன் நடந்த என் கருத்து பரிமாற்ற பதிவை இணைகிறேன் ..பார்க்கவும் நன்மைகே என்ற ஆதார ஆய்வுக்கு மட்டுமே நன்றி.

  “கோயம்புதூர் உதயகுமார் மலையாளிபோல ! இப்போது உனக்கு நேராகவே எழுதுகிறேன்..!
  திராவிடம் என்பதை தெலுங்கர் ,மலையாளி ,கன்னடர் என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். தமிழனுக்கு தமிழன் என்ற பெயர் அதையும் தாண்டி ஆதித்தமிழன் என்ற லுமேரிய ,குமரிகண்டம் கால தமிழனுக்கு திரவியன், திரவிடன், திராவிடன் என்ற பொருளற்ற பேர் தேவை இல்லை. நீர் மேற்சுமத்திய அனைத்தும் கற்பனை .தமிழ் மொழியியல் வல்லமையில் ஏய்க்கும் இந்த திராவிட குணம்தான் இன்று தமிழன் ஏமாந்து போகக்காரணம்.

  இப்படி தமிழர்களை முட்டாளாக்கியா உங்கள வந்தேறிகள் தனம் எங்களுக்கு இதுவரை எதையும் கொடுக்கவில்லை ஆனால் அலிபாபா போல திருடியதுதான் அதிகம்.
  தமிழ் நாட்டின் வந்தேறிகள் என் பாசையில் இதரவர்கள் திராவிடம் என்ற மனோவியல் மதிப்பில் தமிழர்களை ஏமாற்றி தமிழ் நாட்டின் ஆட்சி ஆதிக்கத்தில் அதிகாரத்தில் அரசு பணிகளை மண்ணையும் பொருளாதாரத்தையும் கல்வி பெருந்தொழிகளையும் தமிழர்கள் போர்வையில் கைப்பற்றி ஏறியவர்கள்.

  தமிழர் நீதிக்கட்சியை திராவிடர் கட்சியாக மாற்ற நடந்த சதி எல்லாம் இங்கு எழுதி தீராது….பெரியார் சிந்தனை தொகுதி -2 இயக்கங்கள் -1 பக்கம் 899 குடியரசு 29/01/1944 உரையில் பெரியார் திராவிடம் பார்பனர் எதிர்ப்பு என்று எங்கும் குறிப்பிடவில்லை . மாறாக தமிழர் என்றால் உங்கள் இதரவர்கள் ஏற்ற்றுகொள்ள மாட்டார்கள் என்று திராவிட சமுதாயம் என்று தமிழர் நாட்டில் வைக்க வேண்டிய அவசியமென்ன?
  தமிழன் முந்தியா திராவிடன் முந்தியா? உன் திராவிடனுக்கு என்ன தாய் மொழி ? நீயும் உன் பெரியாரும் பேசியது எங்கள் தமிழ் தானே !?

  அப்போது பேசியது திராவிட நாடு என்று சென்னை மாகாணம் மட்டுமே ! ஏன்? அதில் ஐதராபாத் நிசாம் ,மைசூர் சமாதானம்,திருவாங்கூர் கொச்சி சமாதானம் இல்லை ,அப்பாடியானால் திராவிட நாடு என்று கேட்ட முழு தமிழ் பகுதியும் ,சிறு தெலுங்கு பகுதியும் ,சிறு கனடா பகுதியும், சிறு மலையாலபகுதியும் இருந்தது. தமிழின முழுதாயகத்தை இழந்து சிறு பகுதிகளை கொண்டிருந்த தெலுங்கு, கனடா, மலையாளிகளுக்கு தமிழன் என்ற இனத்தின் பெயரையும் தமிழ்நாடு என்ற மாநில பெயரையும் இழக்க நேர்ந்தது என்ன அநியாயம்?

  தொன்மையான் தமிழர்களுக்கு திராவிடன் என்ற கலப்பு இன கலப்பு மாநிலம் இழி நிலை ஏற்பட எங்கள் மரபணுவில் கை வைத்த இவனை மன்னிக்க முடியாது.
  திராவிட குழுமத்தால் இதரவர்கள் பயன் அடைத்தது போல மண் உரிமை தமிழன் உறவுகளுக்கு இன்று வரை போராட்டமாகவே உள்ளது?

  ஆம்,,, திராவிட இன வாதம் என்பது தமிழன் மீது இழியவன் நடத்திய திட்டமிட்ட பாசிச இனவாதமே ! பார்ப்பான் ஆதிக்காதை ஒழிக்கிறேன் என்று வடுகர்கள் தமிழனின் தோளில் ஏறியதற்கு முழு காரணம் அந்த ஈனபுததிகாரனின் ஆக்க்ரமிம்பு கொடூரம்தான் காரணம்.

  திராவிடம் என்பது பிற மொழி காரர்கள் ஆதிக்கம் தமிழர்கள் மீதும் தமிழர்களின் இறை நம்பிக்கை மீதும் கை வைத்தால் தமிழர்களை வீழ்த்தலாம் என்பது ஈயின் அடிப்படை அரசியல் தனம். ஆனால் அரசியல் வேண்டாம் அவன் சார்ந்த குள்ள நரிகள் கூட்டத்தை அதில் இணைத்து இன்று வரை திராவிடம் பிறரின் அரசியல் அமைப்பு என்பதை நாங்கள் உணர்ந்து உள்ளோம்.

  ஆம் தமிழர்கள் திராவிட குழப்பக்காரன் குழுமத்தில் இருந்து என்றோ வெளி ஏறி விட்டான். ஆனால் இன்னும் தப்பி ஒட்டிக்கொண்ட மரபணு பாசத்தில் இன்றும் சில வேமானி தலைகள் உளறிக்கொண்டு உள்ளார்கள்.திராவிடம் மரபினமல்ல ,மொழியினமல்ல ,பண்பாட்டு இனமல்ல , நாகரீக மடதனத்தில் சமையத்தை மறுத்து பார்பனை எதிர்ப்பில் எங்களை ஏமாற்றிய கள்ளன். மனிதன் செய்த நாத்திகம் இன்னும் வெல்ல வில்லை அதற்கு அந்த ஆன்மீகமும் ( சக்தி ) ,ஆண்மையும் இல்லை!

  திராவிடத்தால் வடுகர் அரசியல் ஆதிக்கம் எங்கள் தமிழ் மண்ணில் தற்காலிக தளமிட்டுள்ளது…..
  தமிழர்களாகிய நாம் தமிழர் , தமிழர் தேசியம் போன்ற முன் எடுப்புகள் இன்று தமிழ் சொந்தங்களாக 2016ல் திரள்வோம்.
  எங்கள் பகைவன் திராவிடன் இன்று மறைவான் தமிழினத்தை எழிச்சி யுர செய்வோம். உலக அரசியல் அரங்கில் தம் தேசிய இனமே தங்கள் தாய்மொழி இனமே தம் நாட்டை முகமாக கொண்டுள்ளது.அதுபோல 10 கோடி தமிழர்கள் வெளியாகும் நாள் தூரமில்லை. 1920 தமிழனுக்கும் 2020 தமிழனக்கும் உள்ள மரபணு உணர்வை நீ விரைவில் அறிவாய்.

  திரவிடன் என்ற கால் விலங்கும் இந்தியன் என்ற கை விலங்கும் உடைபடும் நாளும் வந்துகொண்டு உள்ளது.மொழி வழி தேசிய நாடுகள் வரிசையில் தமிழ் ஈழமும் தமிழர் நாடும் மலரும் . வானும் மண்ணும் கடல் பரப்பும் அவர் அவர் ஆட்சி அதிகாத்தில் வரும். மொழி வழி தேசியங்கள் உலகம் முழுதும் வளர்ந்து திராவிடம் மண்ணை கௌவும்.

  கணக்கில் வைத்துக்கொள்.தமிழர் நாடு குடியரசை படிக்க, படைக்க அணி சேருவோம் .அப்போது நீ சொன்ன இழி நிலை திருப்பி அடிக்க வேண்டாம் என்று இந்த தமிழன் வேண்டுவோம். காரணம் மானுட உலகில் மனிதன் மட்டும் மனிதானாக நல்ல தமிழனாக பேர் எடுக்க ஆசைப்படுகிறோம்.”
  இனம் வழி “தமிழர் நாடு ” “தமிழ் ஈழம்” தேசிய குடியரசு அமையும்.
  இயக்குனர் ,உலகத தமிழர் பாதுகாப்பு மையம்
  உ.தலைவர் நாம் தமிழர் மலேசியா

 7. அ.பாண்டியன்
  January 4, 2015 at 10:01 pm

  திரு. பொன் ரங்கன் அவர்களே, உங்கள் அவசரம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. முழுமையாக வாசிக்காத ஒரு கட்டுரையைப் பற்றி ஏன் இவ்வளவு முன் முடிவுகளுக்கு வருகிறீர்கள்.? தமிழ் தேசியம் பற்றிய தேடல் உள்ளவர் நீங்கள் ஒருவர் மட்டும் அல்ல. பல புதியவர்களும், இளைஞர்களும் உள்ளனர். ஆகவே எல்லாருக்கும் தெளிவு ஏற்பட முழு தகவலும் கிடைக்கவேண்டும் என்பதே என் நோக்கம். பெரியார், திராவிட அரசியல் பற்றிய வரலாற்று தகவல்கள் உங்களுக்கு தேவையானவை அல்ல என்பதால் மற்றவர்களுக்கும் அவை தேவைப்படாது என்று நினைக்கிறீர்களா? உங்கள் பதிவுகளை நான் செம்பருத்தியில் வாசித்துள்ளேன். அவை குழப்பமானவை என்பதோடு முழுமை இல்லாதவை என்பதையும் உணர்ந்துள்ளேன். தயவுசெய்து முழுகட்டுரையையும் வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவிட்ட்டால் எனக்கும் பிறருக்கும் பயனாக இருக்கும். நன்றி

 8. Pon Rangan( Tamilavan)
  January 5, 2015 at 4:40 pm

  அவசர ஆதங்கம் !

  ஐயா பாண்டியன் சார் ! உங்கள் கட்டுரை தலைப்பு மீது மிககுந்த அக்கறை கொண்டுள்ளேன். தலைப்பும் கட்டுரைகளும் நம் தலை எழுத்தாய் இருக்ககூடாது, காரணம் தமிழ் “மொழ”: சார்ந்தது தமிழர் “இனம்” சார்ந்தது. தமிழ் தேசியம் மொழி சார்ந்தபடியால்  யார் வேண்டுமானாலும் நுழையலாம். தமிழர் இனம் சாந்ததது தமிழர் மட்டும் அந்த தேசியத்தில் நுழைய முடியம் என்பது எங்கள்  அக்கறை. தமிழ் தேசியமா ? தமிழர் தேசியமா என்று முடிவை எடுங்கள்.
  காரணம் இந்த குழப்பத்தில் தான் தமிழகம் உரிமை போராட்டத்தில் உள்ளது. மொழியை காரணம் காட்டி திராவிடர்கள் தமிழகத்தை மேய்ந்துள்ளதால் உரிமையுள்ள தமிழர்கள் தமிழக மாநிலத்தில் அரசையும் அரசியலையும் இழந்துள்ளோம்.

  நீங்கள் யோசித்துள்ள மலேசியா தமிழ் தேசியம் மொழி படலமா? அல்லது தமிழர் இனக் காப்பா ?என்று
  ஐயுறுகிறேன். காரணம் மலேசிய இந்தியர்களிடையே இந்த தமிழ் இனம் பல கோணல் மாணலா கூறு 
  போடப்பட்டு உள்ளார்கள். தன்னை தமிழனா ? இந்தியனா? என்றே புரியாத் கூட்டமாய் உள்ளார்கள். தமிழ் மொழியையையும் இதில்( அரசியல்) விநியோகம் செய்து  விடாதீர்கள்  என்று எச்சரிக்க விருபுகிறேன். இனி நீங்கள் சொன்னது போல உங்கள் கட்டுரைக்கு காத்துள்ளேன்.நன்றி.தமிழ் நாடு என்பதில் கூட என் குழுமத்திற்கு உடன் பாடு இல்லை ஆதலால் புதிய தலைமுறைக்கு தமிழர் நாடு என்ற மூன்றாம் அணி தமிழர் தேசியம் அணியை கடந்த சட்ட சபை தேர்தலுக்கு முன் வைத்ததில் மலேசியா தமிழர் பாதுகாப்பு மையத்திற்கு பொறுப்பு உண்டு.

  தமிழர் களம், நாம் தமிழர், ஐயா பழ நெடுமாறன் தமிழர் முற்போக்கு தமிழர் தேசியம் போன்றோர் இன்னும் கை கோர்க்க முடியாததால் தவிக்கிறோம். மலேசியாவில் இந்த தமிழர் தேசியம் எல்லா முயற்சியிலும் இறங்கி உள்ளது இதில் தமிழ் என்ற மொழிப்பாலில் புதிய விஷம் வேண்டாம் என்பதில் அக்கறை மிக்கவர்களாக உள்ளோம் ..இப்போது எங்கள் அவசர ஆதங்கம் புரியுமென்று நம்புகிறோம் ..தமிழராய் தமிழுக்கு எழுவோம். மீண்டும் நன்றி.

 9. Pon Rangan( Tamilavan)
  January 28, 2015 at 9:15 am

  தமிழர் தேசியத்தை அழிப்பாராம் வைக்கோ !
  தமிழின துரோகியின் சுயரூபம் ? ம .அ. பொன்.ரங்கன். தமிழர் தேசியம்.
  ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
  இலங்கையில் தமிழர் தேசியம் கூட்டாச்சியில் புதிய சனாதிபதி புதிய பிரதமர் என்று தமிழீழ மக்களுக்கு ஒரு புதிய விடியல் வந்துள்ள போது, உலகில் மெல்ல வளர்ந்து வரும் தமிழர் நாட்டின் தமிழர் தேசிய சிந்தனை அரசியல் நகர்வை வைக்கோ கொல்லத துணிந்துள்ளதை மன்னிக்க முடியாது. இது தமிழர் இனத்துக்குசசெய்யும் மாபெரும் துரோகம். வைகோ கட்சியில் உள்ள ரோசமுள்ள தமிழர்கள் அவர் கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்.
  நடந்து முடிந்த பினாங்கு சர்தேச தமிழ் மாநாட்டில்” நல்லா” தமிழ் பேசுவார் என்று அழைத்து வந்த வைகோ என்ற தெலுங்கு வைக்கோல், தமிழகம் போய் இறங்கியதும் பேசிய பேச்சை கேற்க காணக்கிடைத்தது. அதிலே ; கடந்த 50 ஆண்டுகளாக கட்டிக்காத்த ,உழைத்த திராவிட கட்சிகளை காப்பாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர் தேசியத்தை வளர விடக்கூடாது என்று எச்சரித்து உள்ளார்?
  இதற்கு கருணாநிதியும் செயலலிதாவும் விஜியகாந்தும் வைக்கோல் கட்சியுடன் இணைத்து தமிழர் தேசியத்தை உருப்பட விடக்கூடாது என்று தமிழில் கத்தி உளார். வைக்கோ உன் மரபணுவை குத்திப்பார் அதில் தமிழன் குருதிதான் ஓடும் ..ஆனால் திராவிட திரிபு மொழி ஆணவத்தில் தமிழர்களை தமிழர் தேசிய அரசியல் புலிக்குட்டியை சீண்டி பார்ப்பதை நிறுத்திக்கொள் என்று மட்டும் எச்சரிக்கிறோம்.

  தமிழர் தேசியம் கூட்டணி தமிழீழம் தமிழர்கள் இன்று இலங்கையில் தமிழர் கொலைக்காரன் ராஜா பக்சேவை தூக்கி எரித்த வேளையில். புதிய சனாதிபதி நாடு கடந்து வாழும் இலங்கைத “தமிழர்களை மீண்டும் நாட்டுக்கு வாருங்கள், உங்கள் உரிமைகளை பெறுங்கள் “என்று கூறும் வேளையில் உலகத தமிழர்கள் நம்பி இருக்கும் தமிழர் தேசிய அமைப்பை இப்படி சாடி உள்ள இந்த தமிழ் துரோகியை இனி நமபக்கூடாது என மலேசியா தமிழர் தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொன் .ரங்கன் தமது அறிக்கையில் கூறுகிறார் .
  மலேசியத தமிழர் தேசியம் நிகழ்வில் மலேசியாவுக்கு குறிகிய கால வருகை மேற்கொண்டுள்ள தமிழர் களம் பொதுசசெயலாளர் திரு அரிமாவளவன் வைகோவின் பேச்சை போட்டுககாட்டினார். இந்த நாடகத்துக்கு முழு பொறுப்பு ஏற்று பினாங்கில் சோரம்போன ராமசாமியும் பதவி விலக வேண்டும்.
  தமிழினத்துக்கு தகுதி இல்லாதவர்கள் அரசியல் நாடகம் ஆடக்கூடாது. DAP யில் தமிழன் தலைவர்கள் ஒழுங்கா இல்லை. ம இ கா தலைமைத்துவத்துக்கு புத்தி சொல்லக்கூடாது.

  அரிமாவளவன் மலேசியாவில் முதல் முறையாக தமிழர் களம் தொடக்க விழாவில் சிறப்புரையாற்றி தமிழர் களத்தை துவக்கி வைத்தார்.. தமிழின அறிஞர் பெங்களூர் குணா அவர்களின் பாசறையில் வளர்ந்து தமிழ் மொழி உணர்வும், தமிழின உணர்வில் தமிழர் களம் என்ற மாத இதழையும் நடத்தி வருகிறார் திரு. அரிமாவளவன்.

  தமிழர் தேசியம் நடத்திய மலேசியாவின் 2012 ம் ஆண்டு நடந்து முடிந்த உலகத்தமிழர் இரண்டாம் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துக்கொண்ட பிறகு அறிமாவலனின் இன மான மொழி உணர்வை மலேசியா வாழ் தமிழர்கள் அதிகம் உணர்ந்தனர். செம்பருத்தி நேர்க்காணல் ஒலி வட்டத்தை பார்க்கவும்.
  வழக்கறிஞர் தொழில் குழப்பத்தில் திருப்பதி அடையாத இவர் ஏழை மாணவர்களுக்கு ஆஸ்ரமம் அமைத்து தனது முழு நேரத்தையும் மொழிக்கும் இனத்துக்கும் அர்ப்பணித்துகொண்துள்ளார். இன்று தமிழர் தேசிய விடுதலை இயக்கம் ,நாம் தமிழர் , தமிழர் தேசிய முற்போக்கு கட்சி , இன்னும் தமிழ்கள் சார்பு தமிழர் நாட்டு அணைத்து கட்சிக்க்ளுடன் இணைந்து தமிழர் தேசிய சிந்தனையை முட்டி மோதி வளர்ப்பதில் அரிமாவளவன் முக்கிய பங்கு அளிக்கிறார்.

  தமிழர் களம் வெறும் கல்வி ,இனம் என்று சமுதாய தேவைகளை மட்டும் பார்த்தால் போதாது அரசியலும் வேண்டும் என்ற பலரின் வேண்டுகோளுக்கு தமிழர் தேசியம் என்ற மூன்றாம் அணியை தமிழகத்தில் உருவாக்கினோம். திராவிடர் அரசியலில் ஏமாந்து மூழ்கி கிடக்கும் தமிழர்களின் அரசியல் சிந்தனை மாற்றத்துக்கு மலேசியாவிலும் என் தலைமையில் தமிழர் தேசியம் 2009 இல் உருவானது . மலேசியாவில் தமிழர் தேசியம் என்ற அரசியல் கட்சிக்கு மனு செய்தும் இன்றுவரை இழு பரியில் உள்ளோம்.

  கடந்த தமிழர் மாநில சட்ட மன்ற தேர்தலில் தமிழர் தேசியம் என்ற மூன்றாம் அணியை தமிழகம் முழுதும் நிறுத்த பல தமிழர் சார்ந்த அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் ஆதவரை தேடினோம். தமிழர் மாநிலத்தில் எல்லா சட்ட மன்ற தொகுதிகளிலும் தமிழர்கள் போட்டியிட முழு மூச்சாக பரப்புரைகள் செய்தனர். திராவிட கட்சிகளில் “தமிழர்கள்” சட்ட மன்றத்துக்கு நின்றால் அந்த இடத்தை தமிழர் தேசியம் தவிர்த்து விடவேண்டும்.இது நமது நோக்கங்களில் ஒன்று. பணம் பலம் இல்லை வெறும் மன பலம் மட்டும் அரசியலில் வேகாது என்று தெரிந்தும் தமிழக மக்களுக்கு தமிழர் தேசியம் சிந்தனை வர வேண்டும், தமிழர் நாட்டை தமிழர்கள் தமிழர் கட்சிகள் ஆளவேண்டும் என்ற ஏக்கம் இன்றும் தொடர்கிறது. இன்று தமிழர்கள் வாழும் உலக நாடுகளில் தமிழர் தேசியம் சிந்தனை மெல்ல மிளிர்கிறது என்றும் சொல்லலாம்.
  இன்று மலேசியாவில் தமிழர் களம் , நாம் தமிழர் ,தமிழர் தேசியம் இணைத்துள்ளது போல தமிழகத்தில் பழ நெடுமாறனின் தமிழர் தேசிய முற்போக்கு கட்சி , சிறுத்தைகள் கட்சி , நாம் தமிழர் , தமிழர் தேசம் , ப ஜ கா , தமிழக கொமுநிஸ்ட் கட்சி , தமிழர் களம் இன்னும் பல வெறும் தமிழர்கள் சாந்த கட்சிகள் தமிழர் நாட்டின் ஆசியால் ஆளுமை பெற சித்தனை தெளிவு வேண்டி தமிழர் தேசியம் பாடு படுகிறது.
  தமிழர் தேசியம் சிந்தனை தமிழ் நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. ஆனால் திராவிடர்கள் விட வில்லை. இதைத்தான் நடந்து முடிந்த ராமசாமியின் சர்வதேச பினாங்கு தமிழ் மாநாட்டில் தமிழ் தமிழன் என்று நாயாய் குரைத்த வைகோ திராவிடன் மறு நாளே தமிழகத்தில் தமிழர் தேசியம் தலை தூக்கக்கூடாது என்று திராவிடர்களை பார்த்து கடித்துத குதறி உள்ளார்.

  தமிழ் நாட்டில் தமிழர்களை ஆள விடக்கூடாது என்பதற்காக கருணாநிதியிடமும் செயலளிதவிடமும் அவரின் சமீபத்திய கோரிக்கையை பார்த்து தமிழர்கள் கொதித்துபோய் உள்ளனர். தமிழ்நாட்டிற்குள் வந்தேறியாக வந்த வைக்கோல் தமிழக தமிழ் திராவிட மக்களிடம் தமிழர் தேசியத்தை தமிழ் நாட்டில் விடாதீர்கள் என்று குறைக்க அவர் குடித்த நாய் பாலுக்கு பதில் சொல்லும் காலம் வந்து விட்டது. இப்படிதான் தமிழ் பேசுகிறான் என்று பல திராவிட குள்ள நரிகளை தமிழர் நாட்டின் வளர்த்து விட்டுள்ளோம்.

  தமிழ் நாட்டிலும் நாடு கடந்து வாழ் தமிழர்களிடமும் தமிழர் தேசிய சிந்தனை தோல்வி அடைந்து கிடக்க பினாங்கு ராமசாமி போன்றவர்களின் அறியாமைதான் காரணம். இன்று இலங்கையில் தமிழர் தேசிய கூட்டணியின் முழு ஆதரவில் இலங்கையில் புதிய ஆட்சி மாற்றம் நடந்துள்ளது புதிய சநாதிபதியும் இலங்கை தமிழர்களின் அரசு அரசியல் சிக்கலை தீர்ப்பதாக உறுதி கொண்டுள்ளார். ஒரு வழியாக இலங்கையில் தமிழர் தேசியம் உணர்வுகள் வென்றுள்ளது போல தமிழகத்திலும் மலேசியாவிலும் தமிழர் தேசிய அரசியல் சிந்தனை வென்றால்தான் அடிப்படையில் தமிழகத்தில் தமிழன் உருப்படுவான். மலேசியாவிலும் 95 % தமிழனுக்கு மண்டையில் தான் தமிழன் என்ற உணர்வும் பிறக்கும்.

  சபாய் சட்ட மன்ற உறுப்பினர் தமிழச்சி காமாட்சி தமிழர்கள் பிறப்பு பத்திரத்தில் தமிழர் என்று எழுதுங்கள் என்ற பிரட்சாரத்தில் இறங்கி மெல்ல வெற்றிப பெற்று வருகிறார். அதே கட்சியை சேர்ந்த ராமசாமி அடையாளத்தை தேடி என்று வாய்க்கிழிய பேசி விட்டு அடையாளத்தில் இந்தியன் என்று இருந்தால் போதும் என்கிறார்?

  உலகத்தில் தனக்கென்று ஒரு மொழிக்கு சொந்தம்மிலாத இந்தியனை ஒரு தேசிய இனமாக அல்லது இந்தி பேசும் இனத்தோடு சேர வேண்டாம் என்ற தலை எழுத்தை முனைவர் போன்ற படித்த தலைவர்கள் தமிழனுக்கு சொல்ல வேண்டும். தமிழ் இலக்கண ,இலக்கியத்தில் அடித்தளம் இல்லாதவர்கள் தமிழனிடம் தான் “இந்தியன்” என்று புத்தி சொல்லக்கூடாது. தெலுங்கர் ,மலையாளி ,கன்னடர் இன்னும் இதர திராவிட கூட்டங்களின் மரபணுவில் ஓடுவது தமிழன் குருதிதான் , திருப்பு , திரிபு மொழிகளால் அவன் நாக்குதான் உலருகிரதே தவிர அவர் தொன்மையில் ஆதித்தமிழன்தான் என்ற அடிப்படையை முதலில் சொல்ல வேண்டும்.

  இன்று இலங்கையில் தமிழர் தேசியம், தமிழன் உணர்வு தமிழர் நாட்டிலும் ,மலேசியாவிலும் அடித்தளமிட்டு உலகத தமிழனுக்கு இன மான உணர்வை மீட்டு எடுக்க வேண்டும். கடந்த 100 ஆண்டுகளாக் திராவிடம் அரசியல் நடத்திய வந்தேறிகள் ஓட வேண்டும். ஆரிய ஐயர்கள் அடக்கி வாசிக்க வேண்டும்.
  இதுநாள் வரை தமிழகத்தில் அரசியல் வாழ்வு வாழ்த்த தமிழீழ அரசியல் பேசிய பேய்கள் மோடியின் சமஸ்கிருத மொழி இந்து சமய புகுத்தல்களை காரணம் காட்டி இந்த திராவிட கொட்டங்கள் தங்கள் அரசியல் அசிங்கத்தை தமிழகத்தில் பொய்யாக தொடக்குவார்கள். தமிழர்கள் இந்துவாகவ , சிவனிசம் சிவ சிந்தாந்த சமய சிதனையில் தம் தமது சமய அறிவிற்கு ஏற்ப தமிழனாக வாழ உலகில் தமிழர் தேசியம் வழி அரசியல் உரிமைகள் பெற விழிப்பு பெற வேண்டும். தமிழ் அரசியல் தலைவர்கள் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் தமிழர் தேசியம் என்ற குடையில் இணைய வேண்டும். மலேசியா தமிழர் அரசியல் தலைவர்களும் திருந்த வேண்டும்.

  இன்னும் சில நாட்களில் மலேசியாவில் 9வது உலகத தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்கவுள்ளது. இந்த இன பாதுக்காப்புக்கு என்ன வழி என்று அடையாளம் கண்டால் மொழியும் அரசியல் தலைவர்களும் உருப்படுவார்கள். தொடர்வோம். தமிழகளாய் எழுவோம்.
  தமிழர்களுக்கு தமிழர் தேசியம் காலத்தின் கட்டாயம்.
  ம .அ. பொன்.ரங்கன்.

 10. ஒரு வெறுத்துப் போன பாப்பான்
  December 18, 2015 at 11:46 pm

  //மிழ் இனம் தலைநிமிர பெரியார்தான் தடைக்கல் என்று கூறும் கருத்துகள் பார்ப்பனீயத்தை மீண்டும் உச்சத்துக்கு கொண்டுசெல்லும் திட்டத்தின் ஒருபகுதி என்றே தோன்றுகிறது. தோழர் குணா தன் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்னும் நூலில் ஆரியம் வேறு பார்ப்பனீயம் வேறு, ஆரிய பார்ப்பணர், தமிழ் பார்பணர் என்றெல்லாம் எழுதுவது நவீன ஆரிய ஆதிக்கத்துக்கு தமிழர்களை தயார்படுத்தும் முயற்சியே ஆகும்.//
  ஐயா புண்ணியவானே, பார்ப்னர்களை தயவு செய்து இதில் இழுக்காதீர். கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வசை பாடியது போதும். மணியரசன்/ சக்திவேல்/ சீமான்/ மருத்துவர் ஐயா என பலருடைய பேச்சை கேட்டுப்பாருங்கள். “தமிழ் மட்டும்/தமிழ்-மற்ற மொழியும்/மற்ற மொழி பேசுபவர்” என மூன்று விதமான அடையாள அட்டை வழங்கத் துடிக்கும் கரங்களே தமிழ் தேசியவாதிகள். சீமான் போன்றோர் பார்ப்பனர்களை வசவு பாடும் காணொளிகளை நீங்கள் கண்டதில்லையா? அவசியம் தேடுங்கள், காணுங்கள். பார்பனர்களைப் பொறுத்தவரையில், தமிழ் தேசியவாதிகளிடம் ஆட்சி மாறினாலும் அதே இரண்டாம்-பட்ச, அருவருக்கத்தக்க ஐயத்தோடே பார்க்கப்படும் ஒரு வியாதிப் பிடித்த சொரிநாய்க்கு கிடைக்கும் இழி தான் கிடைக்ப்போகிறது.

  1000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழ்வார்கள் அருளிய தமிழ் வேதமான வைணவ பாசுரங்கள் இல்லாமல் ஒரு வழிபாடே கிடையாது என்று இருக்கும் ஐயங்கார்களுக்கும் (அவருள் எந்த மடையனாவது தமிழ் நீச்ச பாஷை என்று சொல்லியிருப்பானா? அவன் அதற்கு பூணூலை கழட்டிப் போட்டு நாத்திகத்தை பேணியிருக்கலாம்) ‘ழ’கரமே ஒழுங்காக பேசத் தெரியாத ஜாம்பவான்கள் அடையாள அட்டை தருவர்! இதில் இவர்கள் பார்ப்பனீயத்தை மறைமுகமாக ஆதரிக்கிரார்களாம் ! தலையெழுத்து டா சாமி. “இவர்கள் நம்மை எப்படி வசை பாடினார்கள்; சிதையட்டும், சிதையட்டும்…” என குளிர்காய எந்த மூளை உள்ள பார்ப்பனனும் நினைக்க மாட்டான். பிரித்து/வெறுத்தாளும் இந்த அரசியல் கலாசாரம் போதும் என்றே எண்ணுவான். 100 வருடங்களுக்கு முன் தமிழ் பார்பனர்கள் அதிகமான குமாஸ்தா வேலைகளில் இருப்பதை பொறுக்காமல் தெலுங்கு பேசும் (பார்பனர்கள் சிலரும், பார்பனர் அல்லாத உயர் ஜாதியினர் பலரும்) நபர்கள் உருவாக்கி செயல்பட்ட இயக்கம் Justice Party. 1956இல் மொழிவாரி மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உருவானதற்கும் தெலுங்கு பேசும் பார்பனர்கள், தெலுங்கு பேசும் பார்பனர் அல்லாதோரும் சேர்ந்து கைகோத்து செயபட்டனர். இன்றளவும் தெலுங்கு பேசும் மாநிலங்களில் தெலுங்கு பேசும் பார்ப்பனர்களை கேவலமாக திட்டுவதில்லை, நடத்துவது இல்லை. அது தமிழ் நாட்டின் தனிச்சிறப்பு !

  இன்றைய தேதியில் தொடர்ந்து வசை பாடாமல், தமிழ் பார்ப்பனர்களையும் அரவணைத்து இந்த தமிழ் தேசிய பாசிசத்தை முறியடிக்க வேண்டுமேயொழிய அவர்கள் மீது ஆதாரமற்ற, மிக அருவருக்கத்தக்க அபாண்ட பழிகளை சுமத்துவது யாருக்கும் உதவாது. தமிழ் பார்பனர்களை பொருத்தவரையில் Be a known devil to a maltreating known master than than less known devil to a new master என்பது தான் யதார்த்தம்.

 11. ஒரு வெறுத்துப் போன பாப்பான்
  December 19, 2015 at 7:18 am

  வாழவும் விட மாட்டோம் சாகவும் விட மாட்டோம் என்கிற தொனியில் பார்ப்பனர்கள் உயிரை வாங்க வேண்டாம். 1920க்களில் இருந்த % விகிதத்திலிருந்து நிறைய வெளியேறி விட்டார்கள். ஏதோ எஞ்சி இருக்கும் %களில் கோயில், கச்சேரி என்று ஒரு கும்பல் விட்ட குறை தொட்ட குறையாக இருக்கிறது. அவர்களையும் அமைதியாக துரத்தி விட்டால் போதும். வார்த்தைகளால் சுட்டு சாம்பலாக்காமல் இந்த தமிழ் தேசிய பாசிஸ்டுகள் அவர்களுக்கு அடையாள அட்டையை கழுத்தில் தொங்க விட்டு தெரு-தெருவாக கூட்டி செல்லும் முன்னரே, உங்களைப் போன்ற திராவிட அபிமானிகளே வன்முறை இன்றி செய்துவிடுங்கள். வைணவர்கள் வழிபடும் புண்ணிய 108 தளங்களில் 80% மேற்பட்ட கோயில்கள் தமிழகத்தில் இருந்தால் என்ன, ஏதோ காணொளியில் பார்த்து அமைதி அடைகிறோம். இந்த பாசிச்டுகளுடன் தொடர்பு படுத்திப் பேசி, அதை இல்லை என்று நிரூபிப்பதர்காகவே திராவிட அரசியலைக் காட்டிலும் பன்மடங்கு பொறித்து தள்ளக்கூடும் தமிழ் தேசியரின் சினத்துக்கு எங்களை ஆளாக்காதீர். பணிவோடு கேடுக்கொள்கிரேன்.

 12. ஒரு வெறுத்துப் போன பாப்பான்
  December 19, 2015 at 7:26 am

  நீதிக்கட்சி துவங்கிய காலத்திலிருந்து, பிறகு தி.க-வாக உருவெடுத்த பின்னரும், மற்ற ஆதிக்க தமிழ் ஜாதிகளான தேவர், கவுண்டர், முதலியார், வன்னியர் போன்றோரின் ஜாதீயம் எப்பவும் போலே தான் இருந்து வந்தது. சொல்லப்போனால் திராவிட கட்சிகள் அதை கண்டும் காணாமல் இருந்தன; அந்தந்த தொகுதிகளில் இரு திராவிட கட்சிகளும் ஆதிக்க ஜாதிக்கேர்ப்ப வேட்பாளர்களை நிறுத்தின. இதில் பார்பனர்களின் பங்கு என்ன? உண்மையான பெரியாரிய சிந்தனையோடா இரு கட்சிகளும் இயங்கின? பாப்பானை கிண்டல் அடிப்பதைத் தவிர வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்தார்களா ? செய்திருந்தால் என்று ஏன் சாதீயத்தை கொழுந்து விட்டு எரிய காண்கிறோம்?

  பார்ப்பனர்களிடம் எந்த ஆதிக்க சாதியோ, இடைச் சாதியோ என்றும் நட்பு பாராட்டியதில்லை. A Tamil Brahmin has no friend among Tamils as everyone equally despises them, thanks to successful propaganda and hitting below the belt humour and diatribe for nearly a century. அப்படி இருக்க, என்னமோ மற்றவர் சாதியத்தை பேண பார்ப்பனர்கள் கொண்டாடுகிறார்கள் போன்ற பிம்பத்தை உருவாக்குவது ஆதாரமற்ற பச்சை அவதூறு.

  பெரியார் வன்மையாக சாடிய பார்ப்பன சமூகத்தில் தான் பெண்கள் கல்வி,படிப்பறிவு, (பகுத்தறிவிலும் கூட – பல பழையன கழித்தாயிற்று) வரதட்சணை கொடுமை இல்லாமை(/அதிகமின்மை) என எல்லா விதத்திலும் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். ஒரு கலாச்சார தொடர்ச்சியாகத் தான் பெருவாரியான பார்ப்பனர்கள் தங்கள் வாழ்க்கை முறையை தொடர்கிறார்களே தவிர (அதிலும் பலர் கலப்பு திருமணம் செய்து பார்ப்பனராக இருப்பதை நிறுத்திவிடுகிறார்கள் – அவ்வாறு செய்பவர்களை சமூகத்திலிருந்து நீக்கி விடுதல்; அவர்களை வஞ்சித்தல் போன்ற இழி பழக்கமும் போயிற்று) intrinsically/innately தான் சந்திக்கும் பார்ப்பனர் அல்லாதவரின் அடையாளத்தை தெரிந்துகொள்ள ஆவல் காட்டுவதில்லை, திறமைகளை குறைத்து மதிப்பிடுவதில்லை. மொத்தத்தில், பூணூலை துறக்க மனமில்லாமல், ஆனால் அதே சமயம் எல்லோருக்கும் தனக்கு கிடைக்கும் வாழ்க்கை தரம் அமையும் சமூகம் உருவாவதை முழுமையாக வரவேற்கும் ஒரு குழு. விருப்பு-வெறுப்பின்றி அவர்கள் தமிழ் ஜனத்தொகையில் உள்ள %க்கும், அதே % தான் தன்னார்வல தொண்டு புரிவதிலும், பொருள் ஈட்டி ஏழை மற்றும் தலித் முன்னேற்றத்தில் (Rural education உட்பட) உள்ளார்களா அல்லது அதைவிட பன்மடங்கு அதிகமா என ஆய்வு செய்தால் புரியும்.

  இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பதிலளித்தால் – தான் சமீபத்தில் சந்தித்த 10 பார்ப்பனர்களில் எத்தனை பேர் ஜாதி வெறியர்களாக தென்பட்டனர், எத்தனை பேர் ஓரு சராசரி மனிதனின் சமத்துவ எண்ணச் சுவடோடு அல்லது அதற்கும் மேம்பட்டு இருந்தனர் என்பதை
  எண்ணிப்பார்க்க தூண்டும்.

  இருக்கும் பிளவுகளே போதும். ஈன்ற கேட்டப் பெயரும் போதும். தெலுங்கு ஆதிக்க சாதிகளை பொறுக்க முடியாமலும், வேகமாக வளர்ந்து வரும் தலித் மக்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தால் தற்சமயம்/பின்பு நிகழக் கூடிய கலப்பு திருமணங்களை எதிர் கொள்ள/சகிக்க முடியாமல் ஏனைய மற்ற உயர்/இடைச் சாதியினரின் ‘தமிழ் தேசிய’ என்ற (போர்வை) ஆளுகையை தயவு செய்து அவர்களிடமே வாதிட்டு வெற்றி பெறுங்கள்.

  பார்ப்பனர்கள் 1920க்களிலிருந்தே ஓரங்கட்டபட்டதாலும் வெவ்வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்து போனதாலும் (வெளிநாடுகள் உட்பட) வெகுவாக மாறியவர்கள். தமிழ் மொழி பேசும், தமிழை வழிபாட்டிலும் பயன்படுத்தும் தமிழர்கள், இந்தியர்கள். அவ்வளவே. வெறுத்தாளும் அரசியலில் பல அவதிக்குள்ளானதால் தமிழ் தேசியம் போன்ற மற்றுமொரு வெறுத்தாளும் கொள்கைக்கு என்றும் துணை போக மாட்டார்கள். இந்த தேவையற்ற முடிச்சை போட்டு cross-fireஇல் ஏற்கனவே பட்ட அவமானங்களினும் இன்னும் அதிக படுத்தாதீர்கள். மிக தாழ்மையுடன், வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  நீங்கள் உண்மையாகவே பெயரளவில் பார்ப்பனீய வெருப்பென்று கூறி பார்ப்பனர் அனைவரையும் துவேஷிப்பவராயினும் இந்த பின்னூட்டங்களை தயவு செய்து பிரசுரிக்கவும். படிப்பவர்கள் இதையும் சேர்த்து படித்து அவர்களாகவே முடிவெடுக்கட்டும். நன்றி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...