இல்லாத திசைகள் 4 – பழிவாங்கும் படலம்

breakingfreefromhandcuffsஎன் 21-ஆவது வயதில் அந்த வாரப்பத்திரிகையில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தேன். ஆனால் அதற்காக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

அது தானாக நடந்தது.

அரசாங்கம் நடத்திய ஒரு மாத தமிழ்ப்பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நான் வேலை செய்த வாரப்பத்திரிகை அலுவலகத்திற்கு வந்தார். அவர் இப்போதிருக்கும் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடி.  ஆசிரியரை சந்தித்து ஒரு மாதப்பத்திரிகை தொடங்க போவதாகவும் அதற்கு அலுவலகம் தேவைப்படுகிறது என்றும் வாரப்பத்திரிகை அலுவலகத்தில் ஒரு சிறு பகுதியைக் கொடுத்துதவ முடியுமா? என்று கேட்க ஆசிரியருக்கு விருப்பம் இல்லை என்றாலும் மூத்த ஆசிரியரின் பேச்சை மறுக்க இயலாமல் ஒத்துக்கொண்டார். மூத்த ஆசிரியர் பெரிய அலுவலகத்தில் ஒரு பகுதியில் இரண்டு அறைகள் தடுத்து பத்திரிகையைத் தொடங்கினார். அதன் முதல் பத்திரிகையை என்னிடம் கொடுத்து வடிவமைக்க சொன்னார். வடிவமைத்துக் கொடுத்தேன். கருப்பு வெள்ளை பக்கங்களை நான் வடிவமைத்தேன். வண்ணப்பக்கங்களை வாரப்பத்திரிகையின் முன்னால் வடிவமைப்பாளர் (என்னை பூச்சியை போல் பார்த்த அதே வடிவமைப்பாளர்தான்) வடிவமைத்தார்.

முதல் இதழைதான் வடிவமைக்க கொடுத்தார்கள்; அடுத்த வேலையை என்னிடம் கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் அடுத்த இதழின் வேலையும் என்னிடம்தான் வந்தது. முதல் இதழை வடிவமைத்ததற்கே பணம் ஒன்றும் கொடுக்கவில்லை. அதைப்பற்றி பேசவே இல்லை. எனக்கோ செம்ம கடுப்பு. வேண்டா வெறுப்பாக செய்து கொடுத்தேன். நான் கடுப்பில் இருப்பது மூத்த ஆசிரியருக்குப் புரிந்துவிட்டது. அழைத்துப் பேசினார். வாரம் இரண்டு நாள் (திங்கள், செவ்வாய்) மாத இதழ் வேலையும் மற்ற நாளில் வார இதழ் வேலை என்று முடிவானது. மாத இதழுக்குச் சம்பளம் 200.00 வெள்ளி தருவதாக மூத்த ஆசிரியர் சொன்னார். என் பணப் பிரச்னைக்கு பெரும் உதவியாக இருந்ததால் சந்தோசமாக வேலை செய்தேன். மூத்த ஆசிரியர் வேலைகளைச் சரியான நேரத்தில் மிக நேர்த்தியாகக் கொடுப்பார். வடிவமைப்பு விசயத்தில் முழு சுதந்திரம் கொடுத்தார். வடிவமைப்பு பிடித்திருந்தால் சளைக்கமல் பாராட்டுவார்.

சில நாள்களில் மாத இதழ் வேலைகள் சீக்கிரமாக முடிந்து விடும். அந்த மாதிரி நாளில் திங்கட்கிழமை விடுப்பு எடுத்துக்கொள்வேன். எல்லாம் சரியாகவே போய்க்கொண்டிருந்தது. இது ஆசிரியருக்கு பிடிக்கவில்லை. நல்லது நடந்தால் அவருக்குப் பிடிக்காது. நீண்ட நாள் புகைந்து கொண்டே இருந்தது அவருக்கு. ஒரு நாள் வார இதழை வாரம் இரண்டு இதழாகச் செய்யப்போகிறேன் என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். எல்லாருக்கும் பேரதிர்ச்சி. எல்லாரும் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை அவர். புதன்கிழமை ஓர் இதழும் ஞாயிற்றுக்கிழமை ஒரு இதழும் ‘புதன் இதழ்’ ‘ஞாயிறு இதழ்’ என்று வெளியானது. இதில் பெரும் பாதிப்படைந்தது நான்தான்.

வார இதழ் இரண்டானதும் நேரம் போதாமையால் மாத இதழ் வேலையைச் செய்ய நேரம் கிடைக்கவில்லை. இதைப்பற்றி ஆசிரியரிடம் பேசினேன். அவர் அதைப் பற்றி கவலைப்படவே இல்லை. 200.00 வெள்ளி பறிபோனது. வார இதழ் இரண்டு இதழாக மாறியதற்குச் சொற்ப பணம் சம்பளத்தில் உயர்ந்தது. கொஞ்ச நாள்தான் வாரம் இரண்டு இதழாக வந்தது. பிறகு சமாளிக்க முடியாமல் பழையபடிக்கே வார இதழ் வாரம் ஒன்று என திரும்பியது. இதனால் என் சம்பளத்தில் உயர்த்திய சொற்ப தொகையையும் நிறுத்திவிட்டார். சம்பளம் குறைந்து போனதில் பெரும் அவஸ்தைக்கு உள்ளானேன்.

இந்தச் சமயத்தில்தான் மூத்த ஆசிரியர் அழைத்து பேசினார். வார இதழில் வேலை செய்து ஆசிரியரோடு ஒத்துபோகாமல் கிளம்பிய வடிவைப்பாளர் பிரிக்ஃபீல்ஸில் சொந்த அலுவலகம் வைத்திருந்தார். அவருக்கு வேலைக்கு ஆள் தேவைப்படுவதாகவும் அவருக்கு என் மீது நல்ல அபிப்பிராயம் இருப்பதாகவும் வேலைக்குச் செல்ல விருப்பமா என்று கேட்டார் . அந்த வடிவமைப்பாளர் வேலை மீது எனக்கும் நல்ல அபிப்பிராயம் இருந்தது. அவரிடம் வேலைக்கு சேர்ந்தால் தொழில் நுணுக்கத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று ‘சரி’ என்றேன். “ஏற்கனவே ஆசிரியருக்கும் வடிவமைப்பாளருக்கும் தகராறு. அதோடு ஏற்கெனவே இங்கு வேலை செய்த சரஸ் அக்காவும் இப்போது அந்த வடிவமைப்பாளரிடம் வேலை செய்வதால் திட்டம்போட்டு ஆசிரியரிடம் வேலைபார்ப்பவர்களை தன்பக்கம் இழுக்கின்றார் வடிவமைப்பாளர் என்று ஆசிரியர் வருத்தப்படக்கூடும். அதனால் இங்கிருந்து நின்றவுடன் உடனே அங்கே போக வேண்டாம். ஒரு மாதம் கழித்து போ,” என்றார் மூத்த ஆசிரியர்.

ஆசிரியரிடம் வேலையை விட்டு போகப்போகிறேன் என்றேன். அவர் வருத்தப்படவில்லை இதைதான் எதிர்பார்த்திருந்தேன் என்பதுபோல் இருந்தது அவர் பார்வை . ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல் பெரிதாக வருத்தப்படுவதைபோல்… அவசரப்படாதே… யோசித்துப்பார்… நீ என் மகன் போல… என்று பெரிய படம் காண்பித்தார்… கட்டித்தழுவினார்.

‘போடா மயிறு…’ என நினைத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். அதற்கு முன் வடிவமைப்பாளரை சென்று பார்த்தேன். அவர் ஓவியமும் வரைவார் என்பதால் சில ஓவிய புத்தகங்களை கொடுத்து வரைந்து பழகச்சொன்னார். 150.00 வெள்ளியை கொடுத்து ஒரு மாதம் கழித்து வரச்சொன்னார்.

ஒரு மாதம் கழித்து சென்றேன். அவரின் அலுவலகத்தின் அருகில் இருந்த கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்தது அவர் வீடு. நான் வீட்டினுள் நுழையும்போது அவர் விளக்கு (டியூப்லைட்) பொறுத்திக்கொண்டிருந்தார். எனக்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த அறைக்கு முன்தான் விளக்கு பொருத்திக்கொண்டிருந்தார். “இரவில் இந்த இடம் இருட்டாக இருக்கும். நீ கஷ்டப்படுவாய். அதான் விளக்கு பொருத்துகிறேன்… பைகளை வைத்து விட்டு வா” என்றார். ஏணியின் மேல் நின்றுகொண்டு “அந்த வயரை எடு… இந்த ஸ்பானரை எடு…” என சுவரில் ஓட்டையெல்லாம் போட்டு ஒரு வழியாக விளக்கைபொருத்தினார். ஒரு மணிநேரத்துக்கு மின்கம்பிகளை கையில் பிடித்துக்கொண்டு அவர் அருகிலேயே நின்றுகொண்டிருந்தேன். அவரின் மனைவி என்னை அன்பாக கவனித்தார்.  நான் சப்பிட்ட தட்டை அவர் கழுவினார். ‘என்ன வேணும்னாலும் தயங்காமல் கேளு…’ என்றார். அவர் வேலைக்கு போகவில்லை வீட்டில்தான் இருந்தார். சரஸ் அக்காவும் அங்குதான் தங்கியிருந்தார்.

மறுநாள் சரஸ் அக்காவோடு அலுவலகம் சென்றேன். அலுவலகத்தில் வேலை பெரிதாக எதுவும் இல்லை. எனக்கு  முதல் வேலையாக ஒரு கருமாதி பத்திரிகையை வடிவமைக்கக் கொடுத்தார்கள். பிறகு ‘மரணம்’ என்று வடிவமைத்து வரைய சொன்னார்கள். ‘கருமாதி’, ‘மரணம்’ முதல் நாளே சூப்பரா இருக்கே என்று நினைத்துக்கொண்டேன். அந்த அலுவலகத்தில் வேலை என்று பெரிதாக ஒன்றும் வரவில்லை. தன்முனைப்பு சம்மந்தமான மாத இதழ் வேலை ஒன்று நடந்துகொண்டிருந்தது. அந்த ஒரு வேலை மட்டும் கொஞ்சம் பரபரப்பாக இருக்கும். அதைத்தவிர்த்து சின்னச்சின்ன வேலைகள் வரும் அதையும் பெரும்பாலும் சரஸ் அக்காவே பார்த்து செய்து அனுப்பிவிடுவார். பெரும்பாலும் எனக்கு வேலை குறைவுதான். சரஸ் அக்காவோடு அரட்டை அடித்துக்கொண்டிருப்பேன். அங்கே எல்லா வடிவமைப்பு வேலைகளும் கணினியில்தான் செய்தார்கள். சரஸ் அக்கா எனக்கு கணினியில் வடிவமைக்கச் சொல்லிக்கொடுத்தார்.

அலுவலகத்தில் வேலை இருக்கோ இல்லையோ சரியாக காலை 8.00 மணிக்கேல்லாம் அலுவலகம் வந்துவிட வேண்டும். தண்ணீர் கலக்கும் வசதிகள் அலுவலகத்திலேயே இருந்ததால் தண்ணீர் குடிக்க வெளியில் போகக்கூடாது என்றெல்லாம் சப்பையாக சில விதிமுறைகள் வைத்திருந்தார் வடிவமைப்பாளர். ஒரு நாள் தேநீர் குடிக்க வெளியில் சென்றுவிட்டேன் . போன இடத்தில் ஒரு நண்பரை பார்த்துவிட்டேன். பேசிவிட்டு வருவதற்குத் தாமதமாகிவிட்டது. அதற்கு என்னை ஏசிவிட்டார் வடிவமைப்பாளர். ஏசினார் என்பதைவிட மிரட்டினார் என்றே சொல்ல வேண்டும். அதற்கு சரஸ் அக்காவும்  ஜிங்ஜக் போட்டார். சரஸ் அக்கா அவரிடம் ஒரு கொத்தடிமைப்போல்தான் வேலை பார்த்தார். அவருக்குத் தேவையான பொருள்களை வாங்க செல்வதற்குகூட வடிவமைப்பாளரிடம் அனுமதி கேட்டு கெஞ்சிக்கொண்டிருப்பார். அவர் அனுமதித்தால்தான் செல்வார் . பெரும்பாலும் சரஸ் அக்காவை வடிவமைப்பாளர் ரொம்பவும் கேவலமான வார்த்தைகளைக் கொண்டே திட்டுவார். தலையில் கொட்டுவார். எல்லாவற்றையும் சொரணையே இல்லாமல் வாங்கிக்கொண்டு வேலை செய்தார் சரஸ் அக்கா. என்னையும் அப்படியே நடத்த நினைத்தார். வெளியில் குடும்பத்தோடு சாப்பிட செல்லும்போதும் திரைப்படம் பார்க்க செல்லும்போதும் என்னையும் அழைத்துச்செல்வார்கள். அதனால் கொஞ்சம் பொறுத்துக்கொண்டேன்.

ஒரு நாள் மதியம் நான் அலுவலகத்தில் இருந்தபோது வடிவமைப்பாளர் வீட்டிலிருந்து அவர் மனைவி தொலைபேசியில் அழைத்து சாப்பாடு வாங்கிவருமாறு சொன்னார். சரஸ் அக்காவிடம் பணம் வாங்கிக்கொண்டு கடைக்குச் சென்றேன். எல்லா உணவுக்கடைகளிலும் சரியான கூட்டம். மதிய உணவு நேரம் அங்கு எல்லா உணவுக்கடைகளும் அப்படித்தான் இருக்கும். ஒரு கடையில் கூட்டத்தோடு கூட்டமாக முட்டிமோதி சாப்பாடு வாங்கிக்கொண்டுபோய் கொடுத்தேன். மறுநாளும் அழைத்து வாங்கிவரச்சொன்னார். பிறகு அதுவே எனக்கொரு வேலையாகவே மாறிப்போனது. அவர் வேலை வெட்டிக்கு போகவில்லை வீட்டில்தான் இருந்தார். ஆனால் சமைக்கமாட்டார். ஏன் என்று தெரியவில்லை. விடிய விடிய தொலைக்காட்சி பார்த்து விட்டு தாமதமாகத்தான் தூங்குவார். மறுநாள் மதியம்தான் எழுந்திருப்பார். இரவிலும் சமைக்க மாட்டார். ஆனால் வாரா வாரம் அருகில் இருக்கும் பாசார் மாலாமில் மூட்டை மூட்டையாக சாமான்கள் வாங்குவார்கள். அத்தனை மூட்டைகளையும் ஐந்தாவது மாடிக்கு நானும் சரஸ் அக்காவும்தான் ஏற்றுவோம்.

சமைக்காத பொம்பளைக்கு எதற்கு இவ்வளவு சாமான்கள் என்று குழம்பிப்போவேன். ஒரு நாள் அதே பாசார் மாலாமில் மீன் கடை முன்னால் வைத்து வடிவமைப்பாளர் ‘உனக்கு மீன் வாங்க தெரியுமா?’ என்று கேட்டார். ‘தெரியாது’ என்றேன். ‘இதுகூடவா உனக்கு தெரியாது… தீவெட்டி… தீவெட்டி…’ என்று திட்டினார்.  எனக்கு செம்ம கடுப்பாகிப்போனது. ‘முதல்ல உன் பொண்டாட்டிய சமைக்க சொல்லுடா மூதேவி…’ என்று நினைத்துக்கொண்டேன். சுங்கை திங்கியிலிருந்து மீன் வாங்க கற்றுக்கொள்ளவா கோலாலம்பூர் வந்தேன் என இருந்தது.  அலுவலகத்தில் தொடர்ந்து வேலை மட்டும் இல்லாமல் சூன்யமாக இருந்தது. வேலையே இல்லாத அலுவலகத்துக்கு வடிவமைப்பாளர் ஏன் தேவை என்று மூத்த ஆசிரியரிடம் கேட்டார் என்று தெரியவில்லை.

பிறகுதான் தெரிந்தது மூத்த ஆசிரியரின் பித்தலாட்ட வேலை.  என்னிடம் வடிவமைப்பாளருக்கு ஆள் தேவை என்றும்… நான் வேலை கேட்பதாக வடிவமைப்பாளரிடமும் கதை விட்டிருக்கிறார் மூத்த ஆசிரியர்.

ஒரு நரகத்திலிருந்து இன்னொரு நரகத்தில் வந்து மாட்டிக்கொண்டேனே  என்றிருந்த நேரத்தில்தான் ஆசிரியரின் தம்பி தொடங்கிய ஒரு வார இதழுக்கு ஆள் தேவைப்படுகிறது என்று அழைப்பு வந்தது. தயங்கி தயங்கி வடிவமைப்பாளரிடம் விசயத்தை சொன்னேன். யோசித்தார்… ‘நல்ல சம்பளம்’ என்றேன். ‘மூத்த ஆசிரியர் கேட்டதால்தான் உன்னை வேலைக்கு எடுத்தேன். இல்லையென்றால் எடுத்திருக்க மாட்டேன்… உனக்கு நல்ல சம்மளம் கிடைக்குதுன்னா அதை நான் கெடுக்க மாட்டேன்… போ’ என்றார்.

அவ்வளவுதான் மூன்று மாதம் பட்ட கஷ்டங்களிலிருந்து சிட்டுக்குருவியாக பறந்து போய் விட்டேன்.

தொடரும்…

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...